அத்தியாயம்…. 7

சிக்னலில் கார் நின்றது. கல்பனா அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆமா.. ஏதோ சென்ட் பத்தி பேசினேங்க…. என்ன விஷயம்.?”

“அது ஒன்னுமில்லா. எனக்கு ஒரு சந்தேகம். நறுமணம் வீசுகிறது நீங்க ஏறியவுடன் அது நீங்க பயன்படுத்தியுள்ள சென்டிலிருந்து வருகிறதா.? இல்லை பெண்மையின் இயற்கை வாசனையான்னு யோசித்தேன். நீங்க பூ கூட வச்சுக்கலையே.” என்றான் அவளுக்கு சிரிப்பு வந்தது. இது ஒரு விஷயமா.?

“நான் சென்ட் உபயோகிப்பதில்லை….” வாசனை சோப்பின் வாசனையா தான் இருக்கணும் என்று அவள் சொல்கிறாள்.

“அப்படியா.? நைஸ் ஸ்மெல். சொர்கத்துக்கே அனுப்பிடுவீங்க போல.” என்றான் குறும்பாக. அவள் முகம் சிவந்தது. பொய் கோபத்துடன் அவள் கத்த நினைத்த போது வீடு வந்துவிட்டது.

கார் நின்றதும் சின்னப் பெண் போல் ஜானகி ஓடி வந்து ஏறிக் கொள்ள, கார் சித்திரை பொருட்காட்சி நோக்கி விரைந்தது.

பொருட்காட்சியை சுற்றிப் பார்த்தார்கள். அவ்வப்போது அம்மாவுக்கு தெரியாமல் அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.

“சில பேர் பொருட்காட்சியை சுற்றிப் பார்க்க வரவில்லை. ஆட்களைப் பார்க்கத்தான் வருவார்கள்.” என்று மறைமுகமாக கிருபாகரன் இடித்தாள் கல்பனா.

“நீ சொல்றது நிஜம் தான் கல்பனா. நானே மனுஷங்களை வேடிக்கை பார்க்கத்தான் வந்தேன். நாலு சுவத்துக்குள் அடஞ்சு கிடந்து இந்த மனுஷங்க பரபரப்பை பார்க்கிறது எவ்வளோ மகிழ்ச்சியாக இருக்க தெரியுமா.? என்று ஜானகி குதூகலித்தாள்.

“என்ஜாய் பண்ணுமா.” என்றான் கிருபாகர்.

வீட்டு உபயோகப் பொருட்கள் கடையிலருந்து பல சாமான்களை அள்ளிக் கொண்டு வந்தாள் ஜானகி. பெரிய பெரிய அப்பளங்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

“கிருபா.. அப்பளம் வாங்கி வாடா.” ஆறு வயது பெண் அப்பாவிடம் கேட்பது போல் இருந்தது. அவள் செய்கை புல் தரையில் அமர்ந்து அப்பளம் சாப்பிட்டார்கள். ஜயண்ட் வீல்…. ரயிலில் ஒரு ரவுண்ட், குடைராட்டினம் என்று எதையும் ஜானகி விடவில்லை.

“பாவம் அம்மா…. சமுதாயத்தினர் சொல்லடிக்கு பயந்து இரண்டு வருஷம் ஜெயில் கைதி போல் அடைந்து கிடந்தாள். இன்று சுதந்திரம் பெற்றவள் போல் ஆனந்தமடைகிறாள். ஜானகியுடன் சேர்ந்து கொட்டமடித்தாள். அவன் மனமும் துள்ளிக் குதித்தது.

“ஐஸ்கிரீம் கிருபா….” என்றாள் ஜானகி.

“அம்மா எதிர்த்தாப்ல தானே இருக்கு. நீயே வாங்கி வா.”

“வாங்கமாட்டேன்னு நினச்சீங்களா.?”

“போங்க…. போங்க உடம்பாவது குறையும்.”

“கிருபா என் அம்மாவை இவ்வளவு உற்சாகமா  நான் பார்த்து ரொம்ப நாளாச்சு. அவன் கண்களில் நீர் சுரந்தது.

“அப்படியா.? அப்படி என்ன நடந்தது.”

“அது ஒரு பெரிய கதை.” என்று மேலும் சொல்ல வாயெடுத்தான். அப்பொழுது பேயை கண்டவள் போல் ஜானகி ஓடி வந்தாள். பயம் அப்பிய கண்களுடன் நின்றாள்.

“கிளம்பு கிருபா. எழுந்திரு.” அவசரப்படுத்தினாள் கல்பனாவை இழுத்துக் கொண்டு விறுவிறுவென்று ஜானகி நடந்தாள்.

“வாசலில் நில்லுங்க காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்திட்டு வரேன்.” என்று கிருபாகரன் விரைந்தான். ஜானகி கார் வரும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஏதாவது பேசி ஆறுதல் சொல்லலாம் என்று நினைத்த போது எங்கிருந்தோ பிஜு வந்து அவள் கையை இழுத்துக் கொண்டு ஓடினான். தன் பைக்கை காட்டி “வண்டியிலே ஏறுங்க. அவசரம்.” என்று கட்டளையிட்டான். அவள் கையை முறுக்கி விடுவித்துக் கொள்ள முயன்றாள். அவன் பிடி இரும்பாக இருந்தது.

“வாங்க…. அவசரம்.”

“அவங்ககிட்டே சொல்லிட்டு வரேன்….”

“அதுக்கெல்லாம் நேரமில்லை.” அவளை வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டான். பைக்கை கிளப்பினான்.

“பாருங்க மேடம்…. அந்த பிராட் டாக்டர் உங்களை கூப்பிடறார். பார்க்காதீங்க அந்தப் பக்கம்.”

கல்பனா பார்ப்பதற்குள் கிருபாகரன் வண்டியை இன்னொரு கார் இடயே ஓடி மறைத்துக் கொண்டது. கல்பனா எகிறி வந்த கோபத்துடன் பிஜூவின் முதுகைக் குத்தினாள். எவ்வளவு திமிர் இவனுக்கு….? வீட்டுக்கு வந்து புடவையை களைந்துவிட்டு நைட்டியில் நுழைந்து டி.வி யை உயிர்ப்பித்தாள். ஏனோ அழுகை வந்தது. சிறிது நேரம் மனம் விட்டுக் கண்ணீர் விட்டாள். மனசு லேசாயிற்று. அதுவும் ஒரு நல்லதுக்குத் தான்.

இந்த பிஜு சாத்தானா.? தோழனா.? எதற்காக இப்படி அவள் விஷயத்தில் தலையிடுகிறான். பிஜு நடந்து கொண்ட விதம் எந்த விதத்திலும் நியாயமில்லையே. சிறிது தூரம் சென்றதும் கல்பனா கத்தினாள். “பிஜு வண்டியை நிறுத்து. இல்லே குதிச்சிடுவேன்.” பிஜு சர்ரென்று ஓரத்தில் நிப்பாட்டினான்.

“எதுக்கு இப்படி அதிகப்பிரசங்கித்தனம் பண்ணறே.? அவங்க என்ன நினைச்சிருப்பாங்க.?”

“அவங்க என்ன வேணா நினச்சிட்டுப் போகட்டும். நான் உங்களை இவ்வளவு எச்சரித்தும் அந்த ப்ராட் டாக்டர் கூட சுத்தறீங்களே….

அதான்….. நீங்க ஏமாந்திடக் கூடாதேன்னு கவலையில்….”

பளாரென்று அவனை கன்னத்தில் அறைந்தாள். நடுத் தெருவில் நின்று பொருமினாள்.

“நீ ஓவராப் போறே பிஜு. நீ யார் என்னைத் தடுக்க.? நான் யார் கூட வேணா பழகுவேன். பேசுவேன்.”

“அந்தாளை லவ் பண்றீங்களா.?”

“பிஜு நீ காதலிச்சிருக்கியா.? காதல் இந்த நேரத்தில் இந்த நபர் மேலே தான் வரணும் வரும்ங்கற இலக்கணம் எல்லாம் அதுக்கு கிடையாது. அது பாய்ந்து வரும் வெல்லம் மாதிரி யாராலும் தடுக்க முடியாது. எஸ். நான் கிருபாகரனை நேசிக்கிறேன். இதுடைம் பாஸ் காதல் இல்லை. என் உயிரையும் அவருக்காக கொடுப்பேன். ப்ளீஸ் என்னை எச்சரிக்கறதை விட்டுவிடு.”

“புரியுது மேடம். நீங்க நல்லா இருக்கணும். திரும்பவும் ஏமாந்துடக் கூடாதுன்னு தான். எனக்கென்ன அவ்வளவு அக்கறைங்கறீங்களா.? ஐ லவ் யூ…. உங்க சந்தோஷம் எனக்கு முக்கியம்…..”

அவன் கண்களில் நீர் சேகரமாகி இருந்தது. சின்னக் குழந்தை போல் தவிப்புடன் நின்றான். அவனைப் பரிவுடன் பார்த்தாள் கல்பனா. அந்தப் பார்வை அவனுள் இதமாக பரவிற்று. அவன் தலை தொட்டு ஆசீர்வதிப்பது போல் கை வைத்தாள்.

“பிஜு நீ இன்னும் நிறைய பெண்களை சந்திப்பாய். அப்ப நீ என்னைக் காதலிப்பதாய் சொன்னது எவ்வளவு ஸ்டுபிட்ன்னு நினைத்து சிரிப்பாய். உன் வயசுக்கு ஏத்த நல்ல பெண் உனக்கு கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன் சரியா.? உன் டைமை என் பொருட்டு தண்டமா செலவழிக்காதே. கிருபாகரை நான் எப்போதும் காதலிப்பேன். அவரை அடைய முடியாட்டியும் பரவாயில்ல. ஒரு ரோஜாப் பூ காற்றில் ஆடுவதை ரசிப்போமே அப்படி அவர் நினைவுகளை ரசித்தபடி வாழ்வேன் சரியா.?”

அவன் தலையாட்டிவிட்டு, அவளை அவள் வீட்டில் விட்டு விட்டுப் போனான். போகும் முன் சொன்னான்.

“கல்பனா மேடம். தப்பா நினைக்காதீங்க. விஷயத்தை சொல்லிடறேன். கிருபாகர் மனைவி சசிரேகா மனநிலை பாதிக்கப்பட்டவர் தன் தாயுடன் இருப்பதாக கேள்வி. அவங்களை எதிர் எதிராக சந்திச்சிட்டதாலே தான் ஜானகி அம்மா அலறி அடிச்சு ஓடி வந்தாங்க. சொல்லிட்டேன். உங்களுக்காக நானும் பிரார்த்திக்கறேன். அவ்வளவு தான்….”

பதிலுக்கு காத்திராமல் சர்ரென்று பைக்குடன் மறைந்தான்.

“கிருபாகர்…. உங்களை ஏன் சந்தித்தேன்.? ஏன் மனசை பறிகொடுத்தேன்.?” எண்ணினாள்.

மாலை ஆறு மணி வாக்கில் கல்பனா ஜன்னல் வழியாக பார்த்தாள். மாலை சூரியன் குங்கும நிற ரேகைகளை அனுப்பியிருந்ததால் வானம் ஆர்த்தி கரைத்துக் கொட்டியது போல் மங்களகரமாக இருந்தது. ரோஜா பூக்களை நெஞ்சில் கொட்டியது போல் இருந்தது.

கிருபாகரனோடு என் ப்ரெண்ட்ஷிப்புக்கு மங்களம் பாடிட்டி வந்திருக்கேன். உனக்கு சந்தோஷமா இருக்கா.? ஆர்த்தி கரைச்சு வரவேற்கறியா.?” என்று வானத்தைப் பார்த்து கோபப்பட்டாள்.

எழுந்து பால் காய்ச்ச சென்றாள். பால் பொங்க காத்திருந்த நேரம் அவள் மனசும் பொங்கியது. என் மனசு கிருபாகரனை நினைத்துக் கொண்டே தான் இருக்கும். இதுக்கு யார் தடை சொல்ல முடியும்.? காலமெல்லாம் கிருபாகரை பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்.

மாசம் ஒரு தடவை…. இல்லை…. இல்லை மூன்று மாசத்துக்கு ஒரு தடவை பார்க்க அனுமதிப்பாயா சசிரேகா.? சசிரேகா எப்பொழுதும் இப்படியே இருக்கப் போவதில்லை. அவள் சித்தம் தெளிந்து வரட்டும்…. அது தானே முறை.!

கிருபாகரனுக்கு அந்த செக்டு ஷர்ட் எவ்வளவு பொருத்தமாக இருந்தது.! அவன் எவ்வளவு சந்தோஷமாக காணப்பட்டான். ஜானகி அம்மாள் சின்னப் பிள்ளை போல் குதூகலித்தார்களே.! எனக்கு இன்னொரு அம்மா மாதிரி பழகினார்களே.! பிஜு சொல்வது போல் பெண்டாட்டியை கிருபா துரத்தியிருக்க மாட்டான். ஜானகி அம்மாவும் ராட்சசி போல் தெரியலையே.

ஏதாவது பலமான காரணம் இருக்கும் சசியின் மனநோய்க்கு. ஒரு வேளை அவளுக்கு சரியாகிவிட்டால் கிருபா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவாரோ.? என்னைப் பற்றி ஏதோ கவிதை எழுதியிருப்பதாய் சொன்னாரே. என் மேல் காதல் இருக்கு தானே.! காதல்…. அது மனசுக்குள் நுழைந்து விட்டால் நெகட்டிவ்வான விஷயங்கள் மறைந்து தவிடு பொடியாகிவிடும். தனக்கு சாதகமாக எல்லாம் அமையும் என்று கற்பித்துக் கொள்வது தானே காதலின் லட்சணம்.! கல்பனா அப்படித்தான் நினைத்தாள்.

ஒரு நேரம் அழுவதும் மறுநேரம் சிரிப்பதும் என சட்டென்று மாறும் வானிலை போல் ஜாலம் நிறைந்த தன் மனதை அவளுக்குப் பிடிச்சது. அவள் மனசு இத்தனை சுத்தக் காற்றுடன் சுவாசிப்பதை அவள் இன்று தான் உணர்ந்தாள்.

“தாங்க்யூ கிருபா…. நீ என் மனசுக்குள் நுழையவில்லை நானாகவே மாறிவிட்டே.” சந்தோஷமாக கற்பனைகளில் மிதந்தாள் கல்பனா.

தன் கல்யாண ஆல்பத்தை பார்க்க தோன்றியது அவளுக்கு. பொம்மைக் கல்யாணம் என்று தெரியாமல் மகிழ்ந்த அந்த நாளின் நினைவுகள் இன்னும் கனமாக உள்ளுக்குள் உருள்கிறது. ஆல்பத்தை பிரித்தாள். கணவன்…. அவன் முகத்தில் களையே இல்லை. கவலை தான் தெரிந்தது. கட்டாயத்தின் பேரில் ஒரு புன்னகையை ஓட்ட வைத்துக் கொண்டிருந்தான். அவள் புதுப் பெண்ணின் பூரிப்புடன் கண்கள் மலர பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லா போட்டோவிலும் அவன் துக்கம் கொண்டாடுபவன் போலவே இருந்தது. தன் மனம் கவர்ந்த மிருணாளினியைக் கல்யாணம் பண்ண முடியவில்லையே என்ற துக்கம் என்று இப்பொழுது நன்றாகவே புரிந்தது. அப்பொழுது அப்பாவியாக இருந்ததால் அது அவளுக்குப் புரியாமல் இருந்தது.

கடைசி போட்டோவிலும் அவள் பட்டுப்புடவை, தலைப்பூ அலங்காரம், நெத்திச்சுட்டி ஏதும் இல்லாமல் தளரப் பின்னிய முடியும், ஒரு ஆர்கன்சா புடவையுடனும் மனையில் உட்கார்ந்திருந்தாள். யாரோ ஒரு உறவுப் பெண் எண்ணைக் கிண்ணத்தை நீட்ட சுதாகர் ஒரு பூவால் எண்ணையைத் தொட்டு அவள் தலை உச்சியில் அப் =பூவை வைக்கிறாள். அது எண்ணைச் சடங்கு நடக்கும்போது எடுத்த போட்டோ…. தலையில் நெருப்பை வைத்து விட்டான் என்று நினைத்தாள் கல்பனா. இந்தப் படத்துடன் ஆல்பம் முடிகிறது. ஆல்பத்தை மூடி வைத்தாள்.