ரஞ்சிதம் வந்து பேசிச் செல்லவும், பைரவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்னமும் கூட அதிர்ச்சி விலகவில்லை என்றுதான் சொல்லிட வேண்டும். அவளது இந்த படபடப்பு போகவே இல்லை.
அன்றைய தினம் முழுவதும் வீட்டிலேயே இருக்க, ஜான் அழைத்தவன் “மகாபலிபுரம்ல சூட் பையு.. த்ரீ மினிட்ஸ் போர்சன் உன்னோடது…” என்று சொல்ல,
“என்னால முடியாது ஜான்…” என்றாள்.
“ஏன் என்னாச்சு? உடம்பு முடியலையா?” என்று அவன் வேகமாய் கேட்க,
“இல்ல இல்ல ஐம் ஓகே.. பட் நேத்து தானே வந்தேன்.. அதான்…” என்று இழுக்க,
“அவ்வளோதானே வேற எதுவும் இல்லியே..” என்றான் ஜான்.
“எஸ் ஐம் ஓகே…” என்று பைரவி உறுதியாய் சொல்ல “ஓகே அப்போ வேற டேட் கேட்கட்டுமா?” என்றான்.
“இல்ல.. நான் சொல்றேன் அப்போ பேசிக்கலாம்…” என்று பைரவி சொல்லவுமே, என்னவோ இருக்கிறது என்று ஜான் யூகித்துவிட, அன்றைய தினம் மதியமே அவளுக்கு உண்பதற்கும் சேர்த்து வாங்கி வந்துவிட்டான் ஜான்.
“என்ன ஜான் நீ, உனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சு.. நீ இப்போவும் என்னை பார்த்துட்டு இருக்க…” என்று அவள் சொன்னாலும், அவன் உணவு கொண்டு வந்தது அவளுக்குத் தேவையாய் தான் இருந்தது.
அவளுக்கு சமையல் எல்லாம் எப்போதாவது தான். முக்கால்வாசி நேரம் ஏதேனும் மெஸ்ஸில் ஆர்டர் செய்வாள். அவ்வளவே.. அதுவும் இல்லையா வெளியே உண்டுவிடுவாள். இப்போதோ இது எதுவுமே தோன்றாமல், ரஞ்சிதம் பேசி சென்ற வார்த்தைகளே மண்டைக்குள் ஓடிக்கொண்டு இருக்க, சிவாவின் நிலை என்பது அவள் எண்ணியிருந்ததற்கு மாறாய் இருந்தது.
அவளிடம் பேச முயன்று கொண்டே தான் இருந்தான். அத்தனை அழைப்புகள், மெசேஜ்கள் என்று எக்கச்சக்கம். ஒருநிலைக்கு மேலே அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஷர்மாவிற்கு அழைத்து, அவள் வரும் நேரம் போகும் நேரம் பற்றி கேட்பான். அவ்வளவு தான். ஆனால் மனதளவில் அவன் இப்படி இறுகிப் போவான் என்று அவள் எண்ணவில்லை.
நிதர்சனம் உணர்வான் என்று எண்ணினாள், அவனோ அவனுக்கென்று ஒரு தனி நியதி எழுதிக்கொண்டான்.
மீண்டும் இதெல்லாம் தலைக்குள் வந்தாய் குடைய “பையு சாப்பிடாம என்ன யோசனை?!” என்றான் ஜான்.
“ம்ம்ம் நத்திங்…” என்றவள் “நீயும் சாப்பிடு…” என,
“இருக்கட்டும்… என்னாச்சு?” என்று திரும்பக் கேட்க, இதற்குமேலும் நண்பர்களிடம் இதனை மறைக்க கூடாது என்று தோன்ற, திருமணம் முடிந்து பல நாட்களுக்கு பிறகு அன்றைய தினம் எதேர்ச்சையாய் சந்தோஷியும் வர,
“ஆகிலாக்கும், தினுக்கும் கால் பண்ணி வர சொல்லு ஜான்…” என்றிட, எப்போதும் இப்படி அழைத்திடாத பைரவி இன்று அழைக்கவும், என்னவோ என்று தான் வந்து சேர்ந்தனர்.
“சாரி உங்களை எல்லாம் ரொம்ப படுத்துறேன்ல…” என்று பைரவி பேச,
“முதல்ல என்ன விசயம்னு சொல்லு…” என்றான் தினேஷ்.
“ம்ம்..” என்றவள், ரஞ்சிதம் வந்து பேசிய அனைத்தையும் சொல்ல, அங்கேயே அப்படியொரு அமைதி. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
சந்தோஷியோ, மெதுவாய் பைரவியின் கரத்தினை சுரண்டி “உங்களுக்குள்ள…” என்று எதையோ கேட்க வந்தவள், வார்த்தைகளை விழுங்க, பைரவி அதற்கு எந்தவித பதிலும் சொல்லவில்லை. பாவனையும் காட்டவில்லை.
என்னவோ அது அவளுக்கும் சிவாவிற்கும் உண்டான அந்தரங்கம் என்று அவள் இருக்க,
“ஏய் லூசு..” என்று அதட்டிய அகிலா “சரி சொல்லு பையு.. நல்ல விஷயம் தான்.. நீ என்ன டிசைட் பண்ணிருக்க?” என்றாள்.
“எ.. என்ன டிசைட் பண்றதுன்னு தெரியலை…” என்று பைரவி பேச,
“தெரியலையா?!” என்றான் ஜான் நெற்றியை சுருக்கி.
“ம்ம்…” என்று பைரவி தலையை ஆட்ட, தினேஷின் போலீஸ் மூளையோ வேகமாய் சிந்தித்து,
ஜானைப் பார்த்து மெதுவாய் புன்னகை சிந்தியவள் “நீங்க எல்லாம் சொன்னீங்க, இந்த லவ் உனக்கு செட் ஆகாதுன்னு. ஆனா நான் உங்க யார் பேச்சையும் கேட்கல.. ஆனா இப்போ எனக்கு நிஜமாவே தெரியலை.. என்னோட காதல் அது அப்படியே தான் இருக்கு. அதுல எந்த மாற்றமும் இல்லை. சிவா அளவுக்கு என்னால ஒருத்தரை நேசிக்க முடியுமா? நம்பிக்கை வைக்க முடியுமா அப்படின்னா எனக்கு தெரியாது. ஆனா எங்களுக்குள்ள இருக்க பிரச்சினையே வேற…” என்று பைரவி சொல்ல,
“அப்போ யோசி.. லைப்ல எல்லாருக்குமே செகண்ட் சான்ஸ் கிடைக்காது. உனக்கு அதுவா வருது. உன் அம்மா விசயத்துல நீ நினைச்சதை பண்ணிட்ட. இப்போ உன்னோட வாழ்க்கைக்கான விஷயம் இது. சிவாவோடத்தான் வாழ்க்கை அப்படின்னா அதுக்கான முயற்சி பண்ணேன்…” என்று அகிலா ஊக்க, தினேஷும் அதனை அமோதித்தான்.
அவனுக்கு என்னவோ சிவா மீது ஒரு தனி பிரியம். பைரவியை அவனைத் தவிர புரிந்து, நல்ல முறையில் வேராரும் பார்த்துக் கொள்ள முடியாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சந்தோஷியோ “பையு.. டைம் எடுத்துக்கோ.. ரிலாக்ஸ் பண்ணு.. யோசி.. சிவாவோட பேசணுமா பேசு.. அடுத்து முடிவு பண்ணு…” என்று சொல்ல, ஜானும் இதற்கு சம்மதித்தான்.
ஆனாலும் சிவாவிடம் திடீரென்று சென்று பேசவும் ஒருமாதிரி இருந்தது. என்னவென்று பேசுவது. உன் அம்மா வந்து இப்படி பேசினார் என்றா பேச முடியும்?
இல்லை நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய் என்றா அவனிடம் கேட்க முடியும்?!
எது எப்படியோ இதனை இதோடு விட முடியாது என்பதில் மற்றும் அவளுக்கு உறுதியாய் தோன்ற “ம்ம் யோசிக்கிறேன்…” என்றாள் பைரவி.
“யோசிச்சு நல்ல முடிவாவே எடு.. நீயும் சீக்கிரம் செட்டில் ஆகிட்டா எங்க எல்லாருக்கும் ரொம்பவே சந்தோசம்…” என்று மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அனைவரும் விடைபெற, அடுத்து ரூப்பாவிற்கும் அழைத்தாள்.
“நான் வரட்டுமா? நீ தனியா இருந்துப்பியா?” என்று கேட்க,
“இட்ஸ் ஓகே.. எனக்குமே தனியா இருந்தா தான் கொஞ்சம் திங் பண்ண முடியும்..” என்றிட
“சந்தோசமா இருக்கு பையு.. நல்ல முடிவா எடு…” என்று அவளும் சொல்ல, அடுத்து ஷர்மாவிற்கு அழைத்து பேச “அப்படியாம்மா ரொம்ப சந்தோசம். நீ என்ன முடிவு பண்ணாலும் ஓகே. ஆனா சிவா இடத்துல இருந்தும் யோசி.. வருத்தங்கள் கோபங்களை எல்லாம் விட்டிடு.. இனி என்ன அப்படிங்கறதை மட்டும் யோசி…” என்று பெரியவராய் அவர் அறிவுரை சொல்ல,
“ஓகே அங்கிள்…” என்றவள் அலைபேசியை வைக்க, அடுத்து ஒரு புதிய எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
கண்களை சுருக்கிப் பார்த்தவள், அழைப்பினை ஏற்று “ஹலோ…” என்று சொல்ல,
“வணக்கம் ம்மா.. நான் சிவாவோட அப்பா, சொக்கன் பேசுறேன்…” என்றிட, அடுத்த அதிர்ச்சி இது.
“ஹலோ.. பைரவிம்மா…” என்று அவர் மீண்டும் அழைக்க, அவர் உடல் நிலை மனதில் வந்துபோக “ஆ! அங்கிள்.. சொல்லுங்க? எப்படி இருக்கீங்க?” என்றாள்.
“நல்லா இருக்கேன் ம்மா.. இதோ என் மகன் என்னை பேச வைச்சிருக்கானே…” என்றவர் “சிவா அம்மாவோட நானும் வந்து பேசி இருக்கணும்.. அதுதான் முறை..” என்று சொல்ல,
“இ.. இல்ல.. இல்ல அங்கிள்.. சொல்லப்போனா நான் உங்களை ஒரு தடவையாவது வந்து பார்த்திருக்கணும்…” என்றிட,
“எப்போனாலும் எங்க வீட்டுக்கு வா ம்மா…” என்று அழைப்பு வைத்தார்.
“வரலாம் தான்.. ஆனா…” என்று அவள் இழுக்க,
“மத்தது எல்லாம் தூக்கி போடும்மா. எனக்கே உன்னை நேர்ல பார்க்கணும். உங்கம்மா பத்தி நிறைய பேசனும். அவங்க பாட்ட பத்தி பேசனும். உன்னை பாடச் சொல்லி கேட்கனும்னு அத்தனை ஆசை… தெய்வ பிறவிம்மா உங்கம்மா…” என்று சிலாகித்து சொல்ல, பைரவி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவளையும் மீறி கண்களில் நீர் கசிய, சொக்கனின் வார்த்தைகளாய் உள்வாங்கிக்கொண்டு இருந்தாள்.
“ரஞ்சிதம் வந்து கோவமா பேசிருப்பா இல்லையாம்மா…” என்று கேட்க,
“அ.. அதெல்லாம் இல்லை அங்கிள்…” என்றாள் மறுப்பாய்.
“எனக்கு தெரியும்மா…” என்று மெதுவாய் புன்னகை பூத்தவர் “ஒரு தடவை வீட்டுக்கு வந்துட்டு போயேன்..” என்று அழைக்க, அவளுக்கு என்னவோ மறுக்கவே முடியவில்லை.
“ஓகே அங்கிள் வர்றேன்…” என்றவள் மறுநாளே அங்கே சென்றுவிட்டாள்.
மற்றது எல்லாம் அவள் சிந்திக்கவே இல்லை. என்னவோ சொக்கனிடம் பேச, அவளுக்கு அத்தனை ஆசையாய் இருந்தது. அதிலும் அவளின் அம்மாவிடம் வேலை செய்தவர் இல்லையா. அம்மா பற்றிய பேச்சு என்றால், அவளுக்கு கசக்குமா என்ன?!
ஓடிவிட்டாள் அங்கே..
காலையில் அத்தனை நேரத்திற்கே பைரவி அங்கே வருவாள் என்று நினைக்கவில்லை ரஞ்சிதம். மகளுக்கு தோசை சுட்டு வைத்துக்கொண்டு இருக்க, ஷாலினிக்கு வீட்டினில் அனைவரிடமும் கோபம். மகனுக்காக பார்த்து, வந்த நல்ல வரனை வேண்டாம் என்றுவிட்டார்கள் என்று.
சிவாவின் அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு, சொக்கன் ஒரேதாய் சொல்லிவிட்டார் ரஞ்சிதமிடம் “இதை நம்ம சரி பண்ணித்தான் ஆகனும். உனக்கு மகன் வேணும்னா, உன்னோட பிடிவாதத்தை விடு…” என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டார்.