சக்திவரதனுக்கு சமீப கால மணவுளைச்சலின் பயனாய், வேலையில் கூட ஒன்றி எதையும் செய்ய முடிவதில்லை.
அன்றும் அப்படித்தான் தலைவலி வெகுவாக படுத்த, இடது கையை தலையில் அழுந்த ஊன்றியவாறே சில கணக்குவழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்க, தலைவலிக்கு இதமாக இருக்கும் எனச் சூடாகக் காபி கலந்து கொண்டு வந்து தந்தாள் அபூர்வா.
‘ம்ப்ச்’ என சலிப்பு காட்டியவன், அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவனது பாராமுகம் வதைக்கிறது தான் என்றபோதிலும், இன்று அவனிடம் தாய்வீடு சென்றுவர கேட்கலாம் என யோசித்திருந்தவளுக்கு முகமே சுண்டிப் போனது.
சமீபமாக அப்பாவின் குரலில் சோர்வு நிறைய தெரிகிறது. அவரை போய் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று உள்ளம் நச்சரித்துக் கொண்டே இருக்க, கணவனிடம் அனுமதி வாங்காமல் போவதற்கும் அவளுக்கு விருப்பம் இல்லை. முன்பு ஒருமுறை அங்கு செல்லவா என்று கேட்டதற்கு வேக மறுப்பு தந்தவன் ஆயிற்றே!
இன்றாவது கேட்டு விடலாம் என ஒவ்வொரு நாளும் அவள் நினைக்க, பேசக் கூட மறுப்பவனிடம் என்னவென்று கேட்பாள் நீண்டதாக ஏக்க பெருமூச்சு வந்தது. மனதினுள் சொல்லத்தெரியா வலி ஒன்று அவளை வாட்டியது.
காபியை நிதானமாக அருந்தி முடித்த பிறகும் அவனின் தலைவலி மட்டுப்பட்டது போலத் தெரியவில்லை. கணவனுடைய சுருங்கிய புருவத்தையும், கடினமாக இறுகிய முகத்தையும், தலைச்சூட்டைக் கட்டியம் கூறுவது போலச் சிவந்திருந்த விழிகளையும் பார்த்ததும் அவன்மீது பரிவு எழுந்தது.
அவன் மட்டும் பெற்றோர், உற்றார் என்று மகிழ்ச்சியாகவா திரிகிறான்? அவன் பக்கம் எல்லாரும் விலகியிருக்கும் போது, நாம் மட்டும் அடிக்கடி பிறந்தவீடு சென்று உறவு கொண்டாடி வருவது நன்றாக இருக்காது போல… ஒருவேளை அதன்பொருட்டு தானோ என்னவோ நம் அம்மா, அப்பா கூட ஒரே ஊரில் இருக்கும்போதும், எங்களைத் தேடி அடிக்கடி வருவதில்லையோ என்னவோ… என்பதுபோல யோசித்தவளுக்கு இவர்கள் அனைவரின் எண்ணத்தையும் மதிக்க வேண்டிய சூழல், ஒருவித மறைமுக கட்டாயம்! ஆக, தன்னை தேற்றிக் கொண்டு, தனக்காக இப்படி தன்னந்தனியே வந்து கஷ்டப்படும் கணவனைக் கவனிக்க எண்ணினாள். அவனின் பராமுகத்தைக் கடந்தும்!
“என்ன சரி பார்க்கணும் சக்தி? என்கிட்ட கொடுங்க நான் வேணா சரி பார்க்கிறேன். நீங்க ஒரு தலைவலி மாத்திரையை போட்டுட்டு தூங்கி எழுந்திரிங்க. அப்பதான் நல்லா இருக்கும்” என வலியப் போய் அவனிடம் கேட்டாள்.
அவனுக்கும் தலைவலி உச்சபட்சமாய் இருந்தது போலும், சமீபத்தில் எடுத்த திருமண காண்ட்ராக்ட்டின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் காட்டி, அவனுக்கு இப்பொழுது என்ன தேவை என்பதை மேலோட்டமாக சொல்லித் தரத் தொடங்கினான். அவன் நன்றாக இருந்திருந்தால், இதெல்லாம் பார்க்க அரைமணி நேரம் கூட ஆகாது. இன்று என்னவோ இந்த தலைவலி புரட்டி எடுத்தது.
வேறு வழியில்லாததால் சங்கீதாவிடம் காட்டி, “நம்மகிட்ட சமையல் வேலை, பந்தி பரிமாறும் வேலை, பூ அலங்காரம், மேடை டெகரேஷன் செய்யறதுக்காக எல்லாம் வெளிய இருந்து வந்த வொர்க்கர்ஸ் எல்லாரோட லிஸ்ட்டும் இங்க இருக்கு. அவங்க சம்பள விவரம் இங்கே பார்த்துக்க… அட்வான்ஸ் எவ்வளவு வாங்கியிருக்காங்கன்னு இந்த செலவு லிஸ்ட்டுக்குள்ள இருக்கு. அதெல்லாம் தேடி எழுதணும். அப்பறம் பொருளுங்க ரிட்டர்ன் பண்ண யாருக்கிட்ட தந்து ரிட்டர்ன் பண்ண சொன்னோம்ன்னும் இதுல எங்கேயாவது தான் எழுதி இருப்பேன், அதுக்கான காசும் அவங்க கிட்ட தான் இருக்கு அதையும் அவங்க சம்பளத்துல இருந்து குறைச்சிடு. எல்லாருக்கும் இன்னும் எவ்வளவு தரணும்ன்னு சரிபார்த்து சொல்லு” என்று விளக்கம் சொல்லிவிட்டு அறைக்குள் போய் விட்டான்.
ஆங்காங்கே அவசரமாகக் கிறுக்கலாக அவன் எழுதி வைத்ததைப் பார்த்ததும், அவளுக்குத் தலைவலி வந்துவிடும் போல இருந்தது.
சாதாரண வரவு, செலவு கணக்கு தான்… ஆனால், அதில் எழுதியிருந்த கணக்கு வழக்குகளுக்குள் தேடவே முடியவில்லை. அவன் வேறு அங்கு, இங்கு என காட்டி சொன்னது இப்பொழுது எங்கென்றே அவளுக்குத் தெரியவில்லை.
சும்மா இல்லாமல் தலையைக் கொடுத்து விட்டோமோ… இப்பொழுது அவன் கேட்ட வேலையை முடிக்காவிட்டால் என்ன சொல்வானோ என கலக்கமாக நினைத்தவள், சரி கொஞ்சம் முயற்சிப்போம் என்று ஒரு தனி நோட்டு எடுத்து, தேவையான சம்பள பட்டுவாடா விவரங்களை மட்டும் தனியே எடுத்து எழுதத் தொடங்கினாள்.
சம்பள விவரம் எங்கோ காட்டினானே… அட்வான்ஸ் போக வேறு எதையோ கழிக்கச் சொன்னானே… பயம், பதட்டம் எல்லாம் அவளின் மந்த புத்தியை மேலும் மழுங்கடிக்க, மூளையைத் தட்டி தட்டி தேவைப்படும் என்று தோணுவதை எல்லாம் குறித்தாள். ஒரு மாதிரி படப்படப்பாக வந்தது.
ஒன்றரை மணிநேரம் நல்ல தூக்கம் சக்திக்கு. புத்துணர்வோடு எழுந்தவன், முகம் கழுவிவிட்டு சங்கீதா அருகே வர, அவளின் செய்கையைப் பார்த்ததும் அவனுக்கு கண்மண் தெரியாமல் ஆத்திரம் வந்தது.
“ஏய்…” என்றான் அதட்டலாக. கணக்கில் கவனமாக இருந்தவள், திடீரென கேட்ட கணவனின் ஆத்திர குரலில் துள்ளி விழுந்தாள். இதயம் படபடவென காற்றிலாடும் கதவு வேகத்துக்கு அடிக்க தொடங்கியது.
“என்ன பண்ணி வெச்சிருக்க? இப்ப தானே இதெல்லாம் சொல்லி தந்துட்டு போனேன். நான் சொன்னதை செய்யாம நீ எதுக்கு இப்ப எல்லாத்தையும் மறுபடியும் தனியா எழுதிட்டு இருக்க? இதையா நான் உன்கிட்ட செய்யச் சொன்னேன்?” என அவன் காய்ந்ததில், அவளுடைய இதயத்துடிப்பு மேலும் அதிகரித்தது. அப்பொழுது அவன் விளக்கியபோது, புரிவது போலத்தான் இருந்தது. ஆனால், அவளாக முயற்சிக்கும் போது ஆயிரம் குளறுபடி தோன்றினால் அவளும் தான் என்ன செய்வாள்?
இருந்தும் தன்னாலான முயற்சி முழுவதையும் செய்து கொண்டிருந்தபோது கணவன் இவ்வாறு திட்டவும் மனதிற்குக் கஷ்டமாகப் போய்விட்டது. முகம் வெளிறிப்போய் கைகளை பிசைந்து கொண்டு பதில் சொல்லக்கூடத் தோன்றாமல் எழுந்து நின்றிருந்தாள்.
பலமுறை ஆசிரியர்கள் திட்டுவது தான், “உனக்கெல்லாம் எத்தனை தடவை சொல்லி தரது” என்பதுபோல! அப்பொழுது போலவே இப்பொழுதும் முகமும் மனமும் வாடிப்போனாள். என்ன அப்போது விட இப்போது பல மடங்கு வலித்தது.
“அச்சோ! எவ்வளவு தப்பு தப்பா உனக்கு தோணினதை எல்லாம் எழுதி வெச்சிருக்க? இதுல என் கணக்குல மார்க் வேற பண்ணி வெச்சிருக்க. மறுபடியும் இதெல்லாம் சரி பார்க்கிறதுக்கு நானே எல்லாத்தையும் செஞ்சிருக்கலாம்” அவள் வாட்டத்தை கவனியாமல் மேலும் கடிந்தவன், அவளிடம் தந்த விவரங்களை வெடுக்கெனப் பிடுங்கி, எல்லாவற்றையும் மீண்டும் அவன் மட்டுமாக சரிபார்க்கத் தொடங்கினான்.
இதற்கும் அவள் பென்சில் கொண்டு தான் மார்க் செய்திருந்தாள். அழித்து விடலாம் என்று! ஓரளவு சிரமப்பட்டேனும் அவளே எல்லாவற்றையும் தொகுத்து எழுதியும் விட்டாளே பிறகும் திட்டு வாங்கியதில் மனம் வலித்தது. உண்மையில் நமக்கு எந்த வேலையும் சரியாகச் செய்யத் தெரியாதா கடைசிவரை எல்லாருக்கும் பாரமாக இருந்து எல்லோரின் வெறுப்பையும் சம்பாதிக்கப் போகிறேனா?
எல்லாரும் என்ன எல்லாரும்… கணவன்… பெற்றோர் மட்டும் தானே அவள் உலகத்தில்! பெற்றோர் இதுவரை அவளைக் குறை சொன்னதே இல்லை. கணவன் என்ற உறவையும் அப்படியே எதிர்பார்க்க முடியுமா? வெளி உலகம் தெரியாமல் சின்ன கூட்டுக்குள் வளர்ந்தவளுக்கு தன் நேசமானவனின் கோபத்தை எதிர்கொள்ளும் திராணி இல்லை. அதிலும் தான் அவனுக்கு பாரமோ என்று தோன்றிய எண்ணம் நெஞ்சைக் கணக்க செய்தது.
கலங்கி விட்ட கண்களோடு, கணவனை ஏறிட்டும் பார்க்க முடியாமல் அமைதியாக அவ்விடம் விட்டு அகன்று விட்டாள்.
சக்திக்கு தான் வீசிய வார்த்தைகளின் வீரியம் புரியவில்லை. இவனின் தலைவலியில் அக்கறை கொண்டவளின் செய்கை அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்படி ஒன்றும் அவசரமான கணக்கு வழக்கும் அது இல்லை. இவனே கூட பார்த்துக் கொள்ளலாம். அவள் கட்டாயப்படுத்தித் தந்த ஓய்வு தான் இப்பொழுது இருக்கும் புத்துணர்வுக்கு காரணம் என்று கூட யோசிக்காமல், அவள் குறித்து வைத்ததையும், எழுதி வைத்ததையும் கொண்டு தன் வேலையை எளிதாக முடித்து விட்டு, அவரவருக்கான சம்பள பணத்தை அனுப்பி வைத்தவன், மனைவியின் மனநிலை குறித்து துளியும் அக்கறை கொள்ளவில்லை.
அன்றிலிருந்து சங்கீதா மௌனித்துப் போனாள். அவளும் எவ்வளவு தான் இறங்கிப் போவாள். அவனாக மீண்டும் பேசட்டும் என எண்ணியவளுக்கு, விலகி இருப்பது பெரும் பாரமாய் இருந்தது. ஆனால், அவனாகப் பேச வர வேண்டுமே! மிகவும் சிரமப்பட்டு தன் தவிப்பைச் சகித்துக் கொண்டாள்.
ஆனால், இருவாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க அவள் சூழல் இடம் தரவில்லை.
சமீப நாட்களாய் இருந்த சந்தேகத்திற்கான விடை அன்று சங்கீதாவிற்கு கிடைத்திருந்தது. உள்ளம் பூரிக்க, நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு, அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.
தழைய தழைய புடவை கட்டி, கோயில் பிரசாதத்துடன் வந்தவள், அப்பொழுதே குளித்து முடித்திருந்த கணவனின் நெற்றியில் வைத்து விட்டாள்.
சக்தியின் முகம் ஆராய்ச்சியாய் அவளை அளவிட்டது. இத்தனை நாட்களும் விலகல் காட்டி திரிந்தவளுக்கு இன்று என்னவாம் எனப் புரியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான். உள்ளுக்குள் ஒருவித குதூகலம், ‘அதுதானே என்னை விலகி உன்னால இருக்க முடியுமா?’ என்பது போல! உண்மையில் அவனுள் வியாபித்திருக்கும் கர்வமும் அபூர்வாவின் காதல் தான்! அது இல்லையேல் அவளிடம் இவ்வளவு அலட்சியமும் சாத்தியமில்லையே!
அவளின் முகத்தில் தெரிந்த தேஜஸை அளவிட்டவாறே, “என்ன காலையிலேயே கோயில் எல்லாம்…” என்று அவன் கேட்டதும், பதில் சொல்லும் திராணி இல்லாதவள் போல வெட்கத்தில் தலையை குனிந்தவள், “உங்களுக்கு காபி கொண்டு வந்து தரேன் இருங்க” என்று மழுப்பலாக எதையோ சொல்லிவிட்டு வேகமாகச் சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
‘புடவை எல்லாம் கட்டி இருக்கேன். இவருக்கு ஒன்னுமே தோணாதா?’ என்று பெண்ணவளின் மனம் சுணங்கியது. அவளுள் எழும் எதிர்பார்ப்புகள் எல்லாம் அவனிடம் தொடர்ந்து பலனற்று போய்க்கொண்டே தான் இருக்கும். காரணம் தான் அவளுக்கு விளங்கியதே இல்லை.
சூடான காபி வர, அதை அருந்தியபடியே, “உனக்கு எங்கே?” என சக்தி கேட்டான்.
“இல்லைங்க காபி குடிக்கவே முடியறதில்லை…” என்றாள் நாணம் படர. அவளுக்குக் காபி தொண்டையில் இறங்கினாலே குமட்டுவது போல இருந்தது.
அவளது நாணம் இப்பொழுதெல்லாம் சக்திக்கு எரிச்சலைத் தான் தருகிறது. எப்பொழுது பார்த்தாலும் அதென்ன நாணி கோணிக்கொண்டு… இவளின் ஜாலத்தில் இவளிடம் விழுந்தே கிடப்பேன் என நினைக்கிறாளோ என்னவோ என முகம் சுளித்தான்.
காரணமற்ற கோபம் அவள்மீது! உண்மையில் அவன்மீது அவனே கொண்ட கோபத்திற்கு வடிகாலாய் அவன் அபூர்வாவைப் பார்த்தான். பிழையின் தொடக்கம் அதுதானோ?!
“காபி பிடிக்காட்டி… ஹார்லிக்ஸ், போன்விட்டா எதுவும்…?” நக்கல் வழிந்தது அவன் குரலில்.
அதை கவனிக்காதவளோ, “முயற்சி செஞ்சு பார்க்கணும்ங்க…” என்று இயல்பாக சொல்லிவிட்டு, “இனி உங்க அம்மா, அப்பா, எங்க அண்ணா எல்லாரையும் சுலபமா சமாதானம் செஞ்சுடலாம்” என்றும் சந்தோசக்குரலில் சொல்ல,
ஒரு பெருமூச்சுடன், “எங்கே? அவங்க தான் அசைஞ்சு கொடுக்க மாட்டீங்கறாங்களே…” என்றான் அலுப்புடன். இத்தனை மாதங்களின் பிறகும் அசைந்து கூட கொடுக்காதவர்கள் அவனுக்கு அச்சமூட்டினர். அந்த கோபமும் இயலாமையும் மனையாளே வாட்டிக் கொண்டிருந்தது.
“அதெல்லாம் இனி சரியாயிடும். ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… கொஞ்சம் கண்ணை மூடுங்க” என்றாள் இதழ்கள் இளநகையுடன் விரிய.
“என்னடி?” என்றான் சலிப்புடன்.
“சும்மா… சும்மா… கேள்வி கேட்டுட்டு… கொஞ்சம் கண்ணை மூடுங்களேன்… பிளீஸ்…” என்றாள் சலுகையாக.
“படுத்தற…” என்றவன் விழிகளை மூடிக்கொள்ள, அவனது கரம் பற்றி அதில் எதையோ வைத்தவள், “இப்ப திறங்க…” என்றாள் நாணத்தோடு.
இரண்டு சிவப்புக் கோடுகள் தாங்கி நின்றது அந்த பிரக்னன்சி கிட்… அவன் விழியுயர்த்தி பார்க்க, அவள் விழிகள் ஆனந்தத்தில் நனைந்திருந்தது. அவன் தோளில் வந்து பூங்கொடியாய் சாய்ந்து கொண்டாள். அவனோ அவளைத் திரும்பி அணைக்காமல் இறுகி நின்றான்.