மௌனக்குமிழ்கள் – 4

பிரகதீஸ்வரனே எதிர்பாராமல் அவனுள் இருந்த எண்ணங்கள் ஸ்ரீமதியிடம் வெளிப்பட்டு விட்டது. அவனுக்கே அது நிச்சயம் அதிர்ச்சி தான்!

உண்மையைச் சொல்வதென்றால் அவனுள் அப்படி ஒரு எண்ணம் இருந்ததை அவனே அறிந்திருக்கவில்லை!

அவளை பாராமல் இருந்த இத்தனை ஆண்டுகளில் அவன் என்றுமே அவளை நினைத்து ஏங்கியதில்லை. ஏன் அவளைப்பற்றிய எண்ணங்கள் கூட எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போலத் தான் எழுவதுண்டு. அது உடனேயே கானல் நீர் போல மறைந்தும் போய்விடும். அவனின் வார்த்தைகள் ஸ்ரீமதிக்கு எந்தளவு அதிர்ச்சியோ அதற்கு துளியும் குறைவில்லாதது அவனுடைய அதிர்ச்சியும்!

இப்படி இத்தனை ஆண்டுகள் கழித்து இன்றுதான் முதன்முதலாகப் பார்த்த ஒரு பெண்ணிடம், அதுவும் சின்ன பெண் வேறு… அவளிடம் உடனே தன் மனதைச் சொல்லி அவளை அச்சுறுத்தாமல் இருந்திருக்கலாம் என மானசீகமாகத் தன்னையே குட்டிக் கொண்டான்.

அது எந்த சூழ்நிலையாக இருந்தபோதும், தன் மனக்கட்டுப்பாட்டை மீறி எப்படி அவ்வாறு சொல்ல முடிந்தது என்பது இன்னமும் அவனுக்குப் புரியாத புதிர் தான்!

சரி இப்போதைக்கு இதனை அப்படியே விட்டுவிடுவோம், மறுமுறை பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்டு விடலாம் என அவன் நினைத்தாலும், அவன் பார்வையிலேயே விழாமல், விலகி விலகி ஓடி ஒளிந்து அவனை வெகுவாக சோதித்து கொண்டிருந்தாள் ஸ்ரீமதி.

சில தினங்கள் கழித்து வேதாச்சலம் வீட்டிற்குச் சென்றிருந்தவனுக்கு முன்பு நடந்த விஷயம், அதற்காக ஸ்ரீமதியிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்திருக்கிறோம் என்பதெல்லாம் மொத்தமாக மறந்தே விட்டிருந்தது.

தன் வழக்கம்போல ஸ்ரீமதி எங்கே என தேடித் தேடி அலுத்து போன பிரகதீஸ்வரன், பேச்சுவாக்கில் இளையவர்கள் அனுஷா, சரணிடம் விசாரிக்க, “அவங்களா… இப்ப எல்லாம் ரொம்ப அமைதியாவே இருக்காங்க. அப்பாகிட்ட எதுவோ கேட்க நினைப்பாங்க போல… அப்பா வரும்போது இங்கேயே சுத்தி சுத்தி வராங்க. ஆனா அப்பா கண்டுக்கறதே இல்லை. என்னவா இருக்கும்ன்னே தெரியலை…” என்றாள் அனுஷா குதூகலமாக.

“ஆமா… +2 வேற முடிச்சிருக்காங்க. இனி காலேஜ் போகணும். சென்னையில எங்கேயாவது சேர்த்துவிடச் சொல்லி கேட்டுட போறாங்க. வழக்கம்போல ஊரிலேயே ஹாஸ்டல்ல தங்கியிருந்து படிக்கட்டும். இங்கே சேர்ந்துட்டா, அதுக்கப்பறம் எப்பவும் இங்கேயே இருப்பாங்க” என்றான் சரண் முகம் சுருக்கி.

ஆறு, எட்டு எனப் படிக்கும் சின்ன பிள்ளைகள். இவர்கள் இப்படி பேசுவது அவனுக்கு ரசிக்கவில்லை. எல்லாமே இவர்களின் அம்மாவின் போதனைகளாக இருக்கும் என புரிந்தாலும், அப்படியென்ன இந்த வயதிற்குக் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாதா என்று எரிச்சல் பட்டான். இவர்களைப் போல அவளும் வேதாச்சலத்திற்கு மகள் தானே! அதற்கான இம்மி உரிமை கூட அவளுக்கு இல்லையா? சொந்த தந்தையிடம் பேசக்கூட முகம் பார்த்து, தயங்கி, விலகி நிற்பதெல்லாம் எத்தனை கொடுமை என்பது இவர்களுக்குப் புரியாமல் போகுமா என்ன என அதிருப்தியானான்.

ச்சே! இவர்களை நொந்து என்ன பயன்? இவர்களைப் பெற்றவர்களைச் சொல்ல வேண்டும்! ஆனால், அவளிடம் இருவரும் பேசி பழகி இருந்தால் அவளின் மென்மையும் சாந்தமும் புரிந்திருக்குமே! இத்தனை விலகல் இருந்திருக்காதே!

இதற்கும் ஸ்ரீமதியும் ஒவ்வொரு வருடமும் வந்து இங்கு ஒரு மாதம் தங்கிச் செல்கிறாளே! அப்பொழுது அவளுடன் பேச மாட்டார்களா என்ன என எண்ணியபடியே, “அவகிட்ட நீங்க பேச மாட்டீங்களா என்ன?” என்றான் குழப்பத்துடன். இருவரின் பேச்சிலுமே ஒட்டாத தன்மை இருப்பது புரிந்தாலும் அதெப்படி ஒரே வீட்டில் இருந்துகொண்டு இத்தனை புறக்கணிக்கிறார்கள் என அவனுக்குப் புரியவில்லை!

“இல்லை பிரகா அம்மாவுக்குப் பிடிக்காது… எங்களுக்கும்… என்னவோ அவங்களை பார்த்தாலே பிடிக்கலை” என்றாள் அனுஷா முந்திக்கொண்டு.

இளையவர்களிடம் பேசி பயனில்லை என்றாலும், இவர்களுடைய மேல்தட்டு கலாச்சாரத்திற்கு இந்தளவு விவரங்கள் கேட்டதே அதிகம் என்பதால், பொத்தாம் பொதுவாக, “இப்ப எங்கே?” என்றதோடு மட்டும் இந்த பேச்சை முடித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கேட்டான்.

“கொஞ்ச நேரம் முன்னாடி அவசரமா ரூமுகுள்ளே போனதை பார்த்தேன் பிரகா… எப்பவும் வெளிய தான் தோட்டத்துல இருப்பாங்க. ஏன் இப்படி வேகமா போனாங்கன்னு தான் புரியலை…” என்று சரண் கூறினான்.

பிரகதீஸ்வரனின் புருவங்கள் முடிச்சிட்டது. ஏன் திடீர்ன்னு மறையணும் என யோசித்தவனுக்குப் பழைய சங்கதிகள் பளிச்சென நினைவில் வந்துவிட, என்னைத் தவிர்க்கிறதுக்காகவா என்று சரியாகக் கணித்தான்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதுபோல் அவள் நடந்து கொண்ட விதத்தில் அவன் வெகுவாக எரிச்சலுற்றான்.

இருபத்தி மூன்று வயது நிரப்பிய இளைஞன். படிப்பை முடித்து ஓராண்டாக வெற்றிகரமாக தொழிலை விரிவாக்கி நடத்தி வருபவன், இத்தனை ஆண்டுகளில்… நிறையத் தோழிகள் இருந்தபோதும்… பல பிரபோசல்கள் வந்தபோதும்… எல்லாவற்றையும் புறக்கணித்து, காதல் என்று ஒருத்தியோடும் சுற்றித் திரியாதவன், அவனைப் பார்த்து ஒருத்தி விலகி ஓடுவது அவனுடைய தன்மானத்தை வெகுவாக சீண்டியது.

‘என்னை பார்த்தால் அவளுக்கு அத்தனை மோசமானவனாகத் தெரிகிறதா?’ என அவனுள் கோபம் கனன்றது. அந்த கோபத்தைச் சிறிதும் குறையாமல் பார்த்துக் கொண்டது ஸ்ரீமதியின் தொடர் புறக்கணிப்பு.

அவள் நிலை எப்படியிருக்கும் என்று அவனுக்கு யோசிக்கத் தெரியவில்லை.

தடுமாற்றமான பதின்பருவத்தில் கண்டிப்பு காட்டுவதற்கு நெருங்கிய உறவென யாருமில்லாமல் வளரும் பெண் ஸ்ரீமதி! சிறுவயதிலிருந்தே தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவள். தன் வயதைக் காட்டிலும் அதிக புத்தி முதிர்ச்சியுள்ள அவளுக்குக் காதல் என்பதைக் குறித்து யோசிக்கக் கூட முடியாது.

அவளை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு… இப்பொழுது இந்த உலகத்தில் அவளிடம் மட்டும் தான் இருக்கிறது.

இது மிகவும் கடினமாகச் சூழல். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கோ, அவள்மீது பரிதாபம் கொள்பவர்களுக்கோ இத்தனை நுணுக்கங்கள் தெரியாது! புரியவும் புரியாது!

அதன் காரணமாக அவள் விலகிச் செல்ல செல்ல, அவன் மிகவும் உக்கிரமானான். ‘இவ பெரிய இவ…’ என்ற அலட்சியமும் தானாக வந்து ஒட்டிக் கொண்டது.

பிரகதீஸ்வரனின் கோபம் ஆறாமலேயே, ஸ்ரீமதியின் மனம் சமாதானம் அடையாமலேயே… அவர்களது திருமணமும் முடிந்து, இதோ அவனிடமே முறுக்கிக் கொண்டு திரிகிறாள் அவனின் மனையாள்.

பிரகதீஸ் மனதிற்குள், ‘இது நல்ல கதை தான்! கோபம் வர வேண்டியது எனக்கு… ராட்சசி…’ என முணுமுணுத்தபடி உறங்கிப் போனான். அவனின் ராட்சசியைப் பார்த்தபடியே…

நாட்கள் இவ்வாறே பயணித்திருக்க, ஒரு நாள் காலை உணவை முடித்ததும், செய்வதற்கு எதுவுமில்லாமல் ஸ்ரீமதி சுடோகு சால்வ் செய்து கொண்டிருந்தாள். செழியன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

குழந்தையைக் கவனித்துக் கொண்டிருந்த மணிவண்ணனின் கவனம், அவ்வப்பொழுது பேத்தி ஸ்ரீமதி மீதும் யோசனையாக படிந்து மீண்டது.

“என்ன தாத்தா? ஏதாவது கேட்கணுமா?” பேப்பரிலேயே கவனம் பதித்த வண்ணம் வினா எழுப்பினாள்.

“ம்ம்ம்…” என்ற தாத்தாவின் யோசனையான குரலில் நிமிர்ந்து அவரின் முகம் நோக்கிக் கூர்ந்தாள். இவர் எதை நினைச்சு இப்ப இத்தனை கவலை படறாரு?

அவரையே முகம் சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “இந்த கல்யாணம் எதுக்கு ஸ்ரீம்மா?” என்றார் தாத்தா. இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை அவள். மீண்டும் பேப்பரில் கவனம் குவித்து தலை கவிழ்ந்தாள்.

குரல் மாறாமல், “கல்யாண பிரபோசலை தொடங்கி வெச்ச நீங்களே இப்படிக் கேட்கிறது விசித்திரமா இருக்கு தாத்தா…” என்று நிமிராமலே பதில் சொன்னாள்.

“அப்ப இந்த பிரபோசலை முதன்முதல்ல தொடங்கினது நான்தான் இல்லையா?” தாத்தாவின் பார்வை தன்னை துளைப்பதை நிமிராமலேயே ஸ்ரீமதியால் உணர முடிந்தது.

கீழுதட்டை கடித்து தன் உணர்வுகளை நிலைப்படுத்தினாள். படபடத்த இதயத்தின் துடிப்பு தெளிவாக அவள் காதில் கேட்டது. உள்ளங்கைகள் வேர்க்கத் தொடங்கி விட்டது. இல்லாத திடத்தைக் குரலில் தேக்கி, “அப்படித்தான் எனக்கு ஞாபகம்” என்றாள் அசராமல். மணிவண்ணன் ஒருநொடி தடுமாறினார். அவரின் கணிப்பு தவறாக இருக்கும் என இப்பொழுதும் அவரால் நினைக்க முடியவில்லை.

ஆனால், விடையைத் தான் கண்கூடாகப் பார்க்கிறாரே! திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் பிரகதீஸும், ஸ்ரீமதியும் பேசி அவர் பார்த்ததே இல்லை. ஏன் கண் ஜாடைகள் கூட எதுவும் இருந்ததில்லை. இந்த வீட்டோடு இன்றளவும் ஸ்ரீமதி ஒட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், சம்பந்தமே இல்லாமல் செழியனின் பொறுப்பை மொத்தமாக ஏற்றிருக்கிறாள்.

இதற்கும், திருமண பேச்சை இருவரிடமும் தனித்தனியே எடுத்தபோது, இருவருமே மறுப்பை சொல்லவில்லை. ஒன்றுபோல மற்றவரிடம் கேட்குமாறு சொல்லி மழுப்பினர். அவனுக்கு சம்மதமென அவளிடமும், அவளுக்குச் சம்மதம் என அவனிடமும் சந்தேகம் தோன்றாத வகையில் பொய்யுரைத்து… இந்த பேச்சை இரு குடும்பங்களிடையேயும் முன்னெடுத்து அதில் வெற்றியும் பெற்றவருக்கு இவர்களின் தாமரை இலை தண்ணீர் வாழ்க்கை பலத்த யோசனையைத் தந்தது.

“இவனுக்காகத்தான் இந்த கல்யாணமா ஸ்ரீம்மா… அது தப்பில்லையா?” என்றார் செழியனை சுட்டிக்காட்டி. என்ன முயன்றும் மணிவண்ணனின் குரலில் கவலை எட்டிப்பார்த்தது.

விழுக்கென நிமிர்ந்தவள், “ஏன் தாத்தா உங்க பேரனை கல்யாணம் செஞ்சுக்க அவர்கிட்ட ஸ்பெஷலா எதுவுமே இல்லையா என்ன? இதென்ன சின்ன குட்டியைக் காட்டி கேட்கறீங்க… அப்ப இவன் இல்லைன்னா அவர் வொர்த் இல்லைன்னா சொல்லறீங்க?” என்றாள் கண்ணைச் சிமிட்டி குறும்பாக.

குறும்பு பேச்செல்லாம் அவளிடம் பொதுவாக இருந்ததே இல்லை. சமீப காலமாகத் தாத்தாவிடம் மட்டும் தான் அவள் கூட்டிலிருந்து வெளியே வந்து சூட்டிப்பாய் நடந்து கொள்கிறாள். இன்றும் தாத்தா கவலையாகப் பேசிவிடவும், தன்னைப்போல அது பொறுக்காமல் அவளுக்குள்ளிருந்து குறும்பு தலை தூக்கியிருந்தது.

அவளின் கேள்வியில் லேசாகப் புன்னகைத்தாலும் அவரிடம் தெளிவில்லை. ஸ்ரீமதிக்கு ஒருமாதிரி குற்றவுணர்வாக இருந்தது.

அந்த வீட்டில் மாமனார், மாமியார் இருவர் முன்னும் அவள் எப்படி இருந்தாலும் பிரச்சினையில்லை. அவர்கள் மிகவும் முற்போக்கானவர்கள். உனக்கு இதைப் படிக்க வேண்டுமா படி… தொழிலா எடுத்துக்கொள்… திருமணமா செய்து கொள்… இவ்வளவு தான் பிள்ளைகளிடம் அவர்களது மறுமொழி. இருவருமே ஒட்டி உறவாடும் ரகம் இல்லை. ஆக புது மனத்தம்பதிகளான மகன், மருமகளின் வாழ்வு எப்படிப் போகிறது என யோசிக்கக் கூட மாட்டார்கள்.

செழியனோ விவரம் தெரியாத சிறுகுழந்தை! ஆனால், தாத்தா அப்படியில்லை. அவர் அவர்களை, அவர்களது வாழ்க்கைமுறையை இணுக்கு கூட விடாமல் கவனிக்கிறார். இப்பொழுது கேள்வியும் கேட்கத் தொடங்கி விட்டார்.

உண்மையில் மணிவண்ணன் தாத்தா அந்த வீட்டில் யாரோடும் ஒட்ட மாட்டார். வீட்டினரோடு சரியாகப் பேசி கூட அவள் பார்த்ததில்லை. இந்த மனிதர் எப்படி பிரகதீஸ்வரனிடம் திருமணத்திற்குக் கேட்டார், இரு வீட்டிலும் திருமண பேச்சை முன்னெடுத்து அதை நடத்தியும் காட்டினார் என இன்னமும் அவளுக்கு நம்ப முடியாத ஆச்சரியம் தான்! அந்தளவு ஒட்டுதலின்றி இருப்பவர்.

ஆனால், அவள் விஷயத்தில் அவர் அப்படி இருக்கும் ரகமாகத் தெரியவில்லை. ஸ்ரீமதி பல சமயம் யோசிப்பதுண்டு, இவரது உண்மையான குணம் இதுதானோ? இந்த வீட்டினரிடம் மட்டும் ஒதுக்கம் என்னும் முகமூடி போட்டுத் திரிகிறாரோ என்று!

அவரின் முகமூடி கழன்று இயல்பாக அவளிடம் நடந்து கொள்வதாலோ என்னவோ… அவளையும் அறியாமல் அவளின் சிறுபிள்ளைத் தனங்களுக்கும், துருதுருப்பும் அவரிடம் மட்டும் எட்டிப்பார்க்கிறது போல!

இப்பொழுதும் தாத்தாவின் கலக்கம் பிடிக்காமல், “தாத்தா… இப்பதான் எங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. ஜீபூம்பா மாதிரி எதுவும் உடனே நடந்திடாது. எங்களுக்கும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க டைம் கொடுங்க. அவரை எனக்கு பிடிச்சு தான் இந்த கல்யாணமே! அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வளவு அழகா… சார்மிங்கா… ஹேண்ட்ஸம்மா இருக்க உங்க பேரனை யாருக்குத் தான் பிடிக்காது சொல்லுங்க. அதுவும் எ யங் சக்ஸஸ்புல் பிசினஸ் மேன் வேற…”

அவளின் பேச்சு போலியாகவே மணிவண்ணனுக்கு தோன்றியது. நீண்ட பெருமூச்சுடன், “நீயும் சொல்லற… ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி…” என்றதோடு அவள் அழைக்க அழைக்கக் கேட்காமல் உள்ளே சென்று விட்டார்.

சங்கடத்தில் அவளின் தலை தாழ்ந்தது. சில நொடிகள் மௌனமாகக் கழிய இப்பொழுது நீண்ட பெருமூச்சை விடுவது அவள் முறையாயிற்று.

செழியனை தூக்கிக்கொண்டு திரும்பியவள் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்தாள். அங்கிருந்த மரத்தின் மீது ஒரு காலை குறுக்காக வைத்துச் சாய்ந்தவாறு, கைகளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரகதீஸ்வரன்.

‘இவன் எப்ப வந்தான்? எதுவெல்லாம் கேட்டான்னு தெரியலையே!’ என அவளுக்குள் குளிர் பரவ தொடங்கியது. மேனி நடுங்குவதை போல உணர்ந்தவள் தலையை நன்கு குனிந்து கொண்டாள்.