மறுநாள் காலை ரவுண்ட்ஸ்க்கு பின் , விவேக்கை அழைத்தார் .
“ஸார்…” என்று கவலையுடன் நிற்க ,
“சஞ்சனா உடல் நிலை நன்றாக உள்ளது . ஆனால் நாம் மனதளவில் நிறைய கவனிக்க வேண்டியுள்ளது . மனநல மருத்துவருக்குப் பரிந்துரை செய்கிறேன் . நீங்கள் ஓ.பி.யாகவே அவரை பார்த்துக் கொள்ளலாம் . அடுத்த கட்ட நடவடிக்கைகள் அவர் வழிகாட்டுதல்படி செய்து கொள்ளலாம்”
“டாக்டர் சரியாகி விடுவாள் இல்லையா ?” என்று பயப்பட ,
“நிச்சயமாக நன்றாகி விடுவாள் . நம்பிக்கையோடு இருங்கள் . அதிக பொறுமை தேவை , அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் , ஆல் தி பெஸ்ட்…” என்று கை குலுக்கி அனுப்பி வைத்தார் .
டிஸ்சார்ஜ் வேலை முடிந்து , வீடு வர மாலையானது . பல வித தயக்கங்களுடன் , கண்கள் அலைபாய , வீட்டிற்குள் நுழைந்தாள் .விஜயன் வர , அவள் நடுங்க, அவரை முறைத்தபடி விவேக் உள்ளே வந்தான் .
சஞ்சுவை அறையில் படுக்க வைத்து விட்டு , இரவு உணவிற்கான விசயங்களை பார்க்க நகர ,
“கட்டாயமாக உன் கூடத் தான் இருப்பேன் , இரவு உணவு விவரங்களைப் பார்த்து வருகிறேன்..”
“அப்பா…..” என்று சஞ்சு படபடக்க ,
“அப்பா உள்ளே வரமாட்டார் , நீ நிம்மதியாக இரு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தைரியமூட்டி விட்டு வெளியே வந்தான் .
விஜயன், விவேக்கையே பார்க்க , இரவு உணவை விசாரித்தவன் , “நீங்கள் சஞ்சனா அறைக்கு எந்த காரணம் கொண்டும் போக வேண்டாம் , அவளிடம் பேசவும் வேண்டாம்.”
விஜயனுக்கு முழு விவரம் தெரியாததால் , “விவேக்….” என்று இழுக்க ,
“நீங்கள் செய்த வரைக்கும் போதும் , அவள் பக்கமே போகாதீங்க” என்றான் கோபமாக . பின், “உங்களிடம் அப்புறம் பேசுகிறேன் , எதையாவது செய்து சிக்கலை பெரிதாக்கி விடாதீர்கள்…” என்றான் கடுமையாக .
மகனின் செய்கையைக் கண்டு விஜயன் சற்று அதிர்ந்து தான் போனார் .
விவேக் சஞ்சுவிற்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு , மீண்டும் அறைக்குள் மறைந்தான் . விஜயன் தனித்து நின்றார் .இரவு சஞ்சுவோடு விவேக் படுத்துக் கொண்டான் .
“இல்லை அண்ணா , நான் பார்த்துக் கொள்கிறேன்..” சஞ்சனா சொன்ன போதும் , விவேக்கிற்குத் தைரியம் வரவில்லை . “நான் இருக்கிறேன்” என்று முடித்தான்.
அடுத்து என்ன செய்வது ? என்று யோசித்தபடி படுத்திருந்தான் .இப்போது இருக்கும் நிலையில் அப்பாவோடு எதையும் விவேக் பேச விரும்ப வில்லை. அவர் எப்படி ரியாக்ட் செய்வார் என்றும் தெரியவில்லை, மனநல மருத்துவரின் பேசிய பின் முடிவு செய்வோம் என்று கண் அயர்ந்தான்
மறுநாள் மனநல மருத்துவரிடம் செல்ல சஞ்சு பெரிதும் தயங்கினாள் .
“ஏன் அண்ணா , எதற்கு இது ? நான் நன்றாகத் தானே உள்ளேன்…” என்று பயப்பட,
“இது வெறும் ஃபார்மாலிட்டி தான் , தற்கொலைக்கு முயன்றவர்களுக்குச் செய்கிற ட்ரீட்டெமெண்ட் தான். கேஸிற்குத் தேவைப்படும்…” என்று பல சமாதானங்களைச் சொல்லி அழைத்துப் போனான் .
மருத்துவமனையில் அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு , வெளியே காத்திருந்தான் . மனதில் ஆயிரம் குழப்பம் சூழ , யாரிடம் என்ன சொல்வது , எப்படி அணுகுவது என்று புரியவில்லை தவித்து நின்றான் . யாரிடமும் பேசப் பிரியமில்லை , என்ன விளக்குவது என்றும் தெரியவில்லை . மொத்தத்தில் மூட்டுச் சந்தில் நின்றான் .
அம்மாவே துணை என்று தோன்றியது . இந்தக் கடுமையான காலத்தை , நல்லபடியாகக் கடக்க வேண்டும் அம்மா , அதற்கு நீங்கள் தான் துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நின்றான்.
ஒரு முக்கால் மணி நேரம் சென்றிருக்க , உள்ளே அழைக்கப்பட்டான் . “சில மருந்துகள் எழுதியிருக்கிறேன் , ஒரு வாரம் சாப்பிடட்டும் , அடுத்த சனிக்கிழமை மீண்டும் சந்திக்கலாம்”
விவேக் பயத்துடன் பார்க்க , “ஒன்றும் பிரச்சனை இல்லை , சி வில் பீ ஆல்ரைட் இன் டூ வீக்ஸ்” என்று தைரியமூட்டினார் .
பணம் கட்டிக் கொண்டிருக்கும் போது நர்ஸ் வந்து , “டாக்டர் மருந்து சீட்டோடு உங்களை வரச் சொன்னார்” என்று சொல்ல ,
விவேக் உள்ளே செல்ல , “உங்கள் தங்கை பற்றி பேச வேண்டும். நாளை காலை நீங்கள் மட்டும் உங்கள் தங்கையிடம் ஏதேனும் வேறு காரணம் சொல்லி விட்டு வாருங்கள்.” என்று விட்டு, மேலும் ஒரு மாத்திரையைச் சேர்த்தார் .
சஞ்சு வெளியில் படபடப்போடு , “என்ன அண்ணா ?”
“ஒரு மாத்திரை மட்டும் சேர்த்துள்ளார்…”
“அவ்வளவு தானே , ஒரு வேளை எனக்குப் பெரிய பிரச்சனை இருக்குமோ என்று நான் பயந்து கொண்டே இருந்தேன்…”
“இப்போது கூட டாக்டரிடம் கேட்டேன் , பயப்படவே வேண்டாம் என்றார்…” என்று ஆறுதல் படுத்தினான்.
“ஆமாம் அண்ணா , எதற்கு இத்தனை மாத்திரை?…”
“மன அமைதிக்கு, படபடப்பை குறைப்பதற்கு, நன்றாக தூங்குவதற்குத் தான்…” என்று விவேக் விளக்கமளிக்க,
சஞ்சுவும் சற்று சமாதனமானாள். இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்
இரவு கீத்துவை போனில் அழைத்து விவரத்தை உரைத்து, காலையில் சஞ்சுவிற்குத் துணையாக இருக்கும் படி வேண்டிக் கொண்டான் .
அவன் குரலில் இருந்து கவலையை , பயத்தை உணர்ந்தவள் , “டாக்டர் நல்லதே சொல்வார் , சஞ்சு சீக்கிரம் சரியாகி விடுவாள்” என்று தேற்றினாள் .
“ரொம்ப பயமாக இருக்கு கீத்து….”
“ஒன்றும் இருக்காது குரு…”
“ஒன்றும் இருக்காது தானே…”
“ஒன்றும் இருக்காது. நல்லதே நடக்கும்”
“ எப்படிச் சமளிக்கப் போகிறேன் என்று பயந்திருந்தேன். ஆனால் உன்னிடம் பேசியப் பிறகு , தெம்பாக உணர்கிறேன். யு ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட் கீத்து. தேங்க யூஷோ மச்” என்று உணர்ச்சிவசப்பட,
கீத்து நெகிழ்ந்தாள் .
கதைத்திரி-20 அத்தியாயம் 51
காலை கிளம்பும் முன் , விஜயனைப் பார்த்து , “கீத்து வருவாள் , அவள் சஞ்சுவோடு இருந்து கொள்வாள். நீங்கள் எந்த காரணம் கொண்டு சஞ்சுவைப் பார்க்கவோ , பேசவோ வேண்டாம்” என்றான் கடுமையாக .
“விவேக்…” என்று பேச முயல , “அப்பா, நான் எங்கே போகிறேன் தெரியுமா ?”
விஜயன் அமைதியாக இருக்க ,
“மனநில மருத்தவரிடம்…” என்றான் கோபமாக ,
“விவேக்…” என்று விஜயன் திணற ,
“எல்லாம் நீங்கள் செய்து வைத்த வேலை , இனி தயவுசெய்து நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்” என்றான் காட்டமாக .
விஜயன் அதிர்ந்து பார்க்க ,”நான் வந்து பேசுகிறேன்…” என்று நகர்ந்தான் .
விஜயன் குழப்பத்துடன் தன் அறையில் அமர்ந்தார் .
மனநல மருத்துவர் விவேக்கிடம் , “உங்க தங்கையுடன் பேசினேன் , மனதளவில் மிகவும் பயந்திருக்கிறாள் , பயம் தெளிய நாம் பெரிய போராட்டமே நடத்த வேண்டியதிருக்கும் . இந்தப் புகைப்படங்களால் வெளி உலகைச் சந்திப்பதற்கே பயப்படுகிறாள். யாராவது தன் புகைப்படங்களை பார்த்திருப்பார்களோ ? தன்னை அசிங்கமாக நினைபார்களோ? என்று ஒவ்வொரையும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கிறாள் . சமூக வளைதளங்களைப் பயன்படுத்தவே அஞ்சுகிறாள்…”
விவேக் ஆழ்ந்து கவனிக்க,
“வழக்கில் நல்ல முடிவு வந்தால் , புகைப்படங்கள் அழிக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கை வந்தால் , இனி வெளியேவே வராது என்ற தைரியம் வந்தால் , இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வருவது மிகவும் எளிதாக நடந்து விடும்.”
“காவலர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள் டாக்டர்…”
“ரொம்ப சந்தோஷம் . ஆனால் நாம் மற்ற சாத்தியங்களையும் யோசிக்க வேண்டும் . வழக்கு முடிய தாமதமானால் , நாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முடிவு செய்ய வேண்டும் . எதார்த்ததைப் புரிய வைக்க வேண்டும். இந்தக் காலத்தில் இதைத் தவிர்க்க முடியாது , ஷோசியல் மீடியாவில் எல்லா குப்பைகளும் இருக்கிறது , உன் விஷயம் எல்லாம் பெரியது கிடையாது என்று புரிய வைக்க வேண்டும்.”
மேலும், “எல்லோர் கையிலும் கேமிரா இருப்பதால் , இந்த மாதிரி சம்பவங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் . இதெல்லாம் மிகவும் சகஜம் . தவிர்க்க முடியாது என்று புரிய வைக்க வேண்டும்.”
விவேக் எந்த குறுக்கீடும் செய்யாமல் , டாக்டர் சொல்வதை ஆழ்ந்து கேட்டான் .
“பழங்கருத்துக்களைத் தூக்கிச் சுமக்காது , நடைமுறையில் என்ன சாத்தியம் என்பதைப் பற்றி அவளை யோசிக்கும்படி செய்ய வேண்டும்..” என்று டாக்டர் நீண்ட உரையாற்ற,
“நாங்கள் என்ன செய்ய வேண்டும் டாக்டர் ?”
முதலில் இதற்கு குடும்பம் உறுதுணையாக இருக்க வேண்டும் , பொறுமையாக சஞ்சனாவை கையாள வேண்டும் . மிகவும் கவனத்துடன் , சொல்லப்போனால் கண்ணாடி பாத்திரம் போல் கையாள வேண்டும் . எந்த வார்த்தை , எந்த செயல் அவர்களைத் தூண்டும் என்று தெரியாது , அப்படி எதுவும் நடந்தால் , மீண்டும் தற்கொலைக்கு முயல வாய்ப்பு உள்ளது…”
“டாக்டர்” என்று விவேக் பதறினான் .
“இதில் பதறுவதற்கு ஒன்றுமில்லை , யதார்த்ததை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டால், நடைமுறைக்கு எளிதாக இருக்கும் என்பதால் பட்டவர்த்தனமாகப் பேசுகிறேன்…”
“அவளின் காயங்கள் டாக்டர்… “என்று இழுத்தான்,
“இது முதல் செஷசன் , எல்லாவற்றையும் சொல்லிவிட மாட்டார்கள் , முதலில் மனநல மருத்துவரை பார்ப்பதிலே பெரிய மனத்தடை இருக்கும் . அதை அவர்கள் கடக்க வேண்டும் , அதன் பின் , என் மீது நம்பிக்கை வர வேண்டும் , அப்புறம் தான் மெதுவாகப் பேசுவார்கள்….”
பின், “உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருக்கிறதா?”
அன்று நடந்த அத்தனை விடயங்களையும் , விவேக் பொறுமையாக விளக்க , அனைத்தையும் கேட்டுக் கொண்டார் .
மேலும் டாக்டர் , சில பல கேள்விகளைக் கேட்டு குடும்பச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டார் .
“உங்கள் அப்பாவிடம் எச்சரித்து விடுங்கள் , நடைமுறை சிக்கல்களை விவரித்து விடுங்கள் . முடிந்த வரை உங்கள் அப்பாவை தள்ளியே இருக்கச் சொல்லுங்கள்.”
“சரி டாக்டர் , நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?”
“மனதிற்கு இதமான இசை , நல்ல படம் , நண்பர்கள் , நல்ல புத்தகம் , சுயமுன்னேற்றம் பற்றிய பேச்சுகள் , விளையாட்டு என்று எது வேண்டுமானாலும் முயலுங்கள்…”
“ஓ.கே. டாக்டர்…”
“ஆனால் அவர்களுக்கு ஒருமுகப்படுத்துதல் கொஞ்சம் சிரமமான விசயம் தான் , ஆனால் பொழுதைப் போக்குவதற்கு , பழைய எண்ணம் வராமல் இருக்க , மனதை எதாவது ஒன்றில் திருப்பி விடத் தான் வேண்டும் . முயன்று பாருங்கள்.அவர் நன்றாக வரைவேன் என்றாள், அதை முயன்று பாருங்கள் , மிகவும் உதவும்…” என்று நினைக்கிறேன் .
“சரி டாக்டர் , முயலுகிறேன்…” என்று கிளம்ப முனைய,
“தைரியமாக இருங்கள் , மிக முக்கியமாக பொறுமை அவசியம். உங்கள் தங்கை நிச்சயமாக நன்றாகி விடுவாள்…”
வெளியே வந்தவன் , சற்று நேரம் சிந்தித்தான் . கீத்துவை அழைத்து , “நேரமாகும் போல் தெரிகிறது , சஞ்சுவைப் பார்த்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டான் .
“இது ஒரு கேள்வியா குரு ? நான் பார்த்துக் கொள்கிறேன்..” என்று கீத்து உறுதியளிக்க ,
“சரி , சஞ்சுவிடம் கொடு”
“என்ன ஆச்சு அண்ணா ?”
“வேலை முடியவில்லை சஞ்சு , நான் வரத் தாமதமாகும். நான் வரும் வரை, கீத்து உன் கூட இருப்பாள்.”
“சரி அண்ணா”
“என்ன செய்கிறாய் ?”
“கீத்து ஒரு ரொமான்டிக் காமெடி கொரியன் சீரியல் டவுன்லோட் செய்து கொண்டு வந்திருக்கிறாள் . அதை லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..”
“சரி , மதிய உணவிற்குப் பின் , ஓய்வு எடுத்துக் கொள். மாத்திரைகளை மறக்காமல் சாப்பிடு , சீக்கிரம் வந்து விடுகிறேன் . கீத்துவிடம் போனை கொடு.”
“என்ன குரு ?”
“பார்த்துக்கோ , ரொம்ப நன்றி கீத்து.”
விவேக்கின் குரலில் வேறுபாட்டை உணர்ந்தவள் , சற்று தள்ளி வந்து, “எதுவும் பிரச்சனையா ?”
“ம்ம்… , நிறைய பேச வேண்டும் , நிறைய யோசிக்க வேண்டும் . இப்போது வேண்டாம் , தனியாகப் பேசினால் சஞ்சு பயப்படுவாள். நான் இரவு அழைக்கிறேன்…” என்று போனை வைத்தான்.
உடனே அப்பாவை அழைத்து , மதிய உணவை முடித்து விட்டு , தன் நண்பன் வீட்டுக்கு வருமாறு , முகவரியை அனுப்பி வைத்தான்.