ஆட்டோ டர்ரென்று போய்விட்டது. மூர்த்தி அதிர்ந்த போனான். ஆட்டோ அவன் நெஞ்சின் மேல் ஏறிப் போனதாகப் பட்டது. உமாவா இப்படி பேசுகிறாள்.
“அப்பா பாவம்மா. ஏதோ அவங்கப்பா ரொம்ப கொடுமைபடுத்தி அடக்கி அடக்கி வளர்த்திருக்கார். அதான் புரியாம பேசறார். அப்பாவை இன்னும் கேர் எடுத்துப் பார்த்துக்கோம்மா. சரியாயிடும்.” என்று எப்போதும் பரிந்து பேசுபவள். நேர எதிராக மாறி விட்டாள். ‘என் பொண்ணை என்கிட்டேயிருந்து பிரிச்சிட்டாளே.’ பொருமியபடி சாப்பிடாமல் அலுவலகம் போனான் மூர்த்தி.
உமா அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு காலேஜ் கிளம்பினாள்.
“அம்மா கஞ்சி வச்சிருக்கேன் மதியம் சாப்பிடு. மனசை போட்டு அலட்டிக்காதே. நான் இருக்கேன்மா உனக்கு. இப்ப எப்படி இருக்கு.?”
“தேவலை உமா. ஊசி போட்டிருக்கார்ல்ல ஜுரம் விட்டு வேர்த்திருக்கு. கஞ்சி சாப்பிடறேன். மாத்திரை எடுத்துக்கிறேன். நீ
நிம்மதியா போ. தாங்க்ஸ் உமா.”
“என்னம்மா இது.? எனக்குப் போய் தாங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு.” உமா அரை மனதுடன் கிளம்பிச் சென்றாள். விசாலம் மனதில் இனம் புரியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் குடி கொண்டது. கணவனின் அலட்சியமும் அதிகாரமும் அவளை ரொம்பவே பாதித்திருந்தது. எத்தனை வருடங்கள் கழித்து அவளுக்கு ஆறுதலும் அன்பும் கிடைக்கிறது மகளிடமிருந்து.! உமா புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாள்.
மூர்த்தி மகள் மேல் அளவில்லா அன்பு வைத்திருந்தான். அவனை யாராவது தட்டிக் கேட்க வேண்டுமென்றால் அது உமாவால் மட்டும் தான் முடியும். அவள் மனசு உருகியது. மகள் தட்டிக் கேட்பாள் என்ற தைரியம் வந்தது. இனிமேல் மூர்த்தி அவளை கிள்ளுக்கீரையா நினைத்து அலட்சியப்படுத்த முடியாது. இந்த நாளுக்குத் தான் ஏக்கத்துடன் காத்திருந்தாள் விசாலம். ஏதோ பரிசு கிடைத்தது போல் இருந்தது. இனி மூர்த்தி திருந்தி விடுவதற்குறிய வாய்ப்பு தெரிந்தது. மாத்திரையை விழுங்கி விட்டு நிம்மதியாக தூங்கினாள். மாலை கல்பனா ஃபோன் செய்தாள்.
“அக்கா…. உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு.? உமா சொன்னா. நல்லா ரெஸ்ட் எடு. வந்து பார்க்கணும்னு நினைக்கிறேன். ஆனா அத்தான்..” என்று இழுத்தாள். விசாலம் பெருமூச்சு விட்டாள்.
“நீ விசாரிச்சதே போதுமடி. இவர் குணம் தான் தெரிஞ்ச விஷயமாச்சே. உனக்கு ஒண்ணு தெரியுமா கல்பனா.? உமா தன் அப்பாவிடம் எனக்காக பரிந்து பேசினாள். மகளை அவரால் எதிர்க்க முடியலை.” அக்காவின் குரலில் தென்பட்ட சந்தோஷம் கல்பனாவை ஆச்சர்யப்படுத்தியது.
“அக்கா…. கேட்கவே சந்தோஷமா இருக்கு. உமாவுக்கு நல்லது கேட்டது புரிய ஆரம்பிச்சிடுச்சு. இனிமே நீ ராசாத்தி மாதிரி இருப்பே.” இருவரும் மகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்கள். இருவருக்கும் மனசு லேசாயிற்று. விசாலம் திருப்தி அடைந்தாள்.
அம்மா கூப்பிட்டாள்….
“என்னடி விசாலம் உடம்பு முடியலையா.? பேத்தி ஃபோன் பண்ணினா. உன் மேலே அக்கறையும் பரிவும் வந்திடுச்சி அவளுக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு.” பரிவுடன் விசாரித்ததில் விசாலம் தெம்படைந்தாள். ஜுரம் வந்தது நல்லதுக்கு தான் போலிருக்கே.!
மூர்த்தி மாலை வந்தான். வழக்கம் போல் ஏடா கூடமாக பேசாமல்….
“எப்படி இருக்கே.? மாத்திரை சாப்பிட்டியா.?” என்று அக்கறையாக கேட்டான். விசாலத்துக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“இப்ப பரவாயில்ல.” என்று விசாலம் முகம் மலர்ந்தாள்.
கல்பனா டி. வியை ஆன் பண்ணியிருந்தாள். ஏதோ ஒரு தொடர் ஓடிக் கொண்டிருந்ததே தவிர, மனசு பூராவும் கிருபாகரன் ஞயாபகமாகவே இருந்தது. அவன் சிரித்தது, ஜோக் அடித்தது. கடைசியில் நெகிழ்ந்து பேசியது என்று ஒவ்வொன்றாக மனதுள் திரும்ப திரும்ப சிந்தித்து பார்த்தாள். தித்தித்தது. அவனை உடனே பார்க்க வேண்டும் போல் ஆவல் முட்டிற்று. மனசெல்லாம் ரோஜாப்பூ வாசம் வந்துவிட்டிருந்தது.
கிருபா உங்களுக்கு தெரியுமா.? நீங்க என்னை மலரச் செய்து விட்டீர்களே. வாழ்வதன் உன்னதத்தை புரிய வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு நான் வெறும் நட்புடையவளாக இருக்கலாம். ஆனால் எனக்கு நீங்கள்…. இவள் இப்படி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஜானகி ஃபோன் செய்தாள்.
“கல்பனா…. இன்னிக்கு லீவு தானே வாயேன் வீட்டுக்கு.”
“இல்லம்மா. துணிகள் எல்லாம் துவைக்கணும். அயர்ன் பண்ணனும் வேலைகள் இருக்கு.”
“இது ஒரு காரணமா.? நாம சித்திரை பொருட்காட்சிக்குப் போலாமா.? ப்ளீஸ்.” கெஞ்சுகிறாள் முதியவள்.
ஜானகி பிரியத்துடன் கேட்கவும் கல்பனா மனதில் நெகிழ்ச்சியான மலர்ச்சி ஏற்பட்டது. அவளுக்கு அதற்கு மேல் மறுக்க மனமில்லை.
“அப்பாடா…. உடனே கிளம்பு. கிருபாகரன் வரேன்னு சொல்லியிருக்கான். எப்பபார் நோயாளிகளை கட்டி அழுதிட்டு…. அவனுக்கும் மனம் ரிலாக்சாக வேண்டாமா.? சீக்கிரம் வா….”
“சரிம்மா….” கல்பனா மேக மண்டலத்தில் சஞ்சரித்தாள். இன்று பூராவும் கிருபாகரனுடன் செலவழிக்கப் போகிறான். ஓ…. என்ன ஒரு சர்ப்ரைஸ்.! வானவில்லை மனசுக்குள் பார்த்தாள் கல்பனா. அந்த மென்மையான கண்களின் சிறைக்குள் அகப்படப்போகிறான். தேங்காய் உடைத்ததும் தெரியும் வெண்மையான அவன் சிரிப்பை அலுக்க அலுக்க பார்க்கலாம். மடமடவென்று கை வேலைகளை முடிதூக்க கொண்டு கிளம்பினாள். கண்ணுக்கு குளிர்ச்சியான ரோஜா வண்ணப் புடவை அணிந்து கொண்டாள். அட…. என்றைக்கும் இல்லாத புது அழகுடன் தான் பளிச்சிடுவதை உணர்ந்தாள்.
தன் நகைப்பெட்டியை எடுத்தாள். நேபாளத்தில் இருந்து வாங்கி வந்த இளம் ரோஜா கிரிஸ்டல் மாலை அணிந்து கொண்டாள். ரோஜா வண்ண ஆர்டின் வடிவ தோடுகள். ரோஜா நிற மணிகள் பதித்த இரண்டு வளையல்கள் ரைட். போகிற வழியில் பூ வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஏய்…. கிருபாகர் உனக்காகவே பார்த்து பார்த்து அலங்காரம் பண்ணியிருக்கேன்டா. ஸோ நைஸ் அப்படின்னாவது நீ சொல்லணும். இல்ல தொலைச்சிடுவேன்.. என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். செல் கூப்பிட்டது.
“என்ன கல்பனா…. கிளம்பிட்டியா.?”
“இதோ…. வீட்டை பூட்டிட்டிருக்கேன். வந்திடுவேன் மா.” ஜானகிக்கு பதில் சொல்லிவிட்டு உற்சாகத்துடன் கிளம்பினாள். பஸ் ஸ்டாப்பை அடைந்தபோது கிருபாகரனின் கார், அவள் அருகே நின்றது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டு “கம் ஆன் கெட் இன்.” என்றான் கிருபாகரன். அவளுக்கு வியப்பாக இருந்தது. இவன் எங்க அதற்குள்.?
“அட…… ஏறுங்க சீக்கிரம் பின்னாலேயே பஸ் வந்திடப் போவுது. பஸ் ஸ்டாப்பில் காரை நிப்பாட்டி இருக்கேன்..” அவசரப்படுத்தினான். ஏறிக் கொண்டாள். அவனருகில் உட்கார்ந்த போது அவள் தன்னை ஒரு ராணி போல் உணர்ந்தாள். அவள் முகமே புன்னகைத்தது.
“முடியலையே. சொன்னால் துக்கம். சொல்லாவிட்டால் நோ துக்கம்.”
“இது வேலைக்கு ஆகாது. வண்டியை ஓட்டுங்க. பரலோகம் அனுப்பிடாதீங்க. நான் இப்பவே போகத் தயாரா இல்லே. காளவாசல் தாண்டி கார் விரைந்தது. சின்ன சொக்கிகுளம் நோக்கி விரைந்தது.
“அம்மா தான் உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னங்க.”
“ஏன்.? இல்லாட்டி நான் வராம போயிடுவேனா.? அப்ப என்னை நம்பலை. போங்க நீங்க. உங்க கூட பேசப் போவதில்லை…”
“சிணுங்காதே தாயே. நீ வரேன் வரேன்னு ஜூட் விட்டிட்டேனா.?”
“அப்ப என்னை சிறை பிடித்துப் போறீங்க….”
“எஸ்…. சிறை வைக்க ஆசை தான். உன்னை என் அம்மாவின் பாசச் சிறையில் அடைக்க ஆசை.” என்றான் அன்புடன். தனக்கு
இன்னொரு அம்மா கிடைத்தது குறித்து அவள் உள்ளம் சிறகடித்தது.