அகிலன் பொறுப்போடு இருந்திருந்தால் ரம்யாவின் அப்பாவும் அவனை நன்றாக நடத்தியிருந்திருப்பாரோ என்னவோ. வசதி வாய்ப்பு பார்த்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக யாரும் வருவதில்லை, வசதி இல்லா விட்டாலும் வேலை இல்லா விட்டாலும் பரவாயில்லை, தான் திருத்தி வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என்ற நம்பிக்கையில்தான் அவனுக்கு தன் பெண்ணை மண முடித்து கொடுத்திருந்தார்.
அவர் நினைப்பது போல அகிலன் மாறும் வரை அவனுக்கு அங்கு இப்படியான நிலையே.
இப்போது பைக் சரி செய்ய கூட பணம் கொடுக்க மாட்டார் என்றில்லை, என்ன… பணத்தோடு சேர்த்து திட்டுக்களையும் சேர்த்தே கொடுப்பார். வாயை மூடிக் கொண்டு வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் அகிலன்.
தங்கப்பனிடமிருந்து ஆனந்த் பணம் பெற்ற விஷயத்தை ராஜ் தனது அம்மா, மனைவி என யாரிடமும் சொல்லவே இல்லை. அந்த விஷயம் இப்போது காற்றில் கரைந்து விட்ட ரகசியமாகிவிட்டது.
ராஜ், திவ்யா இருவருக்கும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அடுத்து இப்போது இரண்டாவதாக கருவுற்று இருக்கிறாள் திவ்யா. மூன்று குழந்தைகள் வேண்டுமாம் அவளுக்கு.
ராஜ்தான், “அம்மாடி… ரெண்டு போதும். இத ஒழுங்கா வளர்த்து ஆளாக்கிறது எப்படின்னு பார்ப்போம்” என உறுதியாக சொல்லி விட்டான்.
தங்கப்பன் தனது நண்பரின் உரக் கடையில் கணக்கு வழக்கு பார்த்துக் கொள்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கலைவாணியும் இவரும் பெங்களூருக்கும் கும்பகோணத்துக்கும் என மாறி மாறி சென்று தன் மகள்கள் பேர பசங்களோடு இருந்து விட்டு வருவார்கள்.
தன் அம்மா கணவனை பற்றி ஏதாவது குறையாக சொன்னால் உடனடியாக அப்படி பேசாதே என உறுதியாக சொல்லி விடுகிறாள் தேன். இப்படி செய் அப்படி செய் என முரணாக எதையாவது சொல்லிக் கொடுத்தாலும் அதை மூளைக்கு ஏற்றாமல், தன் வாழ்க்கையை அமைதியாக எடுத்து சென்றாள் தேன்.
மாலில் குழந்தைகள் விளையாடும் பிரிவுக்கு வந்து தருணை விளையாட விட்டார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட தொகைக்குதான், அதற்கு மேல் அவன் அடம் செய்தாலும் சமாளித்தார்கள். போக போக, முடியாது என அம்மா சொல்லி விட்டால் என்ன அடம் செய்தாலும் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு விட்டான் தருண்.
மதிய சாப்பாட்டுக்கு உணவகம் ஒன்று சென்றார்கள். மாலையில் வீடு திரும்பி விட்டனர்.
பெங்களூரு வந்த பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, இரண்டு மூன்று நாட்கள் தங்குவது போல மனைவி மகனுடன் எங்கேயாவது செல்கிறான் ஆனந்த். பெரிய பிரச்சனைகளுக்கு பின் மனைவியுடன் சேர்ந்த பிறகு நிறைய மாற்றங்கள் அவனிடம். கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் மனம் திறக்க ஆரம்பித்தவனுக்கு போக போக அது பழகி விட்டது.
இப்போது எதுவாக இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள். உண்மையை சொன்னால் சண்டைகள் வரும் என்ற போதும் மறைக்காமல் சொல்லி அந்த நிமிடமே சண்டை போட்டு அடுத்த நிமிடம் என்றில்லா விட்டாலும் அடுத்த நாளாவது சமாதானம் ஆகிக் கொள்கிறார்கள்.
திருமணம் ஆன புதிதில் என்னவெல்லாம் கணவனிடம் இருந்து தேன் எதிர்பார்த்தாளோ அதெல்லாம் இப்போது நிறைவேறுகிறது. கடின காலத்தில் தன்னுடன் நின்ற மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மாறி, அவளுக்காக எதை செய்தாலும் காரணம் இன்றி அன்பாக ஆசையாக செய்கிறான் ஆனந்த்.
வீடு வந்த பிறகு தேநீர் நொறுக்கு தீனி என நேரம் சென்றது. தருண் கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். பெங்களூருவில் சொந்தமாக அபார்ட்மெண்ட் வாங்குவது பற்றி பேச்சு சென்றது. இப்போது கடன் என ஏதும் இல்லாமலிருந்தாலும் சேமிப்பென எதுவுமில்லை. அதனால் என்ன, லோன் வாங்கி வீடு வாங்கலாம் என்றான் ஆனந்த்.
“உனக்குன்னு ஒரு வீடு வாங்கணுங்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை தேனு, இப்போ ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோமே, நம்மாள முடியும்”
“சொத்து வாங்குறதாங்க பெரிய விஷயம், நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வந்திருக்கு. ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுத்து, அதே சமயம் அடுத்தவங்கட்ட விட்டுக் கொடுக்காம எதுவா இருந்தாலும் மனம் விட்டு பேசி…” என்றவள் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“இதோ இப்படி என்னை நீங்க தாங்கி…” என்றவள் சில நொடிகளுக்கு பின் அவனிடமிருந்து விலகி, அவனை தன் மடியில் போட்டுக் கொண்டு, “இப்படி உங்களை நான் தாங்கின்னு அன்பா காதலா வாழுறதுதான் பெருசு” என உள்ளார்ந்த குரலில் சொன்னாள்.
“என்ன அவசரம், சின்ன சின்ன அடியா எடுத்து வைப்போம், ஸ்லிப் ஆனா கூட ஈஸியா சமாளிச்சுக்கலாம். இப்ப இந்த செகண்ட் நான் ரொம்ப ஹேப்பி, நீங்க?” எனக் கேட்டாள்.
கண்கள் சிரிக்க, ஆமோதிப்பாக தலையாட்டினான்.
“உனக்குன்னு ஒண்ணும் சேர்க்கைலைன்னு தோணாதா உனக்கு? உங்க வீட்ல வருத்த பட மாட்டாங்களா? உங்கம்மா அண்ணன்லாம் ரொம்ப கவலை படுவாங்களே?” என்றான்.
“உங்க பொண்டாட்டி புள்ளைக்காகத்தான் நீங்க உழைக்குறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். ஸ்லோவா எல்லாமே செஞ்சுக்கத்தான் போறோம்”
“அப்படிங்குற?”
“ஆமாம், இப்போ ரைட் டைரக்ஷன்ல போறோம், சேர்ந்து போறோம். சொத்து வாங்கி சேர்க்கிறது விட என்ன நடந்தாலும் ஒருத்தர் கையை ஒருத்தர் விடாம, நம்ம பயணத்தை நாம சேர்ந்து தொடர்ந்திட்டே போறதுதான் முக்கியம். யாரு என்ன சொல்வாங்க நினைப்பாங்கன்னு டென்ஷன் எடுக்காம இந்த ஃப்ளோல அப்படியே போவோம்” என்றாள்.
“நீ சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான், நல்லா தலையாட்டுறேன் பாரு…” என தலையை நன்றாக ஆட்டி விளையாட்டாக சொல்வது போலவே, அவள் சொல்வதை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டான் ஆனந்த்.
சற்று நேர அமைதிக்கு பின், “வீடு வாங்க சேர்க்கணும்னு முடிவாகிடுச்சுனா இனிமே நாம சிக்கனமா இருக்கணும். நெக்ஸ்ட் வீக் எங்கேயாவது ட்ரிப் போயிட்டு வரலாமா?” எனக் கேட்டான்.
அடுத்த வாரம் தேக்கடி செல்ல முடிவு செய்து அதற்கான திட்டமும் போட்டனர். வீட்டு வேலை ஏதுமின்றி கணவன் மகனோடு இனிமையாக கழிக்க போகும் பொழுதை நினைத்து இப்போதே தேனுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவளது அந்த மகிழ்ச்சி ஆனந்தின் மனதை நிறைவாக உணர வைத்தது.
இரவில் தருண் உறங்கிய பின் கணவனும் மனைவியுமாக பால்கனியில் நின்று கொண்டு ஏதோ பேசியிருந்தார்கள்.
“இந்த குளிருக்கு சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்கும்” என கைகளை தேய்த்துக் கொண்டு ஆனந்த் சொல்ல, “காபி வேணாம், டீ ஓகே” என சொல்லி குறும்பாக சிரித்தாள் தேன்.
“நீ போடு தேனு, நான் போட்டா என்னாலேயே குடிக்க முடியாது” என்றான் ஆனந்த்.
“இப்படி சொல்லி தப்பிக்க முடியாது, நான் சொல்ல சொல்ல நீங்களே போடுங்க” என அவள் சொல்ல, அவனும் சம்மதித்தான்.
மனைவியின் வார்த்தையை பின்பற்றி நிறம் சுவை திடம் என அனைத்திலும் பூரணமான தேநீர் தயாரித்தான் ஆனந்த்.
ஒரு வாய் பருகியவள், “இவ்ளோ பெர்ஃபெக்ட் டீ போட்டா பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்னு வாய் விட்டு பாராட்ட வேண்டியதுதான்” என்றாள்.
“அப்டி ஒரு பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்டை மூணு லோகத்தில எங்கேயும் பார்க்க முடியாது. நீ என்னை அனுசரிச்சு போற மாதிரி, நான் உன்னை அனுசரிச்சு போற மாதிரி குறைகளை மறந்திட்டு இருக்கிற நல்லத மட்டும் எடுத்துக்கிட்டு வாழ வேண்டியதுதான்” என்றான்.
“ஹை ஹை நல்லாருக்கே, என்கிட்ட என்ன குறைய கண்டீங்களாம்?”
“ஏன் உன்கிட்ட குறையே இல்லையா? அடுத்த பாப்பா பத்தி நாம யோசிக்க வேணாம், தானா நடக்கிறப்போ நடக்கட்டும்னு விட்டாச்சு. அதுக்காக அப்படியே சும்மா இருந்தா பாப்பா வராது. அலாரம் வச்ச மாதிரி பத்து மணிக்கு தூங்கினா…” தேனின் ஆளை விழுங்கும் பார்வையில் பேச்சை நிறுத்தினான்.