ஸ்ரீமதி புகுந்த வீட்டிற்கு நுழைந்த நாள் முதல் பார்த்திராத விஷயத்தை அன்றைய தினம் பார்த்தாள்.
அவள் ஒருநாள் முன்னதாக தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். வேலைக்குச் சேர்ந்த மறுநாளே வீட்டில் பிரச்சினையாகி விட்டது.
இத்தனை நாட்களும் தாங்கள் உண்டு தங்கள் வேலையுண்டு என்பது போல வலம் வந்து கொண்டிருந்த அவளின் மாமனார் சக்திவேலும், மாமியார் லலிதாவும் இப்படியொரு அவதாரம் எடுப்பார்கள் என்று அவள் ஒருநாளும் எண்ணியதில்லை.
லலிதா அதிகம் பேச அதை ஆதரிப்பது போல சக்திவேல் நின்று கொண்டிருப்பதை அமைதியாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று அதிர்ச்சியாகவும் தான்!
“அம்மா பிசினஸ் பிசினஸ்ன்னு எவ்வளவு பணம் தான் வீண் செய்வீங்க? அப்படி பணம் வாங்குறதுக்கு பிசினஸை கவனிச்சா கூட பரவாயில்லை” பிரகதீஸ்வரன் பொறுமையை இழந்து கத்திக் கொண்டிருந்தான்.
“என்னடா பெருசா எங்ககிட்டேயே கணக்கு கேட்குற? சொத்து, சுகம் எல்லாம் எங்களுக்கு பரம்பரை பரம்பரையா வந்தது. இதெல்லாம் ஒன்னும் நீ சுயமா சம்பாரிக்கலை. நீ வந்து இங்க நாட்டாமை பண்ணறதுக்கு… மெல்ல மெல்ல சாமர்த்தியமா எல்லாத்தையும் உன் கட்டுப்பாட்டுல எடுத்திட்டு இப்ப எங்ககிட்டயே கணக்கு கேட்கிற?”
“உங்க காலம் வரைக்கும் நீங்க அழிச்சதெல்லாம் பத்தாதா உங்களுக்கு?”
“அது எங்க இஷ்டம்… எங்களுக்குன்னு வந்த சொத்தை என்ன செய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கு…”
“அம்மா ஆடம்பர செலவுக்காக எத்தனை சொத்தை அழிப்பீங்க. நான் தலையெடுக்காட்டி நம்ம நிலைமை எங்க போயிருக்கும்ன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அப்படி இருந்தும் இன்னும் நீங்க அதையே தொடர்ந்தா என்ன அர்த்தம்ன்னு எனக்கு புரியவேயில்லை. உங்களை நம்பி ஆரம்பிச்ச தொழிலோட வரவு, செலவு கணக்கை நீங்களே பார்த்துட்டு, அதுல உங்களுக்கு திருப்தி வந்தா மேற்கொண்டு பணம் கேளுங்க…”
“பெரிய சுண்டைக்காய் தொழிலு… ஒரு பொட்டிக் வெச்சு தந்திருக்க… அதுக்கு நீ இவ்வளவு கணக்கு பார்க்கிற…”
“செய்யற தொழில் மேல மரியாதையே இல்லை உங்களுக்கு. அதுசரி அந்த தொழிலை ஒரு நாள் ஆச்சும் கவனிச்சு இருந்தா தானே? இல்லை அந்த தொழிலோட வருமானத்துல உங்க தேவைகளை பூர்த்தி செஞ்சிருந்தா கூட அந்த தொழில் மேல ஈடுபாடு வந்திருக்கும்… பெருமைக்குப் பந்தா காட்டிக்க உங்களுக்கு ஒரு தொழில்…”
லலிதாவிற்கு பணம் மறுக்கப்பட்ட கோபம் தலைக்கேறியது. “ஏன்டா எனக்கு சீதனமா ஸ்கூல்ல பங்கு வந்தது. அது என்னோட அப்பா வீட்டுச் சொத்து. அதை எனக்கு விடாம பொண்ணுக்கு சீதனமா கொடுங்கன்னு பிடிவாதம் பிடிச்சு என் கையில் இருந்த தொழிலைப் பிடுங்கியவன் நீ… அதை பிடிங்கிட்டு இந்த பொட்டிக் வெச்சு கொடுத்ததும் இல்லாம, இந்த தொழில் வளர தேவையான பணமும் தர மாட்டீங்கிற. அப்பறம் எப்படி லாபம் வரும்?”
“அக்காவுக்கு சீதனமா கொடுத்ததுல என்ன பிரச்சினை உங்களுக்கு?”
“ஆமா பெரிய மகாராணி. அவளாச்சும் அந்த சொத்தை அனுபவிச்சாளா இல்லவே இல்லை… அல்பாயுசுல போயிட்டு பாவி மக என்னையும் அனுபவிக்க விடாம பண்ணிட்டா…” மகளின் இறப்பைப் பணத்திற்காக விமர்சனம் செய்யும் தாயை மிகுந்த வெறுப்புடன் நோக்கினான்.
பணமும் அகங்காரமும் ஒரு மனிதனை எந்தளவு தரம் தாழ்த்துகிறது. பிரகதீஸ்வரனின் உள்ளம் கசந்து வழிந்தது.
அம்மாவின் பேச்சைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “அம்மா…” என்று கத்தியவனுக்கு கட்டுப்படுத்த முடியாமல் கோபமாக வந்தது. சொந்த மகளின் இறப்பை யாராவது இத்தனை இலகுவாகக் குறை பேசச் செய்வார்களா!
அதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்த தந்தை இன்னும் எரிச்சல் மூட்டினார். “என்னப்பா நீங்க? அம்மா இவ்வளவு பேசறாங்க. இப்படி எதையும் கண்டுக்காம இருக்கீங்க” என்றான் எரிச்சலாக.
சக்திவேல் கூட நியாயம் பேசும் நிலையில் இல்லை. “என் தொழிலை நீ எடுத்துக்கிட்ட… உங்க அம்மாவுக்குன்னு அவ பிறந்த வீட்டுல கொடுத்த தொழிலை மகளுக்கு சீதனமா கொடுத்திட்ட… இந்த வயசுலேயே எங்களை முடக்கி வெச்சிருக்கிறது நீ… இதுல நீ நியாயம் கேட்கிற…” என்றார் அவர் பங்கிற்கு.
லலிதாவும் இணைந்து கொண்டார். “நீ தானே என்கிட்ட இருந்து என்னோட தொழிலை பிடுங்கியது”
பழைய கதைகளை மறந்து பேசும் இருவரையும் வெறுப்போடு நோக்கினான். “அம்மா நீங்க ஸ்கூல் மேனேஜ் செஞ்ச அழகுல… திலீப் குடும்பம் எத்தனை குற்றச்சாட்டு உங்கமேல வெச்சாங்க. நம்ம பார்ட்டனர்ஷிப்பே வேண்டாம்ன்னு சொன்னாங்க. சேர்ஸ் எங்களுக்கு சேல் பண்ண ஸ்டார்ட் பண்ணுன்னு நேரடியா கேட்டாங்க தானே… அப்பறம் தானே நம்ம மோனிஷாவை பொறுப்பை பார்த்துக்க அனுப்பினோம். அவ கவனிக்க தொடங்கின பிறகு தானே நல்ல முன்னேற்றம்!
அப்பாவும், வேதாச்சலம் அங்கிளும் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் நம்ம விநாயகம் ஏஜென்சீஸ் கம்பெனியை பார்த்திருந்தா கூட அதை இழுத்து மூடி இருக்க வேண்டியது தான்… அத்தனை குளறுபடி அதுல…” அவர்கள் இருவரும் செய்த பிழைகளைத் தெளிவாக எடுத்து சொன்னான். இந்த லட்சணத்தில் நீங்கள் பேசலாமா என்பது போல இருந்தது அவனது சாட்டையடி கேள்வி!
எதையும் காதில் வாங்காமல், “இப்ப எனக்கு இன்னும் மெட்டீரியல்ஸ் வாங்கணும். பணம் தருவியா மாட்டியா?” என லலிதா தன் பிடியிலேயே நின்றார்.
“முதல்ல நான் தந்த பணத்துக்கு கணக்கு சொல்லுங்க… இதுவரை நீங்க அழிச்சதெல்லாம் போதும்” பிரகதீஸ்வரனும் அழுத்தமாக நின்றான்.
“அப்பவே நினைச்சேன் டா. நீயும் அந்த கிழவனும் கூடிக் கூடி பேசும்போதே… அந்த ஆள் பத்த வெச்சுட்டானா?”
“ஹா… தாத்தாவை கிழவன்னு சொல்லற நீங்க மட்டும் என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? உங்களுக்கும் மருமக வந்தாச்சு. பேரன் எடுத்தாச்சு. வார்த்தையை அளந்து பேசுங்க. உங்க சாவகாசமே வேண்டாம்ன்னு தானே இந்த வீட்டுல எந்த விஷயத்திலேயுமே தலையிடாம அவர் இருக்காரு… இன்னும் என்ன அவரை சீண்டிட்டு இருக்கீங்க…”
“யாரு… யாரு தலையிடாம இருக்காங்க… அதெல்லாம் நல்ல விவரம் தான். சரியான காரியவாதி… சமயம் பார்த்து அந்த ஆளோட பிரண்டு பேத்தியை இங்கே மருமகளா கொண்டு வந்துட்டாரே…” எகத்தாளமும் நக்கலும் போட்டிப் போடும் குரலில் லலிதா சொல்ல, இத்தனை நேரமும் சண்டையைத் தடுக்கவும் முடியாமல், இதில் தான் என்ன செய்ய வேண்டும் என்றும் புரியாமல் ஓரமாக தவிப்போடு நின்றிருந்த ஸ்ரீமதி அதிர்ந்து போனாள்.
முகம் கசங்க நின்றிருந்தவளுக்கு லலிதா பேசிய பேச்சை எண்ணி உள்ளம் காயம் கொண்டது. காயம் கொண்ட மனதிற்கு இதமான மருந்தைக் கணவன் தடவினான் அவனின் நேசத்தினை வெளிப்படுத்தும் செய்கையால்!
லலிதா சொன்னதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், “அம்மா…” என்று கண்கள் ஆத்திரத்தில் சிவக்க முகமும் உடலும் இறுகக் கத்தினான் பிரகதீஸ்வரன்.
ஆத்திரத்தில் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து உடல் முறுக்கேறி நின்றிருந்தவனின் தோற்றம் ஐயனார் சிலை போல ஆஜானுபாகுவாக இருந்தது. அதில் லலிதாவே ஒரு நிமிடம் அரண்டு போனார்.
கூடப்பிறந்த அக்காவைப் பேசும்போதும், அவனது தாத்தாவைப் பேசும்போதும் கோபம் கொண்டானே தவிர இந்தளவு உக்கிரம் கொள்ளவில்லை. அப்படியென்றால் இவனுக்கு இந்த பெண்ணை அவ்வளவு பிடிக்குமா? இல்லையே கல்யாணம் முடிந்தும் இருவரும் ஒவ்வொரு திசையில் தானே இருந்தார்கள். சீக்கிரமே இருவரும் பிரிந்து விடுவார்கள் என்ற அவளது மனக்கோட்டை மணல் கோட்டையா? இந்த அதிர்ச்சியை உள்வாங்க முடியாமல் லலிதா நின்றிருக்க,
“பாருங்க… என் கல்யாண பேச்சைத் தொடங்கியது வேணும்ன்னா தாத்தாவா இருக்கலாம். ஆனா என்னோட கல்யாணம் என்னோட முடிவு மட்டும் தான். என் மனைவியைப் பத்தி ஒரு வார்த்தை பேச உங்களுக்கு உரிமை இல்லை. இனி இந்த பேச்சு வரக்கூடாது… மீறி வந்தது…” என்றான் எச்சரிக்கையாக.
சக்திவேல் மகனின் அவதாரத்தில் இனிமேலும் இந்த விஷயத்தில் தலையிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மகனைப் பகைத்துக் கொண்டால், தன் ஆடம்பர செலவுக்கு அவன் மூலம் வரும் பணமும் தடைப்பட வாய்ப்புள்ளது எனப் புரிய மனைவிக்கு போதும் என்பது போல ஜாடை காட்டினார். ஆனால் லலிதா அதனைக் கவனிக்கும் நிலையில் இல்லை.
மகன் தன்னை மேலும் மேலும் அடக்குவது பொறுக்காமல், “எங்க அப்பா வீட்டுச் சீதனத்தை உன் பொண்டாட்டி கையில தூக்கிக் கொடுப்ப… ஆனா எனக்கு செலவுக்கு பணம் தர மாட்ட… இதை நான் கேட்கக் கூடாது அப்படித்தானே…” என ஆத்திரத்தோடு கேட்டார்.
ஆக, நான் பள்ளிக்குப் போவது தான் இவர்களை உறுத்துகிறதா ஸ்ரீமதிக்கு ஆயாசமாக வந்தது.
பிரகதீஸ்வரன் கொஞ்சம் கூட அசராமல், “அப்படியே தான்… இனி இதைப்பத்தி பேச்சு வந்தா உங்க பங்கை உங்க கையிலேயே தந்துட்டு நான் தனியா போயிடுவேன். அப்பறம் பழையபடி உங்க தொழில், உங்க தனிப்பட்ட செலவை எல்லாம் நீங்களே பார்த்துக்கங்க…” என்று இலகுவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
‘என்னது?!?’ என அதிர்ந்து நின்றார் லலிதா. முன்பே விநாயகம் ஏஜென்சீஸில் சக்திவேல் செய்த குளறுபடியால் இனி அவருக்கும் கம்பெனிக்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் அதன் பொறுப்பு மொத்தத்தையும் பிரகதீஸ்வரன் பெயருக்கு மாற்றியும் எழுதி வைத்து விட்டார் மணிவண்ணன்.
போதாக்குறைக்குப் பள்ளியில் லலிதாவிற்கு இருக்கும் பங்கும் மகள் பெயருக்கு மாற்றப்பட்டிருக்க, அது இப்பொழுது பொற்செழியனுக்கு என்று வந்து நிற்கிறது. கார்டியனாக திலீப் இருக்கிறார். இதில் எந்த பங்கு தங்களுக்கு வர வாய்ப்புள்ளது என்று யோசித்தவருக்கு நிதர்சனம் புரிய லலிதா செய்வதறியாது நின்றிருந்தார்.
“ஏன்டி போதும் போதும்ன்னு நான் எவ்வளவு முறை ஜாடை காட்டினேன். சும்மா நீ கேட்கும்போதெல்லாம் அவனும் பணம் தருவானா? அந்த பொண்ணு எங்கே வேலைக்கு போனா உனக்கென்ன? அவளுக்கு காலுல காயம் ஆகி இங்கே தானே இருந்தா அப்ப ஒரு வார்த்தை என்னாச்சுன்னு கேட்டியா நீ? இப்ப அந்த ஸ்கூலுக்கு வேலைக்கு போறான்னு தெரிஞ்சதும் மட்டும் இப்படி சண்டை பிடிக்க வந்துட்ட…” சக்திவேல் இனியாவது மனைவி வாயை அடக்கி இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் சொல்ல,
“ஏன் இத்தனை வருஷம் அவ ஹாஸ்டல்ல இருந்தப்ப இப்படி எத்தனை பேரு அவகிட்ட கேட்டாங்களாம்…” என்று லலிதா ஆங்காரமாகக் கேட்டார்.
இன்னமும் கையை பிசைந்து கொண்டு, கணவன் பின்னேயும் போகத் தைரியம் இல்லாமல் அங்கேயே நின்றிருந்த ஸ்ரீமதியை இந்த சொற்கள் பலமாகத் தாக்கியது.
தாத்தா இந்த குடும்பத்திடம் ஒட்டுதல் இல்லாமல் இருப்பதன் காரணம் அவளுக்கு இப்போது புரிந்திருந்தது. அவரின் நிலையை எண்ணி பரிதாபம் கொண்டவளுக்கு தானும் அப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமோ என்று அச்சம் வந்தது.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடி” சக்திவேல் மனைவியைக் கடிந்து கொண்டார்.
“உங்களை அமைதியா இருங்கன்னு தானே சொன்னேன்”
“அதுக்கு தான் நம்ம பையன் என்னையும் வெச்சு செஞ்சுட்டானே… நீ இனியும் இப்படியே பேசிட்டு இருந்தா அப்பறம் பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். கவனமா இருந்துக்க… வீம்புக்கு எதையும் பண்ணி இருக்கிற சூழலையும் கெடுத்துக்காத…” எனக் கடுமையாக எச்சரித்தார்.
“அறிவிருக்காடி உனக்கு? அவனை ஏற்கனவே கோபப்படுத்தி வெச்சிருக்க… இன்னமும் அவனோட வம்பு வளர்க்காத… அதோட மருமகளைப் பத்தி பேசறதெல்லாம் வேண்டாம். அது உன் மகனுக்கு பிடிக்கலை. வீணா அவனை சீண்டி விடற மாதிரி ஆகும். சொத்து பிரிய கூடாது தொழில்ல மருமக பங்கு நமக்கு வரணும்ன்னு தானே எதுவும் சொல்லாம கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன… அப்ப எல்லாம் அமைதியா இருந்துட்டு இப்ப இப்படி எல்லாம் பேசினா உன் மகனே உன் புத்தியை தெரிஞ்சுக்குவான். அவன் தலையெடுக்காம இருந்திருந்தா நம்ம நிலைமை என்னன்னு யோசிச்சு பார்த்துட்டு மேற்கொண்டு பேசு…” தன்னால் முடிந்தவரை சக்திவேல் எடுத்துச் சொல்ல, அப்போதைக்கு தன் வாயை அடக்கும் முடிவுக்கு லலிதா வந்திருந்தார்.
மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது ஸ்ரீமதிக்கு. தானும் இருக்கிறோம் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல், மாமியார் இத்தனை பேசியதைக் கண்டு அவள் அயர்ந்து போனாள். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி கணவனின் நேசம், அதன் விளைவால் பெற்ற அன்னையிடமே அவன் கேள்வி கேட்ட விதம் எல்லாம் எல்லாம் அவளை ஏதோ ஒரு மாய உலகத்தில் சஞ்சரிக்க வைத்தது. ஆக இவர்களை ஒதுக்கி, தன்னை மயக்கிய கணவனை நோக்கிச் சென்றாள் ஸ்ரீமதி.