பூத்தது ஆனந்த முல்லை -20

அத்தியாயம் -20

பெங்களூருவின் அந்தக் குளிர் கால காலையில் சோம்பலாக உணர்ந்த தேன் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவள் மீதேறி படுத்துக் கொண்ட தருண், “அம்மா எந்திரி” என்றான். 

“ஸ்கூல் இருக்கன்னிக்கு நல்லா தூங்குவ, இன்னிக்கு லீவ்தானேடா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடா ப்ளீஸ்” என்றாள் தேன். 

அம்மா சொன்னதை காற்றில் பறக்க விட்டு அவளை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தான் தருண். இப்போது இரண்டாவது வகுப்பு படிக்கிறான். 

இமைகளை திறந்து பார்க்க அதே படுக்கையில் ஓரமாக நன்றாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த். அவனை எழுப்பி விட்டவள், “எல்லா நாளும் நான்தான் இவனை பார்க்கிறேன், சண்டே கூட நானே பார்க்கணுமா?” எனக் கேட்டாள். 

“தூங்கணும் பார்த்துக்கோங்கன்னு சொன்னா பார்த்துக்க போறேன், அதுக்கு ஏன் குறை படிக்கிற?” எனக் கேட்ட ஆனந்த், தருணை பார்த்து, “வாடா என்கிட்ட” என்றான். 

“அப்பா வேணாம், அம்மாதான் வேணும்” என பிடிவாதம்  செய்தவனை வலுக் கட்டாயமாக தன்னிடம் இழுத்தான் ஆனந்த். தருணும் அம்மாவை நன்றாக பிடித்துக் கொள்ள இந்த இழுபறியில் உறங்கிய மாதிரிதான் என அலுத்துக் கொண்டே எழுந்து விட்டாள் தேன். 

ஆனந்த் பெங்களூருக்கு வேலைக்கு வந்த புதிதில் இவன் இங்கும் அவள் சென்னையிலுமாக என பிரிந்து கஷ்ட பட்டார்கள். ஆனந்த் என்ன தேடியும் மனைவிக்கு ஏற்ற வேலையாக எதுவும் அமையவில்லை. 

இப்படியே பிரிந்தே இருந்தால் சரி வராது என தேன் தன்னுடைய வேலையை விட்டு விட்டு கணவனுடன் வந்து விட்டாள். ஆனால் வேலையை தொடர முடியாததில் அவளுக்கு மிகுந்த மன வருத்தம். 

விரைவில் இன்னொரு குழந்தை வரும், என்ன கஷ்ட பட்டு வேலை தேடிக் கொண்டாலும் மீண்டும் அந்த வேலையை விட வேண்டியதுதான்,  ஆகவே கணவனின் சம்பாத்யத்தை அனுபவித்துக் கொண்டு வாழப் பார், எதற்கு வேலைக்கு போய் கஷ்ட பட நினைக்கிறாய் என்றெல்லாம் கலைவாணி மகளுக்கு போதனை செய்தார்தான். 

அமைதியாக கேட்டுக் கொண்டாலும் நல்ல வேலை பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடிவெடுத்தாள் தேன். ஆனந்தும் மணிவிக்கு தேவையான உதவிகளை செய்தான். 

அடுத்த குழந்தை இப்போது வேண்டாம் என இருவரும் ஒரு மனதாக முடிவு செய்து மேலே படிக்க ஆரம்பித்தாள் தேன். 

கடந்த வருடம் அவளது திறமையை கொண்டே நல்ல வேலையாக பெங்களூருவிலேயே பெற்று விட்டாள்.

ஆனந்தும் மாமனாரிடம் பட்ட கடனை அடைத்து மனைவியின் நகைகளையும் மீட்டுத் தந்து விட்டான். 

இப்போது அடுத்த குழந்தைக்கு முயலலாம் என நினைக்கையில் தள்ளிக் கொண்டே போகிறது. மருத்துவர்களும் இருவருக்கும் எந்த பிரச்சனைகளும் இல்லை என சொல்லி விட்டனர். 

இதை பற்றியே சிந்தித்து மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருவரும் இது குறித்து கலந்து பேசினார்கள். தங்களுக்கு இன்னொரு குழந்தை கிடைக்கும் என்றால் கண்டிப்பாக கிடைக்கும், அது தானாக நடக்கட்டும். இல்லை என ஆனாலும் அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் நமக்கான வாழ்க்கையை  நன்றாக வாழ்வோம் என முடிவு செய்திருந்தனர். 

அடுத்த குழந்தை பற்றி மற்றவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் சமாளிக்கவும் கற்றிருந்தனர். ஆதலால் சுமூகமாக சென்றது அவர்களின் வாழ்க்கை. 

தேன் காலை உணவு செய்ய, இரவில் ஒழித்து போட்ட பத்து பாத்திரங்களை கழுவி போட்டான் ஆனந்த்.  மதிய உணவை வெளியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து தருணோடு வெளியில் கிளம்பி விட்டனர். 

மால் ஒன்றில் அவர்கள் இருக்க, ஆனந்துக்கு அழைத்தார் அவனது அம்மா. அகிலன் பைக்கில் சென்ற போது விபத்தாகி விட்டதாம். அவனுக்கு ஒன்றும் காயங்கள் இல்லையாம், பைக்தான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறதாம். சரி செய்ய பத்தாயிரம் தேவை படுகிறது, கொடுத்து உதவு எனக் கேட்டார் சுந்தரி. 

“ஊருக்கு நான் வந்தா யூஸ் பண்ற பைக் சும்மாதானே கிடக்கு, அவன் பைக் சரியாகுற வரை இதை எடுத்து யூஸ் பண்ணிக்க சொல்லும்மா” என மட்டும் சொன்னவன், அவரது உடல்நிலை குறித்து பேசிவிட்டு வெளியில் இருக்கிறேன், பின்னர் பேசுகிறேன் என சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான். 

மீண்டும் பணம் தர சொல்லி அம்மா கேட்டாலும் முடியாது என முகத்தில் அடித்தது போல சொல்ல மாட்டான், பேச்சை மாற்றி விடுவான். என்ன முயன்றும் அவனுக்கு அப்படி அடுத்தவர் மனம் நோக பேச வருவதில்லை. 

பெற்றோருக்கு மாத செலவுக்கு தேவையான பணத்தை ஆனந்த்தான் கொடுக்கிறான்,  அவர்களின் மருத்துவ செலவு என்றாலும் இவன்தான் செய்கிறான். ஏதேனும் விஷேஷம் வருகிறது, முறை செய்ய வேண்டும் என்றாலும் சுபர்ணாவுக்கு பிறந்த வீட்டு சீர் செய்ய வேண்டும் என எதுவென்றாலும் ஆனந்த்தான் பார்க்கிறான். 

அந்த சமயங்களிலும் கூடுதலான தொகையை சொல்லி பெற்றுக் கொள்வார் சுந்தரி. அம்மாவிடம் போய் என்ன கணக்கு பார்ப்பது, இந்த சில ஆயிரங்களுக்கு கணக்கு கேட்டு பதிலுக்கு அவர் புலம்ப ஆரம்பித்து என இருப்பதை காட்டிலும் இந்தா வைத்துக்கொள், கொடுத்து விடுகிறேன் என கேட்டதை கொடுத்து விடுவான். மறக்காமல் தேனிடம் விஷயத்தை சொல்லி விடுவான். 

சுந்தரியின் பிறவிக் குணத்தை வயதான காலத்தில் எப்படி மாற்ற முடியும், இப்படி பொய் கணக்கு சொல்லி பணம் பெற்றுக் கொள்வதில் அவருக்கு ஆனந்தம் என்றால் ஆனந்தமாகவே இருந்து கொள்ளட்டும் என தேனும் விட்டு விடுவாள். 

வேதாச்சலமும் சுந்தரியும் இங்கு வருகை புரியும் போது ஷாப்பிங் செல்ல வேண்டும் என நிற்பார் சுந்தரி. என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள் என சொல்லாமல் குறிப்பிட்ட தொகையை கையில் கொடுத்து அதற்குள் என்ன வேண்டுமோ வாங்கிக் கொள் என சொல்லி விடுவான் ஆனந்த். 

 இதை மீறி பெரிதான தொகையென என்ன நடித்தும் பொய் சொல்லியும் கண்ணீர் விட்டும் ஆனந்திடம் இருந்து சுந்தரியால் பெற முடியாது. ஊரில் கூட சுந்தரி ஏதும் கடன் வாங்கினால் ஆனந்த் பொறுப்பேற்க மாட்டான் என்ற பேச்சு வேதாச்சலத்தின் உபயத்தால் பரவியிருக்க, அவருக்கு கடன் கொடுக்கவும் ஆள் இல்லை. 

ஆறு மாதங்களுக்கு முன்பு, சுபர்ணா மாடியில் வீடு கட்டுகிறாள், பணம் இல்லாமல் பாதியில் நிற்கிறது, நீதான் உதவ வேண்டும் என பெரிய மகனுக்கு நெருக்கடி கொடுத்தார் சுந்தரி. 

தாராளமாக உதவுகிறேன் என்ற ஆனந்த், அக்காவின் கணவருக்கு அழைத்து விட்டான். 

“வீட்டு பத்திரம் பத்திரமா இருக்குதானே மாமா, பேங்க் லோனுக்கு ஏற்பாடு செஞ்சு தர்றேன், கஷ்டம் இல்லாம வீடு கட்டி முடிச்சிடலாம். எப்ப வரட்டும் மாமா?” எனக் கேட்டான். 

வங்கியில் கடன் பெறாமலே மச்சானிடம் பணம் கறக்க திட்டமிட்டிருந்த பாஸ்கர் ஏமாற்றத்தோடு தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டான். 

“பூர்வீக இடத்துல உனக்கு கிடைக்க வேண்டிய பங்கையும் உன் உருப்படாத தம்பிக்கு வுட்டு கொடுத்த, இப்ப கேட்டா தருவானா? எங்கேருந்து தருவான், இன்னும் நம்மகிட்டருந்து  என்ன வாங்கலாம்னு வருவான். தடியன்…” என அகிலனை குறித்து மனைவியிடம் புலம்புவான் பாஸ்கர். 

தம்பிக்கு திருமணம் நடந்த சமயத்தில் பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகும் அகிலன் தங்களுக்கு வேண்டியது செய்வான் என சுபர்ணாவும் கனவில் மிதந்து கொண்டுதான் இருந்தாள். 

ஆனால் அகிலனால் அம்மாவுக்கும் அக்காவுக்கும் எதுவும் செய்ய முடியாமல் போனதை விட அவனுக்கே அவனால் எதுவும் செய்து கொள்ள முடியவில்லை. 

வீட்டோடு மாப்பிள்ளையாகி போன அகிலனுக்கு மாமனார் வீட்டில் மரியாதையே இல்லை. மூன்று வேளை சாப்பாடும், உடுத்த துணிமணிகளும் தாராளமாக கிடைக்கும். மாடு போல உழைக்க வேண்டும்.  மாத சம்பளத்துக்கு வேலை செய்பவர்களுக்கு கூட இத்தனை மணி நேர வேலை, இவ்வளவு சம்பளம் என சில விதிமுறைகள் இருக்கும். 

அகிலனோ கால நேரம் பாராமல் உழைக்க வேண்டும், உங்கள் வீடு நீங்கள்தான் செய்ய வேண்டும் என்பாள் ரம்யா. செலவுக்கு பணம் கேட்டால் எண்ணி எண்ணி தருவார் ரம்யாவின் அப்பா. இவ்வளவு வேலை பார்த்தேனே அதற்காகவாவது அதிகம் தரலாம் என அவன் கேட்டால் உங்க வீட்டுக்கு பார்க்கிறதுக்கு கூலி கேட்பீங்களா? என்பாள் ரம்யா. 

நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை எல்லாம் அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாது, நேரம் கிடைத்தால்தானே? சில சமயங்களில் இங்கிருந்து ஓடி சென்று விடலாம் என கூட அவனுக்கு தோன்றும், செல்வாக்கு நிறைந்த அவனது மாமனார் எப்படியும் கண்டுபிடித்து மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விடுவார், பின் தன் நிலைமை இப்போது உள்ளதை விட மோசமாகி விடும் என பயந்து அங்கேயே காலத்தை ஓட்டுகிறான்.