மிகவும் நொந்த நிலையில் இருந்தாள் சசிரேகாவின் அம்மா.
“எல்லாம் என் தலையெழுத்து. வர வர என்னாலே சமாளிக்க முடியலை.” தொப்பென்று நாற்காலியில் உட்கார்ந்தாள்.
அந்த நிமிஷம் ஒன்றை புரிந்து கொண்டாள் கல்பனா. என்னதான் தாயாக இருந்தாலும் தினம் தினம் இப்படி போராடுவது கஷ்டமாகத் தானே இருக்கும். முதுமையை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் வயதில் அக்கடா என்று பொறுப்புகள் கழிந்த நிலையில் என்ன சோதனை இது.! இயலாமையில் அழும் முதியவளைப் பார்க்க பாவமாக இருந்தது. சசிரேகா அமைதியாக உட்கார்ந்து இவர்களை குறுகுறுவென்று பார்த்தாள்.
“அம்மா…. உங்க மனநிலை புரியுது. இருந்தாலும் நீங்க இப்படி அடிக்ககிரதாலே பிரச்சனை தீரப் போறதில்லை.”
கண்களை துடைத்துக் கொண்டு சந்திரா கேட்டாள்.
“நீங்கள்லாம் யாரு.? தெரியலையே. உக்காருங்க. பயபடாதீங்க. என்னிடம் தான் அழிச்சாட்டியம் எல்லாம்….”
“என் பெயர் கல்பனா. இவ என் அக்கா பெண் உமா. இவ காலேஜ்ல உங்க பொண்ணோட ஆன்மீக சொற்பொழிவு நடந்ததாம். அவங்க ரசிகை இவ. அதான் பார்க்கலாமேன்னு….”
“பாரும்மா எப்படி ஆயிட்டா பாரு. இதை விட அவ செத்திருக்கலாம். என்னவோ பண்றது மனசை. இப்ப பயித்தியம். குளிக்க வைக்க கூட படாதபாடு பட வேண்டியிருக்கு.”
“எப்படிம்மா இப்படி ஆச்சு.?”
“அது ஒரு சோக கதை. டாக்டர் கிருபாகருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். அவர் ரொம்ப நல்ல மனுஷன். இவளுக்கு தான் வாழ கொடுத்து வைக்கலை. இரண்டு முறை அபார்ஷன் ஆயிடுச்சு. மூணாவது முறை எட்டு மாசமிருக்கும் போது அவளுக்கு வலி எடுத்துச்சு. இரட்டை குழந்தைகள் பிறந்தது. எடை ரொம்ப குறைவு. இன்குபேட்டரில் வச்சு பாதுகாத்தும்….” அம்மாள் நிறுத்தினாள். சசிரேகா பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“சசி வா உனக்கு பாட்டு போடவா.?” உள்ளே அழைத்துச் சென்று பாட்டு போட்டு விட்டு அவளை படிக்க வைத்து போர்த்திவிட்டு வந்தாள். பெருமூச்சுடன் உட்கார்ந்தாள்.
“பாட்டு கேட்டிட்டே தூங்கிடுவா. வெறிச்சுப் பார்த்திட்டு அமைதியாக தான் இருப்பா. குளிக்க கூப்பிட்டா, வெளியே போனா தான் கத்துவா. ஆர்ப்பாட்டம் பண்ணுவா.?”
“நீங்க டாக்டர் கிட்டே காட்டலையா.?”
“எல்லாம் காட்டியாச்சு. மாத்திரை, மருந்து ஒரு மாசம் சாப்பிட்டா. அப்படியே சோர்ந்து படுத்திடுவா. இயந்திரம் மாதிரி ஆகிடுவா. பிறகு மெல்ல எழுந்து ‘எனக்கு என்னம்மா ஆச்சு.?’ னு கேட்பா. கொஞ்ச நாள் எல்லாம் புரிஞ்சா மாதிரி இருப்பா…..பிறகு சாமந்தி பூக்கள்…. குழந்தைகள் படம்…. விளையாடும் குழந்தைகள் , பிறரின் குழந்தைகளை பார்த்தால் பழைய மூர்க்கம் வந்திரும். மறுபடி பழையபடி மாத்திரை, மருந்து, உணர்வில்லாமல் கிடைக்கிறது. சரியான மாதிரி பேசறது. இப்படியே போயிட்டிருக்கு. என் சோக கதையை சொல்லி உங்களை கஷ்டப்படுத்தறேன்.”
“சே சே அப்படியெல்லாம் இல்ல. யார் கிட்டயாவது சொன்னா தானே மனபாரம் குறையும்.”
“என்னவோ தீராத குறையா இருக்கு. என் கணவர் பிசினஸ் விஷயமா அடிக்கடி வெளிநாடு போயிடுவார். அப்பா ஊரிலே இருக்கிற சமயம் ரொம்ப சந்தோஷமா இருப்பா. அவர் சொல்றபடி கேட்பா. அவர் ஊருக்கு போயிட்டா ஒரே பிரச்சனை தான்.”
“தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்லலாமா.? இவங்களை அவங்க கணவர் வீட்டில் விட்டால்…..”
“அதயேன் கேட்கறீங்க.? அங்கே தான் முதலில் இருந்தா. மாமியாரையும், புருஷனையும் திட்டுவா. அவங்களாலே தான் குழந்தைகள் இறந்ததுன்னு கூச்சல் போடுவா. சரின்னு நான் இங்க கூட்டிட்டு வந்திட்டேன். அவரும் அப்பப்ப விடாம வந்து அவளிடம் அழைச்சிட்டுப் பேசறார். வீட்டுக்கு கூப்பிடுறார். ஒரு முறை வலுக்கட்டாயமா அழைச்சிட்டு போனார். மறுநாள் அவளைக் காணாம பதறிட்டாங்க. இவ வீட்டை விட்டு ஓடி வந்திட்டா.”
ஏதோ ஒரு பஸ்சிலே ஏறி கண்டக்டரிடம் பாப்பாக்கள் இருக்கிற ஊருக்கு போகணும்னு அழுதிருக்கா. நல்ல வேளை அந்த பஸ்சில் என் சொந்தக்கார பையன் இருந்திருக்கான். இங்கே கொண்டு வந்து விட்டான். நானும் தேர்த்திருவிழா…. மீனாட்சி கல்யாணம்…. தெப்பத் திருவிழான்னு கூட்டிட்டுப் போறேன். சாமிக்கிட்டே இவ குணமாகணும் வேண்டிக்கிறேன்.”
“இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து இறந்து விட்டது அவளுக்கு மிகப் பெரிய ஷாக். குழந்தைகளை அடக்கம் செய்யும் முன் சாமந்தி பூமாலை போட்டு அவங்க மாமியார் வீட்டு கூடத்தில் கிடைத்தியிருந்தாங்க. அதைப் பார்த்து துடிச்சுப் போயிட்டா. அப்பவே மனம் பேதலிக்க ஆரம்பிச்சிடுச்சு. அங்கே போனா குழந்தைங்க இறந்து கிடத்தப்பட்ட இடத்தை பார்த்து ஆவேசமாயிடறா. அதான் அங்கே அனுப்ப முடியலை. புருஷனை பார்த்தாலும் அவளுக்கு ஏதோ திகில் ஏற்படுது. என்ன செய்ய.? சரி கொஞ்சம் இருங்கம்மா காப்பி கொண்டு வரேன்.”
“அதெல்லாம் வேண்டாம்மா. உங்களுக்கு என்ன உதவி வேணாலும் கேளுங்க. நாங்க வரோம்.”
“இவளுக்காக பிரார்த்தனை பண்ணுங்க. அதான் மிகப் பெரிய உதவி. எங்களை வேடிக்கை பார்க்கிற ஜனங்கள் தான் உண்டு. உங்களை மாதிரி கரிசனத்தோட பேசறவங்க கம்மி.”
“கவலைப்படாதீங்க. பொறுமை தான் வேணும். இந்தாங்க என் செல் நம்பர். எதுவானாலும் கூப்பிடுங்க. வரட்டுமா.?”
அவர்கள் போன பின்னும் வெகு நேரம் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் சந்திரா. அவளுடைய வலி, இழப்பு, பரிதவிப்பு எல்லாம் புரிந்து கொண்டு எவ்வளவு ஆறுதலாக பேசினார்கள். புத்திசாலியான அழகு ராணியாக இருந்து மகளுக்கு இப்படி ஆகிவிட்டது எவ்வளவு பெரிய பெரிய துக்கம் என்று புரிந்து கொண்டார்களே.! அவங்க நல்லா இருக்கணும்.
வீட்டுக்கு வந்த கல்பனாவின் மனம் பாரமாக இருந்தது. தூக்கமே வரவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்தது. தன்னையே உணராமல் பயத்துடனும், சோகம் சுமந்து வாழ்கிற சசிரேகாவை பார்க்கும் போது கடவுள் மேல் கோபம் தான் வருகிறது. குழந்தை பிறந்தவுடனே கள்ளிப்பால் கொடுத்து கொன்று விடுகிற மனோபாவம் உடையவர்களை ஏன் தாயாக்க வேண்டும்.? இதோ குழந்தைகளுக்காக ஏங்கும் சசிரேக்காவின் குழந்தைகள் ஏன் மரணிக்க வேண்டும்.? சசிரேகாவின் வாழ்க்கைப் பயணம் அவளுடைய பாதை தெரியாமல் நின்றுவிட்டது. தொலைந்த பாதையை தேட தனக்காவது புத்தி இருக்கிறது. சசிரேகா அதற்கும் வழியில்லாமல் அடுத்தவரை நம்பி இடர்படுகிறாள்.? அவள் அம்மாவால் கூட ஏதும் செய்ய முடியவில்லை. கல்பனா தூங்க வெகு நேரமாயிற்று.
“ஆசை தான். போடி போகத்தவளை. உடையப்பட்ட புருஷன் வந்த போதே அவர் முகத்தை பிராண்டி அடிச்சு விரட்டிட்டே இவங்களையும் பிராண்டி அடிக்கலாம்னு பார்க்கறியா.?”
‘பிராண்ட மாட்டேம்மா. அடிக்க மாட்டேன்மா.”
“அவங்க வந்தா மாறிடப் போறியா என்ன.? காபியை குடி.”
காபியை வாங்கி அம்மா தலையில் கொட்டினாள். சந்திரா சூடு தாங்காமல் அலறினாள்.
“பாவி என்னையும் துரத்து அப்பத்தான் உனக்கு நிம்மதி.” குளிக்கப் போனாள் சந்திரா. சசிரேகா அவள் குளித்து வெளியே வரும்வரை காத்திட்டு இருந்தவள் அம்மா வந்ததும் ‘அவங்களை கூப்பிடு அவங்களை கூப்பிடு’ என்று கத்தினாள்.
“இரு காபி அபிஷேகம் பண்ணி மீண்டும் குளிக்க வச்சிட்ட. இனி எந்த அபிஷேகமும் பண்ணாதே. எனக்கு மீண்டும் மீண்டும் குளிக்க தெம்புமில்லை கூப்பிட்டு தொலைக்கிறேன்.”
“ஹாய்யா….” என்று கை தட்டினாள் சசிரேகா.
கல்பனாவின் செல் நம்பரை தட்டினாள் சந்திரா.
“ஹலோ….” சொன்னாள் கல்பனா. .
“எப்படிம்மா இருக்கே.? இங்கே சசிரேகா உன்னை பார்க்கணும்ன்னு ஆட்டம் போடறா. கொஞ்சம் வர முடியுமா.? ஸாரி உன்னை தொந்தரவு பண்ணுவதற்கு.”
“ச்சே ச்சே எந்த தொந்தரவும் இல்லை. இன்னிக்கு ஞாயிறு தானே அலுவலகம் போக வேண்டாம். கண்டிப்பா வரேன்.”
“ரொம்ப நன்றிம்மா.”
“என்னம்மா இதுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிட்டு…. வந்திடறேன்.”
கல்பனா நிறைய குழந்தைகள் படம் போட்ட புத்தகம் வாங்கிக் கொண்டாள். பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுடன் சசிரேகா வீட்டை அடைந்தாள். ‘வாம்மா வா…. ‘ என்று வாய் நிறைய வரவேற்றாள் சந்திரா. உள்ளே குரல் கொடுத்தாள்….
“ரேகா யார் வந்திருக்கா பார்….” அறையிலிருந்து ஓடி வந்த சசிரேகா கல்பனாவை கண்டதும் மூர்க்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“வா வா நாம ரூமுக்கு போயிடலாம். இந்த குந்தாணி அம்மா அடிக்கும்.” கல்பனாவை இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள். அறையில் குழந்தைகள் விளையாடக் கூடிய பொம்மை வீடு இருந்தது. ஒரு ப்ராமில் பொம்மை படுத்திருந்தது.
“கல்பனா என் குழந்தைகளை இந்த ப்ராமில் வச்சு பார்க் போகலாமா.?”
“சசி அங்கே குழந்தைகளை பார்த்ததும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாது. ரசிக்கணும் சரியா.?” என்றாள் சந்திரா மகளிடம்.
“ம்ம் சரி..” தலையாட்டினாள். அங்கே போனதும் அங்கு விளையாடும் இரண்டு மூன்று வயது குழந்தைகளை பார்த்து முகம் வேர்த்தாள். பயம் கண்ணில் தெரிய கத்தினாள். ‘ரேகா பயப்படாதே.’ என்று தட்டிக் கொடுத்தாள் கல்பனா. கனிவாகப் பார்த்தாள்.
“அந்தக் குழந்தைகளை நான் தொடலாமா.?”
“தொடலாமே….”
“நான் தொட்டா செத்துப் போயிடுமா.? என் பாப்பாக்களை நான் மடியில் வச்சதும் செத்துப் போச்சு.”
“அப்படியா.? வ வந்து தொட்டுப் பார்.”
அவங்க அடிப்பாங்க.”
“அடிக்காம நான் பார்த்துக்கிறேன். சரியா.?”
ஒரு இரண்டு வயது குழந்தையை அதன் அம்மாவிடமிருந்து தூக்கி வந்தாள். குழந்தை கொழு கொழுவென்று சிரித்தபடி இருந்தது.
“ரேகா…. குழந்தையை நான் வச்சுக்கிறேன். நீ தொட்டு கொஞ்சு.”
“சரி….” ரேகா ஆசையுடன் கன்னத்தை தொட்டு ஸ்வீட்டி என்றாள். குழந்தை பதிலுக்கு களுக்கென்று சிரித்தது.
“ஐய்…. ஒண்ணும் ஆகலை. பாப்பா நல்லா சிரிக்கிறா.”
குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு கல்பனா ரேகாவிடம் வந்தாள். ஒரு மரநிழலின் அடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து படம் நிரம்பிய புத்தகத்தை பிரித்தாள். அதில் அழகான குழந்தைகள் படங்களைக் காட்டினாள். ரேகா ஆர்வமுடன் பார்த்தாள்.
பீடிங் பாட்டிலில் பால் அருந்தும் பாப்பா. சின்ன கட்டிலில் தூங்கும் பாப்பா, நடைவண்டி பிடித்து நடக்கும் பாப்பா….
“எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா.?”
“ஆமா இல்ல…. அழகாயிருக்கு. என் பாப்பாக்கள் மட்டும் ஏன் செத்துப் போச்சு.?” அழ ஆரம்பித்தாள்.
“என் பாப்பாக்களை கூட்டிட்டு வா.” கத்தினாள். கல்பனாவை அடித்தாள். சுற்றி நின்றவர்கள் மிரண்டார்கள். கல்பனாவை பார்த்து ஓடிவிடு ஓடிவிடு என்றார்கள். கல்பனா நிதானமாக பேசினாள்.
“சசி…. உன் பாப்பாக்களை கடவுள் எடுத்துக்கிட்டார். அவருக்கு உன் பாப்பாக்களை பிடிச்சிருக்காம். அங்கே உன் பாப்பாக்கள் இதோ இந்த பாப்பாக்கள் மாதிரி அங்கே விளையாடுது.” என்றாள் கண்களை அகல் விரித்து. அந்தக் கண்களின் ஒளி சசியை ஈர்த்தது.
“அப்போ என் பாப்பாக்கள் சாகலையா.?”
“கடவுள் கிட்ட வளர்றாங்க. அங்கே அழகான நந்தவனம் இருக்கு. பொன் ஊஞ்சல் இருக்கு. பொன் ஊஞ்சல் ஆடி அருளே…. அப்படின்னு பிள்ளைத் தழிழ் பாடல்கள் இருக்கு இல்லையா.? அது மாதிரி பிள்ளைத் தமிழ் பாட்டெல்லாம் பாடி மீனாட்சி அம்மன் உன் பாப்பாக்களை கொஞ்சுவாங்க. மீனாட்சி தாயாரிடம் பால் அருந்தி உன் பாப்பாக்கள் ஆரோக்கியமா சௌக்கியமா இருக்காங்க. இங்கே கூட்டி வந்தா அவங்க அழுவாங்க.”
சசிரேகாவுக்கு மனசில் ஒரு குளிர்ச்சி வந்தது. தன் பாப்பாக்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதை உணர்ந்தாள். மீனாட்சி மடியில் தவழும் பாக்கியம் பெற்ற செல்வங்கள் என்ற எண்ணம் வலுக்க, அவள் பரவசம் அடைந்தாள்.
“கடவுளுக்கு என் பாப்பாக்களை ரொம்ப பிடிச்சதாலே எடுத்துக்கிட்டாரா.? அய் ஜாலி.”
“ஆசையா தத்து எடுத்துக்கிட்டாங்க.”
“ஓ…. சரி அப்ப எனக்கு பாப்பா.?”
“நீ இங்கே இருந்தா எப்படி பாப்பா வரும்.? உன் புருஷன் கிட்டே போய் வாழந்தா தானே வரும்.?”
“ம்கூம்…. நான் மாட்டேன். அந்தாள் என் பாப்பாக்களை வெறுப்பார். பேட் பெல்லோ.”
“இந்தக் குழந்தைகள் புஸ்தகம் அவர் தான் வச்சிருந்தார்.” ஒரு பக்கத்தில் உள்ள இரட்டை குழந்தைகளை காட்டினாள். அதில் பெண் குழந்தை படத்தருகே இலக்கியா என்று எழுதியிருந்தது. குழந்தைகல் பிறந்தால் இந்த பெயர் தான் வைக்கணும் என்று சசிரேகா சொல்வாள் என்று கிருபா சொல்லியிருந்தான்.
“அட நிஜமாவா.?
“நிஜமாத் தான் உன் புருஷனுக்கு பாப்பான்னா ரொம்ப பிடிக்கும் புரியுதா.? என்னை நம்பு.”
நேரமாகி விட அவளை மெல்ல அழைத்துக் கொண்டு வீடு வந்தாள் கல்பனா. சசிரேகா முகம் சாந்தமாக இருந்தது.
“அம்மா என்பாக்கு வேறு பாப்பா பிறக்கணும். நான் புருஷன் வீட்டுக்கு போறேன் மா>” சசிரேகா சொல்ல சந்திரா விழி விரிய பூரித்துப் போனாள். கல்பனாவால் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. ஆச்சரியப்பட்டுப் போனாள்.