தீபா தன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக ஆவலுடனும் பதட்டத்துடனும் கடவுள் முன் நின்று வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து ஓடி வந்த மாதவன் தீபாவை தூக்கி சுற்றியபடி “தீபா நீதான் உங்க ஸ்கூல் ஃபர்ஸ்ட்” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல, இதைக் கேட்டு சுடரும் குழலியும் மகிழ்ந்து அவளை வாழ்த்தி இனிப்பு ஊட்டினாள். தீபாவிற்குப் படிப்பில் ஆர்வம் அதிகம். பத்தாம் வகுப்பு தேர்வில் 455 மதிப்பெண் எடுத்திருந்தாள். அவளுக்கு அறிவியல் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஆசையே டாக்டராக வேண்டும் என்பதே.
தீபா தன் தந்தையிடம் அடுத்து என்னென்ன படிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டே அன்று நாளை மகிழ்ச்சியுடன் கழித்தாள். மறுநாள் தந்தையுடன் அவள் படித்த அரசு பள்ளிக்குச் சென்றாள். அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். மேற்கொண்டு படிக்க இன்னும் பதினைந்து மைல் தள்ளி உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும். இவர்கள் இருக்கும் ஊர் விவசாய நிலங்கள் உடைய கிராமப்புறப் பகுதி. அங்கு பஸ் அவ்வப்போதுதான் வரும். அதை விட்டுவிட்டால் நடந்துதான் செல்ல வேண்டும்.
இதை எல்லாம் யோசித்த மாதவன் தீபாவை பார்த்து “நாம சென்னைக்கே போயிடலாமா தீபா?“ என்று கேட்க அதற்கு தீபாவும் “உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே தான் அப்பா“ என்று புன்னகை முகத்துடன் பேச அதை பார்த்த மாதவனும் சிரிப்புடன் “நீங்க நல்லா படிச்சு பெரிய டாக்டர் ஆகணும். அப்பா கிட்ட சொன்ன மாதிரி சரியா? அதுக்கு என்ன தடை வந்தாலும் நல்லா படிக்கணும், அப்பறம் அம்மாவையும் பாப்பாவையும் நல்லா பார்த்துக்கணும்“ இதை கேட்டு தீபா
“சரிப்பா நான் உங்களையும் சேத்து நல்லா பார்த்துப்பேன்“ என்று உறுதியளித்தாள். அப்போது அவள் அறியவில்லை இந்த உறுதியை அவளே உடைத்து சுக்குநூறாக மாற்றப் போவது. அன்று இரவு மாதவன் தான் இரவு உணவு செய்தான். குழலியை ஒரு வேலை கூட செய்யவிடவில்லை. பின் அவனே அனைவருக்கும் ஊட்டிவிட இதை பார்த்து தீபா “எப்பவும் அம்மாவுக்கு மட்டும்தானா ஊட்டி விடுவீங்க? இன்னைக்கு என்ன அதிசயமா எங்களுக்கும் ஊட்டி விடுறீங்க“ என்று தீபா கேட்டாள். அது என்னமோ உண்மை தான். தீபாவுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே மாதவன் தான் குழலிக்கு இரவு உணவு ஊட்டி விடுவான். குழலியும் மாதவன் வர எவ்வளவு நேரம் ஆனாலும் அவன் கையினால் ஊட்டிவிட்டால் மட்டுமே உண்பாள். அதற்கு மாதவன் “நீ ஸ்கூல் பஸ்ட் வந்ததுக்கு என் ட்ரிட்டு “ என்றபடி ஊட்டி விட தீபா எப்போதும் போல தன் தாய் தந்தையின் இடையே இருக்கும் அன்பை கண்டு ரசித்தபடி உண்டாள்.
அன்று இரவு மறக்க முடியாத இரவாகவே தீபாவுக்கு மாறிப்போனது. மறுநாள் காலை தீபா எப்போதும் போல எழுந்து முகம் கழுவ வெளியே செல்ல அங்கே குழலி கையில் காகிதம் ஒன்றை வைத்தபடி வானத்தையே வெறித்துக்கொண்டு இருந்தாள். அருகில் சென்ற தீபா “அம்மா அம்மா ஏன் இப்படி உட்கார்ந்துட்டு இருக்கீங்க என்ன ஆச்சு “ என்று உலுக்க குழலி அசையவே இல்லை. அப்போது அவள் கையில் இருக்கும் காகிதத்தை வாங்கிப் பார்க்க அதில் மாதவன் எழுதியிருந்தது “குழலி நான் ஒரு வேலை விசியமா வெளியூர் போறேன். சீக்கிரமாவே திரும்பி வந்துவிடுவேன். நான் வரும்வரை பசங்களும் நீயும் உன் தம்பி வீட்டுக்கு போய்ருங்க . தீபா சுடர் இரண்டு பேரையும் அங்கேயே ஸ்கூல்ல சேர்த்துடு. உன் செலவுக்கு உன் பேங்க் அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் போட்டிருக்கேன். அது காலியாகுறதுக்குள்ள நான் வந்துடுவேன். நீயும் பசங்களும் பத்திரமா இருங்க “என்று எழுதி அதன் கீழ் குழலியின் வங்கி பாஸ்புக் இருக்க அதையும் தீபா திறந்து பார்க்க அதில் ஒரு லட்சம் பணம் டெபாசிட் ஆகி இருந்தது. இதை பார்த்து தீபாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு பணம் அப்பாவிற்கு ஏது என்று எண்ணியபடி “அம்மா…” என்று உலுக்க சுயம் வந்த குழலி சிறிது நேரம் தீபாவையே பார்த்துப் பின் “நாமா சென்னைக்கு போறோம். சுடரை எழுப்பு. உங்கள் அப்பா வரும்வரை இங்க வரமாட்டோம் “ என்று எழுந்து முகம் கழுவி இயந்திரம் போல தீபா சுடர் இருவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று மாதவன் சொன்னபடி அங்கு இருக்கும் பள்ளியில் சேர்த்தாள். அங்கு இருக்கும் சொந்தங்கள் மாதவன் எங்கே என்று கேட்டால் ஒரே பதிலையே கூறுவாள் “வெளியூர் போயிருக்காங்க சீக்கிரம் வந்துடுவாங்க “ சில சமயம் சுடர் அப்பாவை கேட்டு அடம்பிடித்தாலும் அப்பா வந்துடுவாங்க என்று ஒரே பதிலையே கூறுவாள்.
சென்னை வந்த புதிதில் குழலி பட்ட கஷ்டம்தான் அதிகம். இரவு அனைவரையும் உண்ண வைத்துவிட்டு அவள் உண்ணாமல் அந்த நட்சத்திரத்தையே பார்ப்பாள். குமரன் வந்து கெஞ்சினாலும் உண்ண மாட்டாள். இதை பார்த்த தீபா ஒரு நாள் இரவு குழலி அருகே உணவுடன் சென்று “அம்மா அப்பாக்கு நான் டாக்டராகணும்னு ரொம்ப ஆசை. நான் இந்த நீட் எக்ஸாம் பாஸ் ஆகி டாக்டர் ஆகிட்டா அப்பா தேடி வந்துருவாங்கம்மா. நீ கவலைப்படாத. அப்பாவை எப்படியாவது கண்டுபிடிச்சிடலாம். நீ சாப்பிடும்மா. அப்பா என்கிட்ட அன்னைக்கு கூட சொன்னாங்க, அம்மாவை பத்திரமா பார்த்துக்கோன்னு. நீ இப்போ சாப்பிடலைன்னா அப்பா கஷ்டப்படுவாங்கமா, சாப்பிடு ம்மா” என்று ஊட்டி விட குழலி கண்களில் இருந்து நீர் வழிய அதை உண்டு முடித்தாள். பின் குமரன் வீட்டை விட்டு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு மாடி வீட்டில் குடியேறினான். அந்த வீட்டில் இவர்கள் இருந்தது முதல் தளம்.
அதன் கீழ் வீட்டில் அந்த வீட்டு ஓனர் அம்மா, அவள் கணவன் மற்றும் அவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என்று நால்வர் இருந்தனர். அந்த வீட்டு ஓனர் அம்மா பெண்ணும் தீபாவும் ஒரே பள்ளி மற்றும் ஒரே கிளாஸ் படித்து வந்தனர். என்னதான் ஒரே கிளாஸ் என்றாலும் இருவரும் சேர்ந்து பேசிக்கொள்ள கூட மாட்டார்கள். அதிலும் தீபா வேறு ஊரில் இருந்து வந்ததால் அவளுக்கு தோழிகள் அவ்வளவாக இல்லை. ஆனால் ஓனர் வீட்டு பெண் நளினிக்கு தோழிகள் அதிகம். எப்போதும் ஒரு பெரிய கூட்டத்துடனே வலம்வருவாள். நளினி சுமாராக படிக்கும் ரகமே. ஆனால் தீபா இங்கு வந்தும் முதல் அல்லது இரண்டாவது ஆகத்தான் வருவாள்.
பதினோராம் வகுப்பு நன்றாகத்தான் போனது. குழலி அவள் முன்பு வேலை செய்தது போல எஸ்போர்ட்டில் வேலை செய்யத் தொடங்கினாள். மாதவனின் இல்லாதது கஷ்டம் என்றாலும் அதைக் கடந்து போகப் பழகி இருந்தது அந்தக் குடும்பம். தீபாவும் பன்னிரண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்து படிப்பில் மூழ்கிப் போனாள். அதன் பலன் நன்றாக மார்க் தொடர்ந்து எடுத்தாள். தெருவில் அனைவரும் குழலியின் பொறுமை, அவள் தனியாக இரு பெண் பிள்ளைகளை வளர்ப்பது என்று அவளைப் பாராட்டிப் பேச, இதைக் கேட்ட அந்த வீட்டு ஓனர் அம்மா அவள் மகள் நளினியை நச்சரிக்கத் தொடங்கினாள். நளினி எந்த ஒரு செயல் செய்தாலும் தீபாவை ஒப்பிட்டே பேசினார். இதைக் கேட்டு கேட்டு நளினிக்கு தீபாவின் மீது எரிச்சல் ஏற்பட்டு அது நாளடைவில் கோபமாக உயர்ந்தது. இவ்வாறே தேர்வும் முடிந்து ரிசல்ட்டும் வந்தது. தீபா 1102 மதிப்பெண் பெற்றிருந்தாள். நளினியோ 810 மதிப்பெண்ணை எடுத்திருந்தாள். அதற்கும் அவள் அம்மாவிடம் தீபாவை ஒப்பிட்டே திட்டு வாங்கினாள். தீபா டாக்டர் எக்ஸாமிற்காக இரவும் பகலும் தூங்காமல் சரியாக உணவு உண்ணாமல் என்று படிக்கத் தொடங்கினாள். தீபா அந்தத் தேர்வும் நன்றாக எழுதி வீட்டுக்கு வந்தவள் உடல் முடியாமல் படுத்தே இருக்க, அருகில் இருந்த சுடருக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல்.
பின் குழலிக்கு அழைத்துச் விவரத்தை சொல்ல, அவள் வீட்டில் இருக்கும் மருந்தைக் கொடுக்கச் சொல்லிவிட்டு, தான் சீக்கிரமாக வீடு வருவதாகக் கூறிவிட்டாள். குழலி வீடு வரும்முன், தீபா வாந்தி எடுத்து களைத்துப் போயிருக்க, ஜூரமும் நெருப்பாகக் கொதித்தது. இதைப் பார்த்துப் பயந்த குழலி, நேரத்தைப் பார்த்து, “குமரன் வேறு வீட்டில் இருக்க மாட்டானே, என்ன செய்ய?” என்று யோசித்து பின் சுடர், தீபா இருவரையும் அழைத்து கீழே இறங்கி, ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்த்தபடி இருக்க, அங்கே எதிர் வீட்டில் சந்தனம் என்பவர் அப்போது தான் ஆட்டோ ஓடு வீடு வந்தார், குழலி அவரிடம் சென்று, “அண்ணா, என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லை, கொஞ்சம் ஆஸ்பத்திரிக்கு வரீங்களா?” அதற்கு அவரும் “சரிம்மா, போலாம்” என்றபடி மூவரும் ஆட்டோவில் ஏறிப்போக, இவர்கள் போவதைப் பார்த்த நளினி தன் தோள்களை உலுக்கியபடி மீண்டும் டிவி பார்க்கத் தொடங்கினாள்.
ஆஸ்பத்திரியில் தீபாவைச் சேர்க்க, அங்கே அவளுக்கு குளுக்கோஸ் ஏற்றச் சொல்ல, அப்போதுதான் குழலி தான் பர்ஸ் எடுத்து வராததைப் பார்த்தாள். அதன்பிறகு சுடரிடம் தீபாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, மீண்டும் சந்தனம் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றாள். இந்தச் செயல்தான் அவள் வாழ்க்கையைத் திருப்பிப் போடப் போகிறது என்று அறியாமல் தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் குழலி.