6

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் கண்மணி. மருத்துவமனையை அடைந்து ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்க, இன்னும் மருத்துவர்கள் நம்பிக்கையாக எதையும் கூறி இருக்கவில்லை. 

அரசு மருத்துவமனை என்பதால் உடனடியாக காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கபட்டு இருக்க, அவர்கள் வேறு வந்து விசாரித்து சென்றிருந்தனர். வினோத் ஜெய்யின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தத்தின் பேரில், முழு போதையில் இருந்தவனை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் அமர்த்தி இருந்தனர். 

இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ என்று சலித்துப் போனவளாக, அருணை மடியில் கிடத்திக் கொண்டு காளி அமர்ந்திருக்க, கண்மணியின் மாமியாரும், மாமனாரும் அப்போதுதான் வந்து சேர்ந்தனர். 

வந்தவர்கள், ‘கண்மணிக்கு என்னவானது’ என்று ஒரு பேச்சுக்கு கூட விசாரிக்காமல், “உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என மகன் மேல போலீஸ் கேஸ் கொடுத்து இருப்ப” என்று காளியிடம் வாக்குவாதத்தில் இறங்க, 

“யோவ்… கேஸ் கொடுத்தது நான். என்கிட்ட பேசு. உன் பிள்ளை என்ன உத்தமனா. என அக்காவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும். உன் பிள்ளையை போட்டுட்டு நானே ஜெயிலுக்கு போறேன்” என்றான் வினோத். 

“உன்னாலதான்டா எல்லாமே.” என்று ஜெய்யின் தந்தை எகிற, 

“வா… வா. ஹாஸ்பிடல்ல வந்து மிரட்டிட்டு இருக்கீங்கன்னு உங்க பேரையும் சேர்த்து சொல்றேன். அக்கா நீ எஸ்ஐக்கு போன போடுக்கா” என்ற வினோத்தின் வார்த்தைகளில் ஜெய்யின் தந்தை கொஞ்சம் அடங்க,

“இதெல்லாம் நல்லாவே இல்ல மரகதம். எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்ல வேண்டி இருக்கும்.” என்று மரகதத்தை எச்சரித்த ஜெய்யின் தாய், “வாங்க போலாம்” என்று கணவரை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். 

“என்ன மனிதர்கள் இவர்கள்” என்று மொத்தமாக மரகதம் உடைந்து போனது அப்போது தான். மகளின் வாழ்க்கைக்காக என்று அத்தனையும் அவர் தாங்கி இருக்க, அந்த மகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில், ‘எப்படி இருக்கிறாள்’ என்றுகூட விசாரிக்கவில்லையே என்று மனம் கசந்து போனது அவருக்கு. 

அதுவும் அவர்கள் கண்மணியின் வீட்டிற்குள் நுழைந்த நேரம் ஜெய் கிடந்த கோலம். குடிபோதையில் ஆடை விலகியதை கூட உணராமல், சுய நினைவின்றி அவன் படுத்து கிடந்தது ஜென்மத்திற்கும் மறந்து போகாது மரகதத்திற்கு. இப்படிபட்டவனுக்கா தன் பெண்ணை கொடுத்திருக்கிறோம் என்று மொத்தமாக கலங்கி போய் இருந்தார் அவர். 

இதில் மகளது புகுந்த வீட்டு உறவுகளும் இப்படி பேசிவிட்டு செல்ல, மொத்தமாக மனம் விட்டு போனது. ‘என மகள் எப்படியாவது பிழைத்து வந்தால் மட்டும் போதும்’ என்று எண்ணிக் கொண்டவராக, அமைதியாக அமர்ந்துவிட்டார் அவர். 

ஆனால், அவர் நினைத்தது போல் கண்மணியை காப்பாற்றுவது அத்தனை எளிதான காரியமாக அமையவில்லை. மூன்று நாட்கள் ஜீவமரண போராட்டத்தின் முடிவில் தன் வாழ்வை முடித்துக் கொண்டாள் கண்மணி. 

மருத்துவர்கள் எத்தனை முயன்றும் அவளை காப்பாற்ற முடியாமல் போய் இருக்க, அவளது இழப்பில் மொத்தமாக இடிந்து போனது காளியின் குடும்பம். உண்மையில் என்ன செய்வது என்று புரியாத நிலை தான் காளிக்கு. தங்கையின் மரணத்திற்காக சோகம் பிடிப்பது ஒருபுறம் இருக்கட்டும், அவள் இறுதி சடங்குகளை சரிவர செய்ய வேண்டாமா? அத்தனைக்கும் பணம் வேண்டுமே. 

வீட்டில் இருக்கும் இருபதாயிரம் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? என்ற கேள்வி பூதாகரமாக வெடித்து நிற்க, வினோத்தை மருத்துவமனையில் விட்டு வேகமாக கிளம்பினாள் அவள். 

நேராக அவள் சென்று நின்றது கந்தனிடம் தான். அந்த காலை வேளையில் அதுவும் தன் வீட்டிற்கே வந்து நிற்கும் காளியை புரியாமல் பார்த்தாலும் உள்ளே அழைத்தார் கந்தன். 

“இல்லண்ணா வரக்கூடாது” என்றவள் தனது நிலையை எடுத்து சொல்ல, அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது கந்தனுக்கு. “ஏன் இந்த பெண்ணுக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்க வேண்டும்” என்று இரக்கம் கொண்டாலும், அவரிடமும் அவளுக்கு உதவும் அளவுக்கு பெரிதாக பணம் இல்லை என்பது தான் நிதர்சனம். 

மனிதர் என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்து நிற்க, கந்தனின் மனைவி தேவி, “அழாத காளி. நடந்து போச்சு. என்ன செய்ய முடியும். நீதான் தாங்கி ஆகணும். தைரியமா இரு.” என, அவர் பேச்சு காதில் கேட்டது என்பதற்கு அறிகுறியாக தலையசைத்தாள் காளி. 

“உன் பிரச்சனை எல்லாம் புரியுது எனக்கு. ஆனா, உன் அண்ணனும் இன்னைக்கு வேணும். நாளைக்கு வேணும்னு சேர்த்து வைக்கிறவர் இல்ல. அதான் கையை பிசைஞ்சுட்டு நிற்கிறார்.” என்றவர் தன் கழுத்தில் கிடந்த ஒரு சவரன் சங்கிலியை கழட்டி காளியின் கைகளில் வைத்துவிட்டார். 

“இல்லக்கா” என்று அவள் தயங்க, “வச்சுக்கோ” என்று அழுத்தியவர், “என்ன பண்றது ஏதாவது சொல்லுங்க அவளுக்கு” என்று கணவரை அதட்ட, 

“உடனே வேணும்னா வட்டிக்கு தான் வாங்கணும் காளி. நீ ஏற்கனவே நிறைய பிரச்சனைல இருக்க, இதுல வட்டிக்கு வேற வாங்கி அவஸ்தபடணுமான்னு தான் யோசிக்கிறேன்” என,

“அதையெல்லாம் யோசிக்கிற நிலைமையில நான் இல்லண்ணா. வட்டியை கணக்கு போட்டுட்டு வேண்டாம்னு சொல்ற சூழ்நிலையும் இப்போ இல்ல. நீங்க வாங்கி கொடுங்க” என்றுவிட்டாள் அவள். 

கந்தனுக்கு அவள் சொல்வது எல்லாம் புரிந்தாலும், அவளை இக்கட்டில் மாத்தி வைக்க மனம் வரவில்லை. அப்போதைக்கு, “நீ இதை அடகு கடையில கொடுத்து அவன் கொடுக்கற பணத்தை வாங்கிக்கோ காளி. ஆக வேண்டியதை பாரு. நான் ரெண்டு மணி நேரத்துல பணத்தோட வரேன்.” என்று காளியை அனுப்பி வைத்தார். 

“என்ன செய்வது” என்று அவர் வேகமாக சிந்தித்ததில், உடனடியாக அவர் மூளையில் உதித்தவன் புகழேந்தி தான். காளி மீதான புகழின் அக்கறையை பல நேரங்களில் கண்கூடாக கண்டிருக்கிறாரே. 

அதுவும் இப்படி ஒரு அவசர நிலையில் நிச்சயம் அவன் மட்டும் தான் உதவுவான் என்று அவர் உள்ளம் அடித்துக் கொள்ள, கொஞ்சமும் யோசிக்காமல் அவனை அழைத்துவிட்டார் கந்தன். 

எப்போதோ  அவன் அலைபேசி எண்ணை வாங்கி வைத்தது இப்போது அவருக்கு உதவ, புகழும் அவர் எண்ணை சேமித்து தான் வைத்திருந்தான் போல. எடுத்த எடுப்பில், “சொல்லுங்கண்ணா” என்றுதான் ஆரம்பித்தான் அவனும். 

“தம்பி… கொஞ்சம் பேசலாமா?” என்று அவர் அனுமதி வேண்ட, 

“அட. சொல்லுங்கண்ணா” என்றான் மீண்டும் ஒருமுறை. 

“தம்பி. காளிக்கு… என்று அவர் நிறுத்திவிட,

“என்னன்னா… காளிக்கு என்ன” என்று அவன் பதறிய விதத்தில் நம்பிக்கை கொண்டவராக,  

“தம்பி…” என்று தொடங்கி நடந்த அனைத்தையும் அவன் காதில் போட்டுவிட்டார் கந்தன். புகழ் பதிலேதும் சொல்லாமல் அமைதி காக்க, “பணத்துக்கு அல்லாடுது தம்பி. வட்டிக்கு வாங்கி தர சொல்லி கேட்குது. தம்பி நீங்க ஏதாவது…” என்று கந்தன் இழுக்க, 

“அட இதெல்லாம் ஒரு விஷயமா அண்ணா. நான் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். நீங்க அவ கூடவே இருங்க. கொஞ்சம் பார்த்துக்கோங்க அண்ணா.” என்று புகழ் அக்கறையாக பேசவும் தான் உயிரே வந்தது கந்தனுக்கு. 

“சரிங்க தம்பி. ரொம்ப நன்றி தம்பி” என,

“நான் தான் உங்களுக்கு சொல்லணும். நீங்க காளி வீட்டுக்கு போங்க. எனக்கு அவ அட்ரசை அனுப்பி விடுங்க. நான் அங்கே வந்து உங்களை பார்க்கிறேன்.” என்று அழைப்பை துண்டித்தான் புகழ். 

புகழ் பேசுவதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாலும், சரோஜா தானாக வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை. மகன் ஏதாவது சொல்வானா என்று அவர் பார்த்திருக்க, “ம்மா… உன்கிட்ட எவ்ளோ பணம் இருக்கு” என்று மொட்டையாக கேட்டு நின்றான். 

“எதுக்குடா” 

“கேட்டுட்டு தான இருந்த. காளியோட தங்கச்சி தவறிட்டாளாம்மா.”

“அட கடவுளே”

“ம்மா… பொறுமையா ஷாக் ஆவு. இப்போ முதல்ல பணம் எவ்ளோ இருக்கு.” என்ற மகனின் வார்த்தைகளில் அவசரமாக தன்னிடம் இருப்பில் இருந்த பணத்தை எடுத்து நீட்டினார் அவர். 

“டேய் நானும் வர்றேன்டா.” என்றவரிடம்,

“என்னையே அங்கே யாருக்கும் தெரியாதும்மா. நீ வந்து என்ன செய்ய போற. வேண்டாம்” என்றுவிட்டு அவன் கிளம்பிவிட, இதற்குள் காளியின் முகவரியை அனுப்பி வைத்திருந்தார் கந்தன். 

அதே நேரம் இங்கு மருத்துவமனையின் வாயிலில் நின்றிருந்த காளி, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடமும், காவல் துறையினரிடமும் போராடி துவண்டு போய் இருந்தாள். இறப்பில் கூட பணம் பார்க்க நினைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

எடுத்ததற்கெல்லாம் அவர்கள் பணம் பணம் என்று பிடுங்கி வைக்க, கையில் இருந்த பணம் இப்போதே பாதிக்கும் மேலாக தீர்ந்திருந்தது. மரகதம், நித்யா இருவரையும் ஏற்கனவே வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்க, காளியும், வினோத்தும் தான் அந்த மருத்துவமனையில் காத்திருந்தனர். தற்கொலை என்பதால் பிரேத பரிசோதனை முடிந்தபிறகு தான் உடலை ஒப்படைக்க முடியும் என மருத்துவமனையில் சொல்லிவிட, அந்த நடைமுறைகளை முடிப்பதற்காகத் தான் காத்திருந்தனர். வினோத்தின் நண்பர்கள் சிலர் உடன் இருந்தாலும், யாரிடமும் எதுவும் பேசாமல் தனித்து அமர்ந்துவிட்டாள் காளி. 

தங்கையின் இறப்பைத் தாண்டி, அடுத்து என்னவெல்லாம் நடக்கும் என்று யோசிக்க தொடங்கிவிட்டாள் அவள். ஏற்கனவே ஒருமுறை இதே நிலையில் நின்றவள் என்பதால் இந்த காத்திருப்பு அவளை சோர்ந்து போக செய்யவில்லை. 

ஆனால், எதிர்நோக்க இருக்கும் சவால்கள் அவளை உடைத்துவிடும் போல இருந்தது. இன்னும் ஜெய் வீட்டில் இருந்து யாரும் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை. ஆனால், நிச்சயம் வருவார்கள் என்று அடித்து சொன்னது மனது. 

என்ன செய்ய காத்திருக்கிறார்களோ என்று கலங்கியவளுக்கு முதலில் நிழலாடியது அருணின் முகம் தான். எப்படியும் அவனைக் கொண்டு தான் தொடங்கும் என்று புரிந்திருந்தது அவளுக்கு. 

இந்த வயதில் தாயை இழந்து, தந்தையும் சரியில்லாமல் இன்னும் என்னவெல்லாம் அந்த பிஞ்சு தாங்க வேண்டுமோ என்று நினைக்கையில், கண்கள் கலங்கி கண்ணீர் பெருகியது அவளுக்கு. 

தங்கையின் மரணத்திற்கு கண்ணீர் வடிக்காதவள் அவள் விட்டுச் சென்ற பிஞ்சை நினைத்து கலங்கி கொண்டிருந்தது விந்தை தான். 

அரசு மருத்துவமனையின் வேலைகள் ஆமை வேகத்தில் நடந்ததில், காலை நேரம் பதினொன்றை கடந்தபின்பும், எதுவும் முடிந்தபாடில்லை. கந்தன் காளியின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு, காளியைத் தேடி மருத்துவமனைக்கே வந்துவிட்டிருந்தார். 

புகழ் அழைத்தபோதும், அவனிடமும் மருத்துவமனையில் இருப்பதாக அவர் கூறிவிட, அடுத்த பத்து நிமிடத்திற்கெல்லாம் அவனும் வந்துவிட்டான். 

அவசரமாக வந்தவன் கண்கள் அதே அவசரத்துடன் காளியைத் தேட, தூரத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்தவளை உடனே கண்டுகொண்டான் அவன். நெருங்கிப் பேச ஆவல் கொண்டாலும், அவள் இருக்கும் நிலையில் எப்படி எடுப்பாளோ என்று அதுவேறு தயக்கம் கொடுக்க, “என்னன்னா” என்று கந்தனிடமே விசாரித்தான் புகழ். 

இதற்குள் வினோத் இவர்களை நெருங்கியிருக்க, கந்தன், “எதுவுமே ஒழுங்கா சொல்ல மாட்டுறாங்க தம்பி.” என்றார் புகழிடம். 

வினோத், “போஸ்ட்மார்ட்டம் பண்ணி தான் கொடுப்போம்னு சொன்னாங்க. அதுக்காக தான் காத்திருக்கோம். ஆனா, அதுக்கும் டிலே பண்றாங்க சார்” என்றான். 

புகழ், “நீ என்னோட வா” என்று வினோத்தை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தபடியே அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேச, அடுத்தடுத்த வேலைகள் வேகமெடுக்க தொடங்கியது. புகழ் அந்த மருத்துவமனையின் முக்கிய மருத்துவர் ஒருவரை சந்தித்து பேச, சாம்பவமூர்த்தி ஏற்கனவே அவனுக்காக பேசி இருக்கவும், அடுத்த அரைமணி நேரத்தில் கண்மணியின் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கபட்டது. 

காளிக்கு இன்னும் எதுவுமே தெரியவில்லை. புகழ் வந்திருப்பது கண்ணில்பட்டாலும், அவன் செயல்கள் எதையும் உணராத நிலையில் தான் இருந்தாள். 

ஒருவழியாக கண்மணியின் உயிரற்ற உடல் அவளது வீட்டை அடைய, மரகதம் தன் மகளைப் பார்த்து துடித்து கதற தொடங்கினார். பெற்றவர் அல்லவா… அவரால் அத்தனை எளிதாக மகளின் இழப்பை ஏற்க முடியவில்லை. 

நித்யா, வினோத் இருவரும் கூட கண்மணியை அந்த நிலையில் பார்த்ததும் தாள முடியாமல் அழுதுவிட, கல்லாக நின்றது காளி மட்டும்தான். அவளின் பார்வை வீட்டின் திண்ணையில் உறங்கி கொண்டிருந்த அருணிடம் தான். 

உறங்குபவன் எழுந்து அன்னையை கேட்டால் என்ன சொல்வோம் என்று உள்ளம் ஊமையாக துடிக்க, அவன் காலடியில் சென்று அமர்ந்துவிட்டாள். 

அவர்களுக்கென இருந்த ஒன்றிரண்டு சொந்தங்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் மெல்ல மெல்ல அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை கவனிக்க தொடங்கிவிட்டாள் காளி. 

சொந்தங்களின் பேச்சு சத்தமும், மரகதத்தின் கதறலும் அருணையும் எழுப்பிவிட, அத்தனைப் பேரை பார்க்கவுமே அரண்டு போனவனாக அழுகையைத் தொடங்கிவிட்டான் அவன். 

அவன் அழுகுரலில் காளி ஓடிவர, “பெம்மா” என்று அவளை கட்டிக்கொண்டு இன்னும் அழுகையின் வேகத்தை கூட்டினான் அவன். காளிக்கும் இப்போது அழுகை வரப் பார்க்க, முயன்று தன்னை சமன்செய்து கொண்டு அவனை அங்கிருந்து தூக்கிச் சென்றுவிட்டாள். 

தூர இருந்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டு இருந்த புகழுக்கு முகம் பார்த்திராத தந்தையின் நினைவு தானாக எழுந்தது. எப்போதும் போல் தன் அன்னை இப்படித்தான் தாங்கியிருப்பாரோ என்று அவன் மனம் ஒப்பிடலை தொடங்கிவிட்டது. 

என்னவோ அவனால் காளியையும், அவன் அன்னையையும் பிரித்துப் பார்க்கவே முடிந்ததில்லை எப்போதும். இப்போதும் அவன் அப்படியே பார்த்திருக்க, இதற்குள் கண்மணியின் புகுந்த வீட்டு உறவுகள் வந்து சேர்ந்துவிட்டது. 

கண்மணியின் மாமனாரும், மாமியாரும் ஓவென பெருங்குரலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் திடீரென, “பாவிகளா… நல்லபடியா வாழ்ந்த பிள்ளையை இப்படி அநியாயமா பழியை போட்டு கொன்னுட்டீங்களே. நீங்க நல்லா இருப்பிங்களா. என பிள்ளையை ஜெயிலுக்கு அனுப்பிட்டு, என மருமகளை மொத்தமா மேல அனுப்பி வச்சுட்டீங்களே” என்று கத்த, மரகதத்திற்கு முதலில் அவர்கள் கூறுவது புரியவே இல்லை. 

வினோத் தான், “உனக்கு அவ்ளோதான் மரியாதை. நாங்களே எங்க அக்காவை வாரி கொடுத்துட்டு இருக்கோம். தேவை இல்லாம பிரச்சனை பண்ண பார்த்த. மகனே உன்னை கொல்ல கூட தயங்கமாட்டேன்.” என்றான் முன்னே வந்து. 

கந்தன் அவனை விடாமல் இழுத்து தன்னுடன் நிறுத்த, கண்மணியின் மாமனார் அடங்குவதாக இல்லை. “என்னடா தேவை இல்லாம பேசுறேன். அத்தனைக்கும் காரணம் நீயும், உன் அக்காவும் தான். நீங்க பண்ண அசிங்கம் தாங்க முடியாம தான் மானஸ்தி போய் சேர்ந்துட்டா” என்று நாக்கில் நரம்பு இல்லாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் காளி வெளியே வர, “அடிப்பாவி… நீ நல்லா இருப்பியா. என குடும்பத்தை கலைச்சுட்டு இப்படி ஒண்ணும் தெரியாதவ மாதிரி வந்து நிக்குறியே” என்று கைகளை முறித்து சாபம் விட்டார் கண்மணியின் மாமியார்.

“ஏய். என் அக்காவை ஒருவார்த்தை பேசுன…” என்று வினோத் மீண்டும் எகிற,

“அமைதியா இரு வினோ.” என்றவள், “என்ன வேணும் உங்களுக்கு. எதுக்கு இங்கே வந்து நாடகம் நடத்திட்டு இருக்கீங்க. அதுதான் மொத்தமா கொன்னுட்டீங்களே. இன்னும் என்ன” என்றாள் கண்ணீருடன். 

“நாங்களா… அடிப்பாவி… இது கடவுளுக்கே அடுக்குமா? எங்க மேல பழியைப் போடுறியே.” என்று அழுது புலம்ப, 

“உன் மகனை போய் கேளு. என் தங்கச்சி எப்படி செத்தான்னு அவனை கேளு. சொல்ல சொல்லு எங்களுக்கும். போடி… போ இங்கே இருந்து. உங்களோட மூச்சு கூட அவமேல படக்கூடாது. போங்க” என்று அடித் தொண்டையில் இருந்து கத்தினாள் காளி. 

“நாங்க ஏன் போகணும். என மருமக. என பேரன் வேற இருக்கான். உன்னை நம்பி விட்டுட்டு போக சொல்றியா.” என்று கண்மணியின் மாமனார் பேச, 

“யாரையும் உன் குடும்பத்தை நம்பி விட முடியாது. இதோ இவளை சாக கொடுத்த வரைக்கும் போதும். இனி யாரையும் பலி கொடுக்க முடியாது. போ. உன்னால என்ன முடியுமோ செய்துக்கோ. போடா” என்று உக்கிரகாளியாக மாறி நின்றாள் காளி. 

அங்கிருந்த உறவுகள் சிலர் சமரசம் செய்ய முயற்சித்த போதும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அவள். என்னவோ, இவர்கள் வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம். 

பிள்ளையையும் இவர்களை நம்பி விட முடியாது என்று உறுதி கொண்டவள் ஒரே பிடியாக நின்று அவர்களை விரட்டிவிட்டாள்.