ஒரு முடிவு வரும் என்று நினைக்கும் போது ஒரு புதிய சிக்கலின் ஆரம்பம் முளைப்பதை மூவரும் உணர்ந்தார்கள்.
கல்பனா தான் முதலில் சுதாரித்துக் கொண்டு பேசினாள்.
“சசி…. என்ன பேசற நீ.? கல்யாணம்கறது விளையாட்டா என்ன.? வேண்டாம் சசி. உன் முடிவு தவறு. இதற்காகவா பாடுபட்டு உன்னை கவனித்து கொண்டேன். முடிவை மாற்றிக் கொள் சசி ப்ளீஸ்.” கெஞ்சினாள் கல்பனா.
“சசி…. என்னை அவமானப்படுத்த இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கியா.? நான் நம் பந்தத்தை மதிக்கிறேன். ஏன் திடீர் மனமாற்றம். அன்று கூட பாசடிவ்வா பேசின…. என்னாச்சு சசி.?” கிருபா கண்கலங்கி கேட்டான்.
“சசி…. உன்னை மறுபடியும் இழந்தா…. நாங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்.? அந்தப் பாவம் எங்களை சும்மா விடாது.” என்று ஜானகி குரல் நடுங்கியது.
சசி எல்லோரையும் ஒரு முறை பார்த்தாள். சொன்னாள்.
“உங்க ஆர்வம் எனக்கு சந்தோஷமா இருக்கு. நான் உங்க பிரியத்துக்குரியவள் என்பது எனக்கு கிரீடம் கிடச்ச மாதிரி.” என்று நிறுத்தி எல்லோரையும் சுற்றி பார்த்தாள்.
“சொல்லு சசி…. என்ன உன் பிரச்சனை.? எல்லாம் கூடி வரும்போது….” என்று ஜானகி கண் கலங்கினாள். சசியும் இல்லாமல் கல்பனாவும் இல்லாமல் தன் மகன் தனியாகப் போய்விடுவானோ என்று பயந்தாள்.
“உங்கள் யார் மனதையும் புண்படுத்த இந்த முடிவை நான் எடுக்கவில்லை. என் மனசு பூரா வேறு திசையில் பயணப்படுகிறது. நான் கரை கண்டுவிட்டேன். கரை சேர்ந்துவிட்டேன். ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றணும். பட்டிமன்றங்கள் மூலம் மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் சிறப்பை மக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்க ஆசைபடறேன். இப்படி எத்தனையோ லட்சியக் கனவுகளை நிறைவேத்தறது தான் என் சாய்ஸ். நான் தமிழ் கப்பலில் பயணிக்கப் போறேன். காதல் படகில் இல்லை.”
இலக்கியதனமாக பேசும் சசியை வியப்புடன் பார்த்தார்கள்.
“தமிழிலக்கியம் காதலை மறுக்கலையே.” என்றான் கிருபா.
“கிருபா…. என் காதல் திசை மாறிவிட்டது. என் காதல் தமிழ் மீது மட்டும் தான். மணிமேகலை எடுத்த முடிவே என் முடிவு. உங்களையெல்லாம் புரியும்படி சொல்லவதென்றால் ஒரு புட்பால் ப்ளேயரை டென்னிஸ் ஆட கூப்பிட்டால் சரி வருமா.? ப்ளீஸ் என்னை புரிந்து கொள்ளுங்கள்.”
மூவரும் வாயடைத்துப் நின்றார்கள். இது என்ன டூவிஸ்ட்.? ஜானகி தான் பிரமிப்பிலிருந்து விடுபட்டு சொன்னாள்.
“என்னம்மா இது.? நீ உன் கணவனோடு சந்தோஷமா வாழ்ந்தபடி ஆன்மிக சொற்பொழிவுகளை பண்ணு. பட்டி மன்றங்களில் பேசு. நாங்க குறுக்கே நிற்க மாட்டோம் சசி.”
“சசி…. இந்த வீடு உனக்காக காத்திருக்கிறது. ஏன் இப்படி எல்லாம் முடிவு எடுக்கிற.?” என்றான் கிருபா.
எதிர்பார்ப்பு தப்பாக போனால் ஏமாற்றம் வரும். அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் ஒரு சிலருக்கே வரும். அது சசிக்கு வந்திருக்கிறது. அவள் மனதோடு நினைத்தாள்.
உங்க மனசு எனக்காக ஏங்கலையே.! அதில் வேறு ஒருத்தி அல்லவா இருக்கிறாள்.! அவள் யாரோ ஒருத்தியா இருந்திருந்தால் அவளை ஓட ஓட விரட்டியிருப்பேன். ஆனால் அவள்…. அவள் எனக்கு இரண்டாம் உயிர் கொடுத்து கல்பனா கிட்டேத்தட்ட நினைவு செத்துப் போன பரிதாப ஜந்துவாக இருந்த என்னை ஒரு தாய் போல் நெஞ்சில் சுமந்து ஈன்றெடுத்திருக்கிறாள். அதுவும்…. அதுவும்…. தன் வாழ்வையே பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறாள்.! அந்த இமயம் போன்ற மனதில் கிருபா நீங்க தான் இருக்கீங்க. எனக்கு உயிர் கொடுத்தவளுக்கு பதிலாக ஒரு பச்சை பட்டைக் கொட்டுத்து ஈடுகட்ட முடியுமா கிருபா.? அவள் மனதில் காதல் அலைகளை எழுப்பிவிட்டது நீங்க தானே.? உங்கள் தவறுக்கு அவளை தண்டிக்க நான் ஒப்ப மாட்டேன். கிருபா நீங்க அவளுக்குத் தான்.
கல்பனாவின் காதல் உன்னதமானது. அவள் நினைத்திருந்தால் உங்களை வளைத்துப் போட்டு என்னை விரட்டிவிட்டு உங்களைக் கணவனாக அடைந்திருக்க முடியும். ஆனால் அவள் காதல் மனசு வித்தியாசமானது. உங்கள் கடமையை நிறைவேற்றி குற்ற உணர்விலிருந்தும், இரண்டுங் கெட்டான் நிலையிலிருந்தும் உங்களை விடுவிக்க தன் காதலை பூட்டி வைத்துவிட்டான். இது தெரிந்தும், நான் நன்றாக யோசித்துப் பார்த்தேன். உங்கள் மேல் என் காதல் இப்பொழுது தான் முளைவிட்டிருக்கிறது. பறித்து எரிந்து விட முடியும். ஆனால் கல்பனாவின் காதல் வேரூன்றி தழைத்து ஆலமரமாகிவிட்டது. அதை வேரோடு சாய்ப்பது பாவம். சரி நீங்க அவள் பால் ஈர்க்கப்பட்டதுக்கு நான் முக்கிய காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் எனக்குத் தாலி கட்டியவனின் அருமை தெரியாமல் புறக்கணித்து காயத்தை ஏற்படுத்தி இருக்கேன். ஒரு குழந்தைக்காக யுத்தம் பண்ணியிருக்கிறேன். கல்யாணம் என்பது வாரிசு பெற்றுக் கொள்ளத் தான் என்று காதலிக்கத் தெரியாமல் நோக்கடித்து விட்டேன். இரண்டு வருஷம் புத்தியை தொலைத்து விட்டதற்குக் காரணம் குழந்தை வேண்டும் என்ற வெறி, இந்த போராட்டத்தில் உங்களை தொலைத்து விட்டேன். ஸோ…. குட் பாய் இந்த வலி கொஞ்ச நாள் இருக்கும் பின் சரியாகிவிடும் நீங்க இருவரும் தான் பொருத்தமான ஜோடி..
இவ்வளவும் சசி மனதில் ஓடியது. அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். தெளிவாக சொன்னாள்….
“கல்பனா…. உனக்கு நான் மனசார தரும் பரிசு என்ன தெரியுமா.?” கல்ப்னாவின் கரம் பற்றி கிருபாவிடம் ஒப்படைத்தாள் சசிரேகா.
“சசி…. உனக்கான இடம் உனக்காக காத்திருக்கிறது. பூக்க ஆரம்பித்த வாழ்க்கையை சுடுநீர் விட்டு பட்டு போக வைக்கிறியே.! உன் இடத்தில் நானா.? நோ….சசி…. இதற்கா நான் இவ்வளவு பாடுபட்டு உன்னை மனுஷியாக்கினேன்.?”
சசி கைகளை மெல்ல இழுத்துக் கொண்டாள். சொன்னாள்….
“புத்தர் தன் மனைவியுடன் அன்பாக குடும்பம் நடத்தியவர் தானே.! ஞானம் பெற்று நள்ளிரவில் மனைவி பிள்ளை பந்தத்தை விட்டுச் செல்லவில்லையா.? உலக மக்களுக்கு உள்ளொளி வீசும் பொருட்டு சித்தார்த் புத்தராகவில்லையா.? அவரை குடும்பத்தை பரிதவிக்க விட்ட பாவி என்றா சொல்கிறோம்.? பரமாத்மாவாக கொண்டாடப் படவில்லையா.? அதிற்காக நான் பெரிய ஞானி என்று பேராசை கொள்ளவில்லை. என் எல்லையை குடும்ப வாழ்வின் பற்று அற்றுவிட்டது. என் மனம் விரிவடைந்து விட்டது. இந்த உலகமே எனக்கு குடும்பம் தான். நான் பேரின்ப வாசலுக்குள் நுழைந்து விட்டேன். கல்பனா என் பரிசை ஏற்றுக் கொள்.”
இருவர் கரத்தையும் ஒன்று சேர்த்தாள்.
“உன் கல்யாணத்துக்கு என் பரிசு….” பச்சை பட்டை கொடுத்தாள். தன் அடி மனதின் ஆசையை தான் துறந்தாலும், அது சசிரேகாவால் நிறைவேறியது கண்டு கல்பனா வியப்படைந்தாள். எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கம்பீரமாகக் கிளம்பினாள். அதில் சலனங்கள் இல்லை. அவள் புதிய அவதாரம் எடுத்திருந்தாள். விஸ்வரூபம் எடுத்த ஆண்டவன் போல் அவள் மனதில் கருணை நிரம்பியிருந்தது. சரியான முடிவைத் தான் எடுத்திருக்கேன் என்று அவள் உள் மனம் சொல்லியது.
வீட்டுக்கு வந்த சசிரேகா கவலையுடன் அம்மாவை பார்த்தாள்.
“என்னம்மா அப்படி பார்க்கிறே.?” என்றாள் சோபாவில் உட்கார்ந்து கொண்டு. அவள் முகம் நிர்மலமாக இருந்தது.
“சசி…. அந்தப் பையனை நீ சந்திக்காமல் இருந்திருந்தால் நீ உன் கணவனோடு சேர்ந்து வாழ்ந்திருப்பே.?”
“யார் பிஜுவை சொல்கிறாயா.? அவன் என் மேல் மோதினான். அறை வாங்கினான். அத்தோடு முடிந்தது விவகாரம் என்று நினைத்தேன். ரெஸ்டாரெண்ட் சென்று பேசினேன் . காபியை குடிக்காமல் ஒரு கேள்வி கேட்டான்.”
அந்த நாளை நினைத்துப் பார்த்தாள் சசி…..
நிரம்பி வழிந்த ரெஸ்டாரண்டில் எப்படியோ இரண்டு இருக்கை கிடைக்க, அங்கு அமர்ந்தார்கள். பிஜூவும் சசிரேகாவும் குலோப்ஜாமுனும் ஐஸ்கிரீமும் காப்பியும் ஆர்டர் பண்ண அது வந்தது. இவன் யார்.? என்ற கேள்வி அவளுள் எழுந்தது.
“நீ சூடா இருக்கே. அதான் சூடா காப்பி. நான் குளிர்ச்சியா இருக்கேன். அதான் ஐஸ்கிரீமும் ஸ்வீட்டும் சொல்லு…. நீ யார்.? எதுக்கு துணிக்கடையிலே வேண்டும்மென்றே என் மேல் மோதினாய்.? சொல்லு. சின்னைப் பையனாச்சேன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன். என்ன விஷயம்.?”
“நான் உன் கூட சாப்பிட வரலை. இந்து மகா சமுதத்திரத்துடன் நைல் நதி கலக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன்.”
“நீ சொல்வது தலையும் புரியலை. வாலும் புரியலை. நான் ஒண்ணும் அப்படி முட்டாள்தனமா நினைக்கலை. ஏதோ பேத்திட்டு இருக்கே. நைல் நதியும் கடலும் சேர வழி இல்லை தான்.”
“பேத்தலை….அந்த முட்டாள்தனமான காரியத்தை செய்யப் போறது நீ தான். எனக்கு ஆத்திரமாக இருக்கு. நீ தான்…. நீ தான்….”
“நானா.? என்ன சொல்றே நீ.? எனக்கு ஒண்ணும் புரியலை.” என்றாள் சசி. அவள் பதிலைக் கேட்டு கோபமானான்.
“ஆமாம். கிருபாவோடு சேர நினைக்கறதை வேறு எப்படி சொல்ல.? நீ நைல் நதி. உன் பாதை வேறு. நீ கிருபா என்ற இந்து மகாசமுதிரத்தை தேடி ஓடற…. புரியுதா உன் தவறு.?”
“நீ ஏன் உன் மூக்கை தேவயில்லாத இடத்திலே நுழைக்கிற.? உன் பெயர் கூட எனக்குத் தெரியாது. நீ என் வரலாற்றை மாற்றப் பார்க்கிற. ஒதுங்கிடு.”
“என் பேர் பிஜு. கல்பனா மேடத்தின் அக்கா பெண் உமாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். அங்கே ஒரு முறை மகாபாரதம் பெர்
“அதுக்கென்ன.? மகாபாரதம் பத்தி லெக்சர் கொடுத்தா அது பெரிய குற்றமா.?”
“அது குற்றமில்லை. அது அறிமுகத்துக்கு சொன்னேன். நான் கல்பனா மேடத்தோட பயங்கர விசிறி. கல்பனா மேடம் எனக்கு தேவதை. என் ஐடியல் பெர்சனாலிட்டி. அவங்க வாழ்க்கையில் மண் அள்ளிப் போடற. அதை நான் எப்படி அனுமதிக்கிறது.? என்னால் அதை சகிச்சுக்க முடியலை. அதான் உன் கூட பேச வந்தேன்.”
“வாட் நான்சென்ஸ்.? கல்பனாவுக்கு நானும் நடரிக்க கடன் பட்டிருக்கேன். அவள் எனக்கும் தேவதை தான். எனக்கு மறுஜென்மம் கொடுத்தவள்.”
“அப்படியானால் அவர்களுக்கு இபாபடி புடவை கொடுத்து உன் நன்றியை காட்றதை விட, அவங்களுக்கு சொந்தமான டாக்டர் கிருபாவை அவங்களுக்கு கொடு.”
“ஹலோ…. நான் அவர் தாலி கட்டிய மனைவி.”
“தாலி கட்டிட்டா மனைவி ஆகிட முடியுமா.? அவர் மனசிலே நீ இல்ல. கல்பனா மேடம் தான் இருக்காங்க.”
“என்ன சொல்றே நீ. எல்லாம் தெரிஞ்சா மாதிரி பேசற.”
“கிருபாகர் கல்பனா கழுத்தில் தாலி கட்டனும். கல்பனா வாழணும். ஏன்னா கல்பனாவைத் தான் அவர் காதிலிக்கிறார். உன்னை அல்ல. நீ செய்யற தவறு இது தான். இந்து மகாசமுதிரத்துடன் கலக்கும் நதி காவிரியாகத் தான் இருக்க முடியும். நைல் நதி அல்ல.”
அவன் நாற்காலியை வேகமாக பின்னுக்கு தள்ளிக் கொண்டு எழுந்தான். ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான்.
“கல்பனா மேடம் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தாலும்…. அது உன்னை அழிச்சிடும்.”
புயல் போல் வெளியேறினான். அவன் பயமுறுத்தலை, சாபத்தை அவள் லட்சியம் செய்யவில்லை.
ஆனால் தனக்காக காத்திருக்கிறான் என்று தான் அவன் மேல் அவளுக்கு காதலே வந்தது. ஆனால் அவன் மனசில் அவள் இல்லை. அவன் மனசில் கல்பனா தான் இருக்கிறாள். கடமைக்காக அவளை ஏற்றுக் கொள்ள துணிந்து விட்டான். அவள் குணமாகி வந்ததை அவன் உண்மையில் விரும்புகிறான் என்று தான் அவள் நினைத்தாள். ஆனால் அப்படி இல்லை. அவள் அவனுக்கு வேண்டாதவள் ஆகிவிட்டாள். தன் இடத்தை அவள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டாள். அந்த இடத்துக்கு கல்பனா வந்துவிட்டாள். கல்பனா அவளை குணமாக்க பிரயாசை பட்டது அவனுடன் அவளை சேர்க்கத் தான். கல்பனாவின் தியாகம் புரிந்தது. ஆனால் கிருபா அவளை விட்டு வெகு தூரம் போய் விட்டான். வெகு தூரத்தில் மனம்…. ஸோ அவள் வியாதியோடு போராடியது போக, இனி கிருபாகர் மனதில் இடம் பிடிக்க போராட வேண்டும். அது தேவையில்லை. காதல் இயல்பாக வரவேண்டும். திணித்து வரவழைக்க முடியாத உன்னத உணர்வு அது.!
கல்பனாவை அவன் மறக்க மாட்டான். ஆழமான அன்பாக அது மாறிவிட்டது. கிடைக்காத காதலுக்கு ஏன் போராட வேண்டும்.? கல்பனாவின் நல்ல மனசுக்கு அவளையும் கிருபாவையும் சேர்த்து வைப்பது தான் அவள் கடமை. அவள் நைல் நதி தான் பிஜு சொன்னது போல். வயசில் பெரியவள் என்று கூட பார்க்காமல் அவன் அவளை ஒருமையில் தான் அழைத்தான். அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்று அவளுக்கே புரிய வைத்திருக்கிறான். கல்பனா தான் கிருபாவுக்கு ஏற்ற கணவன்…. கடமைக்காக தன்னை ஏற்றுக் கொள்கிறான் என்றால் எப்படி அவள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.? கடமைக்காக ஒரு இல்லற வாழ்க்கை வாழ்வதை விட வேறு பல நல்ல விஷயங்களில் மனதை செலுத்தலாமே என்று முடிவு பண்ணிக் கொண்டாள் சசி. கிறுக்காக இருந்த அவளை புத்தியோடு மீட்டுக் கொடுத்த கல்பனா நன்றாக இருக்கட்டும்.
எல்லாம் சொல்லி முடித்தாள் சசி. இப்பொழுது அம்மா பொருமுகிறாள். கிருபாவை துரோகி என்கிறாள். கல்பனாவை மாய்மாலக்காரி என்கிறாள். சசிக்கு அம்மாவின் மனநிலை புரிகிறது. ஆனால் அவள் மனசில் கல்பனா ஒரு தேவதை தான். கிருபாவை அவள் மன்னித்து விட்டாள்.
சசியின் அம்மா தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பயித்தியக்காரப் பெண் இப்படி விட்டுக் கொடுத்து வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறதே! என்று வருத்தத்தில் இருந்தாள். ஒரு அம்மா அப்படித் தானே நினைப்பாள்.!
இந்த நதியை வரவேற்க எந்தக் கடல் எங்கிருக்கிறதோ.? சில நதிகள் கடவுள் எனும் கடலோடு தான் சேரும். ஆண்டாள் கலந்தது போல், கொலம்பஸ் போல் சசி தன் கரையை கண்டுபிடித்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
கிருபா—கல்பனா கல்யாணம் சிறப்பாக நடந்தது. கல்பனா எனும் நதி தன் இலக்கை அடைந்துவிட்டது. திருமணத்துக்கு பிஜூவும் சசிரேகாவும் வந்திருந்தார்கள். அனைவரும் மனசார வாழ்த்தினார்கள்.
பிஜுவால் தான் தன் கல்யாணம் நடந்தது என்று கல்பனாவுக்கு தெரியாது. கடைசிவரை அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டாள் சசி.
கல்பானவும் கிருபாவும் காவிரி கடலில் பாய்ந்தது போல கலந்து விட்டார்கள். இனி காவிரி என்றும் கடல் இது என்றும் பேதமை இல்லை. சசி என்ற நதி ஓடிக் கொண்டே இருக்கிறது…. அவள் தன் கடலை கண்டு கொள்ள ஆண்டவன் உதவி செய்ய வேண்டும் என்று கல்பனாவும், சசியின் அம்மாவும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.