மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராயிட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வருவதற்காக காத்திருந்தான் விஜயன்.
ஆம்! விஜயன் சைந்தவிக்காக காத்திருந்தான்.
உபயம் ரிச்சர்ட்ஸ்…
அவன் இந்தியா வந்து சென்ற பிறகு பெரிதாக பேச்சுக்கள் இல்லை என்றாலும் அவ்வப்போது “ஹாய், ஹலோ” என்று மெசேஜ்கள் வாட்ஸ் சப்பில் வந்து குதிக்கும்.
அவளுமே ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவாள்.
ஒரு மெல்லிய நட்பு அவர்களுக்குள் இழையோடும். மிகுந்த மரியாதையான் பேச்சுகள் இருக்கும்.
இப்போது அக்சப்டன்ஸ் குடுத்ததும் “அங்கே படிக்க வருகிறேன்” என்று சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டிருக்கும் ஒருவன் அவனின் நாட்டிற்கு இன்னும் மூன்று மாதத்திற்குள் செல்கிறாள், சொல்வது தான் மரியாதை என்று சொல்லிவிட்டாள்.
“நான் உங்களுக்கு எந்த வகையிலாவது உதவ முடிந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுப்பீர்களா?” என்று தெளிவான ஆங்கிலத்தில் கேட்டிருந்தான்.
மிகுந்த யோசனை தான், கேட்பது சரியா தவறா என்று தெரியவில்லை. கேட்டுத்தான் பார்ப்போமே என்று “என்னுடைய கணவருக்கு அங்கே வேலை கிடைத்து என்னோடு இருந்தால் மகிழ்ச்சி. அதற்கு ஏதேனும் உதவ முடியுமா?” என்று அவள் கேட்டுவிட்டிருந்தாள்.
“என்னால் முடிந்தால் நிச்சயம் செய்வேன்” என்று முடித்திருந்தான்.
“செய்துவிடுவேன்” என்று சொல்லவில்லை, “செய்ய மாட்டேன்” என்றும் சொல்லவில்லை.
இதோ இந்தியாவில் ரிச்சர்ட் கம்பனியின் ஒரு ப்ராஜக்ட் நடந்து கொண்டிருக்க, அதற்கு விஜயனை அனுப்புங்கள் என்று அவனின் அலுவலகம் மூலமே மெயில் அனுப்பிவிட்டான்.
இதொன்றும் சாதாரணமில்லை. நிறைய அண்டர் கிரவுண்ட் வேலைகள் செய்திருக்கிறான் என்று புரிந்தது.
“நன்றி” என்பது மிகச் சிறிய வார்த்தை என்று அவள் செய்தியனுப்ப…
“நட்புக்குள் நன்றி தேவையில்லை” என்ற செய்தி வந்தது.
இதோ அவள் செல்வதற்கு முன்பே விஜயன் சென்று விட்டான்.
ப்ரித்வி அவனை துரத்தாத குறை தான் “நீ கிளம்புடா, டைம் எதுவும் கேட்டுடாதே, இங்கே நான் பார்த்துக்குவேன். அங்கே அவளை யார் பார்த்துக்குவா கிளம்பிடு” என்று கிளப்பியே விட்டான்.
இங்கே வந்ததும் கம்பனி காண்பித்த இடத்தில் ஒரு வாரம் தங்கி, பின்பு ஃபார்மிங்டன் ஹில்ஸ் என்ற ஊரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு அபார்ட்மெண்டில் ஒரு பிளாட் வாடகைக்கு பார்த்துக் கொண்டான். அத்தியாவசிய பொருட்கள் இருக்க, மளிகைப் பொருட்கள் வாங்கி அவனே சமைத்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டான். இப்படியாக அமெரிக்காவில் அவனின் குடித்தனம் ஆரம்பமாகிவிட்டது.
அவனின் கல்லூரி படித்த சிலரை இவனுக்குத் தெரியாவிட்டாலும், தெரிந்த நண்பர்கள் மூலம் பிடித்து நட்பாக்கிக் கொண்டான். மனிதர்களோடு பழகுவது தான் விஜயனுக்கு கை வந்த கலையாகிற்றே.
இதோ அவன் வந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட, எப்போது சைந்தவி வருவாள் பார்த்து இருக்க, இன்று அவள் வரும் நாள்.
சீனியர் ஒருவனின் கார் வாங்கி வந்திருந்தான்.
விமானம் வந்து விட்டது, இறங்கி விட்டது.
அவள் வருகிறாள், அவள் வந்து விட்டாள், இமை மூடாமல் விழிவிரித்து அவள் வரும் வழி பார்த்திருந்தான்.
ஆட்கள் வந்த வண்ணமிருக்க, அத்தனை கூட்டத்திலும் கண்கள் அவள் மீது மட்டுமே.
இவனைப் பார்த்ததும் வேகமாய் நெருங்கியவளுக்கு இமை சிமிட்டாமல் இருக்க முடியவில்லை. கண்கள் தான் கண்ணீரில் நிறைகிறதே.
அப்படியே நிற்பவளை “ஓய் பொண்ணே, என்ன இது?” என்று தோளை சுற்றி கை போட்டு ஆதூரமாய் அணைக்க, அவனின் மார்பில் தலை சாய்த்து நின்றாள்.
“என்ன இது? நான் பார்த்தவுடனே அழற மாதிரி பயங்கரமா இருக்கேனா”
பதிலில்லை!
“இப்படி அழுதா நான் பயந்துடுவேன்”
அதற்கும் பதிலில்லை!
“என்னடி உனக்கு? நிஜம்மா என்னை பயப்படுத்தற” என்றான் கலவரமாக.
அதற்கு தான் சற்று அசைந்தவள் தலையை தூக்கி பார்த்தது.
“என்னைப் பார்த்ததும் ஓடி வந்து என் மேல தாவிப்பன்னு நினைச்சா இது என்ன?”
“ப்ரித்வி எப்படி இருக்கான்? ரித்தி எப்படி இருக்கா? அம்மா வீட்டுக்கு போய் சொல்லிட்டு வந்துட்ட தானே. பூவு வீட்டுக்கும் போனியா? என்ன சொன்னா? ஜீவன் என்ன சொன்னான், அவன் வந்தானா வீட்டுக்கு நீ போனியா?” என்று கேள்வியாய் அடுக்கினான்.
“நான் எப்படி இருக்கேன் நீங்க கேட்கவே இல்லை” என்று செல்லமாய் சிணுங்கினாள்.
“அய்ய, இதெல்லாம் கேட்கணுமா? நான் பக்கத்துல இல்லை அப்போ நிச்சயமா நல்லா இருக்க மாட்ட”