Malar Soodum Penami 6 2 11699 மிகவும் உரிமையாக வீட்டுக்குள் வலம் வந்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாமல் பார்த்து நின்றார் சதாசிவம். அவர் பேர் சொல்ல கூடிய தொழிலதிபர். அவரின் அண்ணன் முக்கிய கட்சியில் MP, மருமகன் SP. அண்ணனின் இரு மருமகள்களும் கூட வலுவான குடும்பத்தை சேர்ந்தவர்கள். செல்வாக்கு, அதிகாரத்திற்கு எல்லாம் குறைவில்லை. ஆனால் இவர்களை சமாளிக்க தான் அவருக்கு கடினமாக இருந்தது. ஏதோ ஊர்க்காரங்க என்று அலட்சியமாக நினைத்தவருக்கு முதல் அடியே தேசிகன் வெளியே வந்தது. சில மாதங்கள் வரை அவன் உள்ளிருக்க வேண்டும் என்று போடப்பட்ட கேஸை ஒன்றுமே இல்லாமல் செய்திருந்தான். அதனோடே அவர் பார்க்கும் மாப்பிள்ளைகளை எல்லாம் சுலபமாக கலைத்துவிட்டதோடு, இப்போது அவர் வீட்டிற்கே வேறு வந்து நிற்கின்றனர். “சம்மந்தி, இல்லை இல்லை சதாசிவம். வாப்பா. சாப்பிடலாம்” என்று பெரியவர் இவரை அழைக்க, “எனக்கு சாப்பாடே வேணாம்” என்று வெளியே கிளம்பி சென்றுவிட்டார். ஆக மொத்தம் தன்வி வெளிநாடு சென்றும் பயனில்லை. நீ இல்லைன்னா என்ன, உன் வீட்டுக்கே போறோம் என்று சதாசிவத்தை கடுப்பேத்தி கொண்டிருக்கின்றனர். ஒரு வருடம் முடிந்தும், சதாசிவத்திற்கு தேசிகனை மருமகனாக ஏற்கும் மனது சிறிதும் இல்லை. மகளுக்கும் அவன் மேல் ஈடுபாடு இல்லை என்பது தந்தைக்கு உறுதியாக தெரியும். ‘இவங்க யார்கிட்ட போனா எனக்கென்ன? என் பொண்ணை வைச்சு உங்களுக்கு பதில் கொடுக்கிறேன்!’ மகள் இன்று வருகிறாள். கைவசம் மாப்பிள்ளையும் தயார். சதாசிவம் மகளுக்காக எதிர்பார்த்திருக்க, அவள் முன் தேசிகன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், தன்வி பார்த்த முதல் ஆள் அவன் தான். “காட்” “போலாமா?” என்று தேசிகன் கார் கதவை திறந்துவிட்டான். “மயக்க மருந்து ரெடியா வைச்சிருக்கீங்களா?” என்று தன்வி கேட்க, “தேவைப்படுமா என்ன?” என்று கேட்டான் தேசிகன். ‘பேசணும். இன்னையோட பேசி எல்லாத்தையும் முடிச்சிடணும்‘ தன்வி மறுக்காமல் அவனுடன் காரில் ஏறிக்கொண்டாள். “காலையில சாப்பிட்டியா?” என்று கேட்டபடி கார் எடுத்தான் தேசிகன். “ம்ஹூம்” என்று தன்வி சொல்ல, முதலில் உணவருந்த அழைத்து சென்றான். “நாம பேசி முடிச்சிடலாம்” “முடிக்கிறதுலே தான் இருக்க. ம்ம்ஹ்ம். பேசலாம். அதுக்கு முன்ன சாப்பிட்டு, தெம்பா பேசலாம்” இருவரும் உணவருந்த அமர்ந்தனர். அவரவருக்கு தேவையானதை சொல்லி, அமைதியாகவே உண்டு முடிக்க, தன்வி பணம் கொடுத்தாள். அவன் மறுக்கவில்லை. “எங்களோட வீடு இருக்கு. அங்க போலாமா?” என்று கேட்க, தன்விக்கு தெரியும். பாட்டி ஒன்று விடாமல் எல்லாம் தான் சொல்லி வைத்திருக்கிறாரே! ஸ்ருதி தங்கைக்கு அழைக்க, அவளிடம் தேசிகனுடன் இருப்பதையும், வீட்டு முகவரியும் சொல்லி வைத்தாள் தங்கை. “சோ என்னை நம்ப மாட்ட?” என்று தேசிகன் அவளை வீட்டுக்கு அழைத்து சென்றான். “நம்பிக்கையா உங்க மேல. வாய்ப்பே இல்லை” தன்வி அவளின் மனதை சட்டென சொன்னாள். அதிலே தேசிகனுக்கு புரிந்து போனது. பெரியம்மாவும் இவள் பேசியதை அவனிடம் சொல்லியிருந்தாரே! ஆனாலும் அவன் பக்கம் எடுக்கும் முயற்சியை எடுக்கத்தான் நினைத்தான். மிகவும் நீண்ட பயணம் என்பதால் தன்வி சோர்வாக இருந்தாள். அவளுக்கு குடிக்க கொண்டு வந்து கொடுத்தவன், “என்ன முடிவெடுத்திருக்க?” என்று கேட்டான். இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, தன்வி கழுத்தில் மெல்லிய செயின் மட்டுமே இருந்தது. அவனுடைய மாங்கல்யம் அவளிடம் இருக்குமா என்பது தேசிகனுக்கு சந்தேகமே! தன்வி நிதானமாகவே, “இது சரிப்பட்டு வராது. அவங்கவங்க வழியை பார்க்கிறது பெட்டர்” என்றாள். தேசிகன் நிமிடமே மௌனம் காத்தவன், “என்மேல உனக்கு கோவம் இருக்கா?” “நிச்சயமா. நான் பண்ணதுக்கு, நீங்களும் எனக்கு பண்ணிட்டீங்க. அப்புறம் எதுக்கு எனக்கு தாலி கட்டி ஒரு டிராமா?” என்றாள் கோவமாகவே. “டிராமா இல்லை. உனக்கு எப்படியோ எனக்கு அதை ஈஸியா எடுத்துக்க முடியாது. மாமா பொண்ணுன்னா வேற, நீ யாரோ“ “அதென்ன மாமா பொண்ணுன்னா வேற, சுஜாக்கு பண்ணியிருந்தாலும் அது அநியாயம் தான்“ “அந்த மனுஷன் என்னை கார்னர் பண்றது மட்டும் நியாயமா?” “உங்களுக்கு அப்படி தோணினா வேணாம், என்னால முடியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே?” “அப்படி சொல்ல முடியாது, நான் மட்டுமே இல்லை. என்னோட குடும்பத்தையும் நான் பார்க்கணும்“ “அவரோட பொண்ணு வாழ்க்கையை அவர் பார்க்கிறார்“ “அதுக்கு நான் தான் கிடைச்சேனா? கொஞ்சமாவது நியாயமா பேசு. அவர் பொண்ணு யாரையோ விரும்புறது தெரிஞ்சும் என்னை உள்ள இழுத்துவிட பார்த்திருக்கார். நான் பார்த்ததுலே அந்த மனுஷனை மாதிரி சுயநலவாதியே கிடையாது. அவரால இப்போ நாம தான் பட்டுட்டு இருக்கோம். உன் புண்ணியத்தில அவர் பொண்ணு பிடிச்சவனை கட்டுகிட்டு சந்தோஷமா தான் இருக்கா“ “அதிலென்ன உங்களுக்கு அவ்வளவு வருத்தம்“ “எனக்கு கோவம் தான். நீ அந்த கதையை விட்டு நம்ம கதைக்கு வா” என்று கடுப்பாகிவிட்டான் தேசிகன். “நம்ம கதை என்ன? அதெல்லாம் ஒன்னுமில்லை. நமக்குள்ள என்ன இருக்கு? நீங்க உங்க வாழ்க்கையை பார்த்துட்டு போங்க, நான் என்னோடதை பார்த்துகிறேன்“ “நமக்குள்ள என்ன இருக்கா? அப்படியே உன் அப்பா மாதிரி பேசின, பார்த்துக்கோ” “என்ன? என்னை மிரட்டுறீங்களா?” “இது மிரட்டுறதா? சரிதான். இங்க பாரு. நான் பண்ணது நிச்சயம் தப்பு. அதுக்கான தண்டனையை அனுபவிச்சுட்டேன். ஜெயில் போய்ட்டு வரது ஒன்னும் சாதாரணம் கிடையாது. அதோட பின்விளைவுகள் எனக்கு மட்டும் தான் தெரியும். இல்லை அது போதாதுன்னா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னாலும் எனக்கு ஓகே“ “நான் ஒன்னும் உங்களை ஜெயில் போக சொல்லலையே?” தன்வி சாதாரணமாக தோள் குலுக்கினாள். “அடிப்பாவி. அப்போ நான் போகும் போது சொல்ல வேண்டியது தானே?” தேசிகன் பல்லை கடித்தான். “என்கிட்ட கேட்டீங்களா என்ன? என் அப்பாவை திருப்திப்படுத்த நீங்க செஞ்சதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்“ “சரி அப்படியே இருக்கட்டும். இப்போ உனக்கு என்ன செய்யணும் நான்?” “நமக்குள்ள இருக்கிறதை முடிச்சு விட்டுடுங்க. போதும்“ தேசிகன் கோவத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்தான். வார்த்தைகள் எக்குத்தப்பாக வர பார்க்கிறது. கட்டுப்படுத்தி கொள்ள, தன்வி இதில் தான் செய்ய ஏதுமில்லை என்பதாக இருந்தாள். “சோ உன் முடிவுல மாற்றமில்லை“ “இல்லை” “நான் கோவத்துல செய்யலை. மனசு உறுத்தி தான் உன் கழுத்துல தாலி கட்டினேன். எங்க பகைக்குள்ள உனக்கு அப்படி பண்ணியிருக்க கூடாதுன்ற குத்தல் எனக்கு இப்போ வரைக்குமே உண்டு. கோணலா ஆரம்பிச்சதை சரியாக்க தான் முயற்சி பண்றேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. நான் எல்லாத்தையும் சரி பண்றேன்“ “முதல் கோணல் முற்றும் கோணல் தான். கட்டாய தாலிக்கு எல்லாம் நான் மதிப்பு கொடுக்கிறதில்லை“ தேசிகன் நேராக அவள் கண்களை பார்த்தவன், “சாரி. என்னை மன்னிச்சுக்கோ” என்றான். “சரி மன்னிச்சுட்டேன்“ “நீ என்னை பைத்தியமாக்க பார்க்கிறியா என்ன?” “நீங்க ஆகுறீங்களா என்ன? எனக்கு சந்தோஷம் தான்“ “தன்வி“ “இட்ஸ் மீ“ “உனக்கு என்னதான் பிரச்சனை?” “நீங்க மொத்தமே என்னோட பிரச்சனை தான். நீங்க என்னை விட்டு போயிட்டா நான் நிம்மதியாகிடுவேன்“ “இதுக்காக ஏண்டி நான் ஜெயிலுக்கு போனேன் “ “கட்டாய கல்யாணத்துக்கு தண்டனை வேண்டாமா?” “தண்டனையோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு சொல்றியா என்ன?” “குற்றத்துக்கு தானே தண்டனை.” “சோ நான் உன் கழுத்துல தாலி கட்டினது குற்றம் தான் இல்லை“ “நிச்சயமா!” “அப்போ நீ எங்களை ஏமாத்தினத்துக்கு?” “இது தான் என்னோட தண்டனை?” என்று அவனின் மாங்கல்யத்தை வெளியே எடுத்து காட்டினாள். செயினுக்குள் இருந்தது அவனின் மாங்கல்யம். தேசிகன் தளர்ந்து போய் அமர்ந்துவிட்டான். “நான் உங்களை ஏமாத்தினத்துக்கு எனக்கான தண்டனை இது. சமம் ஆகிடுச்சு. இந்த ஒரு வருஷம் இதை நான் சுமந்துட்டேன். இனியும் இந்த பாரத்தை சுமக்க நான் தயாரில்லை. எனக்கு விடுதலை கொடுங்க, போதும்” என்றாள் பெண் தெளிவாக. “காலம் முழுக்க இதை சுமக்க மாட்டியா என்ன?” என்று தேசிகன் வேண்டுகோளாகவே கேட்டான். “அதோட நீங்களும் தானே, உங்களை சுமக்க எனக்கு தெம்பில்லை, மனசுமில்லை” உறுதியான அவள் வார்த்தையில் தேசிகனுக்கு மனம் விட்டு போனது. “எனக்காக திரும்ப யோசியேன்“ “நிறையவே யோசிச்சுட்டேன்“ “சோ இது தான் உன் முடிவு“ “ஆமா” என்று தன்வி சொல்லிவிட, தேசிகன் ஏற்று கொண்டதாக தலையசைத்தான். “கிளம்பலாமா?” என்று எழுந்து கொள்ள, “இது?” என்று அவனின் மாங்கல்யத்தை காட்டினாள். பெண்ணின் நெஞ்சில் மேல் அழுத்தமாக அமர்ந்திருந்ததை நொடியே வெறித்தவன், “என்ன பண்ணணுமோ நீயே பண்ணிக்கோ” என்றுவிட்டான். தன்வி அவனை தொடர, அவளுடைய வீட்டில் விட்டவன், “எல்லாத்துக்கும் சாரி” என்ற சொல்லோடு முடித்துக்கொண்டான்.