அத்தியாயம் 2

பகலெல்லாம் தொழிற்சாலையில் கழித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தவன் கையோடு வாங்கி வந்திருந்த உணவை அருந்தி விட்டுப் படுக்கையில் விழுந்தான்.

ஓராண்டுக்கு முன்பு அவன் நிறுவனத் தலைவர் மதனகோபால் இறந்த போது தோன்றிய அதே கேள்வி அவன் நெஞ்சில் மீண்டும் எழுந்தது.

இப்படியே தனிமையில்தான் அவன் வாழ்க்கை தொடருமா… நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து அவன் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த காலத்துக்குச் சென்றன.

மதனகோபால்…

அவர் உருவாக்கியதுதான் மதன் க்ரூப் ஆஃப் கம்பனீஸ்.

இந்த நிறுவனத்தின் பயணம் இருபத்தி ஐந்து வருடங்கள் முன்பு மதன் மில்ஸில் துவங்கியது.

மதனகோபால் அனாதை இல்லத்தில் படித்து வளர்ந்தவர். அந்த அனாதை இல்லத்துக்கு நன்கொடை கொடுக்க வரும் ஒரு பெரிய மனிதர் மதனகோபாலின் குணத்தையும் திறமையையும் பார்த்து வியந்து, அவர் படிப்பை முடித்ததும் அவருக்குப் பொருளுதவி செய்ய, அதைக் கொண்டு சிறிய அளவில் ஒரு பவர்லூமை ஆரம்பித்தார் மதனகோபால்.

வெறும் நான்கு நெசவுத்தறிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்தத் தொழில் நல்ல வருமானம் ஈட்ட ஆரம்பித்ததும் பவர்லூமுக்குத் தேவையான நூலை வெளியில் வாங்காமல் தானே தயாரிக்க முடிவு செய்து வங்கியில் கடனும் வாங்கி மதன் மில்ஸைத் தொடங்கினார்.

அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மதன் டெக்ஸ்டைல்ஸ், மதன் ஃபேப்ரிக்ஸ், மதன் கார்மென்ட்ஸ் என்று முன்னேறி வெறும் ஐயாயிரம் ஸ்பிண்டில்களுடன் ( நூல் கண்டு ) தொடங்கப்பட்ட அந்த மில்லில் இன்று இரண்டு லட்சம் ஸ்பிண்டில்கள் நாள்தோறும் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பொன்னேரியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் அங்கும் விஸ்தரிக்கப்பட்டு இன்று சென்னை முழுவதிலும் அங்கங்கே குடோன்களும் கடைகளும் என லாபகரமாகவே செயல்பட்டு வருகின்றது.

ஆறு ஆண்டுகள் முன் விக்னேஷ் மனைவியை இழந்து கையறு நிலையில் புலம்பிக் கொண்டிருந்த போது அவன் நண்பர்களின் துணையோடுதான் மீண்டு வந்தான்.

ஏதாவது வேலைக்கு அனுப்பினால்தான் அவன் மனைவியின் நினைவுகளில் இருந்து அவனை திசை திருப்ப முடியும் என்ற நிலையில் ஒரு நாள் அவன் நண்பன் விஸ்வநாத் அவனைத் தேடி வந்தான்.

“கார்த்திக்! இங்க பாரு இந்தக் கம்பனில உன் க்வாலிஃபிகேஷன்குத் தகுந்த வேலை ஒன்னு போட்டிருக்கான்”

அவன் அலைபேசியை வாங்கி விவரங்களைப் பார்த்தவன் “இதெல்லாம் செட் ஆகாதுடா” என்று விட்டு அலைபேசியை மீண்டும் அவனிடம் கொடுத்தான்.

“போன மூணு மாசமா இதையேதான் சொல்லிகிட்டு இருக்கே… ஒழுங்கா சாப்பிடுறது இல்ல… தூங்குறது இல்ல… ஷேவ் கூடப் பண்ணாம என்னடா இது கோலம்?”

அவன் பதில் சொல்லாமல் இருக்கவும் “நீ காதலிக்கிறேன்னு சொன்னதும் உனக்கு உதவி பண்ணிக் கல்யாணம் பண்ணி வச்சது தப்புன்னு எங்களை எல்லாம் ஃபீல் பண்ண வைக்கிறே…”

ஒரு கணம் கார்த்திக்கின் பார்வை வெறுமையாய் அவனை நோக்கியது.

அவன் கல்யாணம் தவறா…ஆம் தவறுதான்! அவன் காதலைச் சொல்லாமல், கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் அவன் மனைவியை இழந்து இப்படிக் கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என்ற நிலைக்கு வந்திருக்க மாட்டான்தானே!

அவன் பதில் சொல்லாமல் வெறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட விஸ்வநாத்துக்குக் கோபம் வந்தது.

அருகில் நெருங்கி அவன் தோள்களைப் பற்றி ஒரு உலுக்கு உலுக்கினான்.

அவன் பிடி வலிக்கவும் “ஸ்ஸ்ஸ்…ஏண்டா?” என்றவன் சோஃபாவில் அமர்ந்தான்.

“பாரு லேசாப் பிடிச்சது கூட வலிக்குது உனக்கு… சரியா சாப்பிடாம, தூங்காம உடம்பை என்ன பண்ணி வச்சுருக்கே நீ? எங்களையும் இங்க தங்க விடாம, எப்போப் பாரு சீலிங்கை வெறிச்சு வெறிச்சுப் பார்த்துகிட்டு நீ பண்ற அலும்பு தாங்கல. இன்னிக்கு ஒரு முடிவு தெரியாம உன்னை விடப் போறது இல்ல…இப்ப நீ எனக்கு பதில் சொல்லலலைன்னா நம்ம எல்லா ஃப்ரெண்ட்ஸையும் கால் பண்ணி வரச் சொல்லப் போறேன். உன்னை இப்படியே விட்டா சரி வராது.”

“அதெல்லாம் வேணாண்டா…அவனுங்களை ஏன் டிஸ்டர்ப் பண்றே?”

“நீ இப்படியே இருக்கிறது எங்களை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணுதுடா…நேத்து நம்ம ப்ரபா இல்ல… அவன் அமெரிக்கால இருந்து பேசினான். நீ உருப்படியா ஏதாவது செய்யலைன்னா அவன் படிப்பை விட்டுட்டுக் கிளம்பி இங்க வரப் போறானாம். உன்னையும் சேர்த்து வச்சுகிட்டு ஏதாவது பிசினெஸ் செய்யப் போறேன்னு சொன்னான்”

“ஏய் லூசாடா அவன்…எம்பிஏ படிக்கப் போய்ட்டு அதைப் பாதில விட்டுட்டு வரேன்னு சொல்றான்”

“ஆமாடா! நீ முழுசும் லூசாயிடாம இருக்க நாங்க லூசுத்தனமான வேலையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு”

பரிதாபமாக அவனைப் பார்த்தவன் “இப்ப என்னதான்டா செய்யணும்கிறே?”

“நீ முதல்ல எந்திரி…ஷேவ் பண்ணிக் குளிச்சு முழுகு…இந்த கம்பனிக்கு உன் ரெஸ்யூம் அனுப்பி வை…இதே மாதிரி இன்னும் சிலது வச்சுருக்கேன். உனக்கு மெயில் பண்றேன். எல்லாத்துக்கும் அப்பளை பண்ணு… பணத்துக்காக இல்லைன்னாலும் உன் மனசு மாறவாவது நீ வேலைக்குப் போகணும்டா”

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவன் “சரிடா நீ கிளம்பு. நான் நீ சொன்ன மாதிரியே எல்லாம் செய்றேன்”

விஸ்வநாத்தின் முகம் மலர்ந்தது.

“தட்ஸ் குட்” என்றவன் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கடந்த மூன்று மாதங்களாக அவனுக்காகப் பார்த்துப் பார்த்து செய்யும் நண்பர்களைத் திருப்திப்படுத்தவாவது வேலைக்குப் போயே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டவன் மனதையும் அதற்குத் தயார்படுத்திக் கொண்டு நேர்முகத் தேர்வில் மதனகோபாலின் எல்லா கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளிக்க, இளமைக் காலத்தில் பல கனவுகளோடு தொழில் தொடங்க ஆரம்பித்த தன் பிம்பத்தை எதிரில் பார்ப்பது போல் உணர்ந்தவர் அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டு எல்லா துறையிலும் அவனுக்குப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.

மேலும் அவன் சொந்த விவரங்களையும் ஒரு தகப்பனின் கனிவோடு விசாரித்தவர் அதன் பின் அவன் மனச்சோர்வு அடையாமலும் பார்த்துக் கொண்டார்.

மதனகோபாலுக்கும் உறவென்று சொல்லிக் கொள்ள ஒருவருமில்லை. திருமணம் செய்து பிள்ளைகள் பெற்றுக் குடும்பத்தைப் பெருக்கிக் கொள்ளும் வயதில் வியாபாரத்தைப் பெருக்க ஆரம்பித்ததன் விளைவு அவர் நல்ல நிலைக்கு வந்து திரும்பிப் பார்க்கையில் காலம் கடந்திருந்தது.

அவரும் பெரிதாக மனம் வருந்தாமல் தொழிற்சாலையையே தன் உலகமாகவும் தொழிலாளர்களையே தன் உறவுகளாகவும் பார்த்துக் கொண்டே வாழ்க்கையைக் கடத்தி விட்டார். இப்போது உடல்நிலையில் கொஞ்சம் சுணக்கங்கள் ஏற்பட, தனக்குப் பின் தொழிற்சாலையை யார் கையில் ஒப்படைப்பது எனும் போது வந்து சேர்ந்த  கார்த்திக்கை பயன்படுத்திக் கொண்டார்.

தன்னையே மறக்கத் தொழிலில் முழு மனதாக ஈடுபட்டவனும் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொண்டு ஓராண்டு காலத்திலேயே அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். பின் தன் திறமையையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தி தொழிற்சாலையின் லாபத்தை மூன்று வருடங்களில் ஐந்து மடங்காக உயர்த்திய போது மதனகோபால் தன் தேர்வு சோடை போகவில்லை என்ற நம்பிக்கையுடன் மருத்துவமனையையே தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொண்டார்.

அதன் பின்னரான ஓராண்டும் தன் வியாதியோடு போராடி விட்டுக் கண்களை மூடினார். அவரது இறப்பின் போது மிகவும் மனதுடைந்து போனான் கார்த்திக்.

மரணப் படுக்கையில் அவனின் கையைப் பிடித்துக் கொண்ட மதனகோபால்,

“விக்னேஷ்…உனக்கு இருபத்தி ஆறு வயசுதான் ஆகுது. ரொம்பச் சின்ன வயதிலேயே கல்யாணமும் ஆகி மனைவியையும் இழந்திட்டே…மனைவி இருக்கும் போதே மத்த பெண்களைப் பார்க்கிற உலகத்துல மனசால கூட இன்னொரு பெண்ணை நினைக்காம இருக்கிற உன்னைப் பார்த்து எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஆனாலும் உன் மனசைத் தேத்திகிட்டு ஒரு நல்ல பெண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ…”

“எத்தனையோ வருஷங்களாத் தனிமைல வாழ்ந்து பழகின எனக்கே இந்த மரணத்தில் தனிமை சகிக்க முடியாததா இருக்கு…நீ இருக்கே… நம் தொழிலாளர்கள் வெளிய நின்னு அழுதுட்டு இருக்காங்கன்னாலும் உறவுன்னு ஒருத்தரை மனசு தேடுது…பிறக்கும் போது யாருமில்லாமப் பிறந்தது என் தப்பில்ல… ஆனா இறக்கும் போது உறவுகள் இல்லாம இறக்குறதுக்கு நாந்தானே காரணம்…அந்த மாதிரி நிலைமை உனக்கு வேண்டாம்… உன்னோட அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன்பா… சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ” 

ஆனால் அவனுக்கோ அவர் இறப்பின் பின் எதிலும் ஈடுபாடு இல்லாது போயிற்று…என்ன வாழ்க்கை இது…யாருக்காக அவன் வாழ வேண்டும்… யாருக்காகப் பணம் சம்பாதிக்க வேண்டும்…அவனைப் போற்றுவார் யார்… தூற்றுவார் யார்… ஒருவரும் இல்லாமல் இப்படி வாழ்ந்தாக வேண்டுமா என்றெல்லாம் விரக்தி எண்ணங்களின் பிடியில் சிக்கி அவன் மனம் நலிவடைய ஆரம்பித்திருந்தது.

நாளை தன்னுடைய மரணமும் இப்படித்தான் ஒருவருமில்லாமல் நிகழுமோ என்ற பீதி ஒரு பக்கம்… அவன் மனைவியை விடுத்து மற்றொருவளை ஏற்கச் சண்டித்தனம் செய்யும் மனம் ஒரு பக்கம் எனக் கவலைகள் அவனுள்ளத்தை வாட்டி வதைக்க மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.

அவன் நண்பர்கள் அனைவரும் அவன் நன்றாக இருக்கிறான் என நினைத்துக் கவலை கொள்ளாமலிருக்க அவர்களிடமும் காட்டிக் கொள்ளாமல் இவனோ தனக்குள் மறுகலானான்.

அவன் நிறுவனத்தில் இல்லாத நேரத்தில் வேறு வழியில்லாமல், அத்தியாவசியமான சில பதவிகளுக்கு மேலாளரே நேர்காணல் வைத்து சிலரைத் தேர்வு செய்திருக்க அப்படி உள்ளே வந்தவர்கள், தவறு செய்தாலும் கண்காணிக்க ஆட்கள் இல்லாததை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிய இயந்திரப் பொருட்களைக் கழற்றிக் கொண்டு போய் வெளியே விற்க ஆரம்பித்திருந்தனர். அதற்கு பதிலாக ஏற்கனவே பழுதான பாகங்களை வெளியில் இருந்து கொண்டு வந்து மாட்டி வைத்து விட்டுப் பழுதாகி விட்டது எனப் புகார் கூறினர்.

விக்னேஷ் அங்கே இருந்திருந்தால் பொருள் எப்போது வாங்கியது…ஏன் அதற்குள் பழுதானது…இரண்டும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பொருட்களா அல்லது வேறு வேறா எனப் பலதும் யோசித்திருப்பான். ஆனால் மேலாளர் விசுவாசமானவராக இருந்த போதும் தில்லுமுல்லுகளைக் கண்டுபிடிக்கும் அளவு திறமை வாய்ந்தவராக இல்லாததால் அவர் எளிதில் ஏமாற்றப்பட்டு விட்டார். 

மதனகோபால் இறப்பதற்கு சிறிது காலம் முன்னர்தான் வேலைக்குச் சேர்ந்திருந்த ப்ரதீபா அப்போதைக்கு ஒரு செயலாளர் என்ற அளவில்தான் இருந்தாலும் விக்னேஷ் நாட்கணக்கில் அலுவலகம் வராமல் இருந்ததையும் தலைமை இல்லாமல் நிறுவனத்தில் அங்கங்கே தவறுகள் நடப்பதையும் கண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

நாட்கள் ஆக ஆக பெருவிலையுள்ள பொருட்கள் அடிக்கடிப் பழுதாவதும் மீண்டும் மீண்டும் புதிது வாங்குவதுமாக வரவுக்கு மேல் பணம் செலவாகிறது என மேலாளர் ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்ததை கேட்டு விட்ட ப்ரதீபா ஒரு முடிவுக்கு வந்தாள்.

அலைபேசியில் எவ்வளவோ முயன்றும் அவள் கூறுவதை விக்னேஷ் காது கொடுத்துக் கேட்க முயலாது இருக்க நேராக அவன் வீட்டுக்கே சென்று விட்டாள்.

வீடு தேடி வந்து அவனிடம் சண்டையிடாத குறையாக அவள் விவரங்களைத் தெரிவிக்க அப்போதுதான் விக்னேஷிற்கு நிலவரம் புரிந்தது. மதனகோபால் தன்னை நம்பி அளித்த பொறுப்பைத் தான் சரிவரச் செய்யாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனால் சட்டெனத் தன்னிலையிலிருந்து… தன் சுய இரக்கத்திலிருந்து மீண்டு விட இயலவில்லை.

அவன் நிலை கண்டு இரங்கிய ப்ரதீபா அவனை எஜமானனாக இல்லாமல் தோழனாக பாவித்து அவனை அலுவலகத்துக்கு தினமும் தவறாமல் வரவழைத்து நேரம் காலமில்லாமல் அவனுடனேயே இருந்து உழைத்து மீண்டும் அவனைப் பழைய கார்த்திக்காக மாற்றினாள்.

அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொய்வில்லாமல் தொடர்கிறது.

ஆனால் அவர்கள் சுதாரித்த அந்தக் குறுகிய காலத்துக்குள்ளாகவே பல கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை நிறுவனம் இழக்க நேரிட்டது.

காவல் துறையில் புகார் செய்து திருட்டுக்குக் காரணமானவர்களைப் பிடித்து தண்டனை கொடுத்தாலும் போன பொருட்கள் போனதுதான்… இருந்த மனக்குழப்பத்தில் இன்சூரன்ஸையும் புதுப்பிக்காமல் விட்டிருக்க இழப்பு அதிகமாகத்தான் இருந்தது. தன்னைத்தானே நொந்து கொண்டாலும் சரி செய்ய என்ன வழி என்று யோசித்தான்.

ஸ்பின்னிங் மில்களுக்கு அடிப்படை பஞ்சு ( காட்டன் ) கையிருப்புத்தான்… அது மட்டும் போதிய அளவு கையில் இருந்து விட்டால் தொழில் தடையின்றித் தொடரும். அந்தப் பஞ்சை வாங்கக் கூட இப்போது அவன் முதலில் கைவைக்க வேண்டியிருந்தது.

பணம் மட்டுமிருந்தால் முதலைத் தொடாமல் இந்த நிலையிலேயே சரிகட்டி விடலாம் என்று தோன்றவே பணம் புரட்டும் வழிகளை யோசித்தான்.

மிகப் பெரிய பணச் சுரங்கம் ஒன்று அவன் பக்கத்திலேயே இருந்தது. அதுதான் அவன் மாமன் மகள் உத்ரா…அவளை மணம் முடித்துக் கொண்டால் போதும் அவன் செல்வநிலை பலமடங்கு உயர்ந்து விடும். ஆனால் மனைவி என்ற இடத்தில் அவளை வைக்க அவனுக்குக் கிஞ்சித்தும் விருப்பமில்லை… அவன் தாரிணி இருந்த இடத்தில் இன்னொருத்தியை ஏற்க அவன் மனம் மறுத்தது. எனவே வேறு வழிகளைச் சிந்திக்கலானான்.

அப்போதுதான் ஜெர்மனியைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்று இந்தியாவிலும் தன் வியாபாரத்தை விஸ்தரிப்பதாகவும் சிறு நிறுவனங்கள் அணுகலாம் என்பது போலவும் செய்தி கேள்விபட்டவன் உடனடியாகக் காரியத்தில் இறங்கி இதோ இன்று சந்திப்பு வரை வந்து விட்டான்.

கடந்த கால நினைவுகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டிருந்த விக்னேஷ் கார்த்திக்கின் மேல் கருணை கொண்டு நித்திரா தேவி தன் ஆளுமையைப் பரிபூரணமாகச் செலுத்த நன்றியுடன் கண்களை மூடியவன் உறங்க ஆரம்பித்தான்.

………………………………………………………………………………………………………….

ஜெர்மனியில்…

காலை நேரம்…ஜன்னலின் அருகே நின்றிருந்த நீலாயதாட்சியின் நீல நயனங்கள் வானின் நீலப் பெருவெளியில் நிலைத்திருந்தன.

மனதிலோ சொல்ல ஒண்ணாத குழப்பம்…

முதல் நாள் அந்த இந்திய நிறுவனத்துடனான சந்திப்பில் நிகழ்ந்ததுதான் அவள் குழப்பத்துக்குக் காரணம். இந்தியாவுக்குப் போய்த்தான் ஆக வேண்டுமா என்று ஏற்கனவே உறுதியான முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தவளின் குழப்பம் முதல் நாளைய நிகழ்வில் இன்னும் அதிகமாகி அவளை ஒரு முடிவுக்கு வர முடியாமல் திண்டாட வைத்துக் கொண்டிருந்தது.

இந்தியாவில் இருந்தவரை அவள் பட்டதெல்லாம் கஷ்டமே… ஜெர்மனிக்கு வந்த புதிதில் முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கடந்த ஆறு மாதங்கள் தவிர்த்து எந்தப் ப்ரச்சனையும் இல்லாமல்தானே இருந்தது.

ஆம்… எல்லாம் ஆரம்பித்தது ஆறு மாதங்கள் முன்புதான்…

அவள் மனம் கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தது.

அவள் கணவன் சுப்ரமணியத்தின் இறப்பிற்குப் பின் தொழிலை கவனித்துக் கொள்ள என, கையில் ஒரு குழந்தையையும் வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து கொண்டு தன் மாமியாருடன் அவள் ஆறு வருடங்கள் முன்பு ஜெர்மனி வந்து சேர்ந்தாள்.

முதலில் உடனிருந்து எல்லாவற்றுக்கும் ஆதரவு கொடுத்த அவள் மாமியார் மங்கையர்க்கரசி அவளுக்குக் குழந்தை பிறந்து அவளே தனித்துத் தொழிலைத் திறம்பட நடத்தும் நிலை வரை ஜெர்மனியில் இருந்தவர் அவரை நம்பி பல தர்ம காரியங்கள் இந்தியாவில் நடந்து கொண்டிருந்ததால் இந்தியாவிற்கே வந்து விட்டார்.

அந்த முதல் இரண்டு ஆண்டுகளில் கூட ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது அவசியம் நேரிட்ட போதோ இந்தியா சென்று வந்து கொண்டுதான் இருந்தார்.

அதன் பின்னான நான்கு ஆண்டுகளும் அவள் தனியாக… முற்றுமுழுதாகத் தனியாக என்று சொல்லி விட முடியாது…வின்னி என்று அழைக்கப்படும் வின்சென்ட்… சுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பனின் துணையுடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்.

மாமியாரும் இரண்டு ஆண்டுகள் முன் இறந்து விட அறக்கட்டளைகளை எல்லாம் இங்கிருந்த வண்ணமே திறம்பட நிர்வகித்து வரும் அவள் வாழ்வில் எந்தப் ப்ரச்சனையும் இல்லாமல்தானே இருந்தது.

இப்போது திடீரென்று என்னவாகிற்று?

அவள் குடும்பத்துக்குத் தீங்கு நினைப்பவர் யார்?

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா

உறவைச் சொல்லி அழுவதனாலே

உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா