காலை வெயில் முகத்தில் பட பதறி அடித்து எழுந்தாள் தீபா. நேற்று மதியம் வரை தூங்கியதில் இரவு தூக்கம் கெட்டுப் போக விடியற்காலை மூன்று மணி வரை கேஸ் ஒன்றை படித்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இரவு தூங்காததால் போனில் அலாரம் செட் செய்யாமல் விட்ட தன் மடத்தனத்தை எண்ணி தலையில் தட்டிக்கொண்டு வேக வேகமாக கிளம்பி கீழே இறங்கிச் செல்ல அங்கே பாக்கியா வெளியில் நின்று கீதாவை பள்ளிக்கு வழி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தீபாவை பார்த்து “என்ன தீபா நேத்து காலைல உன் வண்டியை பார்த்துட்டு மேலே வந்து கதவைத் தட்டினேன் திறக்கவே இல்லை நேத்து முழுக்க வெளியவும் வரல்லை எப்படி சாப்பிட்டம்மா?“ அதற்கு நின்று பதில் சொல்ல நேரம் இல்லாமல் நடந்தபடி “ஒரே டயட்டு அக்கா அதான் நல்லா தூங்கிட்டேன். அப்போ வந்து நீங்க கூப்பிட்டு இருப்பிங்க அதான் சத்தம் கேட்டிருக்காது. அப்புறம் நான் வெளில ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன் அக்கா. நீங்க எனக்கு செஞ்சிருப்பீங்களான்னு தெரியாம சரி டைம் ஆச்சு அக்கா நான் சாயங்காலம் வந்து பேசுறேன் ” என்று ஹெல்மெட் மாட்டப் போக “நிலா ஒரு நிமிஷம் போயிடாத” என்று கத்தியபடி உள்ளே சென்ற பாக்கியா ஒரு கையில் ஜூஸும் மற்றொரு கையில் ஒரு டிபன் பாக்சும் எடுத்து வந்து அவள் கையில் ஜூஸைக் கொடுத்துவிட்டு “இன்னைக்கு கீதா பிரியாணி பண்ணச் சொல்லி கேட்டா. அதான் உனக்கும் சேர்த்து பண்ணி வைச்சேன் சாப்பிடும்மா” என்று அவள் பையில் வைக்க அதை கண் கலங்க பார்த்தாள். இவள் ஜூஸைக் குடிக்காமல் தன்னையே பார்ப்பதை பார்த்த பாக்கியா “என்னம்மா ஜூஸ் பிடிக்கலையா?”
“இல்ல நல்லாதான் இருக்கு அக்கா “ என்று குடித்துவிட்டு தன் ஸ்கூட்டியில் புறப்பட்டாள். ஆபிஸை அடைந்த தீபா நேராக சென்றது என்னவோ கார்த்திக்கை தேடித்தான். இவள் லீவு போட்டுச் செல்லும் முன் கார்த்திக்கிடம் அந்த சாக்லேட் மிக்சரை அனைத்து முறையிலும் பிரித்து பார்க்கச் சொல்லியிருந்தாள். அதற்கு அவனும் ஓகே என்று சொல்லிவிட்டு நேற்று இரவு 11 மணி அளவில் வாட்சாப்பில் தோல்விக்கான குறியீட்டைக் கொண்ட இமோஜியை அனுப்பி வைத்துவிட்டு போனை அணைத்து வைத்துவிட்டான்.
அதில் கடுப்பான தீபா நேராக அவனை தேடி வர அவனோ போஸ்ட்மார்ட்டம் டீமில் நின்றபடி சைட் அடித்துக்கொண்டு இருந்தவன் முன்னே வந்து நின்றாள் தீபா. தீபாவை அங்கு சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் “ஆ…..” என்று கத்த
“கத்தாத கார்த்திக் நான் தான் “
“நீங்களா மேம் சடனா முன்னாடி வந்து நின்னதும் கொஞ்சம் பயந்துட்டேன்.” என்று மூச்சை இழுத்து விட்டபடி” நாம இருக்குற இடம் சரியில்லை. நாம ஏன் வெளியில போய் பேசக் கூடாது “ என்று தீபாவை அங்கிருந்து வெளியே அழைத்து வந்த பிறகே நார்மல் ஆனான்.
“ கார்த்தி நான் கொடுத்த வேலை என்ன ஆச்சு “ “அதான் நேத்தே அனுப்பினேனே ஊத்திகிச்சுன்னு ““அதை தெளிவா அனுப்புனா என்ன அவ்ளோ கேர்லெஸ்“
“என்னது கேர்லெஸ்ஸா நான் நைட் 11 மணி வரை அந்த லேப்ல கஷ்டப்பட்டு எல்லா மெத்தடும் ட்ரை பண்ணி பார்த்துட்டு அத உங்க கிட்ட சொல்லிறலாம்னு பாத்தா போன பாத்தா சார்ஜர் இல்லை அப்பறம் பரவாயில்லைன்னு இருந்த ஒரு பாயின்ட்ல அனுப்பி விட்டேன். ஒரு பாராட்டு கூட வேணாம். ஆனா திட்டுறீங்க “
“ஓ… சார்ஜர் இல்லையா சரி”
“என்ன சரி இது ரொம்ப கஷ்டமா இருக்கு வேற மாத்தி தர சொல்லுங்க உங்க சார் கிட்ட”
“எந்த சார் எத மாத்தணும்”
“மேம் என்ன சாரா இவ்வளவு நேரமா ஒரு மிக்சரை பத்தி பேசினோமே அந்த மிக்சரைக் கொடுத்த உங்க சார் “
“ஓ… நீ அவரைச் சொல்றியா அவர் கிட்ட இப்போ பேச முடியாது “
“ஏன் முடியாது “
“அவர் கோமாவுக்குப் போயிட்டாரு “
“என்ன மேம் சொல்றீங்க எப்படி அவர் கோமாவுக்குத் போனாறு திடீர்னு “
“அது ஆக்சிடென்ட் ஆயிடுச்சு “
“அச்சோ பாவம் சரி விடுங்க நம்ம கையில ஒன்னும் இல்ல ஆனா இதுல ஒரு நல்ல விஷயம் அந்த மிக்சரைத் தூக்கிட்டு இனிமே அலைய வேணாம்”
“என்னது அலைய வேணாமா அவர் கோமாவுக்குப் போற முன்னாடி இதைக் கண்டுபிடிச்சே ஆகணும்னு சொல்லிட்டுத் தான் போயிருக்காரு, சோ நம்ம கண்டுபிடிச்சுத் தான் ஆகணும் ஓகே “
“அய்யோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல “ என்று கத்திய கார்த்திக்கைக் கதறக் கதற இழுத்துக்கொண்டு லேப்க்குச் சென்றாள். லேபில் கார்த்திக் புலம்பியபடி இருந்தான். “நான் எல்லாம் பண்ணிட்டேன் மேம் இதுக்குமேல புதுசா தான் மெத்தட் உருவாக்கணும் “
“புலம்புறத கொஞ்சம் நிறுத்திட்டு நான் சொல்றத கேளு, நான் நேத்து ஒரு கேஸ் பத்தி படிச்சிட்டு இருந்தேன் அப்போ தான் இந்த ஐடியா வந்துச்சு நம்ம இந்த டிஎன்ஏ தனியா பிரிச்சு எடுப்போம்ல அது தெரியுமா”
“ஆ… தெரியும் மேம் படிச்சிருக்கேன். ஆனால் இதுவரை ட்ரை பண்ணிப் பார்த்தது இல்லை. ஏன் அத இப்போ கேக்குறிங்க அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“நெக்ஸ்ட் அந்த மெத்தடில்தான் ட்ரை பண்ணப் போறோம்.”
“அய்யோ மேம், அதுல நிறைய ப்ராசஸ் இருக்கே!”
“எல்லா ப்ராசஸும் இல்லை. சிலத மட்டும் நான் மார்க் பண்ணி வச்சிருக்கேன்.”
“உங்க சாரு மண்டைக்குள்ள மூளையை மட்டும்தான் வச்சிருப்பாரு போல இப்படி யோசிச்சிருக்காரு .”
“ஆனா இதை இப்போ ஸ்டார்ட் பண்ண வேண்டாம்.”
“ஏன் இப்போ வேணாம்?”
“இன்னும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் குள்ள நாம போலனா இந்த பாலா சலங்கை இல்லாம ஆட ஆரம்பிச்சிருவாரு. அதை நீ சமாளிப்பன்னா எனக்கு ஓகேதான். இப்போவே ஸ்டார்ட் பண்ணிடலாம்.”
“நான் கிளம்பிட்டேன்” என்று ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். அதைப் பார்த்து சிரித்தபடி தீபாவும் சென்றாள். அன்று மதியம் ஒரு கேஸை முடித்துவிட்டு தீபா மற்றும் கார்த்திக் வர, தீபா “கார்த்திக், மதியம் அப்புறம் கேஸ் நமக்கு இல்லை. நம்ம ஃப்ரீதான். சோ, சாப்பிட்டு நேரா லேப்க்கு வந்துரு.”
“இல்லை கார்த்திக், நான் லன்ச் பேக் கொண்டு வந்துட்டேன்.”
“லன்ச் கொண்டு வரலைன்னா மட்டும் அப்படியே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல போய் சாப்பிடுற மாதிரி எப்பவும் இங்கதானே மேம்?” “இல்லை, நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட சாப்பிடுவியேனு” என்று தயங்கிய தீபாவை பார்த்து “ஏன் மேம், ஜூனியர் கூடலாம் சாப்பிட மாட்டீங்களா?”
“அப்படி இல்லை கார்த்திக் நான் சாப்பிடும்போது பேச மாட்டேன் உனக்குப் போர் அடிக்குமேனுதான் பார்த்தேன் “
“அதெல்லாம் அடிக்காது என் கூட இப்போ சாப்பிட வருவீர்களா இல்லையா”
“சரி வா போலாம் பசிக்குது எனக்கு “ என்று இருவரும் சென்று ஒரு மேசையில் அமர அந்த ஆபிஸே இவர்களைத்தான் பார்த்து விட்டும் சிலர் அவர்களுக்குள்ளே பேசியபடியும் சென்றனர். இவை எதையும் தீபா கவனிக்கவில்லை அவள் கவனம் முழுக்க உணவில்தான் இருந்தது. முதலில் கார்த்திக் கூட தீபா சும்மாதான் சொல்கிறாள் சாப்பிடும்போது பேச மாட்டேன் என்று நினைத்த கார்த்திக்கு அதிர்ச்சியே சாப்பிடும்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை இவன் பேசினால் அதைக் கேட்டு ஒரு சிரிப்பு இல்லை தலை ஆட்டல் அவ்வளவுதான்.
ஆனாலும் அவள் கொண்டு வந்த பிரியாணியை கார்த்திக் கேட்கும் முன் அவளே கொஞ்சம் போட்டு கொடுத்தாள் இவனும் பதிலுக்கு இவன் உணவைத் தர அதை மறுக்காமல் வாங்கி உண்டுவிட்டு சூப்பர் என்று கைகளால் செய்கையும் செய்தாள். இப்படி இருவரும் உண்டுவிட்டு லேப்க்கு சென்றனர் லேபில் கால் எடுத்து வைத்ததும் கார்த்திக்
“இன்னைக்கு லேப் கூடத்தான் போல “ என்று சலித்தபடி வேலையைத் தொடங்கினான். இவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும்போது தீபாவின் போன் அழைக்க அதை எடுத்துப் பார்த்தாள் ரஞ்சன் தான் அழைத்து இருந்தான் அவன் பெயரைப் பார்த்ததும் உதட்டில் மிளிர்ந்த புன்னகையுடன் எடுத்தாள்.
“ரஞ்சன் …”
“எங்கே இருக்க தீபா “
“நானா ஆபிஸ்ல “
“ஆபிஸ்ல எங்கே இருக்க “
“பயோ லேப்ல ஏன் எதுக்கு ரஞ்சன்”
“ ரூம் நம்பர் சொல்லு “
“203” “ம்ம்ம்…” என்று போனை வைத்துவிட்டான். அவன் வைத்தும் போனைப் பார்த்தபடி “இங்கே வரப் போறாரா என்ன” அதைக் கேட்ட கார்த்திக் “யாரு வர மேம் “
“ரஞ்சன்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவனே அவள் முன் வந்து நின்றான். வெள்ளை டி-சர்ட் மற்றும் காக்கி பேன்ட் சகிதமாக வந்து இடுப்பில் கைவைத்தபடி இவள் முன் நிற்பவனை பார்த்து மனம் தடுமாறத்தான் செய்தது. தடுமாறிய மனதை இறுக்கிப் பிடித்தபடி
“இங்க எப்படி உங்களை அலோவ் பண்ணாங்க?” “போலீஸுக்கு எப்படி பர்மிஷன் தராம இருப்பாங்க?” என்று அவளைப் பார்த்து புருவம் உயர்த்த, “ஓ… சரி இங்க என்ன பண்றீங்க? ஏதாவது கேஸ் விசியமா வந்திங்கள?”
“ஆமாம், கேஸ்தான். பெரிய கேஸ். என்னை ஒருத்தி என் தங்கச்சி கல்யாணத்துல வந்து கிறுக்கனா ஆக்கிட்டு ஒரு பாய் கூட சொல்லாம போயிட்டா. அவளைப் பிடிக்கத்தான் வந்திருக்கேன்” என்று லேசாக உதடு விரிய சிரித்தான். அதற்கு தீபா தடுமாற்றத்துடன்
“ அது இல்ல ரஞ்சன், அது வேலை. அதான்” என்று அவனைப் பார்க்காமல் தலையை குனிந்தபடி ஏதேதோ பிதற்ற அவள் பதற்றம் புரிந்த ரஞ்சன், “சரி, நீங்க என்ன லேப்ல? நீயும் கேஸ் விசியமா பிசியா ?”
“கேஸ் இல்ல ப்ரோ” என்று அங்கு வந்தான் கார்த்திக்.
“கேஸ் இல்லன வேற எதுக்கு லேப்ல?”
“அதுவா சார், எங்க மேம் ஓட சார் ஒருத்தர் ஒண்ணைக் கொடுத்து கண்டுபிடிக்கச் சொன்னார். அதைத்தான் கண்டுபிடிச்சிட்டு இருக்கோம். பாவம், அவர் வேற கோமாவில் இருக்கார்” இதை கேட்ட ரஞ்சன் என்ன என்பது போல தீபாவை பார்க்க, அவள் கார்த்திக் இருப்பதை கண்களால் காட்டிவிட்டு, “கார்த்திக் சாருக்கு, ஜூஸ் எடுத்துட்டு வர்றீங்களா?” என்று அவனை அனுப்பிவிட்டு
“அது அந்த சாக்லேட்டை நான் லேப்ல வச்சு செக் பண்ணிட்டு இருக்கும்போது வந்து ஹெல்ப் பண்ணான் அப்படியே என்னன்னு கேட்டான் அதை சார் கதை சொல்லி வச்சிருக்கேன்”
“சரி சார் கொடுத்தாருன்னு சொன்னது வரை ஓகே ஏன் அவரை கோமாவுக்கு அனுப்பின “
“பின்ன இவன் நிமிஷத்துக்கு ஒரு முறை சார் கிட்ட கேட்கலாம் கஷ்டமா இருக்குன்னு புலம்பினான் அதான் அப்படி சொன்னான்”
“நல்லா பொய் சொல்ற தீப்ஸ்”என்று சிரிக்க
“கார்த்திக் முன்னாடி தீப்ஸ் கீப்ஸ்னு கூப்பிட்டீங்க கொன்னுடுவேன் உங்களை “ என்று கைநீட்டி மிரட்டியவளை பார்த்த ரஞ்சன் “போலீஸ் காரனையே கொல்றன்னு மிரட்டுற நான் உன்னை அப்புறம் பார்த்துக்குறேன் “ என்று பேசிக்கொண்டிருக்கும்போது கார்த்திக்கும் வந்துவிட தீபாவும் கார்த்திக்கும் அந்த மிக்சரை பிரிக்கும் வேலையை செய்யத் தொடங்கின.
இவர்கள் மூவர் பேசுவதை தூரத்தில் இருந்து இரு ஜோடி கண்கள் பார்த்துவிட்டுச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. பின் தீபா வேலையாக இருப்பதை பார்த்துவிட்டு ரஞ்சன் கிளம்பிவிட்டான் அவளை தொந்தறவு செய்ய கூடாது என்று . அன்று இரவே வெற்றிகரமாக அதில் கலந்திருந்த அனைத்து கெமிக்கல் பெயரையும் கண்டுபிடித்த தீபா கார்த்திக்கிடம் நன்றி சொல்லிவிட்டு அதை போனில் ரஞ்சனுக்கு அனுப்பி வைத்தாள்.
அதை பார்த்த ரஞ்சன் அதை உடனே டாக்டருக்கு அனுப்பி வைத்துவிட்டு அவருக்கு போன் செய்தான். போனை எடுத்த டாக்டர் “ இப்பதான் பார்த்தேன் ரஞ்சன் இன்னும் முழுசா பார்க்கல நீங்க நாளைக்கு நேர்ல வந்துருங்க நாம இதை பத்தி பேசலாம் “ என்று வைத்துவிட்டார். இதை கேட்டு ரஞ்சன் தீபாவையும் நாளை ஆஜூன் ஆபிஸ்க்கு வர சொல்லி மெசேஜ் ஒன்றை அனுப்பி வைத்தான்.
மறுநாள் அர்ஜுன், ரஞ்சன், தீபா மூவரும் டாக்டர் முன் அமர்ந்திருக்க அவர் பேசத் தொடங்கினார். தீபா கண்டுபிடிச்சிருக்கத வச்சி பார்த்தா இதுவும் ஒரு வகையான ட்ரக் தான். ஆனால் இது இந்தியாவில விக்குறது இல்லை. வெளிநாட்டில் கூட இதை அவ்வளவாக யாரும் பயன்படுத்த மாட்டாங்க. ஏன்னா இதோட மூலப்பொருள் சாதாரணமா விற்குற ட்ரக்கை விட விலை அதிகம். அத்தோட இது போதையை அதிகம் தராத விட நல்ல தூக்கத்தைத்தான் தரும். அதனால இதைத் தூங்க முடியாம தூக்கத்துக்காக ஏங்குறவுங்க மட்டும்தான் வாங்குவாங்க.
“அப்போ இது தூக்க மாத்திரை மாதிரியா டாக்டர்?” என்று ரஞ்சன் கேட்க, அதற்கு டாக்டர், “தூக்க மாத்திரை செய்யும் வேலையைத்தான் பார்க்கும். ஆனால இது தூக்க மாத்திரையை விட டேஞ்சர்ன்னு சொல்லலாம். எப்படின்னா, தூக்க மாத்திரை எடுத்துக்கிட்டா அப்புறம் அத எடுக்காம விட்டா கூட பக்க விளைவு இருக்கும். ஆனால் பெரிய பிரச்சனை வராது. ஆனால் இந்த ட்ரக்க நாம தொடர்ச்சியாகச் சாப்பிட்டு அப்புறம் சாப்பிடாம விட்டா அது அப்புறம் நம்ம என்ன ட்ரீட் மெண்ட் எடுத்தாலும் தூக்கத்தை தராது. மீறித் தூக்கம் வரனும்னா இதைத்தான் கொடுத்து ஆகனும் . வேற வழி இருக்காது. ஆனால் இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் அவர்களுக்கு ஐக்யூ குறைவது அல்லது ஞாபகமறதி வரதுன்னு இந்த பிரச்சனை தான் வரும். அவ்வளவுதான் இந்த ட்ரக்கால செய்ய முடியும்.”
“அப்போ எப்படி டாக்டர் அதே ட்ரக்கை சாப்பிட்ட இவங்க மட்டும் சாகப் போறாங்க “ என்று அர்ஜுன் கேட்க
“அதுதான் இப்போ பிரச்சனை. இந்த ட்ரக்கால ஒருத்தனை இவ்வளவு சீக்கிரம் சாகிற அளவு கொண்டு போக முடியாது. ஆனா இங்க கிடைக்கிற அதே ட்ரக்கை ஒருத்தன் தொடர்ந்து சாப்பிடுறதுநால , அவன் உயிர் வாழ்ரதே கஷ்டம ஆகிடுது. அதாவது இங்க படுத்துட்டு இருக்கிறவங்க நிலைமைதான் “
“இல்லை, புரியல. இப்போதானே நீங்க சொன்னீங்க இந்த ட்ரக்கால சாக அடிக்க முடியாதுன்னு” என்று ரஞ்சன் கேட்டான்
“ஆமா, அந்த ட்ரக்கால முடியாதுதான். ஆனா அதே ட்ரக்கை வேணும்னே ஆர்கன் ஃபெயிலியர் ஆகுற மாதிரி மாடிஃபை பண்ணி இங்க விக்குறன் எனக்கு தெரிஞ்சி அவன் டார்கெட் இங்க இருக்க எல்லாரும் “