குரு விசாகன் படிக்கும் பள்ளியிலிருந்து மாலை மூன்றுமணிக்கு அழைப்பு.. கருணாகரனுக்கு.. “இன்று நீங்கள் குருவை வந்து கூட்டி செல்லுங்கள்..” என.
கருணா, தான் ரிசார்ட்டில் இருப்பதால்.. மனையாளிடம் அழைத்து சொன்னான்.. சுபி “மாமாகிட்ட சொல்லுங்களேன்” என்க.
கரண் “இல்லை சுபி, எதோ விஷயம் இருக்கு.. பிரச்சனை போல.. இல்லைன்னா.. கூப்பிடமாட்டாங்க. நீ போய் கொஞ்சம் பேசி சமாளி.. நான் வர முன்னபின்ன ஆகும், வந்திடுவேன்” என்றான்.
சுபி கிளம்பினாள்.. பள்ளியில் சென்று பார்க்க.. குருவின் கன்னம் வீங்கி இருந்தது.. கையில் அடி.. ஷர்ட் பாகெட் கிழிந்திருந்தது. அத்தோடு.. விசாகன் இருந்தான்.. முட்டியில் காயம்… நெற்றியில் லேசான அடி அப்படியே பிள்ளைகள் வெறித்து பார்த்து அமர்ந்திருந்தனர்.
அப்படியே எதிர் திசையில் இருபிள்ளைகள் பெற்றோரோடு.. இதே போன்று காயங்களோடு அமர்ந்திருந்தனர்.
சுபி, தம் பிள்ளைகள் இருவரிடமும் சென்றாள் முதலில்.. இருவரிடமும் விசாரிக்க.. இரு பிள்ளைகளும் பயமேயில்லாமல் இருந்தனர், அதுதான் அன்னைக்கு பயமாக இருந்தது. விசாகன் “ம்மா, குருவினை அடித்திருகிரார்கள்.. பாருங்க” என்றான்.
குரு “விசாகனையும் அடிக்கிறாங்க.. அவன் சின்ன பையன்தானே.. நான்தான் தெரியாமல் பாலில் அடித்துவிட்டேன்” என சொல்லி நடந்ததை சொல்லி.. முறைத்துக் கொண்டே நின்றனர்.
சுபிக்குதான் பயம்.. பிள்ளைகள் இருவரும் அப்படியே நின்றனர். நல்லவேளையாக கருணாகரன் வந்துவிட்டான், இப்போது.
ஆசிரியர்கள் நடந்ததை சொல்லினர்.
வகுப்பிற்கான விளையாட்டு பயிற்சி.. குரு புட்பால் விளையாடும் போது.. அவன் வகுப்பு பையன்மேல் பால் விழுந்து, அடி அவன் வலது தோள்பட்டையில் அடி.. வலி, அந்த பையனுக்கு. அந்த பையனின் நண்பன் அந்த கோவத்தில்.. குருவை அடிக்க.. அதை தடுக்க.. அடிவாங்கிய பையனும் சேர்ந்து அடித்திருக்கிறார்கள், குருவும்.. அடித்திருக்கிறான்.. அவர்களை. ஆக, மூவருக்கும் காயங்கள்.
இதெல்லாம் விளையாட்டு வகுப்பில் முடிந்துவிட்டது. ஆனால், பள்ளி மாலையில் விட்டதும்.. விசாகன், குரு பேருந்தில் ஏறும் போது பார்த்துவிட்டு.. நேராக போய்.. அந்த இரு பசங்களையும் வயிற்றில் குத்தியிருக்கிறான். அவர்கள் சும்மா இருப்பார்களா.. அவர்களும்.. விசாகனை அடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சட்டென நடந்துவிட்டது.. ப்யூன்.. டீச்சர்கள் பார்ப்பதற்குள்.
நான்கு மாணவர்களுக்கும் அடி.. பள்ளியில் ஆசிரியர்கள் முதல் எல்லோருக்கும் ஒரு ப்ரைடே நடந்தது, முதல்வரிடம். அடுத்து பெற்றோருக்கு.. என நான்கு மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து பேசினார்.
சுபிக்கு, பயம்.. இரு பிள்ளைகளும் சாது.. எப்படிதான் அந்த பிள்ளைகளை இப்படி அடித்திருக்கிறார்களோ.. எனதான் பதறுகிறது அவளின் மனம்.
கருணா, சாதரணமாக இருந்தான்.. ‘நாலு பிள்ளைகளும் சண்டை போட்டுகிட்டாங்க அவ்வளவுதானே..’ என்ற பாவனையில் இருந்தான். மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் சாரி சொல்லிக் கொண்டனர். பெற்றோர்களிடம் இனி இப்படி நாடக்காது என உறுதிமொழி கூற வைத்தனர், நிர்வாகத்தினர். கருணா, அதையெல்லாம் பணிவாக செய்தான்.. அடித்த பிள்ளைகளின் பெற்றோரிடமும் ‘அதனாலென்ன.. சின்ன பசங்க.. எல்லாம் சரியாகிடும் விடுங்க’ என பேசினான். மேலும் அந்த இரு பிள்ளைகளின் சிகை வருடி நட்புணர்வோடு விடைபெற்று வந்தான்.
சுபி, விசாகனிடமும் குருவிடமும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அத்தனை கோவம் அவளுக்கு.. எப்படி அடுத்தவர்கள் மேல் கைவைக்கலாம் என.. பிள்ளைகள் அடிபட்டிருப்பதை கூட கவனிக்காமல் முறைத்துக் கொண்டிருந்தாள்.
விசாகன் “ம்மா..” என அருகில் வந்தபோது கண்டுக் கொள்ளவேயில்லை.. கருணா, எல்லோரிடமும் பேசிவிட்டு வர.. சுபி “நான் கிளம்புகிறேன்.. வந்து சேருங்க” என சொல்லி கோவமாகவே வீடு வந்தாள், தன் காரெடுத்துக் கொண்டு.
கருணா, கண்களால் என்னவென இருவரிடமும் கேட்க்க.. விசாகன் அன்னையின் கோவத்தில் கேவிக் கொண்டே.. கண்ணில் நீரோடு ‘தூக்கு’ என இரு கைகளையும் விரித்தான் கருணாவை பார்த்து. கருணா, குருவை தூக்கிக் கொள்வது போல.. தன் நெஞ்சில் ஏந்திக் கொண்டான் விசாகனை “அழாத.. வீட்டுக்கு போனதும் சரியாகிடுவா உங்க அம்மா.. பேசிக்கலாம்.. வா.. “ என அவனுக்கு அடிபட்ட இடத்தில் அழுத்தாமல் அப்படியே காருக்கு சென்று அமரவைத்து.. குருவிடம்.. அவனின் கை கன்னம் என இருந்த காயத்தினை ஆராய்ந்து “பொறுமையா இருக்கறதில்லையா குரு” என சொன்னவன் “போலாமா” என கேட்டு காரெடுத்தான்.
வழி நெடுக கருணா “ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணலாமா.. என்ன வேண்டும்” என பிள்ளைகளின் மூட் மாற பேசிக் கொண்டே வந்தான்.
ஆனால் சுபி, வீட்டில் வந்ததும்.. கொட்டி தீர்த்துவிட்டாள்.. பிள்ளைகளிடம் “எதுக்கு அடிக்கிறீங்க.. உங்க பிரெண்ட்ஸ் மேலேயே கை வைத்து அடிச்சிரீக்கீங்க, அது தப்பு.. பால் தெரியாமல் பட்டுவிட்டது சாரின்னு மட்டும்தானே சொல்லியிருக்கணும்.. ம்..” என குருவிடம் கேள்வி, விசாகனிடம் “அதென்னடா, நீ போய் அடிப்பது. அவர்களை விட எவ்வளோ சின்ன பையன் நீ.. கொஞ்சமாவது விவரம் வேண்டாம்.. அண்ணாக்கள் மேல இப்படிதான் கைவைப்பீயா.. ” என பசங்களை தீட்டி தீர்த்தாள்.
குரு விசாகன் இருவரும் பாவமாக தந்தையையும் தாத்தாவையும் பார்க்க.. கருணா அருணகிரி இருவரும் ஏதும் சமாதானம் சொல்லவில்லை.
கருணாவிற்கு, இதெல்லாம் பெரிய விஷயம் இல்லையென்றாலும்.. பிள்ளைகள் மனதிலும் பயம் வேண்டும் என அமைதியாக இருந்தான்.
அருணகிரி பிள்ளைகளிடம் ‘அடிக்க கூடாது.. எதுவாக இருந்தாலும் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும்’ என.. சுபியின் வழியிலேயே சொல்லினார்.
குரு விசாகன் இருவரும் அமைதியாக நின்றனர். சுபியின் கோவம் கொஞ்சம் மட்டுப்பட..
கருணா “சுபி, காயம் ஆகியிருக்கு, கொஞ்சம் அதையும் என்னான்னு பாரு.. எல்லாம் சரியாகிடுவாங்க” என்றான்.. ஒருமணிநேரம் முடிந்து.
சுபி, அதன்பிறகே பிள்ளைகளை கவனித்து.. அவர்களுக்கு வயிற்றுக்கு கொடுத்து.. காயம் ஆராய்ந்து.. மாத்திரைகள் மருந்துகள் கொடுத்தாள்.
வீட்டில் சத்தமே இல்லை.. டிவி சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது விசாலாட்சி வரும்வரை. அவர் பிள்ளைகளை பார்த்ததும் ‘என்ன ஏது’ என கேட்க்க.. சுபிக்கு மீண்டும் கோவம் வர.. பிள்ளைகளுக்கு மீண்டும் ப்ரைட் நடந்தது.
சுபிக்கு அந்த நாள் முழுவதும் வேலை ஓடவில்லை. குறும்பு செய்பவர்கள்தான்.. தெருவில் விழுந்து வைத்து வருவார்கள்.. எதையேனும் தொலைத்துவிட்டு வருவார்கள்.. ஆனால், இப்படி ஒருவரை அடித்துவிட்டு வந்ததில்லை இருவரும். அதனால், அன்னையாக பயம், அவளுக்கு.
கரண்தான் இரவில் மனையாளை தேற்றும்படி ஆகிற்று. இப்படியான நிகழ்வுகள்தான் அவர்களுக்கு கொஞ்சம் பயத்தினை தந்தது. ஆனால், கரண் சுதாரிப்பாகவே இருந்தான்.
குருவின் பிறந்தநாள்.
இந்த வருடமும் சாரதா மூலமாக.. லாவண்யாவிடமிருந்து அழைத்து வந்தது ‘குருவினை.. நான் பார்க்க வேண்டுமென..’ என.
சாரதா, விசாலாட்சி எல்லோரும் சுபியின் பதிலுக்காக ஏதும் பேசாமல் இருந்தனர்.
கருணா, சுபியிடம் பேசிவிட்டே சாரதாவிடம் பதில் சொன்னான். எந்த மறுப்பும் சொல்லவில்லை சுபி.. அன்னை என்பது எந்த காரணத்திற்காகவும் மாறாதுதானே.
விசாலாட்சி சுபியிடம் “போதும்.. இதெல்லாம் சரிபட்டு வராது. கொஞ்சம் கொஞ்சமாக வேண்டாம்ன்னு சொல்லிடு” என எச்சரித்தார். அவருக்கு கோவமும் பயமும் இருக்காதானே செய்யும்.
சுபியும் சரி என சொல்லி கேட்டுக் கொண்டாள்.
லாவண்யா, ரிசார்ட்டில் வந்து குருவினை பார்த்தாள். அஹ.. குருதான் வளர்ந்துவிட்டான்.. இப்போது அன்னையிடம் நன்றாக பேசுகிறான். குட்டி பாப்பாக்கு என சுபி வாங்கி தந்திருந்த உடைகளை பரிசளித்தான். லாவண்யாவிற்கு, தெரியுமே கரணின் திருமணம் பற்றி.. அதனால், அவர்கள் வாங்கி அனுப்பியிருக்கிறார்கள் என உணர்ந்தாள். தானும் மகனுக்கு என சில பொருட்கள் வாங்கிக் கொடுத்தாள். குரு “விசாகனுக்கு இதை கொடுத்திடுறேன்.. நெக்ஸ்ட் டைம் அவனுக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்க” என்றான்.. இயல்பான நடையில்.
செந்தூரனுக்கும் லாவண்யாவிற்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.. ‘ச்ச.. மறந்துட்டோமே..’ என எண்ணிக் கொண்டே தலையாட்டினர் சரி என.
லாவண்யா மெதுவாக “அம்மா மேல கோவமா” என கேட்டதற்கு.. குரு, உண்மையான பதில் சொன்னான் “முன்ன இருந்தது.. இப்போ இல்லை..” என சொல்லி புன்னகைத்தான்.
குரு வளர்ந்துவிட்டான் என லாவண்யா உணர்ந்தாள்.. அத்தோடு, பிள்ளை என்னை மறந்துவிட்டது என்பதையும் அறிந்துக் கொண்டாள். ஒருவகையில் அதில் சந்தோஷம் லாவண்யாவிற்கு.
அஹ.. காலம் மாறிக் கொண்டே இருக்கும்தானே. உறவு சிக்கல்கள் என்பது நம் நாட்டில் இப்படி சில இடங்களில் நடப்பதுண்டு.. ஏன் நடந்தது என ஆராயலாம். கால விரயம். பொறுமையாக.. சிலநேரம் மனதை கல்லாக்கிக் கொண்டுதான் சிலநிகழ்வுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்து போகும் காலம்தானே. குருவிற்கும் கடந்தது.. லாவண்யாவிற்கும் கடந்தது.. நல்லவிதமாக.
மாலையில் குருவின் பிறந்தநாள் விழா சிறப்பாக ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.
விசாகன் குரு இருவரும் காண்டாராஸ்ட் கலர் உடைகள் அணிந்துக் கொண்டு.. அந்த பெரிய கேக் முன்பு நின்றிருந்தனர்.
அவனின் குட்டி குட்டி நண்பர்கள்.. விளையாட்டு தோழர்கள்.. அத்தோடு அவர்களின் பெற்றோர்கள். எல்லாவற்றையும் விட.. கருணா சுபி விசாகன் என எல்லோரும் சூழ தன் பிறந்தநாள் கேக்கினை.. விவரம் தெரிந்து கட் செய்தான் குருகுகன்.
முதல் பங்கு விசாகனுக்கு கொடுக்க.. அடுத்த பங்கு சுபிக்குதான் என குரு பிடிவாதமாக ஊட்டிவிட்டான். அடுத்து தாத்தாபாட்டி என குருவின் கரங்கள் நீண்டது. இறுதியின் தன் தந்தையின் அருகே வந்து அவருக்கு கேக் ஊட்டினான் மகன்.. கருணாவின் கண்கள் ஏனோ சட்டென நொடியில் நிறைந்துவிட்டது. அந்த சின்ன பீஸ் கேக் அத்தனை தித்திப்பாய் இருந்தது. மகன் வளர்ந்துவிட்டான் தந்தையின் முழங்கை வரை.. அள்ளி அணைக்க முடியவில்லை. கட்டிக் கொண்டான் பிள்ளையை.. குரு தந்தையின் அணைப்பில் அடங்கியவாறே.. “விசா” என்க, ஆசையாக வந்து இருவரையும் தன் சிறிய கைகளால் அணைக்க முயன்றான், விசா “டாட் நானு” என்றவாறே.