விடியல் 35

தீபாவை அங்கு பார்த்த அனைவரும் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் முழிக்க, பின் நளினி அம்மாவோ “சரி, குடும்பமா பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்” என்று அங்கிருந்து சென்றுவிட்டார். பின் குழலியும் அவள் சொந்தங்களும் சேர்ந்து தீபாவை பேசவிடாமல் உள்ளே போகச் செய்துவிட்டனர். பின் குழலியிடம் என்ன பேசினார்கள் என்று ஒன்றும் தீபாவிற்குத் தெரியவில்லை. நீண்ட நேரம் படுக்கை அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இருந்தாள். பின் சிறிது நேரம் சென்று வெளியே எட்டிப் பார்க்க, அங்கு யாரும் இல்லாததைப் பார்த்து பொறுமையாக வெளியே வந்து எட்டி பார்க்க, அங்கே சமையல் அறையில் எதுவுமே நடக்காதது போல குழலி சமைத்த படி இருந்தாள், அவள் அருகே சென்ற தீபா “அம்மா, நீ ஃபீல் பண்ணாதம்மா. நாம் நம்ம ஊருக்கே போய்விடலாம். அப்பா சீக்கிரமாக நம்மளைத் தேடி வந்துடுவாங்க. நீ இவங்க பேச்சைக் கேட்காதம்மா. எனக்குத் தெரியும், உனக்கு என்னையும் சுடரையும் எவ்வளவு பிடிக்கும்னு ” எனப் பேசியபடி பார்க்க, அப்போதும் குழலி வேலை செய்தபடியே இருக்க, தீபா கோபமாக “நான் எல்லாரையும் நல்லா திட்டிவிட்டிருப்பேன். நீ ஏன்மா வந்து தடுத்த? போ “ என்று குழலியை பார்க்க ஒரு அசைவும் இல்லை பின் “அம்மா……, இங்க பாரும்மா” என்று குழலியைத் திருப்ப, அவள் முகம் கண்டு குழம்பிப் போனாள் தீபா. குழலியின் முகம் மிகவும் அமைதியாக இருந்தது.

தீபா குழலியைப் பார்த்து “அம்மா… ஏன் ம்மா இப்படி இருக்க?” என்று உலுக்க, அப்போதுதான் நினைவு வந்தது போல “ஆ.. சொல்லும்மா” என்று சாதாரணமாகக் கேள்வி கேட்டாள் குழலி, அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்தாள் தீபா. “அம்மா கஷ்டமா இருந்தால் சொல்லும்மா, உள்ளேயே வச்சிக்காத ம்மா” என்று தீபா பேச, அதற்கும் பதில் இல்லை. குழலியை இப்படிப் பார்க்க முடியாமல் தீபா அழுதபடி தன் அன்னையைக் கட்டிக்கொண்டு “யார் என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்மா. உனக்கு யார் இருந்தாலும் இல்லாநாலும் நாங்க இருப்போம்மா” என்று அழுதுகொண்டே குழலியைப் பார்க்க, அவள் தீபாவையே வெறித்துப் பார்க்க, பயந்த தீபா குமரனைக் கூட்டி வரச் சென்றாள். அங்கே வீட்டில் குமரன் இரவு வேலை பார்த்து வந்ததால் தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பிப் பார்த்துவிட்டுப் பின் சுடர் அருகே இருந்த குமரனின் போனை எடுத்து கேம் விளையாடியபடி அமர்ந்துவிட்டாள். இங்கே குமரனைக் கூப்பிட தீபா வர, அப்போதுதான் குழலியின் சொந்தங்களும் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தன, அவர்களைப் பார்த்த தீபா ‘இவர்கள் ஆள்தான் குழலிக்கு இந்த நிலை’ என்று எண்ணிய தீபா, “நீங்களெல்லாம் என்ன மனுஷங்க? இதுல நீங்கதான் எங்க அம்மாவை வளர்த்தீர்களாம். வெளியில் சொல்லிடாதீங்க. உங்களையெல்லாம் எங்க அம்மா எங்கே வைத்திருந்தாங்க தெரியுமா? அதை ஒரே நாளில நீங்களே உடைச்சிடிங்களே!” எனப் பேசியதைக் கேட்ட குழலியின் அத்தை, “இது பெரியவங்க பிரச்சனை. சின்ன பொண்ணு நீ வராத”

“என்ன பெரியவங்க பிரச்சனை? எங்க அம்மாவுக்கு யாரும் இல்லைன்னு தானே இப்படி பேசுறீங்க? எங்க அம்மாவுக்கு நான் இருக்கேன். நான் சின்னவளா போயிட்டன்  நீங்க எல்லாம் என்னை விட பெரியவங்களா போயிட்டீங்க. இல்லைன்னா வேற மாதிரி ஆகி இருக்கும்.” அதற்கு குழலியின் முதல் சித்தி, “தீபா, மரியாதை இல்லாம பேசுற. ஒழுங்கா போ.”

 “மரியாதை? அது ஒன்னுதான் முக்கியம் இப்போ? ஏன் பாட்டி, உங்களை எங்க அம்மா அவங்க அம்மா மாதிரி நினைச்சு தானே வளர்ந்தாங்க? நீங்க மட்டும் ஏன் எங்க அம்மாவை உங்க பிள்ளையா பார்க்கல?” அதற்கு இரண்டாவது சித்தி, “அவளை எங்க பிள்ளையா நினைச்சதுனாலதான் இந்த முடிவை எடுத்தோம்.”

 “ம்கும், நல்லா பார்த்தீங்க இல்ல? சும்மா கேட்கிறேன், ஒருவேளை எங்க அம்மா இடத்தில் உங்க பொண்ணுங்க இருந்தா இப்படித்தான் ஒரு வார்த்தை கூட கேட்காம முடிவு எடுப்பீங்களா? பதில் இல்லைல? இந்த உலகத்தில் இருக்க எல்லாரும் இப்படித்தான் போல. சுயநலவாதிங்க!” என்று படி மாடி ஏறி தன் மாமன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

குமரன் வீட்டில் அவன் மொபைலோடு விளையாடிக் கொண்டிருந்த சுடரைப் பார்த்து டென்ஷன் ஆன தீபா “ மாமாவ கூப்பிட்டு வரச் சொன்னா இங்க வந்து கேம் விளையாடுற அறிவே இல்ல சுடர் உனக்கு “ என்று கத்திய சத்தத்தில் குமரன் அடித்துப் பிடித்து என்னவோ என்று எழுந்து பார்க்க அங்கே தீபா கோபத்துடன் நின்று சுடரைத் திட்டுவதைப் பார்த்து “ இவங்களுக்கு வேற வேலை இல்ல எப்பா பாரு சண்டை போடுறது “ என்று சோம்பல் முறித்தபடி நேரத்தைப் பார்க்க அது 12:30 என்று காட்ட அதைப் பார்த்து

 “ ஏ சுடர் என் அலாரத்தை திருப்பி ஆஃப் பண்ணிட்டியா எனக்கு ஒரு மணிக்கு வெளியே போக வேண்டிய வேலை இருந்தது அச்சோ லேட் ஆச்சு “ என்று புலம்பிக்கொண்டே தன் துணியை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குச் சென்றவன் போன வேகத்தில் உடையை மட்டும் மாற்றி கண்ணாடி பார்த்தபடி தலைவாரிக்கொண்டே “ அம்மா கிட்ட நான் இன்னைக்கு வெளிய சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லு நைட் வர லேட் ஆகும் அப்புறம் நீங்க விளையாடி முடிச்சிட்டு வீட்டை லாக் பண்ணிட்டு போங்க நான் சாவி எடுத்துட்டு போறேன் பாய் “ என்றபடி சென்றுவிட்டான். குமரன் சென்றதும் சுடர் திரும்பி தீபாவை பார்க்க தீபா கண்கள் கலங்கி நின்ற கோலத்தைப் பார்த்து சுடர் “ என்ன ஆச்சு நிலா ஏன் அழுற “ என்று அவள் அருகில் போக தீபா சுடரை அணைத்து கத்தி அழுதபடியே வீட்டில் நடந்ததிலிருந்து கீழே இவள் திட்டியது வரை சொல்லி முடித்தாள்.

இதை கேட்ட சுடர் முதலில் தீபாவை அழைத்துக்கொண்டு தன் அம்மாவைப் பார்க்கச் செல்ல அங்கே குழலி ஒன்றும் நடக்காதது போல நின்று சமைத்துக்கொண்டிருந்தாள். குழலியைப் பார்த்த சுடர் அவள் அருகே சென்று “அம்மா…”என்று அழைக்க அதற்கு குழலி “வாங்க சீக்கிரமா ரெண்டு பேரும் சாப்பிடுங்க நாம படம் பார்க்க சினிமாவுக்குப் போலாம்“ என்றபடி இருவரையும் அமர்த்தி உண்ண வைக்க இதை பார்த்து குழம்பிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கப் பின் சுடர் ஏதோ பேச வர குழலியோ “டைம் ஆச்சு சீக்கிரம் சாப்பிடு சுடர் அப்புறம் பேசலாம்“ என்று அவளும் உண்ணத் தொடங்கினாள். சுடர் தீபா இருவரும் மனதில் அம்மா இதை மறக்க நினைக்கிறாங்க போல நாம இதைப்பற்றி அப்புறமா பேசலாம் என்று இருவரும் விட்டுவிட்டனர்.

 சாப்பிட்டு முடித்துவிட்டு மூவரும் சினிமாவிற்குச் சென்றுவிட்டு இரவு உணவு முடித்து அன்று நாள் நன்றாகத்தான் முடிந்தது என்று எண்ணியபடி சுடர் தீபா இருவரும் குழலியின் இரு புறமும் படுத்துத் தூங்கிப்போனார்கள். ஜன்னல் அருகே படுத்துக்கொண்டிருந்த தீபாவின் முகத்தில் சூரியக் கதிர்கள் பட்ட பிறகு  தான் தூக்கம் கலைந்து எழுந்தாள் தீபா. எழுந்து வெளியே பார்த்துவிட்டு உடனே கடிகாரத்தைப் பார்க்க மணி 10 என்று காட்டியது அதை பார்த்து “என்ன இவ்வளவு நேரமா தூங்கிருக்கோம் அம்மா ஏன் எழுப்பல“ என்றபடி அருகே பார்க்க அங்கே குழலி இல்லை சுடர் மட்டும் உறங்கிக்கொண்டிருந்தாள் ஒன்றும் புரியாமல் சுற்றிப் பார்த்தபடி கீழே இறங்கி நிற்க அப்போது அவள் கண்ணில் பட்டது அருகில் இருந்த அலமாரியில் ஒரு புக்கின் அடியில் இருந்த ஒரு வெள்ளைக் காகிதம். அதை பார்த்த உடனே தீபாவிற்கு பயம்தான் முதலில் தோன்றியது இதே போல ஒரு காகிதம்தான் தன் தந்தையும் விட்டுச் சென்றார் அந்த நினைவு வந்ததும் அதன் அருகே செல்லாமல் அப்படியே நின்றுவிட்டாள்.

ஒரே இடத்தில் அசையாமல் நின்ற தீபா பின் தன் தலையை ஆட்டியபடி “இல்லை அப்படி இருக்காது“ என்று சொன்னபடி அதை எடுக்காமல் “அம்மா … அம்மா…“ என்று கத்தியபடி வெளியே ஹால் கிச்சன் என்று தேட குழலியை காணவில்லை. இவள் போட்ட சத்தத்தில் எழுந்த சுடர் “என்ன நிலா ஏன் கத்துற அம்மா வேலைக்குப் போயிருப்பாங்க கத்தாத“ என்று தன் கண்களை கசக்கிய படி பேச, அவள் கூறியதை எதுவும் காதில் வாங்காத தீபா திருப்பித் திருப்பி வீட்டையே சுற்றி வந்தவள் பின் ஞாபகம் வந்தவளாக மாடியை நோக்கி ஓட அவள் பின்னாலேயே சுடர் “ஏ நிலா எங்கடி போற“ என்றபடி பின்னாலேயே ஓடினாள். மாடியை நோக்கி ஓடிய தீபா அங்கு எதையோ பார்த்து அதிர்ந்து நிற்க அவளைப் பார்த்த சுடர் தீபா பார்க்கும் திசையை நோக்கிப் பார்க்க அங்கே குழலி அமர்ந்த வாக்கில் கையில் அவளது திருமண ஆல்பத்தைக் கட்டிப் பிடித்தபடி முகத்தில் சிரிப்புடன் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தாள் இதைப் பார்த்த இருவரும் அப்படியே நிற்க சிறிது நேரம் சென்று தீபா மெல்ல தன் அன்னையின் அருகே சென்று “அம்மா இங்க என்ன பண்ற கீழ போலாம்மா வா…“ என்றபடி உலுக்க குழலி சரிந்து கீழே விழுந்தாள். அதைப் பார்த்து அதிர்ந்து தீபா மயங்கி சரிந்தாள்.

இதைப் பார்த்த சுடர் என்ன செய்ய என்று தெரியாமல் கீழே சென்று குமரனை அழைத்தாள். தூங்கிக் கொண்டிருந்த குமரன் தொடர்ந்து ஒலிக்கப்பட்ட ரிங் டோனால் கண்களை மூடியபடியே போனை எடுத்து காதில் வைக்க சுடர் அழுதபடி “ மாமா அம்மா …. அக்கா மாடில “ என்று திக்கிப் பேசத் தெரியாமல் பேச குமரன் பதறி எழுந்து என்னமோ ஏதோ என்று கலைந்த தலை கசங்கிய உடை என்று காலில் செருப்புக்கூட அணியாமல் ஓடி வந்தான். தன் மாமனைக் கண்டதும் கத்தி அழுத சுடர் மாடியை நோக்கி கை காட்ட குமரனும் வேகமாக மாடி ஏறினான் அங்கே தரையில் சரிந்திருந்த தன் அக்காவைப் பார்த்து பதறி “ அக்கா “ என்று ஓடிச் சென்று எழுப்பப் பார்க்க குழலியிடம் அசைவே இல்லை அவள் உடல் ஜில்லென்று இருக்க அதிர்ந்து அமர்ந்துவிட்டான் குமரன். பின் சுடரின் அழுகுரலிலும்  மாமா என்ற அழைப்பிலும் சுயம் பெற்று சுடரை திரும்பிப் பார்க்க. அவள் மாடியில் ஒரு ஓரத்தில் நின்று பயந்தபடியே “நிலா …நிலா “ என்று தீபாவை கை காட்ட அப்போதே தீபாவை பார்த்தான் குமரன் பின் திரும்பி சுடரிடம் ஒரு இயந்திர குரலில் “ போய் தண்ணீ எடுத்து வா “ என்று சொன்னதும் தண்ணீர் எடுத்து வந்து பயந்து நிற்க அவளைப் பார்த்து தலை அசைத்து அருகே அழைக்க பயந்தபடியே வந்தாள் சுடர் பின் தண்ணீரை வாங்கி தீபாவை எழுப்ப எழுந்த தீபா ஒரு நிமிடம் குழலியைப் பார்த்துவிட்டு பின் வேகமாக எழுந்து கீழே சென்றுவிட்டாள். குமரனோ தன் அக்காவை மடியில் கிடத்தி அவள் தலையை கோதியபடி அவளையே பார்க்க சுடர் தயங்கித் தயங்கி தன் தாயின் கால்களைப் பிடித்தபடி வந்து அமர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். கீழே சென்ற தீபா அந்த அலமாரியில் இருந்த காகிதங்களை எடுத்து மீண்டும் மேலே ஓடி வந்து குமரன் இடம் நீட்டினாள். அதைப் பார்த்த குமரன் தன் கைகள் நடுங்க அந்தக் காகிதங்களை வாங்கிப் படிக்கத் தொடங்கினான். “ அன்புள்ள நிலா அப்பாவிற்கு …” என்று ஆரம்பித்தது