இந்த ஊருக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடை, வீடு என்று ஒரளவிற்கு ஊரை தெரிந்து வைத்திருந்தாலும் தனியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கும் அளவிற்கு திறமைசாலியாகி விட்டாளா? என்ற கேள்வி எழ, ‘இல்லை’ என்ற பதில் தான் கிடைத்தது வசந்திக்கு. சித்தியுடன் தான் சென்று வாங்க வேண்டும். அவரை எப்படி வீட்டிலிருந்து கிளப்புவது என்று அவளுக்குத் தெரியவில்லை. இந்த ஊருக்கு வந்த புதிதில் அவர்கள் இருவரும் நடைபயிற்சி, மார்கெட் என்று பல இடங்களுக்குச் சென்றதுண்டு. ஆனால் அந்தப் பழக்கம் ஷிக்காவின் கடைக்கு அவள் போக ஆரம்பித்த பின் குறைந்து போய், சினேகா கருவுற்ற பின் மொத்தமாக நின்று போனது.
சினேகா வீட்டில் இல்லாத போது கூட அவளுக்காக என்று அனைத்தும் அவளை முன்னிலையில் வைத்து தான் முடிவு செய்தார் விஜயா. ‘அவளே பாம்பே, பெங்களூர்னு வெளி இடத்துக்குப் போகறா..அவளுக்காகன்னு நீங்க வீட்டு உள்ளே அடைஞ்சு கிடைக்கறீங்க..உங்களைச் சரியா கவனிச்சுக்கறது இல்லை..உங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆகிடுச்சுன்னா யார் மாப்பிள்ளைக்குப் பதில் சொல்றது?’ என்று ஜோதி சத்தம் போட்ட பின்னர் தான் விஜயா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டார். ஆனாலும் அது அதிக நாள்கள் நீடிக்கவில்லை. சினேகாவின் பிரசவ நாள் நெருங்க நெருங்க விஜயாவிற்குத் தான் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்படி ஒருமுறை ஆன போது உதவிக்கு மதனை அழைக்க வசந்தி முயன்ற போது அவளது அழைப்பு மதனைப் போய்ச் சேரவில்லை. மதனின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. வேறு வழியில்லாமல் ஒரு சில தினங்களுக்கு அவளுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்த சினேகாவை தான் அழைத்தாள் வசந்தி. அதன் பிறகு சினேகாவிற்கு தெளிவு வந்து விட்டது. கணவன் இல்லாத போது அவள் தானே குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதால் அம்மா வீட்டிற்குப் போவதை மொத்தமாக நிறுத்திக் கொண்டாள். ஒரு மணி நேரத்திற்கு வந்து போக ஜோதி கெஞ்சிய போது கூட அவள் சம்மதிக்கவில்லை. ‘அத்தையை விட்டிட்டு என்னாலே வரமுடியாது..பிரசவ டயம்லே நீங்க இங்கே எங்களோட வந்திடுங்க ம்மா.’ என்று உறுதியாக அவள் சொல்லி விட, ஜோதிக்கு மனவருத்தம் என்றாலும் மகளை வற்புறத்தவில்லை.
ஷண்முகம் வீட்டில் இல்லாதது அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களை பல விதத்தில் பல அளவுகளில் பாதித்ததால் அவர்களின் மனத்திலும் குணத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. விஜயாவின் கவனம் முழுவதும் மருமகள் மீது இருக்க, அவரைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை. பிறக்கப் போகும் பிள்ளை மீது அவளது கவனத்தைத் திருப்பி, கணவனைப் பற்றிய கவலைகளை முளையிலேயே வெட்டக் கற்றுக் கொண்டாள் சினேகா. விஜயா, சினேகா இருவரின் நலனில் கவனம் செலுத்திய வசந்தி அவளது எதிர்காலம் பற்றிய கேள்விகளி மனத்திற்குள் ஆழமாகப் புதைத்து வைத்தாள். சின்ன வளைகாப்பு விழா பெரிய விஷயமாகி அவளது விவாகரத்து சின்ன விஷயமாகிப் போனது வசந்திக்கு.
என்ன தான் ஷிக்கா, மனோகர் இருவருடனும் நல்ல உறவு இருந்தாலும் அவர்களின் உதவியை நாட தயக்கமாக இருந்தது வசந்திக்கு. ‘பாட்டி ஆகப் போறீங்க..நீங்க தான் உங்க கையாலே வாங்கணும்.’ என்று விஜயா சித்தியை அழைத்துக் கொண்டு ஒரு சில இடங்களுக்கு ஷாப்பிங் சென்றாள். அதன் பின்,’இன்னைக்கு முடியாது வசந்தி..நாளைக்கு போகலமா?’ என்று அவர் தள்ளிப் போட, வேறு யாருடைய உதவியை நாடலாமென்று யோசித்தவளின் மனத்தில் தோன்றியது மதன் தான். வளைகாப்பு பற்றிய பேச்சு நடந்த அன்று வீட்டிற்கு வந்தவர் அதன் பின் வரவேயில்லை. இந்த மாற்றத்திற்கு ஏதாவது காரணம் ஏதாவது இருக்குமோ?’ என்ற கேள்வி வசந்தியைக் குடைய, விடையை அறிந்து கொள்ள ஒரு மாலைப் பொழுதில் மதனிற்கு அழைப்பு விடுத்தாள் வசந்தி.
இந்தமுறை கைப்பேசிக்கு உயிர் இருந்தாலும் அவளது அழைப்பை ஏற்கவில்லை மதன். அடுத்த நாள் காலையில் அழைப்பு விடுக்க அப்போதும் அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை. அன்று முழுவதும் சிறிய இடைவெளியில் தொடர்ந்து அழைப்பு விடுக்க எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை. அத்தனை முறை அவள் அழைத்ததைப் பார்த்து மதன் என்ன நினைப்பார் என்று நினைக்காமல்,’என்னது இது? தம்பிகிட்டேயிருந்து தான் தகவல் இல்லைன்னு பார்த்தா இவரும் மாயமா மறைஞ்சிட்டார்..என்ன ஆகிடுச்சு? யார்கிட்டே கேட்கறது? அனிதா மேடம்க்கு ஃபோன் செய்து பார்க்கலாமா? இல்லை காத்திருக்கலாமா?’ என்று பலவாறு யோசித்து அந்த நாளை கடத்தியவளின் இரவு உறக்கம் அந்த யோசனையிலேயே பறிப் போனது.
நள்ளிரவு போல் அவளது கைப்பேசி லேசாக ஒலி எழுப்பி அணைந்து போக, விஜயாவை தொந்தரவு செய்யாமல் கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மதனிடமிருந்து அழைப்பு. அதுவரை இருந்த இருள் விலகி, இதயமானது பிரகாசமாக, இலகுவாக, இனிதாக உணர, அறையிலிருந்து வெளியே வந்து மதனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள் வசந்தி. அவளது அழைப்பு உடனே ஏற்கப்பட்டவுடன்,”என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
அவளைப் போலவே,”என்ன ஆச்சு?” என்று கேட்டார் மதன்.
வசந்திக்கு அந்தக் கேள்வி புரியவில்லை. “என்ன ஆச்சுன்னா? சினேகாவைப் பற்றி கேட்கறீங்களா? நல்லா தான் இருக்கா..சித்தியும் ஓகே.” என்றாள்.
“அப்போ எதுக்கு நேத்திலிருந்து அத்தனை முறை கூப்பிட்டு இருக்க?” என்று ஒரு மாதிரி ஒருமைக்கு மாறி எரிச்சலுடன் வினவினார் மதன்.
அப்போது தான் அவளது மடத்தனமான செயல் வசந்திக்குப் புரிய,”சாரி..சாரி..கொஞ்ச நாளா நீங்க வீட்டுக்கு வரலை..விசாரிக்கலாம்னு தான் ஃபோன் செய்தேன்..நீங்க எடுக்கலைன்னவுடனே எனக்கு டென்ஷனாகிடுச்சு…நான் யோசிக்காம..” என்று வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினாள் வசந்தி.
‘எதுக்கு டென்ஷனாகணும்?’ என்று கேட்க நினைத்ததைக் கேட்கவில்லை மதன். மாறாக,”நேத்துலேர்ந்து தொடர் மீட்டிங்கலே இருந்தேன்..ஃபோன் என்கிட்டே இல்லை..கார்லே வரும் போது தான் மிஸ்ட் கால்ஸைப் பார்த்தேன்..இப்போ தான் வீட்டுக்கு வந்தேன் உடனே கால் செய்தேன்.” என்று விளக்கம் கொடுக்க,
“சினேகாவோட வளைகாப்புக்கு ஏற்பாடு செய்யணும்….விஜயா சித்திக்கு அலைய முடியலை..குருவாயூரப்பன் கோவிலுக்குப் போய் ஐயருக்கு சொல்லணும்..அவர் கொடுக்கற லிஸ்ட்படி சாமான் வாங்கணும்…ஏதாவது விட்டுப் போயிடுச்சான்னு செக் செய்யணும்..இதுகெல்லாம் உங்க உதவி தேவைப்படுது..அதான் ஃபோன் செய்தேன்.” என்று அவளது அழைப்பிற்கான காரணத்தை வெளியிட்டாள் வசந்தி.
அதைக் கேட்டு லேசாக மதன் சிரிக்க,’காமெடியா ஏதாவது சொல்லிட்டோமா?’ என்று வசந்தி யோசிக்க, அதை உணர்ந்த மதன்,”சைக்கிள்லே ஏறத் தெரியாதவன்கிட்டே ரவுண்ட் அழைச்சிட்டுப் போன்னு கேட்டா சிரிக்காம என்ன செய்யறது?” என்று கேட்டார்.
அதன் பொருள் புரிந்ததும் வசந்தியின் மனது பாரமானது. சில நொடிகள் கழித்து,”நீங்க சொன்னது எனக்கும் பொருந்தும்.” என்று சொல்ல,
“வசந்தி, கடந்து காலத்தை வைச்சு எதையும் தீர்மானிக்க முடியாது..கூடாது..” என்றவரை இடைமறித்து,
“அது உங்களுக்கும் பொருந்தும் தானே?” என்று கேட்க,
“என்னோட சூழ்நிலை வேற..எங்க வீட்டோட அமைப்பு வேற..எனக்கு அம்மா, அப்பா கிடையாது..அண்ணன், அண்ணி தான் என்னோட குடும்பம்..என்னோட வாழ்க்கை தனிமைலே தான் கழியப் போகுது..சுதனுக்கு நான் கார்டியன்.. என்னோட வாழ்க்கைலே எப்போதும் அவன் இருப்பான்..அவனை ஏத்துக்கிட்டு என்னோட வாழ்க்கைத்துணையா ஆக யாரும் ஒத்துக்க மாட்டாங்க.” என்றார் மதன்.
“எத்தனை பேர்கிட்ட கேட்டீங்க?” என்று வசந்தி கேட்க, மதனிடமிருந்து பதில் வரவில்லை.
“ஒருத்தி கிட்டே கூட இன்னும் கேட்கலை இல்லே?” என்று கேட்க அதற்கும் மதனிடமிருந்து பதில் வரவில்லை.
“உங்க மனசுக்கு பிடிச்ச அந்த ஒருத்தி உங்க வாழ்க்கைலே வரலை..அதான் நீங்க கேட்கலை.”
“அவங்ககிட்டே கேட்டிட்டு அவங்க என்ன சொன்னாங்கண்ணு என்கிட்டே சொல்லுங்க..ஓகே வா?” என்றவளுக்குத் தெரியவில்லை அந்த ஒருத்தி அவள் தானென்று.
அதற்கும் மதனிடமிருந்து பதில் வராமல் போக,”இப்போ போய் தூங்குங்க..நாளைக்கு மதியம் போல ஃபோன் செய்யறேன்..வளைகாப்பு ஏற்பாடு பற்றி பேசலாம்..குட் நைட்.” என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள் வசந்தி.