கடலை தேடும் நதி

அத்தியாயம்.. 1

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம் தாண்டி, வலது பக்கம் திரும்பினால், கிராண்ட் சென்ட்ரல் கனரா வங்கி வந்துவிடும்.

என்ன ஒரு பன்னிரெண்டு நிமிட நடை. எல்லாம் எடுத்துக் கொண்டோமா என்று சரி பார்த்துக் கொண்டாள். ‘வங்கி பாஸ்புக் இருக்கு. செக்புக் இருக்கு’ கிரெடிட் காரட் கேஷ்.. ஓ. கே. எல்லாம் இருக்கு. ஒரு முறை தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். திருப்தி அடைந்தாள்.

“ம்…. நாட் பேட். இருபத்தெட்டு வயசுக்கு நீ அழகாத்தானிருக்கே. சரி பை கல்பனா….” என்று கண்ணாடி கல்பனாவிடம் விடை பெற்று தடதடவென்று படிகளில் இறங்கிய போது கீழ் போர்ஷன் மாமி முகம் காட்டினாள்.

“ஆபீஸ் கிளம்பிட்டியா கல்பனா.?”

“இன்னிக்கு லீவு மாமி. பாங்க் வேலையெல்லாம் இருக்கு.”

“ஒரு உபகாரம் பண்ணுவியா .?” வந்து மறிச்சிட்டு நிக்றா பாரு…. இனி தப்பிக்க முடியாது. அடுத்து வரும் 43அ பிடிக்க வேண்டியது தான்…. மாமி சரியான ஆள்.

“சொல்லுங்க மாமி….”

“வரும்போது ஒரு கிலோ துவரம்பருப்பு சூப்பர் மார்க்கெட்டிலே….”

“வாங்கிட்டு வரேன். இது ஒரு வேலையா.?” பதிலளித்து அவசர நடையாக தெருவில் இறங்கினாள்.

“சின்னப் பெண்ணாட்டாம் துள்ளாட்டம் தான் எந்நேரமும் பொறுப்பில்லாத கட்டை. அதான் புருஷனை கவலையில்லாம்

 டைவர்ஸ் பண்ணிட்டா.” என்று மாமி உள்ளே தன் கணவனிடம் சொல்வது விழுந்தது. சின்ன பெண்ணாட்டம் என்று மாமி எடை போட்டது நிஜம் தான் என்று சிரித்துக் கொண்டாள் கல்பனா.

எதுவும் நடக்காதது போல் மனதை புதுப்பித்துக் கொண்டு கன்னிப் பெண் போல் வளைய வருவது துக்கத்தை மறக்கத் தான் என்று மாமிக்கு மட்டும் அல்ல யாருக்குமே புரியப் போவதில்லை. அது மட்டும் அல்ல யாருக்குமே புரியப்போவதில்லை. சோகத்தில் மூழ்கி அழுமூஞ்சியாக தலையை குனிந்து கொண்டு தன் இரக்கத்துடன், கண்கள் கலங்க அவள் வாழ வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தால்…. அது அவளால் முடியாது. துள்ளி நடந்தால் வலி இல்லை என்று வாழ்ந்தால் இப்படித் தான் பேசுவார்கள்.

அம்மா அடிக்கடி சொல்வாள். நாமெல்லாம் தொட்டி மீன்கள்.   கடலில் சுதந்தரமாக திரியும் மீன்கள் போல் இல்லாமல் அக்வேரியத்தில் கண்ணாடி பேழைகள் தான் உலகம் என்று வாழும் மீன்களை எப்படி ஜனங்கள் வேடிக்கை பார்ப்பார்களோ அது போல்  நம்மை வேடிக்கை பார்ப்பார்கள்.

இந்தப் புலம்பலை கல்பனா இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விடுவிடுவாள். இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அழுதால்…. வாழவே முடியாது. வேடிக்கை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். அடுத்தவர்கள் பற்றியே தவறாக சிந்திக்கும் நபர்கள் நல்லதை கோணலாகத் தான் பார்ப்பார்கள்.

வங்கியில் நுழைந்து சுதாகர் பணம் அனுப்பி இருக்கானா என்று பாஸ் புக்கில் என்ட்ரி போட்டு சரி பார்த்தாள். அனுப்பி இருக்கிறான். கோர்ட் ஆர்டர். விவாகரத்தின் போது மாதம் பத்தாயிரம் அளவுக்கு மெயின்டனன்ஸ் கொடுக்க வேண்டும் என்று தீரப்பானது. அவன் அவளிடமிருந்து ஓடிவிட்டாலும் ரெண்டு ஆண்டுகளாக பணம் டான் டாண் என்று வந்துவிடுகிறது.

“தாங்யூ சுதாகர்….” என்று மெயிலில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நிமிர்ந்தாள். அவள் கண் எதிரே இது யாரு.?

“ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க.?”

“நீ….” தயங்கினாள்.

“நான் தான் பிஜு. மறந்திட்டீங்களா.? எப்படி இருக்கீங்க.?”

“ஓ…. பிஜு நீயா.? நல்லா இருக்கியா.?”

“நல்லா இருக்கேன் மா. நான் உங்களுக்கு ஏதாவது உதவனுமா.?”

“நோ தாங்க்ஸ். வரட்டுமா.? எனக்கு வேலை இருக்கு.”

தப்பிக்க பார்த்தாள். அவன் கூடவே நடந்தான்.

“மேடம்…. ஆட்டோ பிடிக்கணுமா.?”

“பிஜு.. டோன்ட் பீ சில்லி. பெண்கள் ராக்கெட்டில் போற காலம் இது. ஒரு ஆட்டோ பிடிச்சுக்க மாட்டேனா.?”

“தட்ஸ் பைன். ஸீ யூ தென்….” என்று மனசில்லாமல் அகன்றான்.

அப்பாடா சரியான உளறல் பார்ட்டி.! லைலாவை பார்க்கிற மஜ்னு மாதிரியான பார்வையுடன் அவளை வட்டமிடும் இருபது வயது லூசுப் பையன். இவன் கல்பனாவின் மாணவி சொரூபாவின் அண்ணன். சொரூபாவுக்கு ப்ளஸ் டூ வில் கல்பனா கணக்கு சொல்லிக் கொடுத்தாள். அதில் பழக்கம். சொரூபா தன் பிறந்த நாளைக்கு இவளை அழைத்திருந்தான். பார்ட்டிக்கு பலரும் வந்திருந்தனர். இவளுக்கு யாரையும் தெரியாததால் தனியாக உட்கார்ந்திருந்தாள். அவசரமாக அங்கு வந்த சொரூபா….

“மேம் ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. என் பள்ளித் தோழிகளை வரவேற்கணும். நீங்க தனியா போராடிச்சு உக்கார்ந்திருக்கீங்க. சங்கடமா இருக்கு. இது என் அண்ணா பிஜு. பேசிட்டிருங்க.” சொரூபாவின் அக்கறையும் அன்பும் அவளை நெகிழ வைத்தது. பிஜுவிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளே பேசினாள்.

“என்ன பண்றீங்க பிஜு.”

“தேர்ட் இயர் பி.இ.”

கல்லூரி பெயர் சொன்னான். பிடித்த படம். பிடித்த பாட்டு என்று பேச்சு வளர்ந்தது. பிறகு சடாரென்று சொன்னான்.

“கல்பனா…. நீ ரொம்ப அழகா இருக்கே. ஐ. லவ். யூ.”

சுற்றி மனிதர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் ஜூஸ் குடித்தபடி நின்றிருந்தார்கள். குழந்தைகல் அங்கும் இங்கும் ஓடின.

“என்ன கல்பனா பதிலே இல்லை. “

“என்ன சொன்னே மறுபடியும் சொல்லு.”

தயங்கினான். தலைகுணிந்தான். நகம் கடித்தான்.

“பார்த்தியா…. உனாலே மறுபடியும் சொல்ல முடியலை. இது ஒரு க்ரேஸி எண்ணம். அதனால் அதுக்கு வலுவில்லை.”

“ஸாரி…. ஸாரி. ஆனா உங்களுக்கு உயிரைக் கொடுப்பேன். ஐ அட்மையர் யூ.”

“அவன் தோளில் மென்மையாக கை வைத்தாள்.

“உனக்கு இருபது வயசு இருக்குமா.? இந்த வயசில் இதெல்லாம் தோணும். மறையும். போ….போய் உன் தங்கை அருகிலே நில்லு. அவளுக்கு ஹெல்ப் பண்ணு.”

“தாங்க்ஸ் மேடம்…. கன்னத்தில் பளார்ன்னு கொடுக்காம விட்டதுக்கு.” என்றான் கன்னத்தை தடவியபடி.

“நான் அடிக்கவே இல்ல….. கன்னத்தை தடவற.? சரி கிளம்பு. நல்லா படி.” என்று முறுவலித்தாள்.

இப்படித்தான் அவன் அறிமுகமானான். எங்காவது போது இடத்தில் பார்த்தால் அவளிடம் ஓடி வந்து வழியாமல், பேசாமல் இருக்க மாட்டான். அதுவே அவளுக்கு தொல்லையாக அமையும்.

டவுன் ஹால் ரோட்டில் நடந்து கொண்டிருந்தாள். கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே…. மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. அழியில் ‘அரச்சனாஸ்’ தையல் கடையில் தைக்கக் கொடுத்திருந்த ஜாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு, மீனாட்சி அம்மாண் கோவிலுக்குள் செல்ல யத்தனித்தாள். டோக்கன் வாங்கிக் கொண்டு செருப்புடன் கையிலிருந்த ஜாக்கெட்டுள்ள பையையும் கொட்டுத்திட்டு க்யூவில் நின்றாள். பெண் போலீஸ் செக் பண்ணி உள்ளே அனுப்பினார்கள்.

ஒரு முறை பாட்டியை கோவிலுக்கு கூட்டி வந்திருந்தாள். பாட்டி ஆச்சரியப்பட்டுப் போனாள்.

“இதென்னடி கூத்து.? க்யூவெல்லம்.? புதுசா இருக்கே. அந்தக் காலத்திலே வெள்ளிக்கிழமையும் விசேஷ நாளுமாத் தான் கூட்டம் வரும். சித்திரை திருவிழாவிலும் ஜனங்க திரளா வருவாங்க. மத்த நாட்கள்ல ஆன்மிக மவுனத்துடன் இப்பகுதியே ஆழ்ந்த போயிருக்கும். இப்ப என்னன்னா…. கோவில்லே சினிமா தியேட்டர் மாதிரி ஆயிடுச்சு.” என்று மூக்கின் மேல் விரல் வைத்துக் கூறினாள். உண்மை தான். எங்கும் செயற்கைத் தன்மை வந்துவிட்டது.

ஆடி வீதியில் இருந்த பிள்ளையாரை வலம் வந்து சேவித்துவிட்டு அவள் அம்மன் சன்னதி நோக்கிச் சென்ற வழியில் அச்சுமுறுக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அச்சு முருக்கின் கரகரகரப்பும் லேசான இனிப்பும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். மீனாட்சி சுவாமியை சேவித்துவிட்டு…. அனுமார் சிலையை வணங்கிவிட்டு, பிரசாத ஸ்டாலுக்கு வந்து புளியோதரை சாதமும் சர்க்கரைப் பொங்கலும் வாங்கிக் கொண்டு பொற்றாமரைக் குளத்தின் நீரை பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு ஆனந்தம்.! அவளுக்கு மணிவண்ணனின் நாவல்கள் ‘குறுஞ்சி மலர்’ ‘பொன்விலங்கு’ ஞயாபகத்துகக்கு வந்தது.

‘இந்த பொற்றாமரை குளக்கரையில் தானே அரவிந்தனும் பூரணியும் சந்தித்தார்கள்.! சத்தியமூர்த்தியும் மோகினியும் சந்தித்தார்கள்.! என்ன அற்புதமான ஜோடிகள்.! படிக்கப் படிக்க ஆனந்தம் தந்த காவியங்கள்.! கொஞ்சம் தமிழில் பூக்கொட்டுவது போல் சத்தியமான வரிகள் கொண்டது தான் அக்காவியங்கள்.

தமிழ் அன்னையின் மணிமுடியில் இரண்டு ரத்தினங்கள் போல் மிளிரும் புதினங்கள். கரும்புச்சாறாய் இனிக்கின்ற தமிழல்லவா அது.! மதுரை வீதிகளை மணக்க மணக்க வர்ணித்திருப்பார். மதுரை அழகான ஊரு தான்.

கல்பனா இந்த நினைவுகளில் லயித்திருந்த போது சற்று தள்ளி சில பெண்கள் இவளை மேலோட்டமாக பார்த்தவாறே பேசுவது கேட்டது.

“அவ…. அந்தக் கல்பனா தானே.?”

“எவ்வளவு ஜாலியா உக்காந்து புளியோதரை, சர்க்கரைப் பொங்கலும் சாப்பிடறா..”

“உனக்கென்ன பொறாமை.? ஆம்பிள்ளை இல்லாத வீடு, சுதந்திரப் பறவை. என்ஜாய். நீயும் வேணா டைவர்ஸ் பண்ணிட்டு நீயும் இப்படி வாழ்க்கையை அனுபவியேன்.” சிரிப்பு சத்தம் கேட்டது.

“ஏய் மரகதம்…. நான் என்ன அவளைப் போல அடங்காப்பிடாரியா.? புருஷனை விரட்டியடிக்க.?” என்றாள்.

இது அதிகம்…. கல்பனா எழுந்து கொண்டாள். பேசினாள்.

“வாயை அடக்குங்க. இது நல்லா இல்லே.”

“ஆமா…. அடக்கிட்டோம். ஆனா ஊரு வாயை அடக்க முடியுமா.? நாலு பேர் பேசறது தெரிந்தும் இப்படி தெனாவட்டா குமறிக்கிட்டு நிக்கற. உனக்கு வாய் ஒரு கேடு.”

அவர்கள் அவள் நெஞ்சு பலம் தெரியாமல் பேச…. அவள் கொடுத்த பதிலடியில் விதிர்விதிர்த் நின்றனர்.