“மெல்ல குடி… மெல்ல குடி… ஏதோ மாடு ஒன்னு கேட்டுக்குள்ள ஓடி வந்துட்டதா நினைச்சுக்க போறாங்க…” தண்ணீரைக் கூட அரக்கப்பறக்கக் குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதியிடம் தலையில் அடிக்/காத குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மணிவண்ணன் தாத்தா.
“ஏன் பேச மாட்டீங்க? உங்க பேரன் மாதிரி தானே நீங்களும்… யார் கஷ்டப்பட்டா உங்களுக்கென்ன?” மூச்சு வாங்கியபடி பேசியவளின் கண்களில் இன்னும் கண்ணீர் மிச்சம் இருந்தது.
“கஷ்டமா? என்ன ஆச்சு ஸ்ரீம்மா… கல்லு மண்ணு எதுவும் சுமக்கணுமா? என்ன கஷ்டமான வேலைன்னு சொல்லு உனக்காக நான் செய்யறேன்” நெஞ்சை நிமிர்த்தி சொன்னவரை கடைவாயை சுளித்துப் பார்த்தாள்.
முறைப்பு மாறமலேயே, “நீங்க செஞ்சவரைக்குமே போதும்…” என்றவளின் மனதிற்குள் இந்த கல்யாணம் தான் ஓடிக் கொண்டிருந்தது. ‘எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசர கோலத்தில் தங்கள் திருமணம் நடந்து விட்டதோ! இன்னும் கொஞ்சம் நிதானமாக நடந்திருக்கலாமோ?’ என்ற யோசனை தான் அவளுக்கு.
அவளின் எண்ணம் அவருக்கு புரிந்துவிட்டது. ‘ம்க்கும் இதுங்க ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சதுக்கு ரெண்டுமே எதிரும் புதிருமா தான் சுத்துதுங்க. இதுல என்னவோ வருஷக்கணக்கா வாழ்ந்து முடிச்ச மாதிரி கல்யாணத்தை நினைச்சு அலுப்பு மட்டும்…’ அவர் மனதிற்குள் சலித்துக் கொள்வது தெரியாமல் கண்ணைப் புறங்கையால் துடைத்து தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
மணிவண்ணனுக்கு அவளை இப்படிப் பார்க்கச் சிரிப்பு தான் பொங்கியது.
“சரி விடு எதுக்கு இவ்வளவு அழுகை?”
“உங்களுக்கு தெரியாது தாத்தா… உங்க பேரனை கட்டிக்கிட்டு நான் எவ்வளவு அவஸ்தை படறேன் தெரியுமா?”
“அவஸ்தையா? யூ மீன் இந்த காதல் அவஸ்தை?”
வாயில் வசம்பு வைத்து தேய்த்தது போல, “காதலா…? எங்களுக்குள்ளயா?” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினாள்.
“ஹாஹா…” என்று அட்டகாசமாகப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவர், “யாரு காதுல ரெண்டு பேரும் பூ சுத்தறீங்க. நீ பார்க்காதப்ப உன் கண்ணுல படாம நின்னு அவன் உன்னை பார்த்தா… நீயும் அதையே தான் செய்வ… உங்க ரெண்டு பேரையும் கவனிக்காம கல்யாண பேச்சை நான் எடுத்திருப்பேனா?”
“ச்சு! போங்க தாத்தா… அப்படியெல்லாம் எதுவுமில்லை. அது சும்மா எதார்த்தமா…” எனத் தொடங்கி விட்டவளுக்கு வெட்கம் பிடுங்கி திண்ண முகம் சிவக்கச் சிறு புன்னகையுடன் பாதியில் நிறுத்தி விட்டாள்.
அந்த நாளின் ரசனை பார்வைகள், ரசாயன மாற்றங்கள் எல்லாம் மனதில் இதமாய் மிதந்தது. காதலித்த ஒருவனை கைபிடித்த மணவாழ்க்கையா இது! ஒருவேளை தனக்குத் தான் வாழ்க்கையை வாழ தெரியவில்லையோ என்று தவிப்பாக இருந்தது.
ஆனால், தாத்தா சொல்வதைப் பார்த்தால், பிரகதீஸும் அப்பொழுது தன்னை பார்த்தானா என்ன? ச்சு! அதெல்லாம் இருக்காது! இந்த தாத்தா என்னைச் சமாதானம் செய்யச் சொல்ல வேண்டும். இல்லையா தவறாகப் புரிந்திருக்க வேண்டும். அதெப்படி எனக்குத் தெரியாமல் இருந்திருக்கும். அவன்தான் என்னைக் கண்டுகொள்ளவே இல்லையே! அப்பொழுது மட்டுமா இப்பொழுது வரை! திருமணம் முடிந்தால் அவன் காதல் மனம் சமாதானம் ஆகிவிடும் என்றெல்லாம் எண்ணியிருந்தாள். ஆனால், எங்கே?
வெட்கம் சுமந்திருந்த முகம் வேகமாகச் சுணக்கத்திற்கு மாறி, ஏக்கப்பெருமூச்சு வேறு விட்டுக் கொண்டிருக்கவும் அவளின் தலையில் கொட்டினால் என்ன என்று தான் மணிவண்ணனுக்குத் தோன்றிற்று!
“இப்ப என்ன உருப்படாத யோசனை?” சலிப்பும் எரிச்சலுமாகக் கேட்டார்.
“உங்களை மாதிரி தான் நானும் ஏமாந்துட்டேன் தாத்தா. ஆனா உங்க பேரனுக்கு என்னைப் பிடிக்கவே இல்லை. முதல் முதல்ல மனைவிக்கு என்ன கிப்ட் கொடுத்தாருன்னு உங்களுக்குத் தெரியுமா? எனக்கு போயி பிளாக் கலர்ல சேரி வாங்கிட்டு வந்திருக்காங்க. மனைவிக்கு முதல் முதல்ல யாரும் இப்படி ஒரு கிப்ட் வாங்கி தருவாங்களா?” என்றாள் வருத்தமாக.
‘அட பைத்தியமே!’ என்றொரு பார்வையைப் பார்த்து வைத்தார் அவர். ‘அவனுக்கு பிடிக்கலைன்னா கல்யாணமே செய்திருக்க மாட்டான். இதுல கல்யாணம் பண்ணிட்டு இவளுக்கு கருப்பு புடவை வாங்கி தருவானாம். இதுங்களை எல்லாம் பெத்து என் முன்னாடி அலைய விட்டுட்டாங்களே’ என நொந்துபோனார் அவர்.
கடுப்பை எல்லாம் கிணற்றுக்குள் மூட்டை கட்டி தூக்கிப் போட்டுவிட்டு, “சென்டிமெண்ட் எல்லாம் சொல்லித் தர வேண்டியது அம்மா, அப்பா! அவங்களுக்கே அதில் அக்கறை இல்லை… இதுல நீ வேற அவனைக் குறை சொல்லறியே! இந்த காலத்துல அதுவும் சிட்டியில யாரு இப்படி எல்லாம் பார்க்கிறாங்க…” என்றார் அவளை நொந்தபடி.
“எனக்கு மட்டும் அம்மா, அப்பாவா சொல்லி தந்தாங்க…” அவள் முறுக்கினாள்.
“உனக்கு எப்படி தான் புரிய வைக்கிறதோ… அவன் சென்டிமெண்ட் பார்க்க மாட்டான் ஸ்ரீம்மா… நீ ஏன் இவ்வளவு மக்கா இருக்க…”
“நான் மக்கா… மக்கா… ச்சு போங்க தாத்தா…”
அவளை ஏற இறங்கப் பார்த்தவர், “சரி வா உள்ள போகலாம்… எதுவா இருந்தாலும் இப்படி எல்லாரும் பார்க்கச் சின்ன குழந்தை மாதிரி அழுது வைக்காத…” என அழைத்து வந்தார். கணவன் சென்றதும் இடம், பொருள் மறந்து அழுது கொண்டிருந்தவளைத் தேற்றி சமாதானம் செய்தவருக்கு இந்த பெண் இப்படி முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறாளே என்று கவலையாக இருந்தது.
இவர்களுக்கான வாழ்க்கை பாதையை இணைத்துத் தந்தவருக்கு, இவர்கள் இருவரும் இருதுருவமாய் இருப்பதில் பெரும் மனவருத்தம். இருவருமே தங்கள் வாழ்வைச் சரிசெய்யத் தெரியாமல் இருக்க தன்னால் இயன்றவரைச் சரி செய்ய முயற்சி எடுத்தார்.
இத்தனை காலமாக இந்த குடும்பத்தில் ஒருவராக இருந்த போதும் தன்னை தனியாளாக எண்ணி வாழ்ந்தவர், பேரனின் திருமணத்திலும், அவர்களது வாழ்வியலிலும் தான் தன் சுயகட்டுப்பாட்டை மீறி பங்கு கொள்கிறார்.
“மக்கு… சின்ன குழந்தை… இன்னும் என்னென்ன எல்லாம் சொல்லுவீங்க…” என தாத்தாவைத் திட்டியபடியே வந்தவள், தன் முன்னால் செடிகள் நடுவதற்காகப் புதிதாக தோண்டப்பட்டிருந்த குழிகளையோ, அதனருகே குவிந்திருந்த மண் திட்டுகளையோ கவனிக்காமல் அதில் காலை வைத்து விட்டாள். இதில் நிலை தடுமாறி கீழே விழ, அருகில் மண்ணை தோண்ட வைத்திருந்த கடப்பாரை, மண்வெட்டி என ஆயுதங்கள் இருக்க அதன் மேலேயே கவிழ்ந்தடித்து விழுந்திருந்தாள்.
இரண்டு காலிலும் அங்கிருந்த ஆயுதங்கள் அவளின் காலை பதம் பார்த்திருக்க, “ஸ்ஸ்ஸ்… ஆ… ஆஆ… அ… அம்மா…” என்று வலியில் அலறி துடித்தாள் ஸ்ரீமதி.
“பாத்தும்மா… மெல்ல எழுந்திரு…” என அவளைத் தூக்கி அமர வைத்தார் தாத்தா.
ஸ்ரீமதியின் கண்கள் கலங்கி விட்டது. கால்களை அவளால் அசைக்கக் கூட முடியவில்லை
‘மிஷன் சக்ஸஸ்… என் பேரனோட பாசம் வேணுமா உனக்கு… இப்ப பாரு…’ எனத் தாத்தா நிலவரம் புரியாமல் மனதிற்குள் குதூகலித்துக் கொண்டார்.
அவர் எண்ணியது இதில் தடுமாறி விழுவாள். கை கால்களில் சிராய்த்துக் கொள்ளும் என்று தான். அவள் காலில் இருவேறு இடங்களைப் பதம் பார்த்த கடப்பாரை, மண்வெட்டி இரண்டையும் அவர் கவனிக்கவில்லை. இப்பொழுதும் அவள் துடிப்பை, கண்ணீரை கவனிக்காமல் சற்று தள்ளிச் சென்று பேரனுக்கு அழைக்கத் தொடங்கி விட்டார்.
பிரகதீஸ்வரன் தனக்கிருந்த எரிச்சலில் முதலில் அழைப்பை ஏற்கவில்லை. இருந்த கோபத்தில் காரை மேற்கொண்டு இயக்க மனமில்லாமல் இரண்டு தெரு தள்ளி வந்ததுமே ஒரு மரத்தின் அடியில் நிறுத்தி விட்டவன், இன்னமும் தன் கோபத்தைத் தணிக்க போராடிக் கொண்டிருக்கிறான்.
இந்த நேரத்தில் தாத்தா விடாது அழைக்கவும் கோபத்தோடு ஏற்று, “என்ன தாத்தா?” எனக் கத்த,
“டேய்! உன் பொண்டாட்டி என்ன சின்ன குழந்தையா? அவளை வேற தனியா ஒருத்தங்க பார்த்துக்கணுமா? சின்ன குழந்தை மாதிரி விழுந்து வைக்கிறா. சரி போனா போகுதுன்னு தூக்கி விட்டா எழாம அழுதுட்டு இருக்கா… நீயே கொஞ்சம் உங்க ரூமுக்கு போ சொல்லு…” என கோபமாகப் பேசியபடியே ஸ்ரீமதியிடம் வர அவள் சிரமப்பட்டு காலை இழுத்துக் காயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடப்பாரை இடித்த இடத்தில் இடது காலில் நன்கு சிவந்திருக்க, மண்ணை தோண்ட வைத்திருந்த நீண்ட கம்பிகள் கொண்ட ஆயுதம் வலது காலில் குத்தியதின் விளைவால் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
“ஸ்ரீம்மா… என்னடா எப்படி இவ்வளவு ரத்தம்?” தாத்தா அப்பொழுதே அவளின் காயத்தைப் பார்த்தவர் ரொம்பவும் பதறிப் போனார்.
வலி ஒருபக்கம் உயிர் போனது. கால்கள் இரண்டையும் வேறு அசைக்க முடியவில்லை. ரத்தம் வேறு வழிந்து இன்னும் பயத்தை அதிகப்படுத்தியது.
கைப்பேசியின் வழியே இதனைக் கேட்டுக்கொண்டிருந்த பிரகதீஸ் நிலைமையோ சுத்த மோசம்! உடனே வீட்டை நோக்கி காரை கிளப்பி விட்டான். வரும் வழியிலேயே தெரிந்த மருத்துவரையும் அழைத்து உடனே வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டான்.
இரண்டு தெருவைக் கடப்பதற்குள் பதற்றத்தில் அவன் இதயம் தொண்டை வரை எம்பிக் குதிக்கத் தொடங்கிவிட்டது.
அவன் அவசரமாக வந்தபோது தாத்தா அவளைச் சுற்றியிருந்த பொருட்களை அவளைப் பாதிக்காத வண்ணம் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.
“ஸ்ரீ…” என்று கலக்கமும் தவிப்புமாக அழைத்தவனை, கண்ணீர் நிரம்பிய கண்களுடன் ஏறிட்டுப் பார்த்தாள். அங்கிருந்து எழச் சிரமப்படுபவளை வேகமாக தன் கைகளில் அள்ளிக்கொண்டான் பிரகதீஸ். அவனின் வேகத்தில் கால் இன்னும் வலிக்க, “ஸ்ஸ்ஸ்… ஆஆ…” என்றாள் ஸ்ரீமதி அலறலாக.
அழக் கூட தெம்பில்லாமல் விசும்ப மட்டும் செய்ய அவனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.
“ஒன்னுமில்லை. ஒன்னுமில்லை. இப்ப டாக்டர் வந்துடுவாரு. சின்ன காயம் தான் கட்டுப்போட்டா சரியாயிடும்” என சிறு குழந்தைக்குச் சொல்வது போலச் சொல்லி அவளை வேகமாக அறைக்கு கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.
அவனும் முதலுதவி பெட்டி, வெந்நீர் எல்லாம் கொண்டு வந்து ரத்தம் வழியும் இடத்தை மெல்லச் சுத்தம் செய்ய, அவள் வலியில் கத்தி கூச்சல் போட்டாள்.
“ஸ்ஸ்ஸ்… ஒன்னுமில்லை. கொஞ்சம் தான்…” கலங்கிய முகத்தோடு அவளைத் தேற்றியவாறே மெல்லச் செய்தான்.
நல்லவேளையாக மருத்துவரும் சீக்கிரம் வந்துவிட, அவரும் அவளது காயத்தை நன்கு சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுப்போட்டார். டிடி இன்ஜெக்ஷனும் போட்டுவிட்டவர், “காயம் சிறியது தான் சீக்கிரம் சரியாகிவிடும்” என்று சொல்லி மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு விடைபெற்றார்.
பிரகதீஸ் காயத்தைச் சுத்தப்படுத்தும் போது போட்ட கூச்சல் கூட, மருத்துவர் முன்பு இல்லை. அவள் ஆர்ப்பாட்டம் செய்வாளோ என்று பயந்து, அவளது தோளை ஆதரவாய் சுற்றி வளைத்துப் பிடித்திருந்த பிரகதீஸ் கூட அவளை ஆச்சரியமாய் பார்த்தான்.
மருத்துவர் விடைபெற்ற பிறகும், சின்ன குழந்தைக்குச் செய்வது போலப் போர்வையை போர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்து அவள் உறங்குவதற்காகத் தட்டியும் கொடுக்க, ஸ்ரீமதி அவனின் செய்கையில் நெகிழ்ந்து போனாள்.
தனக்கு அடி பட்டதும் எப்படித் தவித்துப் போனான்? எவ்வளவு துடித்தான்? இப்பொழுதும் எத்தனை பரிவு?
“என்னடி? நான் காயத்தைத் துடைக்கும்போது மட்டும் அத்தனை ஆர்ப்பாட்டம் செஞ்ச. டாக்டர் முன்னாடி அமைதியா இருந்த… இப்ப மறுபடியும் கண்ணுல தண்ணி… என்ன? ம்..?”
கேட்டவனை அருகில் இழுத்து நெஞ்சில் புதைந்து கொண்டாள். மனைவியின் இந்த பரிமாணம் புதியது. அவளின் நெருக்கம் புது உற்சாகத்தைத் தர, அதை அனுபவிக்கும் முன் அவளின் கண்ணீர் அவனை நனைத்தது.
“ஸ்ஸ்ஸ்… என்னடா ரொம்ப வலிக்குதா?” தலை வருடிப் பரிவாகக் கேட்டான்.
“பர்ஸ்ட் டைம்…” என்றாள் விசும்பலுடன்.
“என்ன பர்ஸ்ட் டைம்?”
“எனக்கு உடம்பு முடியாதப்ப ஒருத்தங்களோட அரவணைப்புல இருக்கிறது. இதெல்லாம் நான் அனுபவிச்சதே இல்லை தெரியுமா? டாக்டர் எனக்கு ட்ரீட்மெண்ட் தந்தப்ப நீங்க என்கூட இருந்ததுல… ஐ… பீல்… பிளஸ்ட்…” என்றவள் பேசியதெல்லாம் அவன் நெஞ்சில் இருந்தபடியே தான்.
“பைத்தியம்… இதென்னடி சின்ன குழந்தை மாதிரி இதெல்லாம் பெரிய விஷயமா சொல்லற… இனி இப்படி எல்லாம் பழசை நினைச்சு ஏங்கி அழுதியா மண்டையிலேயே கொட்டுவேன். மண்டு…” என்றவன் அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி, அத்தோடு நிறுத்தும் எண்ணம் இல்லாமல் அவனின் இதழோடு இதழ் உரசி நின்றான்.
கூச்சத்தில் விலக மறுத்தவளை இம்மி கூட நகர அனுமதிக்கவில்லை அவன். இருவருக்குமே இந்த நெருக்கம் பிடித்தது. உரசல் பிடித்தது. ஆகச் சிறிது நேரம் தங்களை மறந்து உறவாடிக் கொண்டிருந்தனர்.