வேலையைக் கவனிக்கும் எண்ணமேயின்றி தன்னையே கேலியாக வளைந்த இதழ்களுடன் நக்கல் பார்வை பார்த்துக் கொண்டிருந்த திலீப்பை ஸ்ரீமதி வெறுப்புடன் நோக்கினாள்.
இழுத்துப் பிடித்த பொறுமையோடு, “அண்ணா… அடுத்த வருஷ யூனிபார்ம் காண்டராக்ட் பார்க்கணும்ன்னு சொன்னீங்க…” என்று வேலை விஷயத்தை நினைவு படுத்தினாள்.
அவனோ கைகள் இரண்டையும் நிதானமாகப் பின்னோக்கி உயர்த்தி, உடலை வளைத்துச் சோம்பல் முறித்தபடி, “இங்கே உனக்கு எந்த கன்சர்ன் இருந்தாலும் எங்கிட்டயே சொல்லலாம் ஸ்ரீ… உன் புருஷனுக்கு அந்த ஸ்டீல், சிமெண்ட் இதெல்லாம் தான் தெரியும்… இந்த ஸ்கூல் பத்தி அவனுக்கு ஜீரோ நாலேட்ஜ்” என்றான் திலீப் நக்கலாக.
உன் கணவனை விட நான் தான் பெட்டர் என்பது போன்ற தோரணையில் சொன்னவனைப் பார்த்து, ஸ்ரீமதி பல்லைக்கடித்தாள். என் புருஷனைப் பற்றி இவனுக்கு என்ன வந்தது என ஆத்திரமாக வந்தது அவளுக்கு. “இங்க பாருங்கண்ணா வேலை விஷயம் மட்டும் பேசுங்க. அனாவசியமா பேசினா எனக்கு சுத்தமா பிடிக்காது. சும்மா சும்மா இதையே சொல்லிட்டு இருக்க மாட்டேன்” என்றாள் காரமாக.
“ரொம்ப சூடா இருக்க போலவே… உன் ஹஸ்பண்ட் இப்படியேவா உன்னை விடறான். பொண்டாட்டி சூட்டைத் தணிக்கத் தெரியாதா அவனுக்கு?” என ஜொள்ளு வழியும் குரலில் அவன் பேச, கோபத்தில் சிவந்து விட்ட கண்களால் அவனை எரித்தாள்.
“ஹப்பா… பார்வை கூட என்ன சூடு?” திலீப் அடங்குவதாக இல்லை.
“ச்சீ ச்சீ… ஸ்டாப் இட். உங்களுக்குக் கொஞ்சம் கூட மேனர்ஸ் இருக்காதா… நான் கிளம்பறேன்…” என்றவள் நடையில் தன் கோபத்தைக் காட்டி வேகமாக வெளியே வந்துவிட்டாள்.
ஒருமாதிரி மூச்சடைக்கும்படி உணர்வு! ‘ச்சே! இவன் எல்லாம் மனுஷனா? இப்படி அலையறான். தங்கச்சி உறவு முறைன்னு கூடவா தோணாது. நான் இந்த வேலை செஞ்சுதான் ஆகணும்ன்னு இல்லை. இந்த தடிமாடுகிட்ட அவஸ்தை படணும்ன்னும் எனக்கு அவசியம் இல்லை. ஆனா எனக்கு இருக்க பிரச்சினை இங்கே எத்தனை பேருக்கு இருக்கோ. அவங்களை எல்லாம் எப்படி அப்படியே விட… அவங்க பாவம் இல்லையா?’ என்ன செய்வது என்று புரியாமல், இந்த சூழலை எப்படி எதிர்கொள்ள எனத் தெரியாமல் தவிப்போடு நின்றிருந்தாள்.
‘ச்சீ! எப்படி மோனிஷாக்கா இவனை போயி லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருப்பாங்க. இவனைப் பார்த்தாலே பொறுக்கின்னு தெளிவா தெரியுதே. ஒருவேளை பச்சோந்தி மாதிரி ஆளுக்கு தகுந்த மாதிரி நடந்துப்பானோ? இவனை நம்பி செழியன் பொறுப்பை எப்படிக் கொடுக்கிறது’ செழியன் முகம் நினைவில் வர எதையாவது செய்ய வேண்டுமே என்று அவளின் உள்ளம் தவித்தது. மரங்கள் நிறைந்த பள்ளியின் பக்கவாட்டு பகுதிக்கு யோசித்தபடியே வந்திருந்தாள்.
ஒரு பெரிய மரத்தின் பின்னே நின்றபடி ஆழ மூச்சிழுத்தபடி தன்னை நிதானப்படுத்தியவள், ‘இனி இங்கு வேலையே செய்யக் கூடாது. பிரகதீஸிடம் நடந்ததைச் சொல்லி விடலாம். நம்புவதும் நம்பாததும் இனி அவன் பொறுப்பு’ என்று யோசித்தவளுக்கு, ‘ஒருவேளை அவன் நம்ப மறுத்தால்???’ என்ற அச்சமும் எழுந்தது.
‘இல்லை இல்லை நம்புவான். என்ன நம்ம வேலைக்குப் போக பிடிக்காம இப்படி சொல்லறோம்ன்னு இல்லாம… உண்மையான காரணத்தைத் தெளிவா சொல்லணும்’ மரத்தில் சாய்ந்தபடி எப்படி இதை எடுத்துச்சொல்ல என்று யோசித்தபடியே நின்றிருந்தாள்.
பிரகதீஸ்வரனும் மணிவண்ணனும் தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“நம்ம நினைக்கிறதை விட அவன் மட்டமா இருக்கணும் தாத்தா. ஸ்ரீ முகமே சரியில்லை. அவ வேலைக்கு சேர்ந்ததுல இருந்து ரொம்ப அப்செட்டா இருக்கா…” என்ன செய்வதென்று புரியாத மனநிலையில் பிரகதீஸ் இருந்தான்.
நேற்று அவள் பேச்சை மாற்றியபோது ஆசுவாசம் கொண்டிருந்தாலும் காலையில் முகமே இல்லாமல் வேலைக்குக் கிளம்பிச் சென்றவளைப் பார்த்ததும் அவனுக்கு மனதே இல்லை. கண்டிப்பா இவளுக்குப் பிரச்சினை இருக்கு. என்ன நம்மகிட்ட சொல்லத்தான் மாட்டீங்கறா என அவனுக்கு உறுதியானது.
“நான் சொன்ன மாதிரி தானே திலீப்புக்கு போன் பண்ணிச் சொல்லியிருக்க…” என மணிவண்ணன் தாத்தா கேட்க, “ஹ்ம்ம்… ஹ்ம்ம்…” என்று தலையசைத்தான்.
திலீப்பிடம் ஸ்ரீமதிக்கு வேலை, படிப்பு என இரண்டையும் ஒன்றாகக் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்லச் சொல்லியிருந்தார் தாத்தா. முந்தையநாள் அவள் வேலைக்குப் போக மாட்டேன் எனக் கேட்டு நின்றதை சொன்னதும் இப்படி ஒரு ஐடியா தந்த தாத்தா மீது அவனுக்குப் பயங்கர அதிருப்தி.
“எனக்கு ஒன்னு மட்டும் புரியலை தாத்தா. இப்ப அவனோட தப்பைக் கண்டுபிடிக்க அங்கே ஸ்ரீயை அனுப்பாட்டி என்ன? நமக்கு விசுவாசமா வேலை செய்யற யார் வேணா இதை செய்ய மாட்டாங்களா? அவ ரொம்ப சின்ன பொண்ணு தாத்தா. ஹாஸ்டல் தவிர அவளுக்கு என்ன தெரியும்? குடும்பச் சூழலே இப்ப தான் பழகறா?”
“அப்ப வெளியுலகம் எப்ப பழகறது? அவளைப் பொத்தி பொத்தி வளர்க்கணுமா உனக்கு? அப்பறம் பொற்செழியனுக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்? இவ்வளவு பேசறியே அங்க என்ன பிரச்சினைன்னு ஸ்ரீமதி உன்கிட்ட வந்து தெளிவா சொன்னாளா?” என்றதும் அவன் முகம் வாடியது.
‘இல்லையே திலீப் குறித்து அவள் எதுவும் வாய் திறக்கவில்லையே. தனக்குச் சிரமம், தன்னால் முடியவில்லை என்று பொய் சொல்லி சமாளிக்குமளவா அவளுக்கும் எனக்குமான உறவு. அவளை நான் நம்புவேன் என்ற உறுதி ஏன் அவளிடம் இல்லை. அவளுக்கு நான் துணை நிற்பேன் என்ற நம்பிக்கை ஏன் அவளுக்கு வரவில்லை’ மனம் சோர்ந்தான்.
அவன் வாடிய முகத்தை கவனித்தபடி, “இப்ப புரியுதா? அவளுக்கு இன்னும் அந்தளவு தைரியம் வரலை. இன்னும் பிரச்சினைன்னு வந்தா அதை விட்டு ஓடி ஒழியும் மனநிலையில தான் அவ இருக்கா. அதை மாத்த வேண்டாமா நம்ம? அதோட நம்ம இப்ப பொற்செழியனோட நன்மைக்காக, எதிர்காலத்துக்காக சில விஷயங்களை தெரிஞ்சுக்க நினைக்கிறோம். அது எல்லாமே நம்ம யூகம் தானே தவிர சரியா இருக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை.
அதுதான் இந்த வேலையை வேற யார்கிட்டேயும் நம்பி ஒப்படைக்கலை. ஏன் ஸ்ரீமதிகிட்டேயே நமக்கு என்ன தேவைன்னு தெளிவா சொல்லலையே! அவ அவளுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அமைதியா ஒதுங்கிற குணமா இருக்கலாம். ஆனா அவளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சினைன்னு தெரியும் போதும் கண்டிப்பா ஓடி ஒழியமாட்டான்னு தோணுது. ஏன்னா அவ தர்மராஜன் மாதிரி… எனக்கு அவளோட இருக்கும்போது அவனோட இருக்க மாதிரியே தோணும்… கூடிய சீக்கிரம் கண்டிப்பா அவ எல்லா பிரச்சினையையும் உன்கிட்ட சொல்லுவா… அப்படி இந்த வாரத்துக்குள்ள எதுவும் சொல்லாட்டி நாம மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம் சரியா…” என்று சொன்னதும்,
“அப்ப உங்க பேரனோட மனைவின்னு அவளை நீங்க பார்க்கலை. உங்க நண்பன் பேத்தி தான் அவ உங்களுக்கு…” என்று முறைத்தான்.
“டேய் எப்படி பார்த்தா என்ன? என் பார்வதி கூட தர்மராஜன் கூட எனக்கு இருக்கும் உறவை ஒன்னும் சொன்னதில்லைடா. நீ இப்படி பொங்கறியே… ரொம்ப பொஸஸிவ்டா நீ?”
“ஆமா… ஆமா… ரொம்ப பொஸஸிவ். என் பொண்டாட்டியை அவன் 50kg தாஜ்மஹால்ன்னு என் முன்னாடியே வர்ணிக்கிறான். அவன் கண்ணை நோண்டாம வந்திருக்கேன். கூடவே அவன் இருக்கிற இடத்துலயே வேலை செய்ய விட்டிருக்கேன். என்னை போயி பொஸஸிவ்ன்னு சொல்லிட்டு. ம்ப்ச் அவ சமாளிக்க மாட்டா தாத்தா. அவ ரொம்ப பாவம். அவளுக்கு மட்டும் எதுவும் ஆனா உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன் பார்த்துக்கங்க”
பேரனின் கோபத்தில் ஆர்ப்பாட்டமாகச் சிரித்தவர், “ஹ்ம்ம்… நிஜமா நீ தான் பொண்டாட்டியை கல்யாணம் முடிஞ்சும் கண்டுக்காம இருந்தியா?” என வம்பாகக் கேட்க,
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டவர், “இப்ப நம்ம திலீப்பை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்க நினைக்கிறோம் அவ்வளவுதான். இது பொற்செழியனுக்காக. இதை நம்ம மோனிஷா கல்யாணம் அப்பவே செஞ்சிருக்கணும். தப்பு என்னோடது தான்! உங்க அம்மா, அப்பா மேல இருந்த கோபத்துலயும் வெறுப்புலயும் உங்ககிட்ட இருந்தும் விலகியிருக்கக் கூடாது. அதுக்காக நான் வருத்தப்படாத நாளே இல்லை” என்று சொன்னவர், ஒரு நொடி மௌனம் காத்தார்.
“ஒருவேளை நான் சரியா இருந்திருந்தா மோனிஷாவை காப்பாத்தி இருக்க முடியுமோன்னு எனக்குள்ள அரிச்சிட்டே இருக்கு. அவ இறப்புல எனக்கு எதுவோ சரியா படலை. எங்கேயோ தப்பு நடந்த மாதிரியே தோணுது. அவ இழப்பை என்னால இன்னும் ஏத்துக்க முடியலை. அவளுக்கு சாகிற வயசா?” என்றவருக்கு குரலே எழவில்லை.
கண்களை நிறைந்துவிட்ட கண்ணீருடன், எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் தாத்தா தளர்ந்து போய் இருப்பதைப் பார்க்க, பிரகதீஸ்வரன் மனம் கசங்கியது.
“தாத்தா…” என ஆறுதலாக அவர் கரம் பற்றினான். தமக்கையின் நினைவில் அவன் மனதிலும் பாரம் ஏறியது.
“மோனிஷாவோட இழப்பு எல்லாரை விடவும் செழியனுக்குத் தான் அதிகம். அவனை இந்த நிலையில் பார்க்கும் ஒவ்வொரு நாளும் என்னால என்னையவே மன்னிக்க முடியலை. இப்ப எனக்கு நடந்ததை நினைச்சு கவலை படறதை விட உன்னோட, செழியனோட, ஸ்ரீயோட வாழ்க்கையை நல்லவிதமா மாத்தி தரணும்ங்கிற வைராக்கியம் மட்டும் தான் நிறைய இருக்கு. அது நான் கண்ணை மூடறதுக்குள்ள சரியானா தான் என்னோட இறப்பு கூட நிம்மதியா இருக்கும்…”
“தாத்தா… ஏன் தாத்தா… ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க. நான் பார்த்துப்பேன் தாத்தா. செழியனை, ஸ்ரீயை கண்ணும் கருத்துமா என் உயிர் இருக்கும் வரை நான் பார்த்துப்பேன் தாத்தா. பிளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க” பதற்றமும் தவிப்புமாகக் கூறினான்.
“இல்லை உனக்குப் பயம்? ஸ்ரீயை அங்க ஆதரவில்லாம விட்ட பயம்? உனக்கு விருப்பம் இல்லாட்டி ஸ்ரீயை வேலையை விட்டு நிறுத்திடலாம். எனக்கு செழியன் மேல இருக்க அக்கறைக்குத் துளியும் குறைவில்லை உன்மேலேயும், ஸ்ரீ மேலயும் நான் வெச்சிருக்க பாசம்…” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, பிரகதீஸுக்கு கஷ்டமாகப் போய்விட்டது.
பிரகதீஸ் தாத்தாவின் பாசத்தை நன்கு அறிவானே! அவனுக்கும் ஸ்ரீக்கும் நடந்த திருமணமே அவரது பாசத்துக்கு சான்றாயிற்றே! அவன் மனதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தானே அதனைக் கண்டறிந்தார். ஏன் அவனுக்கே ஸ்ரீமதியின் மனதைக் கண்டுபிடிக்க தெரியவில்லையே! அதைக்கூட கண்டறிந்து அவனது முதல் காதலை அவனிடமே சேர்த்தவர் ஆயிற்றே!
“ம்ப்ச் என்ன தாத்தா… அதெல்லாம் எனக்குத் தெரியாதா… அவ வேலைக்கு போறதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. எனக்குப் பயம் இருக்கிறது நிஜம் தான்… அதோட நீங்க நினைக்கிற மாதிரி அவளைத் தனியா எல்லாம் விடலை. நம்பிக்கையான ரெண்டு பேரை அவளை எப்பவும் கண்காணிக்கணும்ன்னு சொல்லித் தான் அனுப்பி இருக்கேன். இருந்தாலும் கொஞ்சம் பயம் தான். ஆனாலும் சமாளிச்சுக்கலாம் தாத்தா. பிரீயா விடுங்க…” என்று தாத்தாவைச் சமாளித்தான்.
மனம் மட்டும் ஸ்ரீமதிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற தவிப்பில் படபடத்தது.
மரத்தின் பின்னே நின்றிருந்த ஸ்ரீமதியின் உள்ளக்கொதிப்பு அடங்கவே வெகுநேரம் பிடித்தது. ஓரளவு ஆசுவாசம் ஆனதும் அங்கிருந்து நகரப் பார்க்க, இரண்டு, மூன்று ஆசிரியைகள் அவ்விடம் நோக்கி வருகிறார்கள் போல! அவர்களின் பேச்சு சத்தம் கேட்டது.
இந்த பள்ளியின் பொறுப்பில் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தபடியால் அவளுக்குக் குரலை வைத்தெல்லாம் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி அவர்கள் வந்தால் என்ன திரும்பிப் போய் விடலாம் என்றுதான் நினைத்திருந்தாள்.
ஆனால், பள்ளி வளாகத்தில் இருந்து சற்று தள்ளி வந்திருந்ததாலும், அந்த கிரௌண்டில் அந்த நேரம் யாரும் இல்லாமல் இருப்பதாலும் அவர்கள் வெகு இலகுவாகப் பேசிக்கொண்டு வந்திருக்க, அதுவும் பேச்சு தன்னை பற்றியதாக இருக்க, தன் இருப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மரத்தின் பின்னேயே மறைந்து நின்று அவர்களின் பேச்சைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள்.
“ஸ்ஸ்ஸ் மேம்… எவ்வளவு டைம் உங்ககிட்ட சொல்லறது பேரைச் சொல்லி பேசாதீங்கன்னு…”
“அட போங்க மேம்… ஸ்டாப் ரூமில் இருந்தா பேச முடியாதுன்னு தானே லன்ச் முடிச்சு இப்படி வந்து பேசறது… இங்க யாரு இருக்க போறா… இங்கேயாச்சும் நிம்மதியா பேச விடுங்க…”
“அதுவும் சரி தான்…”
“ஸ்ரீமதி மேடத்துக்கு எதுவும்ன்னா பிரகதீஸ் சார் சும்மா விட மாட்டாரு… அதுனால கொஞ்சம் அடக்கி தான் வாசிப்பான். ஆனா அந்த எருமை மாட்டுக்கு அப்படி என்னதான் ஒல்லியா இருக்க பொண்ணுங்களை பார்த்தா தோணுமோ? அப்படியே ரெமோ அவதாரம் எடுத்துடறான்… பொறுக்கி, பொறம்போக்கு…”
“அதை சொல்லுங்க… இவனுக்கு பயந்து எத்தனை பொண்ணுங்க வேலைக்கு சேர்ந்த உடனேயே ஓடி போயிருக்காங்க… அந்த அருணாவும், தேவகியும் எவ்வளவு அவஸ்தை படறாங்க. இவனோட ஒத்து போற வழிஞ்சாங் கேசுகளோட இவன் இதை நிறுத்திக்க வேண்டியது தானே… நமக்கெல்லாம் கொஞ்சம் வயசானதால தப்பிச்சோம்…”
“ஆனா பிரகதீஸ் சார் என்ன பண்ணிடுவாரு மேம்? மோனிஷா மேடம் விஷயத்திலேயே அவர் ஒன்னும் தலையிட்ட மாதிரி தெரியலையே…”
“ஹ்ம்ம் ஆமா ஆமா… அவன் எப்படி மோனிஷா மேடத்தை வழிக்கு கொண்டு வந்தான்னே இன்னும் புரியலை. அவங்க இங்க வேலைக்கு சேர்ந்ததும் எப்படி கண்ணியவானா மாறியிருந்தான். நான் கூட அப்பவெல்லாம் அவனை திருந்திட்டான் போலன்னு நினைச்சேன்…”
“யாரு அவன் திருந்துவானா? அவங்க கிட்ட இருந்த ஸ்கூல் ஷேர்ஸ் மேல தான் கண்ணு அவனுக்கு… கூடவே அவங்க நல்ல வசதியான பொண்ணு. குணமும் தங்கம்… அவனுக்கு அதைவிட வேற என்ன வேணும்? அதுதான் மடக்கி கல்யாணம் பண்ணிட்டான்”
“ஆமா அவனுக்கு மோனிஷா மேடம் ரொம்ப அதிகம் தான்! ஆனா அவங்களை வெச்சு பொழைச்சானா? ஏற்கனவே ரெண்டு மூணு வருஷம் குழந்தை வேண்டாம்ன்னு தள்ளி போட்டு மேடத்தை மெண்டல் டார்ச்சர் செஞ்சான். அப்பறம் குழந்தை பிறந்ததும் அவங்க வெயிட் போட்டதுக்கு என்ன எல்லாம் டார்ச்சர் கொடுத்தானோ… ஒன்னு ரெண்டு வருஷத்துல அதுவே குறைஞ்சிருக்கும். இல்லையா அவங்க முயற்சி எடுத்து குறைச்சு இருப்பாங்க. இவன் போட்டு தந்த டார்ச்சர்ல தான் அவங்க வெயிட் லாஸ் ஆபரேஷன் பண்ணி… அது பெயிலியர் ஆகி… ச்சு… சாகிற வயசா அவங்களுக்கு…”
காதால் கேட்ட விஷயத்தால் ஸ்ரீமதிக்கு தலையில் இடி விழுந்தது போல ஆனது. கண்கள் வெறித்து நோக்க, அதில் நீர் நிறைந்து பொழியத் தொடங்கி விட்டது. எவ்வளவு பெரிய அநியாயம்!
“ஆனா மோனிஷா மேடம் ஏன் அந்த ஆபரேஷனுக்கு ஒத்துக்கிட்டாங்க…”
“ம்ப்ச்… நான் தான் சொல்லறேனே அது அவங்க சம்மதம் இல்லாம அவங்களுக்கு தெரியாம நடந்த ஆபரேஷன்… இதுல திலீப் சாமர்த்தியம் என்னன்னா அதை வெளிய தெரியாம பாத்துக்கிட்டது தான். இன்னைக்கு வரைக்கும் பிரகதீஸ் சாருக்கு கூட தெரியலை தானே…”
“இதை வெச்சு தான்…” என்று அந்த ஆசிரியை எதுவோ காட்டிக்கொண்டிருக்க, ஸ்ரீமதி என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே மெல்ல எட்டிப்பார்த்தாள். அது என்னவோ தாள்கள் போல இருந்தது. என்ன என்று அவளுக்குப் புரியவில்லை.
ஆனால், அவளுக்கு விடையாக, “என்னது டிவோர்ஸ் பேப்பேர்ஸா?” என்று மற்ற இரு ஆசிரியைகளும் கோரஸாக கேட்டதும் தான் அது என்னவென்றே புரிந்தது.
“ஆமாம். மோனிஷா மேடம் அப்பளை பண்ண முயற்சி எடுத்திருக்காங்க. அதாவது அவங்களுக்கு திலீப் கூட வாழ விருப்பம் இல்லை. அவங்க எப்படி அவனுக்காக ஆபரேஷன் செய்வாங்க…”
“சரி கவனம். ஆனா இவன் செஞ்ச பாவத்துக்கெல்லாம் நிறைய அனுபவிப்பான் பாருங்க…”
“ஹ்ம்ம் நானும் அதேதான் நினைச்சிட்டு இருக்கான் மேம். அந்த கடவுள் இவனுக்கு தண்டனை மட்டும் தந்துட்டா போதும் என் மனசு குளிர்ந்து போயிடும்…”
“சரி வாங்க… ரொம்ப நேரம் ஆச்சு. இனி லன்ச் டைம் முடிஞ்சா அடுத்த கிளாஸ் பார்க்கணும்…” என அவர்கள் மூவரும் அவ்விடம் விட்டு நகர கேட்ட விஷயங்களின் வீரியம் ஸ்ரீமதியை பெரும் அதிர்ச்சியில் தள்ளியது.
அவளது மனக்கண்ணில் பொற்செழியன் புன்னகையோடு நின்றிருந்தான். அவன் அம்மா இல்லாமல் வளர காரணம் இந்த திலீப் தானே… அவனை அவன் செய்த பாவத்தை அப்படியே விடுவதா? அவளின் இதழ்கள் கோணலாக வளைந்தது.
அதீத அதிர்ச்சியில் இருந்தவள் நிதானமின்றி ஒரு விஷயத்தை யோசித்தாள். அது சட்டத்துக்குப் புறம்பாக இருந்ததோடு, அவளின் உயிரையும் பணையம் வைக்கக் கூடியதாக இருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை.