மௌனக்குமிழ்கள் – 15

ஸ்ரீமதியின் உள்ளம் கடும் கொந்தளிப்பில் இருந்தது. அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் திலீப்பை ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியாக வந்தது. அவளுள் பழியுணர்ச்சி பெரும் புயலென உருவெடுத்து அவளையும் சேர்த்து அழிக்க காத்திருக்க, அதை உணருமளவு நிதானம் அவளிடம் அந்நேரத்திற்கு இல்லை.

எந்த நிலையிலும் நிதானம் இழக்கக் கூடியவள் இல்லை ஸ்ரீமதி! பெற்ற தகப்பன் யாரோ போல நடத்திய சமயத்தில் கூட புன்னகை வாடாமல் வளைய வந்தவள். ஆனால், இப்பொழுது பெற்ற பிள்ளை போல தன்னோடு ஒன்றிப் போய்விட்ட செழியனின் அரும்பு முகம் நினைவில் வர வர அவளுக்கு நிதானம் என்றொரு குணம் இருப்பதே மறந்து போயிற்று!

அவளுள் இருந்த அன்னை மனம் பழியுணர்ச்சிக்கு தீமூட்டி வளர்க்க, அவள் தன் திட்டத்தை பிசிரின்றி செயல்படுத்தும் வழிகளில் தன் நினைவுகளை மூழ்க விட்டிருந்தாள்.

பிரகதீஸ்வரன் ஏற்கனவே பெரும் மனக் குழப்பத்தில் இருந்தான். ஸ்ரீமதியால் திலீப்பை சமாளிக்க முடியாதோ என்ற அலைப்புறுதல் அவன் மனதைப் பிசைந்து கொண்டேயிருந்தது. காரணமற்ற தவிப்பொன்று எந்நேரமும் அவன் உள்ளத்துள் பெரும் அலைகளாய் அடித்துக் கொண்டிருந்தது.

ஆனால் தாத்தாவை மீறியும் எதுவும் செய்ய முடியாமல் தனக்குள் தவித்துக் கொண்டிருந்தான்.

மாலை நான்கு மணியளவில் அவனது கைப்பேசி புது இலக்கங்களைச் சுமந்து சிணுங்கியது.

“ஹலோ…” என்றதும், “ஹலோ சார்… நான் உங்ககிட்ட ரொம்ப முக்கியமா ஒரு விஷயத்தை சொல்லணும். நேரில் தான் பார்த்து சொல்லணும் சார்…” என்றது எதிர்முனை. நிச்சயம் பேரிளம் பெண் என்று அந்த குரல் சொன்னது.

“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க…” அவனுக்கு இருந்த அலைப்புறுதலில் எதிலும் ஈடுபட முடியவில்லை.

“இல்லை சார்… நேரில் சொன்னா பெட்டர். என்னை உங்களுக்குத் தெரியும் சார். பார்த்திருப்பீங்க. ரொம்ப முக்கியமான விஷயம் சார். இன்னைக்கே பார்க்கணும்” குரலில் தவிப்பு தெரிந்தது.

ஆழ்ந்த பெருமூச்சுடன், “சரி எங்க வரணும்ன்னு சொல்லுங்க” என கேட்க, அதற்கு அந்த பெண்மணி சொன்ன இடம் கொஞ்சம் அருகில் தான் இருந்தது. “உடனே வரேன்…” என்று புறப்பட்டும் இருந்தான்.

அடுத்த கால் மணி நேரத்தில் அங்கிருந்தவன், “மேடம் நான் வந்துட்டேன். எங்கே இருக்கீங்க?” எனத் திரும்ப அழைத்துக் கேட்டான். “சார் காரிலேயே இருங்க. நான் காருக்கே வந்துக்கறேன். அப்ப தான் யாரு கவனிச்சுடுவங்களோன்னு பயம் இல்லாம பேச முடியும்” என்றார் பயத்துடன்.

ஒன்றும் புரியாமல் அவன் புருவங்கள் முடிச்சிட்டது. சற்று நேரத்தில் காரில் ஏறியது அவர்கள் பள்ளியில் வேலை பார்க்கும் பெண்மணி. பெயர் தெரியாவிட்டாலும் பார்த்த நினைவு இருந்தது.

“மேடம் நீங்க…”

“சார் நான் தேவகி. உங்க ஸ்கூலில் தான் வேலை பார்க்கிறேன்” என்று தன்னை அறிமுகம் செய்தவர், தன் கைப்பையிலிருந்து சில ஆவணங்களை எடுத்து அவனிடம் தந்து, “இதை கொடுக்கத்தான் வந்தேன் சார்” என்றார்.

யோசனையுடன் அதை வாங்கி பிரித்தவன் பலமாக அதிர்ந்தான். தாத்தாவின் சொற்கள் அவனுள் ரீங்காரமிட்டது. “மோனிஷாவுக்கு நல்லா விசாரிச்சு கல்யாணம் செய்திருக்கணும். அவன் கண்டிப்பா நல்லவன் இல்லை” அக்காவின் இறப்பிற்குப் பிறகு அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.

கையிலிருந்த ஆவணங்களை ஜீரணிக்க முடியாமல், “இது…” என்று திணறினான்.

“மேடம் மறைச்சு வெச்சு இருந்தாங்க சார்” என்றவர் இது கிடைத்த விதத்தையும் சேர்த்துச் சொன்னார்.

“சார், மோனிஷா மேடம் கண்டிப்பா வெயிட் லாஸ் ட்ரீட்மெண்ட் விருப்பப்பட்டு போயிருக்க மாட்டாங்க. கண்டிப்பா அது அவங்களுக்கும் தெரியாம ஏற்பாடாகி இருக்கணும். இல்லை கட்டாயத்துல நடந்திருக்கணும். கண்டிப்பா இந்த மாதிரி ட்ரீட்மெண்ட்ஸ் அவங்க பிரெபர் பண்ணவே மாட்டாங்க சார். ஸ்கூல் செமினாருக்கு கூட அவங்க ஒருமுறை கூப்பிட்ட கெஸ்ட் இதுக்கெல்லாம் எகைன்ஸ்ட்டா தான் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பேசினாங்க.

அப்படி ஒரு கெஸ்ட், அப்படி ஒரு ஸ்பீச் அரேஞ் செய்யறவங்க எப்படி சார் இந்த மாதிரி ட்ரீட்மெண்ட் போயிருப்பாங்க. கண்டிப்பா இது திலீப் சாரோட பிளே தான். பிளீஸ் டூ சம்திங் சார். ஏன்னா அவர் இப்ப நம்ம ஸ்ரீமதி மேடத்தை டார்கெட் பண்ணிட்டு இருக்காரு… அவங்க சமாளிக்க முடியாம ரொம்ப திணறி போறாங்க…” என்று சொன்னவர்,

“சார் நான் தான் உங்ககிட்ட சொன்னேன்னு வெளிய தெரிய வேண்டாம் பிளீஸ்” என்ற கோரிக்கையுடன் விடைபெற்றார்.

பிரகதீஸ் ஒருமாதிரி இடிந்து போய் அமர்ந்திருந்தான். திலீப் ஏதோ பெண்களிடம் கொஞ்சம் வழிவான் போல என்று எண்ணியிருந்தவனுக்கு இப்பொழுது கிடைத்த தகவல்கள் எல்லாம் பெரும் இடி!

“பீப்பா தான்டி நீ…” என்ற கேலி குரலும்,

“மூணு வருஷம் குழந்தை வேண்டாம்ன்னு கண்ட கண்ட மாத்திரைகளைத் தந்து என் உடம்பை கெடுக்காம இருந்திருந்தீங்கன்னா எனக்கு இத்தனை பிரச்சினையே வந்திருக்காது. போதாக்குறைக்கு செழியன் பிறக்கிறதுக்கு எவ்வளவு ட்ரீட்மெண்ட்ஸ் எடுத்தோம். அதுக்கு காரணமும் நீங்க முதல் மூணு வருஷம் டாக்டர் கிட்ட கன்சல்ட பண்ணாம எனக்கு தந்த டேப்லெட்ஸ் தான். நீங்க தந்த டேப்லெட்ஸ், செழியன் வயித்துல இருந்தப்ப அவனைப் பாதுகாக்க எடுத்துக்கிட்ட ட்ரீட்மெண்ட் எல்லாம் சேர்த்து இப்படி ரியாக்ட் ஆகியிருக்கு.

சரி விடுங்க. இதையே அடிக்கடி சொல்லி இரிடேட் பண்ணாதீங்க. ஐ வில் ரெடியூஸ் இட்… வெயிட் லாசிங் ஈஸ் எ பிக் பிராசஸ்… நீட் பேஷியன்ஸ் பாஃர் இட்… டோன்ட் எக்ஸ்பெக்ட் இமீடியேட் ரிசல்ட்…” என்ற சலிப்பான பதிலும் பிரகதீஸின் மனதில் ஓடியது.

மோனிஷா பிரசவத்திற்காக அவர்கள் வீட்டில் இருந்தபோது எதேச்சையாக அவன் செவிகளில் விழுந்த கணவன், மனைவி பேச்சுவார்த்தைகளை அன்று அவன் பெரிது படுத்தவில்லை. இப்பொழுது யோசிக்கையில் அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருப்பதாகத் தோன்றியது.

அக்கா விவாகரத்து வரை யோசித்திருக்கிறாள் என்றால், குறையாத உடலோடு போராடி களைத்து, கணவனின் உருவக் கேலி சொற்களிலும் மனம் வெறுத்து, அவனையும் வெறுத்து தானே அப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும்?

ஆனால், ஒருமுறை கூட திருமண வாழ்க்கை குறித்து மனம் விட்டு அவள் தங்களிடம் பேசியிருக்கவில்லையே என்று அவன் மனம் சோர்ந்தது.

ஏன் அக்கா இதுகுறித்து வீட்டில் எதுவும் பேசவில்லை எனக் கலக்கத்தோடு யோசித்தான்.

பெண்கள் அம்மாவிடம் தான் மனம் திறந்து சொல்வார்கள். பள்ளி நிர்வாகத்தை பிரகதீஸ் மோனிஷாவின் கையில் கொடுத்ததில் அம்மா அவள்மீது கோபத்தில் இருந்ததும், அவளை தவிர்த்ததும் நினைவில் வந்தது. அந்த நொடி அவனுக்கு தன் அம்மா மீது மிகுந்த வெறுப்பு வந்தது.

ஏன் இப்படிப் பெற்ற மகளைத் தவற விட்டார்? புத்திர சோகம் தானே உலகிலேயே கொடியது. ஆனால், அதன் வடு கூட இல்லாமல் இன்றும் மகளை ஏசும் அம்மாவாகத் தானே இருக்கிறார். மோனிஷா இறப்பிற்கு வேண்டுமானால் திலீப் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அவளைக் காக்காமல் விட்டதற்கான பொறுப்பு குடும்பத்தில் உள்ள அனைவருடையதும் தான் என்று குற்றவுணர்வில் மருகியது அவன் மனம்.

தன்னிடம் அக்கா இதெல்லாம் பேசியிருக்க முடியாதோ? எனக்குப் புரியாது என நினைத்திருப்பாளோ? என அக்காவின் வேதனைகளை கவனியாமல் போனோமே என்ற பெரும் பரிதவிப்பில் இருந்தான்.

ஸ்ரீமதியை 50kg தாஜ்மஹால் என திலீப் வர்ணித்த காரணம் இப்பொழுது விளங்கியது. ஆக, இவனுடைய சாய்ஸ் ஜீரோ சைஸ் பெண்கள். அதற்காக அந்த தோற்றத்தில் பார்க்கும் எல்லா பெண்கள் மீதும் மையல் கொள்வானா? அது எப்படி முறையான செயலாகும்?

அதுவும் அவன் சந்தோஷத்திற்காகவும், அவனுக்கென்று ஒரு வாரிசுக்காகவும் தன் உடலை வருத்திக்கொண்ட மனைவியை உருவம் சரியில்லை என்று கேலி செய்வதும் ஒதுக்கி வைப்பதும் முட்டாளத்தனத்தின் உச்சம் அல்லவா? இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா? கடைசியில் என்ன செய்தான் என்று தெரியவில்லை… இப்பொழுது அக்கா உயிரோடே இல்லையே!

அவன் அக்கா முகம் நினைவில் வர, இருக்கையில் பின்புறம் சாய்ந்து விட்டவனின், கண்கள் கலங்கியிருந்தது. அம்மா இல்லாமல் வளரும் செழியனின் முகம் மனக்கண்ணில் தோன்றி அவனை இம்சித்தது.

பிரகதீஸ்வரன் தன் அக்காவின் நினைவிலேயே மூழ்கியிருக்க, சற்று நேரம் முன்பு சந்தித்த தேவகி ஆசிரியையின் ஸ்ரீமதி குறித்தான எச்சரிக்கை அவன் நினைவில் இம்மியும் இல்லை.

எவ்வளவு நேரம் அப்படியே தளர்ந்து போய் அமர்ந்திருந்தானோ தனது கைப்பேசியின் இடைவிடாத அழைப்பில் தான் கண்களைத் திறந்தான்.

சுற்றிலும் வெயில் மங்கி இரவின் ஆரம்பப் புள்ளியில் இருந்த நேரம். தன் கைகளால் முகத்தை அழுந்த துடைத்தபடி அழைப்பை ஏற்றான்.

மணிவண்ணன் தான் அழைத்திருந்தார். “பிரகா… இந்த வாரம் ஸ்ரீக்கு கிளாஸ் இல்லை தானே. கிளாஸ் இல்லாட்டி எப்பவும் ஸ்கூல் முடிஞ்சு நாலரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா. இன்னைக்கு… இன்னைக்கு… மணி ஆறாக போகுது இன்னும் காணோம்ப்பா. போன் பண்ணினாலும் எடுக்க மாட்டீங்கறா…

நான் ஸ்கூலுக்கு போன் பண்ணி பார்த்தேன். திலீப் கூட அவ கிளம்பிட்டதா சொல்லறாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு பிரகா. நீ அப்பவே சொன்ன… நான் தான் கேக்கலை. இவளையும் என்னால இழக்க முடியாது. பிளீஸ் பிரகா ஏதாவது பண்ணு. அவளைத் திரும்பக் கொண்டு வந்து என்கிட்ட சேர்த்துடு” என அரற்றத் தொடங்கினார்.

இவனைப் பேசவே விடாமல், மொத்த விஷயத்தையும் சொல்லிப் புலம்பி அரற்றுபவரைச் சமாதானம் செய்யும் நிலையில் பிரகதீஸ் இல்லை. அவர் சொன்ன விஷயம் இடி விழுந்தது போல இருக்கத் தாத்தாவிற்கு எந்த பதிலும் தராமல் படபடக்கும் இதயத்தோடு அமர்ந்திருந்தான்.

‘ஸ்ரீக்கு எதுவும் ஆகக் கூடாது…’ என்ற பயமும் பதற்றமும் மட்டுமே அவனிடம்.

“பிரகா… பிரகா… லைன்ல இருக்கியா…” மணிவண்ணன் தாத்தாவின் தொடர் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்,

“தாத்தா… பயப்படாதீங்க… ஸ்ரீக்கு ஒன்னும் ஆகாது. அவளை நான் கூட்டிட்டு வரேன். பிளீஸ் கொஞ்சம் தைரியமா இருங்க தாத்தா…” முயன்று சமாளித்து தாத்தாவிற்கு ஆறுதல் சொன்னவனுக்குமே பெரும் ஆறுதல் தேவையாக இருந்தது.

தலை எல்லாம் பாரம் ஏறியது போல வலித்தது. சில வினாடிகள் என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.

ஏன் அவனோடு போனாள்? அவன் என்ன சொல்லி அழைத்துப் போயிருப்பான்? ஏதாவது பொய் சொல்லி ஏமாற்றிக் கூட்டிப் போயிருப்பானோ? ஆனால் அவளுக்கு அவனைப்பற்றி நன்கு தெரியுமே! இருந்தும் ஏன் அவனோடு போனாள்? எங்கே போயிருப்பார்களாக இருக்கும்?

யோசித்து யோசித்து பிரகதீஸுக்கு தலை வலி அதிகம் ஆனது தான் மிச்சம். ஆனால், என்ன செய்வதென்று ஒரு யோசனையும் வரவில்லை.

சட்டென்று மின்னல் போலத் தேவகி மேடத்தின் நினைவு வர, அவர் அழைத்திருந்த எண்ணுக்குத் திரும்பி அழைத்தான்.

“சொல்லுங்க சார். என்ன விஷயம்?” என்று கேட்டவரின் குரலில் என்ன பிரச்சினையோ என்ற பதற்றம்.

“மேடம் எனக்கு ஒரு உதவி வேணும். உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சார்… என்ன சார் இப்படி கேட்கறீங்க. என்ன வேணும்ன்னு சொல்லுங்க சார்”

“திலீப்… வந்து திலீப்… ஸ்ரீமதியை கூட்டிட்டு ஸ்கூலில் இருந்து கில்ப்பியிருக்கான்”

“அச்சச்சோ… ஆனா ஸ்ரீமதி மேடம் அவனை மதிக்கக் கூட மாட்டாங்களே சார். அவங்க எப்படி அவனோட போனாங்க. உங்களுக்கு நல்லா தெரியுமா?”

“ஹ்ம்ம்… இப்ப எங்க கூட்டிட்டு போயிருப்பான்னு எதுவும் உங்களுக்கு கெஸ் இருக்கா… பிளீஸ் கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்க…” என்றவனின் குரல் கெஞ்சிற்று.

“சார் வொரி பண்ணாதீங்க… நான் இப்ப விசாரிச்சு சொல்லறேன் சார். நம்ம ஸ்கூலில் சில ஸ்டாப் கிட்டயும் அவர் அட்வான்டேஜ் எடுத்துக்குவாரு. அவங்களும் வேற வழியில்லாம அடஜஸ்ட் பண்ணி போவாங்க. அவங்களை கேட்டா கண்டிப்பா தெரியும் சார்…” என சொல்ல,

“மேடம் ஸ்ரீ பேரு வெளிய வராம பிளீஸ்…” என்றவனின் குரலில் இருந்த தவிப்பில் தேவகிக்குப் பாவமாகப் போயிற்று.

“சார் மேடம் பத்தி சொல்லாம விசாரிக்கிறேன். மேடம் ரொம்ப தங்கமானவங்க. கண்டிப்பா தப்பான நோக்கத்துல அவனோட போயிருக்க மாட்டாங்க” என்றும் சேர்த்து சொன்னார்.

“ஐ நோ மேடம். ஆனா ஏன் அவனோட போனான்னு தான் புரியலை” என்றான் கலக்கத்துடன்.

“டோன்ட் வொரி சார். நான் விசாரிச்சுட்டு உங்களை சீக்கிரம் திரும்ப கூப்பிடறேன்” என்று பேசி வைத்த மேடம்,

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அழைத்தார். “சார்… அவன் வம்படியா டிரைவிங் சொல்லி தரேன்னு சொல்லி தான் ரெண்டு பேரையும் முதல் முதல்ல கூட்டிட்டு போயிருப்பான் போல. ஒரே இடத்துக்குத் தான் ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிருக்கான்” என்று சொல்லி, எந்த இடம் என்றும் சொல்ல,

“தேங்க்ஸ் மேடம்…” என்று அழைப்பைத் துண்டித்தவன், உடனே காரை ஸ்டார்ட் செய்து அவ்விடம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினான்.

ஊருக்கு ஒதுக்குப்புறமான அவ்விடத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்காதே… அவளுக்கு ஆபத்தென்றால் உதவிக்கு வரக் கூட ஆட்கள் இருக்க மாட்டார்களே என்ற பயத்தில் அவன் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

ஸ்ரீமதிக்கு எந்த இக்கட்டு வந்திருந்தாலும் அவளை அவன் விட்டுக்கொடுக்கப் போவதில்லை தான்!

ஆனால், ஸ்ரீமதியே அவனோடு சென்றிருக்கிறாள் என்றால் கண்டிப்பாக ஏதாவது விபரீதமாக யோசித்து அதைச் செயல்படுத்தவே அங்குச் சென்றிருப்பாள் என்று ஏனோ அவனுக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

ச்சே அப்படியெல்லாம் இருக்காது. தாத்தா தான் குழப்பி விட்டாரு. அவளுக்கு எதாவதுன்னு அவ அமைதியா போகலாம். அவளை சார்ந்தவங்களுக்கு ஏதாவதுன்னா கண்டிப்பா அவ அமைதியா இருக்க மாட்டா… அது இதுன்னு சொல்லி என்னைக் குழப்பி விட்டுட்டாரு… அவ அப்படியெல்லாம் இல்லை என்று உடனேயே தன்னைத்தானே தேற்றியும் கொண்டான்.

அவளின் பிள்ளை முகம், வாடாத புன்னகை, நிதான செய்கை எல்லாவற்றையும் தனக்குள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி அவளுக்குத் தண்டனை தருமளவு, எதிர்த்து நிற்குமளவு எல்லாம் மனம் வராது என சுயசமாதானமும் செய்து கொண்டான்.

ஆனால், ஏன் அங்குப் போனாள்? மீண்டும் இதே கேள்வி நினைவில் வந்து அவனைச் சோர்ந்து போகச் செய்யும்.

பயமும் பதற்றமும் தவிப்பும் தடுமாற்றமுமாக அவ்விடத்தை அடைந்தவன், அவர்கள் இருவரையும் தேட சில நொடிகள் ஆனது. அதற்குள் அவன் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கி விட்டது.

தேடிய விழிகளுக்குப் பரிசாகக் கிடைத்த காட்சியை அவனால் இந்த ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

திலீப்பின் கார் மரமொன்றில் மோதி முன்புறமும், இடதுபுற பக்கவாட்டு தோற்றமும் தாறுமாறாக நொறுங்கியிருக்க, அதனைக் கண்டவனின் இதயம் வேலை நிறுத்தமே செய்து விட்டிருந்தது.

“ஸ்ரீ…” என்று கத்திக்கொண்டு காரை விட்டு இறங்கி திலீப்பின் காரை நோக்கி ஓட தொடங்கினான் பிரகதீஸ்வரன்.