“அப்புறம் உன் பேபிக்கிட்ட பேசுறியா?” என்று விஜயன் கேட்க,
“வேண்டாம், வேண்டாம், அப்புறம் கூப்பிடறேன்”
“பாரு உங்கண்ணனை, நொண்ணன். எவ்ளோ பெரிய கிட்னி அவனுக்கு. உன்னோட இருக்குற என்னை டிஸ்டர்ப் பண்ணுவானாம். ஆனா என்னோட இருக்குற உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டானாம். ரொம்ப நல்லவன்” என்று இழுத்து பகடி பேசினான்.
“எஸ், எஸ், ரொம்ப நல்லவன், இப்போ காஞ்சனாக்கிட்ட கொஞ்சம் சேஞ்சஸ் தெரியுது. எப்பவும் சிரிச்ச மாதிரி இருக்கான். சைந்தவி ரொம்ப ஹேப்பி”
“நானும் ஹேப்பி ஹேப்பி” என்று அவளைப் போலவே சொன்னவன்,
“இதுக்கு மேல எல்லாம் என்னால முடியாது” என்று வேகமாக அவளின் இதழ்களை முற்றுகையிட… நடந்த சிறு தள்ளு முள்ளில்… அவனின் கை பட்டு டீ வி யில் பாடல் ஒலித்தது.
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறிவாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
வேகமாய் அவனில் இருந்து விலகியவள்
“என்ன பாட்டு இது?”
“நம்ம தல டீ ஆர் பாட்டு, அவரை அடிச்சிக்க ஆளே கிடையாது தெரியுமா? கேட்டாலே ஒரு ஜோஷ் வரும்” என்றவன் திரும்பவும் அவளை இறுக்கிக் கொண்டான்.
“பசிக்குது காஃபி”
“என்னடா ஆரம்பிக்கலையேன்னு நினைச்சேன்” என்றவன் அவளை தூக்கிச் சென்று சமையல் மேடையில் அமர்த்தினான்.
“உங்களை விட உங்க காஃபியை மிஸ் பண்ணினேன்”
“நீ மிஸ் அப்புறம் பண்ணு, முதல்ல என்னை கிஸ் பண்ணு. அப்போ தான் காஃபி” என்று சொல்லி கேட்டு வாங்கி, அவள் கேட்டதை செய்து கொடுத்து என்று அவர்களின் இல்லறம் இனிதாக ஆரம்பமாகியது.
யுனிவெர்சிட்டி ஆப் மிச்சிகனில் அவளுக்கு இடம் கிடைத்திருக்க, அவர்களின் இடத்தில இருந்து ஒரு நாற்பத்தி ஐந்து நிமிட பயணம். பஸ்ஸில் சென்று வந்து விடுவாள்.
வீடு இருக்குமிடத்தில் இருந்து அருகில் தான் அவனுடைய அலுவலகம். சத்தங்கள் இல்லாத ஒரு மகிழ்வான வாழ்வு. சமையல் எல்லாம் விஜயனே. அவனுக்கு சைந்தவியை விட நன்றாக வந்தது.
“நீ பேசாம ஹோட்டல் பிசினெஸ் போகலாம் இல்லை செஃப் ஆகியிருக்கலாம்” என்று சைந்தவி அவ்வப்போது சொல்லவே செய்வாள்.
ஒரு நாள் ரிச்சர்டை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தனர். சவுத் இந்தியன் சாப்பாடு, மீன் குழம்பு, சிக்கன் வறுவல் என விஜயன் அசத்தியிருந்தான் அவனுக்காக காரம் மிதமாக போட்டு.
“யுவர் குக்கிங் டூ குட்” என்று அவன் புகழ்ந்து சென்றிருந்தான்.
அதை சைந்தவி ப்ரித்வியிடம் சொல்ல “என்ன நீ மட்டும் ருசியா சாப்பிடறையா? சைந்துக்கு யார் செஞ்சு குடுப்பா, எங்க பக்கம் ரெசிபி எல்லாம் நான் அனுப்பறேன். அவளுக்கு செஞ்சு குடு” என்று.
அதையும் பழகி செய்து போட்டான். இப்படியாக நான் “ஆண்” சமையலறை என்னுடைய இடம் கிடையாது என்ற மனப்பான்மை அறவே கிடையாது. அவள் மீதிருந்த காதலால் என்றால் அதுவும் கிடையாது. வேலைகளை பகிர்ந்து செய்தான்.
ஆனால் இருவரும் வேலையில் மிகுந்த கவனமாக இருந்தனர். அவன் கம்பனி வேலையில் அவள் படிப்பில்.
கணவனை நினைத்து அவ்வளவு கர்வம் சைந்தவிக்கு. காலை ஐந்து மணிக்கு எழுந்து கொள்வான். எந்த நேரம் உறங்கினாலும் சோம்பி இருந்து பார்த்ததேயில்லை. இவள் எழுந்து இவள் தயாராகி செல்லத்தான் நேரம் இருக்கும்.
சற்று நிதானம் சைந்தவி, கணிணியில் அவளின் கைகள் விளையாடும் வேகம், அவளின் தினப்படி வேறு வேளைகளில் இருக்காது.
“நீ தானே செய்யணும். நான் ஏன் செய்யணும். உனக்கு பாதி எனக்கு பாதி. நீ இந்த வேலையை செய், நான் அந்த வேலையை செய்யறேன் என்பது போல எந்த பாகப் பிரிவினையும் அவர்களுக்குள் இருக்காது.
விஜயன் செய்தால் சைந்தவி உதவுவாள். சைந்தவி செய்தால் விஜயன் உதவுவான். பெருமாபாலான கணவன் மனைவி போல குறை சொல்லும் பழக்கம் இருவரிடமுமே இல்லை
சைந்தவி எப்போதும் அவனிடம் சொல்வது “நீயெல்லாம் ராணுவத்துல தான் இருந்திருக்கணும்” என்று.
அவனை அவ்வளவு கட்டுக்கோப்பாய் வைத்திருந்தான். உணவு உறக்கம் உடை பேச்சுக்கள் எல்லாம்.
அவனின் ஏரியா பேச்சுக்கள் அவனின் ஏரியாவின் ஸ்பெஷலாய் அங்கே மட்டுமோ வருமோ என்னவோ?
சொல்லப் போனால் அவன் ஏன் ஈர்த்தான், ஏன் அவன் மேல் பித்து பிடித்து அவனுக்காக எல்லாம் விட்டு வந்தாள் என்று தெரியாது. அவனை ஏன் விட்டு வந்தால் என்றும் தெரியாது.
ஆனால் இன்று தெரியும் அவனின் குண நலன்கள் அவ்வளவு ஈர்த்தன.
அவளின் முதல் வருட படிப்பு முடிந்து விட்டது. “இப்போ தான் வந்தது போல இருக்கு ப்ரித்வி. ஆனா ஒரு வருஷம் முடிஞ்சிடிச்சு, குட்டிம்மா எங்கே?” என்று அண்ணனிடமும் ரித்தியிடமும் விடியோ கால் பேசிக் கொண்டிருந்தாள்.
ப்ரித்வி “நான் படிப்பை முடிக்கும் முன்னே டூரிஸ்ட் விசால வா சுத்தி பார்ப்போம்” என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தாள்.
எல்லாம் கேட்டபடி அமைதியாய் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் விஜயன்.
அவள் வைத்ததும் “உனக்கு சுத்தி பார்க்கணுமா, நாம போகலாமா?” என்று கேட்டான்.
“எனக்கு உன்னை மட்டும் தான் சுத்தி பார்க்கணும்” என்றாள் கண்சிமிட்டியபடி.
விஜயனின் முகம் வெட்கத்தில் தடுமாற, “அச்சோ, என்ன இது?” என்று கன்னத்தில் கை வைத்து ரசனையாய் பார்த்தபடி கேட்டாள்.
“போடி” என்று முறைத்தவன், மீண்டும் வேலையை ஆரம்பிக்க…
“நான் பேசிட்டேன், நீ இன்னும் பேசலை” என்று எடுத்துக் கொடுத்தாள்.
பூவிற்கு அழைத்து அவளிடம் இரண்டொரு வார்த்தை பேசி அம்மாவிடம் கொடுக்க சொன்னான். அவரிடமும் பேசிய பிறகு சின்ன குட்டியிடம் அலைபேசியை காண்பிக்க சொல்ல… அவ்வளவு தான் மாமனை பார்த்ததும் அவள் துள்ளினாள்.
“மா, மா, கெட்டியா பிடி, உட்றாத” என்று பதறினான்.
ஆம்! மாமனைப் பார்த்தால் அவளுக்கு அப்படி ஒரு குஷி. ஒரு வருடம் மூன்று மாதம் ஆகிவிட்டது. எதையாவது பிடித்து நடக்க ஆரம்பித்து இருந்தாள்.
பின்பு சைந்தவி திரையில் தெரிய, இன்னுமே உற்சாகம் சின்னக் குட்டியிடம். அவளின் அத்தை அவளை பார்த்ததும் “ஹே” என்று கை தட்ட, அதனை அச்சு பிசகாது திரும்பச் செய்தாள் சின்ன குட்டி.
இப்படியாக அவர்களின் சனி இரவு, இந்தியாவில் ஞாயிறு காலை இருந்தது.
அழைப்புகள் எல்லாம் முடித்து, அவன் லேப்பில் அமர்ந்திருக்க, “ஒரு நிமிஷம்” என்றவள் அவனின் லேப்பை மடியில் இருந்து எடுத்து வைத்து விட்டு, அவனின் மடியில் வாகாக அமர்ந்து கொண்டு, “நான் ஒரு விஷயம் சொல்லவா?”
“சொல்லு, சொல்லு” என்றான் வேலை செய்த களைப்பில் சோர்வாக.
அவனின் குரலில் “ஆமாம், சனிகிழமை நைட் என்ன வேலை செய்யற? இங்க அப்படி எல்லாம் வேலை கிடையாதே”
இது அவனின் தனிப்பட்ட சில வேலைகள் எக்ஸ்ட்ரா வருமானத்திற்காக செய்வது. சைந்தவியிடம் சொல்லியிருக்கவில்லை.
பணம் மனிதனின் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமன்றி நிம்மதிக்கும் முக்கியம். அடுத்தவரிடம் பணத்திற்கு நிற்பதோ இல்லை அவர்கள் உதவியை ஏற்றுக் கொள்வதோ ஒரு அதீத மனஉளைச்சலை கொடுக்கிறது அவனுக்கு.
சைந்தவியிடம் இம்மியும் காண்பித்துக் கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்கா வந்த நாளாக பணத்தின் பின்னும் ஓட ஆரம்பித்து விட்டான்.
தனியாக ப்ரீ லான்சராக சில வேலைகள் கேட்பவருக்கு செய்து கொடுத்தான். அதுவுமே கணிசமான வருவாய் கொடுத்தது.
“அதுவா எனக்கு வேலை செய்யத் தெரியலை இல்லையா, அதான் இங்க வந்தும் செய்யறேன்”
இவன் வீட்டில் வேலை செய்வதை பார்த்து சைந்தவி கிண்டல் செய்வதை சொன்னான்.
“ஆமா, உனக்கு வேலை செய்யத் தெரியுமா? தெரியாதா? வீட்டுக்கு வந்து இதைப் பிடிச்சிட்டு தொங்கற” என்பவள்,
“நான் செய்து கொடுக்கட்டுமா?” என்றும் கேட்பாள், அதன் எதிரொலியாக இப்படி ஒரு பதில்.
“ப்ச் போடா” என்று சலித்தவள்,
“ஐ திங்க் ஐ அம் ப்ரெக்னன்ட்” என்று சொல்ல…
முதலில் அசால்டாக கேட்டுக் கொண்டிருந்தவன், “என்ன?” என்றான் அதிர்ச்சியாக.
“எஸ் நான் கர்பமா இருக்கேன்னு தோணுது”
“ஏன் தோணுது” என்றான் கலவரமாக. இன்னும் ஒரு வருட படிப்பிருக்கிறதே.
“தோணுது, ஏன் உனக்கு சந்தோஷமா இல்லையா?”
“இல்லாம என்ன? ஆனா நம்ம ஊர் னா குதிச்சிருப்பேன், இங்கே என்னன்னு தெரியலையே. மேனேஜ் பண்ணிக்குவியா?” என்று பயத்தோடு கேட்டான்.
“எதுன்னாலும் பார்த்துக்கலாம் அதான் நீ இருக்கியே” என்றவள், அவனின் கழுத்தைக் கட்டி சாய்ந்து கொண்டு, “இப்போ நாம அப்பா அம்மா ஆகப் போறோம், அதை மட்டும் நினை”
“முதல்ல கன்ஃபர்ம் பண்ணுவோம், இல்லைன்னா ஏமாற்றமா இருக்கும்” என்றவன் அப்போதே அவர்களின் அபார்ட்மெண்டில் இருந்த ஒரு இந்திய மருத்துவ தம்பதியிடம் கை பேசியில் பேசி, சொன்னதை செய்து, குழந்தையை உறுதி செய்தான்.
எப்போதென்றாலும் இந்த சூழலை பார்த்து தானே ஆக வேண்டும் என்று புரிந்து, இந்தியாவில் இருப்பது போல கத்தி ஆர்ப்பாட்டம் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்தான் சைந்தவியோடு.