கருணா அந்த நொடிகளை அனுபவித்தான்.. பின் இருவரின் சிகை வருடி “சுபி.. எல்லோருக்கும் கேக் கொடுக்கிறாங்க பாருங்க.. போய் ஹெல்ப் பண்ணுங்க.. ம்..” என்றான்.

பிள்ளைகள் விரைந்தோடியது.

மெல்ல மெல்ல.. வளர்கிறது குடும்பம்.

சங்கீதாவின் மகள் அனன்யாவின் காதுகுத்து வைபவம், திண்டிவனம் அருகே. அவர்களின் பரம்பரை தோட்டத்தில்.. அவர்களின் குலதெய்வம் இருக்கும். கோவிலாக கட்டி சிறப்பாக எல்லோரும் வழிபட்டு வருகிறார்கள். அந்தவகையில் அங்கே விழா ஏற்பாடுகள் தொடங்கியது.

கார்த்திக் வெளிநாட்டிலிருந்து வந்து ஒருவாரம் ஆகிற்று. அனன்யா தனக்கு எதோ நடக்கிறது என உணர்ந்து.. அழுதுக் கொண்டே இருந்தாள். மூன்று வயது ஆகிவிட்டது குழந்தைக்கு, அதனால் விவரம் தெரிய.. அழுகை அதிகமாகத்தான் இருந்தது.

சுபிக்ஷா, முதல்நாளே தன் அன்னை தந்தையோடும் பிள்ளைகளோடும் வந்துவிட்டாள். லக்ஷ்மியின் குலதெய்வமும் இதுவே, அதனால், அவளுக்கு பழக்கமான இடம் உறவுகள் என்பதால் முதலிலேயே வந்துவிட்டாள்.

கருணா இப்போது காலையில்தான் கிளம்பியிருக்கிறான், தன் பெற்றோர் தங்கையோடு. 

சுபி, தங்களின் சார்பாக சீர் வரிசைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள், அன்னையோடு இணைந்து.

ஸ்ரீதர்.. வினு பிள்ளைகள் என வந்து சேர்ந்தனர். மற்ற உறவுகள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருந்தனர். 

நர்மதா, தன் கணவர் குழந்தையோடு வந்து சேர்ந்தாள். சுபியை பார்த்ததும் ஆசையாக தன் அண்ணியை கட்டிக் கொண்டாள்.. “எப்படி இருக்கீங்க அண்ணி, எங்கே.. எங்கள் அண்ணன்” என உரிமையாக கருணாவை வினவினாள். இப்போதுவரை.. லக்ஷ்மியின் சொந்தத்தில்.. கருணாவை உண்மையாக உறவாக ஏற்றது இவள் மட்டுமே. அதனால் அடிக்கடி பேசுவாள்.. சுபியிடம். இப்போதும் அப்படியே.

சுபியின், முன்னாள் மாமனார் தனியாக வந்தார். ஸ்ரீதர்ரோடு வரவில்லை. வீரா தனியாக சின்னதாக ‘கட்பீஸ் க்ளோத்’ கடை வைத்துவிட்டான். அதனால், இவர்களோடு வருவதில்லை. வீரா மனைவி மகனோடு வந்துவிட்டான் இப்போது.

சுபியின், தன் முன்னால் மாமனாரை வரவேற்றாள்.. அவர் முகம் கொடுத்து பேசவில்லை.. சுபி ஏதும் காட்டிக் கொள்ளவில்லை.. விசாகனை அழைத்தாள்.. சத்தமாக. அவன் வர.. “தாத்தா வந்திருக்காங்க பாரு” என அவள் சொல்ல சொல்ல.. விசாகன் “தாத்தா” என ஓடி வந்த வேகத்தில் அவரை கட்டிக் கொண்டான். விசாகனை அழைத்தால்.. குரு கண்டிப்பாக கூடவே வருவானே அவனும் வந்து நின்று.. விசாகனை தாத்தாவிடமிருந்து கொஞ்சம் பாதுகாத்தான். 

ஆனால், அந்த பெரியவரின் முகம் கசங்கி “இந்தாடா பயலே” என்றார் சட்டென குருவை பார்த்து.

சுபி உடனே “குரு..” என அழைத்து சின்ன குரலில் “அப்பாக்கு போன் பண்ணு இன்னும் காணோம்” என சின்ன குரலில் சொல்லிக் கொண்டே அவனை கூட்டி சென்றாள், கை பிடித்து.

குரு “ஏன் ம்மா.. எனிதிங் வ்ரோங்” என்றான் உடனே. குரு உடனே சிலதை கண்டுக் கொள்வான். அவனிடம் மறைக்கவும் முடியாது.. சொல்லவும் முடியாமல்.. இதே போல சுபி நிற்கும் இடங்களும் நிறைய இருந்ததுண்டு. இப்போது சுபி “இல்ல.. இல்லை.. நான் வெயிட் பண்றேன்.. அதான்” என்றாள் புன்னகையோடு.

குரு, விசாகனோடு இருந்த பெரியவரை பார்த்தான்.. இப்போது அன்னையை பார்த்தான். ஆறாம் வகுப்பு வந்துவிட்டான்..  நன்றாகவே வளர்ந்துவிட்டான். அன்னையின் பார்வையை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தானே அன்றி.. தன் தந்தைக்கு அழைக்கவேயில்லை. 

சுபி “சல்லோ பேட்டா..” என புன்னகையோடு அவனின் சிகை வருட.. குரு அதற்கு அடிமையாச்சே.. அதனால், தன் அன்னை சொன்னதை,  யோசிக்காமல் செய்தான், அதான் தந்தைக்கு அழைத்தான்.

சுபியின் சித்தப்பா பையனின் மடியில் அமரவைத்து அனன்யாவிற்கு முடியிறக்கினர். பிள்ளை அழுது அழுது துவண்டு போகிற்று. பசங்க நால்வரும் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். அப்படியே மரத்தடியில் காற்றாட பிள்ளையை குளிக்க வைத்து.. அண்ணன்கள் துணையோடு அவளுக்கு உடைகள் மாற்றி அழைத்து வந்தாள் சங்கீதா. கார்த்திக், நீண்டநாள் சென்று வந்திருப்பதால்.. உறவுகளிடம் நின்று பொறுமையாக பேசிக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் கரண் வந்து சேர்ந்தான் எல்லோரோடும். சங்கீதாவும் கார்த்திக் அவர்களின் பெற்றோர் என எல்லோரும் குடும்பமாக வரவேற்றனர் கருணாகரன் குடும்பத்தினை.

சுபி வந்து நின்றாள், கண்களால் கணவனை வரவேற்றாள். கருணாவும் அவளின் வரவேற்பினை ஏற்று.. தலையசைத்தான். இருவர் முகத்திலும் சிருங்காரப் புன்னகை.

தன் மாமியார் மாமனார்.. சாரதா பிள்ளைகள் என எல்லோரிடமும் பேசிக் கொண்டே உள்ளே சென்றாள்.

குழந்தைக்கு காதுகுத்தி.. பூஜைகள் முடிந்து.. விருந்து படலம் தொடங்கியது.

வீரா, கருணாவிடம் வந்து பேசி நலம் விசாரித்து சென்றான். 

நர்மதா, சுபியோடு வந்து கருணாகரனிடம் பேசி சென்றாள். சுபியின் புன்னகைமுகம் வாடவேயில்லை.. முன்னாள் மாமனார் பேசவில்லை எனும் போதுகூட.. சுபி எல்லாம் செய்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தாள். கருணா, அவளை அடிக்கடி ஆராய்ந்தான்.. அவளின் முன்னாள் மாமனார் வந்திருப்பதால். ஆனால், தன்னவளின் முகத்தில் ஒரு நிதானம் இருப்பதை கவனித்துக் கொண்டான். 

இந்த சுபியின் புன்னகை முகம்தான்.. மாசிலாமணி தம்பதிக்கு.. அவளின் அன்னை தந்தைக்கு.. மனதில் நின்றது. எவ்வளவு பெரிய துயரம்.. கருணாவின் பெரியரில் அதற்கு முடிவு வந்ததில் இப்போதுவரை.. சுபியின் பெற்றோருக்கு நன்றியுண்டு.. மரியாதையுண்டு. அவளின் பெற்றோருக்கு, இப்போது வரை.. அதே பார்வைதான் கருணாவின் மேல்.. மாசிலாமணி தம்பதிக்கு. கருணா அதை மாற்ற நிறைய முயலுவான். ஆனால், பெண்ணை பெற்றவருக்கு.. சட்டென மாற்றம் வரவில்லை. சுபிதான் “கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளட்டுமே.. அம்மா அப்பா சந்தோஷமாதான் இருக்காங்க.. அதனால், அந்த மரியாதை. அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.. அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதியாகும்” என்பாள். 

கருணாவிற்கு, அதில் உடண்பாடில்லை.. “அவர்கள் பெண் வாழ்க்கை மட்டும் நேராகவில்லையே.. என்னுடைய கோணல்மாணலான வாழ்க்கையும்தானே நேராகி இருக்கிறது” என்பான்.

சுபி “சரி.. நீங்களாட்சி என் அப்பா ம்மா ஆச்சு.. எப்படியோ பாருங்க.. எப்படியோ பேசுங்க” என சொல்லி எழுந்து சென்றிடுவாள். 

இப்போதும் மாசிலாமணி.. மருமகன் கருணாவை “சாப்பிட வாங்க மாப்பிள்ளை” என்றார்.

கருணா “மாமா.. கருணான்னு கூப்பிடுங்க போதும்.. இன்னும் என்ன மாப்பிள்ளைன்னு” என்றான், தயக்கமாக. மனையாளை பாவமாக எட்டயிருந்தே பார்த்தான். 

சுபியோ “வாங்க வாங்க..” என உண்பது போல சைகைசெய்து கணவனை அழைத்தாள்.

கருணா, மனையாளை முறைத்துக் கொண்டே எழுந்து சென்றான் உண்பதற்கு.

மாசிலாமணி விடாமல் “எப்போதும் அப்படிதானே மாப்பிள்ளை, வாங்க.. சாப்பிட்டு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என சொல்லி விடாமல் அழைத்து சென்றார்.

கருணாகரன் குடும்பமாக அமர்ந்து உண்டனர்.. சுபி பிறகு உண்கிறேன் என்றுவிட்டாள்.

நேரம் கடந்தது. கருணாகரன்.. மாலை வரை இருந்து.. சுபி பிள்ளைகளை அழைத்துக் கொண்டுதான் சென்னை வந்து சேர்ந்தான். அவனுக்கு, இந்த இரண்டுநாளும்.. வீட்டிலிருக்கவே பிடிக்கவில்லை என காரில் வரும் போது ரகசியகுரலில் மனையாளிடம் கதைபடித்தான்.

சுபி “இல்லையே.. ரிசாட்டிலிருந்து வீடு வரவேயில்லை நீங்க.. ம்.. நிம்மதியா இருந்ததாக கேள்வி” என்றாள்.

கரண் “யாருடி சொன்னாங்க.. அது நிம்மதியா வேலையை பார்த்தேன். ஆனால், இந்த பீல் வேறதானே..” என சொல்லி அவளின் கைபற்றிக் கொண்டு, தன் இதயத்தின் அருகில் வைத்துக் கொண்டு “இதை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றான் இன்னும் ரகசிய குரலில். சுபியும் அவனின் இதயத்தின் ஓசையை உணர்ந்தாள்.. மெதுவாக அவனின் கன்னத்தை மென்மையாக வருடியவள் “கரண்.. பசங்க.. கண்டிப்பா எழுந்திடுவாங்க.. போதும்” என்றாள்.

கரணின் விரல்கள் அவளை விடுவித்தாலும்.. கடைக்கண்களால்.. அவளை பார்த்து பாடிக் கொண்டே வந்தான்..

“உன் விழிகளிலே ஓஹோ..

நான் வாழ்கிறேன் பெண்ணே..

உன் கனவுகளாய் ஓஹோ..

நான் மாறினேன் பெண்ணே..”

விசாகன் குரு இருவரும் அசந்து உறங்க.. கணவன் மனைவி இருவரும்.. நீண்ட தூர பயணத்தை பொறுமையாக ரசித்து.. களித்து.. நிதானித்து கடக்கின்றனர்.

$$சுபம்$$