லேகா “என்ன டா.. தெரியுமே” என்றாள்.

“ஏன் அவளை யாருமே வந்து பார்க்கலை.. போன வாரம் உன் மாமனார் மாமியார் வந்தாங்கதானே உன் வீட்டுக்கு, ஏன் இங்கே லதா ஆன்ட்டியும்.. சுந்தரம் மாமாவும் வரவில்லை. ஏன் கல்யாணத்தில் யாரும் அவளிடம் பேசவில்லை.. ஏன் உன் கலயாணத்தில் கூட யாருமே அவளிடம் பேசவில்லை.. ஏன்னு யோசிச்சிருக்கியா” என்றான், சலிப்புடன்.

லேகாவிற்கு, பயம் பற்றிக் கொண்டது.. “சந்துரு, என்னாச்சு சந்துரு சொல்லு” என்றாள்.

“அப்போ, உனக்கு ஒண்ணுமே தெரியாது” என்றான் விசாரணையான குரலில்.

லேகா ஆடிபோனாள் “என்ன டா, சொல்லிடு ப்ளீஸ்.. என்னாச்சு” என்றாள். அவளுக்கு, என்னென்னமோ வந்து போகியது மனதில்.. ஏதாவது லவ்.. இல்லை, தீக்ஷியை சந்துருவிற்கு பிடிக்கவில்லையோ என ஆயிரம் யோசனை.

சந்துரு எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.. ஒரே மூச்சில்.

இறுதியில் “உனக்கு தெரியுமா லேகா.. அவளை பற்றி.. சொல்லிடு.. நான் சரி சரின்னு போயிடுறேன்” என்றான் தளர்ந்துக் கலங்கியக் குரலில்.

தம்பியின் குரல் தாக்கியது.. யாரிவன்.. எங்கள் வீட்டில் அவன்தான் ராஜா. எனகென்றால் உயிரையும் கொடுப்பான் என் தம்பி.. அவனை இப்படி கலங்க வைத்திட்டார்களே என கோவம்.

லேகா “டேய், எனக்கு எதுவுமே தெரியாது டா.. தெரிந்திருந்தால்.. சரியோ தப்போ உன்னிடம் சொல்லியிருப்பேன் டா.. இப்படி மறைத்திருக்க மாட்டேன் டா..” என்றவள் “சாரி சந்துரு.. சாரி டா..” என்றாள்.

சந்துரு “அப்பாக்கு தெரியும்ன்னு நினைக்கிறன். என்கிட்டே அவர் சொல்லவில்ல பாரேன். அத்தோடு, கல்யாணம் ஆனதும் உன் புருஷனாவது உன்னிடம் சொல்லியிருக்கலாம்.. அதுவும் இல்லை பாரேன். ஆனால், நீ ஜாக்ரதையாக இரு.. இன்னும் ஷிவா என்னென்ன மறைத்தான் என தெரியாது..” என்றான்.. அப்போதும் விடாமல் ஷிவாவை ஒரு தாக்கு தாக்கினான்.

லேகா விக்கித்து போனாள். மனமொன்றி வாழ்கிறோம் என எண்ணிக் கொண்டிருந்தவள்.. லேகாக சஞ்சலம் கொண்டாள்.

சந்துரு “அப்பா.. அப்பா.. எப்படி இப்படி பண்ணலாம்.. நான் யார்கிட்ட கேட்பேன். அந்த பொண்ணு வேற இங்கேயே உட்கார்ந்திருக்கு. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கலை, லேகு. அவளை பார்க்கவே என்னமோ மாதிரி இருக்கு.. என..க்கு சொல்ல தெரியலை.. லேகா, எங்கையாவது இப்படியே சொல்லாமல் போய்ட்லமான்னு இருக்கு..” என்றான் அழுத்தமான சின்ன குரலில்.

லேகா கண்களை துடைத்துக் கொண்டு “டேய்..” என அதட்டினாள்.. அவனின் பேச்சினை இடைமறித்து.

பின் பெண்ணவள் “இரு.. அப்பாகிட்ட என்னான்னு கேட்க்கிறேன். ஆனால், நீ தீக்ஷியை ஏதும் சொல்லிடாத. அவ அவ என்ன பண்ணுவா.. நீ கொஞ்சம் பொறுமையாக இரு. இது பெரியவங்க ப்பால்ட்.. ஷிவாவோ.. தீக்ஷியோ பொறுப்பு கிடையாதுல்ல..” என்றாள்.

சந்துரு “அதானே உன் ஷிவாவை நீ விட்டுதரமாட்டில்ல” என்றான்.

“டேய்.. அவர்கிட்டவும் கேட்போம்.. இரு.. நீ வை..” என்றவள், அழைப்பினை துண்டித்தாள்.

லேகாவிற்கு, இதை எப்படி கொண்டு செல்வது என யோசனை.. அப்பாவிற்கு தெரிந்திருக்கும்.. என சாத்தியங்களை ஆராய்ந்தவள்.. உடனே தந்தைக்கு அழைத்தாள்.

லேகா இரவு உணவிற்கு ஏற்பாடு செய்து முடித்திருந்தவள் இந்த செய்தியை கேட்டதும், போட்டது போட்டபடி வைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டாள்.

லேகா, தந்தைக்கு அழைத்தாள்.

ரமேஷ் வெளியூர் பயணம்.. அதனால் மேன்ஷனில் தங்கியிருந்தவர் பெண் அழைக்கவும் ஆனந்தமாக எடுத்தார் “அம்மாடி, எப்படி இருக்க டா” என்றார்.

லேகா “அப்பா, உண்மைய சொல்லுங்க.. தீக்ஷி யாரு” என்றாள் எடுத்த எடுப்பில்.

ரமேஷ் “என்னம்மா இப்படி கேட்க்கிற” என்றார் உள்ளுக்குள் பதை பதைத்தது.

லேகா “அப்போ உங்களுக்கு தெரியும்.. அப்படிதானே, உண்மையை சொல்லுங்க.. இப்போ நான் சுந்தரம் மாமாவிற்கு போன் செய்ய போறேன்” என்றாள்.

ரமேஷ் நிதானமானார் “இரு ம்மா..” என்றார்.

லேகா சந்துரு சொன்னதை சொன்னாள்.

ரமேஷ் “என்ன டா, தீக்ஷி அவங்க வீட்டு பொண்ணுதான். இப்போ, நம்மவீட்டு மருமக. அதனால் என்ன.. “ என்றார்.

லேகா “அதனால் என்னவென்றால்.. அப்போது ஏன் திருமணத்திற்கு முன் சந்துருவிடம் சொல்லவில்லை. அதனால் என்ன.. சொல்லி திருமணம் செய்திருக்கலாமே. திருமணத்தில் லதா அத்தை ஏன் பக்கத்திலேயே வரவில்லை என எங்களுக்கு எத்தனை எண்ணம்.. எல்லோரும் திட்டம் போட்டு.. ‘இவன்தானே ஏமாற்றலாம்’ என ஏமாற்றிவிட்டீர்கள். நீங்ககூட ஏன் ப்பா..” என்றாள்.

தந்தையோ “எனக்கு.. தீக்ஷியை பற்றி எந்த வருத்தமும்.. அவள்மீது எந்த பரிதாபமும் இல்லைம்மா.. என்னுடைய திருமணம் காதல் திருமணம்.. நம்ம உறவில் அப்போவெல்லாம் எத்தனை நபர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. எங்களை. ஏன், உன் அம்மா வீட்டிலேயே யாரும் ஏற்கவில்லையே.. 

அஹ.. அதனால், எனக்கு மனிதர்களை ஒதுக்குவது பிடிக்காது. எனக்கு ஹம்சா, விருப்படி.. அவளுடைய உறவுகளோடு.. என் பிள்ளைகளை சேர்த்துவிட்டேன் அவ்வளவுதான். தீக்ஷியை என் மாமனாரே ஏற்றுக் கொண்டார். அதனால், இதில் எனக்கு எந்த குறையும் இல்லை. 

சொல்லியிருக்கலாம். ஆனால் சந்துரு, எப்படி எல்லாம் திருமணத்தை நிறுத்தலாம் என எண்ணிக் கொண்டே இருந்தான் அதனால் நான் சொல்லவில்லை. மற்றபடி, அந்த பெண்ணை பாரு.. அமைதியாக இருக்கு.. நம்ம பையன் மாதிரி நல்ல துணையோடு வாழட்டுமே ம்மா..” என்றார் சரியான தோரணையில் சொல்லிவிட்டார் தந்தை.

லேகாவிற்கு எரிச்சலானது “அப்பா..” என பற்களை கடித்தவள், “வைங்க..” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டாள்.

லேகாவிற்கு, தந்தை போல.. ஏற்க முடியவில்லை.. ‘என் தம்பி அவன்.. கேட்க்க யாருமில்லையா’ என எண்ணிக் கொண்டே சுந்தரத்திற்கு அழைத்தாள், அப்போதே.

சுந்தரம் க்ளப்’பில் இருந்தார். மருமகள் அழைக்கிறாள் எனவும் அழைப்பினை ஏற்கவில்லை.. சற்று ட்ரிங்க்ஸ் எடுத்திருந்தார்.. சூழ்நிலை சரியில்லை காலையில் பேசிக் கொள்ளலாம் என எடுக்கவில்லை.

பதினோரு மணிக்குதான் ஷிவா எப்போதும் வருவான். ஆசையாக லேகா காத்துக் கொண்டிருப்பாள், எப்போதும்.

இன்று பெண்ணவள், சென்று படுத்துக் கொண்டாள்.. கணவனிடம் சண்டியிட்டிடுவோம் என பயம் அவளுக்கு.. ‘ஏன் இவர் என்னிடம் சொல்லவில்லை.. இது குடும்ப விஷயம்தானே.. திருமணம் முடிந்த பிறகாவது சொல்லியிருக்க வேண்டுமல்லவா..’ என எண்ணம்.

ஷிவா, கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான். மனையாளை காணாமல்.. தேடினான். தங்களில் அறைக்கு வர.. லேகா படுத்திருப்பது தெரிந்து பதறி போனான் “பேபி..” என கட்டிலின் அருகில் வந்து நின்று.. “என்னாச்சு லேகா.. என்னாச்சு” என்றான்.

லேகா கண்களை திறக்கவில்லை. கணவனும் கட்டிலின் அருகே, தன்னுடைய டைட் பேண்டி’னை இழுத்துவிட்டுக் கொண்டு.. மண்டியிட்டு அமர்ந்து.. அவளின் நெற்றியில் கை வைக்க.. பெண்ணவளின் கண்கள் கசிந்தது.. ஏனென்றே தெரியாமல். எழுந்து அமர்ந்தாள்.

கணவன் “என்னாச்சு.. கண்ணெல்லாம் கலங்கியிருக்கு.. அடிபட்டிருக்கா.. ப்ரீயட்ஸ்சா.. லேகா..” என்றான்.

ஷிவா, அவளோடு நேரம் செலவிடுவதை விரும்புவான். அவள் எவ்வளவு பேசினாலும், போனில்.. லாப்பில் கண்களை வைத்து.. காதுகளை இவளிடம் வைத்து கேட்பான். ஆனால், வாய் திறக்கமாட்டான்.. பேச்சுகள் குறைவுதான். ஆனால், மனையாள் என்கிற உரிமையை எடுத்துக் கொள்வான். எதையும் பகிரமாட்டான்.

இப்போது, அவளுக்கு முடியவில்லை எனவும் ஒருமாதிரி ஆனது. வீட்டினை, தான் வரும் நேரத்திலும் உயிர்ப்போடு வைத்திருப்பாலே என்னவாகிற்று என எண்ணம் இயல்பாக வந்தது. ஆனால், அதை காட்ட கூடாது என பொறுமையாக பேசினான்.

லேகா “ஒண்ணுமில்ல.. கால் வலி. நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

ஷிவா, அவளை விட்டு செல்ல மனதேயில்லாமல்.. ஹாலுக்கு வந்தான். ‘என்னவாகிற்று இவளுக்கு’ என யோசனை ஓடியது.