அத்தியாயம் -37

சிவாவின் கண்ணீரைப் பார்த்ததும் பெற்றவர்கள் இருவரும் அப்படியே உறைந்து போயினர். இந்த முடிவு சிவா எடுத்தது தானே. பிரிவு என்பதை முடிவு செய்தது அவன் தானே. அப்படியிருக்க ஏன் அழவேண்டும் அதுவும் இப்போது.

அவள் திரும்ப வந்த போது கூட, எனக்கு இதில் ஒன்றுமில்லை என்பது போலத்தானே இருந்தாள். இப்போது சென்றும் கூட ஐந்து மாதங்கள் மேலாகி போனதே. ஆனால் இப்போது தொலைகாட்சியில் அவளைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான் என்றால்?!

சொக்கனுக்கு எல்லாமே ஓரளவு தெரிந்திருக்க, மனைவியிடம் கூட இதனைப் பேசினார் தான்.

ரஞ்சிதாமோ “அவனே வேணாம்னு சொல்லிட்டான்.. இனி இதெல்லாம் நீங்க பேசவேணாம்…” என்றுவிட்டார்.

ஷாலினிக்கு தீவரமாய் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். படிப்பு சென்றுகொண்டு இருந்தாலும், அவளின் போக்கு அன்னையாய் அவருக்குமே பிடிக்கவில்லை. ஏதேனும் வம்பு வழக்கு வந்துவிட்டால் என்ன செய்ய என்று இதோ கடந்த ஒரு மாதமாய் தான் மாப்பிள்ளை தேடும் படலம்.

அதிலும் கூட ஷாலினிக்கு சண்டை தான்.

சொக்கன் கூட “இப்போவே எதுக்கு படிப்பு முடியட்டுமே…” என்றிட,

“இல்ல இப்போ இருந்து பார்த்தா தான் ஆச்சு…” என்று ரஞ்சிதம் பிடிவாதம் செய்ய, சிவாவுமே கூட அதற்கு சம்மதித்து தான் இருந்தான்.

அவளுக்காகவது நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும். என் வாழ்வு இனி இப்படித்தான். அதனால் அவளுக்கு நல்லபடியாய் செய்யவேண்டும் என்று சொல்லி, கொஞ்சம் நல்ல இடமாகவே பார்க்கச் சொல்லி இருந்தான்.

சரி மகன் இயல்பாய் இருக்கிறான் என்றுதான் ரஞ்சிதம் எண்ணினார். ஆனாலும் அவனிடம் தெரியும் அந்த இறுக்கம் அவருக்கு புதிதாய் இருந்தது. எது எப்படி இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் சொக்கனிடம் வந்து பேசியே செல்வான்.

இப்போதோ வீடே வருவதில்லை.

இன்று வந்தவனோ கண்ணீர் சிந்த, ஆடித்தான் போயினர்.

“ஏ கண்ணு.. சிவா.. இன்னாடா இன்னாச்சு?” என்று ரஞ்சிதம் பதறி மகனிடம் வர,  வேகமாய் அழுந்த முகத்தை துடைத்தவன்,

“ஒண்ணுமில்ல…” என்று எழுந்து கிளம்பப் போக,

“நில்லுடா…” என்று நிறுத்தினார் ரஞ்சிதம்.

“ம்மா…” என்றவன் “ஒண்ணுமில்ல…” என்று திரும்பச் சொல்லி கிளம்ப,

“ஒண்ணுமில்லைன்னா என்னத்துக்கு கண்ணு கலங்கி போச்சு.. அப்படி இடுச்சு போயி குந்தின்னு இருந்த.. நீ போயிடுவ.. உங்கப்பன் கேக்குற கேள்விக்கு பதில் எவ சொல்லுவா? நில்லு டா நீ.. எங்களுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ…” என்று ரஞ்சிதம் பிடிவாதம் செய்ய,

சொக்கனும் “என்ன சிவா இதெல்லாம்?” என்றார் மகனின் நிலை புரிந்தவராய்.

“ஒண்ணுமில்ல நைனா…” என்றவன் பொத்தென்று அமர,

“பின்ன எதுக்கு கண்ணு கலங்கி போச்சு…” என்றவர் மகனின் கரத்தினை ஆதுரமாய் பற்ற,

“விடு நைனா…” என்றான் கசந்து போன குரலில்.

“விட்டுட்டா எம்மவன் வாழ்க்கை என்னாகுறது?” என்றவர் “என்னாச்சு? அந்த புள்ளயோட பேசணுமா?” என,

“என்னங்க…” என்றார் ரஞ்சிதம்..

“ம்ம்ச் நீ சும்மா இரு…” என்றவர் “சொல்லு நைனா…” என்று மகனிடம் பேச,

“பேசுறதுக்கு என்ன இருக்கு…” என்றான் உள்ளிறங்கிய குரலில்.

“இப்போ என்ன பேசின்னு இருக்கீங்க ரெண்டுபேரும்…” என்று ரஞ்சிதம் அடிக்குரலில் சீர, சொக்கன் ஒரு பார்வை தான் பார்த்தார்.

ரஞ்சிதம் மூச்சு வாங்கி நிற்க “நான் பேசிட்டு இருக்கேன்ல..” என்றவர் “சொல்லு நைனா…” என்று சிவாவிடம் பேச,

“எதுவுமில்ல நைனா.. நீ ப்ரீயா விடு.. ஒருமாதிரி இருந்தது அவ்வளவு தான்..” என்றவன் “இன்னிக்கு டாக்டர் வரலியா பிசியோ பண்ண?” என்று வினவ,

“நீ பேச்சை மாத்தாத…” என்றார் சொக்கன்.

“நிஜமா எதுவுமில்ல.. அவள பார்த்து நாளாச்சுல அதான்.. வேறொன்னுமில்ல…” என்று சொன்னவன், கிளம்பியேவிட்டான்.

அப்போதும் கூட சொக்கன் கேள்வியாய் ரஞ்சிதம் முகம் பார்க்க “என்ன இன்னாத்துக்கு பாக்குறீங்க..?” என்றார் நொடித்து.

“அவன் கண்ணு கலங்கி நான் பார்த்தது இல்லியே…” என்று சொக்கன் வருந்த,

“நானும் தான் கண்டதில்லை. பெத்த வயிறு எனக்கு எப்புடி இருக்கும்னு எனக்குத்தானே தெரியும். அம்மாக்காரி வந்து எல்லார் பொழப்பையும் கெடுத்தா.. இப்போ மகக்காரி வந்து என் மகனை இப்படி ஆகிட்டு போயிட்டா..” என்ற ரஞ்சிதம், மூளையில் அமர்ந்து கொண்டு அழ, யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாட்கள் மீண்டும் நகர்ந்து போனது தான் மிச்சம்.

ரஞ்சிதமோ வழக்கம் போல் கோவிலுக்குச் சென்றுவர, வரும் வழியில் அவரின் தூரத்து சொந்தம் ஒருவரைக் காண “என்ன ரஞ்சிதோ… வீடெல்லாம் பெருசா கட்டிட்டீங்க போல..” என்று வினவினார் அந்த பெண்மணி.

“ஆமாக்கா… அது மகனுக்கு.. எங்களுக்கு இருந்த வீடே இருக்கு. அதையும் மாத்தி கட்டியாச்சு..” என,

“எல்லாம் கேள்விப்பட்டோம். பரவாயில்ல நீ கஷ்டப்பட்டதுக்கு இப்போ நல்லது நடக்குது..” என்றவர் “மகளுக்கு வரன் பாக்குற போல…” என,

“அமாக்கா. நல்ல இடம் இருந்தா சொல்லுங்க…” என்று ரஞ்சிதமும் சொல்ல,

“இடமெல்லாம் இருக்கு.. ஆனா…” என்று இழுத்தார்.

“என்னக்கா ஆனான்னு…” என்றவர் பேசியபடி வீட்டிற்கு அந்த பெண்மணியை அழைத்து வந்தவர், குடிப்பதற்கும் டீ போட்டு குடுக்க, அந்த பெண்மணியோ பார்வையாலேயே வீட்டினையும் இப்போதைய அவர்களின் நிலையும் கண்டறிந்தவர்,

“பரவாயில்லையே…” என்றும் சொல்லிக்கொண்டார்.

“சொல்லுங்க க்கா.. வரன் இருக்கா?” என,

“இருக்கும்மா.. ஆனா அவங்க வீட்ல அண்ணன் தங்கச்சி.. இங்கன போலத்தான்.. பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கிறது போலத்தான் வேணும்னு சொல்றாங்க..” என்று சொல்ல, ரஞ்சிதம் மனது நொடியில் கணக்கு போட்டது.

இடையில் சொக்கனும் வந்து அமர்ந்துவிட, அவரிடமும் பேச்சு பகிர “இப்போதைக்கு பொண்ணுக்கு தான் பண்ணலாம்னு இருக்கோம்…” என்றார் சொக்கன்.

“அதுக்கென்ன.. முதல்ல பொண்ண குடுத்துட்டு, பேசி வச்சிக்கிட்டா கூட போதும்…” என்று அந்த பெண்மணி சொல்ல,

ரஞ்சிதாமோ திருப்தியான பாவனையோடு கணவரை பார்க்க, சொக்கனோ  “இல்லம்மா அப்படி நாமளே  முடிவு பண்ணிக்க முடியாதுல்ல…” என்று மறுக்க,  ரஞ்சிதாமோ வேகமாய் “யக்கா.. நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்.. நீங்க ஜாதகம் வாங்கிக் குடுங்க…” என்றிட, மேலும் சில நிமிடங்கள் இருந்து பேசிவிட்டே அந்த பெண்மணி சென்றார்.

அவர் சென்றதுமே, ரஞ்சிதம் “ஏங்க?” என்று அங்கலாய்ப்பாய் கேட்க,

“சிவா இதுக்கு சரின்னு சொல்வான்னு நீ நினைக்கிறியா?” என்றார்.

“அவன் என்ன ஏதாவது சொல்லிக்கிட்டே தான் இருப்பான். அவனுக்குன்னு ஒருத்தி வந்தா எல்லாம் காலப்போக்குல சரியா போகும். ஏன் இந்த உலகத்துல விரும்புனவங்களே தான் கல்யாணம் கட்டிக்கிறாங்களா என்ன?” என்று பேச,

சொக்கனுக்கும் ரஞ்சிதம் சொல்லும் எதார்த்தம் புரியாமல் இல்லை. ஆனால் சிவா மனதில் பைரவியை பிரிந்த வருத்தம் என்பதனையும் தாண்டி இன்னும் வேறெதுவோ இருக்கிறது என்று புரிய, நெற்றியை சுறுக்கி அமர்ந்திருந்தார்.

“என்னங்க?” என்று ரஞ்சிதம் திரும்பக் கேட்க,

“நீ சொல்றது சரிதான்.. ஆனா..” என்று சொக்கன் இழுக்க,

“அவனும் வாழனும் தானே. அவன் போக்குலயே விட்டா, பின்ன நம்ம எதுக்கு இருக்கோம்.. இப்போ இப்படி தான் இருக்குங்க.. அவனுக்கு ஒருத்தி, அடுத்து குழந்தைங்கன்னு வந்துட்டா எல்லாம் சரியாகிடும்…” என்றிட,

“ம்ம் ஏன் அந்த பைரவி பொண்ணு வேணாமா?” என்றார் சொக்கன் ஆழ்ந்த குரலில்.

“ம்ம்ச் வேண்டாம் சாமி.. உங்களை இப்படி பேச வைக்கவே இத்தினி வருஷம்.. போதும் அந்த பாடுக்காரிங்க சகவாசமே வேணாம்.. என் புள்ள ஒத்து வராதுன்னு யோசிச்சு தானே வேணாம்னு அனுப்பிட்டான்.. வேண்டவே வேண்டாம்…” என்று ரஞ்சிதம் மறுக்க,

“ஆனா அவன் மறக்கலியே..” என்றார் சொக்கன்.

“எல்லாம் சரியா போயிடுங்க..” என்றவர் அடுத்த கட்ட வேலைகளில் இறங்க, மறு வாரத்திலேயே, ஷாலினிக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் ஜாதகம் பார்க்க, கூடவே சிவாவிற்கும் அந்த மாப்பிள்ளையின் தங்கைக்கும் கூட ரஞ்சிதம் பார்க்க, ஜோசியரோ இவர்களுக்கு சாதகமாகவே பதில் சொல்ல, ரஞ்சிதத்திற்கு ஏகப்பட்ட சந்தோசம்.

சிவாவின் செவிகளுக்கு இவை எதுவும் செல்லவில்லை. கணவரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள, சொக்கனுக்கு பிள்ளைகள் வாழ்வில் நல்லது நடந்தால் போதும் என்றிருக்க, ஆனாலும் சிவா இதற்கு சம்மதிப்பானா என்பது அவருக்கு சந்தேகமே.

“எதுக்கும் அவன்கிட்ட ஒருவார்த்தை பேசிடு…” என்று மனைவியிடம் சொல்ல,

“முதல்ல ஷாலினி கல்யாணம் முடியட்டும். அடுத்து இதை அவனாண்ட பேசினா அவன் ஒன்னும் சொல்ல மாட்டான்…” என,

“இதெல்லாம் தப்பு ரஞ்சிதம்.. மாப்பிள்ளை வீட்டையும் நம்ம ஏமாத்தின மாதிரி ஆகிடும்…” என்று சொல்ல

“எல்லாம் நான் பாத்துக்கிறேன்…” என்று முடித்துவிட்டார் ரஞ்சிதம்.

அதன்படி மகனிடம், பொதுவாய் இப்படி வரன் என்று சொல்லி பேச, அவன் அவன் பங்கிற்கு மாப்பிளை பற்றி விசாரிக்க, எல்லாம் திருப்தியாகவே தான் இருந்தது. இதோ விடிந்தால், நாளை ஷாலினியை பெண் பார்க்க வருவதாய் இருக்க, ரஞ்சிதாமோ ஏக சந்தோஷத்தில் இருந்தார்.

சிவா, பொறுப்பான அண்ணனாய், வீட்டின் மகனாய் எல்லாம் செய்ய, ரஞ்சிதம் ஷாலினியை அழைத்துகொண்டு அழகு நிலையம் சென்றிருக்க, அவரின் அலைபேசி வீட்டினில் இருக்க, அது விடாது சிணுங்கிக்கொண்டே இருந்தது.

சொக்கன் மட்டும் இருக்கிறாரே என்று சிவா வந்து இருக்க, அம்மாவின் அலைபேசி சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கவும், அழைப்பை ஏற்று செவியில் வைக்கவுமே “அ.. ரஞ்சிதோ.. போனை எடுக்க இத்தினி நேரமா… சரி அத விடு.. நாளைக்கு மாப்பிள்ளை வந்துட்டு போகவும், நீங்க திரும்ப இங்க மாப்பிள்ளை வூட்டுக்கு வருவீங்க தான.. அப்படியே சிவாக்கும் மாப்பிள்ளை தங்கச்சிக்கு ஒப்பு தாம்பூலம் மட்டும் மாத்திக்கலாம் சரி தான…” என்று அந்த பெண்மணி பேசிக்கொண்டே போக, சிவாவிற்கு நெற்றி கண் தான் திறக்கவில்லை.

அலைபேசி இணைப்பை துண்டித்தவன் “நைனா…” என்று சத்தம் போட, சொக்கனும் அங்கே தானே அமர்ந்திருந்தார்.

திகைத்துப் போய் மகனைப் பார்க்க “என்ன நைனா இதெல்லாம்…” என்றான் சீற்றமாய்.

“எ.. என்ன நைனா…” என்று மகனிடம் கேட்க,

“என்ன நடக்குது இங்க?” என்றான் கோபத்தை அடக்க முயன்று தோற்று.

“எ.. என்னடா?!” என,

“கல்யாணம் ஷாலினிக்கு மட்டுமா இல்ல?” என்று இழுக்க, அதற்குள் ஷாலினியும், ரஞ்சிதமும் வந்துவிட சிவாவின் கேள்வி அவர்களின் செவியிலும் விழுந்தது.

ஷாலினி திகைத்து அம்மாவின் முகம் பார்க்க, ரஞ்சிதமோ “என்ன சிவா? எதுக்கு கத்தின்னு இருக்க..?” என்று இலகுவாய் பேசுவது போல பேச,

“என்ன நடக்குதும்மா? என்ன பண்றீங்க எல்லாம்?” என்று கர்ஜித்தான்.

“அ.. அண்ணா…” என்று ஷாலினி எதையோ பேச வர,

“ஏய் நீ வாய மூடு…” என்றவன் “ம்மா சொல்லும்மா…” என்றிட

“அது.. அது ஒன்னுமில்லையே சிவா.. நாளிக்கு நாமளும் அங்கன போகணும்ல…” என,

“போயி..?” என்றான் கேள்வியை.

“என்னடா? தலைக்கு மேல வேலையிருக்கு.. இன்னும் வூடு சுத்தம் செய்யல.. இந்த செழுவிய ஒத்தாசைக்கு வரச் சொன்னா, அவளும் காணோம்…” என்று பேசியபடி உள்ளே போக பார்த்தவரை, தடுத்து நிறுத்தியவன்

“என்ன நடக்குதுன்னு கேட்டேன்…” என்றான் உறுத்து விழித்து.

மகனின் அந்த பார்வையும், குரலுமே ரஞ்சிதத்திற்கு அச்சத்தைக் கொடுக்க, கணவரை ஒரு பார்வை பார்த்தவர், கையை பிசைந்து நிற்க “சொல்லும்மா…” என்றான் அடிக்குரலில்.

“அண்ணா.. இப்போ எதுக்கு அம்மாவ கத்துற.. எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் அம்மா செய்யுது..” என்று ஷாலினி படபடவென அனைத்தையும் சொல்லிட, ரஞ்சிதத்தை நம்பாமல் பார்த்தவன், சொக்கனை ‘நீங்களுமா?!’ என்று கேள்வியோடு, வேதனையாய் பார்த்தவன்

“இது நடக்காது…” என்று உறுதியாய் சொல்ல,

“சிவா…” என்றார் ரஞ்சிதம் பாவம்போல்.

“ம்மா வேணாம்.. நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க போறது இல்லை… ஷாலினிக்கு மட்டும்னா பேசுங்க.. இல்லைன்னா வேற பாப்போம்…” என்று சொல்ல,

“டேய் நல்ல இடம் டா.. வேணாம்னு சொல்லாத.. நீயும் எத்தினி காலத்துக்கு இப்படி இருப்ப.. எல்லாம் மாறிடும் சிவா…” என்று ரஞ்சிதம் சொல்ல,

“எதுவும் மாறாது…” என்றான் சிவா தீர்க்கமாய்.

“கண்ணு சொல்றதை கேளு…” என்று ரஞ்சிதம் மகனின் கைகளை பற்றிக்கொண்டு கெஞ்ச,

“விடும்மா…” என்று கைகளை உதறியவன் “என்னை கேட்காம செய்றதை எல்லாம் செஞ்சிட்டு, இப்போ என்ன மாறிடும் மறந்துடும்னு.. இப்போவும் உறுதியா சொல்றேன். எனக்கு கல்யாணம் பேசுற வேலை எல்லாம் இப்போன்னு இல்லை எப்பவுமே வேணாம்.. ஷாலினிக்கு பேசுறதுன்னா வரச் சொல்லுங்க.. இல்லன்னா வேணாம்…” என்று பேச,

“அப்போ.. உனக்கு எங்களை எல்லாம் விட, அந்த பைரவி தான் பெருசு இல்ல..” என்று ஷாலினி பேச,

“ஷாலினி…” என்று பல்லைக் கடித்தான் சிவா.

“நீ சும்மா இரு டி…” என்று ரஞ்சிதம் சொல்ல, சொக்கனோ “நீ பேசாத ஷாலினி…” என,

“ஏன்? ஏன் பேசக் கூடாது.. இவன் பேசுறான்.. நான் பேசக் கூடாதா?” என்றவள் “உனக்கு தங்கச்சிக்கு அமையுற வாழ்கைன்னு கூட யோசிக்க முடியாதா?” என்று சொல்ல,

“உனக்கு நான் செய்யாம இருக்கேனா?” என்றான் சிவா.

“ம்ம்ச் அதை விடு.. இப்போ இந்த சம்பந்தம் எல்லாமே ஓகே தானே.. ஏன் உனக்கு இன்னும் அவளை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா?” என்று பேச,

“இங்க பாரு.. அளவா பேசு…” என்றான் சிவா விரல் நீட்டி மிரட்டும் தொனியில்.

“பேசுவேன்.. அப்படித்தான் பேசுவேன்.. அவளைத்தான் கட்டுவன்னா, அதை சொல்லிட வேண்டியது தானே.. ஏன் இப்படி எல்லாம் நடந்து அப்பா அம்மாவை கஷ்டப் படுத்தனும்?” என, சிவா விட்டால் அவளை அடித்து விடுவான் போல.

ஆனால் கண்களை மூடி அவனின் உணர்வுகளை எல்லாம் கட்டுக்குள் வைக்க முனைய,

“சிவா யோசி கண்ணு…” என்று மீண்டும் ரஞ்சிதம் பேச,

“ம்மோவ் நீ தான் பெருசா எம்மவன் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டன்னு சொல்லிட்டு இருக்க.. ஆனா அண்ணன் மனசுல இன்னும் அந்த பைரவி தான் இருக்கா. அதான் இப்படி நடந்துக்கிறான்.. எல்லாம் ஆக்டிங்.. இவன் சோகமா இப்படியெல்லாம் இருந்து சீன் போட்டா நீயும் நைனாவும் சரின்னு சொல்லிடுவீங்கன்னு…” எனும்போதே, சிவா கையை ஓங்கி விட,          

“வேண்டாம் சிவா…” என்று ரஞ்சிதம் இடைபுகுந்து விட்டார்.

ஷாலினி அதிர்ந்து பார்க்க, ரஞ்சிதமோ மகனிடம் “என்ன சிவா இதெல்லாம்.. அவ.. அவ என்ன தப்பா பேசிட்டா.. பைரவி வேணாம்னு முடிவு பண்ணிட்ட தானே.. அப்போ உனக்கு ஒரு நல்லது செஞ்சு நாங்க பார்க்க வேணாமா?” என்று மகனிடம் கேட்க,

“வேணாம்…” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“எத்தினி காலத்துக்கு இப்படியே இருப்ப நீ.. அவளுக்கு ஒரு நல்ல இடம் வருதுன்னா, அவளுக்காக கூட நீ யோசிக்க மாட்டியா?” என்று கெஞ்சுவது போல் கேட்க,

“ம்மா…” என்று சத்தமாய் அனத்தியவன் “இங்க பாரு.. இந்த உசுரு நீயும் நைனாவும் குடுத்தது. அதுனால நான் உயிரோட இருக்கேன்.. ஆனா மனசு உடம்பு எல்லாம் பைரவிக்கு மட்டும் தான் சொந்தம். என்னை இப்படியே விட்டுடுங்க..” என்றவன் வெளியேறிவிட, மகன் பேசிய வார்த்தைகளில் அங்கே புகம்பம் வந்தது போலத்தான் இருந்தது அனைவரின் மனதும்.