பரிமளா ரெசிடென்சி 1

காலை வேளை என்பதால் அந்தக் குடியிருப்பே சற்று பரபரப்பாகத் தான் இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு வேலையில் இருக்க… மூன்றாம் தளத்தில் இருந்த அந்தத் தம்பதி மட்டும் எந்த அவசரமும் இன்றிப் பால்கனியில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தனர்.

ஷ்யாமளாவின் கவனம் காபியில் இல்லை. மற்ற வீடுகளின் பால்கனியில் யாராவது தென்படுகிறார்களா என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கவனித்த அவரின் கணவர் ஈஸ்வர், “என்ன நம்ம அபார்ட்மெண்ட் நியூஸ் எதாவது எனக்குத் தெரியாதது இருக்கா? எதாவது தெரிஞ்சா சொல்லு கேட்கலாம்.” என்றார்.

எதுவும் இல்லையே என்றவர், “நம்ம பக்கத்து வீட்டுக்குத்தான் யாரோ குடித்தனம் வர்றாங்கன்னு நினைச்சோமே.. ஒரு பொண்ணு தான் குடித்தனம் வரா போலிருக்கு, நேத்து வந்து வீடு சுத்தம் பண்ணிட்டு இருந்தா… அவளோட அவ ப்ரண்ட்ஸ் படையே வந்து வேலை பார்த்தது. நான் கூட இத்தனை பேரா குடித்தனம் வராங்கன்னு நினைச்சேன். நல்லவேளை அவ மட்டும் தானாம். இல்லைனா இந்த மாடி வீட்டு பசங்க மாதிரி, வாரக் கடைசியில ஒரே ஆட்டம், பாட்டமா தான் இருக்கும்.”

“இருந்திட்டு போகட்டுமே ஷ்யாமளா, எல்லாம் ஒரு வயசு வரை தானே…”

“ம்ம்… கொஞ்சம் இடம் கொடுத்தா சும்மாவா இருக்காங்க.”

“அதுவும் சரிதான் அப்போ மட்டும் கொஞ்சம் தட்டி வைக்கலாம் தப்பில்லை.”

ஈஸ்வரும் ஷ்யமளாவும் சற்று நடுத்தர வயதை தாண்டிய தம்பதிகள். மகன் வெளிநாட்டில் வேலையில் இருக்க… ஈஸ்வர் உடல் உபாதையின் காரணமாக வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்த காரணத்தால்… தம்பதிகள் ஒருவரோடு ஒருவர் அதிகம் நேரம் செலவு செய்வார்கள்.

மகனை இங்கயே வந்து விடும்படி பலமுறை சொல்லி இருக்க… இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்தாலூம், பணம் மட்டும் அனுப்பி விடுவான்.

அவனைப் பொறுத்தவரையில் பணம் எல்லாவற்றையும் சரி செய்யும். ஷ்யாமளா முடியலை என்று சொன்னால்…. “எல்லாத்துக்கும் ஆள் வச்சுக்கோங்க.” என்பான்.

வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம், ஆனால் உடம்பு முடியவில்லை என்றால் மருத்துவமனைக்கு இவர்கள் தனியாகத்தான் செல்ல வேண்டியது இருந்தது. நாம் கூட இருந்து பார்த்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அருணுக்கு இல்லை.

ஈஷ்வர் இதை ஒரு மாதிரி ஏற்றுக்கொண்டு விட்டார். ஷ்யாமளா தான் இன்னும் ஏற்றுகொள்ள முடியாமல் மகனை எப்படியும் இங்கே அழைத்துக் கொண்டு விடவேண்டும் என்று நினைத்தார்.

ஒரு தளத்தில் மொத்தம் ஆறு வீடுகள். அதே மூன்றாம் தளத்தில் இவர்களின் எதிர் வீட்டில் காலை வேளையே சங்கடத்துடன் தான் ஆரம்பித்தது.

சரத் அவர்களின் பால்கனியில் நின்று உடற்பயிர்ச்சி செய்ய… அங்கே வந்த கோமதி, “டேய் பவித்ராவோட ஹோம்வொர்க் நோட் இங்க விட்டுட்டு போயிட்டா… நீ கொஞ்சம் இதை ஆபீஸ் போற வழியில அவ ஸ்கூல்ல கொண்டு போய்க் கொடுத்திட்டு போறியா?” என்று கேட்டதற்கு,

தனது நெற்றிகண்ணை முழுவதும் திறந்து தாயை சுட்டெரிக்கப் பார்த்தவன், “அவ ஸ்கூல் இருக்கிறது ஒரு திசைனா… என் ஆபீஸ் இருக்கிறது வேற திசை… போற வழியில கொடுக்கனுமாமுல… அதெல்லாம் கொண்டுட்டுப் போய்க் கொடுக்க முடியாது. பாட நோட்டை பார்த்து எடுத்திட்டு போகனுமுன்னு கூட அறிவு இல்லை.”

“டேய் அவ சின்னக் குழந்தை டா….”

“நான் பவித்ராவை சொல்லலை… உங்க பெண்ணைச் சொல்றேன்.”

“உங்க அக்காவுக்கும் ஆபீஸ்க்கு டைம் ஆகும் டா… கொஞ்சம் கொடுத்திட்டு போயேன்.”

“அதெல்லாம் முடியாது. உங்க பொண்ணு இதையே வழக்கமா வச்சிருக்கா… ஒரு தடவை கொடுக்காம விட்டா தான் பார்த்து எடுத்திட்டு போகணும்னு அறிவு வரும்.” என்ற சரத் குளிக்கச் சென்றுவிட… வேறு வழியில்லாமல் மகளைக் கோமதி கைபேசியில் அழைத்தார்.

“உன் தம்பி முடியாதுன்னு சொல்றான். இப்போ என்ன பண்றது?”

“அவனுக்குத் திமிரு. சரி நானே வரேன். அப்பாவை நோட்டை எடுத்திட்டு கீழ வர சொல்லுங்க.” என்றாள் தேவி.

சரத் குளித்து அலுவலகம் செல்ல கிளம்பி வந்தவன், அவனே சமையல் அறை சென்று தட்டில் இட்லிகளை எடுத்துக் கொண்டு வந்து டிவி பார்த்தபடி உண்ண…. கீழே சென்றிருந்த கணேசன் மேலே வந்தார்.

“நோட்டு கொடுத்துடீங்களா?” கோமதி கேட்க….

“உன் பொண்ணு கையில இருந்து வெடுக்குன்னு பிடிங்கிட்டு போறா… நேத்து எல்லாம் இருக்கான்னு பார்க்காம போனது அவ தப்பு தானே… அவ வேலைக்குப் போறான்னு அவ பெண்ணை ஸ்கூல்ல இருந்து வந்ததும் நாமதான் பார்த்துக்கிறோம். அப்பவும் இப்படிப் பண்ணா எப்படி?” எனக் கணேசன் புலம்ப…

“விடுங்க நம்ம பொண்ணு தானே நாம பார்க்காம யாரு பார்ப்பா?”

“இப்படி நீ இடம் கொடுத்து கொடுத்து தான் இங்க வந்து நிற்குது.” என்ற கணேசன் உள்ளே சென்றுவிட, கோமதி மகனை முறைத்தார். அவரைக் கண்டுகொள்ளாமல் அவர் கட்டிக் கொடுத்த உணவை எடுத்துக் கொண்டு சரத் அலுவலகம் சென்றான்.

படி வழியாகக் கீழே இறங்கியவன், தரை தளத்தில் மின் தூக்கியின் வெளியே ஏழு எட்டுப் பைகள் இருக்க…. ஒரு பெண் மட்டும் நின்று எடுத்து வைத்துக் கொண்டிருக்க… சரத்தும் சில பைகளை மின் தூக்கியின் உள்ளே வைக்க உதவினான்.

அவன் அவளது முகம் கூடப் பார்க்கவில்லை. வேகவேகமாக அவன் பைகளை உள்ளே வைக்க….

“பரவாயில்லை…. நான் வச்சுக்கிறேன்.” என்று அந்தப் பெண் சொல்ல… சரத் அப்போதுதான் அவளை நிமிர்ந்து பார்த்தான். ஆள் நல்ல நிறமாக, கை இல்லாத மேல் சட்டையும், நீள பாவடையும் அணிந்து இருந்தாள். உயரம் மட்டும் குறைவு தான்.

“காலையில டைம் எல்லோருக்கும் லிப்ட் தேவைப்படும் அதுதான்.” என்றதும், “உண்மை தான்.” என்றவள், தானும் வேகமாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

சரத் எடுத்து வைத்துவிட்டு திரும்ப, அதே குடியிருப்பில் இருக்கும் வத்சலா மாமி அவனைக் குறுகுறுவெனப் பார்க்க…. எப்படியும் அவன் அம்மாவிடம் சென்று சொல்லிவிடுவார் என்று தெரியும்.

சரத் அவனது பைக்கின் அருகே சென்றபோது, தேங்க்ஸ் என்ற குரல் சத்தமாக ஒலிக்க…. திரும்பி கூடப் பார்க்காமல் சென்றான்.

அவனுக்கு வேலைக்கு நேரமாகி இருக்கும் என அவளும் புரிந்து கொண்டுவிட… அவள் மின்தூக்கியின் உள்ளே செல்ல… வத்சலா மாமியும் அவளோடு உள்ளே சென்றார். அவர் வீடு இருப்பது முதல் தளத்தில் தான். ஆனால் அவருக்கு அவள் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

அவள் மூன்றாம் தளத்தை அழுத்தவும், “த்ரீ ஜீரோ டூவா.” எனச் சரியாகச் சொன்னவர், “வேற யாரும் வரலையா?” என்றதும்,

“இல்லை நான் மட்டும் தான்.” என்றாள்.

“பேரு என்ன?”

“ஆர்த்தி.”

மூன்றாம் தளம் வந்ததும், அவள் வேகமாகச் சாமான்களை எடுத்து வைக்க…

மின்தூக்கியின் உள்ளே இருந்து வத்சலா மாமி வெளியே வந்தவர், படி வழியாகக் கீழே இறங்க… செல்லும் அவரை ஒரு நொடி புரியாமல் பார்த்தவள், பின் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

முன் தினமே நண்பர்கள் உதவியுடன் பெரிய சாமான்களைக் கொண்டு வந்து இறக்கி இருந்ததால்…. பைகளைப் பிரித்து உடைகளையும் மற்ற சாமான்களையும் அதன் இடத்தில் அடுக்கி வைத்தவள், ஹாலில் இருந்த அலமாரியில் குட்டி விநாயகர் மற்றும் லக்ஷ்மியின் சிலைகளை வைத்து விளக்கேற்றி வாசனைக்குப் பத்தியும் பொருத்தி வைத்தாள்.

அதிகச் சாமான்கள் இல்லை. அதனால் அதிக வேலையும் இல்லை. ஹாலில் இரண்டு நாற்காலிகள் மற்றும் ஒரு சின்ன மேஜை. படுக்கை அறையில் கட்டில் மெத்தை, சமையல் அறையில் குளிர்சாதன பெட்டி அது தவிரத் துணி துவைக்கச் சலவை இயந்திரம் பால்கனியில் ஒரு ஊஞ்சல் அவ்வளவு தான்.

நேற்றே நண்பர்களை வைத்துப் பொருட்களை அதற்குரிய இடத்தில் வைத்திருந்ததால்… பைகளைத் திறந்து துணிகளை எடுத்து அடுக்கியவள், அட்டைபெட்டியில் இருந்த பாத்திரங்களைச் சமையல் அறையில் வைத்துவிட்டு, கருப்பு காபி கலந்து பால்கனிக்கு எடுத்து வந்தவள், அங்கே இருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து காபியை ரசித்துப் பருகினாள்.

சிறிது நேரம் எதோ யோசனையில் இருந்தவள், அப்படியே உறங்கி இருக்க வேண்டும். கனவில் எதையோ கண்டு உடல் பதறி கண் விழித்தவள், பிறகு இருக்கும் இடம் உணர்ந்து, எழுந்து உள்ளே சென்று படுக்கையில் படுத்து உறங்கினாள்.

காலை பதினொன்று மணி போல வீடு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கோமதி கீழ் தளத்திற்குச் செல்ல….அவரை போலவே அங்கே இன்னும் சிலர் இருந்தனர். அதில் வத்சலா மாமியும் இருந்தார்.

“உங்க எதிர் வீட்டுக்குக் குடித்தனம் வந்திட்டாங்க போல…” என அவர் கேட்க….

“அப்படியா நான் பார்க்கலையே.” என்றார்.

“நான் பார்த்தேன். காலையில தான் அந்தப் பொண்ணு வந்துச்சு. உங்க பையன் தான் சாமான் எடுத்து லிப்ட்ல வச்சுக் கொடுத்தான். எல்லாம் ஒரு உதவி தானே…” என அவர் சொல்ல….

கூடப் பிறந்த அக்காவுக்கு உதவ முடியலை…. தெரியாத யாருக்கோ எடுபிடி வேலை பார்க்கிறானா… அவன் வரட்டும் என்று நினைத்த கோமதிக்கு அப்போதே ஆர்த்தியை பிடிக்காமல் போய்விட்டது.

வந்த வேலை முடிந்தது போலக் கிளம்பிய வத்சலா மாமி, “வேலைக்காரி வருவா… நான் இல்லைனா வேலை செய்யுறேன்னு பேர் பண்ணிட்டு போயிடுவா. கூடவே நின்னா தான் ஒழுங்கா வேலை பார்ப்பா. சாயங்காலம்னா பொறுமையா உட்கார்ந்து பேசலாம்.” என அவர் கோமதியிடம் சொல்ல…

“சாயங்காலம் எனக்கு முடியாது. என் பேத்தி ஸ்கூல்ல இருந்து வந்திடுவா.” என்றார்.

“தெரியுமே… சும்மா சொன்னேன்.” என்றவர் கிளம்பி சென்றுவிட… மற்றவர்கள் உட்கார்ந்து பேசினார்கள். சற்றுத் தாமதமாகத்தான் ஷ்யாமளா வந்தார்.

“வேலை எல்லாம் ஆச்சா.” எனக் கேட்டுக் கொண்டு….

இது ஒரு வருடத்திற்கு முன்பு தான் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு என்பதால்… எல்லோருக்குமே சில மாதங்கள் பழக்கம் தான். அதிலும் நிறையப் பேர், சொந்தமாக வாங்கிக்கொண்டு வந்திருக்க… எல்லாமே இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள்.

பெரிய வசதிகள் இல்லையென்றாலும், சுற்றிலும் நடக்க இடமும், குழந்தைகள் விளையாட சின்னப் பார்க்கும் உண்டு. மொத்தம் பத்துத் தளங்கள். பத்தாவது தளத்தில் சின்ன உடற்பயிற்சி கூடமும், சின்ன விழாக்கள் நடத்த பொதுவான ஹாலும் உள்ளது. மொத்தத்தில் நடுத்தர மக்களுக்கான குடியிருப்பு.

உங்க வீட்டு பக்கத்துல தான் யாரோ புதுசா குடி வந்து இருக்காங்களாமே… ஆளு எப்படி? கோமதி விசாரிக்க…

“நேத்துப் பார்த்தேன். ஒரு சின்னப் பொண்ணு மட்டும் தான். இன்னைக்குக் குடி வந்திட்டா போல… சத்தம் கேட்டது. நான் இன்னும் பார்க்கலை.”

“இவளும் மாடியில ஒருத்தி இருக்காளே…. அவளைப் போல இருக்கப் போறா…. கல்யாணம் பண்ணாமலே புருஷன் பொண்டாட்டின்னு எல்லோரையும் ஏமாத்திட்டு இருந்தாளே….”

“ஆமாம் எதோ லிவிங் டு கெதராம். கேட்டா அவங்க வீட்டுக்கு தெரியுமுன்னு சொல்றாளே… அப்புறம் என்ன பண்றது?”

“இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலை….”

இங்கே ஒரு கூட்டம் என்றால்… இன்னொரு கூட்டம் மேல் தளத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில் நடந்து கொண்டிருந்தது.

சிலர் உடற்பயிற்சி செய்ய… சிலர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

காவ்யா, “ஹப்பா இந்த மாமியாருங்க தொல்லை இருக்கே தாங்க முடியலை…. எதாவது குறை சொல்லிட்டே இருக்காங்க.”

நிம்மி,“ஆமாம்ங்க எங்க வீட்லயும் அப்படித்தான். காலையில என்னை அஞ்சு மணிக்கு எழுப்பி விட எங்க மாமியார் அலாரம் வச்சு நாலரை மணிக்கு எழுந்துக்கிறாங்க. ஏன் அதுக்கு அவங்களே வேலை பண்ணா என்ன?”

காவ்யா, “அதுதான் பண்ண மாட்டாங்களே…. வேலை பண்ணா நாம அவங்களையே வேலை பண்ண போட்டுடுவோம்னுன்னு நினைப்பு.”

ப்ரியா,“எங்க வீட்ல வேற மாதிரி பா… எங்க மாமியார் சமையல்கட்டை என்கிட்டே கொடுக்க மாட்டாங்க. அதிகாரம் கையை விட்டு போயிடும்னு பயம். ஆனா எடுபிடி வேலை மட்டும் நல்லா வாங்குவாங்க.”

சுதா,“எங்க வீட்லயும் அப்படித்தான். சமயத்துல எனக்கும் வேலைகாரிக்கும் வித்தியாசமே இல்லை.”

ப்ரியா,“இப்ப கூடக் கீழ உட்கார்ந்து நம்மைப் பத்தி தான் பேசிட்டு இருப்பாங்க.”

அதே நேரம் கீழே, “இவுங்க மேல நிஜமாவே உடற்பயிற்சி தான் செய்றாங்களா?” என்றார் பாமா.

ரேகா,“வேலையில இருந்து தப்பிக்க ஏதாவது சாக்கு வேணாமா…. என் மருமகள் பையனை ஸ்கூலுக்குப் பஸ் எத்தி விடப் போறேன் வரேன்னே… பாதி நேரம் வீட்லயே இருக்கிறது இல்ல…..”

பாமா,“ஆமாம் எங்க வீட்லயும் இதே கதை தான். கிளாஸ்க்கு கூட்டிட்டு போறேன், அப்புறம் அங்க போறேன் இங்க போறேன்னு பாதி நேரம் கூடி கூடி தான் பேசுறாங்க. இதுல வாரதுக்கு ரெண்டு பர்த்டே பார்ட்டி வேற…”

ராஜி,”இவங்களை எதாவது சொன்னா தான், உடனே அவங்க புருஷன்காரங்க வரிஞ்சிட்டு வந்திடுறாங்களே.”

அதை மட்டும் எல்லோரும் கோரசாக ஒத்துக்கொண்டனர்.

“ஷ்யாமளா, உன் பாடு தேவலை… உன் பையனுக்குத் தான் இன்னும் கல்யாணம் ஆகலையே…”

“ம்க்கும், எனக்கு நான் பெத்ததே சரியில்லை…. வர மருமகள் எப்படி இருந்தா தான் என்ன?” என்றார் ஷ்யாமளா.

மதிய உணவு வேளை வரை உட்கார்ந்து பேசியவர்கள், பிறகு அவரவர் வீட்டுக்கு சென்றனர்.

மாமியார் கவலை, புருஷன் பிள்ளைகுட்டி கவலை எதுவும் இல்லாத ஆர்த்தி, மதிய உணவை வெளியே இருந்து வாங்கி உண்டுவிட்டு மீண்டும் படுத்து உறங்கிவிட்டாள்.

சரத் மாலை அலுவலகம் முடிந்து வரும் போது நேரம் மாலை ஏழு மணி. அவன் வீட்டிற்குள் சென்ற போது, அவனது அக்கா தேவியும் இருந்தாள். மற்ற நாட்களில் வந்தால்… உடனே சென்று விடுவாள். இன்று வேண்டுமென்றே இருந்தாள்.

“ஒரு சின்ன ஹெல்ப் கேட்டேன் அது கூடச் செய்ய முடியாதா?”

“எப்பவாவது கேட்டா பரவாயில்லை… எப்பவும் கேட்டா…. உன் பெண்ணை அம்மா தான் பார்த்துகிறாங்க. வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி என்ன இருக்கு இல்லைன்னு கூடப் பார்க்க மாட்டியா?” எனப் பதிலுக்குச் சரத்தும் கேட்க….

“ஹப்பா தெரியாம கேட்டுட்டேன்ப்பா…. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி இருக்க…. இன்னும் கல்யாணம் வேற ஆயிட்டா எப்படி இருப்பியோ.” என்றாள்.

“எனக்குக் கல்யாணம் எல்லாம் ஆகாது கவலைப்படாத. நான் வாங்கிற சம்பளத்துக்கும், நமக்கு இருக்கக் கடனுக்கும், எந்தப் பெண்ணும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க வராது. அதனால அந்தக் கவலை உனக்கு வேண்டாம்.”

மகன் சொன்னதைக் கேட்ட கோமதி, “உன் வாயைக் கழுவுடா.” என்றார் கோபமாக.

“சின்ன விஷயத்துக்குப் போய் ஏன் டா இப்படி எல்லாம் பேசுற?” என்ற தேவி, “நான் வரேன் மா.” என மகளுடன் கிளம்ப….

“இரு நானே கொண்டு விடுறேன்.” என சரத்தும் அவர்களுடன் கிளம்பினான்.

வாயிலின் அழைப்பு மணி ஒலிக்க… ஆர்த்தித் துள்ளிக் கொண்டு செல்ல… அவள் எதிர்ப்பார்த்தது போல… வெளியே அவளது தோழி சுவாதி நின்று கொண்டிருந்தாள்.

“வா சுவாதி….”

“இல்லை எனக்கு வெளிய போற வேலை இருக்கு. உன்னோட ஸ்வீட்டியை விட்டுட்டுப் போகத்தான் வந்தேன்.” என ஆர்த்தியின் செல்ல வளர்ப்பு பிராணியை விட்டுவிட்டு சுவாதி சென்றாள்.

சரத் அக்காவின் வீடுவரை சென்றுவிட்டுப் பைக்கில் திரும்பியவன், அவர்கள் குடியிருப்புக்குள் நுழைய….

காலையில் அவன் பார்த்த பெண்ணின் அருகே ஒரு சின்னப் பூனை நடந்து வந்து கொண்டிருந்தது. இன்றுதான் ஒரு கேட்டே கேட் வாக் செய்யும் அழகை சரத் பார்த்தான். அதைக் கயிற்றில் பிடித்துக் கொண்டு ஆர்த்திப் பக்கத்தில் நடந்து வர…. அதன் கழுத்தில் குட்டி மணி வேறு… இவனின் நான்கு மாதம் சம்பளம், அந்தப் பூனையின் விலை.

சமூகம் பெரிய இடம் தான் போல எனச் சரத் நினைத்துக் கொண்டு சென்றான்.

இதுவரை நாயை வாக்கிங் அழைத்து வந்து தான் மற்றவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆர்த்திப் பூனையை அழைத்துக் கொண்டு வர… மற்றவர்களும் அது நடத்து வரும் அழகை பார்த்து ரசிக்க… சின்னப் பிள்ளைகள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர். அன்று அந்தக் குடியிருப்பில் எல்லோருக்கும் பொழுது நன்றாகவே சென்றது.

இனி வரும் நாட்களில்?…