அத்தியாயம் 17

கார்த்திக் திருமணமானதுமே அவளிடம், சென்னை சென்று அவர்களுக்கு வீடு இன்னும் மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன் என்றதில் அவள் வெகுவாக பயந்து போனாள்.

“பாவா! இங்க என்னைத் தனியா விட்டுட்டுப் போகாதீங்க பாவா! உங்கம்மா நம்மைப் பிரிச்சுருவாங்கன்னு எனக்கு பயம்மா இருக்கு”

அவனுக்கும் அந்த பயம் நெஞ்சின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது.

என்ன செய்வது என நண்பர்களைக் கலந்தாலோசிக்க, தேவையான பொருட்களுடனே வாடகைக்குக் கிடைக்கும் வீட்டைப் (fully furnished house) பார்க்கலாம் என யோசனை சொன்னவர்கள் அதையும் தாங்களே பார்த்து விடுவதாகவும் அவனை திருமணப் பதிவை மட்டும் சரியாக முடித்துக் கொண்டு வருமாறும் சொல்லி விட அவனுக்கும் அது சரியாகவே பட்டது.

எனவே செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தான்.

அன்று தாத்தா ஆட்டுக் குடல் எடுத்து வந்திருக்க அதை சுத்தம் செய்ய வேண்டியிருந்ததால் குழந்தையைக் கூடத்தில் விளையாட விட்டு விட்டு கார்த்திக்கை ஒரு பார்வை அவள் மேல் வைக்கச் சொல்லி விட்டு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள் தாரிணி.

அவனும் பத்திரிக்கையில் ஒரு கண்ணும் குழந்தையின் மீது ஒரு கண்ணுமாகத்தான் இருந்தான்.

ஆறு மாதங்கள் ஆகி விட்டிருந்ததில் நன்றாகத் தவழ ஆரம்பித்த குழந்தை சமையலறையில் இருந்து காற்றில் அடித்து வரப்பட்டு சுவரோரத்தில் கிடந்த பால் பாக்கெட்டை வாயில் வைத்துச் சப்ப ஆரம்பித்திருந்தது குழந்தையின் முதுகைப் பார்த்து அமர்ந்திருந்த கார்த்திக்கின் கண்களில் விழவில்லை. சும்மா உருண்டு கொண்டு கிடக்கிறாள் என நினைத்தவன் அவள் அந்தப் பாக்கெட்டில் ஒட்டிக் கொண்டிருந்த தூசு, அழுக்கு, முடி என அனைத்தையும் சப்பி முடிக்கும் வரை அதை உணரவில்லை.

குடலைக் கழுவி முடித்து விட்டு ஒரு எட்டுக் கூடத்துக்கு வந்து பார்த்தவளுக்கு சமையலறை வாசலில் இருந்து குழந்தை செய்து கொண்டிருப்பது நன்றாகவே கண்களில் பட பதறியடித்துக் கொண்டு வந்து குழந்தையைத் தூக்கி அதன் கையிலிருந்த பால் பாக்கெட்டைத் தூக்கி எறிந்ததோடு கணவனைக் கோபத்துடன் பார்த்தாள்.

அவள் அதிரடியில் ஒன்றும் புரியாமல் அவன் “என்னாச்சு தரும்மா? ஏன் இவ்வளவு கோபம்?”

“உங்களை பாப்பாவைப் பார்த்துக்கச் சொல்லிட்டுப் போனா அவ பாருங்க குப்பையை எடுத்து வாயில வச்சுருக்கா” என்றபடி சமையலறைக்குச் சென்றவள் நல்ல தண்ணீர் கொண்டு குழந்தையின் வாயை நன்றாக சுத்தப்படுத்த ப்ரவுன் நிறத்தில் வெளி வந்த அழுக்கு சொல்லியது என்ன நடந்ததென்று…தாரிணிக்குக் கண்கள் குளம் கட்டி விட்டன. தன் தமக்கையின் குழந்தையைத் தன் குழந்தை போல் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தவள் இத்தனை நாட்களில் இப்படி நேர விட்டதேயில்லை.

கார்த்திக்குக்கோ குற்ற உணர்வு மிக “சாரி தரும்மா…நான் பாப்பா அழுகாம விளையாடிட்டு இருக்காளேன்னு நினைச்சேனே ஒழிய இப்படி நடக்கும்னு நினைக்கல”

அன்று முழுவதும் அவள் கார்த்திக்கிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.

மதியம் நடந்த நிகழ்ச்சியின் தாக்கம் மாலையில் வெளிப்பட குழந்தை பச்சை பச்சையாக சீதமும் சில வேளை ரத்தமுமாகக் கழிய ஆரம்பித்தாள்.

கார்த்திக் அவசரமாகச் சென்று ஆட்டோ பிடித்து வர கொஞ்சம் தள்ளி இருந்த குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து மருந்துகள் வாங்கி வந்தனர்.

உணவு, உறக்கம் ஓய்வு என எல்லாவற்றையும் தள்ளி வைத்து விட்டு இரவு முழுவதும் குழந்தையுடன் போராடிக் கொண்டிருந்தவளைப் பார்க்கப் பார்க்கக் கார்த்திக்குக்கு சங்கடமாக இருந்தது.

குழந்தையைத் தோளில் போட்டுத் தூங்க வைத்துக் கொண்டிருந்தவள் அருகே சென்று அமர்ந்தவன் அவள் இன்னொரு தோளில் மெல்லத் தலை சாய்க்க அவளுடல் விறைத்தது.

அதை உணர்ந்தவன் மென்மையாய் அவளை அணைத்துக் கொண்டு “சாரி தரும்மா! இப்பிடி ஆகும்னு சத்தியமா நான் நினைச்சே பார்க்கல… குழந்தைகளை எல்லாம் நான் பக்கத்துல வச்சுப் பார்த்தது கூடக் கிடையாது. விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஹாஸ்டல்லதான் வளர்ந்தேன். ஏதோ சினிமா அது இதுன்னு பார்த்ததுதானே தவிர நான் முதல்ல தொட்டுத் தூக்கினது நம்ம பாப்பாவைத்தான்”

அவனது தன்னிலை விளக்கத்தில் அவளுடல் கொஞ்சம் தளர்ந்தது. வலது கையை உயர்த்தித் தன் தோளில் சாய்ந்திருந்தவன் கேசத்தை மென்மையாகக் கோதியவள் “விடுங்க பாவா! வேணும்னா செய்ஞ்சீங்க… ஏதோ நேரம் சரியில்ல” என்று அவனைத் தேற்ற முற்படவும் அவன் முகம் மலர்ந்தது.

எழுந்து குழந்தைக்காகக் கையை நீட்டியவன் “குடு! பாப்பாவை நான் வச்சுக்கிறேன்…கொஞ்ச நேரம் தூங்கு… ராத்திரி எல்லாம் ஒரு பொட்டுக் கண்ணை மூடல நீ”

அவன் கையில் குழந்தையைக் கொடுத்தவள் அவன் மடியிலேயே படுத்து ஒரு குட்டித் தூக்கம் போட்டெழுந்தாள்.

எழுந்தவள் குழந்தையை வாங்கிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் பதித்து நிமிர அவனோ அவளைத் தன்னை நோக்கி இழுத்து அவளிதழில் தன் இதழ்களைப் பதித்தான்.

“ம்ப்சு பாவா… விடுங்க பாவா… நான் பாப்பாவைத் தொட்டில்ல போட்டுட்டு சமையலைக் கவனிக்கணும்”

திருமணமான இந்த ஒரு வாரத்தில் முதல் நாளிரவுதான் அவளைத் தீண்டாமல் இருந்திருக்கிறான். அந்த தாபம் அவன் முகத்தில் தெரிய அவள் முகம் சிவந்தது.

“ம்ம்ம்…வேலையிருக்கு பாவா”

சிரித்துக் கொண்டே அவளை விட்டவன் பார்வை மாத்திரம் மாறவேயில்லை.

அன்று குழந்தையின் உடல் கொஞ்சம் தேறினாலும் உணவு உள்ளே செல்லச் செல்ல அவள் கழிந்து கொண்டேயிருக்க அன்றும் அவளுக்குத் தூங்கா இரவும் அவனுக்கு அவளைத் தீண்டா இரவுமாக ஆகிப் போனது.

மறுநாள் காலை விழிப்பு வந்ததும் கண்ணைத் திறக்காமல் பக்கத்தில் தடவி மனையாளைத் தேட அப்போதுதான் அவள் இரவு அவனருகில் வந்து படுக்கவேயில்லை என்பது உறைத்தது. கொஞ்சம் ஏமாற்றத்துடன் எழுந்தவனுக்குத் தன்னை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது.

எல்லா ஆண்களும் மனைவியிடம் இந்த அளவுக்கு மயங்கிக் கிடப்பார்களா இல்லை அவன் மட்டும் வித்யாசமாக இருக்கிறானா… மனதினுள் முளைத்த கேள்விக்கு பதிலை யாரிடம் கேட்பதெனத் தெரியவில்லை அவனுக்கு…

பெரியவர்கள் யாரிடமாவது கேட்டிருந்தால் இருபது வயதென்பது சீறும் பாம்பை அதன் வாலைப் பிடித்துச் சுழற்றி அடிக்கும் வயதென்றாலும் அந்த வயதில் மனதில் பக்குவமிருக்காது என்பதை அவனுக்குப் புரிய வைத்திருப்பார்கள்.

பரபரக்கும் உணர்வுகளை அடக்கி ஆளத் தெரியாமல் எந்நேரமும் மனதும் உடம்பும் ஒரு அலைப்புறுதலில் இருக்க, மனைவியைத் தன் கையணைவிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற துறுதுறுப்புடன் இருந்ததில் வேறு வேலைகளில் மனமே செல்வதில்லை அவனுக்கு…

அதிலும் அழகான, அம்சமான, அனுபவிக்க அத்தனை உரிமையும் உள்ள அப்சரஸ் போன்ற மனைவி அருகிலேயே வளைய வரும் போது மனதையும் உணர்வுகளையும் அடக்க வேண்டிய அவசியம் என்ன என்ற எண்ணமே அவனுக்கிருக்க அன்றைய இரவுக்காக ஆவலுடன் காத்திருந்தான்.

அன்றும் குழந்தையைத் தொட்டிலில் போட்டு விட்டு அந்தப் பக்கமாகவே ஒரு பாயைப் போட்டுத் தாரிணி படுக்க அவன் முகமே விழுந்து விட்டது.

“தரு!” குழந்தையை எழுப்பி விட்டு விடக் கூடாதே என மென்மையிலும் மென்மையாக அவன் அழைக்க அவளுக்குக் கேட்டதோ கேட்கவில்லையோ தெரியவில்லை ஆனால் அவள் திரும்பவில்லை.

பெருமூச்சுடன் கைகளைத் தலையின் அடியில் கோர்த்தவாறு மல்லார்ந்து படுத்தவன் கண்களை மூடித் தூங்க முயன்றான்.ஆனால் தூக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்தது. மனையாளைப் பார்வையால் பருகிக் கொண்டாவது படுக்கலாம் என் ஒருக்களித்துப் படுக்க விடிவிளக்கின் ஒளியில் கோட்டோவியமாகத் தெரிந்த அவள் வரிவடிவம் அவன் தாபத்தை மேலும் கிளறி விட கொஞ்சம் சத்தமாக உச்சுக் கொட்டியவன் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

தாரிணி அவன் அவஸ்தையை உணர்ந்துதான் இருந்தாள். ஆனாலும் பகல் முழுவதும் குழந்தையைப் பார்த்துக் கொண்டதும் மற்ற வேலைகளும் சேர்த்து அவள் கண்களைச் சுழற்றி இழுக்க கணவனைக் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ள மனமில்லாமல் அப்படியே அசையாமல் கிடந்தவள் சில நிமிடங்களில் உறங்கியும் போய் விட்டாள்.

காலையில் அவன் எழுந்து வீட்டின் பின்புறம் சென்று முகம் கழுவி பல்துலக்கி என வேலைகளை முடித்துச் சமையலறைக்குச் செல்ல இடுப்பில் குழந்தையுடன் சமையலில் மும்முரமாக இருந்தவளை நெருங்க முடியாமல் கூடத்து நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

சில நிமிடங்களில் அவன் முன் ஆவி பறக்கக் காஃபி நீட்டப்பட மலர்ந்த முகத்துடன் அவள் முகம் பார்த்துச் சிரித்துக் கோப்பையை வாங்கிக் கொண்டான்.

அவள் உள்ளே செல்லத் திரும்ப,

“பாப்பாவுக்கு இப்ப எப்பிடி இருக்கு தரும்மா?”

“ம்ம்ம்…இப்ப பரவாயில்ல பாவா…இன்னிக்குக் காலைல இருந்து வெளிய போகாம வெறும் காத்து மட்டும் போகுது… அப்பிடிப் போனாலே முன்னேற்றம்தான்னு டாக்டர் சொன்னங்கள்ல”

“ஓ…சரிடா…நான் ஏதாவது உதவி செய்யவா?”

அவனை நோக்கிப் புன்னகைத்தவள் “இல்ல பாவா நான் பார்த்துக்கிறேன்” என்றவாறு மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளுக்குத் தெரியும் அவனுக்கு உதவும் ஆர்வம் இருந்தாலும் எதுவும் செய்யத் தெரியாது என்பது…முதல் நாள் இப்படித்தான் உதவி செய்கிறேன் என்று வந்து கத்தியைப் பிடிக்கத் தெரியாமல் காய்கறிகள் கையிலிருந்து நழுவிச் சென்று நல்லவேளையாக விரலை வெட்டிக் கொள்ளவில்லை. அதனால்தான் அவள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவனிடம் விட்டது… ஆனால் இப்போது அதையும் அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லத் தயக்கமாக இருந்தது.

வாசலில் வந்து நின்றவன் சற்று தள்ளி நரசையா நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான்…முதல் நாளும் இன்னும் இரு நாட்கள் முன்னும் கூட அவனைப் பார்த்த ஞாபகம் வரவும் இவன் ஏன் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறான் என நினைத்துக் கொண்டவன் செருப்பைப் போட்டுக் கொண்டு தோட்டத்தில் சுற்றி வரலானான்.

அன்றிரவு அவனைச் சோதித்தது போதும் என நினைத்தாளோ என்னவோ தாரிணியே குழந்தையைத் தொட்டிலில் போட்டு விட்டு அவனருகில் வந்து படுத்துக் கொண்டாள்.ஆவலாக அணைத்துக் கொண்டவனின் தேடல் முடிந்து அவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்க முற்பட “நான் அங்க பாப்பாகிட்டப் படுத்துகிறேன் பாவா… திடீர்னு நைட்டு அழுதான்னா நான் எழுந்து போனா உங்க தூக்கம் கெடும்” என்றவாறு எழுந்து உடைகளைத் திருத்திக் கொண்டு சென்றவளை அவன் ஏமாற்றமாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லவில்லை.

இப்படியாக மேலும் சில நாட்கள் கடந்திருக்க அன்றுடன் அவர்களுக்குத் திருமணமாகிப் பத்து நாட்கள் முடிந்திருந்தன.

காலை எழுந்து கொஞ்ச நேரத்திலேயே கார்த்திக்கின் நண்பன் ப்ரபாகரன் அவனுக்கு அலைபேசியில் அழைத்தான். அவன் நண்பர்களின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் சென்னையில் படித்த காரணத்தினாலும் அவனுக்குத் தமிழே இயல்பாக வரும் என்பதனாலும் அவனிடமும் அவன் இருக்குமிடத்திலும் தமிழிலேயே உரையாடுவார்கள்.

“என்னடா புதுமாப்பிள்ளை எப்பிடி இருக்கே?”

“நல்லா இருக்கேண்டா…நீ எப்பிடி இருக்கே”

“ம்ம்ம்…ஃபைன்ரா…அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன். உனக்கு ஃப்ளாட்லாம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாச்சு… நீங்க வர்ற தேதில இருந்து கணக்கு வச்சுக்குவாங்க”

“ஓ சூப்பர்டா” என்றவன் வீடு எந்த இடத்தில், வீட்டு வாடகை என்ன என்பது போல் மேலும் தனக்குத் தேவையான தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு திருப்தியானான்.

அவனுக்கென அவன் கல்லூரியில் படிக்கும் போதே வங்கியில் தனி கணக்குத் தொடங்கப்பட்டு அதில் கணிசமான பணமும் இருக்க அப்போதைக்கு அவன் பணம் குறித்துக் கவலை கொள்ளத் தேவை இல்லை…ஆனால் குந்தித் தின்றால் குன்றும் மாளும் இல்லையா… எனவே சென்னை சென்றதும் நல்லதாக ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவன் அது குறித்தும் நண்பனிடம் விவரம் கேட்டறிந்தான்.

“சரிடா! எல்லாம் ஓகே…நீ எப்போ அமெரிக்கா கிளம்புற?”

“ம்ம்ம்…அதைப் பத்திச் சொல்லவும்தான் கூப்பிட்டேன்… அடுத்த மண்டே எனக்கு யூஎஸ்க்கு ஃப்ளைட்…அதுனால இன்னிக்கு உங்க எல்லாருக்கும் என்னோட ட்ரீட்டு…மதியம் லன்ச் சாப்பிட்டுட்டு மூவி பார்த்துட்டு வரலாம் ரெடியாகு”

“அப்போ நீ சென்னைல இல்லையா?”

“நேத்து நைட்தாண்டா வீட்டுக்கு வந்தேன்…இப்பத்தான் ஒவ்வொருத்தருக்கா ஃபோன் செய்து சொல்லிட்டு இருக்கேன்…ஷார்ப் ட்வெல்வோ க்ளாக்…நான் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்…ரெடியா இரு”

“ஓகேடா டன்”

பேசி முடித்தவன் மனைவியைத் தேடிச் சென்றான். அப்போதுதான் குளித்து முடித்து வந்து தலை சீவிக் கொண்டிருந்தவள் பின்னே சென்று அணைத்துக் கொண்டான்.

“என்ன பாவா?”

“நம்ம ப்ரபா இல்ல…”

“ப்ரபா அண்ணாதானே… ம்ம்ம்… சொல்லுங்க”

“அவன் அடுத்த வாரம் ஸ்டேட்ஸ்க்குக் கிளம்புறானாம்… அதுனால இன்னிக்கு எல்லாருக்கும் ட்ரீட் தரேன்னு கூப்பிட்டிருக்கான்…நான் போய்ட்டு வரவா?”

அவன் கைவளைவுக்குள்ளாகவே திரும்பியவள் “இதுக்கு எதுக்கு பாவா சின்னப் பையன் மாதிரி எங்கிட்டப் பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கீங்க? போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே!”

“ம்ம்ம்…இல்லடா உன்னை விட்டுட்டு நான் மட்டும்…”

“அதுனால என்ன பாவா…நீங்க என்ன கூட்டிட்டுப் போக மாட்டேன்னா சொல்றீங்க…என்னாலதான் பாப்பா விட்டுட்டு வர முடியல…பாப்பா கொஞ்சம் பெரியவளாகட்டும். நாம மூணு பேரும் சேர்ந்தே போகலாம்”

“ம்ம்ம்…சரி…ஹோட்டல் போய்ட்டு அப்படியே மூவி போறதா ப்ளான்… அதுனால எனக்கு மதியம் சாப்பாடு வேண்டாம்” சொல்லிக் கொண்டே குனிந்தவன் வாய்ப்பை விடாமல் அவள் கழுத்து வளைவில் இதழ்களைப் பொருத்திக் கொள்ள அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி சிலிர்த்தாலும் அவனை அணைத்துக் கொண்டாள்.

சமையலறையில் இருந்து குக்கர் விசில் சப்தம் காதைப் பிளக்க அவனை விலக்க முயற்சித்தாள் பாவை. ஆனால் அவளை அணைத்திருந்தவனுக்கோ அந்த எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. அவள் அருகில் வந்தாலே அவன் உடல் அவன் வசமிருப்பதில்லை…அவன் உணர்வுகளும் அவன் மொழி கேட்பதில்லை.

அதுவும் பகல் நேரத்தில் எப்போதாவதுதான் இப்படி சமையலறையில் இல்லாமல் கையில் குழந்தையும் இல்லாமல் அவளைப் பிடிக்க முடியும் என்பதால் தன் உடல் மொத்தத்தையும் அவள் மீது சாய்த்து அவளை விலக்க மறுத்தானவன்.

இந்த இடைப்பட்ட நேரத்துக்குள் அடுத்த விசிலும் வந்து விட்டது.

“பாவா நான்…” அவள் வார்த்தைகள் அவள் இதழ்களுக்குள்ளே புதைந்து போகும்படி அவள் இதழ்களைத் தன் இதழ்களால் பூட்டியிருந்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் கைகள் அத்து மீற ஆரம்பிக்க கொஞ்சம் பலமாகவே அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாளவள்.

கொஞ்சம் தடுமாறித் தள்ளிப் போய் நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் சீற்றத்தைக் கண்டவள் பயந்துதான் போனாள்.

அதே நேரம் அடுத்த விசில் வர “பாவா…நான்…சாரி…குக்கர்…” என்று தடுமாறியவள் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் அண்மையில் பேயாட்டம் ஆடத் தொடங்கியிருந்த உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் வழி தெரியாமல் தவித்தவன் தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டு தன் துவாலையுடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவனை விலக்கித் தள்ளி விட்டு சமையலறைக்கு வந்து குக்கரை அமர்த்தியவளுக்கு உள்ளே இருந்த பருப்பு அடிப்பிடித்திருந்தது வாசனையிலேயே தெரிந்து விட சலிப்பாக இருந்தது. குக்கரை அடுப்பில் வைத்து விட்டு சில நாட்களாகவே கொண்டையாக மட்டும் போட்டுக் கொண்டிருந்த முடியைப் பின்னி விடலாம் என்று அறைக்கு வந்திருந்தாள். கார்த்திக் அவளை அணைத்த போது வந்ததே நாலாவது விசில்… அவள் உடனே வந்து அணைத்திருந்தால் பருப்பு தீய்ந்து போயிராது…இப்போது இரட்டை வேலை அவளுக்கு… குக்கரை அப்படியே தூக்கிக் கழுவுமிடத்தில் போட்டவள் மீண்டும் பருப்பை ஊற வைத்தாள்.

கணவனும் வெளியே சாப்பிடுவதால் வெறும் ரசம் போதும் எனத் தீர்மானித்தாலும் குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்திருந்த நிலையில் தாய்ப்பாலும் இல்லையென்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி இரண்டு நாட்களாகத்தான் பருப்பு சாதம் ஊட்ட ஆரம்பித்திருந்தாள்.

குழந்தைக்காகவாவது பருப்பு வைக்க வேண்டும் என்பதால் இன்னொரு பாத்திரத்தில் பருப்பைக் கழுவி ஊற வைத்தவளின் மனதில் கணவன் மீது கோபமே எஞ்சி இருந்தது.

இரவு அவன் விருப்பத்துக்கு வளைந்து கொடுத்தாள்தானே… பின் பகலிலாவது அவளைச் சும்மா விட்டால் என்ன… ‘எந்த நேரமும் இதே  நினைப்பு இதே வேலை’ என மனதுக்குள் எண்ணிக் கொண்டவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

வந்து உணவுண்ண அமர்ந்தவனும் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. வார்த்தைப் பரிமாற்றம் எதுவும் இல்லாமல் காலை உணவு முடிய கொஞ்ச நேரம் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவன் பத்து மணிக்கெல்லாம் “நான் கிளம்புறேன்” என்று அவளிடம் பேருக்குச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.

அவன் சொல்லிச் சென்ற விதத்தில் விட்டேற்றியாகத் தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தவளுக்கு தான் முதல் முதலாகக் கணவனின் கோப முகத்தை அன்று பார்க்கப் போகிறோம் என்பது தெரியவில்லை.

சுகமே நினைத்து சுயம்வரம் தேடி
சுழல் மேல் தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ அன்பு வழி சேருமோ
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
அன்னை மனம் ஏங்கும் தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தைக் கேளடா