“மேம் உங்களை பார்க்க ரெண்டு லேடீஸ் வந்திருக்காங்க…” என்று அவர்கள் அப்பார்ட்மென்ட் செக்கியூரிட்டி பைரவிக்கு அழைத்துச் சொல்ல,
“யார் வந்திருக்காங்க?” என்றாள் எப்போதும் கேட்பது போல.
ட்ரஸ்ட் ஆரம்பித்ததில் இருந்தே, இப்படி அவளை தனிப்பட்ட முறையில் யாரேனும் சந்திக்க வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருவதால், அப்படி யாரேனும் வந்திருக்கக் கூடும் என்று எண்ணியே பைரவி கேட்க, செக்கியூரிட்டியோ, அவர்களிடம் பெயரைக் கேட்டுச் சொல்ல, தூக்கி வாரி போட்டது அவளுக்கு.
பின்னே வந்திருப்பது ரஞ்சிதமும் செல்வியும் அல்லவா.
“உள்ள அனுப்புங்க…” என்று ஒரு படபடப்புடன் சொல்லியவள், வேகமாய் ஜன்னல் திரை சீலையை விலக்கிவிட்டு பார்க்க, மீண்டும் செக்கியூரிட்டிக்கு அழைத்தவள் “அவங்களை லிப்ட்ல அனுப்புங்க…“ என்று சொல்ல,
“ஓகே மேம்…” என்றவர் அவளின் இருப்பிடம் வரைக்குமே வந்து விட்டுச் செல்ல,
“வாங்க.. வாங்க ஆன்ட்டி.. வாங்க செல்விம்மா…” என்றவள் “உக்காருங்க…” என்று இருக்கையை காட்ட, அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் அவளின் வசதியை, வாழ்வு முறையை காட்ட, இருவருமே அமர்வதற்கு கூட யோசித்து நிற்க,
“ஆன்ட்டி பர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க.. என்ன சப்பிடுறீங்க?” என்று கேட்க, அவளை வெறித்துப் பார்த்தவர்,
“நீ உக்கார் உன்னாண்ட கொஞ்சம் பேசணும்…” என்று இறுகிய குரலில் சொல்ல, இப்போது பைரவி தயக்கமாகவே அமர, ரஞ்சிதம் அவளுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர, செல்வியோ தயங்கியே நிற்க,
ரஞ்சிதம் “என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல…” என்று கேட்க, பைரவிக்கு பக்கென்று ஆனது.
‘நான் என்னடா நினைத்தேன்…’ என்று எண்ணியவள் “எ.. என்ன ஆன்ட்டி?” என்று புரியாமல் கேட்க,
“இல்ல.. என்ன செய்யலாம்னு இருக்க?” என்று அடுத்த கேள்விக்கு போக, இந்த கேள்வியும் அவளுக்கு புரியவில்லை.
திகைத்துப் பார்க்க “ஓ! உனக்கு இப்படியெல்லாம் பேசினா விளங்காது இல்ல..” என்றவர் “என் மகன் விசயத்துல என்ன செய்யலாம்னு இருக்க..?” என்று கேட்க, இது அடுத்த திடுக்கிடலை கொடுத்தது.
“நா.. நான்…” என்று அவள் என்ன பதில் சொல்வது என்பது என்று புரியாமல் திணற,
“நீ என்னவோ பண்ணு.. ஆனா ஒன்னு, எனக்கு என் மகன் பழையபடி வேணும். முன்னமாதிரி வேணும். அவன் எங்களுக்கு செய்றான் செய்யாம போறான், ஆனா அவன் பழைய மாதிரி திரும்ப வேணும். அவ்வளவு தான். அது நீ அவனோட பேசி சரி பண்ணுவியோ, இல்ல அவனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்ந்து சரி பண்ணுவியோ அது உன்பாடு. ஆனா எனக்கு என் மகன் பழையமாதிரி வேணும்..” என்று பேச, விக்கினாள் இல்லை விரைத்தாள் இல்லை.
சொல்லப்போனால் இதெல்லாம் கனவா நனவா என்பதில் கூட அவளுக்கு சந்தேகம் வந்துவிட, அடுத்த சில நிமிடங்கள் அங்கே பேரமைதியில் கழிய,
ரஞ்சிதம் அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு என்ன தோன்றியதோ, செல்வியிடம் “அவளை தட்டி எழுப்பு…” என்று சொல்ல, செல்விக்கு இன்னும் படபடப்பு குறையவில்லை.
“பாப்பா…” என்று செல்வி உசுப்ப,
“ஆ..!” என்றவள், திரும்ப மலங்க மலங்க விழிக்க,
“என்ன முழிக்கிற? நான் சொன்னது எல்லாம் விளங்குச்சா இல்லியா?” என்றார் ரஞ்சிதம் கொஞ்சம் கடுப்புடன்.
“எ.. என்ன ஆன்ட்டி…?” என்று அவள் திரும்பக் கேட்க,
“ம்ம்ச்.. இங்க பாரு, நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. ஆனா எங்களுக்கு எங்க மகன் பழையமாதிரி வேணும்..” என்று சொல்ல,
“அ.. சி.. சிவாக்கு என்னாச்சு?!” என்றாள் பதறி.
“அவனுக்கு என்ன.. நல்லாருக்கான்.. குத்து கல்லாட்டம் இருக்கான். ஆனா என்ன சுத்தமா தூங்குறதே இல்லை. வீட்டுக்கு வர்றதும் இல்லை..” என,
“அது.. ஏதாவது வேலையா…” என்று அவள் இழுக்கும் போதே,
“ம்ம்ச் என்ன பொண்ணு நீ? இதுல லவ்வு வேற.. இத்தினி தூரம் நான் வந்து பேசுறேன்.. உனக்கு புரியவேணாமா? அவன் தூங்கியே பல மாசமாச்சு. நீ எப்போ அங்கிருந்து திரும்ப வந்தியோ அப்போ இருந்து அவன் தூங்குறதே இல்லை. ராத்திரி ஆனா அந்த புது வீட்ல போய் கொட்ட கொட்ட முழிச்சு உக்காந்துக்கிறான்..” என, பைரவிக்கு இதயம் படபடவென அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
க்ஷண நேரத்தில் அன்று நடந்தவை எல்லாம், கண் முன்னே காட்சியாய் வந்து போக, வேகமாய் இமைகளை மூடிக்கொண்டவள், அததினும் வேகமாய் மூச்சினை எடுத்து விட, ரஞ்சிதாமோ அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு, அவளின் இந்த மாற்றங்கள் புதிதாய் பட,
“இங்க பாரு, நான் உங்களுக்குள்ள என்ன ஆச்சு, அவன் ஏன் இப்படி ஆகிட்டான்னு எல்லாம் கேட்க மாட்டேன். ஆனா எங்களுக்கு எங்க மகன் முன்ன மாதிரி வேணும்..” என,
அவளோ “ஆன்ட்டி…” என்றாள் உள்ளே போன குரலில்.
“நீ என்னவோ முடிவு பண்ணிக்கோ, அவனை கூப்பிட்டு பேசுறதுன்னாலும் சரி, இல்லை, அவனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்றதுன்னாலும் சரி…” என்று இரு கைகளையும் ஆட்டி ஆட்டி ரஞ்சிதம் பேச,
நொடியில் தடுமாறிய மனதை வேகமாய் இழுத்து பிடித்து சமன் செய்தவள் “இல்ல ஆன்ட்டி.. இது.. இதெல்லாம் சரி வராது. சிவா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரு…” என்று பதில் சொல்ல,
“அவன் என்ன சம்மதிக்கிறது.. என்னை மீறி கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கான் தானே. நான் உன்னை கட்டி வச்சா வேணாம்னு சொல்வானா?” என்று ரஞ்சிதம் குரலை உயர்த்த,
“ஏன்.. ஏன் நடக்காது? வேற பொண்ணு எனக்கு பார்க்க தெரியாமத்தானா இப்படி வந்து உன்னாண்ட பேசின்னு இருக்கேன்..” என்றவர்
“எல்லாம் என் தலைவிதி…” என்று நொந்துகொள்ள, பைரவியோ கேள்வியாய் செல்வியை பார்த்தாள்.
அவரோ ‘எனக்கு ஒன்னும் தெரியாது…’ என்று சைகை செய்ய,
“அவளை இன்னாத்துக்கு பாக்குற.. நான் சொல்றேன் கேளு…” என்றவர் “சிவா, வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்…” என்று ஆணித்தரமாய் கூற,
“இல்ல ஆன்ட்டி…” என்று பைரவி மறுப்பாய் பேசவர,
“நான் சொல்றதை கேளுன்னு தான் சொன்னேன்.. உன்னை உடனே பதில் பேச சொல்லலை…” என்றவர் “எம்மவன், நான் பெத்த என் மகனா இல்லை…” என்று சொன்னவருக்கு கண்கள் கசிய,
“ஆன்ட்டி…” என்றாள் மீண்டும் திகைத்து.
“ஆமா… நீ இல்லாம அவன், அவனா இருக்க மாட்டான்…” என,
“நா.. நான்.. நாங்க.. விலகி ரொம்ப நாள் ஆச்சு…” என்று பைரவி வார்த்தைகளை தேடி பேச,
“ஆனா அவன் அப்படியில்லை…” என்றார் உறுதியாய்.
“என்ன செல்விம்மா இது…” என்று பைரவி மீண்டும் செல்வியைப் பார்க்க,
“ஏய்.. நான் பேசிட்டு இருக்கேன் நீ இன்னாத்துக்கு அவளை பாக்குற…” என்றவர் “உனக்கு நிஜமாவே என் மகன் மேல அக்கறை இருக்கா?” என,
“அக்கறை இருக்கப் போய் தானே ஆன்ட்டி, நான்… நான்.. அமைதியா என் வழியை பார்த்துட்டு இருக்கேன்…” என்றவளுக்குமே குரல் நடுங்கியது.
“மண்ணாங்கட்டி… வழியைப் பார்த்துட்டு இருக்காளாம்.. உனக்கென்னம்மா தாயி.. நல்ல ஏசி போட்டு குளுகுளுன்னு தானே இருக்க.. ஆனா.. ஆனா அவன்.. உ.. உன்ன டிவியில பார்த்தா கூட கண்ணீர் விட்டு உக்காந்திருக்கான்…” என, பைரவிக்கு கண்கள் தெறித்துவிடும் போலிருந்தது.
அப்படிதான் அதிர்ச்சியில் கண்களை விரித்தால்.
சிவா அழுதானா?!
அதுவும் அவளைக் கண்டு?!
அவன் தன்னிடம் பேச முயல்வது எல்லாம், அன்றைய தின கூடலைப் பற்றி, ஏதேனும் காரணங்கள் இப்படி சொல்வான் என்று யூகித்தே, அவள் அவனை தவிர்த்து வந்தது. நடந்தவைக்கு இருவருமே தான் பொறுப்பு. ஆனால் சிவா என்ன சொல்வான், நான் தான் எல்லை மீறிவிட்டேன் என்று பழியை அவன்மீது போட்டுக்கொள்வான்.
அதெல்லாம் வேண்டாம் என்றுதானே அவள் முழுவதுமாய் விலகி நிற்கிறாள்.
ஆனால் இப்போது ரஞ்சிதம் வந்து வேறு கதைகளை அல்லவா சொல்கிறார். அதுவும் சிவா கண்ணீர் சிந்தியதைச் சொல்ல, அவளுக்கு மனது ஒருமாதிரி வலிக்க ஆரம்பித்தது. தான் முழுவதுமாய் ஒதுங்கிப் போனால், சிவாவிற்கு எப்படியும் கொஞ்சமேனும் மனது அமைதியாகும் என்று எண்ணினாள்.
ஆனால் அவன் உறங்காமல் அங்கே இருப்பதும், டிவியில் தன்னைப் பார்த்தால் கூட கண்ணீர் வடிப்பதுமாய் இருந்தால் என்ன அர்த்தம். அவளுக்கு மனது தாளவில்லை. இப்போதே அவனைக் காண வேண்டும் போல இருக்க,
‘நோ.. நோ பைரவி.. வேண்டாம்.. நீ உன்னோட லிமிட்ஸ்ல இரு… வேண்டாம்…’ என்று அவளது அறிவு, அறிவுரை சொல்ல,
“என்னம்மா பாட்டுக்காரம்மா.. இன்னும் விளக்கமா சொல்லனுமா? சொல்றேன் நல்லா கேட்டுக்கோ. கேட்டுட்டு முடிவு பண்ணு..” என்றவர் அன்று நடந்தவைகளை எல்லாம் சொல்லி,
“உசுரு நீங்க குடுத்து இல்லைன்னா அதையும் விட்டிருப்பேன்னு சொல்றான். மனசும் உடம்பும் பைரவிக்குத்தான் சொந்தம்னு சொல்றான்.. சொல்லும்மா தாயே நீயே சொல்லு.. இதை கேட்டுட்டு எங்கனால என்ன செய்ய முடியும்..” என்று ரஞ்சிதம் அழுதுகொண்டே அவளின் முன் பேச, ஆடித்தான் போனாள் பைரவி.
‘இதென்ன இப்படி?!’ என்று அவளது மனது கதற, பதிலேதும் சொல்ல முடியாமல் அப்படியே பைரவி சிலையென அமர்ந்திருக்க,
“என்ன இப்போ கூட, அவன் அன்னிக்கு பிடிவாதமா உன்னை போன்னு சொன்னதை நினைச்சு உக்காந்து இருக்கியா?” என்று ரஞ்சிதம் கேட்க, பட்டென்று அவளுக்கு கண்களில் நீர் கசிந்துவிட்டது.
ஏற்கனவே மனது அழத் தொடங்கி இருக்க, இப்போது கண்கள் வழியாய் அது தெரிய, செல்வியோ “அச்சோ பாப்பா என்னதிது…” என்று அவளின் அருகே வர,
“நீ இன்னாத்துக்கு அழற… நாங்க தான் அழனும்…” என்று ரஞ்சிதம் சொல்ல,
“ம்ம்ம் உங்க மகனுக்கு ஒன்னுன்னதும் பேச நீங்க வர்றீங்க.. ஆனா எனக்கு எதுன்னாலும் யார் ஆன்ட்டி பேசுவா? யாரும் கேள்வி கேட்க வரமாட்டாங்கன்னு தானே இதெல்லாம் நடக்குது…” என்று பைரவியும் ஆற்றாமையில் பேசிவிட்டாள்.
நிஜம் அதுதானே..
அவளை போ என்பதற்கும், வேண்டாம் என்பதற்கும், இப்போது ஏதாவது செய் என்பதற்கும் இதெல்லாம் அவளுக்கு பெற்றோர் இருந்திருந்தாள் நடந்திருக்குமா?!
இதோ மகனுக்காக ரஞ்சிதம் வந்து சண்டையே போடுகிறார்.
ஆனால் பைரவிக்காக யார் பேசுவது?!
பைரவி சத்தமில்லாமல், அலட்டல் இல்லாமல் அவள் மனதினில் இருப்பதை கேட்டுவிட, இப்போது ரஞ்சிதத்திற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒரு கேள்வி என்றாலும் அந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது?!
ரஞ்சிதம் திகைத்துப் போய் பார்க்க “சொல்லுங்க ஆன்ட்டி, இப்போ நீங்க இத்தனை பேசுறீங்க தானே, முதல்ல இருந்தே எங்களோட லவ் உங்களுக்கு தெரியும் தானே. நீங்களும் ஓகே அப்படிங்கற போல தானே இருந்தீங்க. ஆனா நடுவில சிவாவே நான் யாருன்னு தெரிஞ்சு, என்னை அனுப்பிட்டார். அப்போ என்ன செஞ்சீங்க நீங்க? உங்க மகன் கிட்ட பேசினீங்களா? இல்லை என்கிட்டே கேட்டீங்களா?” என்று அவளும் திரும்பக் கேட்க,
“இங்கபாரு நீ இதெல்லாம் பேசாத…” என்றார் ரஞ்சிதம்.
“ஏன் பேசக் கூடாது? எதுக்கு பேசக் கூடாது?” என்று பைரவி திடமாகவே அவரிடம் கேள்வி கேட்க, அவளின் அந்த நொடி நிமிர்வு கண்டு ரஞ்சிதம் திகைக்க,
“என்ன பாக்குறீங்க? பதில் சொல்லுங்க ஆன்ட்டி, ஒருவேளை என் சார்பா யாராவது பேச வந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? என் இடத்துல இருந்து யோசிச்சு இருப்பீங்களா? என்னை அத்தனை பிடிவாதமா அனுப்பினார் தானே, நான் எப்படி தவிச்சிருப்பேன்னு நினைச்சீங்களா?” என்று கேட்க,
“ஓஹோ..! அப்போ.. அதுக்காகத்தான் என் மகன் பேச முயற்சி செஞ்சு கூட நீ இடம் குடுக்கல.. அவனை இப்படி ஆக்கணும்னு நினைச்சே எல்லாம் பண்ணிருக்க. பழிவாங்கிட்ட…” என்று ரஞ்சிதம் சொல்ல,
“யக்கா என்னக்கா நீ…” என்று செல்வி இடையில் வர,
“செல்விம்மா..” என்று அவரை நிறுத்தியவள்,
“எனக்கு இப்போவும் சிவா மேல துளி அளவு கூட கோபமில்ல. அவரோட நிலையை, உணர்வை புரிஞ்சு தான் நான் விலகி நிக்கிறேன் ஆன்ட்டி… இது தான் நிஜம். அவரை பழி வாங்கனும்னு நினைச்சா, அது நான் என்னையே அழிச்சிக்கிறதுக்கு சமம்..” என்றவளுக்கு மீண்டும் குரல் உடைய,
“அதான்.. அதான் டி.. கேக்குறேன்.. இத்தனை வச்சிருக்கீங்க தானே ரெண்டு பேரும் மனசுக்குள்ள.. உன் பக்கம் பெரியவங்க இல்லை.. இப்போ நான் சொல்றேன் தானே.. அவன கட்டிக்கோ…” என்று ரஞ்சிதம் பேச,
கசப்பாய் ஒரு புன்னகையை கண்ணீர் துடைத்து சிந்தியவள் “இது நீங்களும் நானும் முடிவு பண்றது இல்லை…” என,
“இனி என்ன? அவன் வரணுமா? நான் கூட்டிட்டு வரணுமா..” என,
“ஆன்ட்டி ப்ளீஸ்…” என்று பைரவி பேசும் போதே, வேகமாய் அவளின் கைகளை பற்றியவர்,
“நான் அன்னிக்கு சொன்னேன், உதவி பண்றேன்னு வந்து நிக்காத. உன்னோட உதவி எதுவும் எங்களுக்கு தேவையில்லைன்னு. இன்னிக்கு கேக்குறேன்.. எங்களுக்கு உதவி செய். எங்க மகனை பழைய மாதிரி திருப்பி குடு. எம்மவன் கண்ணீர் சிந்தி நாங்க பார்த்ததே இல்லை. அவன் இப்படி ஆகணும்னு தான் நாங்க இத்தினி கஷ்டப் பட்டோமா? எனக்கு என் மகன், திரும்ப வேணும். அவனோட இயல்புல வேணும். அது நீ இல்லாம நடக்காது.. எனக்கு காலத்துக்கும் இந்த உதவிய செய்…” என்றார் பாவமாய்.