அத்தியாயம்  – 27

அர்ச்சனாவிற்கு சுத்தமாய் புரியவில்லை அச்சுதன் இதனை எல்லாம் எந்த அர்த்தத்தில் பேசுகிறான் என்று. முதல் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறானா என்று கூட சந்தேகமாய் இருக்க,

“அச்சத்தான்..?!” என்றாள் குழப்பமாய்.

“என்னை நல்லா குழப்பிவிட்டுட்டு, இப்போ நீ என்ன எதுவும் புரியாதது போல பார்க்கிற அர்ச்சனா?” என்று அப்போதும் சிடுசிடுப்பாகவே அச்சுதன் பேச,

“எ.. எனக்கு நிஜமா புரியலை…”எண்கள் மலங்க மலங்க விழித்து.

“எனக்கும் தான் புரியலை. எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை. நேத்துல இருந்து இதோ இப்படித்தான் நினைக்கிறது ஒன்னு, பேசுறது ஒன்னு, செய்றது ஒன்னா சுத்திட்டு இருக்கேன்…“ என்று அச்சுதன் வேகமாய் பேச,

“ஷ்..! மெல்ல பேசுங்க…” என்றவள் அவளும் எழுந்து நின்றிட,

“இப்போ எங்க போற நீ?” என்றான் வேகமாய்.

“யப்பா சாமி எங்கயும் போகல. சாப்பிட எடுத்து வைக்க சொன்னீங்க தானே..” என்று கேட்க,

“நட…” என்று அவளுக்கு கொஞ்சம் வழி விட்டவன், அவளுடனே வர

“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு?” என்றாள் சன்ன குரலில்.

“தெரியலை. ஆனா நேத்து நீ அப்படி என்கிட்டே பேசிருக்கக் கூடாது…” என்று அச்சுதன் குற்றம் சாட்டும் குரலில் சொல்ல,

“நா.. நான்.. அது.. அது கொஞ்சம் எமோசனல்…” என்று அர்ச்சனா வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்க,

“அதுதான்.. நீ என்னவோ எமோசனல் ஆகி.. என்னை என்னவோ பண்ணிட்ட…” என்று அப்போதும் அவளை பேச,

“இங்க பாருங்க..” என்று நடையை நிறுத்தி அவனை நோக்கி விரல் நீட்டியவள் “சும்மா என்ன திட்டிட்டே இருக்கீங்க.. என்கிட்டே பேச பிடிக்கலைன்னா போங்க. உங்களோட பேசி பேசி வயிறு வேற பசிக்குது..” என்றவளை முறைத்தபடி, அங்கிருக்கும் சிறு தோட்ட வீட்டினில், அவளுக்கு எடுத்து வைத்திருந்த சாப்பிட்டினை எடுத்துக் கொடுக்க, அவள் எங்கே அமர்ந்து உண்பது என்று சுற்றிலும் பார்த்தாள்.

“இங்க டேபிள் சேர் எல்லாம் இல்லை.. தோட்ட வேலைக்கு வர்றவங்க உக்காந்து சாப்பிட, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கன்னு கட்டினது தான்.. கீழதான் உக்காந்து சாப்பிடனும்…” என்றவன், சுவரில் சாய்ந்து அமர்ந்து கால் நீட்டிக்கொள்ள, அவளும் சற்று தள்ளி அமர்ந்து  உண்ணத் தொடங்க,  

“மேடம்க்கு இப்படி தரையில உக்கார்ந்து சாப்பிட்டு எல்லாம் பழக்கம் இருக்காது…” என்றான் கேலியாய்.

“ஆமா இப்படி உங்களை மாதிரி ஒருத்தரோட தனியா உக்கார்ந்து சாப்பிட்டும் தான் பழக்கம் இல்லை..” என்றாள் வேகமாய்.

“ஏன் எனக்கென்ன?” என்று அவனும் கேட்க,

“உங்களுக்கு என்ன? ராஜாவாட்டம் இருக்கீங்க..” என்றாள் கொஞ்சம்                     ரசனையாய்.

அர்ச்சனாவின் வாயில் இருந்து இதனை கேட்கையில் அச்சுதனுக்கு கொஞ்சம் மெச்சுதலாய் தான் இருந்தது. அது அவனது முகத்திலும் தெரிய “ராஜாவாட்டம் இருக்கிறதுனால தான் நீ பாக்குறியா அர்ச்சனா?” என்று அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு புரையேறி விட்டது.

நல்ல பசி வேறு அர்ச்சனாவிற்கு. உண்டுவிட்டு மாத்திரை வேறு போடவேண்டும். ஏற்கனவே போட்டிருந்த மாத்திரைக்கே ஒருமாதிரி கண்கள் சொருகும் போல இருந்தது. இதில் இவனது பேச்சு வேறு அவளை வெகுவாய் போட்டு படுத்திக்கொண்டு இருக்க, இப்போது அச்சுதன் இப்படி சொல்லவும் அவளுக்கு புரை ஏறாமல் இருந்தால் தான் அதிசயமே.

“ஏய் பார்த்து.. பார்த்து சாப்பிடு அர்ச்சனா..” என்றவன்,  தள்ளி வந்து அவளது தலையை மெதுவாய் தட்ட,

“ஷ்.. ஹேர் ஸ்டைல் எல்லாம் ஸ்பாயில் ஆகிரும்…” என்றவள்

“எனக்கு நெஞ்சு வலி வராம இருக்கணும் ஆண்டவா…” என்று வாய்விட்டே சொல்ல,

“லூசு மாதிரி பேசாத அர்ச்சனா…” என்றான் சடுதியாய் மாறிய முக பாவனையுடன்.

“அச்சத்தான்…” என்று பார்த்தவள் “இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை…” என்று அவளும் வெளிப்படையாகவே கேட்க, கண்களை அழுந்த மூடித் திறந்த அச்சுதன்

“சரி நான் சீரியாசாவே பேசுறேன்..” என்றவன் “நேத்து நீ அப்படி பேசினது. அழுதது.. இதோ என் கை பிடிச்சு இப்படி உன் கன்னத்துல வச்சது எல்லாம் என்னை ஒரு மாதிரி டிஸ்டர்ப் பண்ணிருச்சு…” என்றவன், அவள் கரம் பிடித்து, அவன் கன்னம் வைத்துக் காட்ட, அவளுக்கோ உடல் முழுதும் ஒருவிதமாய் கூசிச் சிலிர்த்து போனது.

அவன் கன்னத்து தாடி எல்லாம் அவள் கைகளை தீண்டிக்கொள்ள, அர்ச்சனாவிற்கோ ஒரு இன்பமான உணர்வு அவள் இதயத்தில் தோன்றி, லேசாய் அவள் கண்ணிமைகளை படபடக்கச் செய்ய, இதழ்களோ பேச மறந்து அவன் முகம் பார்க்க

“நீயே சொல்லு அர்ச்சனா நான் என்ன பண்ணட்டும்? எனக்கு நிஜமா இதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு. நேத்துல இருந்து அதையே தான் யோசிச்சிட்டு இருக்கேன்…” என்று அவன் சொல்ல, அவள் இதழ்கள் அழகாய் இன்னும் விரித்து புன்னகை சிந்தி

“உங்களை முதல்தடவை பார்த்ததுல இருந்து நானும் இப்படிதான் என்ன செய்றதுன்னு தெரியாம, இதோ இப்போ வரைக்கும் சுத்திட்டு இருக்கேன்…” என்றவள், மெதுவாய் அவளது கரத்தினை உருவிக்கொள்ள,

“எனக்கு இது லவ்வா அப்படியான்னு எல்லாம் எனக்குத் தெரியலை அர்ச்சனா. ஆனா ஒருமாதிரி இருக்கு.. எப்படி சொல்லிக்கிறதுன்னும் தெரியலை…” என்று அச்சுதன் பேசிக்கொண்டு இருக்கும் போதே,

“அர்ச்சு.. நீ இங்க என்ன பண்ற?” என்று வந்தார் முல்லை.

கேள்வி அர்ச்சனாவிடம் இருந்தாலும், பார்வை எல்லாம் அச்சுதனிடம் இருக்க “பசிக்குதுன்னு சொன்னா.. அதான் லஞ்ச இங்க கொடுக்க சொன்னேன்..” என்று அச்சுதன் சொல்ல,

“சாப்பிட்டு முடிச்சிட்டியா?” என்றார் அர்ச்சனாவிடம்.

“ம்ம் ஆச்சு சித்தி…” என்றவளுக்கு ஒருமாதிரி படபடப்பாய் இருந்தது.

இந்த சித்தி ஏன் இத்தனை முகத்தை கடுகடுவென்று வைத்துகொள்ள வேண்டும்?!

“அங்க அனிதாக்கு ஆரத்தி எடுக்கிறாங்க.. உன்னை எல்லாம் கேட்டுட்டு இருந்தா நீ ஆளே காணோம். நடக்கிறது உன் அக்கா விசேசம்னு நினைப்பு இருக்கா இல்லையா அர்ச்சனா? வேண்டாத வேலையை மட்டும் தான் எப்பவும் நீ பாக்குற..” என்று அவளை திட்டிக்கொண்டே முல்லை அழைத்துச் செல்ல, அச்சுதனை பாவமாய் திரும்பிப் பார்த்துக்கொண்டு நடந்தாள் அர்ச்சனா.

மனது முழுவதும் அவனிடமே நிற்க, அவளுக்கு முல்லையோடு செல்லவே மனதில்லை.

இதோ கண்டேன் கண்டேன் என்று இப்போது தான் மனதில் இருப்பதை வாய் திறந்து சொல்கிறான். சரியான நேரத்தில் வந்து இப்படியா என்று முகத்தை உம்மென்றே வைத்துகொண்டு வர,

“எங்கடி போன?” என்றார் ரோஜா.

“சாப்பிட்டு வந்தேன்…” என்று அர்ச்சனா அப்போதும் முகத்தை உர்றேன்றே வைத்து பேச,

“என்னாச்சு இவளுக்கு?” என்று முல்லையிடம் கேட்க,

“வீட்ல போய் பேசிக்கலாம் க்கா…” என்றவர் அடுத்து ஆகவேண்டியதைப் பார்க்க, அடுத்து நேரம் போனதே தெரியவில்லை.

வளைகாப்பு முடிந்து, அனிதாவை அழைத்துக்கொண்டு இவர்கள் கிளம்ப, பிரகாஷ் முகம் தான் வாட்டமாய் இருந்தது.

“ரொம்ப பீலிங்க்ஸ் விடாத அண்ணா.. இப்போதான் நீ கூட போகக் கூடாது.. நாளைக்கே நீ போவ தானே…” என்று பிரசாந்த் வார,

“அதுக்கில்லடா.. இனிமே தான் பேபி மூவ்மெண்ட்ஸ் எல்லாம் நல்லா தெரியும். இந்த நேரத்துல கூட்டிட்டு போறாங்க பாரேன்…” என்று பிரகாஷ் வருந்த,

“டேய் நீ தினமும் போய் பார்த்துட்டு வா. யார் வேணாம்னு சொன்னா..” என்றார் பாமினி.

“என்ன இருந்தாலும் கூட இருக்கிறது போல வருமா..” என்று சுமிதா எடுத்துக் கொடுக்க, அனிதாவிற்கும் இதே சோக கீதம் தான்.

குழந்தை உண்டானதுமே, கணவன் மீதிருந்த சிறு சிறு வருத்தங்கள் கூட காணாமல் போய்விட, இப்போதோ ஐந்தாவது மாதமே அழைத்துச் செல்கிறார்களே என்று இருக்க “ஏன் ம்மா சாஸ்திரத்துக்கு நம்ம வீட்ல வந்து ரெண்டு நாள் இருந்துட்டு, திரும்ப இங்க வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு வரலாம் தானே…” என்று காரில் ஏறியதுமே கேட்டுவிட்டாள்.

ரோஜாவிற்கோ “எதுக்கு.. இன்னிக்கு வா.. நாளைக்கே திரும்ப கொண்டு வந்து விட்டுடுறோம்.. எனக்குன்னே வந்து பிறந்திருக்கீங்க பாருங்க…” என்றவர்

கார்மேகத்திடம் “மகள்களை பெற்ற அப்பான்னு பெருமையா சொல்வீங்க தானே.. ஒருத்தி கூட உங்களை நினைக்கல…” என்று வீடு செல்லும்போதே கணவரிடம் புகார் வாசித்துக்கொண்டு இருக்க,

அச்சுதனோ அர்ச்சனாவிற்கு “டேக் கேர்…” என்று ஒரு குறுஞ்செய்தி தட்ட, அர்ச்சனாவிற்கோ மனதினில் எழும் உற்சாகத்தை வெளிக்காட்டாமல் இருக்கவே பெரும்பாடாய் இருந்தது.

அனிதாவோ அம்மாவோடும் சித்தியோடும் பேசியபடி வர, இவர்களோடு வந்த அர்ச்சனாவோ அமைதியாய் இருந்தாள்.

கார்மேகமோ “என்ன அர்ச்சு அமைதியா வர. கை வலிக்குதா என்ன?” என்று கேட்க,

“லேசாதான் டாடி…” என்றவளுக்கு சிந்தனை எல்லாம் அச்சுதன் பேசியதிலேயே சுற்றிக்கொண்டு இருந்தது.

வீடு வந்து சேர்ந்ததுமே, அனிதாவிற்கு திருஷ்டி கழித்து உள்ளே அழைத்துச் செல்ல, அடுத்து இங்கே வீட்டினில் வந்திருந்த உறவினர்களை எல்லாம் கவனித்து, அவர்களுக்கு ஓய்வெடுக்க எல்லா வசதியும் செய்துகொடுத்துவிட்டு, பெண்கள் நால்வருமே அனிதாவிற்கான அறையில் வந்து அமர்ந்துவிட,

ரோஜாவிற்கோ “உன் வீட்டுக்காரரும், பையனும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்..” என்று முல்லையிடம் பேச,

“அடுத்து அர்ச்சனாவுக்கு ஏதாவது விசேசம் வச்சா கண்டிப்பா வருவாங்க க்கா..” என்றார் பூடகமாய்.

அனிதாவும் இலகுவான உடைக்கு மாறி வந்தவள் “ம்மா சொல்ல மறந்துட்டேன்.. போன வாரம் என் வளைக்காப்பு விஷயம் வீட்ல எல்லாம் பேசும்போது, அச்சுதன் மாமா கல்யாண விசயமும் பேசினாங்க. என் மாமா முடிவா சொல்லிட்டார். நாலு மாசம் டைம். அதுக்குள்ள அச்சுதன் மாமா கல்யாணம் பத்தி ஒரு முடிவு சொல்லணும். இல்லை அப்படின்னா, இனியும் எல்லாம் ஒண்ணா இருக்கிறதுல அர்த்தமில்லைன்னு சொல்லிட்டார்..” என, அர்ச்சனாவிற்கு இதை கேட்டு கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது.        

“அப்படியா?!” என்ற முல்லை “அதுதான் அச்சுதன் பார்வை அர்ச்சனா பக்கம் வீசுதா…” என,

“சித்தி…” என்றாள் கண்டனமாய் அர்ச்சனா.

“சும்மா இரு அர்ச்சு.. இதோ விஷயம் வெளிய வந்துடுச்சுல்ல. வீட்ல எல்லாம் சேர்ந்து கார்னர் பண்ணவும் தான் அச்சுதனுக்கு கைல இருக்க சாய்ஸ் நீ. அதை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைக்கிறார் போல…” என்று பேச,

“என்ன சித்தி சொல்ற?” என்று அனிதா கேட்க,

“என்ன முல்லை?” என்றார் ரோஜாவும்.

“அக்கா இன்னிக்கு நானும் இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சிட்டு தான் இருந்தேன்.. அதெப்படி திடீர்னு ஒரு மனுஷனுக்கு மனசு மாறும். இத்தனை நாளா இல்லாத எண்ணம் இப்போ எப்படி வரும்னு ஒரே யோசனை.. இப்போ அனிதா சொல்லவும் தான் புரியுது…” என, அர்ச்சனாவிற்கோ எரிச்சலாய் இருந்தது.

அது அவளது முகத்தில்  அப்படியே தெரிய, ரோஜாவோ “என்ன அர்ச்சனா அமைதியா இருக்க?” என்று சொல்ல,

அனிதாவோ “ம்மா எங்க வீட்ல எல்லாருக்கும் அர்ச்சு தான் முதல் விருப்பம். ஆனா அச்சுதன் மாமா விருப்பம் என்னவா இருந்தாலும் அதை ஏத்துப்பாங்க.. அதுனால அர்ச்சு நீ தேவையில்லாம அது இதுன்னு எதுவும் நினைக்காத..” என்று அனிதா பேச,

முல்லையோ “எத்தனை சொன்னாலும் இவளுக்கு புரிய போறது இல்லை டி..” என்றார் வருத்தமாய்.

“இப்போ எல்லாம் சேர்ந்து என்ன சொல்ல வர்றீங்க?” என்றாள் அர்ச்சனா.

“வீட்ல நெருக்குறதுனால தான் அச்சுதன் உன்கிட்ட கொஞ்சம் கரிசனம் காட்டுரான்னு நான் சொல்றேன். அவரோட முடிவு என்னவா வேணும்னாலும் இருக்கலாம். அதை வீட்ல அக்சப்ட் பண்ணிப்பாங்க அப்படின்னு அனிதா சொல்றா…” என்று முல்லை விளக்க,

“இங்க பாருங்க.. நல்லா கேட்டுக்கோங்க.. என் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தெரிஞ்சும் கூட, இதுநாள் வரைக்கும் என்கிட்டே கண்ணியமாவும், மரியாதையாவும் தான் அச்சத்தான் நடந்திருக்கார். இன்னிக்கு என்னை கேர் பண்ணது கூட, நேத்து எனக்கு அடிப்பட்டதுனால தான். ஒருவேளை.. ஒருவேளை அவர் மனசுல என்மேல தடுமாற்றம் வந்தது அப்படின்னா, கண்டிப்பா அதையும் வெளிப்படையா சொல்ல தயங்கமாட்டார். அவர் குணம் அப்படி. அதுக்காக கண்டபடி யாரும் பேசவேணாம்.

சித்தி நீ நல்லா யோசி.. இதே கதை மாத்தி நடந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க எல்லாம். ஒருவேளை என்னை பார்த்ததுமே அச்சத்தான் இம்ப்ரஸ் ஆகி, லவ் சொல்லி, நான் முடியாதுன்னு சொல்லிருந்தா?! சொல்லுங்க அப்போ என்ன சொல்லிருப்பீங்க.. பொண்ணுக்கு விருப்பம் இருந்தா தானே எதுவும்னு சொல்லிருப்பீங்க தானே..” என்று கேட்டு நிறுத்த,

ரோஜாவோ “ஐயோ! கடவுளே.. இந்த பேச்சே வேண்டாம் விடுங்க…” என்றவர் “முல்லை விடு.. இவளுக்கு எத்தனை சொன்னாலும் புத்தி வராது. ஒருநாள் பட்டு திருந்துவா.. அன்னிக்கு பார்த்துக்கலாம்.. அனிதா நீ இதெல்லாம் போட்டு மனசுல ஏத்திக்காத.. நீ சந்தோசமா இருக்கவேண்டிய நேரம் இது.. அர்ச்சனா நாளைக்கே கிளம்பி சைட்டுக்கு போறேன்னு நிக்காத.. ரெண்டு மூணு நாளைக்கு ரெஸ்டா இரு…” என்றவர் எழுந்து உறங்கப் போய்விட,

முல்லையும் இதற்குமேல் என்ன பேச என்று தெரியாமல் எழுந்து சென்றுவிட, அனிதாவிற்கு கணவனிடம் இருந்து அழைப்பு வரவும், அவளும் பேசத் தொடங்க, அர்ச்சனாவோ அப்படியே கட்டிலில் சாய்ந்தவளுக்கு முன்னைவிட இப்போது இவர்கள் கொடுத்த பேச்சுக்கள் இன்னும் சோர்வை கொடுத்திருந்தது.

அனிதா, இப்போது நடந்த பேச்சு வார்த்தைகளை ஒன்றுவிடாமல் பிரகாஷிடம் பேச, அங்கே ஏற்கனவே அண்ணன் தம்பிகள் எல்லாம் ஒன்றாய் அமர்ந்திருக்க, பிரகாஷ் பேசி முடித்தவன் நேராய் வந்து “அங்க உன் தலை தான் உருளுது போலண்ணா…” என்று அச்சுதனிடம் சொல்ல,

“என்னடா?!” என்று அவன் கேட்கவும், பிரகாஷ் அனிதா சொன்னதை எல்லாம் சொல்லி, அதற்கு அர்ச்சனா பதில் சொன்னதையும் சொல்ல, அச்சுதனுக்கு அவள் தன்னை எங்கும் விட்டுக்கொடுக்காமல் பேசியதை எண்ணி ஒருவித இதமாய் இருந்தது.

ஆனால் அதே நேரம், தனக்கே இதுதான் என்று உறுதியாய் ஒருநிலைக்கு வர முடியாத ஒன்றை, அவள் நிஜம் என்று நம்பி மனதினில் இன்னமும் நம்பிக்கை வளர்த்துவிடப் போகிறாள் என்று எண்ணியவன் “நான் அர்ச்சனா கிட்ட பேசிட்டு வர்றேன்..” என்று எழுந்துச் செல்ல,

அர்ஜூனோ பிரசாந்திடம் “இதுக்கு ஏன் நம்ம எல்லாம் சேர்ந்து உக்காந்து பேச வரணும்.. முதல்ல அவன் போன பேசிட்டு வந்தான். இப்போ இவரு…” என்று நொந்துகொள்ள,

பிரசாந்தோ நக்கலாய்  சிரித்தவன் “ஒருத்தன் லவ் பண்ணிட்டு மாட்டுனான்.. இந்த அச்சண்ணா லேடி அச்சுதன் கிட்ட அன்னிக்கே மாட்டிட்டார்.. இனிமேதான் லவ் பண்ணுவார் போல.. என்னவோ போடா அர்ஜூனா…” என்று பேச,

பிரகாஷோ “ஏன் டா உங்களுக்கு இதெல்லாம் பார்த்தா கிண்டலா இருக்கா?” என்று கேட்க,

“இல்லையா பின்ன?!” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, அங்கே அச்சுதனோ அர்ச்சனாவிடம் “நீ.. நீயா எதுவும் நினைச்சுக்காத ஓகே வா…” என்று தன்மையாய் பேசிக்கொண்டு இருந்தான்.

“என்ன நினைக்கக் கூடாது?” என்று அவள் கேட்க,

“இல்ல.. நான் என் மனசுல தோணினது உன்கிட்ட அப்படியே சொல்லிட்டேன். பட் நீ அதையே நம்பிட்டு…” என்று இழுக்க,

“ம்ம்ச் இப்போ நீங்க என்ன சொல்ல வர்றீங்க அச்சத்தான்.. உங்களுக்கே இன்னும் குழப்பமா இருக்கு அதானே? ஒருபக்கம் உங்க வீட்ல வேற இப்படி பேசிருக்காங்க.. அது தெரியாம நான் வேற உங்க கை பிடிச்சு என் கன்னத்துல வச்சு குழப்பிவிட்டுட்டேன் அதானே?” என்று கேட்க,

‘அடிப்பாவி…’ என்றான் முனுமுனுப்பாய்.

“என்ன சொல்லுங்க அதானே?” என்றாள் எரிச்சலும் கோபமுமாய்.

“ம்ம்ம்…” என்று இழுத்தவனுக்கு, எப்படிச் சொன்னாள் இவள் சரியாய் புரிந்துகொள்வாள் என்று யோசிக்க,

“இங்க பாருங்க.. நான் இப்பவும் சொல்றேன் கட்டாயப்படுத்தி எல்லாம்  காதல் வராது. இல்லை என்மேல உண்டான இந்த சின்ன டிஸ்டர்பன்ஸ் ரொம்பவே உங்களுக்கு ஸ்ட்ராங்கா இருந்தா, நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க..” என்று படபடவென பேச,

“இப்போ ஏன் அர்ச்சு இத்தனை டென்சனா பேசுற?” என்றான் அச்சுதன்.

“தெரியலை.. எனக்கு இப்போ அமைதியா தூங்கனும்.. அவ்வளோதான்.. இதுக்குமேல உங்க முடிவு தான் அச்சத்தான்.. நான் எப்பவுமே உங்களை தப்பா நினைக்கவோ, பேசவோ போறது இல்லை…”என்றவளை அலைபேசி இணைப்பை துண்டித்துவிட, அச்சுதனுக்கோ ஒருமாதிரி இருந்தது.