Pooththathu Aanantha Mullai 9 1946 பூத்தது ஆனந்த முல்லை -9 அத்தியாயம் -9 இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன். தேன் ஏதோ போலிருக்க தொலைக்காட்சியை அணைத்தவர், என்னவென விசாரித்தார். கணவனுக்கு அடுத்த வேலை தேடுவதில் இருக்கும் சிக்கலை சொன்னாள். “பணத்தை கட்டியாச்சுன்னா வில்லங்கம் ஏதுமில்லாம நல்ல படியா முடிஞ்சிடும்தானே?” எனக் கேட்டார். பணத்தொகையை சொன்னவள், “இவ்ளோ அவரால எப்படிப்பா முடியும்? என் நகை அடகுலேருந்து எடுக்க மட்டும் ஹெல்ப் பண்ணுங்கப்பா, அதையெல்லாம் வித்து தாங்க, மீட்க நீங்க கொடுத்த பணத்தை எடுத்துக்கிட்டு மிச்சத்த அவர் ஆஃபீஸ்ல கட்டிடலாம். முக்கியமா இந்த விஷயம்லாம் அம்மா, அண்ணன், அக்கான்னு யாருக்கும் தெரிய வேணாம்” என்றாள். அவர் யோசனையாக பார்க்க, “அவர் எக்ஸ்பீரியன்ஸுக்கு நல்ல வேலை கண்டிப்பா கிடைக்கும் ப்பா. அப்புறம் அவரே நகையெல்லாம் வாங்கித் தருவார்ப்பா. அதனால யோசிக்காதீங்க ப்பா” என்றாள். தங்கத்தின் விலை எல்லாம் ஏறிக் கொண்டே போகிறது. விற்றாலும் நட்டம்தான், ஆகவே மகளின் யோசனையில் அவருக்கு உடன்பாடில்லை. “பணம்தானே வேணும்? நான் தர்றேன், மாப்ள அடகு வச்ச நகைய அவரே மீட்டுக்கட்டும்” என்றார் தங்கப்பன். ஓய்வு பெற்று விட்ட தங்கப்பனுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் வருகிறது. இரயில்வே துறையில் பணி புரிந்ததால் பிற்காலத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் மருத்துவ அவசியம் ஏற்பட்டால் கூட கவலையில்லை. அதற்கான வசதிகள் இருந்தன. ஆகவே அவருக்கு வந்த பி எஃப் பணத்தை மூன்று மக்களுக்கும் சரி சமமாக கொடுத்து விடத்தான் எண்ணியிருந்தார். ஆரம்பத்திலேயே கொடுத்தால் அனாவசியமாக செலவழித்து விடுவார்கள், அல்லது உழைக்க வேண்டிய வயதில் உத்வேகம் குறைந்து போகலாம் என்பதால் தற்போதைக்கு வங்கியிலேயே இருக்கட்டும் என விட்டு வைத்திருந்தார். இப்போதும் ஆனந்துக்கு இனாமாக கொடுக்க பிரியப் படவில்லை அவர். என்ன இருந்தாலும் அவரின் வாழ்நாள் சேமிப்பு அது, இளிச்சவாய் தனமாக மாப்பிள்ளை இழந்ததற்கு, தன் பிள்ளைகளுக்கு சேர வேண்டியதை அப்படியே தூக்கிக் கொடுக்க அவருக்கு மனமில்லை. “என்கிட்ட இருக்க பணத்தை மாப்ளய கடனா வாங்கிக்க சொல்லும்மா. ஓரளவு ஸ்டெடி ஆனதுக்கப்புறம் தரட்டும். என்னடா அப்பா கடன்னு சொல்றேன்னு நினைக்காத, அதுல உனக்கு மட்டும் இல்லை பங்கு, உன் அண்ணன் அக்கா ரெண்டு பேருக்கும் கூட சேர வேண்டியது. பேங்க்ல இருக்குன்னே நம்ம வீட்ல எல்லாரும் நினைச்சுக்கட்டும். யாருக்கும் இது தெரிய வேணாம்” என்றார் தங்கப்பன். “நீங்க தர்றேன்னு சொன்னதே சந்தோஷம் ப்பா. ஆனா வேணாம், அவர் வாங்கிப்பாரா தெரியலை, என்கிட்ட தான் நகைங்க இருக்கேப்பா?” என்றாள். ஆனால் அவர் விடவில்லை. மகளின் எதிர்காலத்துக்கு நகைகள் பத்திரமாக இருக்கட்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தன் முடிவுக்கு மகளை ஒத்துக் கொள்ளச் செய்தார். அப்போதும் ஆனந்த் ஒத்துக் கொள்வானா என தெரியாது என தயக்கமாக சொன்னாள். அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டார் தங்கப்பன். அவரின் அக்கா ரமா உன்னால் முடிந்ததை உதவு என சொன்ன போதே அவருக்கு இந்த திட்டம் உதித்து விட்டது. மகள், மாப்பிள்ளை இருவரையும் அமர வைத்து பொறுமையாக சொல்லல்லாம் என நினைத்திருந்தார். என்ன… அவரின் கணக்குப் படி தொகை இத்தனை அதிகமில்லை. ஆகவே தேனுக்கு சேர வேண்டியதை கொடுத்து விடலாம் என யோசித்திருந்தார். இப்போது தொகை அதிகமாக இருக்கவும் முழுப் பணத்தையும் தர முடிவு செய்து விட்டார். அடுத்த நாள் ஆனந்த் வரவும் உடனேயே எதையும் சொல்லவில்லை. அவன் குளித்து சாப்பிட்டு உறங்கி மாலையில் எழுந்த போதுதான் விவரம் சொன்னாள் தேன். அவள் நினைத்தது போலவே மாமனாரிடம் வாங்கிக் கொள்ள தயங்கினான். ஏற்கனவே ராஜ்குமார் கேவலமாக பேசியிருக்கையில் இது இன்னும் சிக்கலை உண்டு பண்ணுமோ என்ற பயமும் இருந்தது. ஆனால் தங்கப்பன் மகளை சம்மதிக்க வைத்தது போலவே மருமகனையும் சம்மதிக்க வைத்து விட்டார். கடனாகத்தான் என்பதாலும் வேறு வழியும் இல்லை என்பதாலும் ஆனந்தும் ஒத்துக் கொண்டான். அன்றே ஊருக்கு கிளம்பிய தங்கப்பன் இரண்டு நாட்களில் பணத்தோடு வந்தார். தாமதம் செய்யாமல் அலுவலகத்தில் பணத்தை திரும்ப செலுத்தி கணக்கை முடித்து விட்டான் ஆனந்த். அவனுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சான்றிதழ்களும் அவனிடம் ஒப்படைக்க பட்டு விட்டன. என்ன ஆனது என்ன செய்கிறாய் என தினம் வேதாச்சலம் மகனிடம் விசாரிக்கிறார்தான். தன்னிடமிருந்த பழைய டி வி எஸ் வண்டியையும் விலை உயர்வான கைக்கடிகாரம் ஒன்றையும் அவரது அம்மாவின் நினைவாக அவரிடமிருந்த வைர தோடுகளையும் விற்று அந்த பணத்தை மகனுக்கு அனுப்பி வைத்தார். எதையும் மனைவிக்கு சொல்லவில்லை. பைக் காணாமல் போய் விட்டது என கதை விட்டு நன்றாக திட்டுக்கள் வாங்கிக் கொண்டார். வைர தோடு விவகாரம் மனைவிக்கு தெரியும் அன்று பார்த்துக் கொள்ளலாம் என அதை பற்றி வாயே திறக்கவில்லை. அவர் கொடுத்த பணம் குறைவு என்றாலும் சம்பளம் இல்லாமல் இருப்பவனுக்கு குடும்பத்தை ஓட்ட உதவியாக இருந்தது. தேனின் மருத்துவ செலவுக்காக நண்பனிடம் அடைந்த கடனுக்காக தருணின் பெயரில் போட்டிந்த பணத்தை கொடுத்தாள் தேன். ஆகவே அந்தக் கடனையும் அடைத்து விட்டான். கடனில்லாத நிலை வந்து விட்டாலும் ஆனந்துக்கு நிம்மதி ஏற்படவில்லை. தான் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கப் போய்தானே கடனிலிருந்து தன்னை விடுதலை பெறச் செய்திருக்கிறாள் மனைவி, நல்ல நிலைக்கு வர வேண்டும், அவளை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பு எழுகிறது. விரைவில் சாத்தியப் பட வேண்டுமே என அதுவே மனதில் ஓடுகிறது. தேன் இன்னும் கணவனுடன் சகஜ நிலைக்கு திரும்பியிருக்கவில்லை. தனக்கு தகுதியான வேலை ஒன்றை பெறாமல் அவளுடன் ஏற்பட்டிருக்கும் விரிசலை சரி செய்ய முடியாது என நம்பியவன் இப்போது முழுக் கவனத்தையும் வேலை தேடுவதில் வைத்தான். சென்னையிலிருந்து புறப்பட்ட தங்கப்பன் நேராக மருமகளை காணத்தான் சென்றார். அவளின் பிரச்சனை பற்றியும் அக்கா மூலம் அறிந்து வைத்திருந்தார். மாமனார் வரவும் தன்னை அழைக்கத்தான் வந்திருக்கிறார் போல என நினைத்துக் கொண்டாள் திவ்யா. சங்கடமாகத்தான் அவரை எதிர் கொண்டாள். அவளின் மனநிலை புரிந்தவராக, “உன்னை பார்த்திட்டு போகத்தான் வந்தேன் திவ்யா. அவனா வருவான், அப்ப பேச வேண்டியதெல்லாம் பேசி சரி பண்ணிகிட்டு வாம்மா. கொஞ்சமா கோளாறு புடிச்ச பய, பத்தாததுக்கு அவனோட அம்மா அவன் செய்ற அத்தனையும் சரின்னு கண்ண மூடிகிட்டு சொல்வா. பயம் காட்டுனீனா தெளிஞ்சு போயிடுவான்” என்றார். தேன் சென்னைக்கு அவளின் கணவனோடு வாழ சென்று விட்டாள் என்ற விவரத்தையும் சொன்னார். மகளை குறித்து திவ்யாவின் அம்மா சொன்னது பற்றி தெரிந்திருந்தாலும் அதை பற்றி வெளிப்படையாக கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் பேச்சு வாக்கில், “என் மூணு பசங்கள்ல யாருக்கு என்னன்னாலும் நான் இருக்க வரை நான் பார்த்துப்பேன், நான் இல்லைனா கூட ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்துப்பாங்களே தவிர யாரும் யார் வாழ்க்கைக்கும் தடையா இருக்க மாட்டாங்க” என்றார். திவ்யாவின் அம்மா தன்னிலை விளக்கம் கொடுக்க நினைக்க, பொதுவாக சொன்னேன் என சொல்லி அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டார். தங்கப்பன் வந்து பார்த்ததும் பேசியதும் திவ்யாவின் வாழ்க்கை அப்படியொன்றும் கெட்டுப் போய் விடாது என்ற நம்பிக்கையையும் மன நிம்மதியையும் அவளின் பெற்றோருக்கு கொடுத்தது. வீடு வந்த பிறகும் மகனை கூப்பிட்டு எதுவும் பேசவில்லை அவர், கொஞ்சம் போல பட்டால்தான் அவனுக்கும் புரிதல் வரும் என விட்டு விட்டார். ராஜ்குமாருக்கோ தன் மீது அத்தனை அன்பும் காதலும் வைத்திருக்கும் மனைவியால் அதிக நாட்கள் தன்னை விட்டு பிரிந்திருக்க இயலாது என்ற எண்ணம். விரைவில் அவளாகவே வந்து விடுவாள் என இறுமாப்புடன் இருந்தான். “என்ன இன்னும் உங்க மருமக வரக் காணோம். நீங்க ஒரு வார்த்தை பேசுங்க” என்றார் கலைவாணி. மருமகள் இல்லாமல் எல்லா வேலைகளும் அவரே பார்க்க வேண்டியதாக இருக்கிறதே. மனைவி முன்னர் சொன்னது போலவே கணவன் மனைவி விவகாரத்தில் அடுத்தவர் தலை கொடுக்க கூடாது என சொல்லி விட்டார் தங்கப்பன். வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு வந்து உறங்கிய ஆனந்த், மதியத்திற்கே எழுந்து விட்டான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வேளையில் தருண் உறங்க ஆரம்பித்து விட்டான். தேன் ஏதோ பேசுவதற்கு அவனிடம் வந்தாள். “சொல்லு தேனு” என்றான். அவர்கள் வசிக்கும் அந்த குடியிருப்புக்கு மிக அருகில், நடந்து போகும் தூரத்திலேயே குழந்தைகள் கேர் சென்டர் ஒன்று இருக்கிறது. அங்கு பணிக்கு செல்ல நினைக்கிறேன் என்றாள் தேன். தனது விருப்பமின்மையை பார்வையில் சொன்னான். “நைட் முழுக்க வேலை பார்த்திட்டு உங்களுக்கு வேலை தேடுறது கஷ்டமா இருக்குதானே, நான் வேலைக்கு போனா வீட்டு வாடகை கொடுத்துக்கலாம். மிச்ச செலவுக்கு பேங்க்ல இருக்க பணத்தை வச்சுக்கலாம். ரெண்டு மூணு மாசம் வரை தாராளமா சமாளிக்கலாம்” என்றாள். பொதுவாக வேலையை விட்டு விட்டு யாரும் வேலை தேட மாட்டார்கள், ஆகவே வேறு வேலை கிடைக்கும் முன்பே ஏன் வேலையை விட்டாய் என ஆனந்துக்கு கேள்வி வரும், அதிக பிரச்சனை இல்லை என்றாலும் சின்ன சிக்கல் இருந்தது. ஆகவே உடனடியாக நல்ல வேலை பெறுவது தாமதம் ஆகலாம். அதையெல்லாம் இவளிடம் சொல்லி பயப்படுத்த வேண்டாமே என நினைத்தவன் அமைதியாக இருந்தான். “நான் வர்ற திங்கள்லேருந்து வேலைக்கு போறேன். பத்துலேருந்து ஆறு மணி வரைக்கும் வேலை. தருணையும் அங்கேயே வச்சுக்கலாம்” என்றாள். கணிப்பொறியியலில் பட்டப்படிப்பு படித்திருக்கிறாள் தேன். வேறு வேலைக்கு கூட முயற்சி செய்யலாம், ஆனால் குழந்தையை அவளுடன் வைத்திருக்க முடியாதே, ஆகவேதான் இந்த வேலை சரியாக இருக்கும் என நினைத்தாள். அத்தோடு வேறு வேலைகள் எதுவாக இருந்தாலும் முன் அனுபவம் இல்லாத காரணத்தால் சொற்ப சம்பளமே கிடைக்கும், அதற்கு இந்த வேலையில் ஓரளவு திருப்தியான சம்பளம் தருவதால் இதையே தேர்ந்தெடுத்தாள். காரண காரியங்கள் புரிந்தாலும் வேறு வேலைக்கு செல்லலாம் எனதான் அவனுக்கு தோன்றியது. “எனக்கு சிரமம் இல்லை தேனு, ஆன்லைன்ல அப்ளை பண்ண போறேன், இன்டர்வியூ கூட ஆன்லைன்லதான் இருக்கும். நீ வேலைக்கு போகாம கூட சமாளிச்சுக்கலாமே” என்றான். “எனக்குன்னு ஒரு வேலை வேணும்னு உறுதியா தோணுது, தருணையும் கவனிச்சுக்கிட்டு டீசன்ட்டான சேலரில வீட்டுக்கு பக்கமாவே வேலை கிடைக்கும் போது நான் ஏன் போகாம இருக்கணும்?” என அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் தயக்கமாக பார்த்தான். தயக்கம் துறந்து அவனாக வாய் திறப்பான் என முழுதாக ஒரு நிமிடம் காத்திருந்தாள் தேன். அவன் அமைதியாக மட்டுமே இருக்க, நீண்ட மூச்செடுத்துக் கொண்டவள், “ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி ஒரு விஷயத்தை செய்யும் போது பெட்டரா செய்யலாம். அடுத்தவங்க மனசு ஓபன் பண்ணி படிக்கிற வித்தையெல்லாம் எனக்கு தெரியாது” என சொல்லி அங்கிருந்து சென்றும் விட்டாள். அதற்கு பின் இருவருக்கும் இடையில் தடுப்புச் சுவர் எழுந்து விட்டது. அவனிடம் சொல்லியாகி விட்டது, என்ன நடந்தாலும் வேலைக்கு செல்வது என்ற தீர்மானத்தோடு இருந்து கொண்டாள் தேன். எதையும் வெளிப்படையாக பேசி பழகியிராதவனுக்கு கண்ணுக்கு தெரியாத தயக்க தடையை உடைக்கும் வழிவகை தெரியவில்லை. மாலை தேநீர் கொண்டு வந்து கொடுத்தவளிடம், “எங்கேயாவது வெளில போலாமா தேனு?” எனக் கேட்டான். “எங்க போறது? செலவை குறைசசுக்கணும். இந்த வீட்டை விட்டுட்டு சிங்கில் பெட் ரூம் வீடு ஏதவாது பார்த்து மாறிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் நான், வெளில போனாலே தேவையில்லாம நிறைய செலவாகும்” என்றாள். “ஒரு காலத்துல சிங்கில் பெட்ரூம் வீடு பார்த்தேன் நான், வசதிபடாதுன்னுதானே இங்க வந்தோம்?” “அப்ப இருந்த நிலைமை வேற, இப்ப இருக்க நிலைமை வேற” “எந்த நிலைமையிலேயும் சிக்கனமா இருக்கலாம்” “சிக்கனம்னா குடும்பம் பண்றதுல மட்டும் இருக்க கூடாது, அவசியம் இல்லாம வாரி இறைக்கிற விஷயத்திலேயும் இருக்கணும்” முகத்தில் அடித்தது போல அவள் சொல்ல, சட்டென அமைதி அவனிடம். “என்ன பதிலை காணோம், இந்த அமைதிய எப்படி எடுத்துக்கிறது, இனியாவது சரியா இருக்கணுமங்கிற எண்ணமா இல்லை எப்பவும் உங்க அம்மாகிட்ட வள்ளல் பட்டம் வாங்குறது மட்டும்தான் லட்சியம்னு சொல்லாம சொல்றீங்களா?” கோவமாக கேட்டாள். “வார்த்தையால கொல்லாத தேனு” என அவன் சொன்ன தொனியில் அவளுக்கு என்னவோ போலாகி விட்டது. சில நொடி அமைதிக்கு பின், “கோயிலுக்கு போயிட்டு வரலாம், கிளம்பு” என்றான். மறுக்காமல் மகனை தயார் படுத்தி அவளும் கிளம்பி விட்டாள். பிள்ளையார் கோயிலுக்கு சென்று வணங்கிய பின், அவனாகவே பூங்கா ஒன்றுக்கு அழைத்து சென்றான். மனைவிக்கு அவித்த கடலையும் மகனுக்கு ஐஸ்க்ரீமும் வாங்கிக் கொடுத்தான். சிறு குழந்தை ஒன்று பந்து வைத்து விளையாடிக் கொண்டிருக்க, தருணும் விளையாட ஆரம்பித்தான். “நீ வேலைக்கு போக கூடாதுன்னுலாம் நினைக்கல தேனு. வேற வேலைன்னா இப்போ கம்மி சம்பளம்னாலும் போக போக ஏறும், உன் க்ரோத்கும் நல்லது, அதனாலதான் தருண் வளர்ற வரை வெயிட் பண்ணி வேற வேலைக்கு நீ போகலாம் நினைச்சேன்” என்றான். “நீங்க சொல்ற படி பார்த்தாலும் இப்ப வீட்ல சும்மாதானே இருக்கணும், தருணையும் கூட வச்சுக்கிட்டு வருமானம் வர்ற ஒரு வாய்ப்பை ஏன் வேணாம்னு சொல்லணும் நான்? எப்பவோ நல்ல வேலைக்கு போறத விட, அவசியமான நேரத்துல ஏதோ ஒரு வேலைக்கு போறது முக்கியம்தானே? இந்த வேலைக்கு போறத குறைவா நினைக்குறீங்களோ?” “அப்படித்தான் நினைக்கிறேன் போல, என்னால உனக்கு கஷ்டம்னும் தோணுது” “நேர்மையா செய்ற எல்லா வேலையும் நல்ல வேலைதான். அங்க இருக்க குழந்தைங்கள எங்கேஜ் பண்ணனும், எனக்கு பிடிச்சு போனதாலதான் அங்க போறதா இருக்கேன். போய் பார்க்கிறேனே” என்றாள். சரி என அவன் தலையாட்ட, “இப்படி சொன்னா? இன்னும் என்ன?” எனக் கேட்டாள். “நீ உறுதியா இருக்கும் போது இன்னும் நான் என்ன சொல்ல? போ” என்றவன் சற்று தயங்கி, “என்கிட்ட பழைய படி எப்ப பழகுவ தேனு?” எனக் கேட்டான். “என்ன சொல்றீங்க?” “நீ என்னை விட்டு விலகி ஏதோ போல நடந்துக்கிற, என்னால உணர முடியுது தேனு” “வேணும்னு எதையும் நான் செய்யலங்க. இங்க வந்திட்டேன்னாலும் மனசுல நிறைய கோவம், ஆத்தாமைலாம் இருக்கு. முடிஞ்சா சரி பண்ணுங்க, இல்லைனா இப்படியே வாழ பழகுங்க” “சரி பண்ணிடுவேன் தேனு” வேக வேகமாக அவன் சொன்ன விதத்தில் அவளையும் மீறி சிரிப்பு வந்தது. வேறெங்கோ பார்த்தாள். அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே, அவளின் கையிலிருந்த கடலையை எடுத்து வாயில் போட்டான். சொத்தை கடலை என்பதை உணர்ந்தவனது முகம் அஷ்ட கோணலானது. வேறு கடலை எடுத்துக் கொடுத்தாள். அதை சாப்பிட்டவன், “வாழ்க்கைல கூட இப்படி ஏதாவது கசப்பா நடந்து அப்புறம் வேற நல்லது நடக்கும் போது பழசு நினைப்பு இருந்தா கூட மனசை அதிகம் பாதிக்காது” என்றான். “அப்படியா? கடலை பொட்டலத்தை நல்லா உத்து பாருங்க, நல்ல கடலை எது சொத்த கடலை எதுன்னு தெளிவா தெரியும், எதை செலக்ட் செய்யணும்னு நமக்கு தெரிஞ்சிருக்கணும்” என்றாள். இனி இங்கிருந்து கிளம்பும் வரை வாயே திறக்க கூடாது என முடிவு செய்து கொண்டான் ஆனந்த். வெகு நாட்களுக்கு பின்னர் அவர்களின் வாழ்வில் சற்றே இனிமை நிறைந்ததாக மாறியது அந்த அந்திப் பொழுது.