சஞ்சனா…. கதைத்திரி-16

அத்தியாயம் 38

 சஞ்சு இரத்த வெள்ளத்தில் கிடக்க , விஜயன் படபடப்பானார் . மூளை வேலை நிறுத்தம் செய்ய , ஸ்தம்பித்து நின்றார் .பின் ஒருவாறு இயல்புக்கு வந்தவர் , ராதாவிற்கு போன் அடிக்க , படபடப்பில் தப்பான நம்பர்களையே அழுத்தினார் .பின் அரக்கபரக்க ராதாவின் பிளாட்டிற்கு ஓடினார் .

 ரமேஷ் கிளம்பிக் கொண்டிருக்க , விஜயன் மூச்சு வாங்க, விசயத்தைச் சொல்ல , ராதா நெஞ்சைப் பிடித்தபடி ஓட , விஜயன் பின் தொடர்ந்தார் .

விஜயனின் நிலைமையை  உணர்ந்த ரமேஷ் ,  பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டார் . வீட்டைப் பூட்டி விட்டு , பணம் மற்றும் கார் சாவியை எடுத்துக் கொண்டு, குடியிருப்பு காவலர்கள் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு விஜயன் வீட்டிற்கு ஓட , போகிற வழியிலேயே ராஜிக்குப்  போன் செய்து , விவரம் தெரிவித்து , அவர் மகன் ரவி இருப்பதை அறிந்து , அவனையும் கார் எடுத்துக்கொண்டு விஜயன் வீட்டுக்கு வர சொன்னவர் , வீட்டிற்குள் நுழைந்தார் .

அடுத்து காரியங்கள் துரிதமாக நடக்க , சஞ்சுவை காவலாளிகளின் உதவியோடு தூக்கி வந்து ரவியின் காரில் ஏற்ற , ரவியைப் பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்குப் போகச் சொன்னார் . 

அதே காரில் விஜயனும், ராஜியும் ஏறிக் கொள்ள , அடுத்த காரில் ரமேஷும் ராதாவும் பின் தொடர்ந்தனர்.

 சஞ்சு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் . சஞ்சு அபாயக் கட்டத்தில் இருக்க , மருத்துவமனையில் ஐ.சி.யு.வில் இருந்தாள் . விஜயன் ஆடிப் போயிருந்தார். சஞ்சுவின் தற்கொலை முயற்சி அவரை உலுக்கியிருந்தது .அனைவரும் இடிந்து போய் அமர்ந்திருந்தனர் . ராஜியும் ராதாவும் ஒருபுறம் நின்று அழுக ,

 மெதுவாக விஜயன் அருகே வந்து , “இது போலீஸ் கேஸ், மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவித்திருப்பார்கள் . கொஞ்ச நேரத்தில் போலீஸ் வரும்” என்று விவரத்தை ரமேஷ் தெரிவித்தார் .பின் , “என்ன நடந்தது ?” என்று கேட்க ,

விஜயன் விவரத்தைத் தெரிவிக்க , ரமேஷும் அதிர்ந்து நின்றார் . இதைக் கவனித் கண்ட ராதாவும், ராஜியும்  அருகில் வர, அவர்களும் விசயமறிந்து பேச்சற்று நின்றனர் .

விசயம் பெரிது என்பதை உணர்ந்தவர்கள் , அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க  , முதலில் விவேக்கிடம் பேசுவோம் என்று அவனை அழைக்க , மீண்டும் தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றே வர , அவசரம் உடனே கால் செய் என்று ஒரு பதிவைத் தட்டி விட்டுக் காத்திருந்தனர் .

“விவேக்கிடம் என்ன சொல்வேன்? , நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேனே…” என்று ராதா புலம்பத் தொடங்கினார் .

அதற்குள் மருத்துவர் வர , அனைவரும் சூழ்ந்து கொண்டனர் , நிறைய இரத்தம் போய் இருக்கிறது. உறுதியாக எதையும் இப்பொழுது சொல்ல முடியாது , தொடர்ந்து கண்காணிக்கிறோம் .  பார்ப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார் .

எல்லோரும் கலங்கிப் போய் அமர்ந்தனர் , கீத்து கல்லூரிக்குச் சென்றிருந்தாள் , அவளைப் பதட்டப்படுத்த வேண்டாம். அவள் வந்தபின் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் . ஒவ்வொரு நிமிடமும் யுகமாக கழிந்தது . கடவுளையே முழுதாகச் சரண் அடைந்திருந்தனர் .

 ரவியும்  , ரமேஷும் அனைவரையும் சாப்பிட வைப்பது , மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுப்பது , பணம் கட்டுவது என்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள் .

விஜயனிடம் போலீஸிடம், “என்ன சொல்லப் போகிறீர்கள் ?” என்று கேட்க , 

விஜயன் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தார் . விவேக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது .“வீட்டில் சின்ன சண்டை என்று சொல்லி விடுவோமா?” என்று விஜயன் கேட்க , 

ரமேஷ் சற்று யோசித்தார் , “இல்லை விஜயன், அது சரி வராது என்று நினைக்கிறேன் , புகைப்படங்களை அனுப்பியவர்களின் நோக்கம் என்ன ? என்று தெரியவில்லை . வேறு புகைப்படங்கள் வருமா? இல்லை மிரட்டல் வருமா? என்றும் தெரியவில்லை..” என்று ரமேஷ் இழுக்க ,

“இல்லை,  விவேக்கிடம் பேசி முடிவு எடுப்போம்” 

“விவேக்கிற்கு முயன்று கொண்டு தான் இருக்கிறோம் , நாமும் யோசித்து வைக்க வேண்டும் , மதியம் போலீஸ் வந்தால் சொல்ல வேண்டும் அல்லவா..?”  

விஜயனுக்கும் சூழ்நிலைப் புரிந்தது , “நீங்க என்ன சொல்கிறீர்கள்?” 

“உண்மையைச் சொல்லி விடுவது நல்லது என்று தோன்றுகிறது , என் மாணவனின் தந்தை பெரிய அதிகாரியாக இருக்கிறார் , நான் வேண்டுமானால் அவரிடம் பேசி , பெயர் வெளியே வராமல் பார்த்துக் கொள்ளலாம்.”

“பின், இது என்னுடைய கருத்துத் தான் , முடிவு உங்களுடையது தான் , போலீஸ் வரும் வரை நிதானமாக , அனைத்துச் சாதக பாதகங்களையும் யோசியுங்கள்” என்று  தோளை தட்டிக் கொடுத்து விட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் .

மதியம் மூன்று மணியளவில் கான்ஸ்டபிள் வர , விஜயன் உண்மையை விளக்க , அவர் போனைக் கேட்டார் .போன் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தனர் . 

“ஓ…! , நாளை காவல்நிலையம் வரும்போது எடுத்து வாருங்கள்.”

“ஸ்.பி.மனோகரன்…”. என்று ரமேஷ்  ஆரம்பிக்க ,

“சார் சொன்னார் , பார்த்துக் கொள்ளலாம் . பெயர் வெளியே வராது , இதில் சைபர் கிரைமின் வேலையையும் இருக்கிறது , அதற்குத்தான் காவல்நிலையம் வரச் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் .

த்தியாயம் 39

மாலையில் வீடுக்கு வந்த கீத்து  , வீடு பூட்டியிருப்பதைக் கண்டு , தன் சாவியால் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் . பின் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு அம்மாவை அழைத்தாள் . 

ராதா விவரம் ஏதும் சொல்லாமல் மருத்துவமனை பெயரைச் சொல்லி வரச் சொன்னாள் . 

“அம்மா, யாருக்கு? என்னாச்சு?” 

“ஒன்றுமில்லை வா.. நேரில் பேசுவோம்” என்று போனை வைத்தார் .

இதற்கிடையில் விவேக்கிற்கு முயன்று கொண்டே இருந்தனர் . விஜயன் யாரிடமும் எதுவும் பேசாமல் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டார் .

கீத்து மருத்துவமனைக்கு வந்து , விவரம் தெரிந்தவுடன் அழுது தீர்த்தாள் . அப்போது,  “இந்தப் பிள்ளை இப்படிக் கிடக்குது , அந்தப் பிள்ளை போனே எடுக்கவில்லை..”  என்று ராஜி புலம்ப, 

சூழ்நிலை உணர்ந்த கீத்து , “அம்மா, குரு வந்து கொண்டிருக்கிறார்..”

“என்னடி சொல்கிறாய் ?” என்று சத்தமாகக் கேட்க ,

சத்தத்தைக் கேட்ட அனைவரும் அருகில் வர , “ஆமாம் அம்மா , குருவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னே பிராஜக்ட் முடிந்து விட்டது . அதனால் டிக்கெட்டை மாற்றிக் கொண்டு கிளம்பி விட்டார் . சஞ்சுவிற்கு  ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று சொல்லவில்லை , அநேகமாக விமானத்தில் இருப்பதால் சிக்னல் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்…” என்று முழு மூச்சாகச் சொல்லி முடித்தாள் .

“எப்போது வருவான் ?” விஜயன் கேட்க , 

“அதிகாலை இரண்டு மணிக்கு தரை இறங்குவார் என்று நினைக்கிறேன்…” .

அப்பாடி ஒரு கவலை தீர்ந்தது என்று அனைவரும் ஆசுவாசமானார்கள் . விவேக் வருகிறான் என்பது விஜயனுக்குத் தெம்பைத் தர , அமைதியாகப் போய் அமர்ந்து கொண்டார் .

ரவியும் ரமேஷும் தங்க , மற்ற அனைவரும் வீட்டுக்குக் கிளம்பினர் . கீத்து வர மறுத்து அழுது  அடம்பிடிக்க , 

“மருத்துவமனையில் அனுமதிக்கமாட்டார்கள். நாளை காலை வருவோம் , நிச்சயமாகச் சரியாகி விடுவாள் . மஞ்சு  தெய்வமாக இருந்து காப்பாற்றி விடுவாள்” என்று நம்பிக்கையூட்டி அழைத்துச் சென்றனர் . 

“அறைக்கு மாற்றிய பிறகு, நீயே துணை இரு , நீ இருந்தால் அவளுக்கும் ஆறுதலாக இருக்கும்” என்று  பேசி, அழைத்துச் சென்றனர் .

 இந்த முறை அனைவரின் வேண்டுதல்களும் வெற்றி அடைய, சஞ்சு நள்ளிரவு ஒரு மணிக்குக் கண் விழித்தாள் .  அவள் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் அறிவிக்க, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் .

 விமானம் தரையிறங்க , ஃபிளைட் மோடை மாற்றியவன் , குவிந்து கிடந்த மிஸ்டு கால்களை கண்டு அதிர்ந்து போனான் .வேகமாக அப்பாவிற்கு அழைக்க , அவர் அழத் தொடங்கினார் . விவேக் பயந்து போக , போனை விஜயனிடம் வாங்கிய ரவி ,

“பயப்படாதே விவேக்  , சஞ்சு நன்றாக இருக்கிறாள். கண்முழித்து விட்டாள் , அபாய கட்டத்தைத் தாண்டி விட்டாள்” என்ற விவரத்தைச் சொல்லி ,  மருத்துவமனை விபரம் சொல்லி, வரச் சொன்னார் .

கீத்துவிற்கு போன் செய்வோமா ? என்று யோசித்தான் , பின், அவள் விழித்திருந்தாள் பேசட்டும் என்று வந்துவிட்டேன் என்று மட்டும் பதிவிட்டான் . 

சஞ்சு பற்றிய நல்ல செய்தி தெரியும் வரை புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள் , நல்ல செய்தி கேட்டப் பிறகு தான் தூங்க ஆரம்பித்திருந்தாள் . அதனால், பதிவிற்குப் பதில் இல்லாமல் போக , கவலையுடன் மருத்துவமனைக்குச் சென்றான் .

அத்தியாயம் 40

ரவி மருத்துவமனை வாசலிலே இருக்க , விவேக் பரபரப்பாக அவனிடம் ஓடினான் . “பயப்படாதே , சஞ்சு நன்றாக இருக்கிறாள்” என்று ஆசுவாசப்படுத்தினான் . நேராக ஐ.சி.யு விற்கு ஓட , கிழிந்த நாராய் கிடந்த தங்கையைப் பார்த்து அழுதான் . 

ரமேஷ் சமாதானப்படுத்த ,

 “ஏன் அங்கிள் , சஞ்சுவிற்கு இப்படி நடக்க வேண்டும் , அவளே ரொம்ப பயந்த சுபாவம். எப்படி இதிலிருந்து , அவளை மீட்டுக் கொண்டு வரப் போகிறேன்?” என்று அழுக,

 அதுவரை அவள் உயிரைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு , விவேக்கின் கவலை புரிய , ஆடித்தான் போனார்கள் . விவேக்கின் கையைத் தட்டியபடியே அருகில் அமர்ந்திருந்தனர் . இத்தனை களோபரத்திலும் விவேக் அப்பாவின் அருகில் செல்லவில்லை . விஜயனும் மகனைப் பார்த்தபடி மட்டுமே உட்கார்ந்திருந்தார் . அருகில் வரவில்லை.

சற்று நேரங்கழித்து , “விவேக், அப்பாவிடம் பேசு. நாங்கள் போய் காபி , டீ ஏதாவது வாங்கி வருகிறோம்..” என்று அவர்களுக்குத் தனிமை கொடுத்து விட்டு , உணவகத்திற்குச் சென்றனர் .

விவேக் அப்படியே அமர்ந்திருக்க , விஜயன் முதன்முறையாகத் தன் ஈகோவெல்லாம் தள்ளி வைத்து விட்டு , மகன் அருகில் போய் அமர்ந்தார் . விவேக் பேசாமலே இருக்க ,  விஜயன்  கண்கலங்கினார். 

விவேக்கும் சிறிது நேரம் அமைதியாக இருந்தான் , பின், “என்ன நடந்தது? “என்று கேட்க ,

விஜயன் தலை குனிந்தபடி  , “டென்ஷனில் கொஞ்சம் வார்த்தைகளை விட்டு விட்டேன்..”  

விவேக் ஒரு கசந்தப் புன்னகையை வெளிப்படுத்தினான். அந்தப் புன்னகை , இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்பது போல் இருந்தது .

ரமேஷும் , ரவியும் காபியோடு வர , விஜயன் காபியை வாங்கிக் கொண்டு , தள்ளிப் போய் உட்கார்ந்தார் .

விவேக் ஆசுவாசமானவுடன் ,  போலீசாரிடம்  சொன்ன தகவலையும் , அடுத்த செய்வதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள் . விவேக் அனைத்தையும் பொறுமையுடன் உள் வாங்கிக் கொண்டான் .

மறுநாள் காலை நான்கு மணிவாக்கில் சஞ்சு மீண்டும் கண் விழிக்க , விவேக் போய் பார்த்தான் . பிராண வாயு கருவிகள் பொறுத்தியிருக்க , சஞ்சு கண் கலங்கினாள் .

விவேக் கண்ணீருடன் தலையைத் தடவினான் , “ஏன்டா…. அண்ணாவிடம் சொல்லியிருக்கலாமே..?”

சஞ்சு மீண்டும்  கண்கலங்க , 

“சரி விடு , தைரியமாக இரு , அண்ணன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்” என்று தைரியமூட்டினான் .

சஞ்சுவும் நிம்மதியாக உறக்கத்திற்குச் சென்றாள் . விவேக் வழக்கம் போல் பொறுப்பை எடுத்துக் கொண்டான் , ரமேஷ்யையும் , ரவியையும் வீட்டுக்குப் போகச் சொன்னான் .

“இப்பொழுது தான் பயமில்லையே , கண்டம் தாண்டி வந்திருக்கிறாய் , நீ போய் , கொஞ்ச நேரம் தூங்கி வா , பின்னர் காவல் நிலையம் போய் வருவோம்” என்றார் ரமேஷ்.

“இல்லை அங்கிள் , இதுவரைக்கும் நீங்கள் இரண்டு பேரும் செய்ததே பெரிய உதவி , இதற்கு என்றென்றும் நாங்கள்  கடமைப் பட்டிருக்கிறோம்…” என்று தளுதளுத்தான் .

“விடுப்பா , இதெல்லாம் பெரிய விசயமாகப் பேசிக் கொண்டு , சஞ்சு எங்கள் பெண் போலத்தான்…” 

“இல்லை அங்கிள் , நான் விமானத்தில் நன்றாகத் தூங்கிவிட்டேன் , நீங்கள் போய் ஒய்வு எடுத்து வாருங்கள் .” 

“சரிப்பா…” என்று அவர்கள் கிளம்ப , விஜயன் வந்து நன்றி தெரிவித்தார் .

“இவரையும் கூட்டிப் போங்கள் அங்கிள்..”

“இல்லைப்பா , நான் இருக்கிறேன்…” என்று ஆரம்பிக்க , 

“இப்போது போய் ஓய்வு எடுத்து விட்டு பதினொரு மணிவாக்கில் வாருங்கள் . நான் காவல் நிலையம் போகும் போது , நீங்கள் இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்…” என்றான் கண்டிப்புடன் .

“சரிப்பா” என்று அவர் கிளம்ப , “நாளை வரும் பொழுது மறக்காமல் சஞ்சு போனை எடுத்து வாருங்கள்”

“சரி…” என்று விஜயன் தலையாட்டினான்.

மனம் முழுக்க கவலை சூழ, ஐ.சி.யு. வாசலில் , அப்படியே சுவரில் சாய்ந்தான்.

தொடரும்……