அத்தியாயியம்…. 8

அக்கா விசாலம் ஆறுதலாக பேசினாள்.
“என் வீட்டில் வந்து இருன்னு சொல்ற சூழ்நிலையிலே நான் இல்ல கல்பனா. தைரியமா இரு. ஊர் பேச்சை மனசிலே வச்சுக்காதே. “

“சரிக்கா. நீ கவலைப்படாதே. நான் தைரியமா இருக்கேன்.”

கல்பனாவுக்கு ஆறுதல் தேவை இருக்கவில்லை. விவாகரத்து ஆனதே பெரிய ஆறுதலாக இருந்தது. ஒரு மாய உலகத்திலிருந்து கழன்று வந்துவிட்ட மாதிரி இருந்தது.

வேலைக்கு சந்தோஷமாக போய் வந்தாள். அலுவலகத்தில் அனுதாபம் காட்டியவர்களிடம்..

“இட்ஸ்…. ஓ.கே. நடந்தது நடந்துவிட்டது. அதை மறந்துவிட்டு மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்.” என்று சொல்லிவிட்டாள். அவர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது.

அப்பா இறந்த போது தான் ஆடிப் போய்விட்டாள். தனக்கொரு நல்ல வழிகாட்டியாக இருந்தவர் மறைந்ததும் னிநி மறுமணம் செய்து கொள்கிற துணிவு கூட இல்லாமல் போனது. காதலே இல்லாத ஒரு கட்டாயக் கல்யாணம். ஒரு திணிக்கப்பட்ட விவாகரத்து. எல்லாம் உன் தவறு என்று சுட்டும் தாய்…. ஏளனமாக பார்க்கும் சமுதாயம். இத்தனை முட்களுக்கும் நடுவில் அவள் மனசால் மலர முடிந்ததுக்கு காரணம்.. தன் மீது அவளுக்கிருந்த சுயமரியாதை.

இது என்னுடைய தவறு இல்லை. அப்ப நான் ஏன் இதை அவமானமாக நினைக்கணும்.? திரும்ப ஒரு பந்தத்திற்குள் அவள் நுழைய பயந்தாள். கல்யாணம் பண்ணிக் கொண்டால் தான் வாழ்க்கையா.? அம்மா விடவில்லை….

“ஏண்டி…. நீ என்ன நினச்சிட்டிருக்க? சொன்னக் கேளு கல்யாணம் பண்ணிக்கோ. இத பார், ஒரு டாக்டர் வரன் வந்திருக்கு. ஒரே ஒரு பத்து வயது குழந்தை…. நாற்பது வயசு தான். சொந்த வீடு, கார் என்று ஓஹோன்னு இருக்கார்.  உனக்கேற்பட்ட களங்கம் மறைந்து கௌரவமாக சமுதாயம் உன்னைப் பார்க்கும்….”

மீண்டும் மீண்டும் அம்மா தன்னை களங்கப்பட்டவள் என்று சொன்னது கல்பனாவுக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே அம்மாவுக்கு புரிய வைக்க நினனத்து எதுவும் அவளுக்கு புரியாமலே போயிற்று. அம்மா நீட்டிய வரன்களை கண்ணை மூடிக் கொண்டு தள்ளினாள். அம்மாவை தன் விஷயத்தில் மூக்கை நுழைக்க விடவில்லை. அம்மாவுக்கு ஏமாற்றம் என்று அவளுக்கு புரிந்தது.

இரண்டாம் தாரமாக ஒருவனிடம் தள்ளி விட வேண்டும் என்ற அம்மாவின் புரியாத்தனம் வெறுப்பை உண்டாக்கியது. அதனால் கோபத்துடன்….

“ஆமா…. நான் யாரை மணப்பதனாலும் பார்த்து, பேசி பழகி புரிந்து கொண்டபின் தான் கட்டுவேன். உனக்கென்ன.?” என்றாள்.

“ஓ…. அவ்வளவு தூரத்தகுக்கு வந்திட்டியா.? அப்படிபட்ட பெண் என் கூட இருக்க வேண்டாம். எக்கேடு கேட்டுப் போ.” சமுதாயம் தங்களை வேடிக்கை பார்த்து சிரிப்பதை தாங்காமல் மகளை காச்சி எடுத்துக் கொண்டிருந்தாள் தாய். மகள் மேல் நம்பிக்கை வைக்காமல் அவள் பேச. அதன் விளைவு.? மகள்…. இளரத்தம். கொதித்துப் போனாள்.

“நானும் உன் கூட இருக்க விரும்பலை. என்னை அவமானச் சின்னமா நினைக்கிற உன்னை அம்மான்னு….”

“நினைக்காதே டீ. அம்மா செத்துப் போயிட்டான்னு நினச்சுக்கோ.”

“ஓ. கே ரொம்ப தேங்க்ஸ் பை.” இப்படி பிரிந்து வந்தவள் தான் கல்பனா. அவளுக்கு தெரிந்த நியாயங்களோடு வாழ பழகிக் கொண்டாள். ஒரு விவாகரத்து ஆனால் அதற்கு கண்டிப்பாக அந்த பெண்ணின் தவறு தான் காரணம் என்ற கண்ணோட்டம் அவளுக்கு கோபமூட்டியது. எரிச்சலாக இருந்தது.

சமுதாயம் இப்படித்தான் நினைக்குமா.? நினைத்து விட்டுப் போகட்டும். என்னை மதிக்க மாட்டார்கள்…. மதிக்காகமல் போகட்டும். இவளை பயன்படுத்திக்கலாம் என்று சில வக்கிர புத்தியுள்ள ஆண்கள் நினைப்பார்களாம். நினைத்து விட்டுப் போகட்டும். எனக்கு நான் யார் என்று தெரியும். என் மனசாட்சி தெளிவாக இருக்கு. அது போதும். தடாலடியாக வாழ்க்கை புதரில் குதித்து விட்டாள். மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையுடன்….

“கல்பனா அழுது புலம்பி நிற்கிற பேதை இல்லங்க…. அவளை ரொம்ப மதிக்க தோணுது. அவதூறு என்ற கற்பனை இமயமலையை ஏறி ஜெயித்து விட்டாள். அம்மா தான் சமுதாயம் சிருஷ்டித்த இமயமலையை நிஜம் என்று நம்பி வேடிக்கை பொருளாகிப் போனோமே என்று கூனிக் குறுகி நிக்கிறா…. “ என்று விசாலம் தனக்கு தெரிந்த அக்கம் பக்கத்தவர்களிடம் தங்கையின் பெருமையை சொல்லி அவளுக்கு ஆதரவு திரட்டினாள்.

ஒரு போர் வீரணைப் போல் கம்பீரமாக அவள் எதிர்நீச்சல் போட்டாலும்…. அவளும் சாதாரணப் பெண்ணாக அன்புக்கு ஏங்கினாள். ஒரு ஆடவனின் காதலுக்காக ஏங்கத்தான் செய்தாள். ஸ்கூட்டரில் ஒன்றாக போகும் தம்பதிகள், தரிஉமானம் முடிந்து ஒன்றாய் நிற்கும ஜோடிகள், இரு குழந்தைகள் கைபிடித்து கண்ணிற்கு நிறைவாக தென்படும் குடும்பங்கள் என்று எங்கும் அவள் தனிமையை உணர்த்தும் காட்சிகள் அவளை அசைக்கத்தான் செய்தன. வரன் பார்த்து திடீரென மாலையும் தாலியையும் போட்டு அவளை மனைவி ஆக்கிக் கொள்பவன் இன்னொரு சுதாகரனாக இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்.? அந்த ரிஸ்க் அவள் எடுக்கத் தயாராக இல்லை. கண்டிப்பாக பேசிப் பார்த்து அவனை நன்றாக புரிந்த பிறகு தான் கல்யாணம் அப்படி அமையலை என்றால் கன்னியாகவே இருந்து விட்டு போவது என்பது தான் கல்பனாவின் முடிவு.

கல்பனா நிகழ் காலத்துக்கு வந்தாள். ஜானகி அம்மாள் ஏதற்காக சசிரேகாவுக்கு பயந்து ஓடி வரவேண்டும். எதிர் கொள்கிற திராணி ஏன் இல்லாமல் போயிற்று.? கிருபாகரன் தன் மனைவி குணமாகி வரவேண்டும் என்று காத்திருக்கிறானா.? இல்லை இனி அவள் வேண்டாம் என முடிவு எடுத்து விட்டானா.?

சசிரேகா ஏன் மனநோய்க்கு ஆளானாள்.? அவள் குடும்பத்தார் அவளை குணப்படுத்த முயற்சிக்கவில்லையா.? மூன்று வருடமாக இப்படியொரு இழுபறி வாழ்க்கையை கிருபாகரன் தாங்க முடியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் கல்பனாவிடம் அன்பு காட்டி வசப்படுத்துகிறானா.? கிருபா என்ன நேசிக்கிறானா.? இல்லை என்னை பயன்படுத்த பார்க்கிறானா.? கேள்விகள்…. கேள்விகள் அவளை சுற்றி வந்து பதில் கேட்டன. ஜானகி அம்மாளிடம் மனம் விட்டு பேசிவிடுவது என்று முடிவு பண்ணிக் கொண்டாள். அலுவலகம் விட்டதும் கொஞ்சம் பழங்கள், கேக் வாங்கிக் கொண்டு கல்பனா நேராக ஜானகியை பார்க்கப் போனாள்.

கல்பனாவுக்கு மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. இன்று தெளிவாக எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மணி ஆறு. டாக்டர் கிருபாகரன் கிளினிக்கில் வேலை முடித்து இரவு பத்துக்கு தான் வருவான். அதுவரை ஜானகி அம்மாளிடம் தெளிவாக பேசிவிடலாம். பெல் அடிக்க கை உயர்த்திய போது தானாக கதவு திறந்து கொண்டது.

“அடி பெண்ணே…. மகாலட்சுமி மாதிரி வந்து எதிரே நிக்கிற விளக்கேத்தணும் அதுக்காக வாசல் கதவு திறந்தேன். மகாலட்சுமியே வீட்டுக்குள் வந்துவிட்டாயே…. விளக்கேத்தும் போது கதவை திறந்து வைக்கணும், அப்ப தான் மகாலட்சுமி வருவாங்கற ஐதீகம். பார்த்தியா நீயே மகாலட்சுமி ரூபத்திலே வந்து நிக்கிற….” என்ற ஜானகி அவள் கைபிடித்து அழைத்துச் சென்றாள். பூஜை அறையில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

“கல்பனா…. நீயே விளக்கேத்து. எங்க குடும்பத்துக்கு ஒளி பிறக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு விளக்கேத்து.”

கொண்டு வந்த பழங்களை விளக்கின் பாதத்தில் வைத்துவிட்டு, கேக்கை மேஜை மேல் வைத்தாள் கல்பனா.

“மீனாட்சி தாயே என்னையும் கிருபாகரணையும் சேர்த்து வை. உனக்கு பட்டாடை வாங்கி சாத்தறேன்.” என்று மனமார வேண்டிக் கொண்டாள். கடவுளுக்கே லஞ்சம் கொடுக்க தயாராகிவிட்டாய் போலிருக்கு…. என்று கிண்டல் செய்தது என் மனது.

ஜானகி கேக் பொட்டலத்தை உள்ளே வைக்கச் சென்றாள். கல்பனா அறையை சுற்றிப் பார்த்தவள் ஓரிடத்தில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்தாள். அவள் பார்வை நிலைகுத்தி நின்றது. கிருபாகரன் தன் மனைவியோட எடுத்திருந்த புகைப்படம் அங்கு மாட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆசையோட அதை ஹாலில் மாட்டாமல், இங்கு விருந்தினர் பார்வைக்குப் படாமல் மாட்டியிருப்பதிலிருந்தே, பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

உள்ளே நுழைந்த ஜானகி, கல்பனா போட்டோவைப் பார்த்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். பேச வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள். தாம்பளத்தில் இருந்த பூவை எடுத்து கல்பனா தலையில் வைத்தாள் ஜானகி.

“உட்கார் கல்பனா. அந்த புகைப்படத்தில் இருப்பது என் மகனும் மருமகளும் தான். ஹாலில் தான் இரண்டு வருஷத்துக்கு முன் மாட்டியிருந்தேன். இதை பார்க்கிறவார்கள் உடனே ‘எப்போ மருமக சசி வீட்டுக்கு வரப்போறா.? குணமாகி விட்டாளா.?’ என்று துளைத்தெடுக்கிறார்கள். அதான் கழற்றி இங்கே வந்து மாட்டிவிட்டேன். போட்டோவை பார்த்த சாக்கில் சுலபமாக வம்படிக்க ஆரம்பித்து விடுகிற சந்தர்ப்பத்தை கொடுப்பானேன் என்று தான் மறைவாக மாட்டினேன். நிழலை மறைக்காமல் நிஜத்தை மறைகக் முடியுமா.? அன்று பொருட்காட்சி சாலையில் மருமகள் சசிரேகாவைப் பார்த்தேன். அவள்…. அவள்..” பேச முடியாமல் தினறினாள் ஜானகி. அவள் கண்களில் வலி.

“அழாதீங்கம்மா…. ஏதோ பேயைக் கண்டது போல் ஓடி வந்தீங்களே…. அவள் அவ்வளவு பெரிய ராட்சசியா.?” ஜானகி கண்களில் சின்ன வேதனை எட்டிப் பார்த்தது.

“அவள் என்னைப் பார்த்துவிட்டாள். கத்தி கூச்சலிட்டு போ…. போ கொலைகாரின்னு கத்த ஆரம்பிச்சுட்டா. கிருபா அவளைப் போய்ப் பார்த்தாலும் இப்படித்தான் கத்தி கூச்சல் போடறா. வீட்டில் அழைத்து வைத்து வைத்தியம் பண்ணலாம் என்றால்…. எங்களை எதிரியா நினச்சு…… சாமான்களை தூக்கி எங்க மேலே எறியறா…. அடிக்கிறா. கிருபாவை கண்டா ஆவேசம் கூடுது. அதனால் தான் அவள் அம்மா தன்னுடன் மகளை வைத்து வைத்தியம் பார்க்கிறா. இன்னும் குணமாகலை.” என்றாள் பெருமூச்சுடன்.

“கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கம்மா. உங்க மகன் போய் பார்த்து அழைத்து வர முயற்சி செய்யலாமே.”

“அப்பப்ப கிருபா போய் பார்க்கத் தான் செய்கிறான். அதே ஆவேசம் தான். அவன் பேசினாலே அவள் கையில் கிடைப்பதை எடுத்து வீசறா. அடிபட்டுக் கொண்டு தான் வருவான். என்ன செய்யறதுன்னு தெரியலை கல்பனா. ஜனங்களுக்கு புரிகிறதா.? ஏதோ நாங்க அவளை கொடுமைப்படுத்தி விரட்டி விட்டிட்டு, பையனுக்கு வேறு கல்யாணம் பண்ண முயற்சிப்பதாக கூறுகிறார்கள்…” என்றாள்.

“சசிரேகாவுக்கு ஏன் இப்படி ஆனது மா.?” என்று கேட்டாள் கல்பனா.

ஜானகி அம்மா சசி வீட்டுக்கு வந்ததிலிருந்து இன்று வரை நடந்ததை விளக்கமாக சொன்னாள் ஜானகி.

“ஒரு பெண்ணை பயித்தியம் என்று சொல்லி துரத்திவிட நாங்க மனசாட்சி இல்லாதவங்களா.? எவ்வளவு சொல்லியும் அவள் எங்களை எதிரியாகவே நினைக்கிறாள்…..” நீர் வழிந்த அந்தக் கண்களைப் பார்த்ததும் கல்பானவுக்கும் ஏனோ அழுகை வந்தது.

“உங்க மேலே எந்த தப்பும் இல்லம்மா. “ என்று ஆறுதலாக சொன்னாள். ஜானகிக்கு இந்த வார்த்தைகள் கேட்டு முகம் மலர்ந்தது

“எங்க சார்பா பேசிய முதல் ஆள் நீ தான். எங்களை குற்றம் சாட்டி  சாட்டி வரும் பேச்சு கேட்டு கேட்டு மனசே மரத்துப் போச்சு.”

சசிரேக்காவின் மனப் பிறழ்வுக்கு காரணம் தெரிந்ததும் அதிர்ந்து விட்டாள் கல்பனா. உண்மை இப்படி இருக்க…. பிஜு போன்றவர்களும் பெரிய மனிதர்களும் இவர்களை பந்தாடி ஆனந்தம் அடைகிறார்கள் என்பது எவ்வளவு அநியாயம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. உண்மை காரணம் அவள் கேட்காமலேயே தெரிந்துவிட்டது. கல்பனா மனசு பாரமாயிற்று.

“எந்த முடிவுக்கும் வரமுடியலை கல்பனா. எண் பையனைப் பார்த்தால் பாவமா இருக்கு. இரண்டு வருஷம் ஓடிடுச்சு. எந்த முன்னேற்மும் இல்லை. பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் என்னாச்சு உன் பையன் விஷயம்.? என்று கிளறுகிறார்கள். கேட்காமலே உபதேசங்கள் குற்றச்சாட்டுகள். வெறுத்துவிட்டது கல்பனா.” விரக்தியான குரலில் சொன்னாள் ஜானகி அம்மாள்.

கல்பனா ஸ்தமித்துப் போனாள். விதி விளையாடுகிறது… வேறு என்ன சொல்ல.?