அத்தியாயம் 2

நிஜங்களை புரியாத நிழல்கள் வாய்க்கு வந்தபடி பேசத்தான் செய்யும். கல்பனா அவர்களை நெருப்பாக பார்த்தாள்.

“பெண்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாக இருக்கறதுக்கு டைவர்ஸ் பண்ணனுமா என்ன.? இதோ சுதந்திரமா உக்காந்து என் காதுபட தப்புத்தப்பாய் வாயில் வந்ததையெல்லாம் வம்பு பேசறீங்களே…. நீங்க என்ன டைவர்ஸ் பண்ணிட்டா வந்திருக்கீங்க.? டைவர்ஸ்ங்கறது வலி. அதை அனுபவிக்கிற கடைசிப் பெண்ணா இந்த உலகத்தில் நான் இருக்கணும்னு இந்த மீனாட்சி கிட்டே வேண்டிக்கிறேன். இப்படி புரளி பேசாம புத்தி தரச் சொல்லி வேண்டிக்கிட்டு வீடு போய்ச் சேருங்க. புரியுதா.? நாக்கை அடக்க பழகிக்குங்க. புருஷனுக்கு அடங்கி வாழற லட்சணம் தான் தெரியுதே…. டைவர்ஸ் பண்ணனும்னா நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.? அறிவிலிகள்…. அடிக்காம விடறேன். தப்பிச்சுப் போங்க….” அவள் கண்ணில் நேர்மையுடன் பேச. பயந்தார்கள். அவள் கொடுத்த சூடு அவர்கள் போலித்தனத்தை பொசுக்கியது.

கோவில் வெளி மண்டபத்தில் பளபளத்த கடை ஒன்றில் நுழைந்த போது சின்னப் பெண் போல உற்சாகம் தளும்பிற்று. மணிமாலைகள். வளையல்கள்…. டிசைன் டிசைனாக தோடுகள் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வெளியே வந்தாள். நேற்று பெய்த மழையில் ஆங்காங்கே மழை நீர். ஆட்டோவில் போகலாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையில், ராக்கெட் ராஜா போல் சீறிக்கொண்டு வந்த பைக் மன்னன் ஒருவன் அவள் மேல் சந்தனக் காப்பு இடுவது போல் சகதிக் காப்பை தாராளமாக சிதறிவிட்டுப் போனான். ச்சே என்று நொந்தாள்.

“அடப்பாவி…. புடவை நாசமாவது கூட பரவாயில்லை. இப்படி முகமெல்லாம் சேறாக்கிட்டுப் போயிட்டானே. கட்டையிலே போறவன்…. கண் மண் தெரியுமா ஓட்டறானுங்க….” அங்கலாய்த்த ஒரு பாட்டியம்மா தன் பெட் பாட்டிலில் இருந்த நீரை அவளுக்குக் கொட்டுத்து முகம் கழுவ வைத்தாள். முடிந்தவரை புடவையில் அப்பியிருந்த சேற்றை நீர் தெளித்து துடைத்து விட்டாள்.

“தேங்க்ஸ் பாட்டி.” நெகிழ்ந்தாள் கல்பனா.

“புடவையெல்லாம் நாசமாயிடுச்சே…. ஆட்டோ பிடிக்கலாம்னா, இது ஒன்வே டிராபிக். வா இந்த தெருமுனை நடந்து போனா அங்கே ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு.” நடந்தாள் கல்பனா. பாட்டி அன்புடன் கூடவே நடந்தாள்.

இதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு நவநாகரிக வாலிபன் அவர்கள் அருகே வந்தான். அணிந்திருந்த கூலிங்க கிளாசை ஸ்டைலாக கழற்றி “வான்ட் எனி ஹெல்ப்.? மை கார் இஸ் வெயிட்டிங்…. கம்.” என்றான்.

“என்னடா.? எப்படி இருக்கு உடம்பு.? எவ திண்டாடிட்டு நிப்பா.. உடனே போய் ஹெல்ப் என்ற பெயரில் சைட் அடிச்சு….”

“ஹலோ…. பாவம் சேத்த பூசிட்டு நிக்றீங்களே…. காரில் வீடு வரை கொண்டு விடலாம்ன்னு பார்த்தா ஏதோ வில்லன் மாதிரி பார்க்கறீங்க. நல்லதுக்கு காலமில்ல. அதோ நிக்குது என் கார். எங்கம்மா தான் டேய் அந்தப் பொண்ணு பாவம் சேறு பூசிய கோலத்தோட நிக்கறா. போய் கூட்டிட்டு வா. காரில் டிராப் பண்ணிடலாம்ன்னு இரக்கமா சொன்னாங்க. பாவம்ன்னு…. “

“நல்லதா போச்சு தம்பி. போம்மா. அதான் காரில் அந்தம்மா எட்டிப் பார்க்கறாங்களே. தைரியமா போ கண்ணு. இப்படி கோலத்தோட பஸ்சில் ஏற முடியுமா.? ஆட்டோ ஒண்ணையும் காணும்.” பாட்டி பச்சைக் கொடி காட்ட, கல்பனா சம்மதமாக தலையாட்டினாள்.

ஒரு அம்மா காரில்இருந்து அவளைபணபார்த்து கை அசைத்து வா என்றாள். அதைப் பார்த்து தைரியம் அடைந்தவளாக சரி என்றாள். அவன் திடீரென சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிறீங்க.? என் கோலம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா.?”

“ஸாரி…. அதில்ல. நீங்க வாங்க.” அவள் சுருள் முடியும், வசீகரச் சிரிப்பும், கம்பீர தோற்றமும் அவள் இதயத்தை அசைத்தது. அவனை குறுகுறுப்புடன் பின் தொடர்ந்தாள்.

கார் கதவைத் திறந்து விட்டாள் அம்மா. ஒரு நேசக் கதவை திறந்து விட்டது போல் இருந்தது.

“ஏறிக்கோடி பெண்ணே. நான் தான் என் பையனை அனுப்பி உன்னை அழைச்சிட்டு வரச் சொன்னேன். புடவையெல்லாம் நாசமாயிடுச்சே.”

“தாங்க்ஸ் மா. யாரோ திண்டாடிட்டுப் போறாங்கன் நமக்கென்னன்னு நினைக்காம அக்கறையோடு நடந்துக்கறது பெரிய விஷயம்.!” என்றாள் நன்றியுடன்.

அந்த அம்மாளைப் பார்த்த மாத்திரத்திலே அவளுக்குப் பிடித்துவிட்டது. மனிதர்களை தோழமையுடன் வரவேற்கிற உயிர்ப்பான கண்கள் அவளை சகஜமாக பேச வைத்தது.

“கிளம்பேன் டா. பஸ்சா ஓட்டற.? ரைட் கொடுக்கட்டும்னு உக்காந்திருக்கே.” மகனை கிண்டலடித்தாள்.

“மேடம் வீடு எங்கேன்னு சொன்னா நேரா அங்கே வண்டியை திருப்பிடுவேன். அந்த சைன்னுக்குத் தான் காத்திட்டு இருந்தேன்.”

“கோச்சடை….” தெரு பெயரும் சொன்னான். போக்குவரத்தை சமாளித்து கல்பனாவை அவள் வீட்டு முன் கொண்டு விட அரை மணி ஆகிவிட்டது. கல்பனா இறங்கிக் கொண்டாள்.

“தாங்க்ஸ் மா….உள்ளே வாங்களேன் ஜூஸ்….”

“மணி மதியம் ஒண்ணு. இந்நேரத்திலே ஜூஸ் எதுக்கும் மா.? வேண்டாம். இந்தா என் பையனோட விசிட்டிங் காரட். பின்னாலே என் மொபைல் நம்பர் இருக்கு. நீ அவசியம் ஒரு நாள் வீட்டுக்கு வரணும். உன் பேர்.?”

“கல்பனா. அவசியம் வரேன் மா.” என்றபடி விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டாள்.

“வண்டி ஓட்டிட்டு வந்தேனே. எனக்கு தாங்க்ஸ் கிடையாதா.?”

“தாங்க்ஸ் சார்….”

“சார் எல்லாம் எதுக்கு.? என் பேர் கிருபாகரன் சன் ஆப் ஜானகி.” அவன் சிரித்தான். கல்பனா கையசைத்து விடை கொடுக்க அவன் கார் வழுக்கிக் கொண்டு போயிற்று.

‘ஓவரா பல் வரிசை காட்டறானே…. பிஜு மாதிரி ஜொள்ளு பார்ட்டியோ.?’ என்று எண்ணினாள். ஆனால் அவன் சிரிப்பை மறக்க முடியவில்லை. ஏ.ஸி தட்டிவிட்டது போல் அவள் மனம் ஜில்லென்றிருந்தது. தன் போர்ஷனுக்கு போவதற்காக மாடி ஏறப் போனவளை மாமி குரல் தடுத்தது.

“கல்பனா…. உனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கு.” என்றாள் மாமி.

“போஸ்ட் பாக்சிலேயே இருந்தா நான் எடுத்துக்க மாட்டேனா.? உங்களுக்கெதுக்கு வீண் சிரமம்.?” என்றவள் ஞயாபகமாக து. பருப்பு பாக்கெட் எடுதூக்க அவளிடம் ஒப்படைக்க, மாமி முகம் மலர்ந்தாள். கடகடவென்று படியேறிப் போனவள் குளித்து…. சாப்பிட்டு அமர்ந்தாள். ஒரு குட்டி தூக்கம் போடலாமா.? என்று அவள் யோசிக்கையில் மொபைல் அடித்தது. ஒரு வேளை அந்தக் கோவில்காரனாக இருக்குமோ.? ச்சே…. அதெப்படி இருக்கும்.? அவள் நம்பரை அவள் கொடுக்கவே இல்லையே. பார்த்தாள்.. பிஜு.. இவனா.? “ஹலோ….” என்றாள் சாலிப்புடன்.

“மேடம் சொரூபாவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்..” படபடப்பாக ஒலித்தது அவன் குரல்.

“அய்யோ…. எப்படி அச்சு.?”

“ஸ்கூட்டியில் போகும் பொழுது சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும் இவள் கிளம்புவதற்குள், பின்னால் நின்றவன் அவசரப்பட்டு தரையில் ஊன்றியிருந்த இவள் வலது பாதம் மேல் தன் பைக்கை ஓடிச் சென்று விட…. இவள் கால் பன் மாதிரி வீங்கிவிட்டது. வலியில் துடிச்சிட்டா.”

“எந்த ஹாஸ்பிடல்.?” சொன்னான்.

“சரி…. அவசியம் மாலை வந்து பார்க்கிறேன்.”

“பாவம் சொரூபா. அவளுக்கு தேர்வு நெருங்குகிறது. படுத்து விட்டால் தேர்வு எழுதிய முடியாமல் போய்விடுமே….” வருத்தப்பட்டு சொன்னான். மனம் வருந்தியபடி கல்பனா சற்று ஓய்வாக கண்ணயர்ந்தாள். மறுபடியும் செல் கூப்பட்டது. எரிச்சலை அடக்கியபடி எடுத்தாள். பிஜு என்று நினைத்துக் கொண்டு….

“அதான் சாயங்காலம் வரேன்னு சொன்னேனே….”

“அட…. இந்தியாவில் இப்ப மூணு மணி. மாலை அஞ்சுக்குள் அமெரிக்கா வந்துவிடுவாயா.? எந்த பிளேன்.? அவ்வளவு பாஸ்ட்டா பறக்குது.” இந்தக் குரல் கேட்டு அவள் திடுக்கிட்டாள்.

“நீங்களா.? அதான் அத்து விட்டுட்டீங்களே…. நான் எதுக்கு அமெரிக்கா வரப் போறேன். இந்த உறவே மறந்து போச்சு.”

“பணம் வித்ட்றா பண்ண மட்டும் மறக்கலே போலிருக்கு.”

“மிஸ்டர் சுதாகர். தாங்க்ஸ் சொல்லி டெக்ஸ்ட் பண்ணியாச்சு. அத்தோடு நம் உறவும் முடிந்தது. அநியாயமா ஒரு பெண்ணோட வாழ்க்கையை கெடுத்ததுக்கு அபராதம் கட்டறீங்க. பணம் கொடுக்கிறதாலே நீங்க் செஞ்ச பாவம் குறைந்து போயிடாது. இன்னொரு குடும்பம் அமைச்சுக்கிட்டு அந்த மிருனாளினியோட சந்தோஷமா இருக்கலாம். ஆனா அடிமனசிலே நீங்க எனக்கு செஞ்ச துரோகம் உங்களை அலைக்கழிச்சிட்டு தான் இருக்கும்.”

“டியர்…. உனக்கு நான் வழிவிட்டிருக்கேன். அதை புரிஞ்சுக்க மாட்டேங்கற.?”

“நான் சந்தோஷமா நிம்மதியா தனியா இருக்கேன். இனிமே கூப்பிடாதீங்க. ஸ்டாப் டீஸிங் மீ.”

“உன் கோபம் புரியுது பேபி. என் துரோகத்தையே நினைச்சு தப்பு கணக்கு போடாதே. நமக்குள்ளே முதலிரவே நடக்கலையே. நீ ப்ரீ தானே.? ஜோடியாக இருப்பேன்னு நினைச்சேன்.”

“முதலிரவு நடக்கலை. அதை யார் நம்புவா.? ஆனானப்பட்ட ராமரே சீதையை தீக்குளிக்க வச்சது வரலாறு.! என்னை நம்பப் போகிறார்களா.? கெட் லாஸ்ட்.” தொடர்பை துண்டித்தாள். கொதித்த மனதை மெல்ல மெல்ல அடக்கி சற்று கண்ணயர்ந்தாள்.

பகல் கனவு வந்தது. அதில் அவளை கவர்ந்த அந்த வாலிபனின் சிரிப்பு வந்தது. நெஞ்சில் ஈர மழை பொழிந்தது போல் இருந்தது. சட்டென்று விழித்துக் கொண்டாள். வேர்வை அவள் நெற்றியில் முத்து முத்தாக கோர்த்து கொண்டது. ச்சே என்ன ஒரு நினைப்பு. இதுவரை அவள் எந்த ஆணும் அவளை ஈரத்ததில்லை.

சுதாகர் செய்த துரோகத்தை கண்ட பின் எந்த ஆண் மேலும் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

எத்தனை எத்தனை கனவுகளுடன் அவள் அவன் கரம் பிடித்தாள்.? கல்யாணம் பண்ணியும் அவள் கன்னியாக விட்டுவிட்டு அமெரிக்கா சென்று வேறு ஒரு பெண்ணுடன் ஜாலியாக வாழ்கிறான்.

அவன் செய்த ஒரே நல்ல நேர்மையான செயல் அவளுக்கு மாசம் மாசம் பணம் அனுப்புவது தான். அந்த பணம் கொடுத்து விட்டால் போதும் எல்லா தவறும் புதைந்து போய்விட்டதாக நினைக்கிறான்.

சே இவனைப் போய் நினைப்பானே.? எழுந்து கொண்டாள். சொரூபாவை பார்த்து விட்டு வரலாம் என்று கிளம்பினாள்.