ஷிவா, மனையாளிடம் சொன்னது போல நேரமாகவே வந்தான். கதவை திறந்ததும் மனையாளை ஆசையோடு கட்டிக் கொண்டான்.. இருவருக்கும் இந்த பிரிவு.. சற்று வாடியது எனலாம்.
க்ரிஷ், அவன் வாங்கிய பரிசுகளோடு மேலே வரும் நேரம் கூட காத்திருக்கவில்லை ஷிவா.
லேகாதான் க்ரிஷை பார்த்தும் சற்று தள்ளி நின்றாள் கணவனிடமிருந்து.
ஷிவா “க்கும்.. “ என கனைத்துக் கொண்டே திரும்பி தன்னுடைய லக்கேஜ் எல்லாம் வாங்கினான். பின் “மோர்னிங் ஷார்ப்.. எயிட்.. ஓகே” என்றான்.
க்ரிஷ் “எஸ் பாஸ்” என புன்னகையோடு சொல்லி விடைபெற்று சென்றான்.
ஷிவா அவனை வழியனுப்பிவிட்டு பார்க்க.. மனையாள்.. கிட்செனில் நின்றிருந்தாள்.. “பேபி.. வெளியபோய் சாப்பிறோம்.. ப்ரெஷ்ஷப்பாகி வந்துடுறேன்..” என சொல்லி தங்களின் அறைக்கு சென்றான்.
லேகா முன்பே மாதுளைசாறு எடுத்து வைத்திருந்தாள், கணவனுக்காக. அதை எடுக்க செல்ல.. கணவன் உள்ளே சென்றுவிட்டான். மனையாள் காத்திருந்தாள்.
ஷிவா, எந்த சலிப்பும் இல்லாமல் தயாராகி வந்தான். கணவனின் மிடுக்கான தோற்றம் கண்டு லேகா வியந்துதான் போனாள்.. ‘இவருக்கு.. டயர்டாகவே இருக்காதா..’ என.
லேகா “முதலில் இதை குடிங்க” என கையில் பெரிய கிளாஸ் மாதுளைசாறு கொடுக்க. கணவன் தாட்டாமல் வாங்கி பருகினான்.
டேபிளி மீதிருந்த சாக்லெட் பாக்ஸ் எடுத்து மனையாளிடம் நீட்டினான்.. நிறைய வகையான சாக்லெட்ஸ்கள்.. மனையாளின் கண்கள்.. ஆச்சர்யத்தில் விரிந்தது. ஷிவாவிற்கு, அந்த கண்கள் மீண்டும் ஈர்த்தது. என்ன மாதிரியான பெண்.. என அவளையே பார்த்தான் கணவன். ஆனால், அவனின் குற்றவுணர்வு பார்க்க விடவில்லை.
ம்.. இன்று டாகுமென்ட் எல்லாம் தாயார் செய்து வந்திருக்கிறான், மனையாளுக்கு தம்பி மீது எவ்வளவு பாசம் என புரிந்தவன். இப்போது வரை அவர்களிடம் ஏதும் சொல்லவில்லை என குற்றவுணர்வு இந்த நேரத்தில்.. ஆனாலும், என்னுடையது தானே இது.. என பேராசையும் இப்போது.. அதனால் என்ன , வேறு சொத்து தந்துவிட்டு போகிறேன்.. என்ற சமாதானமும் அவனிடத்தில். ஆக, இந்த நொடியில்.. மனையாளின் கண்களில் காதல். என்னை முழுதாக நம்பும் காதல் இவளிடத்தில்.. சிலநேரங்களில் ‘வாழ்க்கை ஏன் இத்தனை அழகு’ என தோன்றுமே அப்படிப்பட்ட நொடிகள் ஷிவாவிற்கு இது.
ஏதும் பேசாமல் மனையாளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
ஷிவாவின், காதல்கொண்ட மனம் மட்டுமே இப்போது. மற்ற எல்லாம் பறந்து போனது.. மனையாளை கைகளில் அள்ளிக் கொண்டான்.. லேகா “என்னங்க.. வெளிய” என சொல்ல சொல்ல.. ஷிவா, அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான் மிக மென்மையாக. மனையாளை மெத்தையில் கிடத்தியது மட்டுமே இருவரின் நினைவிலும்.. என்ன நடந்தது என்பது காதலின் நிகழ்வுகள். அதை அவர்கள் இருவர் மட்டுமே உணர்ந்தனர்.. காற்றும் இருளும் கூட.. கண்டிருக்கலாம். வேறு யாரும் உணர முடியாது அதை.
சற்று நேரத்தில்.. லேகா, ஒரு நைட் டிரஸ்ரோஸ்டு கிட்சென் மேடையில் அமர்ந்து உண்டுக் கொண்டிருக்க.. ஷிவா அவளுக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தான். ஷிவா, முன்பே உண்டிருந்தான். மனையாள் குளித்து வருவதற்குள்.. இப்போது அவளுக்கு தோசை ஊற்றினான்.
லேகா “என்னாச்சு.. இன்னமும் கோவமா இருக்கீங்களா” என்றாள்.. அவன் பேசாததை உணர்ந்து.
ஷிவா தலையசைத்தான் ‘இல்லை’ என.
மனையாள் “அப்புறம் என்ன பிரச்சனை.. வேற ஏதாவது பிரச்சனையா..” என்றாள்.
ஷிவா ஒன்றுமில்லை என தலையசைத்து புன்னைகைத்தான்.
லேகா மெல்ல அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு “எதோ இருக்கு” என்றாள்.
கணவன் வாயே திறக்கவில்லை.. அடுப்பினை ஆப் செய்தான்.. மனையாள் “எனக்கு போதும்” என்றாள்.
கணவன் “இதை யார் சாப்பிடுறது” என்றான்.
நிமிர்ந்தாள் மனையாள் புன்னகையோடு.. மனையாளின் தட்டில் அந்த தோசையை வைத்தான்.. இன்னும் கொஞ்சம் இட்லி பொடி வைத்தான்.. மனையாள் அதிசியமாக அவன் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஷிவா “ம்.. சீக்கிரம் முடி” என்றான். பின் ஹாலுக்கு சென்றுவிட்டான் கணவன்.
லேகா, உணவினை உண்டுவிட்டு.. இடத்தை துடைத்துவிட்டு.. இரண்டு தட்டுகளை கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள்.. கணவனோடு. அதுவரை ஷிவா எதோ ஒரு பேய் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.
லேகாவிற்கு என்ன நடக்கிறது என புரியவில்லை.. என்னமோ ஆகிவிட்டது என பயம்தான். நாளைப்பற்றி யோசிக்கவில்லை அவள். சென்று வந்த வேளையில் எதோ நடக்கவில்லை.. அதான் அப்செட்.. என எண்ணிக் கொண்டு கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு, தானும் அந்த படத்தை பார்த்தாள்.
சற்று நேரத்தில் படத்தில் கவனமாகிவிட்டாள். பயத்தில் கணவனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டே.. படம் பார்க்க தொடங்கினாள். முழுதாக படம் முடியும்முன் உறங்கியும் விட்டாள் பெண்.
ஷிவா, ஏதேதோ யோசனையில் இருந்தான். படம் முடியவும்.. மனையாளை தூக்கிக் கொண்டு தங்களின் அறைக்கு வந்து.. அவளை அணைத்துக் கொண்டே உறங்கினான்.
ஷிவா, காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சியை தொடங்கிவிட்டான். லேகா, எழுந்து வந்து வேலைகளை கவனித்தாள். பேச்சுகள் இல்லை.
லேகா, குளித்து வந்து.. எதோ சாமிபாடல்கள் போட்டு விளக்கேற்றி வைத்தாள். உதவி செய்யும் அண்ணா வர, வேலைகள் தொடங்கியது.
ஷிவா குளித்து கிளம்பி வர.. க்ரிஷ் வந்தான்.
இருவரும் உண்டனர். லேகா பரிமாறிக் கொண்டிருந்தாள். லேகா “ஏன் க்ரிஷ், ஏதாவது பிரச்சனையா.. ஷிவா மூட்ஆப்பில் இருக்கார்” என வினவினாள்.
ஷிவா, தன்னை மீட்டுக் கொண்டான். பொறுமையாக இருவரும் விலகினர்.. கணவன், அவளை தன்னெதிரில் நிறுத்தி அவளின் உதடுகளை தன் விரல்களால் வருடியபடியே.. “முன்னாடியே வந்திடு..” என்றான். பின் லேசாக மீண்டும் அணைத்து.. விடைபெற்றான் அவளிடம்.
ஷிவா க்ரிஷ் இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தனர். யாரும் வந்திருக்கவில்லை.. மீண்டும் ஈமெயில் செக் செய்ய தொடங்கினான். மீண்டும் நேற்றைய கோப்புகளை சரி பார்க்கத் தொடங்கினான்.
ஆடிட்டர் லாயர் வந்து சேர்ந்தனர். சென்ற வருடத்தில் ஆனுவல் ரிபோர்ட் உடன் GM வந்தார். அவர்களுக்கும் பேச்சுகள் நடந்தது.
வடிவேல் வசந்தி, சுந்தரம் லதா என நால்வரும் வந்தனர். மற்ற இரண்டு ஷேர்ஹோல்டர்ஸ் என்ற உறவுகளும் வந்தனர்.
ஷிவாவை வந்து எல்லோரும் பார்த்து சென்றனர். வடிவேல் “ம்.. தம்பி என்ன டென்ஷன்.. எல்லாம் சரியாதான் நடக்குது” என்றார்.
ஷிவாவின் முகத்தில் அப்போதுதான் தளர்வு வந்தது. சுந்தரம் “சந்துருகிட்ட ஒருவார்த்தை முன்னமே சொல்லிடு ஷிவா” என்றார்.
வடிவேல் முறைத்தார்.
ஷிவாவிற்கு அதே யோசனைதான். ஆனால், நேரம் இனி அவன் கையில் இல்லையே.
லேகா வந்தாள்.. பெரியவர்கள் எல்லோரும் கான்பாரன்ஸ் ஹாலில் இருக்க.. அங்கே சென்று அவர்களை பார்த்து பேசித்தான்.. கணவனை பார்க்க வந்தாள்.
ஷிவா, பரபரப்பாக இருந்தான்.. அருகில் எல்லோரும் இருந்தனர். மனையாள் கதவை திறந்ததும் ஷிவா “ஹாய் டா” என எழுந்தான்.
லேகா அசௌகர்யமாக கண்களை உருட்ட.. ஷிவாவும் அதை உணர்த்து “அப்பா அம்மா.. கான்ப்ரென்ஸ் ஹாலில் இருக்காங்க.. நீ வெயிட் பண்ணு.. ம்…” என்றான் பார்வையை மாற்றாமல்.. அவள் செல்லும் வரை.. அவளையே பார்த்திருந்தான். பின்பும் இரண்டொரு நிமிடம்.. கவனம் அவளில்தான் இருந்தது.
க்ரிஷ் “பாஸ்..” என அழைத்து வேலையை நோக்கி கவனத்தை திருப்பினான்.
சந்துரு தீக்ஷி எங்கிருக்கிறார்கள் என சுந்தரம் அழைத்து விவரம் கேட்டார்.
சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தனர். சந்துருவிற்கு, இங்கேதான் அலுவலகம் என திருமணத்திற்கு முன்பே தெரியும். அத்தோடு நேற்று.. வாட்ஸ்அப்’பில்.. மீட்டிங் இன்விடேஷன்.. மேப்.. என அனுப்பியிருந்தான் ஷிவா.