மேடையில் நின்றபடி தேவி அருகில் இருக்கும் மனோவை கூப்பிட்டு “அங்க என் அண்ணாவை பாருங்களேன்“
“அவரை ஏன் நான் பார்க்கணும், நான் பார்க்க வேண்டியவ என் பக்கத்திலயே இருக்கும் போது“
“ஹலோ இப்படி மொக்கை போட்டா சொல்ல வந்ததை சொல்ல விட்டுருவான் “
“சரி சரி மொக்க போடல இப்போ என்ன உனக்கு என் மச்சானா தானே பார்க்கணும், சரி இதோ பார்த்துட்டேன் “ என்று அந்த டிஜே பசங்களுடன் தோள் மீது கைபோட்டபடி நிற்கும் ரஞ்சனை பார்த்துவிட்டு
“ஆமாம் அவருக்கு என்ன ஜாலியாக பாட்டு கேட்டுட்டு இருக்காரு போல“ என்று தேவியைப் பார்க்க அதற்கு முறைத்த தேவி “இத்தனை வருஷம் எப்படி சாமியாராவே இருந்தீங்கன்னு இப்போ தானே புரியுது“
“தேவி என்னன்னு தெளிவா சொல்லுமா நான் கொஞ்சம் சாமியார் தான் ஒத்துக்கிறேன்“
“சரி இப்போ என்ன பாட்டு போட்டுருக்காங்க “ “நிலாவே வா சாங்“
“இதுக்கு முன்னாடி என்ன சாங் போட்டாங்க “ “ம்ம்ம் வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா சாங்“
“அதுக்கும் முன்னாடி“ என்று கேட்டதும் மனோ தேவியைப் பார்த்து முறைக்க
“சரி நானே சொல்றேன் நிலா நீ வானம் காற்று மழைனு போட்டாங்க “
“சரி அதுக்கு என்ன“
“சுத்தம் போங்க, உங்கள வச்சிட்டு என் நிலமை ரொம்ப கஷ்டம் தான் போல “ என்று நொந்த படி “நானே சொல்றேன் கேளுங்க பாட்டு போடுற இடத்திலே யார் இருக்காங்க “
“அது உங்க அண்ணா“
“அவன் அப்படியே யாரை பார்க்கிறானு பாருங்க“ மனோவும் யாரை என்று பார்க்க அங்கே ரஞ்சன் பார்த்து கொண்டு இருந்த திசையில் நிலாவும் சுடரும் உட்கார்ந்து இருந்தன. இருவரில் நிலா மட்டும் அடிக்கடி ரஞ்சனை பார்த்து முறைப்பதும் முகத்தை திரும்புவதும் என்று இருக்க அதை பார்த்த பிறகே மனோவிற்கு மண்டையில் மணி அடித்தது.
“தேவி உங்க அண்ணன் என் தங்கச்சிக்கு பாட்டு போடுறான்“ என்று அதிர்ந்து திரும்ப “ஏன் ஷாக் ஆகிறீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க நானும் இவங்களை அப்போ இருந்து பார்க்கிறேன் கண்ணிலேயே பேசிக்கிறாங்க நமக்குத் தெரியாம ஏதோ போயிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்“
“அப்படியா? உண்மையாவே நிலாவும் உங்க அண்ணனுமான நான் இப்பவே நிலா கிட்ட போய் பேசவா?“
“நீங்க வேற என் அண்ணனே! அந்த போலீஸ் வேலைக்கு அப்புறம் உருப்படியா ஏதோ பண்றானேன்னு நான் சந்தோஷப்பட்ட நீங்களே கெடுத்து விட்டுருவீங்க போல.“
“அப்போ நாம ஒன்றும் பண்ண வேண்டாமா?““ஒன்றும் பண்ண வேண்டாம். அவங்களே எல்லாம் பேசி முடிச்சிட்டு கடைசியா நம்மகிட்டதான் வருவாங்க. அப்போ பேசினா போதும்.“ அதை கேட்டு சரி என்று தலையாட்டியபடி,
“உன் அண்ணா என் தங்கச்சியை நல்லா பார்த்துப்பான்ல? அப்புறம் மேரேஜ் நம்ம ஏன் இந்த மண்டபத்திலேயே வைக்கக்கூடாது? நல்லா பெரிசா இருக்குல? அப்புறம்…” என்று கல்யாணம் பண்ணி அங்கு போய் ரஞ்சனுடன் வாழ்வது வரை பேசத் தொடங்கிவிட்டான். இங்கு ரஞ்சனோ தீபாவை பார்த்தபடி ஒரு ஒரு பாட்டாகப் போட, கடுப்பான தீபா அவள் போனை எடுத்து ஏதோ செய்துவிட்டு ரஞ்சனிடம் திரும்பி, “போனைப் பார்” என்பது போல சைகை செய்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
ரஞ்சனும் என்னவென்று தன் போனை எடுத்து பார்க்க, மெசேஜ் ஒன்று தீபாவிடம் இருந்து வந்திருந்தது. அதைத் திறந்தால் அதில், “டேய்! ஒழுங்கா அந்தப் பாட்டை நிப்பட்டிடு இல்லை நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை ” என்று ஒரு அங்கரி இமோஜி ஒன்றோடு அனுப்பி வைத்தாள். அதை பார்த்த ரஞ்சன் சிரித்தபடி, “அடியே! மாமாவை மரியாதை இல்லாம டேய்னு சொல்ற?” என்று அனுப்பி வைத்தான். அதை பார்த்த தீபா பதிலுக்கு, “யாரு யாருக்கு மாமா?” என்று அனுப்ப
“வேற யாருக்கு? உனக்குதான்!”
“எனக்கு இருக்கிற மாமா போதும். முதல்ல அந்தப் பாட்டை நிறுத்து. கடுப்பா இருக்கு!” “அச்சோ! தீப்ஸ் சரி, டென்ஷன் ஆகாத. லாஸ்ட்டா ஒரே ஒரு பாட்டு. அதோட நிறுத்திக்கிறேன்” என்று டைப் செய்து, அதனுடன் ஒரு பறக்கும் முத்தத்தைச் சேர்த்து அனுப்பிவிட, அதை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட தீபா அவனைப் பார்க்கக்கூடாது என்று திரும்பிக்கொண்டாள். இவர்கள் இருவரையும் பார்த்த சுடர் “ எண்ணடா நடக்குது” என்ற ரேஞ்சில் வாயை பிளந்து பார்க்க சுடர் தன்னையே பார்ப்பதை கூட கவனிக்காத தீபா அது என்ன பாட்டாக இருக்கும் என்று சிறு ஆர்வத்துடனே இருந்தாள். சிறுது நேரத்தில் அந்தப் பாட்டும் ஒலிக்கத் தொடங்கியது.
“என் சண்டக்காரி நீதான் என் சண்டக்கோழி நீதான் சத்தியமா இனிமே என் சொந்தம் எல்லாம் நீதான்..” இதைக் கேட்டு தலை வேகமாகத் திருப்பி ரஞ்சனைப் பார்க்க அவனை அங்கு காணவில்லை. அவன் அங்கு இல்லை என்றதும் கண்கள் தன்னைப்போல் அவனையே தேட அப்போதும் அவனை காணவில்லை அங்கே. உடனே தீபா சுடர் அருகே இருந்து எழுந்து சென்று மண்டபம் முழுவதும் அவனைத் தேடி கொண்டு இருந்தால்.
ஏன் அவனைத் தேடிச் சென்றாள்? ஏன் அவன் இல்லை என்றதும் மனம் ஏங்குகிறது என்று அவள் எதையும் யோசிக்கவில்லை. ஆனாலும் அவனைத் தேடிச் சென்றாள் தீபா. ரஞ்சனைத் தேடி மாடிக்குச் சென்று பார்த்துக் கொண்டிருக்க திடீர் என்று அவள் காது அருகே “சரியா நடந்தாலும் தானாவே சருக்குறேன் என்ன நீ என்ன பண்ண ஏதோ மாறுதே போதை ஏறுதே உன்ன பார்க்கையில” என்று கேட்ட திடீர் குறளில் பயந்து திரும்பிப் பார்த்தாள்.
அங்கே ரஞ்சன் அவள் அருகே மிக அருகே தொட்டும் தொடாத தூரத்தில் அவள் முகத்தை நோக்கி குனிந்து அவள் கண்களைப் பார்த்தபடி “பாட்டு எப்படி இருந்துச்சு தீபா? இல்லை நிலா? இல்லை இல்லை தீபநீலா கரெக்டா?” என்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்க. ரஞ்சனை இவ்வளவு அருகில் பார்த்ததும் அதிர்ந்து அப்டியே நின்றுவிட்டால் தீபா . இதில் ரஞ்சன் வேறு இவ்வளவு மென்மையாக அழகாக அவள் பெயரைச் சொல்லிப் பேசவும் மயங்கி விழாத குறையாக மூச்சுவிட மறந்து அசையாது நின்று விட்டால் தீபா. அவள் அப்படி நிற்பதைப் பார்த்த ரஞ்சன் பின்பு அவள் நிலை உணர்ந்து சற்றுத் தள்ளிச் சென்று
“ஏய் சண்டக்கோழி மூச்சை இப்பவாவது விடுடி“ என்று சிரிக்க, அதை பார்த்த பின்னே நினைவுக்கு வந்த தீபா, “யாரா டீ போட்டு பேசுற? உனக்கு அவ்வளவு தான் பாத்துக்க“ என்று பழைய ஃபார்முக்கு தீபா வர,
“ஓ சாரி, ஒரு ஃப்ளோல வந்துருச்சு. இப்போதைக்கு அப்படி கூப்பிடல“ என்று கள்ளச் சிரிப்பு ஒன்று சிரிக்க, அவன் சிரிப்பதைப் பார்த்து, “ரஞ்சன், உனக்கு என்ன ஆச்சு? புதுசு புதுசா பண்ற. நேத்து வரை நல்லா தானே இருந்த?”
“அது நான் ரொம்ப ஹாப்பியா இருக்கனா. அதான் சும்மா ஒரு ஃபன்னுக்கு“ என்று அவன் கண்களைச் சிமிட்ட, “உங்க ஃபன்னைத் தூக்கி அந்த மூலையில போடுங்க. இங்க யாரும் அதை கேட்டு வரள. இது உங்க தங்கச்சி கல்யாணம் தானே இங்க வேலை எதுவும் உங்களுக்கு இல்லையா? ஜாலியா இருக்கீங்க.“
“நான்லாம் என் கல்யாணத்துக்கே இப்படித்தான் இருப்பேன். நீ வேற“ என்று தீபாவை பார்க்க, அவள் முறைத்ததும்,
“சரி, டென்ஷன் ஆகாத. இங்க எல்லாத்துக்கும் தனித்தனியா ஆள் போட்டேன். சோ, நோ ப்ராப்ளம்“ என்று கைகளை விரிக்க,
“என்னமோ பண்ணுங்க நான் போறேன்“ என்று கிளம்பிய தீபாவின் கையைப் பிடித்து இழுத்து, அவன் அருகே நிற்க வைத்து, அவள் என்ன என்று உணரும் முன் அவன் போனில் இருந்து செல்ஃபி எடுத்துவிட்டான். அதை பார்த்து முறைத்த தீபாவை பார்த்து, “ஒரு சின்ன பிக், மெமரீஸ்க்காக“ என்று சிரித்தபடி அவள் கைகளை விட்டான்.
ரஞ்சன் கையை விட்டதுதான் தாமதம், அங்கிருந்து ஓடியே சென்றாள் தீபா. இவள் ஓடுவதைப் பார்த்து, “பாத்து போ, தீப்ஸ்“ என்று சிரித்தபடி அவன் மீசையை நீவி அவள் செல்வதையே பார்த்து நின்றான்.
இவ்வாறு ரிசப்ஷன் 11 மணி அளவில் அருமையாக முடிந்தது. நெருங்கிய சொந்தங்களைத் தவிர மற்ற அனைவரும் சென்றுவிட்டனர். மீதம் இருந்தவர்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று அதிகாலை முகூர்த்தம் என்பதால் அனைவரும் உறங்கச் சென்றுவிட்டனர். அப்போது ரஞ்சன் தன் தங்கையின் அறையைத் தட்டிவிட்டு, அவள் திறந்ததும் உள்ளே செல்ல, அங்கே தேவி அலங்காரங்களை பாதி கலைந்தும், பாதி கழற்ற முயற்சி செய்தபடி இருந்தாள். அவளைப் பார்த்த ரஞ்சன் அவளை சேரில் உட்கார வைத்து, அவள் தலையில் இருந்த அலங்காரத்தைக் கலைத்தபடி, “அம்மாவை ஹெல்ப்க்கு கூப்பிட்டுருக்கலாமே!“
“இவ்வளவு நேரம் அம்மா தான் ஹெல்ப் பண்ணிட்டு இருந்தாங்க அண்ணா இப்போ தான் ஒரு போன் வந்துச்சுன்னு போனாங்க “
“ஓ … சரி” என்று ஒவ்வொன்றாக தலையில் இருந்து எடுக்க
“ என்ன தேவி இவ்வளவு பின் இருக்கு எப்படி இதை வச்சிட்டு இவ்வளவு நேரம் இருந்தா? நாளைக்கு மேக்கப் பண்ண வரவங்க கிட்ட இவ்வளவு பின் இல்லாம கம்பர்ட்டா தலைக்கு ஏதாவது பண்ண சொல்லு “
“ அது பறவால ஒரு நாளைக்கு தானே அண்ணா நான் பார்த்துக்கிறேன் ,”
“சரி ம்மா “ என்று இடைவெளி விட்டு “மனோ சைட் எல்லாரும் எப்படிமா நல்லா பேசுறாங்களா?“
“ அவங்க சைட் எல்லாரும் சூப்பர் அண்ணா ஜாலியா பேசுறாங்க எனக்கு தெரிஞ்சு எல்லாம் ஓகே தான் அண்ணா “ என்று சொன்னதும் தான் ரஞ்சனின் முகத்தில் கீற்றாக புன்னகை தோன்றியது அதை கண்ணாடி வழியே பார்த்த தேவியும் புன்னகையுடன் தன் அண்ணனை பார்த்தபடி இருந்தாள். வெகு நாள் கழித்து ரஞ்சனை இப்படி டென்ஷன் இல்லாமல் இலகுவாக இருப்பதை பார்க்கிறாள் தேவி இந்த வேலையில் சேர்ந்ததிலிருந்து ரஞ்சன் ஒரு இறுக்கத்துடனே இருப்பான் பேசுவதிலிருந்து அனைத்திலும் ஆனால் இன்று பழைய குறும்புக்கார ரஞ்சன் திரும்பியது போல ஒரு பிரமை தேவிக்கு. ரஞ்சன் தேவியின் நகைகளையும் கழற்ற உதவியபடி “தேவிமா…” என்று அழைக்க “சொல்லுங்க அண்ணா “
“அது வந்து இந்த மானோ ஓட சிஸ்டர் இருக்காங்கள “ என்று மென்று முழுங்கி எப்படி கேட்க என்று திணறியபடி இருந்த ரஞ்சனைப் பார்த்து சிரித்த தேவி “என்ன அண்ணா நிலா அண்ணி பத்தி கேட்கணுமா“ என்று கேட்டவுடன் தேவியைப் வேகமாகப் பார்த்து
“அது அவங்க என் கூட வேலை பார்க்கிறவங்க அதான் ஏன் பொண்ணு பார்க்க நிச்சயதார்த்தத்துக்கு வரலைன்னு சும்மா தெரிஞ்சுக்க தான் கேக்குறேன் “ என்று அவன் காதலைத் வேலை என்னும் போர்வையை வைத்து மறைக்க முயல அதை புரிந்துகொண்ட தேவியும் எதுவும் தெரியாதது போல அவளுக்குத் தெரிந்தவரை தீபாவை பற்றி அனைத்தையும் சொல்லி முடிக்க அதைக் கேட்டு கோபப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியாமல் இவை எதையும் தன் தங்கை முன் காட்ட முடியாமல் தினறிய ரஞ்சன்“ஆனா தீபா ஓட பாட்டி இப்படி பண்ணியிருக்கக் கூடாது“
என்று பொறுக்க முடியாமல் சொல்லி விட்டுப் பின் “சரி டைம் ஆச்சு நீ போய்த் தூங்கு” என்று சொல்லிவிட்டு இவன் அறைக்குச் வந்துவிட்டான். வந்தவனுக்கு தூக்கம் தான் வரவில்லை அன்று இரவு முழுவதும் தீபாவையே நினைத்துக்கொண்டு தன் தூக்கத்தை நினைக்க மறந்தான்.
மறுநாள் காலை விடிய அங்கு இருந்த அனைவரையும் பாகுபாடு இல்லாமல் இழுத்துக்கொண்டது கல்யாண வேலை. பின் குறித்த நேரத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் மனோகரன் மற்றும் ரஞ்சனி தேவி இருவருக்கும் நல்லபடியாகத் திருமணமும் நடந்து முடிந்தது. துரை சரியாகத் தாலி கட்டும் நேரத்துக்குத்தான் வந்தான். தாலி கட்டிய கையோடு சம்பிரதாயம் செய்து கொண்டு இருக்கும் போது தான் துரை ரஞ்சன் அருகே சென்று தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைத்தான்.
அங்கு சத்தத்தில் துரை பேசியது கேட்காமல் போக சற்று தள்ளிச் சென்று பேசிக்கொண்டிருந்தன. அப்போது மேடை அருகே நின்ற தீபா எதார்த்தமாக ரஞ்சன் இருந்த திசை திரும்ப அங்கே துரையைப் பார்த்தவள் அவரிடம் பேசலாம் என்று அருகே சென்றாள்.
அவள் வருவதைப் பார்த்த ரஞ்சன் சிரித்தபடி கைகள் நீட்டி அவளை அழைக்கப் போக தீபா அங்கே ரஞ்சன் அருகே பார்த்துவிட்டு முகம் வெளிற அங்கேயே ஆணி அடித்தது போல நின்றுவிட்டாள். தீபா முக மாற்றத்தைப் பார்த்த ரஞ்சன் தன் கைகளை உயர்த்தாமல் அப்படியே நிறுத்த இவனிடம் பேசிக்கொண்டிருந்த துரை மற்றும் அவன் மனைவி ரஞ்சன் பார்த்துக்கொண்டிருக்கும் திசை பார்த்துத் திரும்ப அங்கு யாரும் இல்லை.
இங்கே தீபா அவர்கள் திரும்பும் முன் வேக வேகமாக அவள் இருந்த அறையை நோக்கித் தன் முகத்தைத் தான் கட்டியிருந்த சேலையைக் கொண்டு மறைத்தபடி ஓடிச் சென்றாள். அங்கு அறைக்குள் நுழைந்த தீபா அவள் பையைத் தேடி எடுத்து அதில் இருந்த ஒரு குட்டி டப்பாவில் இருந்து மாத்திரைகளை எடுத்து தண்ணீர் கூட இல்லாமல் அதை விழுங்கியபடி அவளுக்கு அவளே “ஒன்னும் இல்லை ஒன்னுமே இல்லை அவ என்னைப் பார்க்க இல்லை, ஆமாம் பார்க்கவில்லை“ என்று பெரிய பெரிய மூச்சுகளை இழுத்துவிட்டபடி அமைதியாகி அவள் பையில் இருந்த மாஸ்க்கைக் கையில் எடுத்து “இல்லை நான் இதை இன்னைக்குப் போட மாட்டேன். நான் வெளியே போனாதானே அவள் என்னைப் பார்ப்பா நான் போக மாட்டேன் நான் போக மாட்டேன் ஆனா சுடர் அவளைப் பார்த்துட்டா இல்லை அவளைப் பார்க்க விடக் மாட்டேன்“ என்று எழுந்து தன் முகத்தில் இருந்த வேர்வையைத் துடைத்தபடி கீழே சென்றாள்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ரஞ்சன் முகம் கசங்க “என்ன ஆச்சு தீபா உனக்கு? நீ ஏன் இப்படி பயப்படுற? நீ தைரியமான பொண்ணுதானே? அதுவும் யார் உன்ன பாக்க கூடாதுன்னு ஓடி வந்த துரை பார்த்தா இல்லை, இதுல ஏதோ இருக்கு. தீபாவுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. அது என்னன்னு பாத்து சரி செய்யனும் “ என்று வேகமாக வேகமாக கீழே இறங்கி துரையிடம் வர, துரை அப்போதுதான் உண்ணச் சென்றான். அங்கு வந்த ரஞ்சன் துரையைச் சுற்றிப் பார்க்க, அங்கே ஒரு தூணுக்குப் பின் மறைந்தபடி தீபா இங்கேயே பார்த்து கொண்டு இருந்தாள், அவளைப் பார்த்து அதிர்ந்து நின்றுவிட்டான் ரஞ்சன். ஏதோ குழந்தை பேயைப் பார்த்து பயந்து நிற்பது போல பயந்து அங்கேயே நின்று இருந்தாள். அவள் முகத்தில் இப்படி பயத்தைப் பார்க்க விரும்பாத ரஞ்சன் துரையைப் பார்த்தபடி “துரை அப்புறம் அவன் வைஃப் ரெண்டு பேரையும் முதலில் அனுப்பணும்“ என்று நினைத்த படி அவர்களை முதலில் உண்ண வைத்து வாசல் வரை சென்று அனுப்பிவிட்ட பின் திரும்பி தீபாவை பார்க்க, அவள் அவர்கள் சென்றதைப் பார்த்த பின்புதான் அவள் முகம் தெளிந்து மண்டபம் உள்ளே சென்றாள்.
இதை பார்த்த ரஞ்சன் குழம்பி நிற்க, அப்போது அங்கு ஒரு ஓரத்தில் நின்று துரை மற்றும் அவன் மனைவியைப் செல்வதை பார்த்தபடி சுடர் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அவள் அருகே சென்ற ரஞ்சன் “அவங்க யாரு? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?“ என்று கேட்க, அதற்கு ஒரு கசந்த புன்னகையோடு “அவுங்களா? நாங்க மறக்கணும்னு நினைக்கிற ஒரு சில பேருல ஒரு தெரிஞ்சவங்க அவங்க“ இதை கேட்டு குழம்பிய முகத்துடன் சுடரை என்ன என்பது போல பார்க்க, “அந்த சாரை எனக்குத் தெரியாது. ஆனா அவரோட வைஃப் இருக்காங்களே, அவங்களை தெரியும். நாங்க சென்னைக்கு வந்த புதுசுல அவங்க அம்மா வீட்டுலதான் வாடகைக்கு இருந்தோம். அவங்க நேம் கூட நளினி“.