தைத்திரி-17

அத்தியாயம் 41

மறுநாள் காலை பன்னிரெண்டு மணிவாக்கில், காவல் நிலையம் சென்றனர். அங்கே சங்கடப்பட்டுக் கொண்டே , இன்ஸ்பெக்டரிடம் செல்போனை காண்பிக்க, “கவலைப்படாதீர்கள் தம்பி , எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று தைரியப்படுத்தினார் . 

“சார் , இன்று காலை கூட வேறு சில புகைப்படங்கள் வந்துள்ளன…” என்றான் கவலையாக.

“தற்கொலை கேஸை நாங்கள் முடித்துக் கொள்கிறோம் . நீங்கள் சைபர் கிரைமில், இதைத் தனி கேஸாக பதிந்து விடுங்கள்” என்று அறிவுரை வழங்கினார் இன்ஸ்பெக்டர்.

“சரி” என்று சைபர் கிரைம் யுனிட் சென்றனர், அங்கு  இருபத்தைந்து வயதுள்ள துடிப்பான , நேர்மையான இன்ஸ்பெக்டரை சந்தித்தனர். இவர்கள் விவரத்தைச் சொல்ல , நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று நம்பிக்கையாகப் பேசினார் .

“பிளீஸ் ஸார் , எங்கள் பெண்ணை இந்தத் தொல்லையில் இருந்து காப்பாற்றி விடுங்கள் . ஏற்கனவே பயந்த சுபாவம் , எப்படியோ இந்த முறை காப்பாற்றி  விட்டோம்…” என்று விவேக் தன் பயத்தைத் தெரிவிக்க , 

“கவலைப்படாதீர்கள் , நிச்சயமாகத் தப்பிக்க முடியாது , நீங்கள் புகார் கொடுத்து விடுங்கள்.  அதேபோல் போனை கொடுத்து விட்டுப் போங்கள் , அடுத்து அநேகமாகப் பேச முயல்வான் ,  உங்கள் தங்கை போல் பேசி, தொடர்பில்  இருந்தால் தான் அவனைப் பிடிப்பதற்கு எளிதாக இருக்கும் . …” என்றார் . பின், அடுத்து செய்ய வேண்டிய விசயங்களைப் பற்றி விபரமாகப் பேசினார் .

“சரி ஸார் , அப்படியே செய்கிறோம்” என்றனர்,பின் கிளம்பும் தருவாயில்  ரமேஷ் மீண்டும் தயங்க , 

“பயப்படாதீர்கள் ,  நிச்சயமாக உங்கள் பெண் பெயர்  வெளியே வராது , அதற்கு நான் பொறுப்பு” என்று வாக்குக் கொடுத்தார் .அவர் சொல்லியவற்றை செய்து விட்டு , மருத்துவமனைக்குச் சென்றனர் .

அங்கு சஞ்சு  ஐ.சி.யு வில் விழித்திருந்தாள் . சற்று தெளிவாக இருந்தாள் .  விவேக் மட்டும் உள்ளே சென்றான் . பிராணவாயு  எடுக்கப்ட்டிருக்க , சாய்வாக அமர்ந்திருந்தாள் . விவேக் அருகே போய் தலையைத் தடவ , “அண்ணா பயமாகயிருக்கு….”  என்று மற்றொரு கையைப் பிடித்து  அழுதாள் .

“ஓன்றுமில்லைடா , நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்று மார்போடு அணைத்துக் கொண்டான். 

“நான் எதுவும் செய்யவில்லை அண்ணா…” என்று சங்கடப்பட்டுச் சொல்ல , சஞ்சுவின் வாயைப் பொத்தினான் .

 “நீ எந்த விவரமும் தர வேண்டாம் , நான் உன்னை முழுமையாக நம்புகிறேன் சஞ்சு “

உடனே, “அண்ணா…” என்று கட்டிக் கொண்டாள் .

அவள் முகத்தை நிமிர்த்தி ,  “நீ எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்..” என்று நிறுத்த,

“என்ன அண்ணா?”

“இந்த மாதிரி ஒரு காரியத்தைத் இனிமேல் செய்யமாட்டேன் என்று அம்மா மீது சத்தியம் செய்.”

“அண்ணா….” என்று வார்த்தைகள் அற்று தவிக்க , 

 “உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று அம்மாவிற்குச் சத்தியம் செய்துள்ளேன் சஞ்சும்மா. இப்போது அம்மாவிற்கு  என்னம்மா பதில் சொல்வேன்” என்று விவேக் அழ ,

“அண்ணா….”

“அம்மாவிற்கு இறக்கும் தருவாயில் கூட உன்னைப் பற்றிய கவலைதான் .அதை மெய்ப்பிப்பது போல இதோ நடந்து விட்டதே…”  என்று வருத்தப்பட,

“அண்ணா…”

“உயிரே போய்விட்டது சஞ்சும்மா , அண்ணன் மீது நம்பிக்கையில்லையா? ஏன் இப்படிச் செய்தாய்? நான் உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளவில்லையா ?. எனக்கும் உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள்?” என்று தேம்ப ,

“என்ன அண்ணா ? நீ தான் எனக்கு எல்லாமே , நீ சரியாகப் பார்க்கவில்லை என்று சொன்னால் நாக்கு அழுகி விடும்” என்றாள் வேகமாக .

“பின், ஏன்ம்மா இப்படிச் செய்தாய்? அண்ணாவிடம் சொல்லியிருக்கலாமே?” 

“அப்பா… அப்பா…” என்று சஞ்சு அழுக , 

“அவரைப் பற்றித்தான் தெரியுமே , அதையெல்லாம் பெரிசாக நினைத்துக் கொண்டு , விலையற்ற உயிரை மாய்ப்பாயா? அம்மா இதை விரும்புவார்களா ? உன் மீது ஆயிரம் கனவு வைத்திருந்தார்கள்…” என்று வேதனைப்பட , 

“ஸாரி அண்ணா , எல்லாம் சட்டென்று நடந்து விட்டது , புகைப்படங்களைப் பார்த்தவுடன், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று யோசிக்க கூடிய மனநிலையிலே இல்லை.”

“ம்ம்….” என்று அவள் கையைத் தன் கைக்குள் வைத்தபடியே விவேக் கேட்க,

“அப்போது, அப்பாவும் எதிர்பாராத விதமாக வந்து விட , எல்லாம் கை மீறிப் போய்விட்டது . அப்பா சொன்ன வார்த்தைகளைத் தாங்க முடியவில்லை அண்ணா…” என்று அழுதாள் .

“அப்பா பற்றித் தெரியாதா ? இது என்ன நமக்கு புதுசா ? நான் நெதர்லாந்திற்கு  கிளம்பும் போது அவ்வளவு தைரியமாகப் பேசினாயே , அதை நம்பித் தானே போனேன்…” என்று ஆதங்கப்பட , 

“இல்லை அண்ணா , அப்பா….” என்று ஆரம்பிக்க , ரமேஷும் , ரவியும் உள்ளே வர , பேச்சு தடைபட்டது .

ரமேஷ் சஞ்சு அருகில் வந்து , “என்னடா எல்லோரையும் பயமுறுத்தி விட்டாய்?” என்றார் வாஞ்சையாய் .

சஞ்சு கண்கலங்க , “உன் மீது கீத்து கொலைவெறியில் இருக்கிறாள்.  உனக்கு இருக்கிறது..” என்று ரவி சொல்ல , அங்கு அனைவரிடமும் ஒரு மெல்லிய சிரிப்புப் பரவியது .

அப்போது விஜயன் உள்ளே வர , சஞ்சு நடுங்க ஆரம்பித்தாள் . கண்களில் பயம் தெரிய , விவேக்கின் கையை இறுகப் பற்றினாள்.அனைவரும் இந்த மாற்றத்தைக் கவனிக்க , விஜயனும் தர்மசங்கடத்தோடு நின்றார் .

அப்போது உள்ளே வந்த நர்ஸ் , “இத்தனை பேரா? , கிளம்புங்க…”  என்று சொல்ல , அனைவரும் மெதுவாக நகர ஆரம்பித்தனர் . விஜயனும் சஞ்சுவை ஒரு  பார்வைப் பார்த்து விட்டு நகர்ந்தார் .

இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் சஞ்சு இல்லை, பயந்து அண்ணனிடம் ஒண்டிக் கொண்டாள் .

இப்போது விவேக்கிற்குக் கவலை பிறந்தது , நாம் நினைப்பது போல் விசயம் சிறிது இல்லையோ என்று தோன்ற , சஞ்சுவை விழியெடுக்காது பார்த்தான் .பின் சஞ்சுவிடம் , “எதையும் யோசிக்காதே , சிறிது நேரம் தூங்கு…” என்று அருகில் அமர்ந்தான் .

 சிறிது நேரம் போக ,” டாக்டர் அழைக்கிறார் .அவர் அறையில் இருக்கிறார்” என்று நர்ஸ் சொல்ல ,

 “சரி , பார்த்துக் கொள்ளுங்கள்” என்று செவலியரிடம் சொல்லி விட்டுச் சென்றான் .

அத்தியாயம் 42

ரமேஷ் அங்கிளிடம் மற்றும் வெளியே இருந்தவர்களிடம் விவரம் சொல்லி விட்டு , விவேக் மருத்துவர் அறைக்குச் சென்றான் . கதவை தட்டி விட்டு  , உள்ளே செல்ல ,

 “வாங்க , உட்காருங்க “ என்று இருக்கையைக் காண்பிக்க , விவேக்கும் பதட்டத்துடன் அமர்ந்தான்.

“நீங்க ?” என்று கேட்க , 

“ சஞ்சுவோட அண்ணன், விவேக்” என்று கை குலுக்கினான் .

“ஓ.கே. விவேக் , என்ன பிரச்சனை ? ஏன் இந்த முடிவு? சஞ்சனா எப்படி ?  உங்கள் வீட்டில் இல்லை கல்லூரியில் என்ன பிரச்சனை? நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்று மருத்துவர் படபடக்க,

மிகுந்த தயக்கத்துடன் , “கல்லூரியில் சுற்றுலா போய் வந்த இடத்தில் , சில விரும்பத்தகாத சஞ்சுவின்  படங்கள் , அவள் போனிற்கு வந்தது , அந்த அதிர்ச்சியும் , அப்பாவின் கோபமும் தான் , இந்த முயற்சிக்குக் காரணம்…” என்று எடுத்துரைத்தான் .

“இந்த முறை சரி , ஆனால் மற்றபடி ?”

“புரியவில்லை டாக்டர்…” 

 “இது முதல் முறை அல்ல . உங்கள் தங்கை உடலில் பல இடங்களில் கீறல்கள் இருக்கின்றன….”

விவேக் அதிர்ந்து பார்க்க, 

 “கண்ணில் படாத இடங்களில் அவங்க உடம்பில் கீறல்கள் உள்ளன . இதில் முக்கியமான விசயம் ,  அந்த கீறல்களைப் பார்க்கும் பொழுது , எங்கள்  கணிப்பின்படி , அவை அனைத்தும் இந்த இரண்டு , மூன்று வருடங்களுக்குக்குள் தான் வந்திருக்கிறது.”

“எங்களுக்குத் தெரியாது டாக்டர்…” என்று பதறினான்

“சில நபர்கள் , தாங்க முடியாத பிரச்சனை , மனவேதனை வரும்பொழுது , அந்த வலியை  மறக்க , அதைவிடப் பெரிதாகச் செய்து கொள்வார்கள் …” என்று டாக்டர் விளக்க,

“அம்மா இரண்டு வருடத்திற்கு முன்னால் தான் கொரோனாவில் இறந்தாங்க . அவங்க இரண்டு பேரும் மிகவும் நெருக்கம் டாக்டர்.”

“ஓ..! , ஸாரி , இந்த கொரோனா, பல எதிர்பாராத  மரணங்களை , காயங்களை ஏற்படுத்திச் சென்று விட்டது..” என்று நீண்ட மூச்சை விட்டார். பின், “சரி , உங்களோடு , உங்கள் அப்பாவோடு சஞ்சனாவிற்கு நல்ல உறவு கிடையாதா ?”

“இல்லை டாக்டர் , அப்பா கோபக்காரர் , கடுமையாகப் பேசி விடுவார் . நாங்கள் இருவரும் அப்பாவிடம் இருந்து தள்ளியே நிற்போம்…”

“ம்ம்…”

“எங்கள் வீட்டில் இயல்பான சூழ்நிலையே இருக்காது. நாங்கள் உண்டு எங்கள் வேலையுண்டு என்று தான் இருப்போம் . இப்பதான் அம்மாவின் மறைவுக்குப் பிறகு தான் நானும் சஞ்சுவும் கொஞ்சம் நெருக்கமாகியிருக்கிறோம் ..”

“எதனால் இப்படி செய்து கொண்டிருக்கிறாள் என்று ஏதாவது ஐடியா இருக்கா?”

“தெரியவில்லை டாக்டர்…” என்று தலைகுனிந்தான் .

“ஓ.கே. , நீங்கள் இளைய தலைமுறையினர். இதை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்வீர்கள்…” என்று தொண்டையைக் கனைத்தவர்,  “நிச்சயமாக கவுன்சிலிங் தேவைப்படும் . மனநல மருத்துவருக்குப் பரிந்துரை செய்கிறேன் . போய் பாருங்கள் . அவர் பேசிப் பார்க்கட்டும் . அடுத்து என்ன செய்யலாம்? என்று  அப்புறம் முடிவு எடுப்போம்…”

“சரியாகி விடுவாள் இல்லையா டாக்டர் ?”என்றான் கவலையோடு .

“நிச்சயமாக, தைரியமாக இருங்க விவேக்”

“போலீஸ் என்கொயரி எல்லாம் இருக்கு  , ஒன்றும் பிரச்சனை இல்லையே டாக்டர்…”

“நாங்கள் போலீஸிடம் பேசுகிறோம் , மென்மையாகக் கையாளலாம்…”

“நன்றி டாக்டர்..” என்று கிளம்பினான் .

வெளியே காத்திருந்தவர்களிடம் , அனைத்தையும் விளக்காமல் , “அடுத்த முறை தற்கொலை எண்ணம் வராமல் இருக்க கவுன்சிலிங் வேண்டும்…” என்கிறார் என்று முடித்தான். பின், “நான் பார்த்துக் கொள்கிறேன் , நீங்கள் எல்லோரும் கிளம்புங்கள் .”

இடைபுகுந்த ரமேஷ் , “ மாலையில் எல்லோரும் சஞ்சுவைப் பார்க்க வருகிறார்கள். கீத்துவை வேண்டுமானால் இருக்கச் சொல்கிறேன் , காலையில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் , மருத்துவமனை என்று அலைகிறாய் ,  இன்று இரவு நீ ஒய்வு எடுத்து கொள்.”

“இல்லை அங்கிள் , என்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது . இப்போது அறைக்கு மாத்திடுவாங்க. நான் அவளுடன் இருந்து கொள்கிறேன். அப்படியே இவரையும் வீட்டில் விட்டு விடுங்கள்…” என்று முடித்தான்.

பின் அப்பாவைப் பார்த்து , “நீங்கள் இனி வர வேண்டாம் , நானே டிஸ்சார்ஜ் செய்து கூட்டி வந்து விடுகிறேன்” என்றான் அழுத்தமாக .

அத்தியாயம் 43

மாலை அனைவரும் வந்தனர் . “என்ன சஞ்சு ? இப்படிச் செய்து விட்டாய்? மஞ்சுவிற்கு நாங்கள் என்ன பதில் சொல்வது?” என்று ராதாவும் , ராஜியும் புலம்ப ,

“ஸாரி ஆன்ட்டி..” என்று கட்டிக் கொண்டாள் .

கீத்து வேகமாக வந்து , “அறிவில்லை? என்ன வேலைப் பார்த்திருக்கிறாய் ?” என்று இரண்டு அடி போட்டாள் .

“ஸாரி கீத்து..” என்று கையைப் பிடிக்க , தட்டி விட்டாள் , பின் முறுக்கிக் கொண்டு, கொஞ்சம் தள்ளிப் போய்  நின்றாள் .

சஞ்சு பாவமாகப் பார்க்க , “விடு கீத்து..” என்று ராதா பரிந்து வர , சற்று சமாதனமானாள். பின் பல்வேறு விசயங்களைப்  பேசி சலசலத்தனர் . 

பின்னர் கிளம்பும் வேளையில் , நாங்க எல்லோரும் இருக்கிறோம்,  எதுவென்றாலும் சமாளிக்கலாம் என்று சஞ்சுவிடம்  தைரியம் சொன்னார்கள் . நான் சஞ்சு கூட இருக்கிறேன் என்று கீத்து சொல்ல,

“எத்தனை நாள் சஞ்சு இங்கே இருக்க வேண்டும் என்று தெரியவில்லை , நாளை காலை போலீஸ் என்கொயரி மற்றும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் . அதனால் அப்போது நீ இங்கு வந்து இரு கீத்து…” என்று விவேக் சொல்ல , அவளும் ஆமோதித்துக் கிளம்பினாள்.

விவேக் இருந்த மனநிலையில் , யாரிடமும் தங்கையை விட்டுப் போக மனமில்லாமல், தானே பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்தான்.

அனைவரையும் பார்த்தது , பேசியது தைரியத்தைத் தர , நிமிர்ந்து உட்கார்ந்தாள் . உணவு வர விவேக்கும் , சஞ்சுவும் உண்ண ஆரம்பித்தனர் . 

மருத்துவர் பேசியதிலே  மனம் உழல , முதலில் காயங்களைப் பற்றி பேசுவோமா? என்று யோசிக்க , இத்தனை நாள் ,  ஏன் நம்மிடம் இதைப்பற்றி மனம் விட்டுப் பேசவில்லை ? இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாமாகப் பேச ஆரம்பிப்பது , வேறு ஏதேனும் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடுமா? என்று பல யோசனைகள் மண்டையில் ஓட , குழம்பினான்.

 கீத்துவிடம் இதைப்பற்றி பேச வேண்டும் , அவளுக்கு ஏதாவது தெரியுமா ?என்று விசாரிக்க வேண்டும். மருத்துவர் முதலில் இவளிடம் பேசட்டும், அப்புறம் நாம் பேசுவோமா? இல்லை நாமே முதலில் பேசிக் தெரிந்து கொள்வோமா? என்று பல்வேறு விசயங்களை யோசித்தபடி இருந்ததால் , விவேக் அமைதியாக எதுவும் பேசாமல் உணவை உட்கொண்டான் .

சிறிது நேரத்திலே விவேக்கின் அமைதியைக் கண்டு கொண்டாள் சஞ்சு . “என்ன அண்ணா , என் மேல் கோபமா ?” 

உடனே சுதாரித்தவன் , “ச்சே… , அப்படியெல்லாம் இல்லை டா , இன்று போலீஸ் பேசினதைப் பற்றிய யோசனை…” என்று மழுப்பினான் .

“ஸாரி அண்ணா , என்னால் உனக்கு ரொம்ப கஷ்டம்…” என்று கண்கலங்க ,

“என்னடா சஞ்சு , சும்மா சும்மா எல்லாவற்றிருக்கும் அழுகிறாய்…, ஃப்ரீயா விடு…”

“இல்லை அண்ணா , உனக்கு கஷ்டம் தான்…” என்று மீண்டும் அதே பல்லவியைப் பாட ,

“சரிடா , அண்ணன் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?”

“ஆமாம்”  என்று வேகமாகத் தலையாட்ட ,

 “அப்ப நல்லா சாப்பிட்டு , டாக்டர் சொல்கிற மாதிரி கேட்டு நட , அப்போது தான் சீக்கிரமாகக் குணமாக முடியும்.நீ பழைய பன்னீர் செல்வமாகி விட்டாயென்றாலே…  அண்ணா ஹேப்பி..” என்று புன்னகைக்க , சஞ்சுவும் இணைந்து சிரித்தாள் .

தங்கை சகஜமாகிவிட்டதை உணர்ந்தவன் , “அப்புறம் போலீஸில் கேஸ் கொடுத்துள்ளோம் , நீ தைரியமாக இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.”

“அண்ணா…” என்று மீண்டும் பயப்பட , “நான் இருக்கிறேன் சஞ்சு , இந்தத் தொல்லை  தொடராமல் தடுப்பதற்கு , நாம் இதைச் செய்தே ஆக வேண்டும் . நீ திரும்பக் கல்லூரிக்குப் போகும் போது , இந்தப் பிரச்சனையைத் தலையில் சுமந்து கொண்டு, பயந்து கொண்டே போகமுடியாது , புரியுதா ?”

“ம்ம்…” என்று தயக்கத்துடன் தலையை ஆட்ட , 

“இல்லை டா  , இன்ஸ்பெக்டரிடம் பேசினோம் , இந்த வேலையைச் செய்தது ,கட்டாயமாக உங்கள் கல்லூரியில் இருக்கும் யாரோ ஒருவர் என்று நம்புகிறார் . மேலும் நீ மட்டுமில்லை வேறு சில பெண்களும் மாட்டியிருக்கக் கூடும் என்று சொல்கிறார். நீ கொடுக்கும் ஒத்துழைப்பு , எத்தனையோ பெண்களை காப்பாற்றக் கூடும்….” என்று வலியுறுத்த,

“சரி அண்ணா , செய்கிறேன்…”

தொடரும்…..