8

வீட்டின் மொட்டைமாடியில் இருந்த அறையில் கண்மூடி படுத்திருந்தான் புகழேந்தி. மாலை நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அவனிடம் மீதமிருக்க, காளியை நினைத்து தான் வருந்தி கொண்டிருந்தது மனது. 

“ஏன் இப்படி இருக்கா” என்று மனம் கேள்வி எழுப்ப, பதில் கிடைக்கவில்லை. காளி விஷயத்தில் இதற்கு மேலும் மௌனமாக இருப்பது சரிவராது என்று தோன்ற, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்தவனாக எழுந்தான் அவன். 

அடுத்தநாள் காலையில் அவன் கந்தனிடம் பேசி, வினோத்தை அழைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் புகழின் அலுவலகத்தை வந்து அடைந்தான் வினோத். 

புகழை ஏற்கனவே தெரியும் என்பதால், “வணக்கம் சார். சொல்லுங்க” என்று அவன் நிற்க,

அவனை அமர வைத்து ஒரு டீ வாங்கி அவன் கையில் கொடுத்த புகழ், அடுத்த ஒருமணி நேரத்தில் அவனது குடும்ப சிக்கல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டான். 

வினோத்திற்கு அவன் மீது நல்லெண்ணம் இருந்ததால், அவனும் பெரிதாக ஒளித்து மறைத்தெல்லாம் பேசவில்லை. உள்ளதை உள்ளபடியே அவனிடம் கூறிவிட்டான். இவன் வழியிலாவது ஏதாவது தீர்வு கிடைத்து விடாதா என்ற எண்ணம் தான் வினோத்திற்கு. 

அவன் கூறியது மொத்தமும் கேட்டுக்கொண்ட புகழ் அமைதியாக தலையை மட்டும் அசைத்துக் கொள்ள, அவன் ஏதாவது சொல்வானா என்று அவன் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான் வினோத். 

“உன் அக்கா புருஷன் மேல கேஸ் ஃபைல் பண்ணுவோமா?” என்று சில நிமிட யோசனைக்கு பின் புகழ் வாய் திறக்க,

“கண்டிப்பா சார். அவனை குறைந்தது 10 வருஷமாச்சும் உள்ளே வைக்கணும். என் அக்கா அவனை முழுசா நம்புனா சார். 

அநியாயமா அவளை கொன்னுட்டான். எங்க அருணை பாருங்க சார். எப்பவும் அம்மா அம்மான்னு அழுதுட்டே இருக்கான். அவனுக்காகவாவது ஏதாவது பண்ணனும் சார்” என்றவன் பேசிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சி மிகுதியில் அழுதுவிட்டான். 

“கண்டிப்பா பண்ணுவோம். நாளைக்கே வேலையை ஆரம்பிக்கணும். இதுல ஸைன் பண்ணு.” என்று சில காகிதங்களில் அவனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டவன், “நீ கிளம்பு வினோத். நான் வேலையை முடிச்சுட்டு சொல்றேன். நான் சொல்லும்போது நீ கோர்ட்டுக்கு வர்ற மாறி இருக்கும். பார்த்துக்கோ” என்று கூறி அவனை அனுப்பி வைத்தான். 

ஏனென்று புரியாத வகையில் வினோத் கிளம்பிய பின்னும் கூட  உலைக்கலனாய் கொதித்துக் கொண்டிருந்தது புகழின் மனம். ஜெய்யின் கையை உடைத்தது தான் சரி என்று ஒருமனம் நிற்க, அவனை கொன்றே போட்டிருக்க வேண்டும் என்று அலறிக் கொண்டிருந்தது மற்றொரு மனம். 

என்ன செய்வது என்று முடிவெடுத்தவன், நிதானமாக காய்களை நகர்த்தியதின் விளைவாக அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் காளியின் வீட்டின் முன் வந்து நின்றிருந்தனர் ஜெய்யின் பெற்றோர். 

அவர்கள் வந்த நேரம் காளி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, “எந்த குடும்பத்தை கலைக்க இவ்ளோ அவசரமா கிளம்புறம்மா” என்று நொடித்துக் கொண்டார் ஜெய்யின் தாய். 

சட்டென மனம் வலித்தாலும், “இவர் யார் என்னை பேசுவதற்கு?” என்று அடுத்தநொடி நிமிர்ந்துவிட்டாள் காளி. 

“யார் நீ? எதுக்கு என் வீட்டுக்குள்ள வந்து கத்திட்டு இருக்க. வெளியே போ” என்று கொஞ்சமும் மரியாதை கொடுக்காமல் அவள் பேசி வைக்க,

“நாங்க ஒண்ணும் இங்கே விருந்தாட வரலம்மா. என் மருமகளை கொன்னு போட்டது பத்தாம, இப்போ என் மகனையும் ஜெயிலுக்கு அனுப்ப துடிக்கிறீயே. பாவி… நீ நல்லா இருப்பியான்னு கேட்டுட்டு போகத்தான் வந்தோம்” என்றார் கண்மணியின் மாமியார். 

“கேட்டுட்டீங்க இல்ல கிளம்புங்க” என்று அப்போதும் அவள் பட்டும்படாமல் பதில் கூறி நகர, இப்போது மரகதத்திடம் திரும்பினார் அவர். 

“என்னம்மா நீங்க பண்ற அநியாயத்தை எல்லாம் கேட்க ஆள் இல்லன்னு ஆடிட்டு இருக்கீங்களா” என, 

“உங்க உறவே வேண்டாம்னு தான் நாங்க ஒதுங்கி இருக்கோமே. இன்னும் ஏன்மா எங்களை சித்ரவதை பண்றீங்க. நானே என் மகளை அள்ளி கொடுத்துட்டு நிற்கிறேன். தயவு செஞ்சு எங்களை கொஞ்சம் நிம்மதியா விடுங்களேன்” என்று மரகதம் ஆழ,

“ஏன் பேசமாட்ட. என் பையன் மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோர்ட்டு மூலமா ஆளுங்களை ஏவிவிட்டுட்டு, நீங்க ஒதுங்கி இருக்கீங்களா” என்றார் கண்மணியின் மாமனார். 

“நாங்க எங்கேயும் போய் எதுவும் செய்யல. நீங்க என்ன சொல்றீங்கன்னு கூட புரியல எனக்கு. முதல்ல வெளியே போங்க ரெண்டு பேரும்” என்று மரகதம் பட்டென்று கூறிவிட,

“உன் மகன் கேஸ் கொடுப்பான். நீ உனக்கு எதுவுமே தெரியாதுன்னு நடிப்பியா. குடும்பமே சேர்ந்து நாடகம் நடத்துறீங்களா”என்று அவர்கள் மேலும் பேச, காளிக்கும் ஒன்றும் புரியவில்லை.  

இவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரம் வினோத் வந்தவன், “என்ன உன் பிள்ளையை தூக்கிட்டாங்களா?” என, 

“எல்லாம் உன்னால தான்டா” என்று அவனை அடிக்க பாய்ந்தார் ஜெய்யின் தந்தை. 

“ஏய்… கை கை… மேல கையை வச்ச, உன் பிள்ளைக்கு துணையா நீயும் போக வேண்டியது தான். மரியாதையா ஓடிடுங்க. இல்ல, எங்க வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு இருக்கீங்கன்னு உங்க பேரையும் கம்ப்ளைண்ட்ல சேர்த்து கொடுக்க வேண்டி இருக்கும்” என்று வினோத் மிரட்டியது வேலை செய்ய, 

“உன்னை பார்க்கிற விதத்துல பார்த்துக்கறேன்டா” என்று மிரட்டிச் சென்றனர் ஜெய்யின் குடும்பத்தினர். 

அவர்கள் வெளியேறவும், வினோத் தன் குடும்பத்திடம் திரும்ப, “யாரைக் கேட்டு நீ கேஸ் கொடுத்த” என்று அவனை அடிக்கச் சென்றார் மரகதம். 

“நீ சும்மா இரும்மா. சும்மா எல்லாத்துக்கும் நொட்டு சொல்லிட்டு இருப்ப. கண்மணி சாவுக்கு நியாயம் கிடைக்க வேணாமா” என்று அவன் பதில் கொடுக்க, 

“என்னடா நியாயம் வாங்க போற. இருக்கிற எல்லார் நிம்மதியையும் கெடுத்து, செத்தவளுக்கு நியாயம் கேட்க போறியா. நீ மட்டும் உன் வாயையும், கையையும் அடக்கி வச்சிருந்தா இந்த அளவுக்கு வந்தே இருக்காது” என்று மீண்டும் மரகதம் அவன் மீதே குற்றம் சுமத்த,

“என்னமா பேசற நீ. சும்மா அவனை ஏன்” என்று காளி குறுக்கிட,

“வாயை மூடு காளி. எல்லாரும் சேர்ந்து என்னென்னவோ பேசி தான் என் மகளை கொன்னுட்டீங்க. இன்னும் என்ன செய்ய காத்திருக்கான் இவன்.” என்று அவர் வார்த்தையை விட, 

“நாங்களா உங்க பொண்ணை கொன்னோம்.”என்று அதிர்ந்து நின்றாள் காளி. 

“ஆமா… நீங்க எல்லாரும் தான் காரணம். உன் தங்கச்சி வாழ்க்கையைப் பத்தி யோசிச்சு இருந்தா, அன்னைக்கு அவன்கிட்ட தகராறு பண்ணி இருப்பீங்களா?” 

“அவன் என்கிட்ட தப்பா நடக்க பார்த்தாம்மா” என்று கலங்கிய குரலில் காளி கூற,

“என்ன செய்ய சொல்ற. நம்ம தலையெழுத்து அது. பொம்பளை ஜென்மமா போனோமே. பொறுத்துதான் ஆகணும். நீ மட்டும் அன்னைக்கு கொஞ்சம் சூதானமா இருந்து இருந்தா, அவனும் உன்னை நெருங்கி இருக்கமாட்டான். என மகளும் பொழைச்சு இருப்பா” என்று மரகதம் கூறிவிட்ட பின் அவரிடம் என்ன பேச முடியும். 

காளி அவரிடம் வாதம் செய்து மேலும் காயப்பட விரும்பவில்லை. எப்போதும் போல் அமைதியாக நகர்ந்துவிட்டாள். அரைமணி நேரம் மனம் எதிலும் செல்லாமல் முரண்டு பிடிக்க, முயன்று மனதை  அடக்கி தையல் இயந்திரத்தில் அமர்ந்துவிட்டாள். 

அதன் பின்னர் வீட்டில் அவளின் பேச்சுகள் முற்றிலும் குறைந்து போனது. காலையில் மாவரைத்து வைப்பது, அதன்பின் உணவக வேலை, மாலையில் அவளது தையல் இயந்திரம் என்று அத்தனையும் பழுதில்லாமல் நடந்தாலும், வீட்டில் அவளின் சத்தம் மட்டும் கேட்பதேயில்லை.  

பெரும்பாலும் உணவைக்கூட அவள் அறையிலேயே முடித்துக் கொள்கிறாள். வினோத், அருண் யாராவது ஏதாவது கேட்டால் மட்டும் ஓரிரு வார்த்தை பதில் என்று முழுவதுமாக தன்னை ஒதுக்கி கொண்டாள் காளி. 

வீட்டில் மட்டும் இல்லாது எப்போதுமே ஒரு இறுக்கமான முகமூடியுடன் அவள் வலம்வர தொடங்க, புகழுக்கு முதலில் அவளின் மாற்றம் புரியவே இல்லை. 

அவள் முகத்தின் இறுக்கம் அவனுக்கு வலி கொடுக்க, பொறுக்கமுடியாமல் மீண்டும் வினோத்தின் முன்னே வந்து நின்றான் அவன். 

கல்லூரிக்கே வந்து நின்றவனை எதிர்பாராமல் வினோத் அதிர்ச்சியாக, “உன் அக்காவுக்கு என்னடா ஆச்சு?” என்றான் புகழ். 

அவனையே அதிரச் செய்யும்படி, “என் அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க சார் ப்ளீஸ்” என்றான் வினோத். 

மீண்டும், “என்ன நடந்தது வினோத்” என்றான் புகழ். அவன் பேச்சு பழையபடி தெளிவாக இருக்க, வீட்டில் நடந்தது, அதன்பிறகான காளியின் ஒதுக்கம் என்று அத்தனையையும் கூறிவிட்டான் வினோத். 

காளியை நினைத்து வருத்தம் கொண்டாலும், அவள் அன்னையின் செயலில் கோபம் தான் முன்னே நின்றது புகழுக்கு. “உன் அக்காவையும் உன் அம்மா தான பெத்தாங்க” என்று வினோத்திடம் அவன் கேட்டுவிட,

“பெத்தது மட்டும்தான் சார் அவங்க. வளர்த்தது எல்லாம் எங்க அப்பா தான். அவர் போனதும் அக்கா தான் எங்களை பார்த்துக்கிட்டா. பாவம் சார் அது. எல்லாரும் சேர்ந்து அவ கஷ்டத்தை சாப்பிட்டுட்டு இருக்கோம்” என்று கண்கலங்கினான் வினோத். 

அவன் தோளில் தட்டிக் கொடுத்தவன், “எப்படி உன் அக்காவை கல்யாணம் பண்ண சொல்லி என்கிட்ட கேட்ட?” என,

“நீங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க கேட்டது எனக்கு தெரியுமே”

“நான் கேட்டதெல்லாம் சரிதான். உன் அக்காதான் முடியாதுன்னு சொல்லிட்டாளே”

“அட… அவ ஒரு பைத்தியம் சார். உங்களுக்கும் அவளுக்கும் ஒத்துவராதுன்னு நினைச்சு பயப்படறா. நீங்க படிச்சு இருக்கீங்க, ரொம்ப நல்லவர், உங்க குடும்பம், தொழில் அது இதுன்னு நிறைய பேசறா. ஏன் சார் இதெல்லாம் தெரியாமலா நீங்க அவகிட்ட கேட்டீங்க” என்று வினோத் கேள்வியுடன் நிறுத்த,

“ஏன்டா வக்கீல் எல்லாம் லவ் பண்ணகூடாதா”

“அவளை பண்ணக்கூடாதுன்னு சொல்வா சார் அவ”

“அப்புறம் என்னை என்ன தான் செய்ய சொல்ற நீ?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனா, அவ நல்லா இருக்கணும். கந்தன் அண்ணா கூட உங்களை பத்தி ரொம்ப நல்லா சொன்னாரு. எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு. ஏதாவது பண்ணுங்க சார். என் அக்காவை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கோங்க.” என்ற வினோத்தின் பேச்சில் சிரிப்பு தான் வந்தது புகழுக்கு. 

“ஏன்டா நான் என்ன மாட்டேன்னா சொன்னேன்” என்று எண்ணியவன், “நடக்கும் வினோத். பார்க்கலாம். ஏதாவது செய்வோம்” என்றுவிட்டு கிளம்பினான்.