அத்தியாயம்-58-1

கண்ணீர் வராமல் அவரைச் சுதாரித்துக் கொண்டவர்,”அவன் வீட்டுக்கு வரப் போற விஷயம் மதனுக்கு தெரியாம இருக்காது கண்ணு..அவன்கிட்டே உன்னைப் பற்றி சொல்லி அவனைத் தயார் செய்து தான் வீட்டுக்கு அனுப்புவார்..எத்தனை முறை அவனைப் பற்றி கேட்டு அவரைத் தொல்லை செய்திட்டு இருக்கோம் அதனாலே நமக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லிடுவார்…எப்படியும் உனக்கு ஒரு ஃபோன் போட்டிட்டு தான் வீட்டுக்கு வருவான்..அப்போ நீயே அவன்கிட்டே சொல்லிடு.” என்றார்.

அப்போது அறையினுள்ளே வந்த வசந்தி,”சினேகா, உனக்காக ஸுப், இட்லி தயார் செய்திருக்கேன்..சித்தி, நமக்கு மதியம் மீதி இருந்ததை சூடு செய்து வைச்சிட்டேன்..கொண்டு வரவா?” என்று கேட்டாள்.

“எனக்கு எதுவும் வேணாம் அண்ணி..மதியம் சாப்பிட்ட கலந்த சாதம் வயிற்லே டோம்னு இருக்குது.” என்றாள் சினேகா.

“அதெல்லாம் அப்போவே செரிமானமாகிடுச்சு..வாக்கிங் போகறத்துக்கு முன்னாடி பழம் சாப்பிட்ட..அதுதான் இன்னும் ஜீரணமாகலை போல..இன்னைக்கு கொஞ்சம் லேட்டா சாப்பிடுவோம் வசந்தி..நீயும் வந்து உட்கார்..காலைலேர்ந்து உனக்கு ஒரே வேலை, விமான நிலையம், இரயில் நிலையம்னு ஒரே அலைச்சல்..” என்றவரை இடையிட்டு,”நித்யாவோட ஷாப்பிங் வேற..என்ன வாங்கினா அவ?” என்று விசாரித்தாள் சினேகா.

அவள் வாங்கியதை விவரித்து விட்டு அவளுக்கு வாங்கிக் கொடுத்ததையும் கொண்டு வந்து காட்டினாள் வசந்தி.

“அழகா இருக்கு அண்ணி..சிகப்பு, பச்சைலே உங்ககிட்டே புடவை இருக்கா?” என்று கேட்டாள் சினேகா.

“இல்லைன்னாலும் ஷிக்காகிட்டே சொல்லி வாங்கிக்க..இது ரொம்ப அழகா இருக்கு..உனக்கும் அழகா இருக்கும்..இன்னைக்கு உடுத்தின புடவை நல்லா இருந்திச்சு.” என்றார் விஜயா.

“அது சவுத் இந்தியன் ஸ்டோர்லே வாங்கினது தானே அண்ணி?” என்று கேட்ட சினேகாவிற்கு ‘ஆமாம்’ என்று தலையசைவில் பதில் அளித்த வசந்தியின் மனது அவள் மறக்க நினைத்த தினத்திற்கு பயணம் செய்தது. 

ஒரு நாள் மாலைப் பொழுதில் ஷிக்காவின் கடையிலிருந்து அவரது காரில் வசந்தியை மார்கெட்டிற்கு சென்றார் மதன். கிட்டதட்ட அனைத்துப் பொருள்களும் சென்னையிலிருந்து வருவதால் கடைக்காரரிடம் முன்கூட்டியே பணத்தையும் லிஸ்ட்டை கொடுத்து வைத்திருந்தாள். சாமான்களை எடுத்து வர இரண்டு, மூன்று ட்ரிப் அடிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் மதனோடு கலந்தாலோசித்து அவருக்கு சௌகரியமான நேரத்தில் தான் சென்றாள். இன்று கொஞ்சம் அதிகமான சாமான்கள். அனைத்துப் பொருள்களையும் சரி பார்த்து பெரிய பைகளில் அவள் அடுக்கிக் கொண்டிருந்த போது ஜோதியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. ‘சொல்லுங்க அத்தை..ஏதாவது விட்டுப் போயிடுச்சா..நான் கடைலே தான் இருக்கேன்.சொல்லி வைக்கறேன்..வரவழைச்சிடுவாங்க.’ என்றாள். ‘ஆமாம்..விட்டு தான் போயிடுச்சு..உனக்கு இன்னும் புடவை வாங்கலை.’ என்று சொல்ல,’எனக்கு எதுவும் வேணாம்னு சொல்லிட்டேன்.’ என்றாள். ‘அப்போ அன்னைக்கு என்ன உடுத்தப் போற?.’ என்று கேட்க,’சித்தியோட பட்டுப்புடவையைக் கட்டிக்கலாம்னு இருக்கேன்.’ என்றாள். உடனே,’அங்கே பக்கத்திலே நம்ம ஊர் கடை இருக்குது..உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்க..எனக்கு அப்போ தான் மனசு திருப்தியா இருக்கும் வசந்தி.’ என்றார். ‘ஷிக்கா ஒரு புடவை கொடுத்திருக்கா அத்தை…அதை இன்னும் கட்டலை..அன்னைக்கு கட்டிக்கறேன்..புதுசு வேணாம்.’ என்று மறுத்தாள் வசந்தி. ‘அது நம்ம கடையோட சரக்கு..இந்த ஊர் புடவையை நம்ம விழாவுலே உடுத்தினா பாந்தமா இருக்காது..சிம்பிலா கரை வைச்ச காட்டன் புடவை ஒண்ணை வாங்கிக்க வசந்தி.’ என்று ஜோதி வற்புறுத்த,’சரி’ என்று ஒப்புக் கொண்டாள் வசந்தி. 

சாமான் நிறைந்திருந்த பைகளை அந்தக் கடையில் வேலை செய்த பெண்ணின் பொறுப்பில் வைத்து விட்டு கடையின் எதிர்புறத்தில் நிறுத்தியிருந்த காரருகே நின்றிருந்த மதனைப் பார்க்க, அவளுக்குப் பின்புறத்தைக் காட்டியபடி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார் மதன். 

சில நிமிடங்கள் அவர் திரும்புவதற்காக காத்திருந்தவள் அது நடக்காது போக, பக்கத்தில் தானென்று மதனிடம் தெரிவிக்காமல் புடவை கடைக்குச் சென்று விட்டாள். அவரது கைப்பேசி அழைப்பை முடித்துக்க் கொண்டு கடையின் பக்கம் பார்வையைத் திருப்பிய மதன் அங்கே வசந்தியைக் காணாது புருவத்தை சுருக்கினார். கடையில் வாடிக்கையாளர்கள் வருவதும் போவதுமாக இருக்க, வசந்தி அவர் கண்களில் படவில்லை. சாலையைக் கடந்து கடைக்குச் சென்றார் மதன். சமீபக் காலமாக அடிக்கடி அவரும் வசந்தியும் அந்தக் கடைக்கு வந்திருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொண்ட அந்தப் பெண் சுவரோரம் இருந்த பைகளைக் காட்டி, ஹிந்தியில்,’உங்களோடது.’ என்று சொல்லி விட்டு வாடிக்கையாளர்களைக் கவனித்தாள். வசந்தி எங்கே என்று கேட்க நினைத்தவர், வாஷ்ரூம் போயிருக்கலாம் என்று நினைத்து, ’தாங்க்ஸ்’ என்று அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்தப் பைகளைத் தூக்கிக் கொண்டு போய் காரின் டிக்கியில் வைத்து விட்டு வசந்திக்காக காத்திருக்க ஆரம்பித்தார். 

அரைமணி நேரம் கழித்து புதுப் புடவையை வாங்கிக் கொண்டு அந்தக் கடைக்குள் நுழைந்த வசந்தி, அங்கே அவள் விட்டுச் சென்ற பைகளைக் காணாமல் பதட்டமடைந்து, வாடிக்கையாளர் ஒருவரோடு பிஸியாக இருந்த அந்தப் விற்பனைப் பெண்ணிடம்,’பைகள் எங்கே? என்று கேட்க,’ஆப்கா ஆத்மி லேகே கயா.’ என்ற அவளின் பதில் புரியாமல் வசந்தி விழிக்க, அதைப் புரிந்து கொண்ட அந்தப் பெண் கடையின் எதிர்புறத்தில் நின்றிருந்த மதனை சுட்டிக் காட்டி அதே வாக்கியத்தை மீண்டும் சொல்ல, வசந்திக்கு ஹிந்தி வராது என்று யுகித்த அந்தப் பெண் வாடிக்கையாளர்,’அங்கே நின்னிட்டு இருக்கற உங்க வீட்டுக்காரர் பையை எடுத்திட்டுப் போயிட்டார்னு சொல்றா..வீட்டுக்காரரை ஆளுன்னு சொல்றது சில பேரோட வழக்கம்..உங்க ஆளுன்னு உங்க வீட்டுக்காரரை தான் சொல்றா இவ.’ என்று விளக்கம் கொடுக்க, அதைக் கேட்டு வசந்தியின் இதயம் ஒரு நொடிக்கு செயல்பாட்டை நிறுத்தியது. 

தானாக அவளது பார்வை எதிர்புறத்தில் நின்றிருந்த மதன் மீது பாய அதை உணர்ந்தார் போல் அவளைப் பார்த்த மதன், சைகையில் அங்கே வரணுமா? என்று வினவ, அதற்குப் பதில் அளிக்காமல், பார்வையை அகற்றாமல் அவரை அவள் வெறித்துப் பார்க்க, ஏதோ சரியில்லை என்று உணர்ந்த மதன் சாலையைக் கடக்க காலடி எடுத்து வைத்த போது அவளது ஸ்தம்பித்த நிலையிலிருந்து வெளியே வந்த வசந்தி அவசரமாக அந்தப் பெண்ணிற்கு நன்றி உரைத்து விட்டு மதனை நோக்கி வந்தாள். அவரருகில் அவள் வந்தவுடன்,’என்ன ஆச்சு? ஏதாவது பிராப்ளமா? எங்கே போயிருந்த?’ என்று வரிசையாக கேள்விகளை அடுக்க,’இல்லை..பிராப்ளமெல்லாம் இல்லை..பக்கத்திலே ஒரு கடைலே புடவை வாங்க போயிருந்தேன்..அதுக்குள்ளே நீங்க பையை எடுத்திட்டு வந்திட்டீங்க..அது தெரியாம பை எங்கே போயிடுச்சுன்னு கொஞ்சம் படபடப்பாகிட்டேன்.’ என்றாள். ‘ஓ’ என்று மதன் பதிலளிக்க அதற்கு மேல் அந்த உரையாடல் தொடரவில்லை.

இன்று காலையில் அந்தப் புடவையை அவள் உடுத்திய போது அந்த பெண் சொன்ன,’உங்க ஆள்’ என்ற வார்த்தை இதயத்தில் வந்து உட்கார்ந்து கொள்ள, அதை வெளியேற்ற முடியாமல் அவள் தவித்த தவிப்பு அவளுக்குத் தான் தெரியுமென்று வசந்தி எண்ணியிருக்க, அனிதா மேடமும் அவளது அலைப்புறுதலைக் கவனித்து விட்டாரென்று அவளுக்கு தெரியவில்லை. பாந்தமாக புடவையில் தயாராகி வந்தவளிடம்,’இந்தப் புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு..அதை எடுப்பா காட்டறது உன்னோட பிளவுஸ் தான்’ என்று ஜோதியில் ஆரம்பித்து மதியழகி வரை அனைவரும் அவளின் தோற்றத்தைப் பாராட்டிய போது உண்மையாக சந்தோஷமாக உணர்ந்தாள் வசந்தி. 

அவளது கைவண்ணத்தில் உருவாக்கியிருந்த ப்ளவுசை பார்த்து,’எனக்கும் இதே டிசைன்லே தைச்சுக் கொடு வசந்தி..ரொம்ப அழகா தைச்சிருக்க.’ என்று அனிதா பாராட்டியவுடன் தலைகுனிந்து கைப்பேசியைப் பார்த்தபடி அவரருகில் அமர்ந்திருந்த மதனின் பார்வை  வசந்தியை வட்டமிட, அதுவரை மதனைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தி அது தெரியாமல் இருக்க அந்த நொடி அனிதாவின் மீது பார்வையைத் திருப்ப, அவர் பார்த்தது தெரியாமல் இருக்க மதனும் அனிதாவின் புறம் பார்வையைத் திருப்ப, அவர்கள் இருவரும் ஒருசேர அவரைப் பார்க்க,’நம்ம முகத்திலே அப்படி என்ன புதுசா இருக்கு  இரண்டு பேரும் நம்மை இப்படிப் பார்க்கறாங்க’ என்று யோசனை செய்தவர் இருவரின் முகத்தையும் கூர்ந்து பார்க்க, உஷாரான மதன் உடனே நாற்காலியிருந்து எழுந்து கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகல, அசடு வசந்தி பார்வையால் மதனைப் பின் தொடர, இருவரின் செய்கையையும் மனத்தில் குறித்துக் கொண்டார் அனிதா.

மதனிடம் சிக்கியிருந்த வசந்தியின் மனத்தை,“நம்ம கடைலே வேணாம்..அந்தக் கடைலேயே வாங்கிக்கோங்க..நல்ல வெரைட்டி வைச்சிருக்காங்க.” என்று மீட்டுக் கொண்டு வந்தாள் சினேகா.

உடனே,“எதுக்கு சினேகா? வீண் செலவு.” என்று வசந்தி மறுப்பு தெரிவிக்க,

“வீண் செலவா? உனக்கு செய்துக்கறதை வீண் செலவுன்னு சொல்லாதே.” என்று விஜயா கோபப்பட,

“அப்படிச் சொல்லலை சித்தி..புடவை கட்டற மாதிரி இனி எந்த ஃபங்ஷனும் கிடையாது..அந்த அர்த்தத்திலே சொன்னேன்.” என்றாள்.

“பிள்ளைக்கு பெயர் வைக்கற ஃபங்ஷன் தான் அடுத்ததுன்னு ஜோதி சொன்னது மறந்திடுச்சா..இன்னைக்கு நடந்தது போல எல்லோரையும் கூப்பிட்டு அதையும் நல்லபடியா செய்யணும்.” என்றார் விஜயா.

அப்போதாவது ஷண்முகம் வந்து விடுவானா? என்ற கேள்வி மூவரின் மனத்திலும் வர, ஒருவர் கூட அதை வெளிப்படுத்தவில்லை. அப்போது மேஜை மீதிருந்த சினேகாவின் கைப்பேசி தொடர்ந்து ஒலி எழுப்பியது. அவரவர் கைப்பேசியில் எடுத்த புகைப்படங்கள் சினேகாவின் கைப்பேசிக்கு வந்த வண்ணம் இருக்க, அதைப் பார்த்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர் மூவரும். 

இரவு உணவின் போது,”வசந்தி, எல்லோருக்கும் சாப்பாடு பேக் செய்து கொடுத்தோமில்லே மதனுக்கு கொடுத்தோமா?” என்று விசாரித்தார் விஜயா.

“இல்லை சித்தி, அவர் சாப்பிட்டு முடிக்கறத்துக்குள்ளே ஆபிஸ்லேர்ந்து ஃபோன் வந்திடுச்சு..கிளம்பிப் போயிட்டார்..அதனால் தான் அனிதா மேடமோட நான் ஏர்போர்ட்டுக்கு போனேன்..அவர் தான் போகறதா இருந்திச்சு.” என்றாள் வசந்தி.

“அவங்க இனிப்பு மட்டும் எடுத்திட்டு போனாங்க அத்தை.” என்றாள் சினேகா.

“சாப்பாடு நிறைய மீதமாகிடுச்சா வசந்தி?” என்று விசாரித்தார் விஜயா.

“எக்ஸ்ட்ரா செய்திட்டாங்க போல..இராத்திரிக்கு நமக்கு தேவையானதை எடுத்து வைச்சிட்டு மீதியை மதியமே ஃபிரிஜ்லே எடுத்து வைச்சிட்டேன்..நாளைக்கு நமக்கு சமைக்க வேணாம்..சினேகாக்கு மட்டும் செய்தா போதும்.” என்றாள் வசந்தி.

ஒன்பது மணி ஆனவுடன் சினேகாவை உறங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார் விஜயா. அவளுக்கோ கொஞ்சம் கூட தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் எதையாவது படித்து விட்டு தூங்குகிறேன் என்று வாக்கு கொடுத்ததும் தான் அவளது அறையை விட்டுச் சென்றார் விஜயா.

படுத்தவுடன் விஜயா தூங்கி விட வசந்திக்கும் சினேகாவைப் போல் உறக்கம் வரவில்லை. அலைந்து திரிந்தது, ஓயாமல் ஓடி ஆடி வேலை செய்தது எல்லாம் பயங்கரக் களைப்பை ஏற்படுத்தியிருந்தாலும் உறக்கம் மட்டும் அவளை அணுகவில்லை. வலுக்கட்டாயமாக கண்களை மூடி படுத்துக் கொண்டவள், மனத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து ஒருவாறு உறக்கத்தை தழுவினாள்.

நள்ளிரவிற்கு மேல் ‘அம்மா’ என்ற அலறலில் அடித்து பிடித்து எழுந்து கொண்ட விஜயா, வசந்தி இருவரும் வேகமாக சினேகாவின் அறையை நோக்கிச் சென்றனர்.