பிரகதீஸ்வரனின் அழுத்தமான காலடிகள் தன்னை நெருங்க நெருங்க இதென்னடா வம்பு என்றிருந்தது ஸ்ரீமதிக்கு.
திருமணமாகி இத்தனை நாட்களில் அவள் வடக்கு என்றால் அவன் தெற்கு… அவன் கிழக்கு என்றால் இவள் மேற்கு… இருவரும் பேசிக்கொள்ளக் கூட முயற்சி எடுத்ததில்லை.
அவன் பேசட்டுமே என்று இவளும், இவள் பேசட்டுமே என்று அவனும் ஒரு கூடை ஈகோவை தூக்கிச் சுமந்து திரிகின்றனர்.
தலை மண்ணில் புதையுமளவு குனிந்திருந்த ஸ்ரீமதியிடம் நெருங்கிய பிரகதீஸ்வரன், சாவதானமாக தன் விரல்களை ஒவ்வொன்றாக நீட்டி எதையோ எண்ணிக் கொண்டிருந்தான்.
‘என்னவாம் இவனுக்கு?’ அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
“எனக்கு ஐஞ்சு முறைப்பொண்ணுங்க இருக்காங்க. அதாவது கட்டிக்கிற முறையில கட்டிக்கிற வயசுல… அதுபோக இதுவரை ஒரு ஏழு புரபோசல் கிட்ட வந்திருக்கும்…”
அவன் அவளின் நாடித்துடிப்பைப் பதம் பார்க்க, அதற்கேற்றாற்போல், ‘ரொம்ப முக்கியம்’ என நொடித்தது அவளின் மனம். கூடவே கோபத்தில் ரயில் எஞ்சின் போல புசுபுசுவென மூச்சு வாங்க பரபரத்தது. இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
பிரகதீஸோ நிதானமான குரலில், “ஆனா யாருமே இதுவரை என்னை அழகு, சார்மிங், ஹேண்ட்ஸம்ன்னு எல்லாம் ஆசையா சொன்னதே இல்லை” என்று இழுத்து நிறுத்த,
‘அச்சோ நான் உளறி வெச்சதை கேட்டுட்டான் போலவே! தாத்தாவை சமாதானம் பண்ண, என்னென்ன பேசி வெச்சேன்னு தெரியலையே’ என அவசரமாக நாக்கை கடித்தாள். தலையை இதற்கு மேலும் குனிய முடியாமல் அவள் தவிக்க, அவன் ஆட்காட்டி விரல் உயர்ந்து அவளது தாடையைப் பற்றி உயர்த்தியது. இந்த எதிர்பாரா செய்கையில் அவளின் விழிகள் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கத் தொடங்கி விட்டது.
இப்படி நேருக்கு நேராகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை அவள் எதிர்பார்த்ததே இல்லை என்பதால் வெகுவாக தடுமாறினாள். அவனைக் காணும் திராணியின்றி அவள் தன் விழிகளை இறுக்கமாக மூடிக்கொள்ள, “கண்ணைத் திற…” என்றான் அதட்டலாக.
அவசரமாகக் கண்ணைத் திறந்தவளிடம், “வெல் என்னை பிடிச்சதால தான் இந்த கல்யாணம் இல்லையா?” அவள் விழிகளைக் கூர்ந்து பார்த்த வண்ணம் வினவினான்.
அவனின் பார்வை ரேசர் போல தன்னுள் ஊடுருவ முயல்வதை உணர்ந்து தவித்து போனாள். நேரடியான இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள். அவளின் கருவிழிகள் வேகமாக வலப்புறம் பாய்ந்து அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தது. ஆனால் மனமோ, ‘அதிலென்ன சந்தேகம் உனக்கு?’ என அவனிடம் கேள்வி கேட்டது. என்னவோ அந்த கேள்வியே அபத்தம் போல அவளுக்கு தோன்றியது.
மேலும் அபத்தமாக, “ஆனா அதை இதுவரை நான் பீல் பண்ணினது இல்லை” என்றான். சில நொடிகளின் அமைதிக்குப் பிறகு திடுமென ஒலித்த அவன் குரலில் என்ன இருந்தது என அவளுக்குப் புரியவில்லை. இன்னமும் அவனை பார்க்கும் தைரியம் வராமல் அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அவனோ, “புரிய வைக்காம விட்டது உன்னோட தப்பு…” என அவளைக் குற்றம் சொல்லி இருவருக்கும் இடையிலிருந்த சில இன்ச் இடைவெளியையும் மெல்ல முன்னோக்கி நகர்ந்து நிரப்பிக் கொண்டிருந்தான்.
அதை உணர்ந்து துள்ளிக் குதித்து அவள் விலகும் முன்பு, அவன் கரம் உயர்ந்து அவளை வளைத்துப் பிடித்து, அவளை நகரவிடாமல் தடுத்து நிறுத்தியது.
அதிர்ந்து நிமிர்ந்து நோக்கியவளிடம், “நான் இப்படி இருக்கும்ன்னு யோசிக்கலை…” என்றான் ஒருமாதிரி குரலில்.
‘எப்படி?’ அவளின் விழிகள் புரியாமல் சுருங்க,
“செழியனுக்காகத்தான் இந்த கல்யாணம் என்ன?” இம்முறை அழுத்தத்துடன் ஒலித்தது அவன் கேள்வி. இத்தனை நேரம் அவளை, அவர்களைச் சுற்றி அழகாய் பிணைந்திருந்த மாயவலை சட்டென்று அறுந்து போனது. இத்தனை நேரமும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவனின் கடின முகம் அவளை அச்சுறுத்தியது.
பிரகதீஸ்வரனின் கேள்வியில், அவனது தீவிர முக பாவனையில் அவள் செய்வதறியாது அதிர்ந்து விழித்தாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்ல வாயெழாமல் அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றிருந்தாள். அவளின் மனம் அவனது புரிதலற்ற கேள்வியில் பலமாக காயப் பட்டது.
அந்த காயம் பட்ட மனதின் வலியை அவளின் விழி பிரதிபலிக்க அதை உணரும் நிலையில் பிரகதீஸ்வரன் இல்லை.
அவனது ஏமாற்றம் அளப்பரியதாக அவனுக்குத் தோன்றியது. தான் இத்தனை மோசமாக ஏமாற்றப்பட்டிருப்போம் என்று அவன் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. தன் காதல் இந்தளவு அவமதிக்கப்படும் என்று அவன் கனவிலும் எண்ணியதில்லை.
ஆனால், இது எல்லாமே அவனின் கணிப்பு தானே! மங்கை பதுக்கி வைத்த காதலை அவன் உணராமல் போனது இங்கு யாரின் பிழை? அதற்கான சூழல் இன்னும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கான சூழலை இன்றுவரையுமே இருவரும் உருவாக்க முயன்றதில்லை. திருமணத்திற்கு பிறகும் தள்ளி நின்ற பிழைக்கான பொறுப்பு அவர்கள் இருவருக்குமே சரிசமமாக உண்டு!
ஸ்ரீமதியின் விழிகள் அவனிடம் இறைஞ்சிக் கொண்டிருக்க அவளின் வலியைப் பொருட்படுத்தாமல் அவளின் மீது நெருப்பள்ளி கொட்டினான் கணவன்.
“செழியன் உனக்கு வேணும்ன்னா… அவனுக்கு நீ அம்மாவா இருந்து கவனிக்கணும்ன்னு நினைச்சிருந்தா நீ கல்யாணம் செய்திருக்க வேண்டியது என்னையல்ல… திலீப்பை…”
கொட்டிவிட்டான். ஆத்திரத்தை அமில வார்த்தைகளால் கொட்டிவிட்டான். மனதிலிருந்து அந்த சொற்கள் உதிர்க்கவில்லை. கோபத்தில் தாறுமாறாக அவன் கவனமின்றி உதிர்ந்து விட்ட சொற்கள் அவை!
கேட்ட வார்த்தைகளின் வீரியம் ஸ்ரீமதியை மூச்சடைக்கச் செய்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேகம் முழுவதும் நெருப்பு பற்றிக்கொண்டது போலத் தகித்தது. கண்களில் செவ்வரி ஓடிட, விழிநீர் தளும்பி நின்றது. முகம் உக்கிரமானதில் இறுகி சிவந்து போனது.
விழிகள் நீரை வேகமாகச் சுரந்து விட, மங்கையின் தன்மானம் வெகுவாக சீண்டப்பட்டதில் அவள் சிலிர்த்து எழுந்தாள். கணவனை வேகமாக உதறித் தள்ளியவள், “ச்சீ…” என்றாள் அருவருப்பாக.
அதில் பிரகதீஸ்வரனின் ஆங்காரமும் தலை தூக்கியது. “என்னடி ச்சீ…” என்று ஆத்திரமாக அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். மனைவி தன் பிடியிலிருந்து விடுபட்ட கோபம் வேறு அவனுக்கு!
வேகமாக பின்னோக்கி நகர்ந்தவள், “கிட்ட வராதீங்க…” என்றாள் அவனைவிட ஆத்திரமாக. எந்த மாதிரியாகத் தொடங்கிய பேச்சை எந்த லட்சணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறான் ஆத்திரத்தில் அவளின் உடல் நடுங்கியது.
“என்னவோ பீல் பண்ணினது இல்லைன்னு சொன்னீங்களே… அதுக்கு முதல்ல நீங்க என்கிட்ட இருந்திருக்கீங்களா? நான் இருக்க திசைக்கே வர மாட்டீங்க…” என்றாள் கோபமாக.
அவளின் கோபத்தில் அவன் வாயடைத்து நிற்க, “நான் சொல்லறது இப்ப மட்டும் இல்லை… ஆறு வருஷமா? எப்பவாவது இருந்திருக்கீங்களா சொல்லுங்க? என்னை பொருட்டா கூட நீங்க நினைச்ச மாதிரி தெரியலை…” என்றாள் மீண்டும்.
அவன் மௌனமானான். அவனது புருவங்கள் சுருங்கியது. இத்தனை கோபத்தை ஸ்ரீமதியிடம் அவன் எதிர்பார்க்கவில்லை. அவளின் தோற்றம், முகம், பேச்சு எல்லாமே அவளின் கோபத்தின் அளவை தெளிவாகப் பிரதிபலித்தது.
“அப்பறம் உனக்கெதுக்கு என் மனசை பத்தி அக்கறை? அதை நோகடிக்க உனக்கென்ன உரிமை இருக்கு? இதை உன் கையால தானே வாங்கினேன்… அந்த யோசனை கூட உனக்கு இல்லாம போகுமா?” என்றாள் தாலியைத் தூக்கி அவன் முன் நீட்டி.
அவளின் ஒருமைப்பேச்சு புதியது. இப்படி எல்லாம் அவள் பேசுவாள் என அவன் எண்ணிக்கூட பார்த்ததில்லை. அவனுடைய தரக்குறைவான பேச்சு சரியில்லை என்று அவனுக்கே புரிந்தாலும், அதற்காக மன்னிப்பு கேட்க அவனது தன்னகங்காரம் இடம் தரவில்லை. இவள் ஒதுங்கி ஒதுங்கி போயிராவிட்டால் இந்த சண்டையே அநாவசியம் என்று வாதாடியது அவனது மனம்.
“உன்கிட்ட எப்படி என்னை வர விட்ட? என்னைப் பார்த்தாலே மாயமா மறைஞ்சு போயிடுவ. இதுல நான் உன் கிட்ட வரலை… நீ எனக்குப் புரிய வைக்க முடியலைன்னு கதை வேற…” தவறு தன் வார்த்தைகளில் என்ற உறுத்தல் இருந்ததாலோ என்னவோ கொஞ்சம் அடக்கி வாசித்தான்.
அவள் முகம் சுருக்கினாள். “இப்ப பேச்சு அதைப்பத்தி இல்லை… நீ இன்னும் அறுபது வருஷம் கழிச்சு கூட அதை புரிஞ்சுக்க. அது உன்னோட இஷ்டம். ஆனா என்னை பார்த்து எப்படி நீ அந்த மாதிரி கேட்கலாம்?” என்றாள் அடங்காத கோபத்துடன்.
அவன் ஏதோ சொல்ல முயல, வேகமாகக் கைநீட்டித் தடுத்தவள், “அப்படியென்ன செழியன் எனக்கு ஸ்பெஷல்? நீயில்லாம அவன் எங்க என் வாழ்க்கையில வந்தான்? உன் கணிப்புபடி அம்மா இல்லாம வளர்ந்த நான், அம்மா இல்லாம வளரும் இன்னொரு குழந்தையை பார்த்துப் பரிதாபப்பட்டு… உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டதா வெச்சுக்கிட்டாலும்… இந்த ஊருல இவன் மட்டும் தான் அம்மா இல்லாத குழந்தையா என்ன?
ஒருவேளை அப்படி ஒரு சேவை தான் நான் செய்யணும்ன்னு நினைச்சிருந்தா… நீ கேட்ட மாதிரியே குழந்தையோட தாய் மாமாவை ஏன் நான் கல்யாணம் செஞ்சுக்க போறேன். ஏதோவொரு குழந்தை… அந்த குழந்தையோட அப்பாவுக்கு ரெண்டாம் தாரமா போயிருக்க மாட்டேனா?” சாட்டையடியாய் அவள் கேட்க, அவன் ஸ்தம்பித்தான்.
ஆத்திரத்தில் பெரிய சிக்கலை உண்டு பண்ணி விட்டோம் என்று அவனுக்கு இப்போது தான் தெளிவாக உரைத்தது. எப்படி இந்தளவு வார்த்தையை விட்டோம் என்று நொந்தான். அவன் சொன்னதையே அவள் திருப்பி கேட்ட பிறகே அவனுக்கு தன் வார்த்தைகளின் வீரியம் புரிந்தது. பதறி, “ஸ்ரீ…” என்று ஓரடி முன்னோக்கி வர,
“என் கிட்ட வர வேண்டாம்ன்னு உன்கிட்ட சொன்னேன்” என்றாள் அழுத்தமாக.
“இங்கே பாரு ஏதோ கோபத்துல…”
அவன் சொல்ல வந்ததை முழுதாக கேட்காமல், “ஏதோ கோபம் அப்படித்தானே? எனக்கும் அந்த ஏதோ கோபம் தான்… அதுவும் உனக்கு வந்ததை விட நிறைய… அது குறையிற வரை என்கிட்ட வரணும்ன்னு நினைச்சு கூட பார்த்துடாத… என்கிட்ட ஒரு வார்த்தை பேசிடாத…” குரல் நடுங்க, கண்ணில் நீர் பெருக அவள் பேசியதில் அவன் உள்ளுக்குள் உடைந்தான்.
‘உன்னை தானே அவ கல்யாணம் செஞ்சுகிட்டா… பிடிக்காம எப்படி இது நடக்கும்? நீ யோசிக்கவே மாட்டியா? அந்தளவு முட்டாளா நீ?’ அவனை அவன் மனம் திட்டி தீர்த்தது. முகம் குற்றவுணர்ச்சியில் சிறுத்துப் போனது.
“ஸ்ரீ தப்பு என்மேல மட்டுமா… பேருக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகியிருக்கு. ஆனா நீ என்கிட்ட பேச கூட ட்ரை பண்ணலை…” என்று குற்றம் படித்தான். தன் பக்க விளக்கம் சொல்ல அவனிடம் எதுவும் உருப்படியாக இருந்தால் தானே? ஆக, தன் மன அவஸ்தையைக் கூறி நியாயம் கேட்க முயன்றான்.
“ஓஹோ…” என்றாள் இகழ்ச்சியாக.
“நான் சொல்லறது நிஜம் தானே?”
“அப்ப நீ பேசி நான் பேசாம போனேனா?”
“நோ… ஐ டிட்டின்ட் மீன் தட்…”
“அதெப்படி… சரி அதைவிடு. நான் குழந்தைக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா சார் என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு சொல்லறீங்களா?”
“இதென்னடி கேள்வி?” என் காதல் உனக்குத் தெரியாதா என்ற சலிப்பு அவனிடம்.
அவள் தான் நன்றாக அறிவாளே! அவனின் காதல் தானே அவளுள்ளும் காதல் ஊற்றை தொடங்கிற்று. அவன் அக்கறை தானே அவள் அறிந்த முதல் நேசம். சிறுக சிறுக அவளையுமறியாமல் அவளுள் கால் பதித்தவன், இந்த மாதிரி ஒரு கேள்வியை எப்படி கேட்கலாம் அவள் மனம் சாந்தமே கொள்ளவில்லை.
“ஆமா ஆமா இந்த கேள்வியை அநாவசியம் தான்…” என்று இழுத்து நிறுத்தியவள், இப்பொழுது அவன் மீது நெருப்பள்ளி கொட்டத் தயாரானாள்.
அவனையே பார்த்த வண்ணம், “குடும்ப தொழில்… அந்த தொழில் விட்டு போயிட கூடாது. சொத்து, தொழில் எல்லாம் பிரிஞ்சுட கூடாது… இந்த மாதிரி உன்னத நோக்கத்தோடு நடந்த கல்யாணம் தானே இது… இந்த அறிவு கூட எனக்கிருக்காதா என்ன? ஆனா பாருங்க நீங்க என்னை விட அனுஷாவை கல்யாணம் பண்ணியிருக்கலாம். அப்பா அவளுக்குன்னா இன்னும் நிறையவே செய்முறை செய்வாங்க”
அவள் கன்னத்தில் அரையும் ஆத்திரத்தை எப்படிக் கட்டுப்படுத்தி நின்றான் என்று அவனுக்கே புரியவில்லை. சிவந்த கண்களை இறுக மூடிக்கொண்டான். தன் இரு கைவிரல்களையும் பேண்ட் பாக்கெட்டினுள் இறுகத் திணித்து நின்றான்.
வேக மூச்சுக்களால் அந்த பேச்சை, அதில் கிளர்ந்த கோபத்தைக் கட்டுப்படுத்த போராடினான்.
இவன் சம்பந்தமே இல்லாமல், கோபத்தில் திலீப்பை இழுத்ததற்குப் பதிலடியாய் அவள் அனுஷாவை இழுத்திருக்கிறாள் என்று புரியாமல் இல்லை. இல்லாவிட்டால் சின்ன பெண். இவனை விடவும் குறைந்தது பத்தாண்டுகள் இளையவள். அவளைப்பற்றி இப்படி ஒரு வார்த்தையை விட்டிருக்க முடியுமா?
ஆயிரம் புரிந்தாலும் கோபம் அடங்க மறுத்தது. அவள் எப்படித் துடித்திருப்பாள் என்று அவளின் சாட்டையடி கேள்வியாலேயே மனைவி அவனுக்குப் புரிய வைத்திருந்தாள்.
அவள் பட்ட காயத்திற்கு நல்ல பதிலடி!
என்ன அவள் வீசிய வார்த்தைகளின் தாக்கம் அவளின் புத்திசாலித்தனத்தை மெச்சவிட முடியாமல் தடுத்தது.
என்ன முயன்றும் கோபம் கட்டுப்பட மறுக்க, “உன் கோபம் குறையட்டும் அதுக்கப்பறம் பேசிக்கலாம்” என்றதோடு விறுவிறுவென திரும்பி நடந்து விட்டான். அவனது நடையின் வேகத்தில் அவனின் அடங்காத கோபம் புரிந்தது.
காயம் தந்தவனுக்குக் காயத்தைக் கொடுத்ததில் அவளுக்குத் திருப்தி ஏற்படுவதற்குப் பதில் வலிதான் வந்தது. அவனை நோகடித்து தானும் நொந்து… என்ன சாதித்தோம் இதில் என அவளுக்கு அலுப்பாக இருந்தது. மழையடித்து ஓய்ந்தது போல இருந்த பேச்சு வார்த்தையின் முடிவில் ஒருமாதிரி ஓய்ந்து போனாள்.
திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் நடந்த முதல் பேச்சுவார்த்தை… அப்படியொன்று நடந்ததே என்று மகிழ்வதா? இல்லை இப்படி இருவரும் சரிக்குச் சரியாகச் சண்டைக்கு நின்றதை நினைத்து நொந்து கொள்வதா?
தன் முன் நீண்டு விரிந்திருக்கும் வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற அச்சம் அவளை ஆட்டுவித்தது. என்றோ ஒரு நாள் பிரகதீஸ்வரன் ஏதோ கேட்டான் என்பதை வைத்து… தன் மனதில் ஆசையை வளர்த்து, இந்தளவில் அதைக் கொண்டு வந்தது தவறோ என அவள் கலங்கினாள்.
கூடிய விரைவில் அவளின் கலக்கத்தை போக்கினான் அவளின் கணவன். அதில் அவள் மனம் பேருவகை கொண்டாலும், அவன்மீது கொண்டிருந்த கோபத்தை அவள் சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை.