அத்தியாயம்—15

ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்த சசிரேகா கண்களில் கவிதை மலர்ந்தது. இந்த உதயசூரியனை அவள் ரசித்து எவ்வளவு நாளாயிற்று.! தன்னிலை மறப்பது எவ்வளவு கொடுமை.! அவள் அறிவு அஸ்தமித்த நிலையில் தாறுமாறாக நடந்த கொண்டதாக அம்மா சொல்கிறாள்.! அவள் கால்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது. வாய் கண்டபடி உளறியிருக்கிறது. பளீரென்று சூரியனின் முதல் ரேகைகள் அவள் முகத்தில் விழுந்தது. இப்படியொரு பளீர் ரேகை அவள் மூளைக்குள் ஊடுருவியது போலல்லவா இப்பொழுது தெளிவு ஏற்பட்டிருக்கிறது.! அந்தத் தெளிவைக் கொண்டு வர யாரோ ஒரு கல்பனா பாடுபட்டிருக்கிறாள். அவள் ஒரு அற்புதப் பெண்ணாக தான் இருக்க வேண்டும்.

“அம்மா…. அந்தக் கல்பனா பற்றி சொல்லேன்.”

“எத்தனையோ தரம் சொல்லிட்டேனே ரேகா. அவள் கடவுளால் அனுப்பப்பட்ட தேகவதை. இந்த ஆறு மாதமாக உன் கிறுக்குத்தனங்களை கிறுக்குத்தனமாக நினைக்காமல் குறைபாடாக நினைத்து அதை இட்டு நிரப்ப மெல்ல மெல்ல உன்னுள் அறிவொளியை வீசியவள். தெய்வம் கண் திறந்துவிட்டது ரேகா.  இலக்கில்லாமல் தொடர்ந்த உன் பயணம் முடிந்துவிட்டது. கரையை தொட்டுவிட்டாய். இனி எல்லாம் சுபமே.”

“அம்மா…. அவளுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்.” என்று ரேகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. அம்மா சொன்னாள்….

“ரேகா…. மாப்பிள்ளை வந்திருக்கார்.”

கிருபாகர் புன்சிரிப்புடன் மனைவியை ஏறிட்டான். அவள் முதல்முதலாக அவனைப் பார்ப்பது போல் கன்னம் சிவந்தாள்.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு ரேகா…. நீ போனில் தெளிவாக பேசினதும் பிரமித்துவிட்டேன். கடவுளுக்கு நன்றி.” என்றான்.

“நீங்க நன்றி சொல்ல வேண்டியது கல்பனாவிற்கு. அவள் மெனக்கெடாவிட்டால் நான் இன்னும் பயித்தியமாகவே இருந்திருப்பேன்.” ரேகா கண்களில் நீர் துளிர்த்தது.

“உண்மை தான். வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லாயிருக்காம். அன்று நீ வீட்டுக்கு வரணும்னு அம்மா ஆசைப்படறாங்க. நான் அழைச்சிட்டு போக வரட்டுமா.? நீ என்ன சொல்றே.? உனக்கு விருப்பம் தானே.? உன் அபிப்பிராயத்தை மனசு விட்டு சொல்லு.”

“மாப்பிள்ளை நீங்க இருங்க. நான் தான் அழைச்சிட்டு வருவேன் ரேகாவை. அது தான் முறை.” என்றாள் அம்மாள்.

“சரி ரேகா. வாயேன் இப்ப வெளியே போகலாம்.”

புடவை மாற்றிக் கொண்டு ரேகா வந்தாள். இருவரும் காரில் செல்வதை மகிழ்ச்சியுடன் பார்த்தாள் சந்திரா.

பிரபல துணிக் கடையில் ரேகாவுக்கு புதுப் புடவை வாங்கினான் கிருபா. இன்னொரு பச்சை நிறப் புடவையை எடுத்தாள் ரேகா.

“என் வாழ்க்கையை பசுமையாக்கிய தேவதை கல்பனாவுக்கு.” என்றாள். ஷாப்பிங் முடித்து ரெஸ்டாரண்டில் சாப்பிட்ட பின் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு…. “வெள்ளிக்கிழமை சந்திப்போம்” என்றபடி பை சொல்லிவிட்டுப் போனான் கிருபா.

அம்மா கோவிலுக்கு போனதும் அருகில் இருந்த பார்க்குக்கு சென்றாள சசிரேகா. கல்பனாவுக்கு ஃபோன் செய்தாள்.

“கல்பனா…. உங்களுக்கு ஒரு பரிசு தரப் போறேன். நான் வெள்ளிக்கிழமை வரும்பொழுது நீங்களும் கிருபா வீட்டில்  இருக்கணும். கண்டிப்பா இருக்கணும். என்ன சரிதானே.?”

“நான் எதுக்கு இடஞ்சலா சசி.?”

“என் வாழ்க்கை புதிதாக தொடங்கப் போகுது. நீங்க வந்து என்னையும் கிருபாவையும் வாழத்தணும்.”

“சரி கண்டிப்பா வரேன்.”

“தேங்க்ஸ் கல்பனா.”

சந்தோஷமூடன் அவள் கிருபாவைப் பற்றிய நினைப்பில் மூழ்கினாள். எவ்வளவு தங்கமான புருஷன்.! அழகு, அறிவு, அந்தஸ்து, குணம் எதில் குறை.? இவருடன் வாழத் தெரியாமல் மூன்று வருஷம் விரயமாக்கிவிட்டேனே..! ஸாரி கிருபா…. இனி வரும் காலங்களில் உங்களை காதலித்து காதலித்து உங்களளை முந்தானையில் அள்ளி முடிஞ்சுக்கப் போறேன். நினைப்பே அவளுக்கு இனித்தது. அவள் முகம் சிவந்தாள்.

ரேகா கன்னம் சிவக்க கிருபாகரனை நினைக்க, கல்பனா கண்கள் சிவக்க கண்ணீர் சிந்தினாள். நெஞ்சம் மறப்பதில்லை,,,,,, அது நினைவை இழப்பதில்லை என்கிற வரிகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது. என் கிருபாவை நான் எப்படி மறக்கப் போகிறேன்.!

‘கிருபா இன்னும் ஒரே ஒரு வாரம்…. உங்களை மனதில் நிறுத்தி ஆராதிக்கிறேன். பிறகு நீங்கள் என் மனசில் கூட வரக் கூடாது. உங்களை களவாட மாட்டேன். உங்களை மனைவியோட இனிமையாக வாழவிடுவேன்.

நான் இடையில் வந்தவள் தானே.? நான் தானே விலக வேண்டும்.? விஷயம் தெரிந்ததும், அம்மாவும் விசாலம் அக்காவும் அவளை ஏசினார்கள். அம்மா சொன்னாள்….

“உன்னை மாதிரி பைத்தியக்காரியை நான் பார்த்ததே இல்லை. வேலை மெனக்கட்டு அந்த சசிரேகாவை மனுஷியாக்கினே. உன் தலையில் நீயே மண் எடுத்தும் போட்டுக்கிட்டே….” அம்மா தலையில் அடித்துக் கொண்டாள். அது அம்மாவின் பாசம். அப்படித்தான் யோசிக்க வைக்கும்.

“நடந்ததெல்லாம் நல்லதாகவே நடந்திருக்கு. விடும்மா.”

“எதை டீ விட.? உன்னை புரிஞ்சுக்கவே முடியலை கல்பனா. அந்த சுதாகர் கொடுத்த பணத்தையும் தானம் பண்ணிட்டே. உன் துணையை தூக்கிக் கொடுத்திட்டே. இப்ப பட்ட மரமா நிக்கிற. சசிரேகா பைத்தியம் தெளிஞ்சிருச்சு. உனக்குத் தான் இப்போ பைத்தியம் பிடிச்சிருக்கு….” என்று சீறினாள் அக்கா விசாலம். அவள் முடிவு மற்றவர்களுக்கு அனர்தமாகத் தான் தெரியும். சுயநலம் முக்கியம் என்று அவளால் வாழ முடியாது…… ஒரு புதிய நிம்மதியுடன் உறங்கப் போனாள்.

அந்தக் கடைசி வாரம் வந்தது. அந்த வாரம் அது அவள் வாரம். கிருபாகரணை சந்தித்து நிறைய நேரம் பேசினாள் கல்பனா. இது கிருபா—கல்பனா வாரம். கடைசி வாரம் என்றென்றும் திரும்பக் கிடைக்காத வாரம். பின்னணியில் நினைத்து நினைத்து மகிழக்கூடிய பரிசு வாரம்.

“நம் மனசுகள் சேர்ந்திருக்க இந்த நாட்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதை கெடுத்திடாதே கல்பனா ப்ளீஸ்..” என்றான் கிருபா. அவள் கண்ணீர் முகத்தைக் கண்டு.

கல்பனா சிறிதும் எதிர்பாராத வகையில் அவளை நெஞ்சோடு அணைத்தான். மென்மையாக முத்தமிட்டான். அந்த ஸ்பரிசம் அவளை அவளுக்கு உணரத்திற்று. காதல் உணர்வு எனபது அடைபட்டுக் கிடக்கிற பரிதாப கைதி அல்ல…. அதற்கு கண்கள் எனும் வாசல் இருக்கிறது. நெஞ்சம் எனும் வீடு இருக்கிறது. வாழட்டும் காதல் வாழட்டும். கடமைகள் இந்த ஒரு வாரம் உறங்கட்டும். அவன் அணைப்பில் அவள் மனம் மலர்ந்தது. இப்படித்தான் அவர்களால் நினைக்க முடிந்தது.

தன்னை பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வெளியே கிளம்பினாள் சசிரேகா.

‘அம்மா துணிக்கடைக்கு போகிறேன்.  கிருபாவுக்கும்…. அவர் அம்மாவுக்கும் டிரெஸ் எடுக்கப் போறேன்.”

கார் பிரபல துணிக்கடை முன் நின்றது. கிருபாவுக்கு என்ன கலர் பிடிக்கும். அது கூட அவள் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவனுடன் வாழ்ந்த அந்த பதினெட்டு மாதங்களில் காதலிக்க தெரியாது ஜந்துவாக இருந்திருக்கிறாள்.

இனி…. காதலிக்கணும். சுகமாக மனசு முட்ட முட்டக் காதலிக்கணும். என் கிருபா ஒரு ஜென்டில்மேன். நான் குணமாவதுக்கு எத்தனை பொறுமையாக இரண்டு வருடம் காத்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னை எவ்வளவு நேசித்திருந்தால் இப்படி எனக்காக காத்துக் கொண்டிருப்பார்.? சரி…. என்ன கேட்டுப் போச்சு.! விட்டதை பிடிக்கணும்….

ஒரு செக்ட் ஷர்ட்டும், வெள்ளை நிற பாண்ட்டும் செலக்ட் பண்ணி பில் கட்டிவிட்டு நடந்தாள். எதிரே ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அவள் மேல் மோதினான். வேணுமென்றே மோதுகிரானோ.? காட்டான். அவன் சட்டை காலரைப் பிடித்து அவனை ஒரு அறை விட்டாள்.

‘இடியட்…. தராதரம் தெரிய வேண்டாம்.?” அவன் அவளை உறுத்துப் பார்த்தான். இவனால் எல்லாமே தலைகீழாக மாறப் போகிறது என்று அப்பொழுது உணரவில்லை சசிரேகா.

ஜானகி சந்தோஷமாக இருந்தாள். வெள்ளிக்கிழமை வந்திவிட்டது. சசிரேகா வரும் நாள். ஜானகி சீக்கிரமே சமாதானமாகிவிட்டாள். கிருபாகரன் அவளுடன் தான் வாழப் போவதாக சொன்னவுடன் அவள் கேட்டாள்.

“கல்பனா பாவம் டா. அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறே.?”

“கல்பனா…. அவள்…. அவள்….” பேசமுடியாமல் திணறினாள்.

“புரியுது…. ஆனா….இது ஒரு துரோகம்டா. நான் சசிரேகா மீண்டு வருவாள் என்று எதிர்பார்க்காததால் கல்பனாவை ஆதரித்து விட்டேன். மனசை உறுத்துது.”

“கல்பனாவை நான் சந்தித்திருக்கவே முடியாது. நான் ஒரு சுயநல ஆண் தான். மனசை அடைக்க தெரியாமல்…… அவளை பார்த்த அன்றே என் மனம் அவளிடம் நழுவிக் கொண்டு போய்விட்டது. இப்பொழுது விரட்டுகிறேன். குற்ற உணர்வாக இருக்கிறது. எவ்வளவு கேவலமானவன் நான். அவள் என்னை ஒரு கயவன் என்று தானே  நினைப்பாள். எனக்கே என்னை பிடிக்கலை மா.”

“சரி. இது தான் விதி போலும். ஒரு முடிவு வந்திருக்கு. நாம சசிரேகாவை முழு மனதோட எடுத்துக்கணும்.” என்று மகனை சமாதானபடுத்தினாள். பிறகு திருமண போட்டோவை காலில் மாட்டினாள். சசிரேகா….கிருபா படம் ஹாலை மீண்டும் அலங்கரித்தது. ஜானகி உள்ளம் கண்ணீர் சிந்தியது. கல்பனா….கிருபா  படம் இருக்கும் என்ற அவள் கனவு நிராசை ஆகிவிட்டது.

அந்தக் கடைசி வாரம் தந்த திருப்தியுடன் சசிரேகா கேட்டுக் கொண்டது போல அவளை வரவேற்க கிருபா வீட்டுக்கு வந்தாள் கல்பனா. ஓடியாடி உதவிகள் செய்தாள். கிருபாகரின் கண்களை சந்திக்காமல் தவிர்த்தாள். வாசலில் கார் வந்து நின்றது. சசிரேகா பொலிவுடன் இறங்கி வந்தாள். கிருபா வாங்கிக் கொடுத்த புடவையை அவள் கட்டி இருக்கவில்லை. நல்ல ஆழ்ந்த சிவப்பு நிறப் புடவையை அவள் பூ உடல் சுற்றிக் கொண்டிந்தது. ஒரு மணப் பெண்ணிற்குரிய நளினத்துடன் நின்றாள். கையில் வைத்திருந்த பார்சல்களை கிருபா வாங்கிக் கொண்டான். கல்பனா ஆர்த்தி எடுத்தாள். ஜானகி….

“மணமகளே…. மருமகளே வா வா….” என்ற பாட்டை போட்டிருந்தாள். அவள் முகத்தில் ஓட்ட வைத்த ஒரு சிரிப்பு ஓடியது. இருந்தாலும் அவள் சசிரேகாவை அன்புடன் வரவேற்றாள். கட்டாய அன்பு என்றாலும் அது அன்பு தானே.? உள்ளே அழைத்து சென்றார்கள்.

சசிரேகா அனைவரையும் பார்த்து குதூகலித்து உணர்வுடன் விம்மினாள். அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள் கல்பனா.

“உங்க எல்லோரையும் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு.” என்று ஆரம்பித்தாள் சசிரேகா.

“கல்பனா……. என்னையே எனக்குத் தந்த உனக்கு என் மனமார்ந்த நன்றி. நான் முக்கியமா ஒரு விஷயத்தை சொல்லிடனும்னு தான் வந்தேன். தெளிவா சிந்திச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன். கிருபா…. அத்தை என்னை மன்னிக்கணும் நான் புரிந்து கொண்ட விஷயம் இது தான். என்னாலே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ முடியும்ன்னு தோணலை. மீண்டும் கசப்பு வேண்டாம். கிருபா நாம நல்ல நண்பர்களாக பிரிவோம்….”

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் கிருபாவும் அவன் அம்மாவும். இதுக்கா நான் பாடுபட்டு சசியை ரெக்கவரி டிராக்கில் கொண்டு போனேன்.? என்று நினைத்து திகைத்து நின்றாள் கல்பனா.