மிங்கின் அறையில் மந்திராலோசனை நடந்துகொண்டிருந்தது. அவன் சகோதரர்கள் செங் லீயும் டாங் லீயும் சஞ்சலத்தோடு அண்ணனை நோக்கினார்கள்.
“எப்படி அண்ணா பிழைத்துக் கிடக்கிறான்? பேச வேறு செய்திருக்கிறான்?”
“எல்லாம் அந்த இன்-தூ பன்றிகளால் வந்ததடா. உடனே காப்பாற்றியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, நாம் தடவியிருந்த நஞ்சை முறிக்கவும் மருந்து வைத்திருக்கிறார்களாம். அதை புகட்டிய பின்னரே ஷீ முழித்திருக்கிறான். எத்தனை நாள் திட்டம், இப்படி இடறில் மாட்டியிருக்கிறதே!”, இயலாமை கோபமாக மிங்கிடமிருந்து வெளிப்பட்டது.
“வேறு வழியில்லை. மீண்டும் முயற்சி செய்து ஷீயை கொல்லவேண்டும்”, செங் கூற,
“கொல்லுவதோடு மட்டுமல்லாது அந்த இன்-தூக்களை மாட்டிவிட வேண்டும். ஷீ எழுந்து உளறியிருக்காவிடின் அவர்கள் மீது முதலிலேயே பழி சுமத்தியிருக்கலாம். அப்போதுதான் ஸீசாய் அவளை மணமுடிக்க ஏதுவாக இருக்கும்”, மிங் அவன் கருத்தைக் கூறினான்.
“எல்லாம் நாமே எதற்கு செய்ய வேண்டும்? இந்த முறை ஸீசாயை வைத்து காரியம் ஆற்றுவோம் அண்ணா”, இளையவன் டாங் கூற,
“முட்டாள், ஸீ யை லேசாக எடைபோடாதே. இதில் நம் பங்கு இருப்பது தெரிந்தால், அதையே வாய்ப்பாக வைத்து நம்மிடமே ஆதாயம் தேடுவான். கண்டிப்பாக அவனுக்குத் தெரியக்கூடாது”, மிங் எச்சரித்தான்.
“இராஜ்ஜியப் பிரதி நிதி நம் குடும்பத்தை நன்கு அறிவார். தாய் தந்தை இறந்துவிட்டால், குடும்பத்தில் மூத்தவனாக ஷீயின் இடத்தில் நான் பொறுப்பு எடுத்துக்கொள்வதை மறுக்கமாட்டார். அவர் ஒப்புதல் அளித்த பின் ரூயூனே நினைத்தாலும் தடுக்க முடியாது. அதனால் உறுதியாகத் தெரியாத வரை நம்மை எதிர்க்க மாட்டாள்”, என்று விளக்கினான்.
“ஆக ஷீ விழிப்பதற்குள் ஒன்று அவனை முடிக்க வேண்டும். அல்லது, ரூயூனை உடனே திருமணத்திற்கு வற்புறுத்த வேண்டும்”, செங் அவர்கள் வசம் இருந்த வழிகளை பட்டியலிட்டான்.
தோட்டத்தின் அருகே ஒரு மரத்தடியில், ஸீசாய் புன்னகை முகமாக ரூயூனின் அழகை புகழ்ந்து கொண்டிருந்தான். அதன் பிரதிபலிப்பு பெரிதாக ரூயூனிடம் இல்லாது போக,
“ரூயூன் கவலைகள் இல்லாது சுதந்திரப் பறவையாக இருக்க வேண்டிய உன்னை இப்படி கவலை தோய்ந்து பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது”, என்று அடுத்த கோணத்தில் ஆரம்பித்தான்.
“நீங்கள் எப்போது என்னை சுதந்திரப் பறவையாகப் பார்த்தீர்கள்? “ ரூயூன் முகத்தில் பாவனையற்று கேட்க,
“அது… உன் மாமி கூறியிருக்கிறார். சிறிய வயதிலேயே கடல் கடந்து பல தேசங்களைப் பார்த்திருக்கிறாயாமே?”, என்று அதிசயமாகக் கேட்டு வைத்தான். அப்படியாவது அவளை பேச வைத்திட ஒரு முயற்சி.
லேசான புன்முறுவலுடன், “ஹ்ம்ம்… பல மனிதர்கள், பல குணங்கள், பல முகங்கள்”, என்பதோடு நிறுத்தினாள்.
“கவிதையாகப் பேசுகிறாய்”, என்று இளித்து வைத்தான்.
அதற்கு மேல் பொறுமை இழந்தவளாக, “ நேரமாகிறது. நான் செல்லட்டுமா?”, என்று மரியாதை நிமித்தம் வினவினாள்.
“ம்ம்… உன்னிடம் முக்கியமான எச்சரிக்கை செய்யவே அழைத்தேன். உன் தந்தையைக் குறி வைத்தவர்கள் உன்னையும் தாக்கக் கூடும். வெளியில் எங்கும் தனியாக சென்றுவிடாதே. அப்படி செல்லவேண்டியிருப்பின் என்னிடம் கூறு. நான் உடன் வருகிறேன்”, என்றான் அக்கறையான குரலில்.
அதில் நெகிழ்வதுபோல நடித்தவள், “நாம் தனியாகச் சென்றால் மாமா தவறாக நினைக்கலாம். ஆனால் உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி. மாமன்கள் துணை இல்லாமல் வெளியில் செல்ல மாட்டேன் ஸீ சான்”, என்று அவனை மரியாதையாக அழைக்கவும் முகத்தில் ஒரு பெருமையை பூசிக்கொண்ட ஸீசாய், “ஆமாம் ஆமாம். நம் திருமணம் முடிக்கும் வரை நீ அவர்கள் பொறுப்பில்தானே இருக்கவேண்டும். சீக்கிரமே உன்னை என் பொறுப்பாக்கிக் கொள்ள என் விருப்பம். உன் மாமாக்களிடம் சொல்லி நம் விடயத்தை விரைகாக நடத்த முயல்கிறேன் கண்ணே”, என்று கொஞ்ச, திகு திகுவென்று எரிந்த மனதை முயன்று கட்டுப்படுத்தியவள், வெட்கப்பட்டு விலகுவதுபோல வேகமாக நகர்ந்து சென்றாள்.
ஷீயின் அறையில் அனைவரையும் அனுப்பிவிட்டு தந்தையின் அருகே அமர்ந்தவள், அவரின் கையை தன் இரு கைகளுக்கிடையில் பற்றினாள். ஷீயின் கைகள் சில்லிட்டிருந்தது. ரூயூனின் கண்களில் கண்ணீர் வற்றாது வடிந்தது.
“தந்தையே… பிணம் தின்னிக்கழுகுகள் நம்மைச் சுற்றி வட்டமடிக்கின்றன. எப்படி உங்களை, என்னை, நம் சொத்துக்களை, தொழிலைக் காப்பாற்றப் போகிறேன் என்றே தெரியவில்லை. எனக்காகவாவது பிழைத்து எழ மாட்டீர்களா? உங்களைக் குத்திய இந்தக் கயவர்களை அடையாளம் காட்டிவிட்டால்கூட சமாளித்துவிடுவேனே”, என்று மனதுள் அரற்றிக்கொண்டிருக்க, பட்டென்று கதவு திறந்தது.
மிங் உள்ளே வந்து, “என்ன ரூயூன் ஷீ முழித்தானா? எல்லோரையும் வெளியில் இருக்கக் கூறினாயாம்?”, என்ற கேள்வியோடு ஷீயின் அருகே வந்து உற்றுப் பார்த்தான். மெல்லிய மூச்சுக் காற்று சென்று வருவது ஷீ உயிரோடு இருப்பதை பறைசாற்ற, ரூயூனை கேள்வியாக நோக்கினான்.
“தந்தையோடு தனித்திருக்க விரும்பினேன் மாமா. அவர் விழித்தால் உடனே அழைப்பதாக வாக்களித்தேனே. கொடுத்த வாக்கை மீறமாட்டேன்”, என்றாள் சினத்தை மறைத்து.
“மருத்துவன் என்னவோ உடல் நிலையில் எந்த முன்னேறமும் இல்லை எங்கிறான்?”, மிங் அடுத்த கணயை தொடுக்க,
“பின்னடைவும் இல்லை என்பதையே பற்றுக்கோலாகக் கொண்டிருக்கிறேன். என் அருகாமை இருந்தால் ஒரு வேளை கண் விழிக்கக் கூடுமோ என்ற ஆசையில் அமர்ந்திருக்கிறேன்”, வெறுப்பை மறைக்க பார்வையை தழைத்திருந்தாள்.
“அடுத்து நடக்கவேண்டியதைப் பற்றி கலந்தாலோசிக்க வேண்டும். இப்போது என்னுடன் வா”, என்று கட்டாயமாக அவளை கைபிடித்து அழைத்து வந்தான்.
வாசலுக்கு வர மிமி நின்றிருந்தார். “நான் முகம் திருத்தி அழைத்து வருகிறேன் அண்ணா. நீங்கள் முன்னால் செல்லுங்கள்”, என்று ரூயூனை தன் புறம் இழுக்க, வேறு வழியில்லாது, “ம்ம்… காக்க வைக்காமல் உடனே வாருங்கள்”, என்ற மிரட்டலோடு முன்னே சென்றான் மிங்.
“என்ன ஒரு அதிகாரம்! இவனையெல்லாம் துண்டு துண்டாக்கி நரிக்கு இரையாக்கினாலும் என் கோபம் அடங்காது ஆயி”, தன்னறையில் முகம் சிவக்க முன்னும் பின்னும் நடந்தவாறே ஒரு வழியாக உணர்வுகளை வெளியில் கொட்டினாள் ரூயூன்.
“ரூயூன், மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம். உன் எண்ணங்கள் முணுமுணுப்பாகக் கூட வெளியே கசியக்கூடாது. அவர்கள் கை ஓங்கியிருக்கிறது என்று நம்பும் வரையில்தான் நமக்குப் பாதுகாப்பு. ஒருவன் மட்டும் வந்திருந்தால், உன் எண்ணத்தை செயல்படுத்தியிருக்கலாம். இப்போது அவர்கள் ஐவர். அனைவரும் இங்கே இருக்கும்போது இறந்தால், ஆதாரமே இல்லையென்றாலும் இராஜப் பிரதிநிதி நம்மை சிறையில் தள்ளலாம்.
உணர்ச்சிகளை ஓரம் வைத்து தந்திரத்தை கையில் எடு”, மிமி சொல்லச் சொல்ல சற்றே தெளிந்தாள் ரூயூன். முகத்தை சீர் செய்து,
அவள் மாமி தேநீரை அனைவருக்கும் அளித்து தானும் எடுத்துக்கொண்டு, “ஹ்ம்ம்…நீ அழகுபடுத்திக்கொண்டு வரும் வரையில் அனைவரையும் காக்க வைக்க முடியுமா?“, என்று ஆரம்பித்து அடுத்த சில நிமிடங்கள் குடும்பப் பொறுப்பைப் பற்றியும் அவள் கடமைகளைப் பற்றியும் ஒரு உரையை ஆற்ற, “இதையெல்லாம் பிறகு சொல்லிக் கொள்” என்று நல்ல வேளையாக மிங் இடை வெட்டினான்.
“ரூயூன், நாளை வெங்களிச் சாலையை பார்க்கச் செல்ல வேண்டும். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நீ ஒன்றுமே அறிந்துகொள்ளவில்லை. அங்கே மேற்பார்வை பார்ப்பவனை வந்து என்னிடம் பேசச் சொல். அது யாரென்றாவது தெரியுமா இல்லை அதையும் நானே சென்றுதான் கண்டுபிடிக்க வேண்டுமா?”, அவளை அற்பமாக ஒரு பார்வை பார்த்துக் கேட்டான் மிங்.
“வரச் சொல்லுகிறேன் மாமா.”
“இதெல்லாம் ரூயூன் ஏன் பார்க்கவேண்டும்? அவளே தந்தையைப் பற்றிய கவலையில் இருக்கிறாள். நாமே சென்று தெரிந்து கொள்வோம் மாமா”, என்று ஸீ சாய் இடைபுகுந்தான்.
ரூயூனைப் பார்த்து புன்னகைத்த ஸீசாய், “கவலைப் படாதே. நான் பேசுகிறேன் என்று கூறினேனே”, என்று பல்லைக் காட்டிவிட்டு, “மாமா, விரைவாக எங்கள் திருமணத்தை நடத்தினால் நன்றாக இருக்கும். ரூயூனுக்கும் அவள் தந்தையை கொல்ல முயன்றவர்களால் ஆபத்து நேரிடலாம். அவளுக்கு தக்க பாதுகாப்பை அவள் கணவனாக இருந்தால்தானே நான் தர முடியும்? என்ன நான் சொல்வது?”, மிங்கிடம் பெண் வேண்டும், அவள் செல்வம் இரண்டாம் பட்சம் என்பது போல பேசிவைத்தான்.
சற்று யோசித்த மிங், “ஹ்ம்ம். அதுவும் சரிதான். ரூயூனை முதலில் பார்த்துக்கொள்ளட்டும் ஸீ சாய். என்ன செங்?, டாங்?”, என்று தம்பிகளை நோக்கினான்.
குடிலில் வல்லபன் “இப்போது நம் மீது பழி இல்லை. கிளம்புவதே உசிதம்”, என்று மாறனிடம் மல்லுகட்ட, “ரூயூனை இந்தக் கயவர்களிடம் விட்டுச் செல்ல முடியாது. நீ சென்று ஸீயுடன் நட்பு பாராட்டு. இல்லை அவள் இளைய மாமனை குறி வை. இந்த மொழி தெரிந்தால் நானே களத்தில் புகுவேன். உன்னிடம் கெஞ்சிக்கொண்டிருக்க மாட்டேன்”, என்று தர்க்கம் புரிந்தான் மாறன்.
வேலையாள், ரூயூன் அழைப்பதாக வந்து கூறவும், உடனே கிளம்பினார்கள். ஆடம்பரமான வரவேற்பறையில் நுழைந்ததுமே நேற்று போலவே அனைவரும் கூடியிருந்தார்கள்.
ஆனால், அமரக் கூட சொல்லாது மிங் படபடவென்று பேசினான். மாறனின் கண்கள் ரூயூனைக் காண, அவள் ஏதோ அழுத்தத்தில் இருக்கிறாள் என்பது புலப்பட்டது.
“அது, தந்தை என்னை பெண் கேட்டு வரச் சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார் மாமா. அதோ அங்கே இருக்கிறானே ஒரு மலைமாடு. அவனை மாப்பிள்ளையாக்கி உடனே திருமணத்தை முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்துகிறார்”, என்று முகத்தின் இறுக்கம் குறையாமல் பேசினாள் ரூயூன்.