பிரகதீஸ்வரனின் உறக்கம் தூரப்போயிருந்தது. ஒரு மனிதரால் பெற்ற மகளிடம் இந்தளவு விலகல் காட்ட முடியுமா என்ன?
இதுநாள் வரையிலும் வேதாச்சலம் ஸ்ரீமதியின் பணத்தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார் என்று நினைத்திருந்தான். ஆனால், தேவையறிந்து செய்வது தானே பூர்த்தி செய்வதாகும்! அவளுடைய தேவை என்னவென்றே தெரிந்து கொள்ளாமல், அவராக கொஞ்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு… பெற்ற மகளிடம் அன்பையும், அரவணைப்பையும் காட்டாமல்… உண்மையில் இப்படியும் ஒரு தந்தையால் இருக்க முடியுமா என்ன? அவனால் நம்பவே முடியவில்லை. அவனின் மனம் கசந்து வழிந்தது.
கடந்து வந்த துன்பத்தையும் ஏதோ மூன்றாம் மனிதர் ஒருவரின் கதையைச் சொல்வது போல வெகு சாதாரணமாகச் சொன்ன மனைவியை எந்த கணக்கில் சேர்ப்பது என்று அவனுக்கு புரியவில்லை. அப்படி சொல்வதற்கு அந்த வலியை அனுபவித்து அனுபவித்து மனம் மரத்தல்லவா போயிருக்க வேண்டும்! மனதளவில் மரத்துப் போகும் வயதா அவளுக்கு?
அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு அவள் இழந்த எதையும் தன்னால் மீட்டுத்தர முடியாது என்ற எண்ணமே பிரகதீஸ்வரனுக்கு எல்லையற்ற வலியையும் வேதனையையும் தந்து கொண்டிருந்தது.
தனக்குள்ளேயே உழன்று எப்பொழுது உறங்கினானோ… விடியலில் விழித்து விட்டான். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேகமாகக் கீழிறங்கியவன், ஹாலிலேயே குட்டி போட்ட பூனை போல நடை பயில தொடங்கினான். அந்த விடிந்தும் விடியாத பொழுதில் கடிகாரத்தைப் பார்ப்பதும் நடப்பதுமாக இருந்தான்.
ஆறு மணிக்கு ஜெயாம்மா எழுந்து வெளியே வந்தார். பிரகதீஸ்வரன் உடனே பரபரப்பானான். “செழியன் என்ன பண்ணறான் ஜெயாம்மா” என அவரிடம் விசாரித்தான்.
“என்ன தம்பி இந்த நேரத்துல?” இவனின் பதற்றத்தில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன தம்பி நீங்களுமா? ஸ்ரீ பாப்பா தான் பகல்ல வெச்சுக்கோம்மா. ராத்திரியாவது என்கிட்ட தூங்கட்டும்ன்னு சொன்னாலும் கேட்காம கூடவே வெச்சுட்டு இருந்தாங்க. நாலைஞ்சு நாளா உடம்பு சரியில்லை போல அதுதான் செழியனைப் பார்க்க வரலை. இப்ப நீங்களா?” என்றார் சலிப்பாக.
என்ன சொல்ல என தெரியாமல் சங்கடமாகப் பின்னந்தலையைக் கோதியபடி நின்றிருந்தான்.
அவனது தடுமாற்றத்தில் என்ன புரிந்ததோ, “தூங்கிட்டு தான் இருக்கான். தூக்கிக்கங்க…” என வழிவிட்டு நின்றவர், ‘நிஜமாலுமே இவங்க ரெண்டு பேருக்கும் புதுசா தான் கல்யாணம் ஆகியிருக்கா…’ எனப் புலம்பிக் கொண்டது அவன் காதிலும் விழ, வெட்கமாகப் போய்விட்டது.
ஆனால், புதுமணத் தம்பதிகள் போலவா அவன் வாழ்க்கை இருக்கிறது?
அவன் நிலையை எண்ணி அவனே தனக்குள் சிரித்தபடி, செழியனைத் தூக்கிக்கொண்டு வேகமாக அகன்று விட்டான்.
ஸ்ரீமதிக்கு என்னவோ ரொம்பவும் அலுப்பாக இருந்தது. இந்த அறையிலேயே அடைந்து கிடப்பது வேறு மூச்சுமுட்டுவது போலிருந்து அவளைத் தினமும் சோதித்தது. வெளியில் போனால் செழியனைக் காண நேரும். அவனைப் பார்த்த பிறகும் தவிர்ப்பது அவளால் இயலாத காரியம்.
ஏதேதோ யோசித்தபடி புரண்டவளின் மீது மெத்தென்று என்னவோ மோதியது. அளவில் சிறியதாய்!
முகம் பூரித்துவிட, இமைகளை உயர்த்தி, புன்னகை முகமாக வேகமாகக் கண்ணைத் திறந்து பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள். செழியன் அவளருகில் உறங்கிக் கொண்டிருந்தான். ஐந்து நாட்களாகப் பிள்ளையைக் காணாத ஏக்கம் கண்களில் நீராய் தழும்பி விட்டது. அள்ளி அணைத்து, முத்தமிட கைகள் பரபரத்தாலும், அவனின் உறக்கம் களைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சட்டென்று இவன் எப்படி இங்கு எனத் தோன்ற, பார்வையைச் சுற்றிலும் ஓட்டினாள். இவளையே கவனித்துக் கொண்டிருந்தான் பிரகதீஸ்வரன்.
பூரிப்பை மறைத்து, “எதுக்கு இந்த சமாதானம் இப்ப?” என்றாள் சிறுபிள்ளை கோபத்துடன்.
“நேத்து யாரோ மன்னிப்பு தந்ததா ஞாபகம்…”
“ஓ…”
“நான் பேசியது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டதால அதை சரி பண்ணும் பொறுப்பையும் ஏத்துக்கிட்டேன்”
இவன் மறைமுகமாக ஏதோ சொல்கிறானோ என்று தோன்றியது ஸ்ரீமதிக்கு. நான் எதுவும் இவன்கிட்ட தப்பு பண்ணி அதை இப்ப சரி செய்யணுமா குழம்பியபடி அவனை பார்த்தால், அவன் சாதாரணமாகத் தான் நின்றிருந்தான்.
அவளது குழப்பத்தைக் கவனிக்காதவன் போல, “செழியனை நாள் முழுக்க நீயே வெச்சு பழக்காத… அப்பறம் வெளிய எங்கேயும் போகும்போது அவனுக்குத் தான் சிரமம். இந்த வாரம் உங்க மாமா ஊருக்கு போகணும் ஞாபகம் இருக்கு தானே?” என நினைவு படுத்தினான்.
இவனையும் கூட்டிட்டு போகலாமான்னு எப்படி கேட்கிறது என அவள் யோசனையானாள்.
பிரகதீஸ்வரனோ, “வேணாம் கேட்காத. இதுவரை நீ என்கிட்ட எதுவுமே கேட்டதில்லை. முதன் முதல்ல நீ ஒன்னு கேட்டு, அதை நான் மறுக்கும்படி ஆனா நல்லா இருக்காது” என்றான்.
நான் என்ன யோசிச்சேன்னு புரிஞ்சுக்கிட்டானா ஸ்ரீமதி விழி விரித்து கணவனை நோக்க, “நீ கேட்காமயே நீ ஆசைப் பட்டதை நிறைவேத்தி வைக்கணும்ன்னு தான் எனக்கும் ஆசை… ஆனா நீயே நினைச்சு பாரு. நம்ம புதுசா கல்யாணம் ஆனவங்க. இப்ப செழியனோட நம்ம கல்யாண விருந்துக்கு போனா, அங்க இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க” என்றான்.
ஆமாம் கண்டிப்பாக எதையாவது நினைக்கத்தான் செய்வார்கள்? அதெப்படி இவ்வளவு வசதியானவங்க கல்யாணத்துக்கு கேட்டாங்க என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்கனவே இருந்தது தானே!
தொழில் தொடர்பை வளர்க்க இருக்குமோ? பையனோட அக்கா இறந்த அப்பறம் அவங்க குழந்தையை இவங்க வீட்டுல தான் பார்த்துக்கிறாங்கன்னு கேள்வி பாட்டன். வசதியான பொண்ணை கட்டிக்கிட்டா இதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டான்னு நம்ம ஸ்ரீயை கேட்டிருப்பங்களோ? என ஏகப்பட்ட விதமாக யோசித்து விசாரித்தார்கள்.
இறுதியாக, சரி பையன் நல்லவன். குடும்பமும் நல்லா வசதியா நல்லவிதமா தான் இருக்கு. பையனோட அம்மா, அப்பா தொழில்ல ரொம்ப குழப்படி செய்யறதை பார்த்து அந்த பையனே அவங்களுக்கு தனியா சின்னதா தொழில் வெச்சு கொடுத்துட்டான். அந்த குழந்தையையும் வளர்க்க தனியா ஆள் வெச்சு இருக்காங்க. நம்ம பயப்படற மாதிரி எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.
“பையனை பத்தி விசாரிச்ச வரைக்கும் எங்களுக்கு எல்லாம் பூரண திருப்தி ஸ்ரீ. உனக்கு பையனை பிடிச்சிருக்கா?” என பெரியம்மா இவளிடம் விசாரித்தும் தெரிந்து கொண்டார்.
ஸ்ரீமதிக்கு தாய்வீட்டு உறவுகளை நினைத்து மனம் நிறைந்தது. மணிவண்ணன் தாத்தா கேட்டதுமே, எதையுமே யோசிக்காமல் சரியென்று சொன்ன தந்தைக்கு இருக்க வேண்டிய அக்கறை இப்படி மாமா, பெரியம்மா குடும்பத்திற்கு இருப்பதை அவள் என்னவென்று சொல்வது?
தந்தையின் செயலை நினைத்து கொஞ்சம் அவமானமாகக் கூட உணர்ந்தாள். படிப்பில் துளிகூட அக்கறை காட்டவில்லை. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வின் போது தந்தையை எத்தனை எதிர்பார்த்தாள்? அதில் கூடை மண்ணள்ளி போட்ட பெருமைக்கு உரியவர்… இப்பொழுது திருமண விஷயத்திலும் மெத்தனம் தான் காட்டினார். இவராக அவளுக்கு மணமுடித்துக் கொடுக்க ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. தானாக வந்த சம்பந்தத்திலும், என்னதான் அவர்கள் குடும்பத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்றாலும், பெற்ற மகளிடம் அவளது விருப்பம் கூடவா கேட்டுக்கொள்ள மாட்டார்? அவர்கள் கேட்டதும் எதுவுமே யோசிக்காமல் சரி என்று சொன்னவர், இவளுடைய தாத்தா தர்மராஜன் இவளுக்காக விட்டுப்போன நகைகளைப் போட்டு திருமண செலவைப் பெயருக்காக ஏற்றுக்கொண்டதோடு தன் கடமையை முடித்துக் கொண்டார். அப்பொழுதே மனம் விட்டு போனது ஸ்ரீமதிக்கு.
காலையிலேயே பழைய கதைகளுக்குள் மூழ்கிப் போனவளை, செழியனின் அசைவு தான் மீண்டும் நிஜ உலகிற்கு இழுத்து வந்தது.
இவள் கண்டதையும் யோசிப்பதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாமல், செழியனை உலுக்கி அவன் தூக்கத்தைக் கலைத்துவிட்டு பிரகதீஸ்வரன் வெளியேறி இருந்தான்.
அவன் எண்ணியதுபோலவே ஸ்ரீமதியின் கவனம் அதன்பிறகு செழியனிடம் போய்விட்டது.
வெள்ளிக்கிழமை மாலையில் பிரகதீஸ்வரனின் கார் சென்னை டூ நாமக்கல் ஹைவேயில் இணைந்திருந்தது. அருகில் அவனின் மனையாள் ஸ்ரீமதி.
பயணம் என்றதும் டிரைனில் என எண்ணியிருந்தவளுக்கு இப்படி கணவனோடு தனியாக காரில் பயணிக்க வேண்டிவரும் என்ற யோசனையே இல்லை. காரில் பொருட்களை ஏற்றியபோது அவள் முழித்த முழியைப் பார்த்துச் சிரிப்பு பொங்கியது.
ஏறி அமர்ந்ததும், “எனக்கு நல்லா டிரைவ் பண்ணத் தெரியும்…” என்றான் சிரிப்போடு.
“ச்சு… அதுக்கெல்லாம் இல்லை…” என்றவள் காரணத்தைச் சொல்லவில்லை. ஒரு மாதிரி சந்தோஷ படபடப்பு அவளுக்குள்! கூடவே சொல்லத்தெரியாத ஒருவித அவஸ்தையும்! அதை அவனிடம் சொல்லவா முடியும்?
அவளை இலகுவாக்க கொஞ்ச நேரம் பேச்சுக் கொடுத்தான். அவளுடைய பள்ளி, கல்லூரி, மாமா வீடு, பெரியம்மா வீடு என அவன் கேட்க கேட்க அவள் ஆர்வமாகப் பேச தொடங்கினாள். அவளுக்குப் படிப்பின் மீதிருந்த ஆர்வமும், அவள் குவித்த மதிப்பெண் விவரங்களும் கேட்டு அவனுக்குத் தலை சுற்றிப்போனது.
இவ்வளவு நன்றாகப் படித்தவள் மெடிக்கல், இன்ஜினியரிங் எனச் சேராமல் முதுகலை கணிதம் ஏன் தேர்ந்தெடுத்தாள் என குழம்பினான். ஆனால், அதைக் குறித்து அவனாக எதுவும் கேட்கவில்லை.
“சோ… என்னோட தனியா வர உனக்கு அன் ஈசியா இருக்கு?” வேண்டுமென்றே சீண்டினான்.
வேகமாக, இடவலமாக மறுத்துத் தலையசைத்தாள்.
“அப்பறம் என்ன?” என்றவனுக்குள் சுவாரஸ்யம்.
“தெரியலையே!”
“அப்ப பயம் தான் கண்டிப்பா…” என்றவன் ஒரு மாதிரி சிரித்தான்.
“உளறாதீங்க…” என்றவள் பக்கவாட்டில் திரும்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாள்.
பாம்பின் கால் பாம்பறியுமே! ஒரே வீட்டில் பேசிக்கொள்வதில்லை என்று வீராப்பாக இருவரும் திரிந்த நாட்களிலும் கண்டும் காணாமலும் இவன் ஸ்ரீமதியை பார்ப்பான். இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவளும் அப்படித்தான் செய்கிறாளோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்திருந்தது. என்ன இன்னமும் கையும் களவுமாக பிடிக்கவில்லை அவ்வளவுதான்!
இப்பொழுது இந்த கார் பயணத்தில், ஸ்ரீமதியின் பார்வை அவளையுமறியாமல் அலை பாய்ந்து அவனை வந்தடைவதை அவன் கண்டுகொண்டான். இப்படி சிறுசிறு விஷயங்களில் கூட மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சம் தான் இந்த பயணத்தை ஏற்க மறுக்கிறதோ என அவனுக்குத் தோன்றியது.
ஆனால், சின்ன குறிப்பு கூட சரியாகத் தர மறுக்கிறாளே! இவளுக்குத் தன்னை பிடிக்கும் என தெரிந்தால் எப்படி இருக்கும்… பிரகதீஸ்வரனின் கண்கள் கனவில் மிதந்தது.
நீ முதல்ல உன் காதலை அவளுக்குப் புரிய வைக்கும் வழியை பாருடா… என அவன் மனம் அவனது தலையில் கொட்டியது.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பேச்சுக் கொடுத்தான். பேசாமல் விட்டால் அவள் அமைதியாகவே இருப்பாள் என அவன் புரிந்து வைத்திருந்தான். அவளை பேச வைக்க இப்பொழுது செழியனை இழுத்தான்.
“குழந்தை ரொம்பவும் ஏங்கி போயிட்டான். நான் தான் கோபத்துல பேசிட்டேனா அதுக்காக அவனை நீ இவ்வளவு தள்ளி வெச்சது சரியா?”
அவளுக்கும் அந்த குற்றவுணர்வு நிறைந்திருக்கிறதே! “சாரி…” என்றாள் முணுமுணுப்பாக. செழியனின் நினைவில் கண்கள் கூட கலங்கி விட்டது.
“ஸ்ஸ்ஸ்… பரவாயில்லை விடு…”
“நான் அவனையும் தூக்கிட்டு வந்திருப்பேன்… பெரியம்மா கிட்ட ஏதாவது சமாளிச்சிருக்கலாம்” என்றாள் வருத்தத்துடன்.
முகம் வாட அமர்ந்திருந்தவளின் கரத்தை பற்றி வருடியபடி, “பாரு நிரந்தரம் இல்லாததுக்கு எப்பவும் ஆசைப்படக் கூடாது. அவன் நம்ம வீட்டுல கெஸ்ட் மாதிரி தான். எப்ப வேணும்ன்னாலும் அவங்க அப்பா அழைச்சா அவனை நாம அனுப்பித்தான் ஆகணும். சோ அவன்கிட்ட ரொம்ப அட்டாச்டா இருக்காத. அப்பறம் அது அவனுக்கும் கஷ்டம். உனக்கும் கஷ்டம்…”
நிதர்சனம் உரைக்க கீழுதட்டை மடக்கிக் கடித்துக் கொண்டாள். இதயத்தில் வலி. கண்களில் கண்ணீர் தேங்கிக் கொண்டது. இந்த கொஞ்ச நாளில் இந்த செழியன் ஏன் என்னோடு இத்தனை கலந்து போனான். என்ன யோசித்தும் புரிபட மறுத்தது. மாறாக அந்த பிள்ளையின் புன்னகை முகம் மட்டுமே மனமெங்கும்…
“ஸ்ஸ்ஸ்… என்னடா?” என்றான் பிரகதீஸ்வரன் பரிவாக.
ஒன்றும் இல்லை என்று தலையசைத்தவளுக்குக் கண்ணிலிருந்து நீர் சிதறிவிட, வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளுக்கு அடைக்கலத்தை வாரி வழங்கக் கணவனின் நெஞ்சம் காத்துக் கிடப்பதை என்று அவள் அறியக்கூடும்?