சரியாக அதிலிருந்து ஒரு வருடம் ஆறு மாதங்கள், அதே மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராயிட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வருவதற்காக காத்திருந்தாள் சைந்தவி.
ஆம்! அவர்கள் இருவரும் இன்று வருகிறார்கள்.
யார் அவர்கள்… விஜயனும் அவளின் எட்டு மாத மகள் ஆருஷியும்.
வருகிறார்கள் அவளிடம்.
படித்துக் கொண்டிருக்கும் போதே படிப்பு முடிய இரண்டு மாதம் இருக்கும் போதே குழந்தை பெற்றுவிட்டாள்.
யாரும் இல்லை. அவளும் விஜயனும் மட்டுமே. வெளிநாட்டில் இது எல்லோருக்கும் சகஜமே. ஆனால் பெரும்பாலானோரில் இருவரும் வேலையில் இருக்கும் போது, இந்தியாவில் இருந்து யாராவது உதவ செல்வர். இல்லையா கணவன் மட்டுமே வேலையில் இருக்க, மனைவி குழந்தையோடு சமாளித்துக் கொள்வாள்.
இவர்களுக்கு அங்கிருந்த இந்திய நண்பர்கள் உதவ, குழந்தை நல்லபடியாக பிறந்து விட்டது. பார்த்துக் கொண்டது எல்லாம் விஜயன் விஜயனே. அவனுக்கு நான்கு வாரங்கள் மட்டுமே விடுமுறை இருக்க, குழந்தை பிறப்புக்கு ஒரு வாரம் முன்பு அதனை எடுத்துக் கொண்டான்.
சைந்தவியுமே குழந்தை பிறப்புக்கு பத்து நாட்கள் முன்பு வரை கல்லூரி சென்றாள்.
கச்சிதமான சத்தான உணவு, நடைப் பயிற்சி, அமைதியான மன நிலை எல்லாம் ஒருங்கே அவளுக்கு விஜயன் கொடுத்திருந்தான். அவளுமே மனதில் பெரிதான ஏக்கங்கள் வைத்துக் கொள்ளவில்லை. நிதர்சனம் புரிந்து விஜயனின் சொல்படி நடந்தாள்.
ப்ரித்வி வருவதற்கு வெகுவாக முயற்சி செய்ய அந்த சமயத்தில் விசா கிடைக்கவில்லை.
விஜயனே எல்லாம் பார்த்துக் கொண்டான். கடவுள் அனுகிரகம் இருக்க, குழந்தை நல்லபடியாக எந்த சிக்கலும் இல்லாமல், பெரிதாக சிரமமும் கொடுக்காமல் பிறந்து விட்டது. பெண் மகள் ஆருஷி என்று பெயர் சூட்டினர்.
மூன்று வாரங்கள் மட்டுமே மனைவியையும் மகளையும் கண்ணுக்குள் வைத்து தாங்க முடிந்தது.
மூன்றாவது வாரத்தின் இறுதியில் ப்ரித்வி வந்து விட, அவனிடம் விட்டு விஜயன் அலுவலகம் கிளம்ப, அடுத்த ஒரு வாரத்தில் சைந்தவியும் கிளம்பிவிட்டாள். அவளின் ப்ராஜக்ட் சப்மிஷனுக்கான சமயம்.
இப்படியாக மாமனின் கவனிப்பில் ஆருஷி பகல் முழுவதும் இருக்க, மாலையில் இருந்து அடுத்த நாள் காலை வரை மட்டுமே அம்மாவும் அப்பாவும்.
மூன்று மாதம் மட்டுமே ப்ரித்விக்கு விசா இருந்தது. அவன் செல்லும் சமயம் படிப்பை முடித்து விட்டாள் சைந்தவி. பின் ஆருஷியை அவள் பார்த்துக் கொண்டாள்.
ஷப்பா இனி கவலையில்லை என்று அவர்கள் நிமிர்ந்த நேரம், சைந்தவிக்கு அவளின் ப்ராஜக்ட் மூலம் மிகபெரிய ஆஃபர் ஒன்று வர, ஆருஷிக்காக அவள் அதனை ஏற்க மறுத்தாள்.
விஜயனின் சம்பளத்தை விட அது பல மடங்கு அதிகம். சொல்லிக்கொள்ளவும் அவ்வளவு பெருமையான வேலை.
“நீயேன் உன்னோட அச்சீவ்மென்ட் விடற, நான் வேலையை விட்டுடறேன் ஆருஷியை பார்த்துக்கறேன்” என்று சொன்னவன், அதனை செய்தும் விட்டான்.
ஆனாலும் அவனுக்கு விசா எக்ஸ்டெண்ட் ஆவதில் பிரச்சனை வந்தது.
சைந்தவி “முடியவே முடியாது, நானும் எல்லாம் விட்டு வர்றேன்” என, வெகுவாக அவளை மிரட்டித் தான் பணிய வைத்தான்.
அவளின் சாதனை ஒன்றுமில்லாமல் போவதா?
“நான் தான் இருக்கிறேனே. அப்போது நீ என்னை நம்பவில்லையா? நம் மகளை நான் பார்க்க மாட்டேனா?” என்று எமோஷனல் ப்ளாக் மெயில் செய்ய, அது சற்று வேலை செய்தது.
“சீக்கிரம் வந்துடுவேன்” என்ற வாக்குறுதியோடு நான்கு மாத மகளுடன் இந்தியா திரும்பினான்.
அவனுக்கு இது ஒரு வேலை அவ்வளவே, கனவு லட்சியம் ஈடுபாடு என்பது போல எல்லாம் கிடையாது. அவனிருக்கும் இடத்தில் அவன் சிறந்து விளங்க வேண்டும் அவ்வளவே.
ஆனால் சைந்தவியின் ஈடுபாடு இதில் மிக அதிகம் என்று புரிந்தவன், அவள் அதில் இருந்து வழுவ விடவில்லை.
நான்கு மாதம் அவனின் அம்மா அப்பாவுடன் தங்கி குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்தவன், இதோ இப்போது ஸ்பௌஸ் விசாவில் மீண்டும் அமெரிக்கா, மனைவியிடம் வந்துவிட்டான்.
சைந்தவிக்கு நான்கு மாதங்கள் இருவரையும் பிரிந்து மிக கடுமையான நேரங்கள்! அப்படி என்ன வேலை மகளை விட என்று தோன்ற, மனதிற்குள் எப்போதும் போராட்டம் தான்.
தனியனாய் மகளை நன்றாக குறை சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டான். சிறு குழந்தையை பார்த்துக் கொள்வது என்பது எளிதல்லவே. அம்மாவும் அப்பாவும் உடன் இருந்தாலும், குழந்தையின் வேலைகள் எல்லாம் இவனே செய்தான்.
“ஏன்டா, அப்பா வேலைக்குப் போக அம்மா பார்த்துக்குவா? நீ என்னடா புள்ளையத் தூக்கிட்டு அவளை வேலைக்குப் போக விட்டு வந்துட்ட. நிஜமாவே சொல்லு, புள்ள பொறந்ததும் உன்னை விட்டு போயிட்டாளா?” என்று கேட்டிருக்க…
வேறு விஜயனைத் தான் பூங்கோதை பார்த்தாள் அன்று.
“உன்னை என்னால அடிக்க முடியாது” என்று சொன்னவன், அவளின் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்து விட்டான். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை.
அந்த நிமிடம் இருந்து சண்டையிடக் கூட பூவிடம் பேசுவதில்லை. ஒதுக்கி விட்டான் அவளை.
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன். அவன் சம்சாரம் முன்ன செஞ்சதை தானே சொன்னேன்” என்ற எண்ணம் தான் அப்போதும். சொன்ன வார்த்தைக்கு வருத்தமில்லை. “சொல்லாம இருந்திருக்கலாமோ. இப்போ நஷ்டம் யாருக்கு? எனக்குத் தானே! ஆகவழிப் பய” என்பதாக தான் பூங்கோதையின் எண்ணம்.
சில பேர் திருந்தவே மாட்டர்.
எல்லாம் கடந்து இதோ மனைவியிடம் வந்தாகிற்று.
விஜயனின் கைகளில் மகள் இருக்க, அவன் நடந்து வர, கண்களில் இருவரையும் நிரப்பிக் கொண்டாள்.
அருகில் வந்ததும் நான்கு மாதங்கள் பிரிந்திருந்த குழந்தை, எப்படி எதிர் வினையாற்றுவாளோ என்ற கவலையோடே சைந்தவி குழந்தையை நோக்கி கை நீட்ட, அப்பாவின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“அம்மாடா” என்று விஜயன் சொல்வதற்குள் கடகடவென்று சைந்தவியின் கண்களிலிருந்து நீர் இறங்கி விட்டது
“லூசு, அழுது குழந்தையை பயமுறுத்தாத” என்று கடிந்தவன்,
“அம்மாடா” என்று வலுக்கட்டாயமாக குழந்தையை அவளின் கையில் கொடுத்தான்.
முதலில் திமிறியவள், அம்மாவின் கையின் சூட்டை, ஸ்பரிசத்தை அறிந்ததும், அவளின் வாசனையை உணர்ந்ததும் அவளின் மேல் சாய்ந்து கொள்ள, அப்படி ஒரு அழுகை பொங்கியது சைந்தவிக்கு.
பால் கொடுத்துக் கொண்டிருந்த குழந்தை, விஜயன் கூட்டிச் சென்று விட, அதனை நிறுத்த அவள் பட்ட பாடு, எதுவும் முடியாமல், டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்தே நிறுத்தினாள்.
இப்போது மகளை கைகளில் வாங்கியதும் ஏதோ ஒரு உணர்வு பொங்க, கண்களில் கண்ணீர் நிற்காமல் இறங்கியது.
“பயந்துட்டேன்” என்று தேம்ப,
“நீ பயப்படலை, அழுது எங்களை பயப்படுத்துற, கண்ணை துடை” என்று அதட்டினான்.
ஆனாலும் கண்ணீர் பெருகியது.
“அய்யே” என்றபடி அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, “லவ் யூ பேபீஸ்” என்றான் புன்னகை முகமாய்.
அவனின் பதட்டம் அவன் மட்டுமே அறிந்தது, கை குழந்தை பிரித்து கூட்டி வந்துவிட்டான். பத்திரமாய் அவளை அவளின் அம்மாவிடம் சேர்க்க வேண்டும்.
எத்தனை பேருக்கு புரிந்து கொள்ள முடியும், சைந்தவியின் வளர்ச்சிக்காக இவன் வேலையை விட்டு விட்டான் என்று. பார்ப்பவர்களுக்கு மனைவி சம்பாதிக்க இவன் உட்கார்ந்து சாப்பிடுகிறான் என்று தானே தோன்றும்.
ஆனாலும் மகள் முக்கியம் அல்லவா, அவளுக்காகவும் வேலையை விட்டு அவளை முழு நேரமும் பார்த்துக் கொள்கிறான்.
பேச்சுக்கள் நிறைய எதிர்கொள்ள வேண்டும் என்று புரிந்தும் இருந்தான்.
இது மனைவிக்கான விட்டுக் கொடுத்தலாய் தெரியாது, அவனின் சம்பாதிக்க இயலாத தன்மையாய் மனைவின் சம்பாத்தியத்தில் சாப்பிடும் கணவனாய் தோன்றும்.
ஆனால் இதெல்லாம் விட குழந்தை அவனுக்கு முக்கியம். யாரிடமும் விட மனதில்லை.
இனி சில வருடங்கள் அவன் கடக்கப் போவது மிக கடுமையான காலங்கள். நிலைமை சீரான பிறகும் இந்த பேச்சுக்கள் வாழ்க்கை முழுமைக்கும் கூடத் தொடரலாம்.
“என் சம்பாத்தியம் போதும், நீ வீட்டிலிருந்து குழந்தையை பார்த்துக் கொள்” என்று சொல்ல மனதில்லை.
பிறப்பும் வளர்ப்பும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டான், அவளின் சாதனைகளையும் முடக்க மனதில்லை.
இருவரும் வேலைக்கு சென்று டே கேர் ரில் விடலாம், ஆனால் அப்படி விட்டு சம்பாத்தித்து அதனால் ஆகப் போவது அவனுக்கு ஒன்றுமில்லை.
பணம் முக்கியமே ஆனால் பணம் மட்டுமே முக்கியமல்ல, சைந்தவி அவளும் மகளும் அதையும் விட முக்கியம் என்ற தெளிவு இருந்தது. எந்த வார்த்தைகள் வந்தாலும் எதிர் கொள்ளும் தைரியமும் இருந்தது.
சைந்தவி வீடு வந்ததும், மகளை கொஞ்சி தீர்க்க,
“அவளுக்கு வலிக்கும், பயந்துக்குவா, இறுக்காதே” என்று வெகுவாக சொன்ன போதும் அவளின் கையில் இருந்து வாங்கவில்லை. மகளுக்கு சீரியல் புட் கலந்து கொண்டு வந்து கொடுக்க, வாகாய் அமர்ந்து ஊட்ட ஆரம்பித்தாள்.
மகளோடு பொழுதுகள், இருவரையும் பார்த்தபடி இவனின் பொழுதுகள்.