“அச்சுதா நீ இப்படி அமைதியா இருக்கிறது எனக்கு சரியா படல…” என்று நீலவேணி பேச,
“ம்மா..!” என்றான் அயர்வாய்.
“என்னடா ம்மா.. அர்ச்சனா அவங்க வீட்டுக்கு போய் ரெண்டு நாள் ஆச்சு.. நீ போயும் பாக்கல.. கூட்டிட்டு வாடா அப்படின்னாலும் அமைதியா இருக்க…” என்று நீலவேணி சத்தம் போட,
“நான் போகச் சொன்னேனா? சொல்லுங்கம்மா நான் போகச் சொன்னேனா? அப்பா அம்மாவோட இருக்கனும் போல இருக்குன்னு அவளாதானே கிளம்பி போனா. ஏன் அவளே வந்தா வேண்டாம்னு சொல்வோமா? என்னம்மா இது..?” என்று பேச,
“அவளா தான் போனா. ஆனா நீயும் அவளும் சத்தம் போட்டுக்கிட்டீங்க. அதனால தான் சங்கடப்பட்டு பெத்தவங்களோட இருந்துட்டு வர்றேன்னு போயிட்டா. நீ போய் சமாதானம் பண்ணா குறைஞ்சா போயிடுவ..” என்றார்.
“ம்மா..! இதெல்லாம் டூ மச்.. நான் என்ன தப்பு செஞ்சேன்…” என்று அச்சுதன் பேச,
“அப்போ.. அவளும் தான் என்னடா தப்பு செஞ்சா?!” என்று திரும்பக் கேட்க, நீலவேணியை ஒரு பார்வை பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் அறைக்குள் வர, அறையே வெறிச்சோடி இருந்தது.
இந்த இரண்டு நாட்களாய் அவர்களின் அறை இப்படி அமைதியாகவே தான் இருந்தது. அர்ச்சனா இருந்தால், ஏதேனும் பேசிக்கொண்டு இருப்பாள். இல்லையா அவளுக்கு பிடித்த பாடல் ஏதேனும் ஒலித்துக்கொண்டு இருக்கும். அப்படியும் இல்லையா எதையாவது முணுமுணுத்துக்கொண்டு இருப்பாள்.
அவள் அறையினில் இல்லை என்றாலும் கூட, அவளது இருப்பை ஏதேனும் ஒரு விஷயம் காட்டிக்கொடுக்கும்.
இப்போதோ அவர்களின் அறை அப்படியொரு அமைதியை சூடிக்கொண்டு இருக்க, அவள் இல்லாமல் அவனுக்குமே இந்த இரு தினங்களாய் கஷ்டமாய் தான் இருக்கிறது. ஆனாலும் புரிந்துகொள்ளாமல் அவளாக கிளம்பிப் போனால், அவனும் தான் என்ன செய்ய முடியும் என்று இப்படித்தான் அச்சுதனும் நினைத்தான்.
“நீங்க என்ன சொன்னாலும், அவங்க பேசினது தப்பு தான் அச்சத்தான்… அதுவும் எப்போடான்னு இருந்தோமாம்..” என்று அர்ச்சனா திரும்பச் சொல்ல,
“ஆனா இதெல்லாம் ஆரம்பத்திலேயே ஸ்டாப் பண்ணிடனும்..” என்று அர்ச்சனா பேச,
“எத்தனை பேரை நீ போய் ஸ்டாப் பண்ணுவ.. இங்க பாரு அர்ச்சனா.. இப்படியான பேச்சுக்கள் எல்லாம் பேசணும்னு நினைச்சா யார்னாலும் பேசுவாங்க தான். போற வர்ற இடத்துல எல்லார் கூடவும் போய் சண்டை போடுவியா நீ?” என்று அவனும், அவனது வாதத்திலேயே நிற்க,
என்ன சொன்னாலும் இவன் புரிந்துகொள்ளமாட்டானா என்பதுபோல பார்த்தவள் “கொஞ்சம் என்னோட இடத்துல இருந்து யோசிங்க அச்சத்தான்..” என்று பேச,
அவனோ இறங்கி வராத கோபத்தில் இருந்தவன் “அத்தனை சொல்றேன்.. நீயும் அங்க பதிலுக்கு பதில் பேசிட்டு நிக்கிற.. என்ன சொன்ன நீ, உன்னோட இடத்துல இருந்து யோசிக்கனுமா? அப்படி யோசிச்சதுனால தான் நம்மளோட இந்த கல்யாணமே நடந்திருக்கு…” என்று பேச, வெகுவாய் அடிபட்டு போனாள் அர்ச்சனா.
அதிர்ந்து ஒரு பார்வை அவனிடம் செலுத்த, அவ்வளவு தான் அடுத்து ஒன்றும் பேசவில்லை.
ஒன்றுமே பேசவில்லை அவள்.
மனது இப்போது அச்சுதனின் வார்த்தைகளில் தான் அதிகம் காயம் பட்டுப்போனது.
எனக்காக யோசித்து, என்னிடத்தில் இருந்து யோசித்ததால் தான் இந்த திருமணமா?!
அப்போ அவனுக்கு இதில் ஒன்றுமே இல்லையா என்ன?!
அவனை பேசுகிறார்கள் என்றுதானே அவளுக்கு கோபம் வந்ததே. அப்படியிருக்கையில் அச்சுதனின் இந்த வார்த்தைகள் அவளுக்கு பதில் பேசும் தெம்பினை மொத்தமாய் வாரி சுருட்டிக்கொண்டு விட்டது.
“டேய் என்னடா?!” என்று நீலவேணி மகனை கடிய,
“ம்மா என்னம்மா நீங்களும்.. என்னைப் பத்தி அவளுக்கு எல்லாம் தெரியும் தானே. யாரோ என்னவோ பேசிட்டு போறங்கன்னு விடாம, இவளும் பதிலுக்கு பதில் பேசிட்டு நிக்கிறா.. தேவையா நமக்கு. எத்தனை பேர் நின்னு பார்த்தாங்க தெரியுமா? என்ன சொன்னாலும் கொஞ்சம் கூட புரிஞ்சுக்கிறதே இல்லை…” என்று அச்சுதன் பேசிக்கொண்டு இருக்க,
“அதுக்காக இப்படி சத்தம் போடுவியா நீ?” என்றார் நீலவேணியும்.
“சத்தம் போடாம? சரின்னு ஒரு வார்த்தை வருதா வாய்ல..” எனும்போதே, அர்ச்சனா அறைவிட்டு வெளியே வந்தவள்,
நீலவேணியிடம் “அத்தை.. எனக்கு எங்க அப்பா அம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. இன்னும் மூணு நாள்ல அவங்க வெட்டிங் டே வேற வருது.. அவங்களோட இருக்கணும் போல இருக்கு. போயிட்டு வர்றேன்…” என்றவள் கிளம்பிவிட,
அச்சுதனுக்கு இது அடுத்த அதிர்வு தான்.
அவளையே பார்த்து நிற்க, நீலவேணியோ “ஏதாவது பேசு அச்சுதா…” என்று மகனை சொல்ல,
அச்சுதனோ “என்ன இது?” என்பதுபோலத்தான் பார்த்தான்.
ஆனால் அர்ச்சனா அவனைத் திரும்பிப் பார்த்தால் தானே. விடுவிடுவென கிளம்பி, காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து இப்படித்தான் அச்சுதன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம், நீலவேணியும் அவனுடன் சண்டை பிடிக்க, அவனுக்கு ‘இதென்ன பழக்கம் கோபித்துக்கொண்டு போவது…’ என்று அதுவும் ஒரு கோபம் கூடிக்கொண்டது.
‘அவளாதானே போனா.. அவளே வரட்டும்…’ என்று இருக்க, பிறந்த வீடு சென்ற அர்ச்சனாவோ, அங்கே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
ரோஜா கேள்வியை பார்த்தமைக்கு கூட “ம்மா என்னவோ உன்னோட இருக்கணும் போல இருக்கு. அப்பாவை டெய்லி கம்பனில பாக்குறேன்..” என,
“அச்சுதன் ஒன்னும் சொல்லலையா?!” என்று கேட்க,
“அவர் என்ன சொல்லப் போறார்…” என்றுவிட்டாள்.
ரோஜாவும் இதனை இயல்பாய் எடுத்துகொள்ள, மறுநாள் அர்ச்சனா தந்தையோடு அவரின் கம்பனிக்கு கூட செல்லவில்லை.
“என்ன அர்ச்சு…” என்று கார்மேகம் கேட்க,
“அம்மாவோட இருக்கேனே…” என்று சொல்ல,
ரோஜாவும் “என்னோட இருக்கணும்னு வந்திருக்கா. இருக்கட்டுமே…” என்றுவிட, அர்ச்சனா அங்கே தான் இருந்தாள்.
இரண்டு நாட்களில் மகள் கிளம்பிடுவாள் என்று எண்ணியிருக்க, அர்ச்சனா எதுவும் சொல்லாமல் இருப்பதும், மருமகன் இந்த இரண்டு நாட்களில் ஒருமுறை கூட இங்கே வராமல் இருப்பதும், ரோஜாவிற்கு சின்னதாய் மனதில் சந்தேகத்தை கொடுக்க,
அனிதாவிற்கு அழைத்து “அங்க எல்லாம் ஓகே தானே டி…” என்றார்.
“எல்லாம் ஓகே தான் ம்மா? ஏன் என்னாச்சு?” என்று கேட்க,
“இல்ல அர்ச்சு.. இங்க வந்து ரெண்டு நாள் ஆச்சு. என்னோட இருக்கணும்னு வந்தேன்னு சொன்னா. ஆனா அச்சுதன் ஒருதடவை கூட வரலை…” என்று சொல்ல,
“எனக்கு தெரிஞ்சு இல்லைம்மா. அப்படி ஏதாவது ஒண்ணுன்னா இங்க பெரியத்தை சொல்லிருப்பாங்க தானே…” என்றிட, ரோஜாவிற்கு மனது கொஞ்சம் சமாதானம் ஆனது.
நீலவேணி இதை யாரிடமும் சொல்லவில்லை. ஏற்கனவே இப்போது தான் பவஸ்ரீ பிரச்சனை வேறு முடிந்திருந்தது. இப்போது இப்படி என்று சொன்னால், எல்லாம் சேர்ந்து தான் அர்ச்சனா மனதை கோபம்கொள்ள செய்துவிட்டது என்று பேச்சு வரும்.
அதனால் யாரிடமும் எதுவும் சொல்லாமல் “அவங்கம்மாவோட இருந்துட்டு வர்றேன்னு போயிருக்கா…“ என்றுவிட்டார்.
அச்சுதனும் இரண்டு நாட்கள் விட்டுவிட்டான். அழைத்தும் பேசவில்லை. அமைதியாய் அவளே யோசிக்கட்டும் என்று இருக்க, அவளும் அழைக்காமல் விட்டுவிட ‘என்ன கொழுப்பு பாரேன்…’ என்று எண்ணிக்கொண்டவன் தான், தஞ்சைக்கு கிளம்பிச் சென்றது.
வீடு வந்ததுமே, நீலவேணி பிடித்துக்கொண்டார்.
இதோ நாளை மறுநாள், மாமனார் மாமியாரின் திருமண நாள். வீட்டில் சின்னதாய் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு சென்றுதான் ஆகவேண்டும். இவள் இப்படி முகம் திருப்பிக்கொண்டு இருந்தால் எப்படி என்று எண்ணாமல் இல்லை.
அதையெல்லாம் தாண்டி, அவனால் இந்த மூன்றாவது நாளை அவனது அறையில் தனிமையில் நகர்த்த முடியவில்லை.
‘டி.. அர்ச்சனா…’ என்று பல்லைக் கடிக்க, மனது ஒருநிலையாய் இல்லை.
உறக்கமும் வரவில்லை. அத்தனை பெரிய கட்டிலில் அவன்மட்டுமே உறங்குவது இப்போது சிரமமாய் தெரிந்தது. புரண்டு புரண்டு படுக்க, இதோ மனைவியின் வாசம் தலையணையில் தெரிய, எழுந்து அமர்ந்துகொண்டான்.
‘கொஞ்சம் என்னோட இடத்துல இருந்தும் யோசிங்க…’ என்று அவள் சொன்னது எல்லாம் மனதில் வந்துகொண்டே இருக்க, நிச்சயம் இப்படியான பேச்சுக்கள் யாருக்கும் சந்தோசம் கொடுக்காது தான். ஆனால் எத்தனை பேரிடம் இப்படி வம்புக்கு நிற்பது. கண்டுகொள்ளாமல் கடந்து வருவது தானே நமக்கு நல்லது என்பது தான் அவனின் வாதமாய் இருக்க,
என்னவோ அச்சுதனுக்கு அவளது இந்த மௌனமும் மனதை சங்கடப் படுத்தியது. அவனின் வார்த்தை தானே அவளை செல்ல வைத்தது என்று தோன்ற ‘இவ இருக்காளே..’ என்று தலையை அழுந்த கோதிவிட்டவன், நேரம் பார்க்க, இரவு பதினொன்று.
உறக்கம் வருவது போலவும் தெரியவில்லை.
அர்ச்சனாவிற்கே அழைத்து பார்ப்போமா என்று எண்ணியவன், அதையும் செய்ய, அவளோ அழைப்பை ஏற்கவில்லை. உறங்கியிருப்பாளோ என்று நினைக்க ‘அதெப்படி.. நான் தூங்காம புலம்பிட்டு இருக்கேன். இவ தூங்குவாளாம்மா?!’ என்று யோசிக்க,
‘கிளம்புடா அச்சுதா.. நீயும் வார்த்தையை விட்டுட்ட.. அவ உனக்காக எத்தனை தாங்கினா.. கடைசியில நீயும் இந்த கல்யாணம் பத்தி பேசலாமா?’ என்று அவனது மனசாட்சி எட்டிப் பார்க்க,
“நான் என்ன தப்பா பேசிட்டேன்..” என்று அப்போதும் அவன் நினைக்க,
‘தப்போ.. தப்பில்லையோ.. உன்னால சங்கடப்பட்டு போயிருக்கா.. நீ கூப்பிடலைன்னா, வேற யார் கூப்பிட முடியும். நீ சம்மதிச்சு தானே கல்யாணம் பண்ண…’ என்று அவனது மனசாட்சி சொன்னதை கேட்காமல் இருக்க முடியவில்லை.
அம்மாவிடம் அந்த கத்து கத்திவிட்டு உள்ளே வந்தவன், இப்போது அதுவும் இந்த நேரத்தில் கிளம்பிச் செல்வது என்றால் என்ன சொல்லிச் செல்ல?!
என்ன காரணம் சொல்வது என்று புரியாமல், வெளியில் எட்டிப்பார்க்க நீலவேணி அறையில் விளக்கொளி இருந்தது. ஏதேனும் படித்துக்கொண்டு இருப்பார் என்று நினைத்தவன், பின் வேகமாய் உடைமாற்றி
“ம்மா…” என்றான் வந்து.
“என்ன அச்சுதா…” என்று உள்ளிருந்தே நீலவேணி கேட்க,
“ம்மா…” என்றான் திரும்ப,
“ச்சே உன்னோட ரொம்ப தொல்லைடா…” என்று சலித்தபடி வந்தவர், மகன் உடைமாற்றி நிற்பதைப் பார்த்து கேள்வியாய் பார்க்க,
“அது.. அ.. அர்ச்சனா கால் பண்ணா.. நாளன்னைக்கு அவங்க அப்பா அம்மா வெட்டிங் பார்ட்டிக்கு போடலாம்னு வச்சிருந்த ட்ரெஸ் ஜ்வல் எல்லாம் இங்க இருக்காம். கொண்டு வந்து தர சொன்னா…” என்று கையில் ஒரு பையோடு மகன் நிற்பதைக் காண நீலவேணிக்கு சிரிப்பு அடக்கமாட்டாமல் வர,
“அர்ச்சனா உனக்கு கால் பண்ணி, ட்ரெஸ் ஜ்வல் எல்லாம் எடுத்துட்டு வர சொன்னாளா? அதுவும் இந்த நேரத்துலையா?” என்று கேட்க,
“ஆமா..” என்றான் அப்போதும் உம்மென்றே.
“ம்ம் அது நாளன்னைக்கு போடுறது தானே.. நாளைக்கு கூட கொண்டு போய் குடுத்துக்கலாம்.. நாளைக்கு நானே அங்க போகணும்னு தான் இருந்தேன். என்கிட்ட குடு.. நான் குடுத்துக்கிறேன். நீ ஏன் இத்தனை உர்ருன்னு கிளம்பிப் போகணும்…” என்று வேண்டுமென்றே பேச ,
“இதென்னாடா.. என் சம்பந்தி வீடு நான் போவேன் வருவேன்…” என்று நீலவேணி பேச,
“ஷ்..! அதெல்லாம் எனக்குத் தெரியாது.. கால் பண்ணி கேட்டா, கொண்டு போய் குடுத்துட்டு வர்றேன்…” என,
“ஓ! அப்போ வீட்டு சாவி எடுத்துட்டு போ.. ரிட்டன் நீயே கதவு திறந்து வந்துக்கோ…” என,
“ம்மா என்னம்மா?!” என்றான் எரிச்சல் தாங்காமல்.
“என்னடா குடுத்துட்டு வர்றேன்னு தானே சொன்ன… நான் எழுந்து வந்து கதவு திறக்கனுமா?” என,
“ஷ்..! இந்த நேரத்துல நான் திரும்ப டிரைவ் பண்ணி வர முடியுமா? ஏற்கனவே டயர்டா இருக்கு…” என்ற மகனை, கேலியாய் பார்த்தவர் “கிளம்பு கிளம்பு…” என்று சொல்ல,
அர்ஜூனுக்கு அழைத்து “அம்மா மட்டும் இருக்காங்க.. நீ வந்து இங்க படுத்துக்கோ…” என்று சொல்லிவிட்டு, அவன் வந்தபிறகு தான் அச்சுதன் கிளம்பிச் செல்ல,
“இந்த நேரத்துல எங்க போறான் அண்ணன்…” என்று அர்ஜூன் பெரியம்மாவிடம் கேட்க,
“ம்ம் லேடி அச்சுதனைப் பார்க்க போறான்…” என்று நீலவேணி குறும்பாய் சொல்ல,
“ஆனா ஒன்னு சொல்லணும் பெரிம்மா.. நம் வீட்டு மாமியார்கள் எல்லாம் நல்ல மாமியார்கள்…” என்று அர்ஜூன் கிண்டல் பேச,
“நேரமாச்சு வந்து தூங்கு வா…” என்றுவிட்டு போனார் நீலவேணி.
அச்சுதனுக்கோ இந்த நேரத்தில் மாமனார் வீட்டுக் கதவை தட்டுவதை எண்ணி சங்கடமாய் தான் இருந்தது. காரில் செல்லும் போதே, அர்ச்சனாவிற்கு அழைத்து அழைத்துப் பார்க்க, அவளோ எடுக்கவே இல்லை.
‘ரொம்ப பிடிவாதம்…’ என்று எண்ணியவன், கார்மேகத்திற்கு அழைத்து “அங்கதான் வர்றேன் மாமா…” என,
“நானும் ஒரு பார்ட்டின்னு போயிருந்தேன். இப்போதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அச்சுதன்…” என்று சொல்ல,
‘நல்லது…’ எண்ணியவன், காரை செலுத்த,
அங்கே அர்ச்சனாவும் அச்சுதனைத் தான் எண்ணிக்கொண்டு இருந்தாள்.
‘ஒருத்தி கிளம்பி வந்துட்டேனே.. என்னன்னு கூட கேட்கலை..இருக்கட்டும் இருக்கட்டும்…’ என்று நினைத்தவள் ஒருமுறை அலைபேசியை எடுத்துப் பார்த்திருந்தாள் தெரிந்திருக்கும்.
அவளோ அலைபேசியை கட்டிலில் வீசிவிட்டு, வீட்டு நீச்சல் குலத்தின் அருகே பீன் பேக் மேல் சாய்ந்து ஏதோ ஒரு ஆங்கில நாவலை படித்துக்கொண்டு இருக்க, மனது அதில் ஒன்றவில்லை.