“இது என்னோட கம்ப்ளீட் மெடிகல் ரிப்போர்ட் மாமா.. ட்ரீட்மென்ட் சம்மரி கூட இருக்கு.. நீங்க எந்த டாக்டர் கிட்ட கொடுதுன்னாலும் செக் பண்ணிக்கலாம். அதுபோக, என்னோட பிசிக்கல் அண்ட் மென்டல் பிட் ரிப்போர்ட் கூட இருக்கு…” என்று அச்சுதன் முகத்தை வெகு இயல்பாய் வைத்துக்கொண்டு சொல்ல,
அவன் என்னவோ பைல் கொண்டு வந்து தருகிறான் என்று வாங்குவதற்கு, கை நீட்டிவிட்ட கார்மேகம், அச்சுதன் சொல்லிய விபரங்களை கேட்டு, அதிர்ந்துப் பார்க்க,
“என்ன மாமா?!” என்றான் சின்ன புன்னகையோடு.
“இது.. இதெல்லாம்.. இதெல்லாம் எதுக்கு தம்பி?” என்று அவர் கேட்க,
“ம்ம் அர்ச்சனா பிறந்தநாள் அப்போ நீங்க என்கிட்டே ஒருவிசயம் பேசினீங்க. சென்னை போறேன் மாமா. போயிட்டு வந்து பேசுறேன்னு சொல்லிட்டு போனேன்.. என்னோட பதில் இதோ இதுதான்..” என்று அவனது மெடிக்கல் ரிப்போர்ட்டை காட்டி சொல்ல,
“அச்சுதன்..!” என்றார் திகைத்து.
“அர்ச்சனா நல்ல பொண்ணு மாமா.. அவளோட விருப்பங்கள் அப்படின்னு தாண்டி, என்னை கல்யாணம் பண்ணா, அர்ச்சனா எல்லா விதத்துலையும் சந்தோசமா இருக்கணும் இல்லையா…” என்று பேச, கார்மேகத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
மௌனமாய், அச்சுதனையே பார்த்து அமர்ந்திருக்க “அர்ச்சனைக்கு மனசுல தோணுன மாதிரி, என்னோட மனசுல காதலா அப்படின்னு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா அர்ச்சனாவை எனக்கு பிடிக்காம எல்லாம் இல்லை மாமா…” என்று பேச,
“தேவை தான் மாமா.. நாளைக்கு உங்க முன்னாடி பல கேள்விகள் வந்து நிக்கும்…” என்றிட,
“அதெல்லாம் நான் சமாளிக்க மாட்டேனா?” என்றார் வேகமாய்.
“இது என்னோட மன நிம்மதிக்காக மாமா..” என்று சொல்ல,
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இத்தனை தூரம் போயிருக்க வேண்டாம்…” என்றவர் “எங்க பக்கமிருந்து நாங்க மறுப்பு எதுவும் இப்போ வரைக்கும் சொல்லலை தானே அச்சுதன்..” என்றும் சொல்ல,
“என்ன இருந்தாலும்.. உங்க வீட்ல இதெல்லாம் தெரிஞ்சா எத்தனை வேதனைப் படுவாங்க..” என்று சொல்ல,
“நாங்க ரொம்பவே பார்த்துட்டோம் மாமா.. அதுனால கண்டிப்பா மெடிக்கல் ரிப்போர்ட் தேவை தான் மாமா. வீட்லயும், அர்ச்சனா கிட்டயும் பேசிட்டு, அவளோட பியூச்சர் ப்ளான் என்ன அப்படின்னும் கேட்டுட்டு, மேற்கொண்டு நீங்க முடிவு பண்ணிட்டு சொல்லுங்க…” என்றவன் கிளம்பிவிட்டான்.
நல்லவேளை இவன் வந்து பேசும்போது, அர்ச்சனா அங்கே அலுவலகத்தில் இல்லை. நகை மாளிகைக்குத் தான் சென்று இருந்தாள். அவள் அங்கிருக்கிறாள் என்று தெரிந்து தான், அச்சுதன் இங்கே வந்தது.
கார்மேகமோ, என்ன சொல்வது என்று தெரியாது அமர்ந்திருந்தார்.
அச்சுதன் யோசித்து ஒரு பதில் சொல்வான் என்று எண்ணியிருக்க, அவன்வந்து அவனது மெடிக்கல் ரிப்போர்ட் கொடுக்கவும், ஒருமாதிரியாய் இருந்தது. அவன் மனதினில் எப்படியான வேதனைகள் இருந்தால், இப்படி ஒரு செயல் செய்யத் தோன்றும்.
“ஊப்…” என்று ஒரு பெருமூச்சு விட்டவர்,
அர்ச்சனாவிற்கு அழைத்து “வேலை முடிஞ்சதா அர்ச்சு..?” என்று கேட்க,
“அல்மோஸ்ட் டாடி.. ஏன்?” என்றாள்.
“சரிம்மா.. முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துடு. நானும் அங்கதான் வர்றேன்.. கொஞ்சம் பேசணும்…” என்றுசொல்ல,
அச்சுதன் சென்னை சென்று வந்திருப்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அப்பாவின் பேச்சிற்கும், அச்சுதனுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று தோன்றவில்லை. வேறு என்னவோ என்று எண்ணியவள், வீடு வந்து சேர, அவளுக்கு முன்னமே கார்மேகம் அங்கே வந்திருக்க, வரவேற்பறையில் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
அனைவரின் முகத்திலும் ஒரு கலவையான பாவனை தான்.
வீட்டினுள்ளே வந்ததுமே, அனைவருமே ஒருசேர அவளைப் பார்க்க “என்ன இது ஆல்ரடி மாநாடு கூடிட்டீங்க போல..” என்று ஹாஸ்யமாய் பேச முயன்றவளுக்கும், என்னவோ என்று இருந்தது.
அவளது பேச்சிற்கு யாரும் பதில் சொல்லவில்லை.
அனிதாவோ, அவளை பார்த்து ‘எதுவும் பேசாதே…‘ என்று சைகை செய்ய,
“என்ன டாடி வரச் சொன்னீங்க…” என்றவளிடம், அச்சுதன் கொடுத்த மெடிக்கல் ரிப்போர்டை, அவளிடம் கொடுத்தார்.
“என்ன டாடி?!” என்று தயங்கியபடியே வாங்கியவள், என்னவோ என்று எண்ணி, அதனை திறந்தும் பார்க்க, அவளுக்கு அப்படியே அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது.
“டாடி…” என்று அதிர்ந்து அர்ச்சனா பார்க்க,
“இன்னிக்கு காலையில தான் அச்சுதன் வந்து குடுத்துட்டு போனார்..” என்று சொல்ல,
“இது.. இது…” என்றவளுக்கு கைகள் நடுங்கியது.
அவனது மனது என்னென்ன யோசித்து இதனை எல்லாம் செய்திருக்கிறான் என்று எண்ணியவளுக்கு, அவன் மீது கோபமும் வந்தது.
‘அச்சத்தான்…’ என்று பல்லைக் கடித்தவள், கண்களை இறுக மூடித் திறந்து “நான் வெளிய போயிட்டு வர்றேன்…” என்று வேகமாய் எழ,
“அர்ச்சனா..” என்றனர் அனைவரும் ஒருசேர.
அர்ச்சனா அனைவரையும் பார்த்து வைக்க “எங்க போற நீ?” என்றார் ரோஜா.
“ம்ம்ச்.. எங்கயும் போகலை…” என்று பொத்தென்று அமர்ந்தவள் “என்ன சொல்லுங்க…” என்று அனைவரையும் பார்த்துக் கேட்க,
“இனி நம்ம தான் முடிவு சொல்லணும்…” என்றார் கார்மேகம்.
முல்லையோ இத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர் “மாமா.. நம்ம முடிவு எல்லாம் இருக்கட்டும். முதல்ல சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும், அவங்க கல்யாணம் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வர்றது நல்லதுன்னு எனக்குத் தோணுது…” என்று சொல்ல,
“இனி என்ன பேசுறது முல்லை. அர்ச்சு தான் அவளோட விருப்பம் என்னன்னு சொல்லிட்டாளே..” என்றார் ரோஜா.
“அப்படியில்லை க்கா.. அர்ச்சனா சொல்லிட்டா.. ஆனா அச்சுதன் பக்கம், அவர் இன்னுமே கூட அர்ச்சனா கூட மனசு விட்டு பேசலையோன்னு தான் இருக்கு. உங்களுக்கும் சம்மதம் அப்படின்னா, அவங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்…” என்றவர் அர்ச்சனாவின் முகம் பார்க்க,
அவளோ “நான் அச்சத்தான் கூட பேசிட்டு சொல்றேன்…” என்றுவிட்டாள்.
அர்ச்சனாவிற்கு மனது ஒருநிலையாய் இல்லை.
இந்த காலத்தில் இதெல்லாம் இப்போது சகஜமாகி வருகிறது என்றாலும் கூட, என்னவோ அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.
அச்சுதனுமே, அவளிடம் இருந்து வரும் அழைப்பைத் தான் எதிர்பார்த்து இருந்தான். எப்படியும் கார்மேகம் மகளிடம் இதனைப் பேசவும், தாம் தூம் என்று வந்து சண்டையிடுவாள் என்று எண்ணிய அவனின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை.
“கடைல.. மாடில .. என்னோட ரூம்ல…” என்று அவனும் சொல்ல, பதிலே இல்லை அவளிடம்.
வைத்துவிட்டாள் போல.
எப்படியும் அவர்கள் வீட்டில் இருந்து இவர்களது கடைக்கு வர, கால்மணி நேரம் மேலாகும். ஆனால் அர்ச்சனாவோ பாத்து நிமிடத்தில் வந்துவிட, அதுவும் கடைக்குள் அத்தனை வேகமும், கோபமுமாய் தான் நுழைந்தாள். மாடியில் அவனுக்கென்று இருக்கும் அலுவல் அறையில் இருக்கும் கணினித் திரையில் தான் பார்த்துக்கொண்டு இருந்தான் அச்சுதன்..
‘ஒரு தென்றல் புயலாகி வருதே…’ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
முகத்தை இயல்பாய் வைத்துக்கொள்ள எண்ணினாலும், அது எதுவும் முடியாமல் அவனுக்கு, ஒரு சிறு குறும்பு புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள, அர்ச்சனாவோ, அவனின் அறைக்கதவை தட்டவெல்லாம் இல்லை.
படீரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தவள், அவன் மேஜையின் மீது அவன் காலையில் கொடுத்த அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை தூக்கி போட,
‘நினைச்சதுக்கு மேல ரொம்ப உக்கிரமா வந்திருக்காளோ…’ என்று அவளைப் பார்த்தவன்
“வா.. அர்ச்சனா…” என்றான் இன்முகமாய்.
“என்ன இது?” என்று அவளோ பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க,
“மெடிக்கல் ரிப்போர்ட்…” என்றான் இலகுவாய்.
“இது நான் கேட்டேனா?” என்று அவள் கேட்க,
“ஷ்..!” என்று கண்களை மூடித் திறந்தவன் “உங்க அப்பாக்கிட்டயே விளக்கி சொல்லிட்டேன்…” என்றும் சொல்ல,
“ஹா ஹா…” என்று சிரித்தவன் “என்ன இத்தனை கோபம்?” என்று தன்மையாகவே கேட்க,
“இது.. இதெல்லாம்.. இதெல்லாம் எதுக்கு அச்சத்தான்..” என்றாள் ஒருவித வருத்தம் நிறைந்த குரலில்.
“என் இடத்துல இருந்து யோசிக்கணும் அர்ச்சனா…“ என்று பேச, அவளோ மௌனமாய் அவனைப் பார்க்க,
“சொல்றதைக் கேளு. இதுல எனக்கு ஒரு சிரமும் இல்லை.. சரியா.. முன்னாடியே எங்கம்மா கல்யாணம் பத்தி பேசும்போது, யாருன்னே தெரியாதவன் வந்து மெடிக்கல் ரிப்போர்ட் கேட்டான். அப்போ எனக்கு அத்தனை கோபம் வந்தது. சொல்லப்போனா, நான் இத்தனை வருசமா கல்யாணம் வேண்டாம்னு இருந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.
ஆனா இப்போ, நானே முழு மனசா போய் தான் செக்கப் பண்ணேன். எத்தனை ஸ்டிராய்ட்ஸ்.. எத்தனை ட்ரீட்மென்ட் நான் தாண்டி வந்திருக்கேன்னு எனக்குத் தான் தெரியும்…” என்று சொல்ல,
“நான் இதெல்லாம் பார்த்து உங்களை லவ் பண்ணல…” என்றாள் வேகமாய்.
“காதலும், கல்யாணமும் ஒன்னு இல்லை அர்ச்சனா…” என்றவன் “சரி சொல்லு.. என்னை விரும்பி கல்யாணம் பண்ற நீ.. எனக்கும் உன்மேல ஒரு விருப்பம் இருக்குன்னு வை.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என்னால உன்னை சாட்டிஸ்பை பண்ண முடியலை அப்படின்னா, என்னாகும்? அது உடல் ரீதியாவும், மன ரீதியாவும் உனக்கு எத்தனை பெரிய கஷ்டங்கள் குடுக்கும்..” என்று அவன் பேச பேச, அர்ச்சனா அமைதியாய் அவனைப் பார்த்து இருக்க,
“பதில் சொல்லு…” என்றான் ஆழ்ந்த குரலில்.
இதற்கு அவள் என்ன பதில் சொல்வாள்?!
காதல் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று சொல்லலாம் தான். ஆனால் அதற்கும் அவன் ஒரு பதில் வைத்து இருப்பான் தானே என்று நினைத்தவள்
“இதுபத்தி நீங்க என்கிட்டே ஒருவார்த்தை கூட சொல்லலை…” என்றாள் முகத்தை உம்மென்று வைத்து.
“சொன்னா, வேணாம்னு தான் நீ சொல்வ.. இது என்னோட மன அமைதிக்கு, நிம்மதிக்குன்னு நினைச்சுக்கோ..” என்று அச்சுதன் பேச,
“உன் கோபம் போயிடுச்சா…?” என்றவன் கீழே அழைத்து இரண்டு பழச்சாறு கொண்டு வரச் சொல்ல,
“போகலைன்னா என்ன செய்வீங்க?” என்றாள் வம்படியாய்
“ம்ம் தெரியலையே.. உங்க அப்பாக்கு கால் பண்ணி கேட்கவா? உங்க பொண்ணு ரொம்ப கோபமா, உக்கிரமா வந்திருக்கா மாமா.. என்ன செஞ்சு மலையிறக்கணும் அப்படின்னு கேட்கவா?” என்று அவன் கேட்ட தினுசில், அவளுக்கு மெல்ல ஒரு புன்னகை எட்டிப்பார்த்தாலும்,
“சோ.. எப்போ கல்யாணம்?” என்றாள் அடுத்து.
“அதுதான் நீ திரும்ப யூஎஸ் போறேன்னு சொன்ன தானே.. நீ போயிட்டு வா..” என்று சொல்ல,
“மனுஷன் தானா நீங்க?” என்று கத்திவிட்டாள்.
அச்சுதனோ திகைத்துப் பார்க்க “என்னென்ன செய்றீங்க நீங்க அச்சத்தான்…” என்று கேட்டவளுக்கு, இன்னமும் மனது சமன் அடையவில்லை.
“என்ன அர்ச்சனா?” என்று கேட்கும்போதே, அவர்களுக்கு பழச்சாறு வந்திட, கொண்டு வந்தவர், சென்றபிறகு “எடுத்துக் குடி.. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்…” என்றும் சொல்ல,
“என்னென்ன செய்றீங்க நீங்க?” என்று திரும்பக் கேட்டவள், ஒரே மூச்சில் அந்த ஜூஸ் குடித்துவிட,
“நான் என்ன செஞ்சேன்.. செஞ்சது எல்லாம் நீ…” என்றவன், விரிந்த புன்னகையோடு “லவ் பண்றேன்னு அத்தனை பேர் முன்னாடி சொல்லுவ. ஆனா ப்ரொபோஸ் பண்ணலைன்னும் சொல்லிடுவ. ஆள முழுங்கற மாதிரி பார்ப்ப. எனக்காக எல்லாமே யோசிச்சு பேசுவ. ஆனா நான் உங்களை கல்யாணம் எல்லாம் பண்ணனும்னு நினைக்கல அப்படின்னு சொல்லுவ…” என்று பேச,
“அச்சத்தான்…” என்றாள் பல்லைக் கடித்து.
“இரு… இரு..” என்று கண்களால் நகைத்தவன் “இத்தனை பண்ணிட்டு, நான் இங்க இருந்தா உங்களுக்கு வேற யாரையும் கூட கல்யாணம் பண்றது சிரமமா இருக்கும்னு சொல்லி, கிளம்புறேன்னு சொல்லுவ.. இத்தனை பண்ணியும் கூட, நான் என்ன செஞ்சேன்.. கல்யாணத்துக்கு சரின்னு சொல்லி, இதோ இந்த மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்தேன்.. இது தப்பா?” என்று பேச,
அங்கே மேஜை மீதிருந்த பேனா ஒன்றை அவன் மீது தூக்கி வீசியவள் “அப்.. அப்போ… இது.. இந்த கல்யாணம் பேசுறது எல்லாம் எனக்காக தான் இல்லையா? உங்களுக்கா ஒண்ணுமே தோணலை அப்படியா? உங்க மனசுல சின்னதா கூட எந்த பீலிங்கும் இல்லையா?” என்று கேள்விகளை அடுக்க,
“ஷ்..! என்ன டி நீ?!” என்றான் அயர்வாய்.
அவனது இந்த அயர்விலும், அவன் முகம் காட்டிய பாவனையுமே அவள்மீதான விருப்பத்தினைச் சொல்ல, அவளோ “நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என்றாள்.
“எதுக்கு சொல்லணும்.. நீதான் எனக்கு ப்ரபோஸ் கூட பண்ணலையே…” என்று சொல்ல,
“நா.. அது.. அதுதான் உங்களுக்கே எல்லாம் தெரியுமே…” என்றாள் இப்போது குரல் தழைத்து.
“தெரியும் தான்.. ஆனாலும் நீதான் ப்ரொபோஸ் பண்ணலையே…” என்று மீண்டும் கேட்க,
“இங்க பாருங்க…“ என்று அவள் விரல் நீட்டி மிரட்ட, மெதுவாய் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன் “இங்க உன்னையும் என்னையும் தவற யார் இருக்கா. வந்ததுல இருந்து உன்னைத் தான் பாக்குறேன் அர்ச்சனா…” என்று பேச, அர்ச்சனாவிற்கோ நெஞ்சம் வேகமாய் அடித்துக்கொண்டது.
அச்சுதனோ, அவள் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்தவன், அர்ச்சனாவின் விழிகளைப் பார்த்து “உன்னை வேணாம்னு மறுக்க என்கிட்டே ஒரு காரணம் கூட இல்லை அர்ச்சனா. ஆனா உன் அளவுக்கு லவ் அப்படின்னு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியலை. ஒருவித பிடித்தம் கண்டிப்பா இருக்கு. இல்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன்…” என்று சொல்ல, அன்றுபோலவே இன்றும் அர்ச்சனா, அவனது கைகளைப் பற்றியவள்,
அவள் கன்னத்தின் மீது வைத்து, கண்களை மூடிக்கொள்ள, அச்சுதனோ இன்னும் பக்கமாய் கொஞ்சம் தள்ளி, அவள் தலைசாயும்படி அமர, அவனை ஏறிட்டு பார்த்தவள்
“ஆனா நீங்க சரியான ஆளு…” என்று பேச,
“இத்தனை சொல்ற.. ஆனா ப்ரொபோஸ் பண்ணல நீ..” என்று அவனும் சொல்ல,
“அதெல்லாம் எனக்கு வராது..” என்றாள் பட்டென்று.
அவள் முகத்தை சுருக்கி, பட்டென்று சொன்ன வேகத்தில் அவனுக்கு சிரிப்பு வந்திட “நிஜமா.. எனக்கு ரொம்பவெல்லாம் கொஞ்சி பேசி, அது இதுன்னு எல்லாம் சுத்தமா வராது.. நீங்க அதெல்லாம் என்கிட்டே எக்ஸ்பெக்ட் பண்ணவே கூடாது… ஜாலியா இருப்பேன்.. அவ்வளோதான்…” என்று சொல்ல,
“பிரசாந்த் உனக்கு சரியான பேர் தான் வச்சிருக்கான்…” என்றான் அச்சுதன்.
அர்ச்சனாவிற்கு அப்போதிருந்த மனநிலையில் புரியாமல் பார்க்க “லேடி அச்சுதன்…” என்று அவன் சொல்லவும்,
“ம்ம்ம்…” என்று இழுத்து அவள் சிரிக்க,
“எனக்கும் அப்படிதான் ரொம்பவும் கண்ணே பொன்னே அப்படின்னு எல்லாம் கொஞ்ச வராது…” என்று சொல்ல,
“அப்புறம்?!” என்றாள் வேகமாய்.
“அப்புறம் என்ன? வந்த வேலை உனக்கு முடிஞ்சது தானே. கோபமா வந்த.. இப்போ சிரிச்சிட்டு இருக்க..” என்று பேச,
“அப்போ.. என்னை கிளம்புன்னு சொல்றீங்களா?” என்றவள் வேகமாய் எழுந்துகொள்ள,
“யப்பா..!!” என்று இரு கைகளையும் இணைத்து கும்பிட்டவன் “யூஎஸ் போறது என்னாச்சு?” என்று கேட்க,
“அது நான் சும்மா சொன்னேன்…” என்றாள், உதடு பிதுக்கி.
“என்னது?!” என்று அவன் பார்க்க,
“அது உங்களோட ரியாக்சன் என்னன்னு பார்க்க, அப்படி சொன்னேன்..” என்றவள் “அப்புறம் இன்னும் எனக்கு உங்க முகம் எப்படி இருக்கும்னே தெரியலை…” என்றும் சொல்ல, அச்சுதனோ புரியாமல் பார்க்க,
“நெத்தியில தழும்பு இருக்குன்னு அதை மறைக்கிற மாதிரி முன்னாடி முடி.. முகத்தை முக்காவாசி மறைச்சு தாடி மீசை.. அன்னிக்கு என்னவோ கொஞ்சம் ட்ரிம் பண்ணிருந்தீங்க.. ஆனாலும்…” என்று இழுக்க,
“கிளீன் ஷேவ் பண்ணனுமா?” என்றான்.
“ம்ம்…” என்று மேலும் கீழுமாய் அவள் தலையை ஆட்ட,
“வேற எதுவும் இருக்கா?” என்று அடுத்துக் கேட்க,
“சொல்லிடுவேன்…” என்றாள் விஷமமாய்.
என்ன சொல்லிவிட போகிறாள் என்று எண்ணி “சொல்லு…” என்று அச்சுதன் சொல்ல, அவள் நின்றுகொண்டு தானே பேசிக்கொண்டு இருந்தாள்.
அவனோ அமர்ந்திருந்த இருக்கையின் சாய்வு பகுதியில், சொகுசாய் இரு கைகளையும் இரு பக்கமும் விரித்து அமர்ந்திருக்க, லேசாய் அவன் பக்கம் குனிந்தவள்
“எனக்கு உங்க நெத்தியில இருக்க இந்த தழும்பு பாக்கும் போதெல்லாம், அதுல கிஸ் பண்ணனும் போல இருக்கும்…” என்று சொல்லிவிட, அச்சுதனின் கண்கள் விரிந்து, பின் சிறு பளிச்சிடல் காட்டி, அடுத்து அப்படியே மூடிக்கொள்ள,