அத்தியாயம் – 58

“மதன்” என்ற அனிதாவின் அழைப்பில் அவரது சிந்தனையிலிருந்து வெளி வந்த மதன்,”சொல்லுங்க.” என்றார்.

“நீ தான் சொல்லணும் மதன்..என்ன நடக்குது?” என்று மீண்டும் கேட்டார். அதற்கு,

“என்னமோ நடக்குது அண்ணி..என்னென்னு புரியலை..அவ தான் காரணம்ன்னு தோணுது.” என்று அந்த அவளின் பெயரைச் சொல்லாமல் உண்மையான பதிலை அளித்தார் மதன்.

அதைக் கேட்டு அனிதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. அவரை வழியனுப்ப விமான நிலையம் வரை வந்த வசந்தியின் மாற்றங்கள் அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தன. வசந்தியை மீட்டெடுக்க வருடக் கணக்கில் ஆகும் என்று அவர் எண்ணியிருக்க யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்த குடும்பச் சூழ் நிலையினால் அவளது ஐயங்கள், தயக்கங்கள், பயங்கள் மறைந்து அதன் இடத்தில் திடமும் நிச்சயத்தன்மையும் குடியேறியிருந்தது. ஷண்முகம் இல்லாதது தான் வசந்தியின் அரோக்கியமான மாற்றத்திற்கு முக்கியக் காரணம் என்று புரிந்த அதே சமயத்தில் சினேகாவின் நிலையை எண்ணி அனிதாவிற்கு அச்சமாக இருக்கத் தான் செய்தது. ஷண்முகவேல் நல்லபடியாக திரும்பி வரவேண்டுமென்ற பிரார்த்தனையோடு தான் சினேகாவிற்கு வளையளைப் போட்டு விட்டார். 

விழாவில் வேல் இல்லாதது இரண்டு பக்க உறவினர்களிடமும் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தது. ’விழாவுக்கு அழைப்பான்னு காத்திருந்தோம்..எந்த அழைப்பும் வரலை..சரி நேர்லே பார்க்கற போது கேட்கலாம்னு நினைச்சா..இங்கேயும் அவனைக் காணும்..எங்கே அவன்? அப்படி என்ன வேலை?’ என்று விஜயாவின் அண்ணன் பழனி ஆத்திரப்பட, பிரகாஷ் தான்,’அவன் வேலை என்னென்னு உங்களுக்குத் தெரியாதா? உடுப்பு போட்டவங்களுக்கு அது மட்டும் தான் உறவு வேற எந்த உறவும் கிடையாது.’ என்று பதில் கொடுக்க, அதைக் கேட்டு பெண்கள் மூவரின் கண்களும் கலங்கின. 

உடனே, விஜயாவின் கரத்தைப் பற்றியவன்,’பெரியத்தை பிச்சுக்கிட்டு போனதிலிருந்து அப்பா இப்படித் தான் தாட்பூட்டுனு  குதிச்சிட்டு இருக்கார்..யோசிக்காம வாயை விடறார்..நீ மனசுலே வைச்சுக்காதீங்க…நிறைய முறை ஷண்முகம்கிட்டே பேச முயற்சி செய்தேன்..அழைப்பு போகலை…நான் எங்கே இருக்கேன், என்ன செய்யறேன், எப்போ வீட்டுக்கு வருவேன்னு சாதாரணமா தகவல் சொல்ற மாதிரி அவனாலே சொல்ல முடியாதுன்னு உங்களுக்கு தெரியும் தானே..அவன் செய்யற வேலை அப்படி..அவனோட வேலை முடிஞ்சவுடனே வீட்டுக்கு தான் வருவான் அத்தை.’ என்று ஆறுதல் சொன்னவனுக்குத் தெரியவில்லை குழந்தை உண்டான விஷயமே வேலுக்குத் தெரியாதென்று. 

அவனைப் போலவே,’ஷண்முகம் தம்பியோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்..பாதுகாப்பா தான் இருப்பார்..இந்த நேரத்திலே நீங்களும் சினேகாவும் கவலை இல்லாம இருக்கறது தான் முக்கியம்.’ என்று விஜயா, சினேகா இருவருக்கும் ஆறுதலாக பேசினார் செந்தில். சினேகாவிற்குப் போட்டு விட்ட தங்க வளையலைப் போலவே ஷிக்காவிற்கு ஒரு ஜோடி பரிசாக அளித்திருந்தார் மதியழகி. ‘இவளுக்கு எதுக்கு?’ என்று மறுத்த மனோகரிடம்,’அவளுக்கும் இது போல செய்திருக்கணும்..அப்போ அந்த அளவுக்கு புரிதல் எங்களுக்கு இல்லை..நல்லவேளை போலீஸ்க்காரர் எங்க எல்லோருக்கும் புரிய வைச்சிட்டார்.’ என்றார். 

அவர்கள் அளித்த பரிசில் அகமகிழ்ந்து போன ஷிக்கா அவர்களைத் தன்னுடைய கடைக்கு அழைத்துச் சென்று ஊரில் இருக்கும் அனைவர்க்கும் உடைகளை பரிசாக கொடுத்து, இரயில் நிலையம் சென்று அவர்களை வழி அனுப்பி வைத்தாள். ஷிக்காவுடன் அவருடைய வீட்டினர் சாதாரணமாக உறவாடியதில் ஜோதிக்கு மனது நிறைந்து போனது. மாப்பிள்ளை ஷண்முகம் கண் முன்னால் இருந்திருந்தால் அவன் கால்களில் விழுந்திருப்பார். அவருக்கு பின் அவருடைய குழந்தைகளுக்கு அவருடைய குடும்பம் துணையாக இருக்கும் என்ற நினைப்பு அவருக்குப் பெரும் மன நிம்மதியைக் கொடுத்தது. கணவனின் உறவுகள் அவர்களை விட்டு ஒதுங்கி விட்டாலும் அவருடைய உறவுகள் மீண்டும் தொடர்பில் வந்ததற்குக் காரணம் மாப்பிள்ளை தான் என்பதால் ஷண்முகத்தின் மீது அன்பு பெருக, ‘மருமகன் நல்லபடியா வீடு வந்து சேரணும்.’ என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

அனிதாவை விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டிற்கு வந்த வசந்தி சிறிது நேரம் இளைப்பாறி விட்டு நித்யாவோடு செக்டர் மார்கெட்டிற்கு சென்றாள் வசந்தி. அங்கே நடைபாதையில் கொட்டிக் கிடந்த ஃபேஷன் சாமான்களை அள்ளி, அள்ளி பையில் போட்டு கோண்டிருந்த நித்யாவின் கரங்களில் படிந்தது வசந்தியின் பார்வை. சினேகாவைப் போல் கை நிறைய வளையல் போட்டிருந்தாள். அவளை மனையில் அமர வைத்து வளையல்களை அடுக்கிய போது,’அடுத்த விழா நம்ம வீட்லே உன்னோட வளைகாப்பா தான் இருக்கணும்.’ என்று  மீனா சொல்ல,’அதை நாங்க தான் முடிவு செய்யணும்..நீங்க இல்லை.’ என்று பட்டென்று பதில் கொடுத்திருந்தான் பிரகாஷ். யாரையும் மனையில் அமர வைக்கும் எண்ணம் வசந்திக்கு இருக்கவில்லை. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை காயம் அடைந்த அனுபவம் அவளுக்கு இருந்ததால் வேறொருவரைக் காயப்படுத்த விரும்பவில்லை. நித்யாவைத் தான் மனையில் அமர வைப்பார் மாமி என்ற அவளது கணிப்பு சரியான போது அதை தடுத்து நிறுத்த அவளுக்கு வழி தெரியவில்லை. 

மீனாவோடு வாக்குவாதம் செய்ய விஜயாவிற்கும் விருப்பமில்லை. இது போல் எத்தனையோ முறை வசந்தியை அமர வைத்து அவளைக் காயப்படுத்தி இருக்கிறார்கள். இப்படியாவது குழந்தை பாக்கியம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் அக்கம்பக்கத்து உறவினர் வீடுகளுக்கு அதாவது அறிமுகமில்லாவதவர்களின் வளைகாப்பிற்கு வசந்தியை அழைத்துச் சென்றிருக்கிறார் அவருடைய அக்கா மகாலக்ஷ்மி. குடும்பமாக அவர்கள் கூடும் போதெல்லாம் மீனாவும் பலமுறை வார்த்தைகளால் வசந்தியை வதைத்து இருக்கிறார். மகாலக்ஷ்மி மீதிருந்த வெறுப்பையெல்லாம் இது போல் வசந்தியை நோக வைத்து சமன் செய்து இருக்கிறார் மீனா. சமீபக் காலமாக அதெல்லாம் திரும்பி கிடைக்கப் போகிறதோ என்ற பயம் வந்திருந்தது அவருக்கு. இரண்டு ஆண் குழந்தைகளின் தாயாக பெண் குழந்தைகளை கீழாக நினைத்தவர், நடத்தியவர் இப்போதெல்லாம் பெண்ணோ, ஆணோ அவருடைய மூத்த மகனிற்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும் என்று மனநிலைக்கு வந்து விட்டார். எனவே தான் மருமகளையும் அழைத்துக் கொண்டு சினேகாவின் வளைகாப்பிற்கு வந்திருந்தார்.

அவளுடைய மாமியாரின் கட்டளைக்கு அடிபணிந்து மனையில் அமர்ந்து வளையல் பூட்டிக் கொண்டாள் நித்யா. அவளது மனத்தில் இருந்தது எதுவும் முகத்தில் தெரியாமல் கவனமாக இருந்தாள். மீனாவின் வார்த்தையில் லேசாக கலங்கின கண்களைக் கண்டுகொண்ட கணவன் அவளுக்கு ஆதரவாகப் பேசி அவனுடைய அம்மாவை அதட்டியவுடன் அந்தக் கண்ணீர் காணாமல் போனது. 

மீனா மீண்டும் அவரது வாயைத் திறக்கும் முன்,’அடுத்த விசேஷம் என் பேரப்பிள்ளையோட பெயர் சூட்டற விழா தான் அண்ணி.” என்று அதை திறக்காமல் செய்து, நித்யாவிடம்.’இந்த வரமெல்லாம் கடவுள் கொடுக்கறது..நீ எழுந்திருச்சு போய் சாமிக்கு நமஸ்காரம் செய்துக்க ம்மா..வசந்தி அவளை அழைச்சிட்டுப் போ.’ என்று முற்றுப்புள்ளி வைத்தார் ஜோதி.

படிப்பு, பணம், பதவி என்று பெண்கள் எத்தனை முன்னேறினாலும் காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் சில விஷயங்கள் மாறப் போவதில்லை மாற்றவும் முடியாது போல என்று மனத்தில் எண்ணியபடி அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அனிதா. அவருடைய விஷயத்தில் திருமணம், சீமந்தம், குழந்தை பிறப்பு என்று அனைத்தும் நல்லபடியாக நடந்திருந்தாலும் சுதன் ஒரு பெரும் புதிர் தான். எதனால் சில பேருக்கு சரியாக நடக்கிறது? எதனால் சில பேருக்கு தப்பாக நடக்கிறது? ஏன்? என்ற காரணத்தை எத்தனை ஜென்மம் எடுத்து ஆராய்ந்தாலும் சரியான விடை கிடைக்க போவதில்லை என்ற புரிதல் வந்திருந்தது மருத்துவர் அனிதாவிற்கு. அவருக்கு கிடைத்த பிள்ளைச் செல்வத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நமக்கு கிடைச்சிருக்கற இந்த வாழ்க்கையை நல்லபடியா வாழ,’என்ன நடந்தாலும் தைரியமா அதை நாம எதிர்கொள்ளணும்.’ என்ற தெளிவு கிடைத்திருந்தது வசந்திக்கு. அதனால் தான் நித்யாவோடு சென்றவள்,’உன்னோட இடத்திலிருந்து நீ என்ன செய்ய முடியும்னு உனக்கு மட்டும் தான் தெரியும் நித்யா..உதவி, எதிர்ப்பு இரண்டும் எத்தனை சின்னதா இருந்தாலும் அதை நீ கண்டிப்பா செய்யணும்..அப்படிச் செய்தாலே பிரச்சனைகள் பெரிசா மாறாது.’ என்று அறிவுரை அளித்தாள். ‘தாங்க்ஸ் அக்கா.’ என்று நித்யா நன்றி உரைக்க,’என்னோட ஆரோக்கியத்தை இழந்த பிறகு தான் எனக்கு இந்த சூட்சமம் புரிஞ்சது..பிரகாஷும் நீயும் ஒருத்தருக்கொருத்தர் எப்போதும் ஸப்போர்ட்டா இருக்கணும்.’ என்றாள். அவளுடைய வாழ்க்கையே அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கும் போது எங்கேயிருந்து அடுத்தவருக்கு புத்திமதி சொல்லத் தோன்றியது என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் செய்த தவற்றை இந்தப் பெண் செய்யக் கூடாதென்று அவள் மனத்தில் தோன்ற அதை உடனே வெளிப்படுத்தி விட்டாள். 

அவளுக்கு மட்டுமில்லாமல் அவளது தோழிகளுக்கும் பரிசு பொருள்கள் வாங்கிய நித்யா அப்படியே வசந்திக்கும் வாங்கிக் கொடுத்தாள். வெண் நிற முத்துக்களில் சிவப்பு, பச்சை நிறத்தில் மணிகள் தொங்கிய நெக்லெஸையும் ஜிமிக்கியையும் பார்த்து,’எனக்கு எதுக்கு ம்மா? நான் எங்கே இதையெல்லாம் உபயோகிக்கப் போறேன்?’ என்று வசந்தி மறுக்க,’உங்களுக்கு நல்லா இருக்கும் க்கா..’ என்று வற்புறுத்த,’இல்லை ம்மா..வேணாம் ம்மா.’ என்ற வசந்தியின் கரத்தில்,’இரு நூறு ரூபா தான்..பிடிக்கலைன்னா வேறு யாருக்காவது கிஃப்ட்டா கொடுத்திடுங்க.’ என்று அந்த செட்டை திணித்தாள் நித்யா. இதுபோல் ஆசையாக அவளுடன் பிறந்தவர்கள் கூட அவளுக்கு வாங்கிக் கொடுத்ததில்லை. அவளைப் பற்றி அவர்கள் இருவருக்கும் நினைப்பே இல்லை போல என்று ஜெயந்தி, சிந்துவைப் பற்றி மனம் யோசிக்க ஆரம்பிக்க, அந்த நொடியே அந்த எண்ணங்களுக்குத் தடை போட்டவள், புதிதாக கிடைத்த தங்கையிடம்,’தாங்க்ஸ் ம்மா..இந்தப் பக்கம் நான் அடிக்கடி வருவேன்..இவன்கிட்டே ஏதாவது புதுசா வந்தா உனக்கு ஃபோட்டோ பிடிச்சு அனுப்பறேன்.’ என்று வசந்தி வாக்கு கொடுக்க,’ஃபோட்டோ மட்டும் போதாது..வாங்கி அனுப்பி விடணும்..இரு நூறு ரூபாய் தானே.’ என்ற நித்யாவின் பதிலில் இருவரும் சத்தமாக சிரித்தனர். அவளுடைய மாமியாருக்கு வசந்தி அக்காவையும் அவளுடைய குடும்பத்தினரையும் பிடிக்காது என்று தெரிந்திருந்ததால் இதுவரை அவரிடமிருந்து ஒதுங்கி தான் இருந்திருக்கிறாள் நித்யா. இனி அதைத் தொடரும் எண்ணம் அவளுக்கு இல்லாததால் வசந்தியிடம் நட்புக்கரத்தை நித்யா நீட்ட வசந்தியும் அதைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள்.

மதனிற்கு உதவிக்கரம் நீட்ட நினைத்த அனிதா,“வீடு போய் சேரும் வரை நான் ஃப்ரீ தான்..ஆரம்பத்திலிருந்து எல்லாத்தையும் சொல்லு..என்ன செய்யலாம்னு, எப்படிச் செய்யலாம்னு யோசிக்கறேன்..உன் அண்ணன் காதிலேயும் இதைப் போட்டு வைக்கறேன்.” என்றார்.

“இது பாஸிங் கிளவுட்னு நினைக்கறேன் அண்ணி..அப்படி இல்லைன்னாலும் என்னாலே அதை அனுபவிக்க முடியும்னு தோணலை..என் வேலை..நம்ம குடும்பம்னு வலுவான காரணங்கள் இருக்கு..அதையெல்லம் விட வயசுன்னு ஒண்ணு இருக்குது..கொஞ்ச வருஷத்திலே மிடல் ஏஜை தாண்டிடுவேன்..விட்டிடுங்க இந்தப் பேச்சை.” என்றார் மதன்.

”மதன், இந்த விஷயம் எந்தத் திசைலே போனாலும் இதை நான் விடறதா இல்லை.” என்று அனிதா சூளுரைக்க, மதனின் இன்னொரு கைப்பேசி அந்த நேரத்தில் ஒலி எழுப்ப, ‘சரி செய்யுங்க, வேண்டாம் விட்டிடுங்க ‘என்று எதுவும் சொல்லாமல்,”ஆபிஸ்லேர்ந்து கால் வருது.” என்று அனிதாவின் அழைப்பைத் துண்டித்தார் மதன். சில நிமிடங்களில் கழித்து வேறு உடைக்கு மாறி அவரது அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

மாமாவின் குடும்பத்தினரை இரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வசந்தி திரும்பிய போது வீடு அமைதியாக இருந்தது. விஜயாவும் சினேகாவும் வீட்டில் இல்லை. பூங்காவிற்கு செல்லப் போவதாக அவளிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார் விஜயா. இன்று போக வேண்டாமென்று மறுப்பு தெரிவிக்க நினைத்தவள்,’எப்படியும் நாளைலேர்ந்து ஜோதி அத்தை இங்கே தான் இருக்கப் போறாங்க..ராத்திரி சினேகாவை வெளியே போக விட மாட்டாங்க..இன்னைக்குப் போயிட்டு வரட்டும்.’ என்று எண்ணியவள்,’வெளிச்சம் மறையறத்துக்குள்ளே போயிட்டு வந்திடுங்க.’ என்று விஜயாவிடம் சொன்னாள். ‘எனக்கும் டயர்டா தான் இருக்கு..அவளைத் தனியா அனுப்ப முடியாது..நீ எப்போ திரும்பி வருவ? டாக்ஸிக்காரன் கணக்கை முடிச்சு அனுப்ப உன்கிட்டே பணம் இருக்குதா?’ என்று விஜயா கேட்க,’அவங்களை இறக்கி விட்டிட்டு வந்திடுவேன்..’ஸ்டேஷன் உள்ளே வர வேணாம்..நான் பார்த்துக்கறேன்னு’ பிரகாஷ் சொல்லிட்டான்..கேப் கணக்கெல்லாம் இரண்டு நாள் கழிச்சு செட்டில் செய்துக்கலாம்னு மதன் சொல்லியிருக்கார்.’ என்றாள் வசந்தி.

வண்டி ஏற்பாடுகள் அனைத்தும் மதன் பொறுப்பில் விட்டிருந்தாள் வசந்தி. ஷர்மா அங்கிளிடம் சொல்லி ஏற்பாடு செய்யலாம் என்ற சினேகாவின் ஆலோசனைக்கு,’அவர் ஏற்பாடு செய்தா அவன் ஹிந்திலே என்ன சொல்றான்னு எங்ககிட்டே சொல்ல ஓர் ஆள் தேவைப்படும்..அப்போ உன்னை இல்லைன்னா ஜோதி அத்தையை எங்ககூட வைச்சுக்கணும்..மதன் ஸரோட டிரைவர்ஸுக்கு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்குன்னு பல மொழிகள் தெரியுமாம்..’ என்று மறுப்பு தெரிவித்து விட்டாள் வசந்தி. அது உண்மையாக இருந்ததால் பிரச்சனையில்லாமல் இருபக்க விருந்தினர்களை பிக் அப், டிராப் செய்ய முடிந்தது.

வீட்டிற்குள் நுழைந்தவள் நேரே சமையல் அறைக்குச் சென்றாள். அங்கே இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள்.  ஏழு மணி ஆக பத்து நிமிடங்கள் இருந்தது. குளிர்ச்சாதன பெட்டியிலிருந்து இட்லி மாவை வெளியே எடுத்து வைத்து விட்டு குளிக்கச் சென்றாள். குளித்து வந்ததும் இட்லியை தயார் செய்தவள் அப்படியே இன்னொரு அடுப்பில் சினேகாவிற்காக சூப் தயாரித்தாள். மதியம் மீதமாகியிருந்த உணவுகளை சாப்பாடு மேஜையிலிருந்து எடுத்து வந்து சூடு செய்ய ஆரம்பித்த போது சினேகா, விஜயா  இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். 

சமையலறையிலிருந்து வந்த வசந்தி,”என்ன இத்தனை நேரமாகிடுச்சு?” என்று விசாரிக்க,”மெதுவா தான் நடக்கறா..ஆனாலும் அதே பத்து சுத்து சுத்தறா..நேரம் ஆகத்தானே செய்யும்.” என்று விஜயா பதிலளிக்க, சினேகாவோ நேரே அவளது படுக்கையறைக்கு செல்ல, உடனே,“கொஞ்ச நேரம் இங்கே உட்கார் கண்ணு..உடனே படுத்துக்க வேணாம்.” என்றார் விஜயா.

“கட்டில்லே சாய்ஞ்சுகிட்டு கால் நீட்டி உட்கார போறேன் அத்தை..படுக்க மாட்டேன்.” என்றவளைத் தொடர்ந்து படுக்கையறைக்குள் சென்றார் விஜயா. 

சினேகா கட்டிலில் அமர்ந்ததும் மேஜையில் இருந்த மசாஜ் எண்ணெய்யை கையில் எடுத்துக் கொண்டு அவரும் கட்டிலில் அமர்ந்தார். அவளது பாதங்களை அவரது மடியில் வைத்து எண்ணெய்யைத் தடவி மென்மையாகப் பிடித்து விட ஆரம்பித்தார்.

கண்களை மூடி அந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவள்,”அத்தை, நான் எப்படி இத்தனை குண்டா ஆனேன்?” என்று விஜயாவிடம் கேட்டாள்.

“குண்டாலெல்லாம் ஆகலை..கொஞ்சம் போல வெயிட் போட்டிருக்க..அது நார்மல் தான்னு இன்னைக்கு அனிதா கூட சொன்னாங்க தானே.” என்றார்.

“என்னாலே அதை ஏத்துக்க முடியலை..நீங்களும் அம்மாவும் ஒரே போல கொஞ்சம் தான் வெயிட் போட்டிருக்கேன்னு சொல்றீங்க..வசந்தி அண்ணியைக் கேட்டா,’சரியா சாப்பிடறதேயில்லை..இதிலே எங்கேயிருந்து வெயிட் போட்டிருக்க முடியும்னு’ என்னைத் திரும்பக் கேள்வி கேட்கறாங்க..ஷிக்கா சொல்றா ‘இப்போ தான் நீ சரியா இருக்க சினேஹ்னு’..ஒரு டிரெஸ்ஸும் பத்தாம இரண்டு மாசமா புதுசு வாங்கிட்டு இருக்கேனே அதுக்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க? உண்மையைச் சொல்லுங்க.” என்று கண்களை விரித்து மிரட்டும் தொனியில் விஜயாவிடம் கேட்டாள் சினேகா.

உடனே,”குழந்தை உண்டாகி இருக்கற போது கால்லே, இடுப்புலே, பின்பக்கத்திலேன்னு கொஞ்சம் போல வெயிட் போடறது இயற்கை தான் கண்ணு..” என்றவரை இடைமறித்து,

“மேல் பாகத்தை விட்டுடீங்களே?” என்று அவள் எடுத்துக் கொடுக்க,”அதெல்லாம் பிள்ளை வெளியே வந்ததும் சரியாகிடும்.” என்று விஜயா சமாதானம் செய்ய,

“மாண்ட்டி பிறந்த பிறகு ஷிக்கா இன்னும் குண்டாகிட்டா அத்தை.” என்றாள்.

“உனக்கு அந்த மாதிரி ஆகாது..அப்படி ஆனாலும் பிள்ளையை என்கிட்டே விட்டிட்டு சாமியோடு நீயும் உடற்பயிற்சி செய்யப் போயிடு..இரண்டு மாசமில்லை இரண்டு வாரத்திலே பழையபடி ஆகிடுவ.” என்று கியாரண்டியும் கொடுத்தார்.

சில நொடிகள் கழித்து,”இப்படி குண்டா இருக்கிற என்னைப் பார்த்தா உங்க மகன் என்ன செய்வார்னு நினைக்கறீங்க அத்தை?” என்று கேட்டு இதுவரை அவர்கள் இருவரும் பேசத் தயங்கிய விஷயத்தைப் பற்றி சாதாரணமாகப் பேச, அப்பா ஆகப் போகும் விஷயத்தை ஷண்முகம் எப்படி எடுத்துக் கொள்வான் என்பதை வேறு விதமாக கேட்ட சினேகாவின் வார்த்தைகளில் விஜயாவிற்கு தொண்டை அடைத்தது.