மலர் சூடும் பெண்மை 6

அன்றைய நாளிற்கான ஓட்டத்திற்கு எல்லாம் தயாராகி கொண்டிருந்தனர். தன்வியும் அலுவலகத்திற்கு நேரம் ஆவதை உணர்ந்து, வேகமாக கிளம்பினாள்.

காலை உணவை முடித்து கொண்டு காருக்கு ஓட, சரியாக அம்மா அழைத்துவிட்டார். “ம்மா. ப்ளீஸ். எனக்கு ஆல்ரெடி லேட். நான் நைட் பேசுறேன்என்று அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் வைத்துவிட்டாள்.

ஓர் பெரிய ப்ரொஜெக்ட்டில் இருந்தாள் பெண். அது சம்மந்தமான மீட்டிங் இன்று நடக்கவிருக்க, சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தாள்.

தொடர்ந்த நேரங்கள் பரபரப்பாகவே முடிந்திருக்க, நாள் முடியவும் தான் நிம்மதியானாள்.

காட். லாங் டேஎன்று முணுமுணுத்தபடி பிளாட்டிற்கு சென்றாள்.

முதலில் ஒரு சிறு தூக்கம். கசக்கி பிழிந்த மூளைக்கு ஓய்வு கொடுத்தவள், இருள் சூழ்ந்த பின்னே, எழுந்து காபியுடன் அமர்ந்தாள்.

போன் எடுத்து பார்க்க எப்போதும் போல் பல விடுபட்ட அழைப்புகள். முதலில் அம்மாவிற்கு அழைத்து பேச, அவரோ எடுத்ததும், “எப்போ ஊருக்கு வர?”  என்றார்.

ம்மா. எத்தனை முறை நீங்க கேட்டாலும் இப்போதைக்கு நோ தான். ப்ரொஜெக்ட் முடியவும் தான் கிளம்புவேன்

சரி எப்போ முடியும்?” என்று சுதா அதே கேள்வி.

ம்மா. இன்னும் இரண்டு வாரம்

முடிஞ்சதும் வேலையை விட்டுட்டு ஊருக்கு வரத்தானே?”

ப்ளீஸ்ம்மா. தினமும் ஒரே விஷயமா? நான் ஊருக்கு வராம எங்க போகப்போறேன்

போனியே. மறந்துட்டியா தன்வி

ம்மாஎன்று மகள் பல்லை கடித்தாள். “நினைச்சு கூட பார்க்க பிடிக்காத விஷயத்தை நீங்க தினமும் ஞாபக படுத்திட்டு இருக்கீங்க

ஞாபகம் இல்லாம தான் பாட்டியோட போன் பேசிட்டு இருக்கியா?

ம்மா. அது வேற. அவங்க பாசத்தை என்னால ஒதுக்க முடியல. நான் முயற்சி பண்ணாலும் அந்த கூட்டம் என்னை விடாது போல. இதுவரைக்கும் எத்தனை நம்பர் மாத்திட்டேன். சிம்ப்ளி வேஸ்ட். உடனே கண்டுபிடிச்சு போன் வந்துடுதுஎன்றாள் தன்வி சலித்து.

ஹாஹா. இங்க எங்களுக்கும் அதே தான் தன்வி. சென்னை வந்தா, நம்ம வீட்டுக்கு வராம போறதில்லை. உன் அப்பாக்கு மெல்லவும் முடியலை. முழங்கவும் முடியலைஎன்று சிரித்தார் சுதா.

எனக்கு இப்போவும் ஷாக் தான்ம்மா. பெரியப்பாவை எப்படி அவங்க சம்மதிக்க வைச்சாங்கன்னு

அவங்க கொடுத்த ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சுன்னு இன்னைக்கு முக்கிய ஆளுங்க எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாங்க. பெரியப்பா நீ வந்ததும் பேசலாம் சொல்லியிருக்கார்என்றார் சுதா.

ம்மா. பேச எல்லாம் ஒண்ணுமே இல்லை

அதை நேர்ல வந்து நீயே சொல்லிக்கோஎனவும், தன்விக்கு பெருமூச்சு.

அவளுக்கும் சில தினங்களாக, எப்போ வந்து தேசிகன் தன் முன் குதிக்க போறானோ என்று கடுப்பாக தான் இருந்தது.

நிச்சயம் செய்ய கூடியவன் தான். ஒரு வருடத்திற்கு முன் அவ்வளவு அழுத்தமாக சொன்னவனாகிற்றே!

அடுத்த அழைப்பாக பாட்டி. எடுக்காமல் விட்டாலும் ஒன்றுமில்லை தான். ஆனால் இன்று பேசிவிட்டால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அழைக்க மாட்டார்கள் என்பதாலே, எடுத்துவிட்டாள் தன்வி.

எப்போதும் போல் நல விசாரிப்புகள் முடிந்ததும், “எப்போ ஊருக்கு வர?” என்று முரட்டு பெரியம்மா கேட்டார்.

எனக்கு வேலை இருக்குஎன்றாள் தன்வி.

எங்களுக்கு எல்லாம் வேலை இல்லாம தான் கிடக்குஎன்று நொடித்தவர், “அந்த ப்ரொஜெக்ட் முடிஞ்சதும் கிளம்பி வர வழியை பாருஎன்று அரட்ட,

இதுக்காகவே கிளம்ப கூடாதுமனதில் உறுதி எடுக்க

நாங்க அங்க வருவோம். பரவாயில்லையாஎன்றார் அவர்.

இவங்களை நம்ப முடியாது. இங்க இருக்கு லண்டன்னு வர கூட்டம் தான்

எங்க மகன் வாழ்க்கையை நாங்க பார்க்கணும். நீ நேர்ல வந்தா இரண்டுல ஒன்னு பேசிடலாம்என்று அவர் சொல்ல,

உங்க மகன் வாழ்க்கையை நீங்க பார்த்துக்கோங்க. நான் சொல்றதுக்கு எல்லாம் ஒன்னுமில்லைஎன்றாள் தன்வி.

அப்படியா? அப்போ சரிஎன்று அவர் வைத்துவிட, தன்விக்கு இது தான் பக்கென்று இருந்தது.

சண்டை போட்டா கூட ஓகே, இது தான் ஆபத்து!

கண் இமைக்கும் நொடியில் நாட்கள் கடந்துவிட, தன்வியின் ப்ரொஜெக்ட்டும் நல்ல படியாக முடிந்துவிட்டது

அதற்கான பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வர, அவளுக்கான டிக்கெட் தயாராக இருந்தது.

சதாசிவம் அனுப்பியிருக்க மறுக்க முடியாது. அப்பாவிற்கும், மகளுக்கும் ஒரு வருடமாக பேச்சு வார்த்தையே இல்லை.

அவங்களுக்கு பயந்து நீ வெளிநாடு போக போறியா?” என்று சதாசிவம் மகளின் முடிவை எதிர்த்து குதித்தார்.

அப்பா. ப்ளீஸ். முன்னமே கிடைச்ச வேலை தான்என்று மகள் சொல்ல,

நீ அங்க போகலைன்னு தான் சொன்ன. இப்போ மட்டும் என்ன? நீ நம்ம தொழிலுக்குள்ள வர வழியை பாரு” 

ப்பா. ப்ளீஸ். எனக்கும் கொஞ்சம் அனுபவம் வேணும். எனக்காக விடுங்கஎன்று மகளும் கேட்டுக்கொள்ள.

உன் இஷ்டத்துக்கு உன்னை விட்டு தான், வம்பை இழுத்து விட்டுகிட்டஎன்றார் சதாசிவம் கோபத்துடன்.

இனி நான் யாருக்கும் உதவி பண்ணவே மாட்டேன்ப்பா. ப்ளீஸ். இந்த ஒரு வாய்ப்பை மட்டும் கொடுங்க

சதாசிவம். பொண்ணு தான் அவ்வளவு கேட்கிறா இல்லை விடு. போகட்டும்என்றார் அவரின் அண்ணன்.

ஸ்ருதி, மனோகரும் கூட அவளுக்காக பேச, “சரி. அங்க போறதுக்கு முன்னாடி கழுத்துல இருக்கிறதை கழட்டிட்டு போக சொல்லுங்கஎன்றார் சதாசிவம்.

தன்வி அமைதியாக நிற்க, “என்ன தன்விஎன்றார் தந்தை கூர்மையாக பார்த்து.

எனக்கு செண்டிமெண்ட் எல்லாம் எதுவும் இல்லை டாடிஎன்றாள் மகள்.

அப்பறமென்ன?”

ஏங்க. கொஞ்சம் பொறுமையா இருங்கஎன்று சுதா சொல்ல, சதாசிவத்தின் போன் ஒலித்தது.

அந்த பக்கம் பெரியவர், “என்ன சம்மந்தி. சொல்ல கூடாது இல்லை. சதாசிவம். என்ன தாலி ஏதோ கழட்ட சொல்ற போலஎன்று கேட்க, இவருக்கு தான் அதிர்ச்சி.

இங்க இருக்காங்களா?’ என்று வாசலை பார்க்க, யாரும் இல்லை.

தேடாதப்பா. எங்க மருமக பொண்ணு விஷயத்தில நாங்க கொஞ்சம் உஷாரா இருக்கோம். அவ்வளவு தான். ஒரு வருஷம் நேரம் கேட்டிருக்கோம், அதுக்கு ஒத்துக்கிட்டு தான் என் பேரன் ஜெயில்ல இருக்கான். நீ நினைக்கிற மாதிரி சுலபமா எல்லாம், என் பேரன் மாங்கல்யத்தை எடுத்திட முடியாதுஎன்றார் அவர்.

சதாசிவம் சுற்றியுள்ள எல்லோரையும் சந்தேகமாக பார்த்தவர், இதோ இன்று வரையிலும் அந்த வேவு பார்க்கும் ஆள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கிறார்.

மகள் வேலைக்கு லண்டன் கிளம்பிவிட, சில மாதங்கள் அமைதியாக இருந்தவர், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.

மிகவும் ரகசியமாக தான். ஆனால் பலனே இல்லை. சதாசிவம் அவர்களிடம் பேசும் முன், தேசிகன் வீட்டினர் பேசியிருப்பர்.

இவ்வளவு பணம், பவர் இருந்தும் இந்த கூட்டத்தை சமாளிக்க முடியாம என்ன தொழில் செய்றவன் நான்? சதாசிவம் இன்னும் தீவிரம் காட்ட, அவர்களோ வீட்டிற்கே வந்து நின்றனர்.

வெளியே போங்கஎன்று இவர் வாய் திறக்கும் முன்,

வாங்க. வாங்க. உள்ள வாங்கஎன்று இவரின் அண்ணன் அவர்களை வரவேற்று கொண்டிருந்தார்.

சுதா எல்லோருக்கும் குடிக்க கொண்டு வா. சாப்பாடு ரெடி பண்ணு. நீங்க எல்லாம் போய் ஓய்வெடுங்க. பேசலாம்என்று அவர்களை உபசரித்த அண்ணனை தனியாக இழுத்து கொண்டு வந்த சதாசிவம்,

அண்ணா அவங்க யாருன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று கோவத்தை அடக்கி கொண்டு கேட்க,

சம்மந்திங்கஎன்றார் அவர் ஒரே வார்த்தையில்.

ண்ணாஎன்று தம்பி பல்லை கடிக்க,

தம்பி. உன் கோவத்தை எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு, வீட்டுக்கு வந்தவர்களை நல்லா கவனிக்கிற வழியை பாருஎன்றார் அவர் சாதாரணமாக.

ண்ணா. அவங்க என்ன பண்ணாங்கன்னு

அதுவும் மறக்கலை. அதுக்காக மருமகன் தண்டனை அனுபவிச்சதும் மறக்கலை. முதல் முறை என்னை பார்க்க வந்தப்போ எனக்குமே அவ்வளவு கோவம் தான். ஆனா அவங்க விடாம என்னை பார்த்து, பேசி, மருமகன் என்கிட்ட மன்னிப்பு கேட்டு

மன்னிப்பு கேட்டா ஆச்சா?”

சரி. விடு. நான் என் பொண்ணுக்கு பார்த்த வரனா இவங்களை நினைச்சுக்கோ

ண்ணா

ஏன் எனக்கு அந்த உரிமை இல்லைன்னு நினைக்கிறியா?”

ண்ணா என்ன வார்த்தை பேசுற நீ?”

உன்னை எனக்கு தெரியும் தம்பி. நான் சொன்னா நீ கேட்டுப்பஎன்று பெருமையாக அவரின் தோளில் தட்டி கொடுத்து சென்றார் அண்ணன்.